Sep 142016
 

Youth

”சார் ICICI பேங்குலருந்து பேசுறேன்… கிரெடிட் கார்டு எதாவது யூஸ் பன்றீங்களா? “

“ஏற்கனவே நாலு கார்டு இருக்கு”

“இதுல புது ஆஃபர் இருக்கு சார்”

“டேய் நாலு கார்டுக்கே நாக்கு தள்ள வேலை பாக்க வேண்டியிருக்கு விட்ருங்கடா”

————

“சார்.. பர்சனல் லோன் எடுக்குற ஐடியா எதாவது இருக்கா?”

“லோன் எடுக்குற ஐடியா இருக்கு… ஆனா திருப்பி கட்டுறதுக்கு தான் ஐடியா இல்லை…”

“டொய்ங்ங்ங்ங்”

———-

“சார்.. நாங்க sun Shine க்ளப்புலருந்து பேசுறோம்.. குறைஞ்ச விலையில லைஃப் டைம் மெம்பர்ஷிப் கார்டு தர்றோம்…”

”அடுத்த வேளை சோத்துக்கே சிங்கி அடிச்சிட்டு இருக்கோம்.. இதுல லைஃப் டைம் மெம்பர்ஷிப் கார்டு.. அதுவும் கிளப்புல… “

—————-

“சார் நாங்க Save the Children organization லருந்து பேசுறோம்… ஒரு பத்து வயசு குழந்தைக்கு ஹார்ட் ஆப்ரேசனுக்காக உங்களால முடிஞ்சத குடுத்தா கொஞ்சம் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும் சார்…”

“ஃபேஸ்புக்குல 1like = 100 prayers ன்னு போட்டு அந்த குழந்தைக்காக ஒரு 50 லைக் வேணா வாங்கித்தர்றேம்மா… இப்பதைக்கு வேற எதுவும் முடியாது”

இப்டி ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு வகையில கொடச்சல் குடுத்துக்கிட்டு தான் இருக்காய்ங்க. அவங்களுக்கு பதில் சொல்றதுக்குன்னே நமக்கு கொஞ்சம் தனி பொறுமை தேவைப்படுது. அதுவும் எனக்கெல்லாம் ரொம்ப மோசம். டெய்லி ஆக்ஸிஸ் பேங்குலருந்து கால் பன்னி கார்டு வேணுமான்னு கேப்பானுங்க. தினமும் அட்டெண்ட் பன்னி “நேத்து  தான் ஃபோன் பன்னீங்க.. நா வேணாம்னு சொன்னேன். ஏன் திரும்ப திரும்ப கால் பன்றீங்க… தயவு செஞ்சி நம்பர உங்க data base லருந்து delete பன்னிருங்க” ம்பேன். ப்ரபா ஒயின்ஸாப் வடிவேலு மாதிரி “சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்” ன்னு சொல்லி நல்லவய்ங்க மாதிரி வைப்பாய்ங்க. ஆன மறுநாள் மறக்காம கால் பன்னுவாய்ங்க.

”டேய் நேத்து தானடா கால் பன்னீங்க”

“அது வேற ப்ராஞ்ச்லருந்து பன்னிருப்பாங்க சார்”

“நீங்க எங்கருந்து பேசுறீங்க ?”

“டி நகர்”

”நேத்து ஃபோன் பன்னவனும் டி நகர் ப்ராஞ்சுன்னு தான் சொன்னான்”

“இல்ல சார்… இது டி நகர்ல இருக்க வடபழனி ப்ராஞ்ச்”

அடேய்.. ஒவ்வொரு ப்ராஞ்ச்லருந்து ஒவ்வொரு நாளுக்கு கால்பன்னீங்கன்னா நாங்க என்னடா பன்றது?

True caller வந்ததுலருந்து பெரும்பாலான நம்பர்களை அவனே காட்டிக்குடுத்துருவான். அதனால நம்பர பாத்த உடனே கட் பன்னி வச்சிருவேன். ஆனாலும் சில சமயம் அவனே  யார் நம்பருன்னு கண்டுபுடிக்க திணரும்போது அட்டண்ட் பன்னி பேச வேண்டியதாயிடும். பெரும்பாலான சமயங்களில் அவய்ங்ககிட்ட பொறுமையாதான் பேசுவேன். ஆனாலும் சில சமயம் நம்ம கடுப்புல இருக்கும்போது இந்த மாதிரி கால் வர்றப்போ என்னையும் அறியாம அவனுங்களுக்கு கண்ட மேனிக்கு திட்டு விழுறதுண்டு.

மேல சொன்னதெல்லாம் இல்லாம இப்ப புதுசா ஒரு டிசைன்ல கெளம்பிருக்காய்ங்க. கால் வரும். அட்டெண்ட் பன்னோம்னா

“ சார்…. உங்களோட ATM கார்டு ப்ளாக் ஆயிருக்கு. வெரிஃபிகேஷனுக்காக உங்க கார்டு நம்மர சொன்னீங்கன்னா ப்ளாக்க ரிலீஸ் பன்னி விட்டுறலாம்” ம்பானுங்க.

”என்னடா சாக்கடையில அடைப்பெடுத்து விடுறேங்குற மாதிரி சொல்றீங்க. என் கார்டு தான் ப்ளாக்கே ஆகலயே நல்லா ஒர்க் ஆயிட்டு இருக்கே..”

“இல்ல சார் ப்ளாக் ஆயிருக்கு”

“சரி நீ எந்த பேங்க்லருந்து பேசுறீங்க?”

“நா HDFC லருந்து பேசுறேன்”

”நா HDFC கார்டே வச்சில்லையே.. AXIS கார்டு தான் வச்சிருக்கேன். இல்லாத கார்டு எப்டி ப்ளாக் ஆகும்”

“இல்லை சார்… உங்க AXIS  கார்டு தான் ப்ளாக் ஆயிருக்கு… நம்பர் சொன்னீங்கான்னா ப்ளாக் ரிலீஸ் பன்னிரலாம்”

“சார் நீங்க HDFC லருந்து பேசுறேன்னு சொன்னீங்க… AXIS கார்டு ப்ளாக் ஆனா நீங்க எப்டி எடுப்பீங்க…”

“இல்லை சார்.. ஆல் பேங்குக்கும் நா தான் மேனேஜர். இந்த மாதிரி கார்டு ப்ளாக் ஆகுற கம்ளைண்டெல்லாம் நாங்கதான் டீல் பன்னிகிட்டு இருக்கும்”

அடிங்கொய்யால டப்ஸா கன்னா… ஆல் பேங்கு மேனேஜரா நீயி ஓடிரு.. கொஞ்சம் விட்டா ரிசர்வ் பேங்குக்கு கூட நீதான் மேனேஜர்னு சொன்னாலும் சொல்லுவ.. ஓடிரு…

இந்த மாதிரி ஆல் பேங்க் மேனஜர்கள் நம்ம கார்டு நம்பர நம்மக்கிட்டயே கேட்ட சம்பவங்கள் கடந்த ஒரு மாசத்துல ரெண்டு தடவ நடந்துருக்கு.

இன்னிக்கு காலையில அதே மாதிரி ஒரு ஃபோன். பேசுனது ஒரு பொண்ணு

“வணக்கம் சார்… …”

“சொல்லுங்க மேடம்..”

“நீங்க SBI credit கார்டு வச்சிருக்கீங்கல்லியா? அதுல உங்களுக்கு ஒரு upgradation package வந்துருக்கு ”

“நா SBI கார்டே வச்சில்லயே மேடம். அப்புறம் எப்புடி upgradation  வரும்”

அந்த பொண்ணு பேசுன முதல் வார்த்தையிலயே இது ஒரு டுபாகூர் கால்ன்னு என்னோட மைண்டுல ஃபிக்ஸ் ஆகி, அதுக்கப்புறம் அந்த பொண்ணு கேட்ட எல்லா கேள்விக்குமே என்கிட்டருந்து ஒரு மாதிரி எகத்தாளமான பதில்தான் வந்துச்சி.

“இல்ல சார் நீங்க HDFC கார்டு தான் வச்சிருக்கீங்க… இதுவரைக்கும் நீங்க purchase பன்னதுக்கு உங்களுக்கு கிரெடிட் பாய்ண்ட்ஸ் இருந்துச்சி. அத நீங்க யூஸே பன்னாதாதால இனிமே நீங்க பன்ற ஒவ்வொரு பர்ச்சேஸூக்கும் 20% cash back தர்ற மாதிரி upgradation வந்துருக்கு” ன்னு சொல்லுச்சி.

இந்த மாதிரி upgradation , offer ன்னு எது ஆரம்பிச்சாய்ங்கன்னாலும் கடைசில நம்மகிட்டருந்து இன்னும் கொஞ்சம் extra பணம் புடுங்குற ஐடியாவாத்தான் இருக்கும். எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில இந்த offer ah avail பன்னனும்னா நீங்க ஒரு 2000 ரூபா கட்டுற மாதிரி இருக்கும்சார்னு சொல்லுவாய்ங்க. அதனாலயே அந்த பொண்ணு சொன்ன ஆஃபர்ங்குறது என்னோட காதுலயே ஏறல. திரும்ப திரும்ப என்னோட மைண்டுல இது ஒரு ஃபேக் கால்ங்குற நினைப்பு தான் ஓடிக்கிட்டு இருந்துச்சி.

“மேடம் நீங்க யாரு மேடம்… நீங்க ஏன் இதெல்லாம் சொல்றீங்க.. சரி நீங்க என்னோட கார்டு நம்பர சொல்லுங்க” ன்னேன்.

”சார் நா எப்டி சார் கார்டு நம்பர சொல்ல முடியும். அது சீக்ரெட் information. நீங்க யார்னு தெரியாம கார்டு நம்பரல்லாம் நாங்க சொல்லக்கூடாது சார்”

“ஏங்க என்கிட்ட நீங்க என்னோட கார்டு நம்பர் சொல்ல மாட்டீங்க.. ஆனா நா மட்டும் நீங்க சொல்றத நம்பனும்… சரி நா என்ன கார்டு வச்சிருக்கேன்னாவது சொல்லுங்க..” ன்னேன்.

பேரயும் நா எந்த பேங்க்ல கார்டு வச்சிருக்கேங்குறதயும் கரெக்ட்டா சொன்னுச்சி. அப்பவே அந்த பொண்ணு வாய்ஸ்ல கோவமும் ஏண்டா இவனுக்கு கால் பன்னோம்ங்குற நினைப்பும் தெரிஞ்சிது. நா ஃப்ரண்ட்ஸோட பேசிகிட்டு இருந்த சமயத்துல அந்த ஃபோன் வந்ததாலயும் ஏற்கனவே இந்த மாதிரி ரெண்டு பேரு ஏமாத்த முயற்சி செஞ்சதாலயும் அந்த பொண்ணுக்கு நா ஒழுங்கான response உம் குடுக்கல. அந்த பொண்ணு சொல்ல வந்ததயும் முழுசா சொல்ல விடல. இன்னும் கொஞ்ச எடக்கு முடக்கு பதில்களுக்கு அப்புறம்

“ஹலோ மேடம்… உங்களுக்கு இப்ப என்ன ப்ரச்சனை.. என்ன வேணும்?”

“ஒண்ணும் இல்லை சார்… தயவு செஞ்சி லைன கட் பன்னுங்க” ன்னு கொஞ்சம் தளுதளுத்த குரல்ல சொல்லுச்சி. அப்பதான் எனக்கு செருப்புல அடிச்ச மாதிரி இருந்துது.. அந்த பொண்ணு ஃபோன கட் பன்னுச்சான்னு தெரியல. ஆன நா கட் பன்னிட்டேன்.

நான் நிறைய பேரோட நிறைய தடவ சண்டை போட்டுருக்கேன். சண்டை போடும்போது ரொம்ப hurt பன்ற மாதிரி பேசிருவேன். ஆனா அதுக்கப்புறம் அவங்க எப்டி ஃபீல் பன்றாங்களோ.. எனக்கு நினைச்சி ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும். அவங்களுக்காக இல்லைன்னாலும் என்னோட மனசு திருப்திக்காகவாது, யாரா இருந்தாலும் மன்னிப்பு கேட்டுருவேன். மன்னிப்பு கேக்குறதுக்கு நா வெக்கப்பட்டதே இல்லை.

ஃபோன் பேசி வச்ச அடுத்த ஒரு மணி நேரம் ரொம்ப சங்கடமா போச்சு. ஏன் அப்டி பேசுனோம்னு ரொம்ப அசிங்கமா இருந்துச்சி. பேச புடிக்கலன்னா எப்பவும்போல கட் பன்னிட்டு பேசாம இருந்துருக்கலாம். ஆனா அப்டி இல்லாம அந்த புள்ளைய ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோன்னு உறுத்திக்கிட்டே இருந்துச்சி.

ஒரு நாள் காலையில ஆஃபீஸ்ல யாராவது ஒருத்தன் நம்மள டென்ஷன் ஆக்கி விட்டுட்டாலும் அன்னிக்கு பூராவுமே கடுப்பா இருக்கும். அப்டி இருக்கும்போது இந்த மாதிரி க்ரெடிட் கார்டுகளுக்காகவும் பர்சனல் லோன்களுக்காகவும் கால் பன்ற பொண்ணுங்களையும் பசங்களையும் நினைச்சி பாத்தா, ஒரு நாளைக்கு எத்தனை பேரு அவங்களுக்கு ஒழுங்க respond பன்னுவாங்க? இன்னிக்கு நா பன்ன மாதிரி ஒரு நாளுக்கு எத்தனை பேர அவங்க பாப்பாங்க. எத்தனை பேர் கிட்ட திட்டு வாங்குவாங்க.

யாரோ ஒரு பாஸ் குடுக்குற டார்கெட்ட achieve பன்றதுக்காகவும், குடும்பத்த காப்பாத்த கிடைச்ச வேலைய விட்டுட முடியாமலும் என்னை மாதிரி எத்தனை பேர் என்ன சொன்னாலும் சகிச்சிக்கிட்டு திரும்ப திரும்ப எல்லாருக்கும் கால் பன்னித்தான ஆகனும். நம்ம பாக்குற வேலைதான் கஷ்டம்னு ஒவ்வொருத்தரும் நினைச்சிட்டு இருப்போம். ஆனா இவங்கள நினைச்சி பாக்கும்போது  கண்டிப்பா இல்லை.

ஒரு மணி நேரமாகியும் எனக்கு இன்னும் மனசு உறுத்திக்கிட்டேதான் இருந்துச்சி. சரி வழக்கம்போல நம்மளே மன்னிப்பு கேட்டுடலாம்னு முடிவு பன்னி அந்த நம்பருக்கு ஃபோன் பன்னேன். கிட்டத்தட்ட அரை மணி நேரம் பிஸி. அதுக்கப்புறம் அந்த நம்பர்லருந்து திரும்ப கால் வந்துச்சி.

“சொல்லுங்க சார்”

“மேடம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால எனக்கு ஃபோன் பன்னீங்கல்ல… நா கொஞ்சம் கோவமா பேசிட்டேன் மேடம் மன்னிச்சிருங்க” ன்னேன்

“உங்க பேர் என்ன சார்” ன்னு. கேட்டதும் பேர சொன்னேன்.

“உங்களுக்கு நா கால் பன்னல சார்… வேற representative பன்னிருப்பாங்கன்னு நினைக்கிறேன்” ன்னுச்சி.

பரவால்ல மேடம் அவங்ககிட்ட நா மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிருங்கன்னு சொன்னதும் “சார் நா அவங்களையே உங்களுக்கு கால் பன்ன சொல்றேன்” ன்னு சொல்லிட்டு வச்சிருச்சி..

திரும்ப அடுத்த ரெண்டு நிமிஷத்துல அதே நம்பர்லருந்து கால். அட்டெண்ட் பன்னதும் “சொல்லுங்க சார்… ”

என்னோட பேர சொல்லி “மேடம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீங்க எனக்கு கால் பன்னிருந்தீங்க.. அப்ப நா கொஞ்சம் கோவமா பேசிட்டேன். மன்னிச்சிருங்க மேடம். கொஞ்சம் டென்ஷனா இருந்ததால அப்டி பேசிட்டேன்” ன்னு சொன்னேன்.

“பரவால்ல சார்… நானும் கொஞ்சம் ஒரு மாதிரி பேசிட்டேன் சாரி” ன்னு சொன்னுச்சி. திரும்பவும் இன்னொரு தடவ மன்னிச்சிருங்க மேடம்னு சொல்லிட்டு அதுக்கு மேல எதுவும் பேசுனா தப்பான எண்ணதுல எதுவும் கால் பன்னிருக்கமோன்னு அந்த சகோதரி  தப்பா நினைச்சிருவாங்கன்னு அதோட கட் பன்னிட்டேன்.

அதுக்கப்புறம்தான் ஓரளவு மனசுக்கு ஓக்கே.. ஆனாலும் மொத தடவ பேசும்போது  அது சொல்ல வந்த கிரெடிட் கார்டு ஆஃபர பத்தி திரும்ப முழுசா சொல்ல சொல்லி அத கவனமா கேக்குற மாதிரி நடிச்சிருந்தாலாவது அந்த பொண்ணுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்க வாய்ப்பு இருந்துருக்கும். அது சொன்ன “பரவால்லை” க்கு அர்த்தம் ”மன்னிச்சிட்டேன்” ங்குறது இல்லைன்னு மட்டும் எனக்கு நல்லா தெரிஞ்சிது.

பல சமயங்களில் இந்த மாதிரி ஃபோன் கால்கள் உச்சக்கட்ட கடுப்புகளையும், கோபங்களையும் தான் வரவழைக்கிது. ஆனா நம்ம கோவத்த அவங்க மேல கொட்டுறதுக்கு முன்னால அவங்க நிலமையிலயும் கொஞ்சம் இருந்து பாத்தா அவங்களுக்கும் வேற வழி இல்லைன்னு தான் தோணும்.

– முத்துசிவா

www.muthusiva.in

Likes(1)Dislikes(0)
Share
Mar 142015
 

 

5

“அம்மா எனக்கு இந்த மாசம் பத்தாம் தேதிக்குள் பத்தாயிரம் ரூபாய் தா…… மாசாமாசம் சம்பளத்துல புடிச்சிக்கோ” என்று தலை சொரிந்தாள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் ரேணுகா. அவள் கேட்ட தொகை என் காதுகளில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் உடனே எழ, அவளை திரும்பி பார்த்தேன். பளிச்சென்ற வெள்ளை சிரிப்பு, கண்களில் நம்பிக்கை கலந்த ஏக்கத்துடன் கெஞ்சல் பார்வை …….”எதற்கு ரேணுகா இவ்வளோ பணம்? என்று கேட்டபடியே, அவள் பெண்ணிற்கு கல்யாணம் நிச்சயமானதோ அல்லது அரசின் ஏழைகளுக்கு மனை வழங்கும் திட்டத்தில் வீடு வாங்க வேண்டும் என்றாளே” அதற்காகவோ? என எண்ணங்கள் ஓட… “ஒண்ணுமில்லமா பையனை ‘ஐ ஸ்கூல்’ இங்க்லீஸ் மீடியத்துல படிக்க வைக்கலாம்னு இருக்கேன் மா…. நாலு எழுத்து படிக்க வெச்சா அவன் எங்களாட்டும் கஷ்ட பட வேணாம் பாரு” என்று அவள் சொன்னதும் அவள் தாய் பாசத்தையும் அதை விட மேலாக குழந்தையின் எதிர்காலத்தை பற்றிய பொறுபுணர்வையும் மெச்சினேன்.

டாக்டரிடம் சென்று வந்த தோழியின் உடல் நலத்தை பற்றி விசாரிக்க சென்றேன். ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டாலே இப்போது எப்படி இருக்கிறாளோ என்று மனம் நெகிழுந்தது. வாசற்கதவை திறந்த அவள் கணவன், அவள் உள்ளே இருக்கிறாள் என்று செய்கை செய்தார். சலியால் வீங்கிய முகத்துடன் ஜுரத்தால் நீர் ஒழுகும் கண்களுடன் கூகல் குருநாதாரிடம் கேள்வி வேள்வி செய்து கொண்டிருத்தாள். கோபத்துடன் அவளிடம் நான் வினவ “டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன். அவற்றின் ரசாயன தொகுப்பையும், செயல் படும் விதத்தையும், பக்க விளைவுகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்று ஆர்வம் ஏற்பட்டது” என்று நீட்டி முடக்கினாள். ஆர்வத்திற்காக தெரிந்து கொள்ளும் தோழியை பாராட்டுவதா அல்லது கடிந்து கொள்வதா தெரியவில்லை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என் செல்ல “செல்” சிணுங்கினாள். தெரியாத நம்பரை கண் சிமிட்டி காட்டினாள். தூக்கம் கலையாமலே சிடுசிடுப்புடன் “ஹலோ” என்றது தான் தாமதம், எதிர் முனையில் உற்சாகத்துடன் ஒரு ஆண் குரல் . “மேடம் நீங்கள் விஞ்ஞானமும் கணிதமும் வீட்டில் தனி பாடமும் கற்று தருகிறீர்களாமே? அதை பற்றி உங்களிடம் பேச வேண்டும்” என்றார். என்னிடம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் போட்டி தேர்விற்கு பயிற்சி எடுப்பது பற்றி கேள்வி பட்டிருக்கிறார், என்று நினைத்து உங்கள் குழந்தை +1 , +2 வா? எந்த தேர்வுக்கு தயார் படுத்த வேண்டும் என்று கேட்டேன்.

அவரின் பதிலை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. இல்லை மேடம் டியூஷன் எனக்கு தான். எனக்கு இப்போ 55 வயதாகிறது. பசங்களுக்கு கல்யாணம் பண்ணி விட்டேன். அந்த காலத்துல 10 வகுப்பு முடிச்சு வேலைக்கு சேர்ந்து விட்டேன். +2 தேர்ச்சி பெற்றால் என் ஓய்வூதியம் இரட்டிப்பு ஆகும். நீங்கள் உதவி செய்து என்னை “just pass” செய்ய வைத்தால் போதும் என்று கெஞ்சினார். இவரிடத்தில் கற்பதற்கான ஆர்வமோ பொறுப்புணர்ச்சியோ இல்லை. ஏதோ படித்தால் பணம் கிடைக்கும் என்ற சபலம் மட்டுமே இருந்தது.

நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வேத மந்திரங்கள் உபனிட ஸ்லோகங்கள் ராமாயணம் பாகவதம் போன்ற பல்வேறு ஆன்மீக நூல்கள் கற்பிக்கப்பத்கின்றன. அவ்வகுப்புகளுக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு சில அதிகாரிகள், ராக்கெட் மற்றும் ஏவுகணை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சில விஞ்ஞானிகள், கை தேர்ந்த மருத்துவ நிபுணர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் இவர்களின் எண்ணிக்கை முப்பதை தொடும். நன்றாக சம்பாதித்து பெயரும் புகழும் அடைந்த இவர்கள் ஒரு ஆர்வத்திற்காக கற்றுக்கொள்கிறார்கள் என்று தோன்றவில்லை. அவர்களின் ஈடுபாடும் புலமை பெற அவர்கள் முயற்சியும் கண்டு நான் எப்போதும் வியந்ததுண்டு.

இந்த துறையில் முதிர்ச்சி பெற்றால் அவர்களுக்கு சம்பள உயர்வோ உயர் பதவியோ கிடைக்கப்போவதில்லை. மாறாக விடுமுறை நாட்களில் ஓய்வு எடுக்காமல் நேரத்தையும் பணத்தையும் எதற்காக செலவிடுகிறார்கள்? அவ்வாறு ஒரு கலை கற்றால் அது இனிமையான இசையோ, இன்சுவை படைக்கும் சமையலோ, ஓவியமோ, ஒய்யார அழகுடன் இருக்கும் ஆடை செய்தாலோ மனத்திற்கு ஒரு நிறைவு கிடைக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஆக மொத்தம் “கற்றல் எதற்காக “? என்றும் பார்த்தால் நமக்கு பல்வேறு காரணங்கள் புலப்படுகின்றன.

நல்ல எதிர்காலம் அமைய குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள் , தகவல் சேர்க்கும் ஆர்வத்தில் படிக்கிறார்கள் சிலர். கருத்து கழன்சியங்கள் ஆகிறார்கள் சிலர், விருப்பு வெறுப்புகளை பின்னுக்கு தள்ளி பணம் சம்பாதிக்க பதவி உயர்வு பெற சிலர் படிக்கிறார்கள், உள்கடந்து நிற்கும் பூர்ணதுவத்தை உணர ஆனந்தத்தில் திளைக்க மிகவும் சிலர் ஈடுபாட்டுடன் கற்று பயில்கின்றனர். காரணம் எதுவானாலும் பிறந்தது முதல் இறக்கும் வரை கற்றல் என்பது ஒரு தொடர் பயணம் இதை SITUATIONAL LEARNING NEEDS (தேவைக்கேற்ப கற்றல்) என்கிறார்கள் கல்வி நிபுணர்கள்.

பிச்சை புகினும் கற்கை நன்று என்று எதை கற்க சொன்னார்கள் நம் ஆன்றோர்கள். கற்றதனால் ஆய பயன் என்கோல்” என்று நீங்களும் நானும் சிந்திப்போம் மீண்டும் சந்திப்போம்.

உங்கள் தோழி

பத்ம ரஞ்சனி

Likes(3)Dislikes(0)
Share
Feb 142015
 

6Youth

அதிகாலை நான்கு மணி -ஜனவரி மாதம் -ஹைதிராபாத்தில் நல்ல குளிர். இன்னும் கொஞ்ச நேரம் போர்வைக்குள் ஒளிந்துக் கொள் என்கின்றது மனம், இல்லையில்லை எழுந்துக்கொள் என்கிறது புத்‌தி. செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுசினிமா படம் போல் காட்டுகின்ற புத்தியை திட்டிக் கொண்டேஉடம்பை கட்டிலில் இருந்து தூக்கி உட்கார வைக்கின்ற மனதை பக்கத்து வீட்டு குக்கரின் விசில்சத்தமும், மிக்ஸீயின் லூட்டியும் பரபரப்பை ஏற்படுத்தி ஓட வைக்கிறது. “இவர்களுக்கெல்லாம் என்ன அவசரம்? இத்தனை காலை பொழுதில் என்ன சமையல் வேண்டி இருக்கிறது? பாவம் அந்த பெண்மணி புறநகரில் அமைந்த பொறியியல் கல்லூரியில் படிக்கும் அவளது பையனுக்கு காலேஜ் பஸ் காலை ஆறு மணிக்கே வந்துவிடும்; மெடிக்கல் நுழைவு தேர்விற்கு பயிலும் பெண் ஏழு மணிக்கு சென்றால் இரவு ஒன்பதுக்கு தான் வீடு திரும்புவாள். இவர்களுக்கு மூன்று வேளைக்கு தேவையான உணவு டப்பாக்களை நிரப்பி, தனது அலுவலகத்திற்கு ஓடும்”பொறுப்பான” தாயை நினைத்து மனதில் வாழ்த்திகொண்டே எழுந்து …….

பேஸ்ட் ஐ பிரஷிற்கு காட்டி அவை இரண்டையும் பல்லிற்கு காட்டி, முகத்துக்கு தண்ணீர் தெளித்து ஓடோடி வந்து பார்த்தால் மணி 4:30. குளிர் சாதன பெட்டியில் பால் பாக்கெட் இல்லை. சூடான காபிக்கு சபலப்பட்டு வாசலில் இறங்கினால் –“சார்ர்ர்” என்று இரண்டு சக்கர வாகனத்தில், முகமூடி கொள்ளைக்காரன் போல் சால்வை போர்த்திக்கொண்டு ஒருவர் நான்கு பள்ளி குழந்தைகளயும் அவர்களின் புத்தக மூட்டைகளயும் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் நைட்டியில் ஒரு தேவதை, ஸ்கூட்டியில் தனது அன்பு குவியலைக்கு, க்ரிஷ்ணா பரமாத்மாவே ஆச்சர்ய படும் அளவிற்கு, குட்டி அர்ஜூனனுக்கு எதிர் காலத்தை பற்றியும், படிப்பின் முக்கியத்துவத்தை பற்றியும் போதித்துக்கொண்டே ரதம் ஒட்டி சென்றார். அவ்வளவு குளிரில், அதிகாலையில் கூட்டம் கூட்டமாக துவக்க பள்ளி குழந்தைகள் முதல் முதுகலை பயிலும் மாணவர்கள் வரை, எங்கே எதை தேடி எதனை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்?

இந்த ஒரு நாள் மட்டும் அல்ல, வெய்யில் ஆனாலும், குளிரானாலும், மழை பெய்தாலும், புயல் அடித்தாலும், பனி மூட்டமானாலும், ராத்திரியில் ஒரு கும்பல், நண்பகலில் ஒரு கும்பல் என்று ஆறில் ஐந்து ஜாம்ங்கள் இவர்கள் எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள் என்று ஆலோசனை செய்தவாறே வீட்டிற்கு பால் பாக்கெட்டுடன் வந்தேன்.

இந்த மாதிரியான காட்சிகள் எனக்கொன்றும் புதிதல்ல என்றாலும் என்னை எண்ணற்ற முறை சிந்திக்க வைத்தது. பெரும்பாலான நாட்கள் எனது சிந்தனை மாணவர்களின் பற்றில் ஒரு பச்சாதாப உணர்விலும், பெற்றோரின் பால் பாவம் கலந்த கோபம் என்ற எண்ணத்திலும் முடிந்துவிடும். இல்லை “காலம் மாறிவிட்டது”என்ற அங்கலாய்ப்பில் முடியும் . ஒரு தாயாக என் குழந்தைகளயும் இப்படி தான் ஓட்டீனேனா அல்லது ஆசிரியையாக என்னிடம் பயின்ற மாணவர்களை உற்சாகபடுத்தினேனா? என்ற கேள்விகள் மனத்தில் எழாமல் இல்லை!!

அஷ்ட ஐஸ்வரியங்களில் பிரதானமாவை நன்மக்கட்செல்வமும், ஞானமும் ஆகும். தான் கருவில் உருவாகி கொண்டிருக்கும் சிசுவை பற்றிய கனவில் ஆனந்தப்படும் ஒவ்வொரு பெண்ணும் தன் குழந்தையின் எதிர் காலத்தை பற்றியும், அதன் புத்தி ஆற்றலை பெருக்கும் வழிமுறைகளையும் படிப்பாற்றல் பற்றியும் கனவு காண ஆரம்பித்து விடுகிறாள். பேச கற்றுக்கொண்டிருக்கும் போதே”நீ பெரியவன் ஆனப்புறம் என்ன ஆவே?” என்ற கேள்வியும், அதற்கு “டாக்டர்-என்ஜினீயர்” என்ற பதிலையும் தாய் தந்தையர், தாத்தா -பாட்டி என அனைவரும் அந்த குழந்தைக்கு பயிற்சி கொடுத்துவிடுகிறார்கள். அதோடு நிற்காமல் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கெல்லாம் பெருமையுடன் பறைசாற்றி கொள்கிறார்கள்! எனது தோழியின் ஒன்றரை வயதுமகனை, “உன் பெயர் என்ன?” என்று கேட்டால், “அனிருத் IIT” என்று அவன் மழலையில் பதிலளித்தது இன்னும் மறக்க முடியவில்லை. நிறங்கள், பூக்கள், காய் கனிகளின் பெயர்களை கூட சரியாக சொல்லததெரியாத குழந்தைக்கு IIT என்றால் என்னததெரியும் என்று எனக்குத்தெரியவில்லை.

பள்ளிக்கு செல்லும் முன்பே இந்த வகை பயிற்சி என்றால், இரண்டாம் பிறந்த நாள் முடிந்தால் போதும் – எந்த ஸ்கூலில் குழந்தையை சேர்க்க வேண்டும் என்னும் ஆராய்ச்சி எந்த பாடத்திட்டம் உயர்ந்தது என்றும் குறிப்பிட்ட பள்ளியில் நுழைவு பெற நடத்தப்படும் தேர்விற்கு பெற்றோர்களும் குழந்தைகளும் சித்தமாவதும், அதனையொட்டி அனுபவங்களின் பகிர்வு, கருத்து பரிமாற்றம் என்றெல்லாம் பெற்றோர்கள் பரபரப்படைகிறார்கள். இதுவரை மத்திய வர்க்‌க குடும்பங்களில் நாம் பெரும்பாலும் கண்டு வந்த இந்த நிலைமை இப்போது எல்லா வர்ககங்களிலும் ஊடுருவி இருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. ஆங்கில வழி கல்வி போதிக்கும் பள்ளிகளில் அலைமோதும் பெற்றோர்/ மாணவர் எண்ணிக்கையும், அரசினர் பள்ளிகளில் அதிலும் குறிப்பாக தாய் மொழியில் கல்வி கர்பவரின் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ளதையும் மறுக்க முடியாத ஒன்று!!

“இளமையில் கல்” என்றும்”எண்ணும் எழுத்தும் கண்ணெனா தகும்” என்ற அவ்வை பாட்டியின் சொல்லையும்“ஈன்றபொழுதினும்பெரிதுவக்கும்தன்மகனைசான்றோன்எனக்கேட்டதாய்”
என்ற வள்ளுவனின் வாக்கையும் நாம் சரியாக பேணி காத்து வருகின்றோமா? நாம் வீட்டு நம் நாட்டுகுழந்தைகள் தகுந்த செல்வங்களை பெற நம் கல்வி முறையும், திட்டங்களும் உதவி செய்கின்றனவா? வீடும் நாடும் பெருமை கொள்ளும் படி, சரியான சான்றோர்களும்விஞ்ஞானிகளும் உருவாக்கப்படுகிறார்களா? இந்த கேள்விகள் என் மனதை எப்போதும் அலைமோதிக் கொண்டே இருப்பதால்; ஒரு ஆசிரியையாக, ஒரு தாயாக சமூக நலத்தின் பால் ஆர்வம் உள்ளவளாக, தேசத்தின் நலம் இன்றைய மாணவர்களின் கையில்உள்ளது என்ற திடமான எண்னத்துடன் இதில் நம் எல்லோருக்கும் பொறுப்புண்டு என்ற வலுவான கருத்துடனும் இந்த தொடரை  B+ இணைய இதழில் எழுத துவங்குகிறேன். கருத்து பரிமாற்றம், நமது எண்ணங்களை வழிப்படுத்தவும், அணுகுமுறையில் சிறுதேனும் மாற்றம் ஏற்படுத்தும் என்ற கோரிக்கையுடனும் விடைபெறும்……………..

உங்கள் தோழி

பத்ம ரஞ்சனி

 

 

 

எழுத்தாளரைப் பற்றி..

இந்த தொடரை எழுதும் திருமதி பத்ம ரஞ்சனி அவர்கள் பற்றி ஒரு சிறு அறிமுகம்.கல்வி தொடர்பான இவர் எழுதும் இந்த தொடரின் நோக்கம் மாணவர்களுக்கு கல்வியின் மேல் ஒரு ஈடுபாட்டை, ஒரு ஆவலை, கற்றலை ஒரு சுகமான பயணமாக ஆக்க வேண்டும் என்பது தான்.

அவர் ஒரு ஹைதிராபாத் வாசி. பூர்விகம் நம் தமிழ்நாடு தான். 25 வருட கல்வி துறை அனுபவம் மிக்கவர்.மருத்துவ படிப்புக்கான தேர்ச்சி பெற்ற போதும் MBBS வேண்டாம்என்றுஇயற்பியல் எடுத்து. அந்த பாடத்தில் பல்கலைக்கழக முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.பிறகு ஆசிரியர் தொழிலின் மேல் உள்ள பற்றால் இயற்பியல் பேராசிரியராக பல்வேறு கல்லூரிகளில் பணி ஆற்றினார்.

தனது ஓய்வு நேரத்தில் மாணவருக்கு IIT JEE போன்ற தகுதி தேர்வுகளுக்கு பயிற்சி அளித்தார். திருமதி பத்ம ரஞ்சனி அவர்கள் இதை தவிர சமயம், அரசியல் மற்றும் சோதிடம் போன்ற துறைகளிலும் நல்ல ஈடுபாடும் தேர்ச்சியும் உள்ளவர். தமிழின் மேல் ஆளுமையும் பற்றும் உடையவர்.

Likes(4)Dislikes(0)
Share
Jan 152015
 

Kavithai

போர்க்களமா வாழ்க்கை?
பார்க்கலாமே ஒரு கை!

உன்னிடம் உள்ள தன்னம்பிக்கை
உன்னை விட்டு அகலும் வரை
சோர்ந்து விடாதே!

இதுதானா வாழ்க்கை என்று
நீயும் கோழைகளின் பட்டியலில்
சேர்ந்து விடாதே!

இல்லையென்பார் ஒரு கூட்டம்,
உதவி என்று இன்னொரு கூட்டம்
கருணையில் நீயும் இருப்பதைக் கொடுப்பாய்;
இன்னமும் வேண்டும் என்பார்கள்
இதுதான் முடியும் என்பாய்!
மறுகணமே கஞ்சப் பிரபு என
புறம் கூறிவிட்டு செல்வார்கள்!
கொடுத்ததை திரும்பக் கேட்டால்
கோமாளி என்பார்கள்;
இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ
ஏமாளி என்பார்கள்!

நாம் இழைக்கும் தவறுகளிலே
கதைப் பேசி பிழைக்கும் கூட்டம் இது!
இவர்களின் பேச்சைக் கேட்டு;
கவலைப்பட வேண்டாம்!!
கருணையற்ற கூட்டம் காணும்படி,
கண்ணீரை மட்டும் சிந்தி விடாதே!

போகட்டும் அவர்களிடம் இல்லாத,
ஆனால் உன்னிடம் இருக்கும்
ஒரே ஆயுதம் மன்னிப்பு!
காலம் கண் போன்றது!
கவனித்துக்கொண்டே இருக்கிறது!!

– ச.நித்தியலஷ்மி,

(திருகனூர்பட்டி, தஞ்சாவூர்)

0

Likes(2)Dislikes(0)
Share
Jan 152015
 

Youth

இன்று விடுமுறை தினம். எனது மடிக்கணினியை எடுத்து ஈமெயில்களை பார்க்கத் தொடங்கினேன். எனது நண்பனிடமிருந்து ஒரு ஈமெயில். அதில் ஒரு கடவுளின் புகைப்படம். அதை ஒட்டி ஒரு ஆண்மீக கருத்து. கடைசியில் ஒரு செய்தி. “உங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டுமா, இதை உடனே 25 நண்பர்களுக்கு அனுப்புங்கள்”. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது, அந்த மெயிலை DELETE செய்துவிட்டு, முகப்புத்தகத்தில் வலம் வரத் தொடங்கினேன். அதில் ஒரு பதிவு “இந்த புகைப்படத்தை அடுத்த 10வினாடிகளுக்குள் ஷேர் செய்யாவிடில் துரதிர்ஷ்டம் வந்தடையும்” என்று இருந்தது.

இவை இரண்டையும் பார்த்த எனக்கு, சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம்  நினைவிற்கு வந்தது. பல வருடங்களுக்கு முன் ஒரு நாள் காலை எட்டு மணி. அன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். காரணம் எனது பள்ளியில் அன்று முதல் முறையாக ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கணினி கூடத்திற்கு அழைத்து செல்வதாய் இருந்தார்கள். கணினி என்பதே கேள்விப்படாத பல பள்ளிகள் இருக்கும்போது எங்கள் பள்ளி ஒரு கணினியை வாங்கி, ஒரு ஆசிரியரை பணி அமர்த்தி, ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினியை ஒரு பாடமாக அறிவித்திருந்தது.

முதல் நாள் கணினி அறையை நுழைய எல்லா மாணவர்களும் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். நானும் மிகுந்த சந்தோஷத்துடன், காலணிகளை கழற்றிவிட்டு, ஆவலுடன் உள்ளே செல்ல காத்திருந்தேன். எங்கள் பள்ளியில் கணினி அறை குளிர்சாதன வசதியுடன் இருந்த ஒரே அறை. அதுவரை படத்திலும், பாடத்திலும் மட்டுமே கணினியை பார்த்த எனக்கும் மற்ற மாணவர்களுக்கும் மிகவும் வியப்பு.

எங்கள் பெயரை “BASIC” என்ற ப்ரோகிராமில் டைப் செய்து அதை DOT MATRIX PRINTERஇல் பிரிண்ட் செய்ய வேண்டும். அதுதான் அன்றைய கணினி பயிற்சி வகுப்பு. அந்த பிரிண்டை எனது புத்தகத்தில் ஒட்டி வைத்து, வீட்டில் எனது பெற்றோர், உறவினர் என்று எல்லோரிடமும் காண்பித்து மகிழ்ந்தேன்.

அப்போது தபால்காரர் மணியடிக்க, அவரிடம் அந்த தபாலை பெறுவதற்கு வாசலுக்கு விரைந்தேன். அந்த தபாலில், இந்த உலகம் கூடிய விரைவில் அழிய இருக்கிறது, உடனே இந்த தபாலில் உள்ளது போல் 10தபால்கார்ட் செய்து நண்பர்களுக்கு அனுப்பும்படி எழுதியிருந்தது. இதை என் தந்தையிடம் கேட்டபோது, அவர் இது யாராவது வேலையில்லா விஷமிகளின் செயல், இதை பொருட்படுத்தாதே என்று அந்த கார்டை கிழித்துக் குப்பையில் போட்டார்.

அந்த பழைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டு இப்போது நடக்கும் நிகழ்வுகளையும் சிந்திக்க ஆரம்பித்தேன்.

நமக்கு தினமும் இது போன்ற பல தவறான மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகள் பல வருகிறது. சமூக வலைதளங்களில் பல நண்மைகளுக்கு இடையில் இது போன்ற பல பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. அவற்றில் கீழுள்ள சிலவற்றை அடிக்கடி பார்த்திருப்போம்.

1)   கைப்பேசி டவரின் அலைக்கற்றையினால் சிட்டுக்குருவிகள் இறந்துவிடும் என வரும் ஒரு தகவல். உண்மையில், துபாயில் எனது வீட்டருகே அடுத்தடுத்து 3 டவர்கள் உள்ளன. ஆனாலும் எங்கள் வீட்டருகே பல சிட்டுக்குருவிகளை அடிக்கடி காணமுடிகிறது.

2)   இன்னொரு தகவல் – பிரபல குளிர்பான நிறுவனம் பற்றியும் அதில் உள்ள உடல்கேடு குறித்தும் படித்திருப்போம். இதுவும் ஒரு வியாபார உக்தி, NEGATIVE PUBLICITY. சக்கரை அளவு மற்றும் பதப்படுத்தப்பட்ட பானம் என்று வேண்டுமானாலும் ஒதுக்கலாமே தவிர வதந்திகளுக்காக கூடாது. அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் கூட, அனைத்து வாயு குளிர்பானமும் கேடுதானே, ஏன் ஒரு நிறுவனத்தை மட்டும் குறை சொல்லவேண்டும்?

3)   இன்னொரு தலைசுற்ற வைக்கும் தகவல் – ஒரு அழகான, பிரம்மாண்டமான வீடு மற்றும் பல வித கோணங்களில் அந்த வீட்டின் உள்கட்டமைப்பின் புகைப்படம். இது பிரபல தொழிலதிபரின் வீடு என்றோ, வரி ஏய்ப்பு செய்த நடிகரின் வீடு என்றோ, ஒரு விளையாட்டு வீரரின் வீடு என்றோ வரும் தகவல்களை பார்த்திருப்போம்.

4)   சமீபத்து வரவாக, ஒரு பெண்ணின் புகைப்படத்தை போட்டு, இவர் வீட்டிற்குள் புகுந்து, சிலிண்டரை சோதனை செய்யும் அதிகாரி எனக்கூறி வீட்டில் உள்ள பொருள்களை சூரையாடி ஓடிவிடுகிறார் என வேகமாக பரவிய ஒரு பதிவு. அது உண்மையில்லை, யாரும் நம்பாதீர்கள், அந்த புகைப்படத்தில் உள்ளவர் என் சகோதரி தான் என்று ஒரு வாரம் கழித்து இன்னொரு பதிவு. நமக்கு இரண்டில் எது உண்மை எனத் தெரியாது. அப்படியிருக்கையில் நாம் ஷேர் செய்வது ஒருவேலை ஒரு நிரபராதியை தண்டித்து காயப்படுத்தலாம்.

இவைகளைப்போல் தினமும் நாம் பல தவறான செய்திகளைக் காண்கிறோம், ஷேர் செய்கிறோம். இதையெல்லாம் வேலையில்லாத விஷமிகளின் விலையாட்டாகவும், தவறான உள் நோக்கத்துடன் அனுப்புகிறார்கள் என்பதையும்புரிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும், இவ்வாறு நாம் ஷேர் மற்றும் லைக் செய்யும்போது, நமது PROFILE SECURITY SETTING குறைவாக இருந்தால், நமது புகைப்படம் மற்றும் நம் சொந்த விவரங்கள் அனைவருக்கும் தெரியவரும். இதனால் தேவையில்லாத பல இன்னல்களுக்கு ஆலாககூடும்.

இந்த புத்தாண்டு முதல் நாம் அனைவரும் ஒரு நல்ல தீர்மானம் எடுக்கலாமே? நமக்குத் தெரியாத செய்திகளை பரப்பாமல் இருப்போம்.

சமூக வலைதளங்கள், மற்ற தகவல் தொழில் நுட்ப கருவிகளை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுதிதினால் நமது சமுதாயமும், அடுத்த தலைமுறையினரும் பயன்பெறுவது உறுதி.

காந்தியடிகள் சொன்னதுபோல், நல்லதையே படிப்போம், நல்லதையே பகிர்வோம், நலமாக வாழ முற்படுவோம்.

–    ச.கார்த்திகேயன்

(துபாயிலிருந்து)

 

Likes(1)Dislikes(0)
Share
Dec 132014
 

8

பணம்… மனிதனின் வாழ்க்கையை விதவிதமாக மாற்றவல்ல ஒரு தவிர்க்க முடியாத காரணி. முதலில் உணவு, உடை, இருப்பிடம் போன்ற வாழ்வாதாரங்களுக்காக பணத்தைதேடி அலைந்து அவற்றை அடைந்ததும் பின்னர் நல்லஉணவு, நல்லஉடை, நல்லஇருப்பிடங்களுக்காக பணத்தை தேடுகிறோம். அவையும் கிடைத்துவிட்டால் நின்றுவிடுவோமா? அதற்கும்மேல் என்ன இருக்கிறதோ அதை இலக்காக்கிக் கொள்கிறோம். எனவே மனிதனின் மூச்சிருக்கும்வரை இந்தத் தேடல் நிற்கப்போவதில்லை.

ஆனால் இந்தத் தேடுதலின் போது நாம் சேர்க்கும் செல்வத்தை விட பலமடங்கு விலைமதிப்புள்ள சிலவற்றையும் இழக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இரண்டு மாதத்திற்கு முன்னர் வேறொரு அலுவலகத்தில் புதிதாக பணியில் சேர்ந்திருந்தேன். அனைத்தும் புதிது.  அலுவலகம் புதிது.. சுற்றியிருந்த ஆட்களும் புதிது. எதோ வேற்றுக்கிரக மனிதர்களுக்கு நடுவே நான் மட்டும் மாட்டிக்கொண்டது போல ஒரு மனநிலை. அனைவரும் அவரவர் வேலைகளிலேயே கண்ணாயிருந்தனர். நம்மிடம் பேசுவதற்கோ பழகுவதற்கோ யாரும் இல்லை.

அப்பொழுது நாற்பது வயதைத் தாண்டியிருந்த ஒரே ஒருவர் மட்டும் என்னுடன் இன்முகத்துடன் பேசிப்பழகினார். நீண்டகாலம் பழகிய நண்பர் போல வெகுசகஜாமகப் பேசினார். குடும்பத்தைப்  பற்றி விசாரித்தார். புதிதாக வீடு பார்ப்பதற்கு உதவுவதாகக் கூறினார். புதிய அலுவலகத்தில் கிடைத்த முதல் நண்பராக அவரைப் பார்த்தேன். ஓரிரு நாட்கள் அவ்வாறே ஓடியது.

ஒருநாள் மதிய உணவை முடித்துவிட்டு இருவரும் வெளிவந்தோம். “சற்று மரநிழலில் நடந்து விட்டு இருக்கைக்கு செல்லலாம்” என்றார். சரி என்று நானும் அவரும் அங்கு வரிசையாக இருந்த மரநிழலில் நடக்க ஆரம்பிக்க அவர் பேச ஆரம்பித்தார்.

“ஆமா நீங்க வீட்டுக்கு ஒரே பையன்ல” என்றார்.

”ஆமாசார்..”

“கடன் வேற கொஞ்சம் இருக்குன்னு சொன்னீங்கல்ல”

“ஆமாசார்.. கொஞ்சம் இருக்கு… ரெண்டு வருஷத்துல அடைச்சிருவேன் “ என்றேன்.

“நீங்க future ஐ பத்தி எதாவது யோசிச்சி பாத்தீங்களா?” என்றார்.

எனக்கு ஒன்றும் புரியாமல் “future எதப்பத்தி சொல்றீங்க”  என்றேன்

”அத எப்டி சொல்றது.. உதாரணமா நீங்க டூவீலர்ல தான் ஆஃபீஸ் வர்றீங்க..  திடீர்னு உங்களுக்கு எதாவது ரிஸ்க் ஆயிப்போச்சின்னு வைங்க..உங்க குடும்பத்த யாரு பாத்துக்குறது? கடனெல்லாம் அவங்க எப்படி சமாளிப்பாங்க?” என்றார்.

“அதுக்கு என்ன சார் பண்றது.. நம்ம கையில என்ன இருக்கு” என்றேன்

“என்ன இப்டி சொல்றீங்க.. நம்ம இல்லைன்னாலும் நம்ம குடும்பத்த நாமதான் பாத்துக்கனும்”

“சரிசார்… இப்ப என்ன சொல்ல வர்றீங்க?” என்றேன்.

“அஞ்சே அஞ்சி வருஷம் ப்ரீமியம் மட்டும் கட்டுனா போதும். உங்க லைஃப்டைம் ஃபுல்லா கவர் ஆகுறமாதிரி ஒரு புது பாலிஸி வந்துருக்கு” என்றார்.

எனக்கு உடனே ஒரு மாதிரி ஆகிவிட்டது.  “ஓ அப்டியா சார்… ஆனா நா ஏற்கனவே ரெண்டு பாலிஸி போட்டுருக்கேன் சார்.. இப்ப புது பாலிஸி எதுவும் எடுக்குற ஐடியா இல்லை” என்றேன்.

சிறிய ஏமாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு “சரிசரி.. ஆனா கொஞ்சம் நல்லா யோசிச்சிப்பாருங்க.. எவ்வளவு அதிகமா காப்பீடு இருக்கோ அவ்வளவும் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் சேஃப்டிதானே.. இப்ப ஒண்ணும் அவசரம் இல்லை. ஆனா நீங்க நம்மகிட்ட ஒரு பாலிஸி கண்டிப்பா எடுத்துக்கனும் தம்பி” என்றார்.

“சரிங்க.. நா யோசிச்சிப் பாக்குறேன்” என்று கூறிவிட்டுக் கிளம்பினேன்.

9

கடந்த நான்கு நாட்களில் அவர் என்னோடு இன்முகத்துடன் பழகியதை ஒருமுறை ஓட்டிப்பார்த்தேன். இதற்குத் தானா இவ்வளவும் என்று அவர்மீது நான் வைத்திருந்த மொத்த மரியாதையும் கரைந்துவிட்டது. என்னுடன் சிரித்துப்பழகிய இவரைவிட பேசாமல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தவர்கள் எவ்வளவோமேல் என்று தோன்றியது.  தொடர்ந்த நாட்களில் அவர் என்னுடன் பேசுவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார்.

அனைவரும் டாம் & ஜெர்ரி பார்த்திருப்பீர்கள். அதில் ஃப்ரிட்ஜை திறந்தது பார்க்கும்போது ஜெர்ரி எலிக்கு கண்ணில்படும் அனைத்து ஐட்டங்களும் cheese துண்டுகளாகத் தெரியும். டாம் பூனைக்கு ஜெர்ரியைப் பார்க்கும்போதெல்லாம் சாப்பிட உணவு தயாராக இருப்பதைப்போலத் தோன்றும். அதைப் போலத்தான் இந்த சில ஏஜெண்டுகளுக்கும் கண்ணில் படுபவர்களெல்லாம் மனிதர்களாக அல்லாமல் ஒவ்வொரு பாலிஸிகளாகத் தெரிவார்கள் போல என  தோன்றியது எனக்கு.

நிறைய பேர் பணம் சம்பாதிக்க நிறைய யுக்திகளைக் கையாளுகின்றனர். இலவசங்களை கொடுத்து இழுக்கின்றனர். ஆசைகாட்டி நம்மை அழைக்கின்றனர். விதவிதமாக ஏமாற்றுகின்றனர். நாமும் ஏமாறுகிறோம். அவர்களின் உண்மையான பழகுதலின் நோக்கம் தெரியாமல், நமக்குள்ளேயே கலந்திருந்து போலியாகப் பழகி கடைசியில் வியாபாரமுகம் காட்டும்போது தான் நமக்கு வலிக்கிறது. இவ்வளவு அன்பாக பேசியது கேவலம் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் தானா?

செயற்கை அன்பு செயற்கை பாசம் செயற்கை சிரிப்பு இவற்றை உற்பத்தி செய்து உலவ விடுவதில் இவர்களுக்கே அதிகபங்கு உண்டு. உங்கள் தொழில் நீங்கள் செய்கிறீர்கள். அதில் தப்பில்லை. ஆனால் மற்றவர்களுடன் பழகுவதற்கு இந்த ஒரு காரணத்தை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு பழகாதீர்கள். பணம் மதிப்பிழக்கும்போது மனிதம் மட்டுமே எஞ்சி நிற்கும்.

-முத்துசிவா

Likes(5)Dislikes(1)
Share
Nov 142014
 

Time

“நா மட்டும் அப்பவே ஒழுங்கா படிச்சிருந்தா இந்நேரம் ஒரு நல்ல வேலையில இருந்துருப்பேன்” “இந்த வேலைய நேத்தே செஞ்சிருந்தேன்னா இன்னிக்கு யாரும் என்ன திட்டிருக்க மாட்டாங்க” என்று பலர் புலம்புவதை நம் காதால் கேட்டிருக்கிறோம். இழந்த பிறகு இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என மனிதன் ஏங்கும் ஒருசில விஷயங்களில் இந்த நேரமும் ஒன்று. கடந்து போன பிறகே அதன் முக்கியத்துவத்தை மனிதனுக்குப் புரிய வைக்கிறது. எந்த ஒரு நடந்து முடிந்த செயலையும் நம்மால் மறுபடி நிகழ்த்திக் காட்ட முடியும். ஆனால் அதே நேரத்தில் நிகழ்த்துவதென்பது தான் இயலாத காரியம்.

இதற்காக தீவிரமாக யோசித்த ஆங்கிலேயர்கள், இழந்த நேரத்தில் நாம் செய்யத் தவற விட்ட செயல்களை செய்து முடிப்பதற்காக டைம் மெஷின் என்ற ஒரு கருவியைக் கண்டுபிடித்தனர். அதனை உபயோகித்து இறந்த காலத்திற்குச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் நாம் செய்யாமல் விட்ட செயல்களை செய்து கொள்ளலாம். ஆனால் பின்னர் தான் அந்த டைம் மெஷின் திரைப்படங்களில் மட்டுமே வேலை செய்யும் என்றும் நிஜ வாழ்க்கையில் வேலை செய்யது என்றும் தெரிய வந்தது. எனவே இழப்பதற்கு முன்பாகவே நேரத்தை முறையாக உபயோகப் படுத்திக் கொள்வது அவசியமாகிறது.

ஒரு சிறிய கதை. ஒரு நாட்டில் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் முனிவர் ஒருவர் இருந்தார். அவரிடன் ஒரு இளைஞன் செல்ல “குழந்தாய் உனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது ?” என்று முனிவர் கேட்க அதற்கு அவன் “சுவாமி வாழ்வில் நிம்மதியே இல்லை. நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. நினைத்ததை சாதிக்க முடியவில்லை. என்னுடைய லட்சியங்களை அடையவும் முடியவில்லை. குடும்ப வாழ்க்கையிலும் அவ்வளவு நிம்மதியில்லை இதற்கு தாங்கள் தான் எனக்கொரு வழி கூற வேண்டும்” என்றான்.

சிறிது நேரம் யோசித்த முனிவர், “சரி நான் உனக்கு ஒரு நாளுக்கு 1440 வெள்ளிக்காசுகள் தருகிறேன். அதை நீ எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம். ஆனால் நீ அதை சேமிக்க முடியாது. நான் காசு கொடுப்பதை ஒரு நாள் நிறுத்தி விடுவேன். என்றுடன் நிறுத்துவேன் என்றும் சொல்ல மாட்டேன். இப்போது சொல். அந்த காசுகளை நீ எவ்வாறு செலவிடுவாய்?” என்றார்

சற்று யோசித்து அவன் “ஐயா.. அந்தக் காசுகள் எனக்கு மிகவும் முக்கியமானவை. அவற்றை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் செலவு செய்வேன். எனக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்வேன். என் குடும்பத்தினருக்கும் தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பேன். எஞ்சியிருக்கும் காசுகளை என் நண்பர்ளும், உறவினர்களும் சுற்றத்தாரும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு செலவிடுவேன்” என்றான்.

இதனைக் கேட்ட முனிவர் “உன்னுடைய நேர்மையான பதிலைக்கண்டு மகிழ்கிறேன். இப்போது உன்னுடைய பிரச்சனைக்கு நீயே விடை கண்டுவிட்டாய்” என்றதும் இளைஞன் “புரியவில்லையே சுவாமி” என்றான்.

அதற்கு முனிவர் “நான் 1440 வெள்ளிக் காசுகள் என்று கூறியது ஒரு நாளில் இருக்கும் 1440 மணித்துளிகளைக் குறிக்கிறது. அந்த மணித்துளிகள் வெள்ளிக்காசுகளைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. அது ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட ஒரு பொக்கிஷம். அதை ஒரு மனிதன் எவ்வாறு செலவிடுகிறானோ அதைப் பொறுத்தே அவனுக்கு வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். இப்போது உன்னுடைய பதிலிலேயே உன்னுடைய அத்தனை பிரச்சனைக்கும் தீர்வுகள் உள்ளது” என்றதும் தெளிவடைந்தவனாய் இளைஞன் வீடு திரும்பினான்.

இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்மில் எத்தனை பேர் அந்த இளைஞனைப் போல் வாழ்ந்து வருகிறோம்? நம்மில் எத்தனை பேர் நம் குடும்பத்திற்காகவும், நண்பர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் நேரத்தை ஒதுக்குகிறோம்? வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தை கடக்கும் போது பல நண்பர்களுடனான நட்பு அறுபட்டுவிடுவது தவிர்க்க முடியாத உண்மை.

ஆனால் இதற்கு நம்மிடம் இருக்கும் காரணங்களோ “ஆஃபீஸ்ல ஒர்க் ரொம்ப ஜாஸ்தி.. “ரெண்டு குழந்தைங்களாயிருச்சி அவங்கள பாத்துக்கவே டைம் போயிருது” என்று ஒரிரு வலுவில்லாத காரணங்களே..

அலுவலக வேலை என்பது முடிவில்லாத ஒண்று. எவ்வளவு செய்தாலும் செய்து கொண்டே இருக்கலாம். நம்மை நாம் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். அதே போல் குடும்பம், குழந்தைகள் மட்டுமே நம் உலகமல்ல. அதை தாண்டியும் வெளியில் நமக்கு உறவுகள் தேவைப்படுகின்றன.

இந்த அனைத்து சூழலையும் ஒருவன் திறமையாகக் கையாண்டு அலுவலகப் பணிகளுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்குமிடையே ஒரு சமநிலையை கொண்டு வரவேண்டுமானால் நிச்சயம் நேரத்தை முறையாகப் பயன்படுத்துதல் மிகவும் அவசியமாகிறது. எவ்வளவு நேரம் வேலை செய்தோம் என்பதை விட அந்த நேரத்தில் உபயோகமாக என்ன செய்தோம் என்பதே முக்கியம். எப்படி நம் ஒவ்வொரு செயலுக்கும் இந்த நேரத்தை முறைப்படுத்தி முறையாகப் பயன்படுத்துவது? அடுத்த இதழில் விரிவாகக் காணலாம்.

-முத்துசிவா

 

Likes(6)Dislikes(0)
Share
Aug 152014
 

Scared-Face

பயப்படாத மனிதர்கள் என்று யாரும் இந்த உலகில் இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைக் கண்டால் பயம். சிலருக்கு பேய் என்றால் பயம், சிலருக்கு இருட்டு என்றால் பயம், சிலருக்கு பாம்பைக் கண்டால் பயம், சிலருக்கு தனிமை என்றால் பயம், சிலருக்கு மனைவியைக் கண்டால் பயம், இன்னும் ஏன், சில ஹீரோயின்களுக்கு கரப்பாம்பூச்சிகளைக் கண்டால் கூட பயம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றிற்கு பயந்துகொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஏன் திடீரென பயத்தைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறோம் என்றால், ஒவ்வொரு மனிதனின் முன்னேற்றத்திற்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடையாக இருப்பது அவரவரின் பயமே. புது முயற்சிகளை நம்மில் பலர் எடுக்க  தயங்குவதற்கும், இந்த பயம் முக்கியக் காரணமாக இருக்கிறது. நம்மிடமிருக்கும் பயம் என்ற உணர்வானது நாம் செய்யும் சில செயல்களை தன்வசம் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்கின்றது. ஒரு மனிதனுக்கு ஏற்படும் கோபத்தின் முதற்படி இந்த பயமே.

ஒரு விஷயத்தைக் கண்டு நாம் அதிகம் பயப்படுகின்றோம் என்றால், அந்த விஷயத்தை நாம் அதிகம் சந்தித்ததில்லை, நமக்கு அதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றே அர்த்தம். மிக எளிமையான ஒரு உதாரணத்துடன் ஆரம்பிப்போம்.

நம்மால் தரையில் 5 அடி தூரம் வரை தாண்ட முடியும். அதே, 30 அடுக்கு மாடி கட்டிடங்கள் இரண்டு அருகருகே உள்ளன. இரண்டிற்கும் இடையில் உள்ள இடைவெளி வெறும் மூண்றடி தான். இப்போது நம்மை முதல் கட்டிடத்தின் உச்சியிலிருந்து இன்னொன்றிற்குத் தாண்டச் சொன்னால் செய்வோமா?  இங்கு நம்மைத் தடுப்பது எது? தரையில் நம்மால் 5 அடி தாண்ட முடியும் என்ற நம்பிக்கையை ஆகாயத்தில் வெறும் மூன்றடி கூட தாண்ட முடியாத படி உடைத்தது எது? தவறி கீழே விழுந்தாலும் விழுந்து விடுவோம் என்ற பயமே.

ஒரு சின்ன கதை. ஒரு முறை ஒரு அரசர் தன் அரசவையில் ஒரு மிகப்பெரிய பாராங்கல்லை வைத்துவிட்டு, இதை யார் தூக்குகின்றனரோ அவருக்கு நூறு பொற்காசுகள் வழங்கப்படும். அப்படி தூக்க முயன்று தோற்றுவிட்டால் மூன்று கசையடி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். அனைவரும் அந்தக் கல்லின் அளவைப் பார்த்து பயந்து “இவ்வளவு பெரிய கல்லை எப்படி நம்மால் தூக்க முடியும்?” என்று போட்டியில் கலந்து கொள்ளவே வரவில்லை.

பல நாட்களாக கல் அப்படியே இருந்தது. அப்போது வந்தான் ஒரு இளைஞன் நான் தூக்குகிறேன் என்று. அவனைப் பார்த்து வியந்த அரசர் “இளைஞனே உன்னைப் பார்த்தால் அவ்வளவு பலமுள்ளவனாகவும் தெரியவில்லை. அந்தக் கல்லின் அளவைப் பார்த்தாயா? அதை உன்னால் தூக்க முடியும் என்று நம்புகிறாயா இங்கு யாருக்குமில்லாத தைரியம் உனக்கு மட்டும் எப்படி வந்தது?” என்றார். அதற்கு அந்த இளைஞன் “என் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது அரசே. என்னால் இந்தக் கல்லை தூக்க முடியும் என்று நம்புகிறேன். அப்படியே முடியாவிட்டாலும் என்ன, மூன்று கசையடிதானே, வாங்கிக் கொள்கிறேன்” என்றான்.

சரி ஆகட்டும் பாராங்கல்லை தூக்கிவிட்டு பொற்காசுகளை வாங்கிக்கொள் அல்லது கசையடி உனக்காக காத்திருக்கிறது என்றார் அரசர். அனைவரும் கூடி நிற்க இளைஞன் அந்தப் பாராங்கல்லை நெருங்கி இரண்டு புறமும் கைவைத்து முழுபலத்தையும் கொண்டுதூக்க, கல் சற்று கூட கனமில்லாமல் இருக்க, டக்கென்று அதை தலைக்கு மேல் தூக்கினான். அப்போது தான் தெரிந்தது அது பாராங்கல் அல்ல வெறும் பாராங்கல் போல வடிவமைக்கப்பட்ட ஒரு பஞ்சுமூட்டை என்று.

மக்கள் அனைவரும் ஆச்சர்யமாகப் பார்க்க, மன்னர் கைதட்டி சிரித்துக் கொண்டே கீழிறங்கிவந்து இளைஞனைப் பாராட்டினார். “எனது நாட்டுமக்களின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் சோதித்துப்பார்க்கவே இப்படிச் செய்தேன். கல்லின் அளவை பார்த்து பயந்து நம் நாட்டு மக்கள் ஒருவர் கூட இதை தூக்க முயற்சி கூட செய்து பார்க்கவில்லை. நல்ல வேளை நீயாவது தைரியமாக வந்தாயே” என்று கூறி நூறு பொற்காசுகளை அந்த இளைஞனுக்கு அளித்தார்.

நம்மிடமிருக்கும் பயமும் இந்தப் பாராங்கல் போலத்தான். நாம் அதனை முயற்சி செய்யாதவரை அது நம்மை பயமுறுத்திக் கொண்டுதான் இருக்கும். ஒரு முறை அதனை சந்தித்துப் பாருங்கள். அப்படி பயத்தை எதிர்கொள்ளும் போது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றே ஒன்று அதனால் ஏற்படும் மிக மோசமான விளைவு என்னவாக இருக்கும்? அதனை நம்மால் எதிர்கொள்ள முடியுமா என்பதுவேயாகும். மேலே கூறப்பட்ட சம்பவத்தில், ஒருவேளை இளைஞன் கல்லைத் தூக்கவில்லை என்றால் அவனுக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான விளைவு என்றால் அந்த மூன்று கசையடி மட்டுமே.

பயம் என்ற உணர்வு கண்டிப்பாக மனிதனுக்கு தேவை. ஆனால் எதற்காகப் பயப்படவேண்டும் என்ற ஒன்றை மட்டும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் பயப்படும் ஒரு விஷயம் நாம் பயப்பட வேண்டிய அளவுக்கு தகுதியுடைது தானா என்பதை முதலில் ஆராய வேண்டும். உயிர் பயம் (Fear of Death) என்பதும், வாழ்வாதாரத்தை பாதிக்கும் பயமும் (Fear of Survival) எல்லா மனிதர்களுக்குமுள்ள பொதுவான ஒரு பய உணர்வு. மற்றவை அனைத்தும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது. பெரும்பாலான சமயங்களில் நமக்குள் ஏற்படும் பயத்திற்கு நாமே காரணமாகின்றோம்.

பள்ளியில் படிக்கும் போது சில ஆசிரியர்களைப் பார்த்தால் பயப்படுவோம். ஏன் பயப்படுகிறோம்? அவர் அதிகம் நம்மை கேள்வி கேட்பார். கேள்வி கேட்டால் என்ன, பதில் சொன்னால் விட்டு விடுவாரல்லவா? ஆனால் நமக்கு பதில் தெரியாது எனவே அவரைப் பார்த்து நமக்கு பயம் வருகிறது. இங்கு தவறு யார் மேல் இருக்கிறது? கேள்வி கேட்கும் ஆசிரியர் மீதா இல்லை பதில் தெரியாத நம் மீதா?

வளரும்போதுள்ள அதே பழக்கமே வளர்ந்து ஒரிடத்தில் வேலைக்கு செல்லும் போதும் ஏற்படுகிறது. சிலருக்கு அவர்களது மேலதிகாரியைப் பார்த்தால் பயம். ஏன் பயப்படவேண்டும் அவரும் நம்மைப் போல் ஒருவர் ஆனால் நமக்கு முன்னால் சேர்ந்த ஒருவர். அவ்வளவு தான் வித்யாசம். எதனால் பயம் வருகிறது? அவர் கொடுத்த வேலயை நாம் முடிக்காமல் இருக்கலாம். அல்லது நமக்குத் தெரியாத எதோ ஒன்றை அவர் கேட்டுவிடுவார் என்ற பயமாக இருக்கலாம். இங்கும் யார் மீது தவறு?

பெரும்பாலான இடங்களில் நாம் நம்மைச் சரிபடுத்திக் கொள்வதன் மூலமும், நம்மை பயமுறுத்தும் விஷயங்களைப் பற்றிய நம் அறிவைப் பலப்படுத்துவதன் மூலமுமே பல பய உணர்வுகளைத் தகர்த்தெரியலாம். பயத்தை துணிந்து எதிர்கொள்ளுங்கள். மேலே கூறியது போல ஒரு சிலவற்றைத் தவிற பெரும்பாலானவை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட பயங்கள். அவற்றை நாமே உடைத்தெரிவோம்.

ஆங்கிலத்தில் பயத்திற்கு (FEAR) இரண்டு அர்த்தம் உண்டென்று கூறுவர்.

          1)  FEAR – FORGET EVERYTHING AND RUN 

          2)  FEAR – FACE EVERYTHING AND RISE.

இவை இரண்டில் பயத்தை எவ்வாறு கையாளுகிறோம் என்பது நம் கையிலேயே உள்ளது.

கடைசியாக, “வாழ்க்கையில் பயம் இருக்கலாம். ஆனால் பயமே வாழ்க்கை ஆயிடக்கூடாது”

– முத்துசிவா

 

Likes(2)Dislikes(0)
Share
Share
Share