Sep 142016
 

Story

இதோ பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த கொதிப்பு, சர்க்கரை, இதோட சேர்ந்து போனஸா கொலஸ்ட்ரால் வேற! . இப்படி தூங்கிகிட்டே இருந்தால் விளங்கினால் போலதான் ! எழுந்துக் கொள்ளுங்க ! முதல்லே எழுந்து வாக்கிங் கிளம்பற வழியை பாருங்க ! .மனைவியின் அதட்டல். ஒரு நாளைப் போல இதே தொந்திரவுதான். நிம்மதியாக என்னை இரவிலும் தூங்க விட மாட்டேங்கிறாங்க.

வேறே வழியில்லை. கிளம்பிட்டேன். காலை 6.30 மணி. பார்க்லே கொஞ்சம் கூட்டம். பார்க் கேட் கிட்டே வரிசையாக ஒட்டி ஒட்டி ஸ்கூட்டர்கள் மோட்டார் பைக்குகள் நின்று கொண்டிருந்தன. ! என்னைப் போன்ற கன பாடிகள் பார்க்குக்குள் நுழைய வழியே இல்லை, என்ன கொடுமை சார் இது ? வண்டிகளை இடுப்பினால் இடித்து கொண்டே பார்க் உள்ளே நுழைந்தேன்.

பின்னால் ஆளரவம் . திரும்பினேன். கொஞ்சம் கூட அறிவே இல்லை சார் இவங்களுக்கு ! இப்படியா வண்டிகளை பார்க் பண்ணுவாங்கஅலுத்துக் கொண்டே பார்க்கில் நடை பழகும் சக நண்பர் ஒருவர் வளைந்து வளைந்து உள்ளே நுழைந்தார். அவரது கையில் ஒரு சைனா செ(ங்க)ல்!

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமேஅந்த கால எம்.ஜி.ஆர் பாடல் உரக்க பிளிறிக் கொண்டிருந்தது. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’. அவரது மொபைல் அவரது வரவை பராக் பராக் சொல்லும் . முரட்டு மீசையுடன், கொஞ்சம் பெரிய தொப்பையுடன், போலீஸ் மாதிரி இருப்பார். அதனால் நான் அவருக்கு வைத்திருந்த பெயர் எஸ்.பி (சவுண்ட் பார்ட்டி).

நான் அவருக்கு சலாம் போட்ட படியே பார்க் வந்திருக்காங்க இல்லியா! அதான் இப்படி பார்க் பண்ணியிருக்காங்க.!ஜோக் கடித்தேன். என்னை ஏதோ பூச்சி மாதிரி பார்த்துக் கொண்டே வேகமாக நடந்தார். அப்படி என்ன தப்பாக சொல்லி விட்டேன்? சிலருக்கு என் நகைச்சுவை நகச்சுத்தி போல வலிக்கிறது ! நான் வாங்கி வந்த வரம் போல !

நிறைய பேர் பார்க்கை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார்கள். அதில் சில பேர் மட்டும் இடம் வந்து கொண்டிருந்தார்கள், என்ன வேண்டுதலோ? ஒரு சிலர் பின் பக்கமாக ரிவெர்சில் , வேடிக்கையாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டே, என் மேல் இடித்து விடாமல் ஓரமாக ஒதுங்கி நடந்தேன் !

எத்தனை விதம் இந்த மனிதர்கள் ? கொஞ்சம் பேர் ஸ்லோவாக அன்ன நடையில், தரைக்கு வலிக்குமோ காலுக்கு வலிக்குமோ என்று ! வேறு சிலரோ, அசுர கதியில், ஜெட் லீ வேகத்தில் பூமி அதிர ஓடிக் கொண்டிருந்தனர். எதையோ வெட்டி முறிக்கும் வேகம் அவர்களுக்கு.
பார்க்கிலேயே வீடு விற்பது வாங்குவது பற்றி பேசிக் கொண்டு, காசு பண்ண காத்துக் கொண்டிருந்தார்கள் சில சந்தர்ப்ப வாதிகள். வேறு சில அரசியல் அள்ளக் கைகள் , நடந்து கொண்டே, போனில் காலேஜ் சீட் பேரம் பேசிக்கொண்டு , ஒரே கல்லில் நான்கைந்து காய் அடித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் பொய் புரட்டில் புரண்டு, வெறுத்த படியே , நான் பார்க்கில் கொஞ்சம் வேகமாக நடந்து , மூச்சிறைக்க, அவர்களை கடந்தேன்

எனக்கு முன்னே ரெண்டு பேர் தங்களை மறந்து, அவர்களது அதிகாரியை நக்கல் அடித்து கொண்டு நடை பயின்று கொண்டிருந்தார்கள். என்ன ஒரு மஜா அவர்களுக்கு அதில்! அதிகாரி காதில் விழுந்தால், இவர்கள் அவர் காலில் விழ வேண்டும் ! நான் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டே நடந்தேன்.

சில யுவதிகள், பறக்காத தலைப்பை சரி செய்து கொண்டே என்னை தாண்டி நடந்தனர். அவர்கள் பின்னே, அதே வேகத்தில், சில வாலிப மற்றும் அரை குறையாய் டை அடித்த வயோதிக அன்பர்கள் நடந்தனர். ரெண்டு மூணு விடலை ஜோடிகள் வாக்கிங் பெயரில் கடலை போட்டுக்கொண்டு போக, , ‘பார்க்க கண் ரெண்டு போதாது.

இதை ரசித்துக் கொண்டே நான் அசைந்தேன் !

சொல்ல மறந்திட்டேன். சாரி ! பார்க் ரெகுலராக வரவங்க எனக்கு வெச்ச பேர் ஆமை’. அவ்வளவு வேகம் எனது நடையில். இந்த லட்சணத்தில் எனக்கு உடல் எடை குறைய வேறு ஆசை. என்னோட வேக நடைக்கு, எறும்பு கூட என்னை ஓவர் டேக் பண்ணிடும். எறும்பு என்பது இன்னொரு வயதான தம்பதியினருக்கு நான் வெச்ச பேர். என்பதை தாண்டிய அவர்கள், ஜோடியாக ஒருவர் பின் ஒருவராக அடி பற்றி அடிஎடுத்து வைப்பார்கள்.

எனக்கு பரிச்சயமான பார்க் நண்பர்கள் சிலருக்கு சில ஆகு பெயர்கள் உண்டு. ஒல்லியான தேகம் கொண்டவரை பென்சில்என அடைமொழி சொன்னால் தான் என் மனைவிக்கு புரியும். எப்பவும் சின்னதான அரை பேன்ட் போட்டுக் கொண்டு ஓடும் ஒருவருக்கு நான் வைத்த செல்ல பெயர் ஜட்டி”.

மனைவியோடு ஒட்டி ஒட்டி ஈஷிக்கொண்டே நடக்கும் தம்பதிகளுக்கு அடியவன் வைத்த பெயர் ஈஷல்“. கொஞ்சம் இடுப்பை அளவுக்கு அதிகமாகவே ஆட்டும் அழகிய யுவதிக்கு பெயர் ஸ்டைல் சுந்தரி”. எனக்கும் பொழுது போகவேண்டுமே. பார்க்குக்கு இன்று யார் வந்தார் வரவில்லை என கணக்கு பார்க்க வேண்டுமே ?

***

ஆயிற்று, ஒரு மாதிரியாக 5 ரவுண்டு முடிந்தது. அதற்கே கிட்டதட்ட முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது. . அப்பாடா! கிளம்ப வேண்டும். ஒரு வழியாக முடிந்தது. கேட் கிட்டே வரும் போது இன்னும் நெருக்கமாக கேட்டில் வரிசையாக வண்டிகள்.

இங்கு வண்டிகளை நிறுத்தக் கூடாதுநோட்டீஸ் போர்டு கீழேயே ஸ்கூட்டர், பைக்குகள். இடைவெளி இல்லாமல் நிறுத்தி வைத்திருந்தனர். என்ன ஒரு மதிப்பு, மரியாதை நகராட்சி மன்றத்திற்கும் போலீசுக்கும் ! அடித்துக் கொள்ள இரண்டு கை போதாது !

சே ! இப்படியா முட்டாள் தனமாக வண்டியை பார்க் பண்ணுவது ?” மனதிற்குள் அலுத்துக் கொண்டே நான் வெளியே வரும் போது, தாறு மாறாக நிறுத்தியிருந்த ஒரு பைக்கின் ஹான்டல் பார் என்னுடைய சுமாரான பெரிய தொப்பையில் இடித்தது. வலி தாங்காமல் அனிச்சையாக திரும்பினேன்.

இந்த பக்கம் இன்னொரு பல்சர் வண்டியின் ஹான்டல் பார் இடித்து, கை முட்டியில் அடி சுரீர் என்றது. வலி தாங்காமல் வேகமாக என் கையை இழுத்ததில், அந்த வண்டி கவிழ்ந்து, பின்னால் வந்த ஒருவர் மேல் விழுந்தது. அவர் நிலை குலைந்து கீழே சாய்ந்தார். நல்ல வேளை, அவருக்கு பெரிய அடி ஒன்றும் இல்லை. கை சிராய்ப்பு, ரத்த காயம், அவ்வளவு தான்.

அதற்குள், எங்கிருந்து பார்த்தாரோ, கீழே விழுந்த பல்சர் வண்டியின் ஓனர் ஓடோடி வந்து என்ன சார், வண்டிய தள்ளிட்டீங்களே! பார்க்காம கண்ணை மூடிட்டு வரீங்களே?” என்று நெற்றிக் கண்ணை திறந்து எங்களை எரிக்காத குறையாய் திட்ட ஆரம்பித்து விட்டார்.

விழுந்தவரை பற்றியோ அல்லது என்னை பற்றியோ அந்த மகானுபாவர் கவலை பட்டதாக தெரியவில்லை. பின்னே, வண்டி இன்டிகேட்டர் லைட் உடைந்தால் யாருக்கு தான் கோபம் வராது? அவரது வண்டி தானே அவருக்கு முக்கியம்? அது தானே நியாயம்!.

ஹலோ! யார் சார் உங்களை வழியில் வண்டியை நிறுத்த சொன்னாங்க? நாங்களே இங்கே அடி பட்டு கிடக்கிறோம். சும்மா சத்தம் போடறீங்க?” என்று நான் ஆரம்பிப்பதற்கு முன்னால் கீழே விழுந்தவர், சத்தம் போட்டு எகிற ஆரம்பித்து விட்டார்.. அவர் படித்தவர் போல. அதனால் ஆங்கிலத்தில்ஸ்டுபிட், இடியட் இப்படியா வண்டிய நிறுத்தறது? அறிவு வேணாம்?”. என்று காச் மூச்சென்று கத்தினார்

புல்சர் வண்டிகாரருக்கு பிரஷர் எகிறி விட்டது. நாங்க பின்னே எங்கே விடறது? நீங்க தான் பாத்து போகணும் ! பெருசா பேச வந்துட்டீங்க ? இந்த பக்கம் குப்பை வண்டி, அந்த பக்கம் கார்ப்பரேஷன் தோண்டிய பள்ளம். எங்களுக்கு ஏது இடம்? சொல்லுங்க! வண்டி காரர் கத்த , மற்றவர்கள் கூச்சல் போட, கூட்டம் சேர்ந்து விட்டது. ரசா பாசம்.

நான் கொஞ்சம் முன் கோபி. எனக்கு ஏற்கெனவே நிறைய ரத்த அழுத்தம் . வயசானால் எல்லாமே அதிகம் தான். உடம்பில் உப்பு, சக்கரை, கொழுப்பு . எனக்கு கூடவே போதாத நேரம் வேறு.. 9-ல் இருந்த ராகு இப்போது 8-ஆம் இடத்துக்கும்; 3-ல் இருந்த கேது இப்போது 2-ஆம் இடத்துக்கும் , என்னை எதுவும் கேட்காமலேயே மாறிவிட்டார்களாம். சனி வேறு என்னை வக்கிரமாக பார்க்கிறாராம். அடக்கி வாசிப்பது நல்லது என என் மனைவி அடிக்கடி சொல்லுவாள் (சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் அவளிடம் என்றும் இன்றும் அடக்கி தான் வாசிக்கிறேன் !)

என் கெட்ட நேரம், என்கிட்டே இல்லாத ஒண்ணை இருக்கான்னு பல்சர் வண்டி காரரின் நண்பர் என்னை எகத்தாளமாக வினவினார் (வேறென்ன, மூளைதான்). அவர் அங்கே அவரது ஸ்கூட்டியை பார்க் பண்ணியிருந்தார் போல. அதுவும் சாய்ந்து லேசான சிராய்ப்பு அந்த வண்டிக்கு. அந்த கோபம்.

கோபம் தாங்காமல் அவரை அடிக்க போனேன். மாறாக, அவரிடம் அடி ஒன்று வாங்கிக்கொண்டேன். இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் அந்த பக்கமாக போன ஓட்டை உடைசல் ஸ்கூல் பஸ்ஸில் ஏறியது. வெறுத்து விட்டேன்.

அன்றிலிருந்து என் மனசுக்குள் ஒரு வெறுப்பு.. இந்த பார்க்கே வேண்டாம் ! இந்த ஊரில் எனக்கு வேறு போக்கிடமே இல்லையா என்ன ? ரொம்ப வீராப்பாக, பத்து நாள் பார்க் பக்கமே போகாமலிருந்தேன். ஆனாலும், என்னை அடித்தவர் முகம் மற்றும் அவரது ஸ்கூட்டி ஞாபகம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர பழி வாங்க மனது துடித்தது. மறக்க முயன்று கொண்டிருந்தேன். முடியவில்லை.

***

இந்த பத்து நாளும் ரோட்டில் வாக்கிங். ஆனால், மாநகராட்சி தோண்டல். அவர்களது உபயத்தில் ரோடே பள்ளமும் மேடுமாக. குப்பை வேறு! மக்கள் நலனுக்காக (?!) அரசாங்கம் வெட்டிய குழியில் விழுந்தால், எழுந்துக்க முடியாது. மண்ணை போட்டு நம்மை மூட வேண்டியதுதான். அதையும் நகராட்சி செய்யாது. அப்படியே விட்டு விடும்.

வேறு வழி, திரும்பவும் பார்க்குக்கு போனேன். ஒரு மாற்றமும் இல்லை. அதே குப்பை. வண்டிகள் எப்போதும் போல் கேட் வாசலில் பார்கிங், இடக்கு மடக்காக. என்னை அடித்தவரோட ஸ்கூட்டி அங்கே நின்று கொண்டிருந்தது. அடி வாங்கியது மறக்க முடியவில்லை.

பழி வாங்க மனது துடித்தது. என்ன பண்ணலாம்? வண்டியை தள்ளி விடுவோமா? யாராவது பார்த்து விட்டால்? டயரை பஞ்சராக்கி விட்டால்? ஆனால் அது சாத்தியமில்லையே. படிச்சவங்க பண்ற காரியமா இது? மாட்டிக்கொண்டால் எவ்வளவு அவமானம் ?

யோசனையுடன் பார்க்கில் நடந்தேன்.. அன்று ஆமையே அசால்டாக என்னை ஓவர்டேக் பண்ணியிருக்கும். திடீரென்று ஒரு பல்பு என் மண்டைக்குள் எரிந்தது. ஐடியா. பழி வாங்க.
****

அடுத்த நாள். உற்சாகமாகஎனது மனைவிக்கு முன்பாக நான் எழுந்து வாக்கிங் தயாராகி விட்டேன். பழிக்கு பழி. வழக்கம் போல பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த கொதிப்பு,…” மனைவி சுப்ரபாதம் ஆரம்பித்து முடிப்பதற்குள், வீட்டிற்கு வெளியே நான். ஆச்சரியத்தில் , அவள் வாய் மூட மறந்தாள். என் கையில் ஒரு சின்ன பேனா கத்தி. விடுவிடுவென பார்க் நோக்கி நடந்தேன்.

முயல் கூட அன்று என்னிடம் ரேசில் தோற்றிருக்கும். அவ்வளவு வேகம் !

என்னை அடித்தவரோட ஸ்கூட்டி ,பார்க்கில் கேட் முன்னால், எப்போதும் போல் வழியை மறித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தது. நேராக அருகில் போனேன். யாரும் பார்க்கவில்லை. கத்தியால் சீட்டில் நாலு கோடு இழுத்தேன். டர்ரென்று சீட கிழிந்தது. அப்பாடா, திருப்தி. பழி வாங்கினால் என்ன சுகம்.! அதுக்கு ஈடு இணையே கிடையாது. மற்றவரின் சீட்டை கிழிப்பது என்பது எல்லாருக்கும் கிடைக்கும் பாக்கியமா என்ன?

திரும்பினேன். ஸ்கூட்டி ஓனர், என்னை அடித்த மகானுபாவன். அவனுடன் கூட ரெண்டு தடியன்கள். என்னை நோக்கி ஓடி வந்தார்கள்.

மாட்டினியா! மவனே! பத்து நாலா (அவருக்கு ளா வராது) எங்க வண்டிங்க சீட் கிழிச்சியே! நீதான்னு எனக்கு சந்தேகம். பிடிச்சிட்டோம் பாத்தியா!கொக்கரித்தான் ஸ்கூட்டி ஓனர்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் பார்க் பக்கம் வந்தே பத்து நாளாயிற்றே. இன்னிக்கு தானே இந்த வேலையை பண்ணினேன். பத்து நாளா நான் எங்கே, எப்படி செய்திருக்க முடியும்?.

என்னைப் போல் எவனோ ஒருவன், இந்த வேலையை பண்ணியிருக்கிறான். பழி என் தலையில்.

எல்லாரும் சேர்ந்து என்னை ஜூஸ் பிழிந்து விட்டார்கள். என்னை ஒண்ணுமே சொல்ல விடலை. ஒரே ஒரு நாள் கிழிச்ச பாவத்துக்காக, பத்து பேருக்கு புது சீட கவர் வாங்க பணம் கொடுத்தேன். நல்ல வேளை, தெரிந்த நண்பர்கள் வந்து காப்பாற்றினார்கள். இல்லாவிட்டால், போலீஸ் கேஸ் ஆகியிருக்கும்.

***

அடுத்த நாள், பார்க் பக்கம் போனேன். சார்! சார்!என்று யாரோ கூப்பிட்டார்கள். திரும்பினேன். டெய்லி மார்னிங் வாக் வருபவர். ஒல்லியா இருப்பார். பென்சில்னு அவருக்கு நான் அன்பாக வைத்த அடைமொழி. சாரி சார், நேத்து நீங்க சீட் கவர் கிழிக்கறப்போ நான் அங்கே தான் இருந்தேன். எல்லாத்தையும் பார்த்தேன்

எனக்கு கொஞ்சம் ஆதங்கமாக இருந்தது. ஆமா சார், கோபத்திலே நான் ஒரே ஒரு நாள் தான் சீட்ட கிழிச்சேன். அனால், பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் மாதிரி, பத்து நாள் தண்டனை கொடுத்திட்டாங்கஎனக்கு யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல இருந்தது.

என்ன சார், படிச்ச நீங்களே இதெ செய்யலாமா? பண்றது தான் பண்றீங்க, யாரும் பாக்காம பண்ண வேண்டாம்? அது கூடவா தெரியாது? நானே பாருங்க, ரெண்டு நாள் இந்த தடியன்கள் வண்டி சீட் கிழிச்சிருக்கேன். மாட்டினேனா?”- பென்சில் மார் தட்டிக் கொண்டார்.

அப்படியா? நீங்க கூடவா? நீங்க ஏன் அப்படி பண்ணீங்க?”

பின்னே என்ன சார் ? வண்டியே குறுக்கால நெடுக்கால நிறுத்தி இடைஞ்சல் பண்றாங்க. வெறுப்பா இருக்கு. கேட்டால் சண்டைக்கு வராங்க”- தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

அப்போ, மீதி ஏழு நாள் யார் கிழிச்சிருப்பாங்க!

அதான் சார், எனக்கும் புரிபடலை. ஆனாலும், ஸ்கூட்டர் கேட் கிட்டே நிறுத்திறது குறையலியே! தண்டனை கொடுத்தாலும் திருந்த மாட்டேங்கறாங்க”. பென்சிலுக்கு குழப்பம்.

எனக்கு தெரிந்துவிட்டது. யாரை சொல்லியும் பிரயோஜனமில்லை. குறை எங்க எல்லோரிடமும் தான். நமது ஊரில் நடப்பது நகராட்சி இல்லை. நகராத ஆட்சி. கார்பரேஷன் மெத்தனம், ஊர்பட்ட ஸ்கூட்டர், கட்டமைப்பு குறைகள், மலிந்து போன ஊழல், மக்களின் வெறுத்து போன முரட்டு சுபாவம், தன்னலம் எல்லாம் தான் காரணம்.

எனக்கு இப்போது ஒன்று தெரிந்தது. வன்முறை இதற்கு வழியில்லை. நான் செய்த தவறு எனக்கு மெதுவாக புரிந்தது. நாம கோபப்பட்டு ஒரு உபயோகமும் இல்லை. ஒரு ஆணியும் பிடுங்க முடியாது ! மனக் கஷ்டமும், பண நஷ்டமும் தான் மிச்சம்.

முடிவு செய்து விட்டேன். இப்போது தலையில் மீண்டும் ஒரு முறை பல்பு எரிந்தது. இனி என் வழி இன்முறை தான்.

பார்க் டிரஸ்ட் மெம்பர்களிடம் சொல்லி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பென்சில், ஜெட் லீ, உதறல், எஸ்.பி (சவுண்ட் பார்ட்டி) , எள்ளுரண்டை மாதிரி நண்பர்கள் மூலமாக , ஸ்கூட்டர் பார்கிங் சீர் செய்ய முயல வேண்டும். இந்த ஆமையும், கொஞ்சம் பொறுமையாக செயல் பட்டு, வண்டிகளை சீராக, மற்றவருக்கு தொந்திரவில்லாமல் நிறுத்த வழி செய்ய வேண்டும். ஒரு சின்ன சமூக சேவை.

பார்ப்போம்! .முயன்றால் முடியாதது எது? 

முற்றும். 

 – முரளிதரன்.S

Likes(2)Dislikes(0)
Share
Aug 152015
 

Story

நேரம் காலை 7.30 மணி.

முகேஷ் தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வயது ஒரு 30 இருக்கும். ஒரு கணிணி சம்பந்தபட்ட அலுவலகத்தில் மென்பொருள் எழுதும் வேலை. கேளம்பாக்கம், சென்னை. நடுத்தர வர்க்க மக்கள் கடனில் கட்டிய வீடுகள். ஒன்று அமரரான அவனது அப்பாவுடையது. அந்த வீட்டு மாடியை வாடகைக்கு விட்டிருந்தார்கள். கீழே முகேஷும் அவனது அம்மாவும் குடியிருந்தார்கள்.

மாடி வீட்டு அனு, அழகான  7 வயது பள்ளி சிறுமி.  ரொம்ப ஸ்மார்ட். அணில் போல துறு துறு. பள்ளிசீருடையில், தூக்க முடியாமல் , புத்தக பையுடன் மாடியிலிருந்து இறங்கினாள். 

“ஹாய் அனு, ஸ்கூல் கிளம்பியாச்சா!” முகேஷின் கேள்விக்கு அனுவின் “ஆமா!” என்ற அரைகுறை முனகல்.

வாசலில், அனுவைப்போலவே 7-8 சிறுவர் சிறுமியர், பள்ளி பேருந்துக்காக காத்துக்கொண்டு, பேசிக் கொண்டிருந்தனர்.. இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.

வழக்கம் போல் ஸ்கூல் பஸ் 7.30 மணிக்கு வந்தது. வந்த பஸ், வழக்கம் போல் ஒரு 30 அடி தள்ளி நின்றது. பசங்கள், வழக்கம் போல் ‘ஓ’வென்று சத்தம் போட்டுக்கொண்டு ஓடி, ‘நான் முந்தி நீ முந்தி’ என்று முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். வழக்கம் போல் அனு கொஞ்சம் பின்னால்.

இது தினம் நடப்பது வழக்கம் தான். இதை பார்த்துக்கொண்டே இருந்த முகேஷ், ஒரு நாள், அனுவிற்கு உதவி செய்ய நினைத்தான். 

அனுவின் அருகில் சென்று கேட்டான்: “ஆமாம்! அனு ! நீ பஸ் பிடிக்க ஏன் ஒரு நாளைப் போல ஓடற? ஏன் உனக்கு சீட் கிடைக்காதா?”

“ஏன் கேக்கறீங்க அண்ணா ? எல்லோருக்கும் சீட் இருக்கே!” – அனு

“பின்னே ஏன் நீ முன்டியடிச்சிகிட்டு ஓடற?” – முகேஷின் அடுத்த கேள்வி.

“முதல்லே வண்டியிலே ஏறணும்! அதுக்கு தான்.”- அனு

“ஏன் முதல்லே வண்டியிலே ஏறணும்?” – விடுவானா முகேஷ்.

“இது வரைக்கும் நான் பஸ்லே முதல்லே ஏறினதே இல்லே. எல்லாரும் எனக்கு முன்னாடியே எறிடறாங்க..” சொல்லும்போதே அனுவின் கண்கள் குளமானது.

“சரி! சரி , கண்ணை தொடச்சுக்கோ. நீ ஏன் முதல்லே ஏறணும்? என்ன கிடைக்கும் ? சாக்லேட் கிடைக்குமா ? வேறே எதாவது பரிசு கொடுப்பாங்களா என்ன ?”

அனு கொஞ்சம் யோசித்தாள். “அதெல்லாம் ஒண்ணும் இல்லியே!”. 

“அப்போ நீ ஏன் அனு ஓடணும்?” முகேஷ் கேட்டான்.

அனு மீண்டும் யோசித்தாள். “தெரியல்லையே!”
புரிந்ததோ இல்லையோ, குழந்தை அனு ஓடி விட்டாள். பேருந்திலும் ஏறிக்கொண்டு விட்டாள்.

****
அடுத்த நாள் காலை.

வழக்கம்போல் வாசலில் முகேஷ் அவனது வண்டியை துடைத்துக் கொண்டிருந்தான். மாடியிலிருந்து கீழே இறங்குகையில், அனுவின் “ஹலோ அண்ணா” குரல். “ஹாய் அனு’ என்று முகேஷ் பதில் குரல் கொடுத்தான். அவன் அருகில் அனு வந்து நின்று கொண்டாள்.

வழக்கம் போல் பஸ் வந்தது. பசங்க அனைவரும் ஓடினர், அனுவைத்தவிர. இன்று அவள் ஓட வில்லை.  நிதானமாக போய் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு முகேஷை பார்த்து கையாட்டினாள்.

முகேஷ்க்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அனுவிற்கு ஒரு பெரிய விஷயத்தை ரொம்ப சுலபமாக விளக்கிய திருப்தி. தன்னைத்தானே “நீ பெரிய புத்திசாலிடா முகேஷ்”  மார்பில் தட்டிக்கொண்டான்..

மத்தவங்க விஷயத்திலே தேவையில்லாமல் தலையிடுவது முகேஷின் ஹாபி. மூக்கை நீட்டுபவர் பல ரகம். சிலருக்கு மற்றவர் விஷயங்களில் தலையிடுவது, என்பது ‘ தான் உயர்ந்தவன்’ என்பதை காட்டிக் கொள்ளவே. தங்களது வாழ்க்கை தரத்தை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள ஒரு சிலர், பொறாமை காரணமாக , விஷயம் என்ன என்று அறிந்து கொண்டு நேரடியாகவோ பின்னாலோ குறை கூற வேறு சிலர். 

‘உங்களிடம் எனக்குஅக்கறை இருக்கிறது’ என்பதை காட்டி கொள்ள மூக்கை நீட்டும் மூக்கர்கள் பலர் உண்டு. அனைவரது பிரச்னைகளுக்கும் இவர்களிடம் தீர்வு உண்டு, அவர்களது பிரச்னைகளை தவிர.  முகேஷ் இந்த ரகம்.

அவன் பண்ணின வேண்டாத வேலையின் விபரீதம், அப்போது அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

****

மூன்று நாள் கழித்து.

அனுவின் அம்மா, முகேஷின் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார். 

“என்ன ஆச்சுன்னே தெரியலை அக்கா! திடீர்னு அனுவின் போக்கே புரிபடலை. பசங்க கூட விளையாட மாட்டேங்கிறா. “சும்மா பந்து போட்டு பிடிச்சு விளையாடறாதாலே என்ன லாபம்? ஓடிப்போய் கம்பம் தொட்டு திரும்பி ஓடி வந்து விளையாடறதிலே  என்ன பிரயோசனம்? நான் விளையாட போகலை! போகமாட்டேன்.” இதுமாதிரி ஏடாகூடமாக பேசறா. பள்ளி வகுப்பாசிரியை என்னை பள்ளியிலே வந்து பாக்க சொல்லியிருக்காங்க!” அனுவின் அம்மா குரலில் கவலை தெரிந்தது.

தற்செயலாக அங்கே வந்த முகேஷுக்கு ‘சொடேர்’ என்றது.  ‘ஐயையோ ! அனுவின் மாற்றத்திற்கு தான் தான் காரணமோ? அனு போட்டு கொடுத்து விட்டால், அம்மாவுக்கு கொலவெறி வந்துடுமே!.’ 

****
இது நடந்து மூன்று நாட்கள் இருக்கும்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அம்மா சொல்படி, முகேஷ், வீட்டில் ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தான். மெல்லியதாக ‘க்ருக் க்ருக்’ என்று ஒரு சத்தம். ஒரு கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாக உருமாற கூட்டை உடைத்துக் கொண்டிருந்தது. தலை வெளியேவந்து விட்டது. ஆனால், அதன் . இறக்கை இன்னும் வெளியே வரவில்லை. முட்டி மோதிக் கொண்டிருந்தது. “ஐயோ பாவம்!”. பூச்சியின் அவஸ்தை, பார்த்துக் கொண்டிருந்த பரோபகாரி முகேஷின்  மனம் பதைபதைத்தது. அவனுக்கு  உதவி செய்ய ஆசை. உடனே, ஒரு மெல்லிய குச்சியை  எடுத்து அந்த கூட்டை , ரொம்ப மெதுவாக குத்தி உடைத்தான். வண்ணத்துப்பூச்சி, கூட்டை விட்டு, வெளியே வந்து விட்டது. அதை பார்த்து  முகேஷ்  ‘ஆஹா! பூச்சியை காப்பாற்றி விட்டோமே! என எண்ணினான். பூரித்தான். . அவன் மனம் ஆனந்தத்தால் இறக்கை கட்டி பறந்தது.
பூச்சி மெல்ல தத்தி தத்தி நடந்தது. ..நடந்தது…. நடந்தது….ஆனால் பறக்கவேயில்லை.

முகேஷ் இப்போது அந்த பூச்சியையே ஆதங்கத்தோடு பார்த்துக்கொண்டேயிருந்தான். 

‘ஐயையோ! பூச்சிக்கு என்ன ஆயிற்று?’ அந்த வண்ணத்து பூச்சியின் இறக்கை இரண்டும் ஒட்டிக்கொண்டு, அது பறக்க முடியாமல் கீழே விழுந்து விட்டது. இப்போது முகேஷுக்கு புரிந்தது. கூட்டை அவசரப்பட்டு உடைத்ததனால், பூச்சிக்கு இந்த நிலை.

பூச்சியை அதன் போக்கில் விட்டிருந்தால், பூச்சி , தானே, அடித்து பிடித்து கூட்டை விட்டு வெளியே வந்து பறந்திருக்கும். பறக்கமுடியாமல் இப்போது பூச்சி இறந்து விடுமோ? தான் பூச்சி விஷயத்தில் அனாவசியமாக தலையிட்டிருக்க கூடாதோ?

****

மறுநாள் காலை நேரம் 7.30 மணி.

முகேஷ் தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். பள்ளிக்கு போக தயாராக, அனுவும், கூட அவள் அம்மாவும் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். . அனுவின்அம்மா அவளை அர்ச்சனை பண்ணிக் கொண்டே  வர, அனு முகேஷ் பக்கம் கை காட்டி, கண்ணை கசக்கிக் கொண்டு ஏதோ சொல்லி கொண்டே வந்தாள். அனுவின் அம்மா, முகேஷை பார்த்த பார்வையில் நெருப்பு. முகேஷ் தலையை தாழ்த்திக் கொண்டான்.

வழக்கம் போல், பள்ளி பஸ் வந்தது. தள்ளி நின்றது. வழக்கம் போல், பசங்கள் ‘ஓ’வென்று சத்தம் போட்டுக்கொண்டு ‘நான் முந்தி நீ முந்தி’ என்று ஓடி, முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். அனுவின் அம்மா அனுவை ஓடிபோய் ஏற ஊக்குவித்தார்.  அவளும் ஓடிப்போய் முண்டியடித்து வண்டியில் ஏறினாள். அனு சிரிக்க, அம்மா கை காட்டி அனுப்பி வைத்தார். 

அப்பா!  தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. அனுவின் அம்மா அனுவின் பிரச்சினையை  ஏதோ கண்டித்து பேசி, சரி செய்து விட்டார். . வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட இதெல்லாம் ஒரு முன்னோட்டம் போலிருக்கு. . ..

முடிவு செய்து விட்டான் முகேஷ், இனி தன் ஹாபியை மாற்றுவதென்று. இன்றிலிருந்து, முந்திரி கொட்டையாக, மற்றவர் காரியங்களில், தன்  மூக்கை நுழைப்பதில்லை. தேவையில்லாமல் தலையிடுவதில்லை. 

– முரளிதரன்.S

 

Likes(1)Dislikes(0)
Share
Jul 142015
 

athirsam

“அம்மாடி முத்துலட்சுமி, அந்த முறுக்கு மாவை சீக்கிரம் எடுத்து வந்து நல்லா பிசைந்து கொடு. முறுக்கை இப்போ பிழிந்தால் தான் நாளைக்கு சப்ளை கொடுக்க முடியும். டேய் முனியா, அந்த அதிரசத்தை பெட்டியில் எடுத்து அடுக்கி வைக்கலாம், வா” என்று கூறியபடி அடுக்கியிருந்த லட்டை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள் அம்சவேணி அம்மாள்.

இரண்டு கால்களிலும் சக்கரம் கட்டிவிட்டது போல் ஓடிக்கொண்டிருந்தாள். 50வயதிலும் தேனீயை போல் சுறுசுறுப்பு. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் அம்சவேணியின் மகன் ராமன்.

மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான் ராமன். ஒருவேலை தானும் உதவலாம் என்று போனால், “ஐயா, ராசா.. வேண்டாயா.. நீ டாக்டருக்கு படிக்கிற புள்ள, இந்த வேலையெல்லாம் நான் செஞ்சுக்கிறேன், நீ நல்லா படிச்சு உன் சொந்த கால்ல நிக்கனும், அது போதும்பா” என்பாள்.

இதையெல்லாம் பார்த்தும் யோசித்தபடியே இருந்த ராமனுக்கு வாசலில் யாரோ நிற்பது போன்ற சத்தம் கேட்டு விரைந்து வாசலுக்குச் சென்றான்.

ஒரு பெண், கொஞ்சம் ஆடம்பரமான தோற்றம். முகத்தில் தெளிவு, நடை உடை பாவனையில் ஒரு மிடுக்கு. பார்ப்பதற்கு கிராமத்து பெண் போல் அல்ல. யோசித்தபடியே சென்று, “யார் நீங்க, என்ன வேண்டும் உங்களுக்கு?” என்றான்.

“நான் கயல்விழி, ஒரு பத்திரிக்கை ஆசிரியை, இது தானே அம்சவேணி அம்மாள் வீடு?” என்றாள்.

“ஆமாம்” என்றான் ராமன்.

“நான் அவர்களை பார்க்க வேண்டும். பார்க்கலாமா?” – கயல்விழி

“ஓ, பார்க்கலாமே, உள்ளே வாங்க, அம்மாவை கூப்பிடுகிறேன்” என்று உள்ளே விரைந்தான்.

வீட்டை நோட்டம் விட்டபடியே நின்றுக் கொண்டிருந்தாள் கயல்விழி.

அழகான கிராமம் அம்மாப்பட்டி. அம்சவேணியின் மாமனார் குடும்பம் அந்த கிராமத்தில் வாழ்ந்த பெரிய குடும்பங்களில் ஒன்று. செல்வ செழிப்பு மிகுந்த குடும்பம். நஞ்ச புஞ்ச எல்லாம் ஏராளமாக இருந்தது. விவசாயம் தான் அவர்களது முக்கியத் தொழில். யார் உதவி என கேட்டு வந்தாலும் ஓடிச்சென்று உதவும் உள்ளம் கொண்டவர்கள். நன்றாக வாழ்ந்து, விவசாயத்தில் நஷ்டம் அடைந்து, விதி வசத்தால் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்ற பெயர் இருந்தாலும் தன்னம்பிக்கையோடு உழைத்து வாழ்வில் வெற்றியை தேடும் அம்சவேணியை பற்றி கேள்விப் பட்டதையெல்லாம் நினைவுக் கூர்ந்தாள் கயல்விழி.

“அம்மாடி, யார் தாயி, என்ன வேணும்” என்ற அம்சவேணியின் குரலைக் கேட்டுத் திரும்பி பார்த்தாள் கயல்விழி.

“வணக்கம்மா, என் பெயர் கயல்விழி, நான் ஒரு பத்திரிக்கை ஆசிரியை. உங்களைப் பற்றி தெரிய வந்தது. உங்களை பேட்டியை என் பத்திரிக்கையின் நம்பிக்கை நட்சத்திரம் பகுதியில் எழுதலாம் என்று உங்களை பார்க்க வந்தேன்” என்றாள்.

“என்ன பத்தியா? அய்ய நா அப்புடி என்ன செஞ்சுப்புட்டேன்? எனக்கு ஒன்னும் புரில. ஏதோ நீ வந்துட்ட, இப்படி உக்காரு தாயி. நா போயி காபி தண்ணி கொண்டு வாரன்” என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றாள். அடுத்த இரண்டு நிமிடத்தில், காபி பலகாரத்தோடு வந்தாள்.

“மொதல்ல சாப்டுமா, அப்புறம் பேசுவோம்”

“இல்லம்மா, பரவாயில்லை இருக்கட்டும். நீங்க உக்காருங்க. இந்த வயசிலும் எப்படி உங்களால இப்படி சுறுசுறுப்பா இருக்க முடியுது, பார்க்கவே வியப்பா இருக்கு” என்றாள்.

“என்னம்மா பன்றது? வேல செஞ்சே பழக்கப்பட்ட ஒடம்பு. முடியாதுனு என்னிக்கி நினைக்கிறனோ, அன்னிக்கி நா உயிரோட இருக்கமாட்டம்மா” என்றாள் அம்சவேணி.

“பல வசதி வாய்ப்புகளோடு இருந்துட்டு இப்படி ஒரு நிலைமையிலும் தன்னம்பிக்கையோடு எப்படி உங்களால இருக்க முடியுது?”

“நான் கல்யாணம் பண்ணிட்டு வந்தப்போ, என் மாமனார் வெவசாயத்துல நல்ல லாவம், வியாவரத்துல கேரளா, கர்நாடகானு நெல், காய்கறி, பழம்னு அனுப்புவாங்க. ஒரு சமயத்துல 10லட்சம் ரூவா நஷ்டம் வந்துட்டுது. என்ன பண்றது, இருக்கறத எல்லாம் வித்துட்டு கடன கொடுக்கவே சரியா இருந்துச்சு. நடுரோட்டுக்கு வந்தோம். என் மாமனார் அந்த கவலைலே எறந்துட்டாரு.

என் புருஷனும், இனிமே இந்த ஊருல இருக்க வேணாம், வேற எங்கையாவது போயிர்லாம்னு சொன்னாரு. எனக்கு மூனு புள்ளைங்க. கூட்டிட்டு வேற ஊருக்கு போனோம். கைல இருந்த காச வச்சு சின்னதா ஒரு காய்கறி கட போட்டோம். அதுவும் நஷ்டமாச்சு. இதுக்கு மேல இழக்கறதுக்கு ஒன்னுமே இல்ல, வாங்க திரும்பி நம்மூருக்கே போய்டலாம்னு சொன்னேன். இந்த ஊருக்கே வந்துட்டோம்.

அவரு எங்ககிட்ட வேல செஞ்ச ஆளுங்ககிட்ட போய் வேல செஞ்சாரு. எனக்கு பாக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எனக்கு நல்லா சமைக்க வரும். ஒரு சின்ன பலகாரக் கடைய ஆரம்பிச்சேன். பலகாரங்க நல்லா விக்க ஆரம்பிச்சுது. அப்டியே கொஞ்ச கொஞ்சமா மேல வர ஆரம்பிச்சோம். இப்போலாம் நெறய பலகாரம் செய்ய ஆர்டருங்க வருது. என் ரெண்டு பொண்ணுகளையும் கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டேன். என் மவன் டாக்டருக்கு படிக்கிறான். இப்போ நம் கடைள ஒரு பத்து பேரு வேல பாக்குறாங்க, ஒரு பத்து குடும்பம் பொழைக்குது. வேற என்னம்மா வேணும்?” என்று முடித்த அம்சவேணியை ஆச்சரியத்துடன் பார்த்தாள் கயல்விழி.

“ஒரு பெண்ணாக இருந்து இத்தனை பெரிய சாதனை பண்ணியிருக்கீங்க. கஷ்டப்படுகிறவர்களுக்கு என்ன சொல்ல ஆசைப் படுவீங்க?” என்று கேட்டாள்.

“வாழ்க்கை கொடுத்த வசதிய விதி பறிச்சா, துவண்டு போவாதீங்க. மனசுல வைராக்கியம் இருந்தா, வாழ்ந்து கெட்டவங்களும் வாழ்ந்து காட்டலாம்.” என்றாள் அம்சவேணி தன்னம்பிக்கையோடு.

“பலகாரத்த சாப்பிடும்மா. நானே செஞ்சது“ என்றாள்.

சிரித்துக்கொண்டே அதிரசத்தை கடித்தாள் கயல்விழி. உழைப்பின் சுவை இனித்தது நாவில்…

– சிவரஞ்சனி.வி

 

Likes(4)Dislikes(0)
Share
Jun 142015
 

3

 

கோபி ஒரு முன்கோபி. 

கோபிக்கு  கோபம் வரும் போது, அவன் மூளையை விட அவன் நாக்கு வேகமாக வேலை செய்யும்.

அவனது அப்பா அவனை ஒரு நாள் கேட்டார். ”ஏன் கோபி, இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப் படறியே? ஒரு வேளை, ரத்த கொதிப்பு, கித்த கொதிப்பு  இருக்குமோ? டாக்டரை வேணா பாரேன்?”. 

“நானா? நானா? லூசாப்பா நீ? நானா கோபப்படறேன்?”

“ஆமா கோபி! நீயேதான் ! நான் சொல்லலே ! உன் பிரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்களே! ” என்றார் அப்பா தயங்கிய படியே.

“அவங்க கிடக்கறாங்க. தண்டங்க. அது சரி! உன்னை யாரு இதெல்லாம் அவங்க கிட்டே கேக்க சொன்னது? உனக்கு வேறே வேலை இல்லே?”

“கோபிக்காதே கோபி ! உன் பிரண்டு மது தான் நேத்திக்கு சொன்னான். நீ சின்ன விஷயத்துக்கெல்லாம், ஆபீஸ்ல காட்டு கூச்சல் போடறியாமே?”

“சொன்ன பேச்சு கேக்கலன்னா, பின்னே என்ன அவனுங்களை கொஞ்சுவாங்களாமா?”- கோபிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“அப்புறம், உன் அத்தை கூட சொல்றா, நீ அவளோட, அநியாயத்துக்கு சண்டை போடறியாம்! ரொம்ப வருத்தம் அவளுக்கு!” அப்பா.

“நீ சும்மா இருப்பா! அவ என்ன சொன்னான்னு உனக்கு தெரியுமா?”

“இருக்கட்டும்டா! எதுக்கும் நீ டாக்டரை போய் பாத்துட்டு வாயேன்!” 

“நான் எதுக்கு டாக்டரை பார்க்கணும்? எனக்கு ஒண்ணுமில்லை!” 

“இல்லேடா! எதுக்கும் செக் பண்ணிகிட்டா, நல்லது தானேடா? சொன்னாக் கேளு கோபி !.”

“சரி சரி, போய் பாத்து தொலைக்கறேன்! இல்லேன்னா விடவா போறீங்க?”

***
கோபி தனது குடும்ப டாக்டர் அறையில் .

“குட் மார்னிங் டாக்டர்”

“வாங்க கோபி! என்ன விஷயம்?”

“ஒண்ணுமில்லே டாக்டர், அப்பா தான் என்னை உங்க கிட்ட செக் அப் பண்ணிக்க சொன்னார்.”

 “அப்ப சரி,  செக் பண்ணிடலாம். உக்காருங்க ! உங்களுக்கு என்ன ப்ராப்ளம்?”

 கோபி உட்கார்ந்தான். “ ஒன்னும் பெருசாயில்ல டாக்டர்! சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் வரது. அடக்க முடியலே! அதான்..

 “ஓகே. செக் பண்ணிடலாம்”

செக்கிங் முடிந்தது.

“கோபி, உங்களுக்கு ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கு. இன்னும் சில டெஸ்ட் எடுக்கணும். எழுதி கொடுக்கறேன். உப்பு நிறைய சாப்பிடுவீங்களா?”

 “ இல்லே டாக்டர்!”

 “சிகரட், மது இதெல்லாம்?”

 “எப்பவாவது மது உண்டு டாக்டர்! ”

 “சரி, எவ்வளவு நாளா உங்களுக்கு இந்த பிரச்சனை?”

 “தெரியலே டாக்டர். அடிக்கடி கோபம் வரும், அவ்வளவுதான்”

“கோபம் வந்தால் என்ன பண்ணுவீங்க?”

“வாய்க்கு வந்த படி திட்டுவேன்”

“ஆபீஸ்லே கோவம் வருமா? அதனாலே  தலைவலி, படபடப்பு  அது மாதிரி ஏதாவது?”

“ஆமா. ரொம்ப  பிரச்னைகள் வருது டாக்டர். வாயே குழறுது!”

 “ஏன் கோபி ! ஆபீஸ் கோபத்தையெல்லாம் வீட்டில் காட்டுவீங்களா?”

“ஆமா டாக்டர், காட்டுவேன். அது எப்படி உங்களுக்கு தெரியும்?” . கோபி தலையை தாழ்த்திக் கொண்டான். அவன் முகம் சிவக்க ஆரம்பித்து விட்டது. 

 “அது இருக்கட்டும் !  அப்போ வீட்டிலே அடிக்கடி சண்டை வருமா என்ன?”

 “வரும். அப்பா சொன்னாரா?” கோபியின் குரலில் ஒரு கோபம் தெரிந்தது.

“இல்லியே. சும்மா  கேட்டேன் ! சண்டை யாரோட வரும்?”

“யாரோட இருந்தா உங்களுக்கு என்ன டாக்டர், நீங்க எதுக்கு எங்க வீட்டு பிரச்சனைகள் பத்தி அனாவசியமா கேக்கறீங்க?” கோபி டக்கென்று எழுந்து கொண்டான்.

“அதுவும் சரிதான்! எனக்கெதுக்கு உங்க வீட்டு பிரச்னை ? நீங்க உக்காருங்க !  போகட்டும், கோபி, உங்களுக்கு ஹைபர் டென்ஷன் இருக்கு. இது சைகோ சொமாடிக் பிரச்னை மாதிரி இருக்கு. மனம் சம்பந்த பட்ட உடல் வியாதி. இந்த மருந்து எழுதி தரேன். சாப்பிடுங்க. இரவிலே இந்த மன உளைச்சலை குறைக்க, தூங்க மாத்திரை தரேன். ஓகே வா ! தூங்கினாலே பாதி பிரஷர் குறையும். உப்பை குறையுங்க. ஓகே வா? அதை விட  ரொம்ப அவசியம், கோபம் வந்தால், அதை ரொம்ப குறைச்சுக்கோங்க..”

கோபி பதில் பேசாமல் திரும்பி விட்டான். 

   *****


வருடங்கள் ஓடின. கோபிக்கு இப்போது வயது 60.  

கோபிக்கு காசு பணத்தில் குறைவில்லை. நல்ல வசதி. கோபிக்கு இரண்டு மகள்கள். இருவருக்கும் கல்யாணம் ஆகி மூத்தவளுக்கு குழந்தைகளும் உண்டு.

ஆனால் அவன் குணம்? அது மாறவில்லை. அவன்  கோபம் குறையவில்லை. கோபிக்கு இப்போது ரத்தக் கொதிப்பு, தூக்கமின்மை, அல்சர், கூடவே போனசாக கொஞ்சம் இதய நோய். 

 ஒருநாள், ஒரு வாடிக்கையாளரிடம், கோபி வாய்க்கு வந்த படி பேச, அவர் இவனை ஏக வசனத்தில் ஏச, எல்லாம் சேர்ந்து, அவனுக்கு மயக்கம் வந்து, அப்படியே விழுந்து விட்டான். மூக்கில் ரத்தம் கசிந்தது. .பக்கவாதம் அவனைத் தாக்கியது.


‘தன்னைத்தான் காக்கின் சினம் காக்க: காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்’ – வள்ளுவர் கூற்று கிட்டதட்ட இவனை பொருத்தவரை உண்மையாயிற்று.
 
 

அவனது மனைவியும் இரண்டு மகள்களும் சேர்ந்து  அவனை ஒரு பெரிய தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். 

 

பத்து நாள் கழித்து:

இன்னும் கோபிக்கு பேச்சு வரவில்லை. கை கால் அசைக்க முடியவில்லை. கொஞ்சம் அரை மயக்கம். ஆஸ்பத்திரி அறையில் கண்மூடி படுத்திருந்தான். 

அவனது பெண்கள் அவனை பார்க்க ஆஸ்பத்திரியில் வந்திருந்தார்கள். அவனது . படுக்கைக்கு அருகில் நின்று அவனை கூப்பிட்டார்கள்.  

“அப்பா! அப்பா! உடம்பு இப்போ எப்படிப்பா இருக்கு?- பெரிய பெண் ஊர்வசி.

“அப்பா! நாந்தான் மாலா வந்திருக்கேன். தேவலையா இப்போ?”- இரண்டாம் பெண் மாலா

கோபியின் முகத்தில் எந்த மாற்றமுமில்லை. அவனது மூடிய கண்கள் மூடியே இருந்தன. 

“பாவம்பா நீ! உடம்பு இப்படி இளைச்சு போச்சே!” ஊர்வசி

“என்ன பண்ணுவார்டீ! இவருக்கு இப்போ டியுப் வழியாத்தான் எல்லாமே”- மாலா. அவள் இதழ் ஓரம் ஒரு நக்கல் புன்னகை. 

சிறிது நேரம் கழித்து, அப்பாவை விட்டு, சகோதரிகள் இருவரும் வேறு கதை பேச ஆரம்பித்தனர். அசைய முடியவில்லையே தவிர, கோபிக்கு இதெல்லாம் காதில் விழுந்து கொண்டிருந்தது.

மகள்கள் பேச்சு அப்பாவை பற்றி திரும்பியது. இதுவரை அவர்கள் அப்பா எதிரில் பேசியதே இல்லை. அவ்வளவு பயம். கோபி இவர்கள் சிரித்து பேசினாலே சத்தம் போடுவார்.  

இப்போது, அப்பா மயக்கமாக இருக்கும் தைரியத்தில், மகள்கள் இருவரும்  பேச ஆரம்பித்தனர்.

“ஏய், மாலா, பாரு அப்பாவை. முன்னெல்லாம் எப்படி நம்மை பாடாய் படுத்தினார்?. இப்போ பாரு கைகாலெல்லாம் இழுத்துகிட்டு கிழிந்த நாராய் இருக்கிறார் ! ” – ஊர்வசி

“கிழத்துக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்டி” – மாலா

“ஆமாண்டி ! இவரை பார்த்தால் எனக்கு பாவமே வரலை. பத்திக்கினுதான் வருது”- ஊர்வசிக்கு கோபம் இன்னும் கூடியது.

“ஆமாமா, அதுவும் நம்ம அம்மாவை என்ன பாடு படுத்தியிருக்கிறார் இவர். இப்போ நல்லா படட்டும்.”- ஒத்து ஊதினாள் சின்னவள்.

“நம்ம அம்மா அழாத நாளே இல்லே தெரியுமா?”

“அது மட்டும் இல்ல ஊர்வசி ! இந்த அப்பாக்கு கோபத்திலே என்ன பன்றார்ன்னே தெரியாது. சின்ன வயசிலே என்னை கூட கண்ணு மண்ணு தெரியாம அடிப்பார். பாவி மனுஷன், தள்ளி விட்டுடுவார். வசவு தாங்கவே முடியாது.”

“ஆமாமா ! என்னக் கூட சின்ன விஷயத்துக்கெல்லாம், முடிய  பிடிச்சு உலுக்குவார். சே! இவரெல்லாம் ஒரு அப்பான்னு சொல்லிக்கவே வெக்கமாயிருக்கு”- ஊர்வசி

மகள்களின் அடக்கி வைத்திருந்த கோபம் பேச பேச  வெடித்தது.

அப்போது அவர்களது அம்மா உள்ளே வந்தாள். கொஞ்சம் தூரத்திலிருந்தே கோபியை பார்த்தாள். கோபியின் படுக்கை கிட்டேயே  வரவில்லை. 

“ஏம்மா ! அப்பா கண் விழிச்சாரா? பேசினாரா? ஸ்மரணை வந்துதா?”- அம்மா

“இல்லேம்மா. அப்படியே தான் அசையாம இருக்கார்”- மாலா

“இருக்கட்டும் கொஞ்ச நாள் ஆஸ்பத்திரியிலே. என்னை என்ன பாடு படுத்தியிருக்கிறார்? கிடக்கட்டும் இங்கேயே.  நர்ஸ் பாத்துப்பாங்க. நாம வீட்டுக்கு போகலாம் வாங்க!”

கேட்டுக்கொண்டிருந்த கோபிக்கு மிகுந்த வருத்தம். அவனால் தாங்க முடியவில்லை. கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது. 

‘இந்த குடும்பத்திற்கா நேரம் காலம் பாக்காமல் உழைத்தோம்?  இவ்வளவு சொத்து சேர்த்தோம்? எல்லாம் இவங்களுக்கு தானே! என்னை இப்படி உதறிவிட்டு போறாங்களே! நம்ம கோபத்தினாலே, எல்லாரையும் இழந்துட்டோமே!. எனக்கு இப்போ யாருமே இல்லியே.”

காசு பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை.  அன்பு வேண்டும். அரவணைப்பு , ஆதரவு வேண்டும். உறவுகள் வேண்டும் என்பது  இப்போது கோபிக்கு புரிந்தது. இனிமேலாவது நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தான்(ர்).

*****

ஒரு மாதம் கழித்து.

தனது வீட்டில் கோபி. உடல் தேறிவிட்டது. அவரால் இப்போது மெதுவாக நடமாட முடிந்தது.

டாக்டர் சொல்லி விட்டார், “ கோபி, இங்கே பாருங்க , நீங்க சண்டகோழியா இருந்தா, உங்க உயிருக்குதான் ஆபத்து. நீங்க கோபமே பட கூடாது. இன்னொரு முறை, ஸ்ட்ரோக் வந்தால் ரொம்ப கடுமையாயிருக்கும். பாத்துக்கோங்க!” 

கோபி கோபத்தை இப்போது மிகவும் குறைத்து கொண்டார். மனைவியிடம் மிக அன்பாக இருந்தார். மகள்களிடம் மிக கனிவோடு பழகினார். 

கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் அவருடன் நேசமாக ஆரம்பித்தனர். சுற்றம் கூடியது. பெரிய மகள் ஊர்வசியின் குழந்தைகளுடன் அவர் ஒரே விளையாட்டு தான்.

நரகமாக இருந்த வாழ்க்கை சொர்கமானது. நரகமும் சொர்கமும் நமக்குள் தானே !

வாழ்க்கை என்பது என்ன என்பதை கோபி இப்போது தெரிந்து கொண்டார்.  சந்தோஷத்திற்கு முக்கிய தேவை வெற்றியல்ல. வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கிய தேவை சந்தோஷம்.

அவர் இப்போது தான் என்ன என்ன இழந்தோ மென்று நன்கு புரிந்து கொண்டார். ஆனால் கொஞ்சம் தாமதமாக. அன்பும் ,அரவணைப்பும் இதுவரை இழந்தது இழந்தது தானே!  

நேசமும் பாசமும் இல்லாமல் இதுவரை வெட்டியாய் வாழ்ந்தது வாழ்ந்தது  தானே ! காலம் என்ன மீண்டும் வரவா போகிறது?

 ***

ஒரு வருடம் கழித்து.

 ஊர்வசியின் மகன், கோபி தாத்தாவின் மடியில். பேத்தி கொஞ்சம் பெரியவள், தாத்தா பக்கத்தில். அவரது மகள்கள், மனைவி அவருக்கு அருகில். 

“ஏன் தாத்தா, இப்போவெல்லாம் நீ கோபமே படரதில்லியாமே ! அம்மா சொன்னாங்க” – தாத்தாவின் கையை பிடித்துக் கொண்டே பேத்தி கேட்டாள்

கோபி சிரித்துக் கொண்டே சொன்னார். “கோபம்ங்கிறது ஒரு   திராவகம் மாதிரி செல்லம்! . அதை  வைத்திருக்கும் பாத்திரத்தையே அது அரிச்சிடும் . அதனாலே தான் நான் கோபப்படரதை குறைச்சிக்கிட்டேன். . அதுவுமில்லாமல்,  மத்தவங்களை நாம திட்டினால், நம்பளை  அவங்க விரும்ப மாட்டாங்க. அதான் !”  

“கோபம் ஏன் வரது தாத்தா?”

“எதிலும், யாரிடத்திலும் ஒரு முழுமையை எதிர் பார்ப்பவங்களுக்கு, பொதுவாவே கொஞ்சம் கோபம் வரும். இத்தோட பிடிவாத குணம், அப்புறம் அகம்பாவம், அதான் ஈகோ, இருந்தா கேக்கவே வேணாம் !” . 

“ஆனா தாத்தா, எனக்கு கோபம் வருமே!”

“அதனாலே என்ன? கோபப்படு. தப்பே இல்லை! அடக்காதே. ஆனால், நிதானமா கோபப்படு. நியாயமா யோசிச்சு , கோபப்படு. கோபம் ரொம்ப இயற்கையானது செல்லம். நமக்கு ஆபத்து வருமொன்னு நினைக்கரப்போ, ஒன்னு ஓடிப்போயிட தோணும். அது பயந்த சுபாவம்.  இல்லே எதிர்த்து சண்டை போட தோணும். கோபம் எதிர்த்து நிக்கிற சுபாவம்.”

ஊர்வசி கேட்டாள். “ஏம்பா, அப்போ எப்படி இந்த கோபத்தை குறைக்கிரதாம்?”

“இதை போய் அப்பாகிட்டே கேக்கிறியே? இது கொஞ்சம் ஓவரா தெரியலே?” மாலா நக்கலடித்தாள்.

கோபி சொன்னார்.

“இல்லேம்மா! இந்த கேள்விக்கு நான் தான் பதில் சொல்லணும்.ஏன்னா, நாந்தான் கோபத்தாலே அடி பட்டவன். குடும்பம், பாசம் எல்லாம் இது நாள் வரையில் தொலைத்தவன்”

“அவ கிடக்கறா ! நீங்க சொல்லுங்கப்பா! கோபத்தை எப்படி குறைக்கிறது?” தூண்டினாள் ஊர்வசி.

“முதல்லே, கோபம் வரப்போ, நீளமா மூச்சு இழுத்து விடணும். வயித்திலேருந்து மூச்சு இழுக்கணும்.”

‘சரி.”

“மத்தவங்க சொல்றதிலும் நியாயம் இருக்க கூடும்னு நினைக்கணும். அது முக்கியம். நாம புத்திசாலின்னு நினைக்கிறது சரி. ஆனால், நாம மட்டும் தான் புத்திசாலின்னு நினைக்கிறது தப்பில்லையா? ”

சிரித்தாள் ஊர்வசி  “அதுவும் சரிதான் ”

கோபி தொடர்ந்தார். “கொஞ்சம் டைம் எடுத்துகிட்டு , மனசு கொஞ்சம் அதிர்வு  அடங்கினவுடனே, நம்ம கோபத்தை வெளிப் படுத்தலாம். ஆனால், கண்டபடி வார்த்தையை விட கூடாது. யோசனை பண்ணி பேசணும்”

அப்போது மாலா குறுக்கிட்டாள். “எங்க வீட்டுக்காரர்  கூட சொல்வார் அப்பா! கோபம் வரும் போது, எதுவும் பேசாமல் ஒன்னிலிருந்து பத்து வரை எண்ணினால், கோபம் குறைந்திடுமாம்.”

ஊர்வசிக்கு சந்தேகம்  “அப்படியும் கோபம் குறயலைன்னா?”

மாலா சொன்னாள் “ இதை  நானும் அவரை கேட்டேனே! அப்போ ஒன்னிலிருந்து நூறு வரை எண்ணனுமாம்”

எல்லோரும் சிரித்தனர்.

கோபியும்  சிரித்துக் கொண்டே தொடர்ந்தார். “சரியான காரணத்துக்காக, சரியான அளவிலே, சரியான நேரத்திலே,சரியான ஆளிடம் சரியான வழியிலே, கோபத்தை காட்ட கத்துக்கணும். அது கொஞ்சம் கஷ்டம் தான். பழகனும்.. கொஞ்சம் தமாஷா பேசினால், இறுக்கத்தை குறைக்கலாம்.”

ஊர்வசி சொன்னாள் “நீங்க சொல்றது சரிதாம்பா! எனக்கு எப்பவாவது அவரோட பிரச்னை வந்தா, ஒன்னு நான் எழுந்து போயிடுவேன். இல்லே அவர் ஏதாவது ஒரு கடி ஜோக் சொல்லி, என்ன சிரிக்க வச்சுடுவார்.  சிரிப்பு வராட்டியும் நானே சிரிச்சிடுவேன்.”

“அடி சக்கை”- மாலா

கோபி தொடர்ந்தார் “ அதேதாம்மா! அப்புறம், எதையும் எளிதா எடுத்துக்கற மன பக்குவத்தை வளர்த்துக்கணும். கொஞ்சம் விட்டு கொடுக்கிற மனப்பான்மை வேணும். ஈகோ, கூடிய வரைக்கும் குறைச்சிக்கனும், உப்பு மாதிரி. முக்கியமா ‘டேக் இட் ஈசி பாலிசி’ வேணும். இது இருந்தாலே கோபம் தன்னாலே குறைந்து விடும். இப்படி நிறைய இருக்கு”

உடனே குழந்தைகள் அம்மாவை பார்த்து “ ஊர்வசி ! ஊர்வசி! டேக் இட் ஈசி பாலிசி என்று பாடின. 
****                                                               

– S.முரளிதரன்

Likes(4)Dislikes(0)
Share
May 142015
 

3

”இதோ பாருங்களேன், உங்க பையனை! பிறந்து இன்னும் ஒரு வருஷம் கூட  ஆகலை. அதுக்குள்ளே, எப்படி , கொடுக்கற சாமானையெல்லாம் தூக்கி தூக்கி போடறான் பாருங்க. எவ்வளவு ஸ்மார்ட் இல்லே நம்ம கண்ணன்?” – அம்மா பாருவுக்கு பெருமிதம் தாங்கலை.

“பின்னே அவன் யாரு? என் பிள்ளையாச்சே! பின்னாடி விளயாட்டுலே பெரிய ஆளா வருவான் பாரு! ஷாட் புட், டிஸ்கஸ் த்ரோ அப்படின்னு நம்ப கண்ணன் நாட்டையே கலக்கப் போறான், பாரு!”  பையனை சுற்றி கும்மி அடித்தார் வங்கியில் வேலை செய்யும் கண்ணனின் அப்பா, பார்த்திபன். ‘அது பார்த்திபன்  கனவு’.

ஆனால்,  இது எதுவும் நடக்க வில்லை. கனவு கண்ட அப்பாவின் ஆவல், கதை கந்தல் ஆச்சு. 

காலப் போக்கில் கண்ணன், எதையும் தள்ளிபோடுவதில் கில்லியாகிவிட்டான். 

நாளை நாளை என ஒத்திப் போடும் வழக்கம்,  அவனோடு ஒட்டிக்கொண்டது. கண்ணன் சோம்பியிருந்து சுகம் காண ஆரம்பித்து விட்டான்.
***
இப்போது கண்ணனுக்கு வயது பதினேழு. பிளஸ் டூ மாணவன். மாணவர் அனைவரும், தனித்தனியாக கணினி சம்பந்தமாக ஒரு ப்ராஜக்ட் பண்ண வேண்டும்.  

இவனது ப்ராஜக்ட் வணிகம், வங்கி சம்பந்த பட்டது. ஆசிரியரிடம் கேட்டு வாங்கி கொண்டான். ‘மின் அணு நிதி மாற்றம் (EFT) , மின் அணு பரிவர்த்தனை முறை (ECS) இவைகளின் செயல்முறை,’ பற்றி ஒரு ஆய்வு கட்டுரை, வரை படங்களுடன்  எழுதுவது இவன் ப்ராஜக்ட்.


“ மச்சி! நீ ரொம்ப லக்கிடா. நாங்கள் எல்லாம் சி, சி பிளஸ் ப்ராஜெக்ட் பண்றோம். நிறைய கோடு எழுதணும். உனக்கு மட்டும் வெறும் கட்டுரை, ரிப்போர்ட் மட்டும் தான். என்ஜாய்டா” -நண்பர்கள் பொறாமை கண்ணில் வழிய .

கண்ணனின் நண்பன் மாதவனுக்கு மட்டும் சந்தேகம். கண்ணனை பற்றி அவனுக்கு தெரியும். .  “ ஏன் மச்சி ! இதுக்கு நிறைய புஸ்தகம் பிடிக்கணுமே. உனக்கு புரியாதே! என்ன பண்ணப்போற?”

“அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல மாதவா.  எங்க அப்பா வங்கியிலே தானே வேலை பன்றார். அவர்கிட்டே கேட்டுப்பேன். எவன்டா கோடு எழுதி கஷ்டப் படறது? ”- கண்ணன்.

கண்ணன் வீட்டிற்கு வந்தான்.

ப்ராஜக்ட் ஒரு மாசம் கழிச்சி, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்த மறுநாள் கொடுக்க வேண்டும். பாத்துக்கலாம். ரொம்ப சிம்பிள். பின்னாடி, ரெண்டு மூணு புஸ்தகம் படிச்சி ஒப்பேத்திடலாம்.

ஒரு மாதம் இருக்கே. அதனாலே, இப்பத்திக்கு ப்ராஜக்டை ஓரம் கட்டிவிட்டான்.  விடுமுறை உல்லாசம். மஜாதான். டிவி., சினிமா,  அரட்டை,  தெரு மதில் சுவர் ,  நேரம் போனதே தெரியவில்லை.

பள்ளி திறக்க ஐந்து நாட்கள்:

’ஐயையோ! ப்ராஜக்ட் பண்ணனுமே! மறந்தே போயிடுத்தே!’. தன் நண்பன் மாதவனை கை பேசியில் அழைத்தான்.

“மாதவா! உன் ப்ராஜக்டை  முடிச்சிட்டியா?”

“ஓ! நேத்திக்கே கோடெல்லாம் எழுதி ஒரு மாதிரி முடிச்சிட்டேன். இன்னிக்கு நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் சினிமாக்கு போறோம். எல்லாரும் ப்ரீ. நீ இன்னும் முடிக்கல்லே?”

“இன்னும் இல்லேடா! சரி, பரவாயில்லே. நானும் வரேன். நாளைக்கு எழுதிக்கறேன். ரிப்போர்ட் தானே!” கண்ணன் மீண்டும் தன் வேலையை தள்ளி வைத்தான்.

“சரி வா! சத்யம் தியேட்டர்க்கு நேரே வந்துவிடு.  மத்தியம் 3.00 மணி.”

 

“ஓகே. வரேன்.”. கண்ணன் அலைபேசியை அணைத்தான்.  சினிமா தான் முக்கியம் ப்ராஜக்டை நாளைக்கு பாத்துக்கலாம். இன்னும் நாலு நாட்கள் இருக்கே!

பள்ளி திறக்க நான்கு நாட்கள்:

“டே கண்ணா ! உன் சித்தி வீட்டுக்கு போய் இந்த நகையையும் புடவையும் கொடுத்துட்டு வரியா!. அவசரமா வேணும்னு கேட்டாள்!” – அம்மா

“போம்மா! என்னை தொந்திரவு பண்ணாதே! எனக்கு ப்ராஜக்ட் வேலை தலைக்கு மேலே இருக்கு!”

“சரி! அப்படின்னா, நாளைக்கு கொண்டு போய் கொடு”

“ சாரிம்மா! நாளைக்கும் முடியாது! ப்ராஜக்ட் பண்ணலைன்னா பெயில் பண்ணிடுவாங்க”

“சரி! சரி! உன் வேலையை பாரு. நான் வேற வழி பாக்கறேன்! என்னமோ போ, எப்ப கேட்டாலும் பிசி பிசிங்கறே! இப்படி ஸ்கூல்ல போட்டு பிழியராங்களே?”

கண்ணன் ஒரு நோட்டு புத்தகம், பேனா, லேப்டாப் சகிதம் உட்கார்ந்து கொண்டான்.

புத்தகத்தை பிரித்தான். தலை சுற்றியது. என்ன கொடுமைடா இது. EFT , ECS, RTGS, என்னவோ சொல்றாங்களே. ஒரு இழவும் புரியலியே. எப்போ இதை படிச்சி, புரிஞ்சி, இதனாலே ஏற்படும் இடர்பாடு பற்றி எழுதறது? 

‘சரி, ஒண்ணு பண்ணுவோம், நெட்லே பாத்து காப்பி அடிச்சி எழுதிடலாம்.’ கண்ணன் லேப்டாப்பை திறந்தான்.

ஐயோடா! இது இன்னும் பெரிய தலைவலியா இருக்கும் போலிருக்கே. என்னென்னவோ சொல்றானே! நெட்வொர்க் ரிஸ்க், கிரெடிட் ரிஸ்க், லிகுடிட்டி ரிஸ்க் , ஒரு இழவும் புரியலியே. தெரியாத வேலையா எடுத்துகிட்டோமே! பேசாம, சி ப்ளஸ் கோடு ப்ராஜக்ட் எடுத்திருக்கலாம். நல்லா மாட்டிக்கிட்டேன்

‘ஐடியா! அப்பா கிட்டே கேப்போம்’. அவர் பேங்க் மேனேஜர் தானே! நிச்சயமா அவருக்கு தெரிஞ்சிருக்கும். அவர் சொல்றதை வெச்சி எழுதிடுவோம். முடிஞ்சா எழுதியே கொடுக்க சொல்லிடுவோம்.

“அம்மா! அப்பா எங்கேம்மா?”
“அப்பா இன்னிக்கு லேட்டாக வருவார்டா. பேங்க்லே ஆடிட்டிங் இருக்காம்”

“ச்சே! இந்த அப்பாவாலே எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லே. எப்போ பாத்தாலும் ஆடிட் மீட்டிங்னு பேங்க்கை கட்டிக்கிட்டு  அழறார். என்னமோ இவர் தலைலே தான் பேங்க் ஓடறா மாதிரி.   எனக்கு எதுவும் சொல்லி கொடுக்க அவருக்கு நேரமே இல்லே. அப்பா சுத்த வேஸ்ட் பீஸ்மா”

“ஏன்டா! நேத்திக்கெல்லாம் என்ன கழட்டிகிட்டு இருந்தே! வீட்டிலே தானே இருந்தார். அப்போ கேட்டிருக்கலாமில்லே?”

“அட போம்மா!. எதுக்கும் என்னையே குறை சொல்லிக்கிட்டு” கண்ணன் படாரென்று தன் அறைக்கதவை மூடிக் கொண்டான். எரிச்சலாக வந்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. என்ன பண்ணப் போறேனோ தெரியலியே?

பள்ளி திறக்க மூன்று நாட்கள்:

“அப்பா! அப்பா!”
“என்ன கண்ணா ! என்ன விஷயம் ! என்னை தேடினியாமே!”

“வந்துப்பா!. ஒரு ப்ராஜக்ட் பண்ணனும்பா. மின் அணு நிதி மாற்ற இடர்ப்பாடுகள் பற்றி.”

“என்னடா சொல்றே! ஒரு கன்னராவியும் புரியலே. புரியறமாதிரி தமிழ்லே சொல்லு!”

“இல்லேப்பா, ஈ.சி.எஸ்(eletrronic Clearing System), ஈ.எப்.டி (Eletronic Funds Transfer) பத்தி எழுதணும்பா”

“ஐயோ! அது  ரொம்ப பெரிய விஷயமாச்சே! என்னடா  பண்ண போறே?”

“படிச்சேம்பா! ஒண்ணும் புரியலே. நீ என்னன்னு சொல்லிக் கொடு. அதை ரிப்போர்ட் கட்டுரையா எழுதிடறேன்.”

“கண்ணா! நான் பேங்க் மேனேஜர் தான். இல்லைன்னு சொல்லலை. ஆனால், இந்த கம்பூட்டர் கிம்பூட்டர்ன்னாலே எனக்கு அலர்ஜி. ஏதோ, சுமாரா தட்டி தடவி உபயோகிப்பேன். நீ சொல்லற விஷயம் எதுவுமே எனக்கு அவ்வளவா தெரியாதே. கேள்விப்பட்டிருக்கிறேன். ரொம்ப சாரிடா. வேற யாராவதை கேளேன்” – கண்ணனின் அப்பாக்கு நைசா  தப்பிக்க நல்லாவே தெரியும். பேங்க் மேனேஜர்னா சும்மாவா?

“இல்லேப்பா! இந்த புஸ்தகம் படிச்சி எனக்கு சொல்லேன்”
“சரி கொடு”
கண்ணன் புஸ்தகங்களை கொடுத்தான்.

“இன்னாடா! தலைகாணி மாதிரி புஸ்தகம் கொடுக்கறே? சரி. படிச்சுட்டு சொல்றேன். சிஸ்டம் பத்தி தானே.!  ஒரு பத்து நாள் டைம் கொடு. யார்கிட்டயாவது கேட்டு எழுதிக்கொண்டு  வரேன்”


“ஐயய்யோ! நான் மூணு நாளிலே ரிப்போர்ட் ரெடி பண்ணனும்”

“என்ன விளையாடறியா? சான்சே இல்லே. எனக்கு இப்போ ஆபீஸ்லே ஆடிட் நடக்குது. இவ்வளவு நாள் என்ன பண்ணிகிட்டிருந்தே! ஒரு பத்து நாள் முன்னாடியே கொடுத்திருக்கலாமில்லே? என்ன வெட்டி முறிச்சிகிட்டிருந்தே?  ஸ்டுபிட்!” அப்பா கண்ணனை வைதார். கையிலிருந்த கனமான புத்தகங்களை  கீழே வைத்தார்.

“இப்போ என்னப்பா பண்றது?”

“என்ன வேணா பண்ணு. ! எங்காவது சுவத்திலே போய் முட்டிக்கோ. என்னாலே முடியாது!” அப்பா ஜகா வாங்கி விட்டார்.

கண்ணனுக்கு செம எரிச்சல். இந்த அப்பாவே சுத்த டம்மி. .

பள்ளி திறக்க இரண்டு நாள் பாக்கி :

 

கண்ணனுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. நோட் புக், பேனா திறந்தது திறந்த படியே இருந்தது. ஒன்றுமே ஓடவில்லை. இரண்டு வரி கூட எழுதவில்லை. சனியன்! என்ன கொடுமை இது ? ஏதாவது புரிஞ்சாதானே!

“டே கண்ணா! சாப்பிட்டுவிட்டு வேலை பாரேன். நான் எவ்வளவு நேரம் உனக்காக காத்துக் கிட்டிருக்கிறது?” – அம்மா சமையலறையிருந்து கூப்பிட்டாள்.

 

“போம்மா! எனக்கு பசியில்லே! ஏகப்பட்ட வேலையிருக்கு. நீ வேறே! ஒன்னும் வேணாம் கம்முனு கிட” – எரிச்சலை அம்மாவிடம் காட்டினான்.

கண்ணனது எல்லா நண்பர்களும் அவர்களது ப்ராஜக்டை முடித்து விட்டார்கள். இவன் மட்டும் ஆரம்பிக்கவே இல்லை. படித்தால் தூக்கம் வருகிறது. அப்பா வேறு, ஒரு உதவியும் செய்யவில்லை. சலிப்பு, ஆத்திரம், சுய பச்சாத்தாபம். என்ன ஆகுமோ தெரியலியே! பயம் நடுக்கியது.

 

“ச்சே! இது என்ன ஒரு முட்டாள்தனமான படிப்பு. எதுக்கு இந்த ப்ராஜக்ட்.? பைசாக்கு பிரயோசனமில்ல. ஏண்டா இப்படி நம்மளை சாவடிக்கிறாங்க ?” – அலுத்துக்கொண்டான் நண்பர்களிடம். 


பள்ளி திறக்க ஒரு நாள்:

ஏதோ அரைகுறையாக ஒரு கட்டுரையை கிறுக்கினான் கண்ணன். அவனாலேயே அதை புரிந்து கொள்ள முடியவில்லை. முடிக்க முடியவில்லை. ப்ராஜக்ட் ரிசல்ட் என்ன ஆகும்? பேசாமல் பள்ளிக்கு ஜுரமென்று லீவ் போட்டுவிடலாமா?

முடியாதே! ப்ராஜக்ட் கொடுத்தே ஆகவேண்டுமே. இல்லாவிட்டால், கம்ப்யூட்டர் பாடத்தில் பெயில். அப்பா கொன்னேபுடுவார்.

கண்ணனுக்கு ஒரே டென்ஷன். நினைக்க நினைக்க அவனுக்கு ஜுரமே வந்து விட்டது. தலைவலி மண்டையை பிளந்தது. மூளை சுத்தமாக வேலை செய்யவில்லை. அவன் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறான்?

தண்ணியை குடித்தான். புஸ்தகங்களை அடுக்கினான். கொஞ்ச நேரம் பாட்டு கேட்டான். கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர் பேஸ் புக்கில் அரட்டை. எதிலும் மனம் லயிக்க வில்லை. ஆனால் கட்டுரை மட்டும் மேலே எழும்பவில்லை. 


என்ன பண்ணுவது? சட்டியில் இல்லை, அதனால் அகப்பையில் எதுவும் வரவில்லை. கோபம் மட்டும் வந்தது.

பள்ளி திறந்தது

கண்ணன் விருப்பமே இல்லாமல் பள்ளி சென்றான்.. ஏதோ உளறிக் கொட்டி,  ப்ராஜெக்ட் கட்டுரையை ஒப்பேத்திவிட்டான். “ச்சே என்ன வாழ்க்கைடா இது?” செம கடுப்பு அவனுக்கு.  பயந்து கொண்டே, பள்ளியில் ரிப்போர்ட்டை கொடுத்தும் விட்டான்.

ஒரு வாரம் கழித்து:

கணிணி வகுப்பில், ப்ராஜெக்ட் ரிப்போர்ட் முடிவு அறிவிக்கப் பட்டது. எல்லோரும் பாஸ். சிலர் நல்ல மதிப்பெண். மக்கு என்று பேர் வாங்கியிருந்த அவன் நண்பன் மாதவனும் கூட 72 % மார்க் வாங்கியிருந்தான்.

ஆனால், கண்ணன் மட்டும் பெயில்.  அது மட்டுமல்ல, மிக குறைந்த மதிப்பெண்.

ஆசிரியர் வகுப்பில் இதை சொல்லும்போது கண்ணன் குனிந்த தலை நிமிரவில்லை. நண்பருக்கிடையே என்ன ஒரு அவமானம்.

“கண்ணா! நீ, நீ மட்டும்தான், இந்த முழு கிளாஸ்லே பெயில். தண்டமா ஒரு ரிப்போர்ட். இதுக்கு பேர் ப்ராஜெக்டா? என்ன எழுதினேன்னு படிச்சி பாத்தியா?  கண்ணராவி ! ஒரே அபத்தக்களஞ்சியம்.”

“சார்! என் ப்ராஜக்ட் ரொம்ப கடினம் சார்”- தயங்கி தயங்கி சொன்னான் கண்ணன்.

“உன்னை யாரு இந்த ப்ராஜெக்டை தேர்ந்து எடுக்க சொன்னாங்க! நீயே தானே கேட்டு எடுத்துகிட்டே?”

“சாரி சார், சி பிளஸ் ப்ரோக்ராம் எழுதாமே, வித்தியாசமா ஒரு கட்டுரை எழுதலாமேன்னு நினைச்சேன் சார் . எங்கப்பா சொல்லிகொடுப்பார்னு நம்பினேன் சார்!”- சொல்லும்போது கண்ணன் கண் விழியோரம் ஈரம்.

“அப்புறம் என்னாச்சு?”
“வணிக சம்பந்தமான இந்த கணிணி சப்ஜெக்ட் புரியலே சார்.”

“இதை பத்தி நான் பாடம் எடுக்கையில் உன் கவனம் எங்கே போச்சு?”
”கவனிச்சுகிட்டு தான் சார் இருந்தேன்”
“தினமும் வீட்டுக்கு போய் படிப்பே தானே! அப்போ நல்லாவே புரிஞ்சிருக்குமே”
“சாரி சார்! ”

“இப்போவாவது புரிஞ்சுக்கோ! நீ படிப்பை தள்ளி போட்டா, வெற்றி உன்ன விட்டு தள்ளி போகும்”


“புரியுது சார்”. நாக்கு தழு தழுத்தது கண்ணனுக்கு. அழுது விடுவான் போல இருந்தது. எவ்வளவு அவமானம் ?

ஆசிரியர் யோசித்தார். “சரி கண்ணன் . நீ ஒரு புத்திசாலி பையன். அதனாலே உனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கறேன். இன்னும் ஒரு நாலு நாளில் வேறு ஒரு ப்ராஜக்ட் ரிப்போர்ட் பண்ணிக் காட்டு. நல்லாயிருந்தால் நீ பாஸ். ஓகே வா.? ”

“ரொம்ப தேங்க்ஸ் சார்” – கண்ணனுக்கு மூச்சு வந்தது.

“சரி! என்ன சப்ஜெக்ட் எடுத்துக்கப்போறே? ”

“நீங்களே சொல்லுங்க சார்”

 “குட். ம்.. இங்கே இருக்கிற ப்ராஜக்ட்லே இருந்து  ஐந்து பேருடைய சி பிளஸ் ப்ரோக்ராம்களின் குறைகள் என்னன்ன என்பதை பற்றி ஒரு ரிப்போர்ட் எழுது. அதுதான் உனக்கு தண்டனை.”
“நிச்சயம் பண்றேன் சார்”

***

கண்ணனுக்கு, தான் மட்டும் பெயில் ஆனது ரொம்ப பெரிய ஷாக். இவனோட சுற்றிய அத்தனை நண்பர்கள் எல்லோரும் பாஸ். அது தான் அவனுக்கு இன்னும் ரொம்ப அவமானமா இருந்தது. பாவி பசங்க, எல்லாரும் பாஸ் பண்ணிட்டாங்களே ! அவனால் தாங்கவே முடியலே.

வீட்டில் அவன் யாரோடும் சரியாக பேசவேயில்லை. இறுக்கமாகவே இருந்தான்..

கண்ணனின் தாத்தா இதை கவனிச்சிகிட்டேயிருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து, அவனை தனியா அழைச்சிகிட்டு போய்  “ஏன் கண்ணா! ரொம்ப நெர்வசா இருக்கே! ரொம்ப இறுக்கமா தெரியரே! என்ன விஷயம்! என் கிட்டே சொல்லு!” ன்னு கேட்டார்.

கண்ணனும் தனது பிரச்னை பத்தி சொன்னான்.

அதுக்கு அவர் சொன்னார்: “கண்ணா! தள்ளிப் போடறது ஒண்ணும் பெரிய தப்பில்லே”


கண்ணனுக்கு புரியவேயில்லை “என்ன தாத்தா சொல்றீங்க?”

தாத்தா சொன்னார் “ நம்மாலே முடியுமோ முடியாதோன்னு ஏற்படற பயம், அதனாலே அந்த வேலையை கொஞ்ச நேரம் தள்ளி வெக்கிறோம். தள்ளிப் போடறதினாலே, நமக்கு கொஞ்சம் மன உளைச்சல், தற்காலிகமா குறைகிறது.”

“ஆமாமா! அதேதான்!”

“அப்புறம், சில சமயங்களில், நம்ப தள்ளி போடற அந்த வேலையை வேற யாராவது செஞ்சு கொடுத்துடுவாங்க. அது லாபம்தானே! என்ன நான் சொல்றது சரியா?”

“நீங்க சொல்றது சரிதான் தாத்தா! அப்பா ஹெல்ப் பன்னுவார்னு பாத்தேன். ஆனால் அவர் காலை வாரி விட்டுட்டார்.”

“இன்னொன்னு, இந்த ஒத்தி போடறதாலே, நிறைய சமயங்களிலே சாக்கு போக்கு சொல்லி நாம தப்பிச்சுக்க முடியும். இவ்வளவு வசதி இருக்கரதினால தான் நாம, நம்மால் ஈசியா முடியாத அல்லது பிடிக்காத வேலையை தள்ளிப் போடறோம்.”

கண்ணனுக்கு புரிந்தது. “ஆனா, தாத்தா, நான் இன்னிக்கு சுத்தமா மாட்டிக்கிட்டேன். பெயில் ஆயிட்டேன்.”

“அதை தான் நான் சொல்லவரேன். எல்லாத்தையும் எப்போவும் தள்ளிப் போடக்கூடாது. பின்னாலே, வேறே வேறே பிரச்னைகள் வரும். நம்ம வாழ்க்கையே கேள்விக்குறியாயிடும். அதனாலே, தேவையற்றதை மட்டும் தான் தள்ளி போட வேண்டும்.

ஒன்னு தெரிஞ்சுக்கோ, நிச்சயமா, வெற்றிக்கு தேவையானதை ஒத்தி போடக் கூடாது. ஒன்றே செய், ஒன்றும் நன்றே செய், அதுவும் இன்றே செய் படிச்சதில்லே ?”  – தாத்தா கேட்டார்


“படிச்சிருக்கேனே!”

“எந்த காரியத்தையும் எப்போ முடிக்கிறதுன்னு நினைக்ககூடாது. ஏன்னா, அந்த நினைவே நமக்கு டென்ஷன் உண்டு பண்ணும். எப்போ ஆரம்பிக்கலாமுன்னு தான் நினைக்கணும். ஒரு வேலை எடுத்துகிட்டா, ஐயோ தலையெழுத்தே! இந்த வேலையை பண்ணியே ஆகணும்னு நினைக்கக் கூடாது. அப்போ, அதுவே நமக்கு ஒரு வெறுப்பு, டென்ஷன் உண்டுபண்ணும்.
“சரி தாத்தா”

“எதையும், இவ்வளவு பெரிய வேலையான்னு நினைச்சா, நிச்சயமா பயமாத்தானிருக்கும். நமக்கு நாமே தன்னம்பிக்கை வளர்த்துக்கணும். சின்ன சின்ன அடியா, எளிதில் முடிக்க கூடிய ஸ்டெப்சா, எடுத்து வெச்சா, பாத்துகிட்டே இருக்கச்சே,எவ்வளவு பெரிய வேலையும் தன்னாலே முடிஞ்சுடும்”

கண்ணனின்  தாத்தா சொன்னது அவனை முழுமையாக மாற்றியது. இந்த ப்ராஜக்ட்லே தான் வெற்றி பெறணும் என குறிக்கோளோட உழைத்தான்.

அவன் கஷ்டப்பட்டு படிக்கறதை பாத்திட்டு, அவனது  மாமா இன்போசிஸ்லே வேலை, அவரும் நிறைய ஐடியா கொடுத்தார்.

நான்கு நாள் கழித்து

இப்போது கண்ணன் தனது வேலையை தள்ளி போடவில்லை. மிக அழகாக ப்ராஜக்டை முடித்தான்.

இந்த தடவை ஆசிரியர் கண்ணனின் ரிப்போர்ட் பார்த்து மூக்கில் விரலை வைத்தார். கண்ணனை கிளாஸ்ல எல்லார் முன்பும் பாராட்டினார்.

“வெரி குட் கண்ணா. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. போனதடவை நீ பெயில். கேவலமா மார்க். வாங்கியிருந்தே !  ஆனால்,இப்போ, இப்போ ரொம்ப நல்ல மார்க். குட். இன்னும் கூட உன்னால நல்லா பண்ண முடியும்!.”   

“தேங்க்ஸ் சார்”

 

கண்ணனை தட்டிக் கொடுத்து அனுப்பினார் ஆசிரியர். சிரித்த முகத்துடன், தலை நிமிர்ந்து நண்பர்களுக்கு கை காட்டியபடியே சென்று அமர்ந்தான் கண்ணன். நண்பரிடையே தனது மதிப்பு உயர்ந்தது பெருமையாக இருந்தது.


மனதிற்குள் தாத்தாவிற்கு நன்றி சொன்னான். ”தப்பிச்சேண்டா சாமி. இனி ஒரு போதும் ஒத்தி போடமாட்டேன்”.


****முற்றும்.

–    முரளிதரன் செளரிராஜன்

Likes(4)Dislikes(0)
Share
Apr 142015
 

3

முத்து தன் நண்பன் குமாரிடம் புலம்பினான். என்னன்னு தெரியலே குமார் ! . என் கடைகளிலே பிஸினெஸ் மந்தமா இருக்கு? இத்தனைக்கும்,  உயிரை விட்டு உழைக்கிறேன். ராத்திரி பதினொரு மணி வரைக்கும் தினமும் பாடு படறேன். ஒண்ணும் சரியா வரல்லே. ஒண்ணுமே புரியலடா மாப்பிளே! வெறுப்பாயிருக்கு! ” 

முத்து ஒரு முன்னேற விரும்பும் முப்பத்தைந்து வயது வியாபாரி. சென்னையில் ஐந்து சிறிய எழுது பொருள் மற்றும் பான்சி சாமான்கள் விற்பனை கடைகளின் சொந்தக்காரன்.

பெரம்பூர்மூலக்கடைஓட்டேரிஐயனாவரம்மற்றும் கொளத்தூரில் கடைகள் வைத்திருந்தான்.

குமார் ஒரு பெரிய கம்பனியில் மார்க்கெட்டிங் மேனேஜர்.  எம்பிஏ மார்க்கெட்டிங்  படித்தவன். அவனால் முத்து சொல்வதை நம்பவே முடியவில்லை. முத்து கடுமையான உழைப்பாளி. பி.காம் படித்தவன். இந்த தொழிலின் நெளிவு சுளிவு நன்றாக தெரிந்தவன். அப்படியிருக்க இது எப்படி சாத்தியம்?

என்ன சொல்றே முத்துஅஞ்சு கடை வெச்சிருக்கே. அது எப்படி லாபம் பாக்கம இருக்க முடியும்ஆச்சரியமா இருக்கே! அப்போ எங்கேயோ கோளாறு இருக்கு!

அதுதான் குமார் எனக்கும் புரியலே ! வியாபாரம் விருத்தியே ஆக மாட்டேங்குது. கடைசிலே எல்லாம் போக உழைப்பு மட்டும்தான் மிஞ்சுது. காசு பாக்க முடியலே!

ஏன் முத்து! சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியேஉன் கடை வேலைக்காரங்க ஒருவேளை உன்னை ஏமாத்தராங்களோ?” – குமாரின் சந்தேகம்.

சே! சே! கடைகளுக்கு வேண்டிய  சரக்கு எல்லாம் நான் தானே போடறேன். தினமும்நானே என் ஜிப்சி வான்லே சரக்கு கொள்முதல் செஞ்சிஎல்லா கடைக்கும் நானே பர்சனல் டெலிவரி கொடுக்கறேன். கணக்கெல்லாம் சரியா வருதே?” – முத்து

அப்போ கணக்கு வழக்கிலே ஏதாவது குழப்பம்ஏதாவது திருட்டு?”

சான்சே இல்லே குமார். நானே எல்லா கணக்கு வழக்கையும் பார்க்கிறேன். தினசரி அக்கவுன்ட் எல்லாம் நானே தான்.

அப்போ ஏன் உன் வியாபாரம் மந்தமா இருக்குஎங்கேயோ உதைக்குதே?”

அதான் எனக்கும் தெரியலே குமார். விற்பனை சரியா போக மாட்டேங்குது! எல்லா கடைகள்ளேயும் வாங்கி போடற சாமான் எல்லாம் அப்படி அப்படியே முடங்கி கிடக்கு! . 

எனக்கு புரிஞ்சு போச்சு முத்து. நீ வாங்கிப் போடற சாமான்கள் தரம் மட்டம். கஸ்டமர்  விரும்பலே. முதல்லே அதை மாத்து. எல்லாம் சரியாயிடும்.

நீ வேறே குமார்! என்னையே குறை சொல்லறியே !  எல்லாம் சூப்பர் குவாலிட்டி. ஒரு கஸ்டமர் கூட இதுவரை குறை சொன்னதில்லையே

அப்போகுறை உன் கடை சிப்பந்திகள் கையிலே தான். அவங்களுக்கு சாமானை விக்க தெரியலே! வியாபார தந்திரம் போதாது. என்ன முத்து, உனக்கு இது கூட தெரியலியா?”

ஒரு வேளை அதான் காரணமோயோசித்தான் முத்து. “என்ன பண்ணலாம்நீயே ஒரு ஐடியா கொடேன் குமார்!

குமார் யோசித்தான். ம்.. ஒன்னு செய்யலாம். விடுமுறை நாளிலேஉன் கடை சிப்பந்தி எல்லாரையும்உன்னோட பெரம்பூர் கடைக்கு வரசொல்லு. நானே அங்கு வந்து வியாபார நுணுக்கம் பற்றி  இரண்டு மூணு வகுப்பு எடுக்கறேன். அவங்க விக்கும் திறமையை வளர்க்க நான் எனக்கு தெரிந்ததை சொல்லித்தரேன். என்ன ஆகுதுன்னு பார்ப்போம். சரியா ?

முத்துவிற்கு இந்த ஐடியா பிடித்திருந்தது. அப்படியே பண்ணலாம் குமார். ரொம்ப தேங்க்ஸ் உனக்கு! உன்னைதான் மலை போல நம்பியிருக்கேன். எப்படியாவது என் கடைகளின் வியாபாரத்தை பெருக்க வழி சொல்லு.!

என்ன மாப்பிளே இது!உனக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறேன்நீ கவலைப் படாம போ– குமார்

****
குமார் , தனக்கு தெரிந்த வியாபார நுணுக்கங்கள் விற்பனை திறமை பற்றி  முத்துவின் ஐந்து கடை சிப்பந்திகளுக்கும் மூன்று ஞாயிறு தினங்களில் வகுப்பு எடுத்தான். அவர்களுடன், வியாபார தந்திரங்கள், பேச்சு திறமை பற்றி தன் புரிதலை  பகிர்ந்து கொண்டான்.  

****

இரண்டு மாதம் கழித்து

முத்துவும் குமாரும் மீண்டும் சந்தித்து கொண்டனர். 

குமார் கேட்டான் என்ன முத்து! இப்போ வியாபாரம் எப்படி போகுது?”

சூள் கொட்டினான் முத்து. ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி முன்னேற்றம் இல்லே குமார். அப்படியேதான்,  மந்தமாகத்தான் இருக்கு

அப்படியா! முத்துவகுப்பு எடுக்கச்சேயே நான் பார்த்தேன். அப்பவே சொல்லனும்னு நினைச்சேன். உன் சிப்பந்திகளுக்கு இந்த பயிற்சிகிளாசெஸ் இதிலே எதுவும் நாட்டமில்லே. அதுவுமில்லாம அவங்களுக்கு  தொழில் நுணுக்கமெல்லாம் நல்லாவே தெரிந்திருக்கு. அதுலே ஒன்னும் குறை தெரியலே!

அப்போ திறமையின்மை காரணம் இல்லியாபின்னே ஏன்விற்பனை ரொம்ப கம்மியா இருக்கு?” 

அதைத்தான் முத்து, நானும் யோசனை பண்ணிகிட்டிருக்கேன். சரி, நான் ஒரு ஐடியா சொல்றேன்,  கேக்கிறியா?”

என்ன பண்ணனும் சொல்லு

உன் கடை கணக்கு வழக்கெல்லாம் நீயே எழுதறேன்னு தானே சொன்னே

ஆமா! அதுக்கென்ன இப்போ?”

அதை நீ செய்யாதே. ஒரு படிச்ச பையனை கடைகள் கணக்கு வழக்கு எழுத வேலைக்கு வை.. குமார் சொன்னான். 

வெச்சா?””

சொல்றதை செய். கேள்வி கேட்காதே ! அப்புறம்கடைகளுக்கு தேவையான கூட்ஸ்ஸ்டேஷனரி எல்லாம் நீதானே வண்டியிலே சப்பளை பன்றேன்னு சொன்னே?  உடனேஉன் டெலிவரி வண்டிக்கு  ஒரு டிரைவர் போடு. டெலிவரிசப்ளை எல்லாம் அவன் கிட்டே ஒப்படைச்சுடு. நீ டெலிவரிக்கு போகாதே!

என்ன குமார்வரவை அதிகப் படுத்த வழி கேட்டால், செலவை அதிகம் பண்ண ஐடியா கொடுக்கறே இதுதான் எம்பியே வா ?”– சந்தேகத்தோடு முத்து கேட்டான். குமார் கிட்டே யோசனை கேட்டதே தப்போ?

குமார் கறாராக சொன்னான். முத்துஒரு மூணு மாசத்துக்கு நான் சொல்றபடி கேளு. அப்புறம் பாக்கலாம்

சரிநீ சொல்லிட்டேஅப்படியே பண்றேன்” அரை மனதோடு சம்மதித்தான். எவ்வளவோ பாத்துட்டோம், இதையும் தான் முயற்சி பண்ணிடுவோமே.!

கணக்கு எழுத ஒரு படித்த பையனை அமர்த்தினான். ஐந்து கடைகளுக்கும் சாமான் டெலிவரி கொடுக்க ஒரு டிரைவரை வேலைக்கு சேர்த்தான்.

****

இன்னும் நான்கு மாதம் கழித்து

முத்துவும் குமாரும் மீண்டும் சந்தித்து கொண்டனர்.

 

என்ன மாப்ளே,  இப்போ வியாபாரம் எப்படி போய்க்கிட்டிருக்கு?”

குமார்! என்ன மாயம் பண்ணினே! இப்போ என் வியாபாரம் நாலு மடங்காயிடுத்து. எல்லா கடைகளும் அமக்களமா நடக்குது. இரண்டு கடைகளை பெருசாக்க முடிவு பண்ணியிருக்கேன்.”

சூப்பர் முத்து.  பார்த்துக் கொண்டே இரு, ஒரு நாள்நீ சூப்பர் மார்க்கெட் கூட வெப்பே. அதுதானே உன் ஆசைஎங்கே எனக்கு ட்ரீட் ?”

கட்டாயம். எங்கே வேணா போகலாம் மச்சான்.   அது சரிபிரச்சினை என்கிட்டே தான் இருக்குன்னு எப்படி கண்டு பிடிச்சே?” – முத்துவுக்கு தெரிந்து கொள்ள ஆவல். 

““முத்து, ரொம்ப சிம்பிள். நான் பார்த்ததிலேஉன் திறமை உழைப்பெல்லாம் விழலுக்கிறைத்த நீராவீணாகிட்டிருந்தது போல எனக்கு தோணித்து. கிட்டதட்டநீயும் ஒரு டிரைவர், குமாஸ்தா மாதிரி  தான் வேலை பண்ணியே தவிர முதலாளி மாதிரி நடக்கல.  கடைகளை சரியா மேற்பார்வை பண்ணலே.

ஆமா! நீ சொல்றது சரிதான் குமார். முன்னெல்லாம், காலிலே வெந்நீர் கொட்டிகிட்டா மாதிரி ஓடுவேன். யாரோடவும் பேசக்கூட நேரம் இருக்காது. கணக்கு பாக்கறதும், டெலிவரி பண்றதுமே நேரம் சரியா இருக்கும். இப்போ எனக்கு நிறைய நேரம் இருக்கு”  

குமார் சிரித்தான். “ இத இத தான் நான் எதிர்பார்த்தேன்”

முத்து தொடர்ந்தான். “அதனாலே ,  இப்போ ஒவ்வொரு கடையிலும்அதிக நேரம் செலவிடறேன். சிப்பந்திகள் கூட பேசிப் பழகறேன்.  அவங்களுக்கு சொல்லித்தரேன்.  அவங்க பிரச்சனைகளை கேக்கறேன்நான் அடிக்கடி வந்து கடைகளைபார்க்கரதினாலே, அவங்களும் முனைப்பா வேலை பார்க்கிறாங்க. நான் கண் காணிக்கிறேன்னு தெரிஞ்சு ஒழுங்கா நடந்துகிறாங்க. இப்பதான் அவங்களுக்கு  வேலைலே ஒரு பிடிப்பும் வந்திருக்கு 


கரெக்ட் முத்து! இப்போ தெரிஞ்சுகிட்டியா !  இதுதான் மேனேஜ்மென்ட் பை வாக்கிங் அரவுண்ட்(Management by Walking Around“). சுற்றி வரும் மேலாண்மை” . 

அட ! இதுக்கு பேரெல்லாம் வேறே வெச்சிருக்காங்களா என்ன?” – முத்து அதிசயித்தான். 

பின்னே! அதாவதுஉன் கீழே வேலை செய்யறவங்களை நீ ஊக்குவிக்கணும்.  பார்த்துக்கணும். மேற்பார்வை பண்ணனும்.  உதாராணமா இருக்கணும்.   முதலாளியா,  அதான் உன் வேலை,  அது மட்டும் தான் உன் வேலை தெரிஞ்சுக்கோ! நீ உன் வேலையை செய்யணும். அவங்கவங்க வேலையை அவங்கவங்க பாக்கனும்.  மத்தவங்க வேலையெல்லாம் நீ செஞ்சா,  உன் வேலையை யாரு செய்வாங்க சொல்லு? 

நீ சொல்றது சரிதான் குமார். உண்மையில்என் முன்னேற்றத்துக்கு நீ தான் காரணம்.  மில்லியன் தேங்க்ஸ் உனக்கு

அதெல்லாம் எதுக்கு?  எதுக்கும்உன் கணக்கு வழக்குடிரைவர் பேரிலே ஒரு கண்ணும் வெச்சுக்கோ. அதை விட்டுடப் போறே! “

கட்டாயம்எனக்கு உதவியாஒரு மேற்பார்வையாளர் கூட வெச்சிக்கிறேன். போதுமா?இப்போ என்னாலே முடியுமே !  ” சிரித்தான் முத்து.

*****முற்றும்

 

திருக்குறள் >> பொருட்பால் >> அரசியல்>>தெரிந்துசெயல்வகை 

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

ஒருவன் செய்யத்தக்க அல்லாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

****

–    முரளிதரன் செளரிராஜன்

 

 

Likes(18)Dislikes(0)
Share
Mar 142015
 

3

 

(சென்ற மாத தொடர்ச்சி….)
ஹோட்டல்:

வாசலில் விஷ்வா காத்துக் கொண்டிருந்தான்.

“வா சுந்தர், என்ன இது கோலம்! இப்படி சோகமா! நாலு நாள் தாடி! என்ன விஷயம்?”
“அதை ஏன் கேக்கிறே விஷ்வா? நெறைய பிரச்னைகள்.”
“சரி வா! உள்ளே போய் பேசலாம்!”. விஷ்வாவின் கரிசனம் என்னை உலுக்கியது. என்னுடைய பிரச்னைகள் எல்லாவற்றையும் அவனிடம் கொட்டிவிட்டேன்.

“சரி! சும்மா கவலைப் பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. சுந்தர், இங்கே பாரு, உன் பிரச்சனை என்ன தெரியுமா? அனாவசியமா, எதுக்கெடுத்தாலும் பயப்படறது? நாளைக்கு என்ன ஆகுமோன்னு நெனைச்சு கவலைப் படறது”

“வேறே வழியே தெரியலே விஷ்வா! என்ன பண்றதுன்னே தெரியலே?”

“எனக்கு ஆச்சரியமாக இருக்கு! நீ எல்லாம் எப்படித்தான் தொழிலதிபரா சமாளிக்கறியோ?”

“வெறுப்பேத்தாதே விஷ்வா! என்னதான் பண்ணனுங்கிரே?”

“அப்படிக் கேள் சொல்றேன்! முதல்லே உன் பிரச்சனைகளை ஒரு லிஸ்ட் போடு. அதிலே தீர்க்க கூடிய பிரச்சனை, தீர்க்க முடியாத பிரச்சனை என்னங்கிறதை முடிவு பண்ணிக்கோ”
“எதுக்கு?”

“தீர்க்க கூடிய பிரச்சனைகளை தீர்த்துடலாம். அதனாலே அதைப் பத்தி கவலைபடறதை நிறுத்து. எப்படி தீர்க்கலாம்னு மட்டும் யோசனை பண்ணு”

“அப்போ தீர்க்க முடியாத பிரச்னைகளை என்ன பண்ணறது?”

“அவைகளை நீ ஒண்ணும் பண்ண முடியாது. அதனாலே கவலை பட்டு எந்த பிரயோசனமும் இல்லை”

எனக்கு சிரிப்பு வந்தது. “மொத்தத்திலே, எதுக்கும் கவலை படாதே சகோதராங்கறே”

“அதே!அதே! இதே நான் சொல்லலே, புத்தர் தான் சொன்னதே”- விஷ்வா சிரித்துக் கொண்டே.

“நீ சொல்றது சரிதான் விஷ்வா என் பிரச்சனை எல்லாம் தீர்க்க கூடியது தான். ஆனால், எப்படின்னு தான் தெரியலே?”

“அப்பாடா! ஆளை விடு. உன் கவலையை விடு. அடுத்த ஸ்டெப்க்கு வா”

“அது என்ன?” எனக்கு ஏதோ கொஞ்சமாக நம்பிக்கை வந்து விட்டது. என்னதான் சொல்றான்னு கேப்போமே!

“லிஸ்ட் போட்டியே !உன்னோட பிரச்னைகளிலே ரொம்ப முக்கியமானது, ரொம்ப அவசரமானது என்ன சொல்லு.”- விஷ்வா

நான் யோசித்தேன்.

“என்னோட முதல் பிரச்சனை ஐ.டி இன்ஸ்பெக்டர்”
“ரொம்ப சரி, இது அவசரம், அவசியம் கூட. அடுத்தது?”
“ஷூ பிரேக் உதிரி பாகம். டெலிவரி கொடுக்கணும்! ” நான் யோசனையுடன்.
“இதுவும் கூட அவசரம், அவசியம். மூணாவது?”
“மனைவி கூட ஊருக்கு போகணும்”

“சுந்தர், இது அவசரம். ஆனால், உன்னோட இந்த நிலைமைலே அவசியம் இல்லே. ஆமா! கேக்கனும்னு நினைச்சேன்! இது விஷயமா உன் வீட்டிலே சண்டை போட்டியா? திட்டினியா?”

“ஆமா! கடுப்பாகுதில்லே!வர முடியலேன்னா, அவங்க சண்டை போட்டா எப்படி? நம்ப கஷ்டத்தை புரிஞ்சிக்காம பேசறாங்க, விஷ்வா” நான் என் பக்க நியாத்தை சொன்னேன்.

“ முதல்லே அவங்களை நீ புரிஞ்சிகிட்டியா?அதை சொல்லு !அவங்களுக்கும் பிரச்னை இருக்குமில்லே”

“ஆமா! எல்லாத்துக்கும் என்னையே குறை சொல்லு!”

“அவங்க பாவம் சுந்தர். உன்னை விட்டா அவங்களுக்கு வேறே யாரு இருக்கா? சரி, போய் முதல்லே மனைவிய சமாதானபடுத்து. அவங்களை ஊருக்கு அனுப்பி வை. உன் பிரச்னைகள் தீர்ந்துட்டா, நீயும் வரேன்னு சொல்லிவை. நிச்சயம் நீயும் ஊருக்கு போவே பாரு. அண்ணியை நான் ரொம்ப கேட்டேன்னு சொல்லு. சரி, வேறே ஏதாவது இருக்கா?”

“அடிக்கடி வயித்து வலி வருது. தூக்கம் இல்லை. லேசா படபடப்பு.”

“சுந்தர் இது ரொம்ப அவசியம். அவசரமும் கூட. உடனே டாக்டரை பார். சுவரிருந்தால் தானே சித்திரம்? அப்புறம் வேறே ஏதாவது இருக்கா?”

“கோயம்பத்தூர் கம்பனி புது ஆர்டர் கொடுப்பாங்க போலிருக்கு ! அதுக்கு வொர்க் பண்ண ஆரம்பிக்கணும் ”

“அது இப்போ அவசரமுமில்லே, அவசியமுமில்லே. இப்பத்திக்கு அதை கிடப்பில் போடு. நேரம் கிடைக்கச்சே எடுத்துக்கோ. ”

“சூப்பர்டா விஷ்வா! எனக்கு பெரிய பாரமே இறங்கினா போலே இருக்கு”

“இந்த பலூடா சாப்பிடு. இன்னும் நல்லா இறங்கும்”

எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் கவலை குறைந்து தான் இருந்தது. இப்போது இரண்டு பிரச்னைகள் தான். மற்ற பிரச்னைகள் மாயமாக போய்விட்டன.

கொஞ்ச நேரம் இரண்டு பெரும் பேசாமல் சாப்பிட்டோம். இனிப்பு உள்ளே போனவுடன் மூளை எனக்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

“சுந்தர், பிரச்னைகளை எப்பவும் சுமந்து கிட்டு திரியாம இருக்க ஒரு வழி இருக்கு, சொல்லட்டா?”

“சொல்லு விஷ்வா ! நான் எப்பவும் பிரச்னைகள் நடுவுலே தான் வாழறேன்! .”

“சும்மா சீன் போடாதே சுந்தர், உனக்கு சாமி பக்தி உண்டா? எந்த சாமி ரொம்ப பிடிக்கும்?”

“நிச்சயமா! விநாயகர்தான். ஏன் கேக்கிறே?”

“கூல்! என்ன பண்றே! முதல்லே, வீட்டு வாசல்லே விநாயகர் படத்தை மாட்டறே! தினமும் மாலையிலே, வேலைய விட்டு வீட்டுக்குள்ளே நுழையச்சே, வாசல்லேயே, சாமி முன்னாலே உன் கவலை, பிரச்னை எல்லாத்தையும் மாலையா போட்டுடறே! ‘விநாயகா! இதை பத்திரமா வெச்சிக்கோ! நாளைக்கு பாக்டரி போகறத்துக்கு முன்னாடி திருப்பி எடுத்துக்கறேன்’ அப்படின்னு வேண்டிக்கோ. பாரத்தை இறக்கி வெச்சுடு. நிம்மதியா வீட்டுக்குள்ளே நுழையறே ! ஆனால், காலைலே திரும்ப மறக்காம சாமி கிட்டேயிருந்து எடுத்துக்கோ”

“இந்த டீல் நல்லா இருக்கே ! எனக்கு பிடிச்சிருக்கு ! வொர்க் அவுட் ஆகுமா?”
“கட்டாயம் ஆகும். முயற்சி பண்ணு. சொல்லபோனால், அடுத்த நாள் காலைலே உன்னோட பாதி கவலை காணமல் போயிருக்கும்”

“அதெப்படி?”
“ஏன்னா, கிட்டதட்ட ஒரு எழுபது பெர்சென்ட் கவலை நம்ப கற்பனைதானே?”

“சூப்பர் விஷ்வா! நான் ட்ரை பண்றேன். நீயும் இப்படித்தான் பண்றியா?”

“எனக்கு தான் அவ்வளவா சாமி பக்தி கிடையாதே! சாமிக்கு பதிலா எங்க அம்மா அப்பா படத்தை வெச்சிருக்கேன்!”

“இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்கு. அவங்க ஆசி இருந்தா போதுமே!”

விஷ்வா கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு சொன்னான்.

“சரி சுந்தர்! இப்போ உனது முதல் தலைவலிக்கு வருவோம்”.

“இன்கம் டாக்ஸ் தானே விஷ்வா ! என்னடா பண்றது?”

“இதோ பாரு, எந்த கவலையும் அணுகறதுக்கு முன்னாடி முதல்லே மூணு படி ஏறணும்”

“இது வேறேயா?”

“முதல்லே பிரச்னையை நல்லா அலசு. இந்த பிரச்னையினால் உனக்கு என்ன மாதிரி நஷ்டம் ஏற்படும் என யோசி. இரண்டாவது, இவ்வளவு தான் நஷ்டம் அல்லது கஷ்டம் வரும்னு தெரிந்தவுடன், ‘இவ்வளவுதானா, பரவாயில்லே’ என்கிற மன நிலையோட அதை ஏத்துக்கோ. மூணாவது, நிதானமா, அந்த சிக்கலிலிருந்து எப்படி கொஞ்சம் கொஞ்சமா அடி படாம வெளியே வரதுன்னு யோசி. அதை இம்ப்ரூவ் பண்ணு.”

“கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு விஷ்வா”

“சரி! இப்போ இந்த ஐ.டி இன்ஸ்பெக்டர் விஷயத்துக்கே வருவோம். இந்த பிரச்சனையினால், உனக்கு எவ்வளவு நஷ்டம்?”

“20 லட்சம் இருக்கலாம்”
“அதெப்படி உனக்கு நிச்சயமா தெரியும்? யாரையாவது கேட்டியா?”

“இல்லேடா! கொஞ்சம் பயமா இருந்தது”

“பாத்தியா, உன் பிரச்சனைய நீ அலசவேயில்லை. பயந்து போய் உக்காந்துட்டே!”

“நீ சொல்றது சரிதான் விஷ்வா! பயத்திலே கையும் ஓடலை, காலும் ஓடலை”

“லஞ்சம் கொடுக்க நீ தயாரா?”

“கொஞ்சம் அதிகம்! அதான் பாக்கிறேன்!”

“ஒன்னு செய். முதல்லே, நேரே உன்னோட ஆடிட்டரை பார். அவர் என்ன சொல்றாருன்னு கேள். தேவைப்பட்டா, இன்னொரு ரிட்டர்ன் பைல் பண்ணிக்கலாம். இன்கம் டாக்ஸ் என்ன பைன் போடராங்களோ, அதை ஒப்புக்கோ. இல்லே ஆடிட்டர் சொன்னா, அப்பீல் பண்ணு. முடிஞ்ச வரை லஞ்சம் கொடுக்கறதை தவிர். அதனாலே வேறே ப்ராப்லம் வரக்கூடும். ”

“கொடுக்கலேனா, அந்த ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரச்சனை பண்ணுவானே?”

“பண்ண மாட்டான்னு தோணுது. ஏன்னா அவனும் மாட்டிப்பான்!”

“அதெப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றே?”

“எனக்கு தெரியும். இன்கம் டாக்ஸ் ரூல் பிரகாரம், அவங்க வரதுக்கு முன்னாடி உனக்கு அதிகார பூர்வமான தகவல் கொடுக்கணும். அப்புறம், அவங்க மேலதிகாரி போன் நம்பர், ஈமெயில் எல்லாம் உனக்கு கொடுக்கணும்”

“ஓ. அப்படியா. சரி நான் இப்போவே ஆடிட்டர் பாக்கிறேன்”
“கவலை படாம போ. உன்னோட இன்னொரு பிரச்னையை நாளைக்கு பாக்கலாம்”

****
அடுத்த நாள்:

இப்போ எனக்கு எந்த பயமும் இல்லை, கவலையும் இல்லை. தைரியம் வந்து விட்டது. என்ன ஆயிடும் பாத்துடலாம். ஆடிட்டரை பார்த்தேன்.

எங்க ஆடிட்டர் சொன்னார், “சுந்தர், உங்க ரிட்டர்ன்லே எந்த பிரச்னையும் இல்லை. யாரோ உங்களை போட்டு பாக்கராங்கன்னு நினைக்கிறேன்”

“எனக்கும் அது தான் சார் தோணறது”
“எதுக்கும், நாம ஐ.டி ஆபிஸ் போய் அசிஸ்டெண்ட் கமிஷனரை பார்க்கலாம் வாங்க. எனக்கு தெரிந்தவர்தான்!”

எ.சியும் இதை கேட்டு ஆச்சரியப் பட்டார்.

“கோவிந்தனா ! அப்படி ஒரு இன்ஸ்பெக்டரே இங்கே வேலை செய்யலியே. உங்க கம்பனி ரெகார்ட் படி, உங்க பேரிலே எந்த புகாரும் இல்லையே”

“சார், அந்த கோவிந்தன் என்கிட்டே நாளைக்கு வரேன்னு சொல்லியிருக்கான் சார்!”

“அப்படியா! சரி, நீங்க ஒன்னு செய்யுங்க ! அவன் வந்தவுடன், எங்களுக்கு தகவல் கொடுங்க. நாங்க வரோம்”

இதுக்கு மேலே, என்ன நடந்ததுன்னு நீங்க ஊகிச்சிருப்பீங்க. கோவிந்தனை அதிகாரிங்க, கையும் களவுமா பிடிச்சிட்டாங்க. அவன் ஒரு பிராடு. என் கிட்டே ஆட்டைய போட பார்த்திருக்கான். எங்க துரை தான் அவனுக்கு கையாள். துரையை கம்பனியை விட்டு துரத்திட்டேன்.

***
இப்போ எனக்கு ஒரே ஒரு பிரச்சனை தான். ஷூ பிரேக் உதிரி பாகம் தயார் பண்ணுவது. துரைக்கு பதிலாக இப்போது முருகன் தான் சுபெர்வைசர். அவனிடம் அதை ஒப்படைத்து விட்டேன். ரெண்டு பேரும் சேர்ந்து தயார் பண்ணினோம். அந்த மாதம் கொடுக்க முடியவில்லை. பரவாயில்லை. ஒன்றும் தலை முழுகிவிட வில்லை.

ஒரு பதினைந்து நாள் கால தாமதத்தில் 1000 யூனிட் டெலிவரி கொடுத்து விட்டோம். எனது கஸ்டமர் திருப்தியாக, புது ஆர்டர் வேறு கொடுத்து விட்டார். வியாபாரத்திலே இதெல்லாம் சகஜமப்பா!

மனைவியுடன் ஊருக்கு சென்று படையலில் கலந்து கொண்டேன். எனது மெடிக்கல் செக் அப்செய்து கொண்டேன். அல்சர் தான். எல்லாம் சரியாகிவிடும். ஒன்றும் பயமில்லை. இப்போது தான் நான் கவலை படுவதை விட்டுவிட்டேனே. விஷ்வாவின் சொல்படி வேளா வேளைக்கு, நேரந்தவராமல் சாப்பிடுகிறேனே!

ஒரு மாசம் கழித்து

விஷ்வாவிடமிருந்து போன்:
“சுந்தர், எப்படி இருக்கே!”
“நல்லாயிருக்கேன் விஷ்வா! இப்போ ஒரு பிரச்சனையும் இல்லை”

“அப்படி சொல்லாதே! பிரச்சனை இல்லாம யாருமே இருக்க முடியாது. பிரச்னைகளை கண்டு பயப்படாமே, வொர்ரி பண்ணிக்காம, சந்தோஷமா வாழ கத்துக்கிட்டேன்னு சொல்லு”

“உன்னோட ஆலோசனைக்கு ரொம்ப நன்றிடா. அது படிதான் நடக்கறேன்.”

“சுந்தர், இந்த வாசகத்தை மறக்காதே! ‘நேற்று என்பது சரித்திரம். நாளை என்பது மர்மம். இன்று என்பது இயற்கை நமக்களித்த வரம்.அதனாலே தான் அதை ஆங்கிலத்திலே பிரசன்ட் அப்படின்னு சொல்லறாங்க. இன்னி பொழுதை சந்தோஷமா கழி. நாளைய பிரச்சனை நாளைக்கு. பிளான் பண்ணு, அது அவசியம். கட்டாயம் பண்ணனும். அது தப்பில்லே. ஆனால் கவலைப் படாதே. அது அனாவசியம். அது தப்பு.”

“ரொம்ப தேங்க்ஸ் விஷ்வா. நீதான் என் நன்பேண்டா ! ”- மனதார நன்றி சொன்னேன் என் நண்பனுக்கு.

–    முரளிதரன் செளரிராஜன்

 

(நன்றி: கூகிள், விக்கிபிடியா, டேல் கார்னேகி, ஸ்டீபன் கோவி)

Likes(1)Dislikes(0)
Share
Feb 142015
 

4 Stories

 

சென்னை, அம்பத்தூர் தொழிற் பேட்டை. நான் எனது சின்ன தொழிற்சாலைக்குள் நுழைந்தேன். நான்கு லேத்துகள், இரண்டு பிரஸ்ஸிங் மிஷின், மூன்று ட்ரில்லிங் மிஷின் இவ்வளவு தான் என் பட்டறை..

முன்னுக்கு வர முயன்று கொண்டிருக்கும் சிறிய தொழில் அதிபர் நான். என் பாக்டரியில் மொத்தமே 15 பேர்தான், என்னையும் சேர்த்து. ஆனால், சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க ! எனக்கு எக்கச்சக்க பிரச்னைகள்!

என்னன்னு சொல்ல? தொழிலாளர்களின் தேவைகள் , என்னோட கஸ்டமர் டிமாண்ட்ஸ், அரசாங்க கெடுபிடிகள், வங்கி சம்பந்த பிரச்சனைகள் , எச்சைஸ் வரி, சேல்ஸ் வரி இப்படி எவ்வளவோ ? அப்பப்பா ! போதுமடா சாமி !

உள்ளே நுழையும் போதே குரல் கொடுத்தேன் . “துரை! கொஞ்சம் என் ரூமுக்கு வா!”. துரை, எனது கம்பெனி சுபெர்வைசெர், என் அறையின் உள்ளே நுழைந்தான்.

“என்ன சார்! போன காரியம் என்னாச்சு? கஸ்டமர் கிட்டே டைம் கேட்டீங்களா?”

“இல்லே துரை, ரொம்ப நெருக்கறான். இன்னும் பதினைந்து நாளில் ஷூ ப்ரேக் உதிரி பாகம் 1000 யூனிட் டெலிவரி வேணுமாம்!”

“அதுக்கு சான்சே இல்லே சார். குறைந்தது ஒரு மாசமாவது ஆகும். இன்னும் பிரசிஷனே வரல்ல!”

“என்ன துரை, நாலு நாளா அதேதான் சொல்லிக்கிட்டு இருக்கே!”

“நான் என்ன சார் பண்ணட்டும்! ஒரு வாரமா மூணு லேபர் வரல்லே, மத்த வேலையெல்லாம் அப்படி அப்படியே நிக்குது. அதை பாக்கிறதா, இல்லே இந்த வேலையை பாக்கறதா?”

“இதை ஏன் என் கிட்டே முன்னாடியே சொல்லலே?”

“சொன்னேன் சார், நீங்க தான் காதிலேயே போட்டுக்கலே”

“ஏன் லேபர் வரலியாம்?”

“கூலி கட்டுப்படி ஆகலியாம். அதிகம் கேக்கிறாங்க”

“சரியா போச்சு! இது வேறையா? நான் எங்கே போறது? சரி நீ போ! அந்த ஷூ பிரேக் டிசைனை என்கிட்டே அனுப்பு. என்னன்னு நானே பாக்கிறேன்”

எப்படி 15 நாளைக்குள்ளே டிசைன் சரி பார்த்து , 1000 யூனிட் டெலிவரி பண்றது? போற போக்கிலே ஒரு மாசம் ஆகிடும் போலிருக்கே! பெரிய கம்பனி அக்கௌன்ட் கை விட்டு போயிடுமே! என்ன பண்றது? யோசனை பண்ணி, நெற்றி பொட்டு வலித்ததுதான் மிச்சம்.
****

மதியம் ஒரு மணி இருக்கும்! இன்னும் சாப்பிட போகவில்லை. பசி வயிற்றை கிள்ளியது. அப்போது, துரை வேகமாக உள்ளே வந்தான்.

“சார்! சார்! இன்கம் டாக்ஸ் ஆபீசர் வந்திருக்கார்! உங்களை பாக்கணுமாம்”
“என்னையா! என்னை எதுக்கு பாக்கணும்? நாந்தான் ரிடர்ன் பைல் பண்ணிட்டேனே. ம்ம். சரி, உள்ளே அனுப்பு”

இது என்னடா கஷ்ட காலம்! இருக்கிற தொந்திரவிலே இது என்ன புது குழப்பம்?

“நீங்க தானே சுந்தர்? லஷ்மி எகுப்மென்ட் முதலாளி?” – உள்ளே நுழைந்து அமர்ந்த அதிகாரி, தனது பைலை புரட்டிக் கொண்டே கேட்டார்.

“ஆமா சார். நீங்க?”

“நான் ஐ.டி இன்ஸ்பெக்டர், கோவிந்தன். உங்க பான் , டான் நம்பர் கொஞ்சம் சொல்ல முடியுமா?” சொன்னேன். கோவிந்தன் தனது பைலில் சரி பார்த்தார்.

“சுந்தர், உங்க பேரிலே ஒரு புகார் வந்திருக்கு. நீங்க வரி ஏய்ப்பு செய்யறீங்கன்னு. அது விஷயமா உங்களை பாக்க வந்திருக்கேன்”

“இல்லியே! எனது ஆடிடர் எல்லாமே பைல் பண்ணியிருக்கிறாரே?” எனக்கு நெற்றி பொட்டில் வியர்வை துளி. கொஞ்சம் படபடப்பு. கைகுட்டை தேடினேன்.

“டென்ஷன் ஆகாதிங்க. இது ஒண்ணும் பெரிய பிரச்னையே இல்லை. உண்மையை ஒளிக்காமல் சொன்னால் மட்டும் போதும்.”

“சார் நீங்க என்ன சொல்றீங்க?”

“எனக்கு தெரியும் சுந்தர், புகார்லே இருக்கு. உங்களுக்கு சென்னையிலே ரெண்டு வீடு இருக்கு. ரெண்டு கார் வெச்சு இருக்கீங்க. இப்போ புதுசா இந்த பக்கத்து பாக்டரி வாங்க முயற்சி பண்ணிட்டிருக்கீங்க. சரியா?”

“சரிதான் சார். ”

“ஆனால், உங்களுக்கு நஷ்டம்னு டாக்ஸ் பைல் பண்ணியிருக்கீங்க. இது வரி ஏய்ப்பு இல்லாமல் வேறே என்ன?”

“சார், நான் எல்லாம் சரியாதானே கொடுத்திருக்கேன்? அக்கௌன்ட் எல்லாம் சரின்னு எங்க ஆடிட்டர் கூட சொன்னாரே”
“அது இருக்கட்டும், சுந்தர், உங்க பைலை ஓபன் பண்ணினால், குறைந்தது ஒரு இருபது லக்ஷம் டாக்ஸ் கட்டவேண்டி வரும். இன்னும் அதிகம் கூட ஆகலாம். உள்ளே கூட தள்ளலாம்.”

“சார்! எதுக்கும் நான் என் ஆடிட்டர் கிட்டே பேசிட்டு உங்களை பாக்கவா?”

“தாராளமா, அது உங்க விருப்பம். ஆனால், நீங்க ஆடிட்டர் கிட்டே போறதினாலே, உங்களுக்கு இன்னும் நஷ்டம் தான் அதிகம் ஆகும். கோர்ட், ஐ.டி ஆபீஸ்ன்னு அலைய வேண்டியிருக்கும்.”

“சார், அப்போ இதுக்கு என்ன பண்ணலாம்? நீங்க தான் உதவி செய்யணும்!”
“மிஸ்டர் சுந்தர், உங்க கஷ்டம் எனக்கு புரியுது. அதுக்குத்தான் நானே பெர்சனலா வந்திருக்கேன். காதும் காதும் வெச்சா மாதிரி கேஸ் க்ளோஸ் பண்ணிடறேன். போதுமா? இன்னிக்கு நம்பர் டூ அக்கவுண்ட் வெச்சுக்காதவன் யாரு?”

“ரொம்ப தேங்க்ஸ் சார்”

‘ஆனா இதிலே பாருங்க சுந்தர், இதுக்கு நான் மேலிடத்தையும் கவனிக்கணும். கொஞ்சம் செலவாகுமே!”
எனக்கு புரிந்தது. ‘சொல்லுங்க சார், செஞ்சிடலாம்!”

“எல்லாம் சேர்த்து ஒரு ஐந்து லட்சம் ஆகும். இப்போ பாதி, கேஸ் க்ளோஸ் பண்ண பிறகு மீதி கொடுத்தா போதும். ”
“சார், எனக்கு கொஞ்சம் டைம் வேணும். ஒரு வாரத்தில ரெடி பண்ணிடறேன்! ”

“ஒரு வாரம் வேணுமா? சீக்கிரம் முடிச்சிடறது நல்லது. எனக்கு ஒண்ணுமில்லே, கேஸ் என்னை தாண்டி வேறே யாரு கிட்டயாவது போயிட்டா, உங்க பாடு திண்டாட்டம் தான். ஞாபகம் வெச்சுக்கோங்க”
“இல்லே சார், பணம் புரட்டனும். கொஞ்சம் டைட்”- புளுகினேன்

“ஓகே. ஒரு வாரம் கழித்து கால் பண்றேன்.”

புயல் ஓய்ந்தது போல இருந்தது. தலையில் கை வைத்து கொண்டு உட்கார்ந்தவன் தான், நான் மதிய உணவிற்கு கூட செல்ல வில்லை.

எனக்கு மட்டும் ஏன் இப்படி பிரச்சனை வருது? எப்படி சமாளிக்க போறேன்? ஒரே சஞ்சலம்.

*****

இரண்டு நாள் கழிந்தது.

பாக்டரியில் ஷூ பிரேக் டிசைன் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பண்ணியும் சரியாகவே வரவில்லை. மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது

நேரங்கெட்ட நேரத்தில், அலைபேசி. “சார், நாங்க ஐசிசி பாங்க்லேருந்து பேசறோம். உங்களுக்கு பர்சனல் லோன் வேணுமா சார்!” கடுப்பாகிவிட்டேன். “வைம்மா போனை. வேறே வேலையில்லை உங்களுக்கு!”

திரும்பவும் அலைபேசி. இப்போது அன்புத்தொல்லை, என் மனைவி.
“என்னங்க! ஊரிலிருந்து அண்ணா போன் பண்ணினான்”
“என்ன விஷயம்?”

“உங்க சின்ன மாமனாருக்கு அறுபது பூர்த்தியில்லே! அதுக்கு நம்ம கோயில்லே படையல். நம்மளை விருந்துக்கு கூப்பிட்டிருக்கான்.”

“என்னிக்கு?”

“இந்த மாசக் கடைசியிலேங்க! மறந்துட்டீங்களா ?. நாம ரெண்டு நாள் முன்னாடியே போகணும்”

“ஐயோ! என்னால் முடியாதம்மா! இங்கே ஏகப்பட்ட வேலை இருக்கு”

“ஆமா! எங்க வீட்டு விசேஷம் எதுக்கு கூப்பிட்டாலும் எதாவது சாக்கு சொல்லி தட்டி கழிக்கிறீங்க!”

“சொன்னா புரிஞ்சுக்கோ. என்னாலே அவ்வளவு தூரம் வர முடியாது. நான் என்ன இங்கே வேலை வெட்டி இல்லாமையா இருக்கேன்?எனக்கே இங்கே ஏகப்பட்ட பிடுங்கல்”

“ஏன் சொல்ல மாட்டீங்க? நான்தானே உங்க பிடுங்கல்?”

“மீனா! கோபி..” முடிப்பதற்குள் துண்டிக்கப்பட்டது. எனக்கு இது வேறே பிரச்சனை.

கோபக்கார மனைவி. சமாதானப் படுத்த எனக்கு நேரம் இல்லை. மனமும் இல்லை.

****

இன்னும் நான்கு நாட்கள் கழிந்தது.

என் நிலைமையில் ஒரு முன்னேற்றமும் இல்லை. தூக்கம் சுத்தமா போச்சு. கண்ணயரும்போது, ஒரு பக்கம் கிளையன்ட் டார்ச்சர், இன்னொரு பக்கம் இன்கம் டாக்ஸ் இன்ஸ்பெக்டர். என்ன செய்யப் போறேன்? எதைன்னு பாக்கிறது? தலை வலி. வயிறு வேறு பிசைந்து கொண்டேயிருந்தது. எப்படி சமாளிக்கபோறேன்? யோசனை, படபடப்பு, மன உளைச்சல், நெஞ்சு வலிக்கற மாதிரி இருந்தது. டாக்டர்கிட்டே போகணும்!
அலைபேசி அழைத்தது. அழைத்தவன் எனது நண்பன் விஷ்வா.

“டேய் சுந்தர், நான்தாண்டா விஷ்வா பேசறேன்! எப்படியிருக்கே?”-

“டேய் விஷ்வா ! நீ எங்கே இங்கே ?”-நான்

“நேத்திதான் நான் சிங்கப்பூர்லேருந்து வந்தேன். ஒன்னு செய். நீ அண்ணா நகர்லே தானே இருக்கே! நேரே ஐந்து மணிக்கு சரவண பவன் ஹோட்டலுக்கு வந்துடு. நிறைய பேசணும்”- விஷ்வா

“இல்லேடா ! நான் வரல்லே ! கொஞ்சம் பிரச்சனை! சாரிடா”

“அடி படுவே! நீ வரே! நாம மீட் பண்றோம் ! அவ்வளவுதான்.”

பள்ளி நண்பன். ரொம்ப நெருக்கம். தட்டமுடியவில்லை. எனக்கும் கொஞ்சம் மாற்றம் தேவையாயிருந்தது.

(அடுத்த இதழில் முடியும்….)

–    முரளிதரன் செளரிராஜன்

Likes(2)Dislikes(0)
Share
Aug 152014
 

Kathai 2

திலீபன் ஒரு பி.பி.ஏ. வேலையில்லா பட்டதாரி. விவசாயக் குடும்பம். வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருந்தான்.

ஒரு நிறுவனம் கூட இவனை நேர்முக தேர்வுக்கு கூப்பிடவில்லை. ஆரம்ப நிலை பயிலாளர், எழுத்தர் வேலைக்கு கூட ஐந்து வருட அனுபவம் கேட்கின்ற காலம் இது.

ஆனாலும், திலீபன் மனம் தளரவில்லை. மனு மேல் மனு போட்டுக் கொண்டேயிருந்தான். போட்ட அலுவலகங்களுக்கே மீண்டும் மீண்டும். வேலை வாய்ப்பு இணையதளம், ஈமெயில் மூலமாக.

பதில் தான் ஒன்று கூட வரவேயில்லை. எதிர் பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். இப்படியிருக்க, ஒருநாள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், ஒரு பெரிய வணிக நிறுவனத்தின் மனித வள அதிகாரியிடமிருந்து, அவனுக்கு ஒரு கடிதம் ஈமெயிலில் வந்தது.

“உங்களது மனு நிராகரிக்கப் பட்டுள்ளது…”

கூடவே அந்த ஈமெயிலில்,

“உங்கள் விண்ணப்பத்தில் நிறைய பிழைகள் உள்ளன. விண்ணப்பத்தை சரியாக எழுத முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.” என்றும் எழுதியிருந்தது.

படித்ததும், திலீபனுக்கு ஒரே எரிச்சல். வேலை கிடைக்காத நிராசையை விட, “இவனுங்க யாரு என்னை குறை சொல்ல?” எனும் எண்ணமே தலை தூக்கியது. செம கடுப்பு.

திருப்பி காய்ச்சி ஒரு கடிதம் போட, திலீபன் கையும் மனமும் துறுதுறுத்தது. உடனே மெயில் எழுதவும் ஆரம்பித்து விட்டான். கட்டிலடங்காத கோபம். தாறுமாறான எண்ணங்கள்.

“என்னோட ஆங்கிலத்தை குறை சொல்ல நீங்க யாரு? ஏன் இந்த ஆணவம்? அதுக்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? வேலை இல்லைன்னா,  வேலை இல்லைன்னு சொல்றதோட மட்டும் நிறுத்திக் கொள்ளுங்க. நீங்களும், உங்க நிறுவனமும். போங்கையா போங்க. ஸ்டுபிட்!”இப்படியாக, கண்டபடி திட்டி எழுதிக் கொண்டிருந்த போது, அவன் அப்பா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது.

“திலீபா! கோபமும் வெறுப்பும், ஒரு எரியற தணல் மாதிரி. கையில் கிடைச்சதை எடுத்து மற்றவர் மேல் எறியலாம்னு நினைப்போம். ஆனால் நம்ப கையை அது முதல்ல சுட்டுடும். எதையும், நிதானமா யோசனை பண்ணி செய். அவசரப்படாதே.”

அவனது ஆத்திரமும், கோபமும் கொஞ்சம் தணிந்தது. அந்த எச்.ஆர்.  சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்க கூடுமோ? தனது விண்ணப்பத்தை எடுத்து மீண்டும் படித்தான். நிறைய குறைகள் கண்ணில் பட்டன.

நமது மேலே குறைகள் வைத்துக் கொண்டு ஏன் நிறுவன அதிகாரியைத் திட்டனும்? பாவம், மீண்டும் மீண்டும் அதே போன்ற பல மனுக்களைப் பார்த்து அவர்களுக்கு அலுப்பு தட்டியிருக்கும் போல. அவர்களைத்திட்டி நமக்கு என்ன லாபம்?

பதிலை மாற்றி எழுதினான்.

“அன்புள்ள ஐயா, உங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி. விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டியமைக்கு வந்தனம். விண்ணப்பத்தை மாற்றி எழுதியுள்ளேன். உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். மீண்டும் நன்றி.”

கடிதத்தை நிறுவனத்திற்கு அனுப்பி விட்டான்.

பத்து நாளில், அந்த நிறுவனத்திலிருந்து ஒரு அலைபேசி அழைப்பு. “திலீபன்! உங்களை எங்கள் கம்பெனியில் பயிலாளர் விற்பனை அதிகாரியாக வேலை நியமனம் செய்ய உள்ளோம். நாளை, உங்கள் இறுதி நேர்முக தேர்வு. உங்கள் சான்றிதழ்களுடன், எங்களது எச்.ஆர். அலுவலகத்திற்கு நாளை வரவும். மேலும் விவரங்களுக்கு ஈமெயிலை பார்க்கவும்.”

திலீபனுக்கு ஆச்சரியம். “எப்படி? என் விண்ணப்பம் தான் முதலில் ஏற்கப் படவில்லையே?”

“நாங்கள் உங்களுக்கு அனுப்பிய ஈமெயில் தகுதிச்சுற்றிலே, சரியான முறையில் பதிலெழுதி, நீங்கள் வெற்றி பெற்றதனால், நாளை நேர் காணல். வாழ்த்துக்கள்.”

திலீபன், அப்பாவிற்கு மனதில் நன்றி சொன்னான். அப்பா படிக்காதவர் தான், ஆனால், என்ன ஒரு விவேகம் அவருக்கு!

**** முற்றும் ****

வேதாத்திரி மகரிஷி சொன்ன பொன் வரிகள்…

“எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.

சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.

செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.

பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.

ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”

 

 

–    முரளிதரன் செளரிராஜன்

 

Likes(7)Dislikes(0)
Share
Share
Share