Mar 142015
 

2.1

சுயதொழில் தொடங்கவதற்கெல்லாம் நல்ல அனுபவமும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் முடியுமென நிறைய பேர் சொல்லி கேள்விபட்டிருப்போம். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆர்வமும் உழைப்பும் இருந்தால் போதும், வயதும், அனுபவமும் பெரிய தடையில்லை என நிறுபித்து, வெற்றி பெற்று வருகின்றனர் இந்த சகோதரர்கள்.

மூத்தவர் 15வயதாகும் ஷ்ரவண் குமரன், இளையவர் 13 வயதாகும் சஞ்சய் குமரன். பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சிறு வயதிலேயே, கைப்பேசியில் உள்ள மென்பொருள் உருவாக்கத்  துறையில் ஆழமாக முத்திரை பதித்து வரும் இவர்கள், “GO DIMENSIONS” என்ற ஒரு நிறுவனத்தை துவக்கி அதன் அமைப்பாளர்களாகவும், இயக்குனர்களாகவும் இருந்து வருகின்றனர்.

இந்தியாவின் மிகச்சிறிய வயது MOBILE APP PROGRAMMERS ஆக அடையாளம் காணப்பட்டுள்ள இவர்களை, பல உயர்ந்த நிறுவனங்கள் அழைத்து, தங்கள் நிறுவனங்களில் இவர்களை பேசவைத்து, பலரை ஊக்குவித்தும் வருகின்றன.

விருதுகளால் இவர்களுக்கு அழகா, இவர்களால் விருதுகளுக்கு அழகா என்று வியக்கும் வகையில் என்னற்ற விருதுகளையும் பரிசுகளையும் பலதரப்பட்ட பெரிய நிறுவனங்கள் இவர்களுக்கு வழங்கி கவுரவித்துள்ளன. நமது B+ இதழின் இந்த மாத சாதனையாளர்களின் பக்கத்தில், இவர்களை அறிமுகப் படுத்துவதில் பெருமை அடைகிறோம். இனி இவர்களுடன் பேட்டியிலிருந்து..

 

உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்..

வணக்கம், நாங்கள் இருவரும் IOS மற்றும் ஆண்ட்ராய்டிற்காக APPS DEVELOPMENT செய்கிறோம். இதுவரை ஏழு APPS தயார் செய்துள்ளோம்.

எத்தனை வருடங்களாக செய்து வருகிறீர்கள்?

எட்டு வருடங்களாக செய்து வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக  APPSகளை வெளியிட்டு வருகிறோம்.

உங்கள் APPS இதுவரை எத்தனை முறை DOWNLOAD செய்யப்பட்டுள்ளது?

அனைத்து APPSஉம் சேர்ந்து 63000 முறை ஆகியுள்ளது. CATCH ME COP என்ற APP மட்டும் 25000 முறை DOWNLOAD செய்யப்பட்டுள்ளது.

இவற்றிற்கு BACK-ENDஆக எந்தெந்த LANGUAGES (கணினி மொழிகள்) உள்ளது?

ஆப்பிள் நிறுவனத்தின் மொழியான OBJECTIVE-C யை உபயோகிக்கின்றோம். JAVA மற்றும் வேறு சில பிரோகிராம் மொழிகளையும் சிறிது கற்றுக்கொண்டோம்.

ஏதேனும் கணினி நிறுவனத்திற்கு சென்று இந்த மொழிகளை கற்றீர்களா?

இல்லை. கணினி புத்தகங்களை வைத்து நாங்களே படித்து கற்றுக்கொண்டோம். எங்கள் தந்தை சில அடிப்படை விஷயங்களை QBASIC இல் கற்றுத்தந்தார். அதிலிருந்து நாங்கள் இருவரும் எங்கள் பயணத்தை தொடங்கி மற்ற மொழிகளையும் பயின்றோம்.

இந்த வேலைகளை செய்வதற்கான நோக்கம் என்னவாக இருந்தது?

சிறுவயதிலிருந்தே, விளையாட்டு, APPS, பிரோகிராம் மற்றும் கணினி தான் எங்கள் இருவருக்கும் பிடித்த விஷயங்களாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தன. ஒரு சமயம் எங்கள் முன் இரு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று கணினி APPS, மற்றொன்று கைபேசி APPS. ஆனால் கைபேசி APPS சிறந்ததாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்குமென எண்ணி கைபேசியை தேர்வு செய்தோம்.

அது IOS அத்தனை வேகமாக பரவியிராத நேரம், அப்போதே அதை நாங்கள் தொடங்கிவிட்டோம்.

ஒவ்வொரு APPSகளை செய்யும் யோசனை எவ்வாறு கிடைக்கிறது?

பெரும்பாலான APPSகளுக்கான யோசனை, தினசரி வாழ்க்கையின் சூழ்நிலை வைத்தே அமைகிறது. சமீபத்தில் “PRAYER PLANET”  என்ற ஒரு APPஐ உருவாக்கியிருந்தோம். இந்த யோசனை உருவாகியது ஒரு நெருக்கடியான சூழ்நிலையில். நாங்கள் ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யும்போது, காற்று கொந்தளிப்பில் விமானத்தின் ஓட்டம் சீராக இல்லாமல் தடுமாறியது. அப்போது ஏதாவுது ஒரு கடவுளின் சிலையை வைத்து பிரார்தனை செய்ய விரும்பினோம். அப்போது தான் கைப்பேசியில் ஆண்மிகப் பாடலுடன் கடவுளின் உருவமும் உள்ள ஒரு APPஐ தயாரிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அதைக் கொண்டு இந்த APPஐ செய்தோம்.

2.2

ஒரு APPஐ தயாரிக்க எத்தனை கால அவகாசம் தேவைப்படும்? படித்துக்கொண்டே இதற்கெல்லாம் நேரம் எவ்வாறு ஒதுக்குகிறீர்கள்?

மூன்று முதல் நான்கு மாதம் ஆகும். தினமும் 1மணி நேரம் இதற்காக கொடுப்போம், அது தவிர சனி, ஞாயிறுகளிலும் சிறிது நேரம் கொடுப்போம். தினமும் அரை மணி நேரம் வெளியே சென்று விளையாடுவோம், மற்ற நேரங்களில் படித்துவிடுவோம். எங்களது வகுப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் சமூக வலைதளத்தில் நேரம் செலவிடுவர், அந்த நேரத்தை நாங்கள் இந்த வேலைகளை செய்ய பயன்படுத்துவோம்.

பெற்றோர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்தது?

ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றியும் பில் கேட்ஸ் பற்றியும் எனது தந்தை பல கதைகளை கூறுவார். எங்கள் அன்னை ரைட் சகோதரர்கள் பற்றிய கதைகளை கூறி வளர்த்தார். அந்த இரண்டு சகோதரர்களும் ஒற்றுமையாய் இருந்து சாதித்து காட்டியதை கூறி வளர்த்தது, எங்களுக்கு அவர்கள் மேல் ஒரு ஈர்ப்பை தூண்டியது. அவர்களைப் போல் நாங்களும் ஏதெனும் சாதிக்க வேண்டுமென நினைத்தோம். எங்கள் பெற்றோர்கள் எங்களை கனவு கண்டேயிருங்கள் என சொல்லிக்கொடுப்பார்கள்.

எங்களின் சில நண்பர்கள் அவர்கள் பெற்றோர்கள் கணினியில் உட்கார நேரம் கொடுப்பதில்லை எனக் கூறுவர். கணினி என்பது ஒரு கத்தி மாதிரி. காய்கறிகள் வெட்டவும் பயன்படும். காயப்படுத்தவும் பயன்படும். கணினியில் படிப்பு சம்பந்தப்பட்ட, அறிவை வளர்த்துக்கொள்ள கூடிய நிறைய விஷயங்கள் உள்ளது. நாம் சரியான விஷயத்திற்காக தான் கணினியை பயன்படுத்துகிறோம் என்று பெற்றோர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம். அந்த மரியாதையை நாம் தான் பெற்றோர்களிடம் பெற வேண்டும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவு உங்களுக்கு எவ்வாறு இருக்கும்? உங்கள் சாதனைகளைப் பார்த்து என்ன கூறுவார்கள்?

2வருடங்களிற்கு முன் 3 APPS வெளியிட்டிருந்த சமயம். NDTVஐ தொடர்ந்து பல மீடியாக்கள் வந்து எங்களை பேட்டி எடுத்து சென்றனர். அப்போது நண்பர்களும், உறவினர்களும், நீங்கள் இருவரும் உங்கள் நிறுவனத்திற்கு அதிபராகிவிட்டீர்கள், இனி எங்களுடன் நேரம் செலவிடுவீர்களா என கிண்டல் செய்வார்கள். அவ்வாறாக ஒரு இரண்டு வாரங்கள் சென்றது, பின்னர் எல்லோரும் சகஜ நிலைமைக்கு வந்துவிட்டனர்.

இதுவரை எத்தனை அவார்டுகள் வாங்கியுள்ளீர்கள்?

2012 ஆம் ஆண்டில் ரோட்டரி கிளபின் “சிறந்த தொழிலதிபர் விருது”, CII சண்டிகரின் “இளம் சாதனையாளர் விருது” போன்றவை சிறந்த விருதுகளாகும். இதுமட்டுமின்றி பல நிறுவனங்கள் பல விருதுகளை கொடுத்து ஊக்கப்படுத்தின. குறிப்பாக திரு.அப்துல் கலாம் அவர்கள் பாராட்டியது மறக்கவே முடியாது.

மேலும் NDTV, HINDU, INDIA TODAY, DECCAN Chronicle, சென்னையின் Rainbow FM, மும்பையின் Radio City, சன்டிகரின் BIG FM, NEWSX, என பல மீடியாக்கள் ஏற்கனவே எங்களைப் பேட்டியெடுத்து வெளியுலகிற்கு அடையாளம் காட்டியுள்ளன.

கல்லூரிகளும் உங்களை சிறப்புரை ஆற்ற அழைத்துள்ளதாக கேள்விபட்டோமே?

ஆம். நாட்டின் உயர்ந்த கல்வி நிறுவனங்களான IIM பெங்களூர், IIT சென்னை, VIT கல்லூரி, சிம்பையாசிஸ் கல்லூரி, மும்பையில் உள்ள WELLINKAR MANAGEMENT நிறுவனம், புதுச்சேரி பல்கலைகழகம், SAP TECH பல்கலைகழகம் மற்றும் பல கல்லூரிகள் எங்களை அழைத்து பேச வைத்து தங்கள் மாணவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன.

கொரியா நாட்டில் உள்ள ஹெரால்டு என்ற செய்தித்தாள் நிறுவனம் நடத்திய மாநாட்டில் 200க்கும் அதிகமான CEOக்கள் கலந்து எங்ககளது பேச்சைக் கேட்டனர். அது மட்டுமன்றி, DRDO, CII, TEDx போன்ற நிறுவனங்களும் அழைத்து பேச வைத்துள்ளனர். ஹைதிராபாத், வைசாக், பஞ்சாப், சண்டிகர், கோயமுத்தூர், கரூர் போன்ற இடங்களில் உள்ள பல கல்லூரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் சென்று தொழில்முனைதல் மற்றும் கைப்பேசி மென்பொருள் தொடர்பான பல தலைப்புகளில் உரையாற்றி உள்ளோம்.

இது தான் பாதை என்று சிறு வயதிலிருந்தே தெரிந்துவிட்டது. அதனால் பள்ளி படிப்பில் ஆர்வம் குறைகிறதா?

நாங்கள் இருவரும் பள்ளியையோ, கல்லூரிகளையோ விட்டுவிட விரும்பவில்லை. நல்ல கல்லூரிகளுக்கு சென்று நல்ல பட்டங்கள் பெற எண்ணம் உள்ளது. ஒரு BACK-UP இருப்பது நல்லது தானே.

உங்களைப் போல் உள்ள மாணவர்களுக்கு ஏதெனும் கருத்து சொல்ல விரும்புகிறீர்களா?

உங்கள் ஆர்வத்தையும், கனவுகளையும் பின்பற்றி துரத்துங்கள். செய்யவேண்டும் என நினைப்பதையும், விரும்புவதையும் செய்யுங்கள். பொறியியல், மருத்துவம் என்று மட்டும் நினைக்காமல் மற்ற துறைகளையும் பற்றி எண்ணிப் பாருங்கள். DO WHAT YOU REALLY LOVE.

உங்கள் இலக்கு என்ன?

உலகத்தில் உள்ள 50% ஸ்மார்ட் ஃபோனில் எங்களது APPS கள் இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம். இப்போது எங்களுக்கு என ஒரு தனி டேப்லட்டையும் தயார் செய்து கொண்டிருக்கிறொம்.

அந்த டேப்லட்டை வெளியே விற்கும் திட்டம் உள்ளதா?

ஆரம்பத்தில் அந்த திட்டம் இருந்தது. ஆனால் மார்கெட்டில் ஏற்கனவே குறைந்த விலையில் நிறைய மற்ற நிறுவனங்களின் டேப்லட் விற்பனையில் உள்ளது. அதனால் இப்போது அந்த எண்ணம் இல்லை.

இப்போது நீங்கள் உங்கள் வயதிற்கேற்ப APPS செய்து வருகிறீர்கள். இன்னும் சில வரங்களில் சமுதாயத்திற்கு பயன்படும் APPS கூட செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்..

கண்டிப்பாக. வரும் ஆண்டுகளில், பார்வையற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்காக ஏதெனும் ஒரு APP செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளோம். மற்ற APPS உம் சமுகத்திற்கு பயன்படும் வகையில் செய்வோம்.

Likes(12)Dislikes(0)
Share
Share
Share