Feb 142015
 

3Achiever

இன்றைய காலத்து இளைஞர்களை அவர்கள் கைப்பேசியில் அழைத்தால் பொதுவாக என்ன மாதிரி பாடல்கள் “CALLER TUNE” ஆக நமக்கு கேட்கும் என நாம் அனைவரும் அறிவோம். ஆனால் 25 வயதே ஆகியுள்ள திரு.பாலாஜியை அழைத்தால், “சிட்டி, தி ரோபாட், ஸ்பீடு ஒன் டெர்ராஹெர்ட்ஸ், மெமரி ஒன் ஜெட்டாபைட்” என எந்திரன் பட வசனம் தெரித்து விழுகிறது. இதை வைத்தே ரோபோடிக்ஸ் துறையில் இவரின் ஆர்வம் தெளிவாக புரிந்தது.

B+ இதழின் சாதனையாளர்கள் பக்கதிற்காக சந்திக்கலாமா என்றவுடன் மகிழ்ச்சியுடன் சரி என ஒத்துக்கொண்டார். பேசிக்கொண்டிருக்கையில், இவரின் தொழில்நுட்ப சாதனைகள் கூடவே, இவரின் சமுதாய நோக்கும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

பொருளாதாரத்தில் சிறு வயது முதலேயே சிரமப்பட்டிருந்தும், பணத்திற்காக எந்த சமரசமும் செய்துக் கொள்ளாமல், லட்சியத்தின் பின் தொடர்ந்து கடின உழைப்புடன் செல்லும் இவரைப் பார்க்கையில், இவரைப் போல் பல இளைஞர்கள் தான் இன்று நம் நாட்டிற்கு கண்டிப்பாக தேவை என்ற எண்ணம் தோன்றுகிறது. இனி இவரின் பேட்டியிலிருந்து..

வணக்கம், உங்களை அறிமுகம் படுத்திக்கொள்ளுங்கள்..

வணக்கம், என் பெயர் பாலாஜி. பிறந்தது, படித்தது எல்லாமே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் என்ற கிராமத்தில். அப்பா திருநாவுக்கரசு, அம்மா முருகவேனி. என் அப்பாவிற்கு அறிவியல் ஈடுபாடு அதிகம். கிராமத்தில் உள்ளவர்களுக்கு, விவசாயத்திற்கு தேவைப்படும் ஏர் மற்றும் களப்பைகளை மரத்தில் செய்து தருவார். அவரைப் பார்த்து வளர்ந்த எனக்கும் அறிவியலில் ஈடுபாடு அதிகம் வந்துவிட்டது. சிறு வயதிலிருந்தே எந்த பொருளை பார்த்தாலும் அதே மாதிரியே செய்து விடுவேன், பள்ளியில் படிக்கும் போதே, மாவட்டளவில் அறிவியலில் பரிசுகளை வாங்கியுள்ளேன். மயிலம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் பிறிவில் 2007 ஆம் ஆண்டு சேர்ந்தேன். பின் SRM கல்லூரியில் 2012 முதல் 2014 ஆம் அண்டு வரை ரோபோடிக்ஸ் பிறிவில், எம்.டெக் படித்தேன்.

கல்லூரிகளில் உங்கள் அறிவியல் தேடல் எவ்வாறு இருந்தது?

பள்ளியில் முழுக்க தமிழ் வழி கல்வியில் பயின்றதால், கல்லூரி படிப்பு மிக ஆரம்பத்தில் மிக கடினமாக இருந்தது. நிறைய அரியர்களும் வைத்தேன். ஆனாலும் பிராஜக்ட் மட்டும் சிறப்பாக செய்ய வேண்டுமென ஆர்வம் இருந்தது.

2010 ஆம் ஆண்டில், கல்லூரியில் மூன்றாம் வருடத்தில் படித்துக் கொண்டிருக்கையில், பறக்கும் விமானம் செய்யலாம் என தொடங்கினேன். என் அப்பா தான் அதற்கு தேவையான பண உதவி செய்தார். ஆனால் விமானத்தை பறக்க வைக்க முடியவில்லை. மீண்டும் முயற்சித்தேன். கல்லூரியில் பல ஆசிரியர்களிடம் சென்று கோரிக்கை வைக்க, ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அவர்கள் உதவி செய்யவே, மீண்டும் முயற்சித்தேன். விடாமுயற்சி பலனலித்தது. பிராஜக்ட் வெற்றிகரமாக முடிந்தது. சிறந்த பிராஜக்ட் என்ற பரிசும் எனக்கு கிடைத்தது.

பின் 2011 ஆம் ஆண்டு, எனது நான்காம் வருடத்தில், அதே பிராஜக்டை சூரிய கதிரின் சக்தியில், ஆளில்லா விமானமாக (UNMANNED AIRCRAFT AERIAL VEHICLE) செய்து, அரசு விருதும் வாங்கினேன். இந்த இரண்டு பெரிய விருதுகளும் கல்லூரியில் படிக்கையில் வாங்கினேன்.

விவசாயத்திற்கு ரோபோவை கொண்டு சேர்த்ததைப் பற்றி..

விவசாயமும் ரோபோவும் பிடித்த துறைகள் என்பதால், விவசாயத்தில் (AUTOMATION) தானியங்கி முறையில் செய்ய வேண்டுமென சிறு வயது முதல் ஆசை இருந்தது. ஏர் களப்பை முறையை இப்போது உள்ள தொழில் நுட்பத்துடன் தொடர்புகொள்ள (INTERFACE) செய்ய நினைத்ததன் விளைவு தான் இந்த விவசாயத்திற்கான ரோபோ.
1992 ஆம் ஆண்டில் அறிமுகமாகிய தொலைபேசி துறை பல வளர்ச்சிகளை கண்டு இன்று எங்கோ ஒரு உயரத்தை சென்றடைந்துவிட்டது. ஆனால், 1978 ஆம் ஆண்டே அறிமுகமாகிவிட்ட ரோபோ துறையை பற்றி நம் மக்களுக்கு அவ்வளவாக தெரியாது. அதனால் ரோபோவை வைத்து குறைந்த விலையில் பயன்படும் வகையில் ஒரு ரோபோ செய்துள்ளேன்.

ஒரு டிராக்டரை எடுத்துக் கொண்டால், சுமார் 5லட்சம் ரூபாய் செலவாகும், மனிதர்களை கொண்டு இயக்க வேண்டும், டீசல் தேவைப்படும். ஆனால் நான் செய்துள்ள இந்த ரோபோவிற்கு எதுவும் தேவையில்லை. தண்ணீர் தெளிப்பது, மருந்தடிப்பது, விதை விதைப்பது, களையெடுப்பது, நிலத்தின் தண்ணீர் அளவை கணித்து, தண்ணீரை தெளிப்பது போன்ற ஐந்து வேலைகளை இந்த ரோபோ செய்யும். ஜப்பான் நாட்டில் கூட விவசாயத்திற்கு ரோபோக்களை இப்போது தான் அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால், நாம் அதற்குள் ஒரளவிற்கு வந்துவிட்டோம். ஒரே நேரத்தில் வீட்டிலிருந்தபடியே 100 ரோபோக்களை விவசாயத்தில் கட்டுபாட்டுடன் இயக்க வைக்கும் திட்டம் ஒன்றையும் தயாரித்து வருகிறேன்.

இந்த திட்டங்களையும் ரோபோவையும் எங்கெல்லாம் காண்பித்து ஒப்புதல் வாங்கியுள்ளீர்கள்?

ஜப்பான் டோக்கியோ பல்கலைகழகத்தின் பெரிய அமைப்பான “ARTIFICIAL LIFE & ROBOTICS” இல், 2014 ஆம் வருடம் எனது ரோபோ டிசைனை காண்பிக்க விண்ணபித்து இருந்தேன். ஒரு நான்கு மாதம் கழித்து அருமையான பாராட்டு கருத்துக்களுடன் பதில் வந்தது. ஜப்பானிற்கு வந்து எனது டிசைனைப் பற்றி PRESENTATION தரவும் அழைப்பு வந்தது.
ஆனால் ஜப்பான் செல்லும் அளவு பொருளாதாரமும் இல்லை, பாஸ்போர்ட்டும் இல்லை. ஆனால் ஆர்வத்தை மட்டும் விடவில்லை. அப்போது வா.மணிகண்டன் என்ற நண்பர் தனது BLOG மூலம் என்னைப் பற்றி எழுத, அவரின் வாசகர்கள் மூலம் போதிய நிதி வரவே, ஜப்பான் சென்றேன். ரோபோடிக்ஸ் துறையில் ஜப்பான் பெரிய இடத்தில் உள்ளது, அப்படி இருக்கையில், என்னிடம் ஜப்பானியர்கள் ஆட்டோகிராஃப் வாங்கியது, BIODATA வாங்கியது போன்ற விஷயங்களை மறக்கவே முடியாது. அவர்களது அங்கீகாரம் மிகுந்த ஊக்கமளித்தது.

ஜப்பான் பயணத்திற்கு பின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது? வேறு எங்கெல்லாம் உங்கள் டிசைனை சமர்பித்துள்ளீர்கள்?

அமேரிக்காவின் ஆராய்ச்சி டாக்டர்கள் கமிட்டி, மலேசியாவில் ஒரு ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியது. ஜப்பானுக்கு அனுப்பியது போன்ற மற்றொரு ஆராய்ச்சி அறிக்கையை (MULTI PURPOSE AGRICULTURE RIDE என்ற தலைப்பில்) ஒரே மாதத்தில் தயார் செய்து அனுப்பினேன். அதுவும் தேர்வு செய்யப்படவே, என்னை மலேசியாவிற்கு அழைத்தனர். அதிலும் சிறந்த ஆராய்ச்சி அறிக்கை என்ற விருதை வாங்கினேன்.

பின்னர் சென்ற ஜூன் மாதம் உலகளவிலான ஒரு போட்டி “TECHNOLOGY UNIVERSITY OF MALAYSIA” வில் நடந்தது. எனது ரோபோவை அங்கு எடுத்து செல்லலாமென்று முடிவு செய்து, சுமார் 15 நாள், இரவு பகலாய் உழைத்து தயார் செய்தேன். எனது விண்ணப்பம் தேர்வாக, மீண்டும் மலேசியா சென்றேன்.

மலேசியா இரண்டாவது முறை சென்று, அங்கு சமர்பித்ததில், மிகுந்த வரவேற்பு கிடைத்தது. உடனே எனது டிசைனை அவர்கள் வெளியீடும் செய்தார்கள். அந்த போட்டியில் இரண்டாம் பரிசும், 25000 ரூபாய் பணமும் கிடைத்தது. பெரிய பதக்கமும், பதிப்புரிமையும் (COPYRIGHT) கொடுத்தார்கள். அங்கேயே சில நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் கொடுத்தனர். ஆனால் இந்தியாவில் தான் வேலை செய்ய வேண்டுமென மறுத்துவிட்டேன்.

சர்வதேச அளவில் தொடர்ந்து மூன்று விருதுகளை வென்றது எவ்வாறு இருந்தது? அடுத்த இலக்கு என்ன?

மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. மூன்று முறையும் வெளிநாடுகள் செல்வதற்கு எனது நண்பர்கள் தான் உதவி செய்தார்கள், அவர்களுக்கு இந்த வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

அடுத்த இலக்கு, 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமேரிக்காவில் “INTERNATIONAL YOUNG SCIENTIST AWARD” என்ற நிகழ்ச்சி ஒரு வாரமாக நடக்க இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி. பல பேராசிரியர்களின் வழிகாட்டலும், ஆலோசனைகளும் இதற்கு தேவை. ஒரு குழுவாக சேர்ந்து உழைக்க வேண்டும். அந்த விருதும் வாங்கிவிட்டால் உலகமே நம்மை திரும்பி பார்க்கும்.

உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

படித்தவர்கள் விவசாயத்திற்கு வரவேண்டுமென எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்து உண்டு. படித்தவர்கள் விவசாயத்திற்காக பெருமளவில் ஏதாவது செய்ய வேண்டும். மற்றைய நாடுகளை விட நாம் விவசாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். விவசாயத்திற்காக தேவையான பொருள்களை மலிவான விலையில் தயாரிக்க படித்தவர்கள் முயல வேண்டும். சீனா, ஏற்கனவே மலிவாக செய்வதால், அதை விட மலிவாக செய்ய நமக்கு சிறந்த தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. அதற்கு நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், அதிகம் தொழில்நுட்பத்தில் முன்னேறி நாம் இருக்க வேண்டும்.

எனக்கு ரோபோடிக்ஸ் துறை பிடிக்கும் என்பதால், நான் அதை கையில் எடுத்துள்ளேன். அது ஒரு மிகப்பெரிய துறை. ஆனால் இத்துறையில் என்னால் ஒரு 2 சதவீதமாவது மாற்றம் வரவேண்டுமென நினைக்கிறேன். ரோபோடிக்ஸை விவசாயத்தில் முடிந்தளவிற்கு கொடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளேன்.

இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பிடித்த துறையில் ஈடுபடவேண்டும். ஆர்வம் இருக்க வேண்டும். ஏதெனும் ஒரு வேலையில் சம்பாதிப்பதோடு நின்று விடாமல், நாட்டிற்கு ஏதெனும் நல்லது செய்ய வேண்டும் என்று கூடுதலாக ஒரு லட்சியத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் இளைஞர்கள் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். குறிப்பாக 25 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் நம் நாட்டில் தான் மிக அதிகம். அவர்கள் அனைவரும் இது போன்ற உயர்ந்த லட்சியத்துடன் உழைத்தால், 10 வருடத்தில் அல்ல, மூன்றே வருடத்தில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.

உங்கள் பார்வையில் தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சியிலும் நம் நாடு எவ்வாறு உள்ளது?

இன்றுள்ள நிலைமையில், தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதற்கு பதில், தொழில்நுட்பத்தை உபயோகபடுத்துவதோடு மட்டும் இருந்து, அதற்கு அடிமையாகி உள்ளோம். தேவையில்லாமல் பொழுதுபோக்குகளில் நேரத்தை கணினிகளிலும், கைப்பேசிகளிலும் வீணாக்குகிறோம். சீனாவில் சில பகுதிகளில் வீட்டிற்கு வீடு ஆய்வுக்கூடம் உள்ளது, ஆனால் நம் நாட்டில் சில கல்லூரிகளில் கூட ஆய்வுக்கூடங்கள் இல்லை.

இதுவரை எத்தனை தொழில்நுட்பத்தை நாம் கண்டுபிடித்துள்ளோம்? எத்தனை IIT க்கள், எத்தனை NIT க்கள், எத்தனை பெரிய பெரிய பொறியியல் கல்லூரிகள் உள்ளன, எத்தனை வளங்களும், திறமைகளும் உள்ளன?! இருந்தாலும் எத்தனை காப்புரிமைகள் (PATENTS) வருடத்திற்கு இதுவரை வாங்குகியுள்ளோம்? அமேரிக்காவில் ஒரு வருடத்திற்கு சுமார் 1700 காப்புரிமைகள் வாங்குகிறார்கள், நாமோ சராசரியாக ஒன்று மட்டுமே வாங்கும் சூழ்நிலையில் உள்ளோம். அப்படியெனில் நாம் எத்தனை பின் தங்கியுள்ளோம்?

தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது சமுதாயத்தில் உள்ள மனிதர்களுக்கு உதவதானே தவிர, நாமே பொழுதுபோக்கிற்காக அவற்றை பயன்படுத்தி, நம் நேரத்தை வீணடிக்க அல்ல. கல்வி முறையை குறை கூறுவதை தவிர்த்து, நம்மால் முடிந்ததை நாம் அனைவரும் செய்ய வேண்டும்.

நம் சமுதாயத்திற்கு நீங்கள் கூற விரும்புவது?

பணத்தை தேடி மட்டும் வாழ்க்கை போக வேண்டுமென ஒரு சமுதாயம் நினைத்தால், வரும் காலங்களில் எதுவும் செய்ய முடியாது. பணமும் முக்கியம், அதனோடு கூடவே சமுதாயத்திற்கு ஏதெனும் செய்ய வேண்டுமென லட்சியமும் வேண்டும். அதற்கு நிறைய உழைத்தாக வேண்டும். தேசிய சிந்தனை வேண்டும்.

பல லட்சம் பொறியாளர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கும் காரணம் இது தான். நாம் புதிதாக எதுவும் கண்டுபிடிப்பது இல்லை. வெளிநாட்டினரின் காப்புரிமை உள்ள பொருள்களை லைசன்ஸுடன் விலைக் கொடுத்து வாங்குகிறோம், மொத்தமாக, கும்பலாக பயன்படுத்துகிறோம். வெளிநாட்டினரும் நம்மை வைத்து நன்றாக சம்பாதிக்கின்றனர்.

IIT போன்ற பெரிய கல்லூரிகளில் இருந்து சிறந்த தேர்ச்சி பெறும் பல மாணவர்கள் வெளிநாடு சென்று விடுகின்றனர். வெளிநாடுகளில் பணம் அதிகம் தருவதற்கு காரணம் என்ன? நம் மூளை தான் அவர்களுக்கு வேண்டுமே தவிர, நாம் அல்ல. பணம் தான் பெரியது என்று சில இளைஞர்களும் கிளம்பி விடுகின்றனர். பணம் சிறிது குறைவாக கிடைத்தாலும் பரவாயில்லை, என் திறமையை வளர்த்துவிட்ட என் நாட்டிற்கு தான் என் அறிவு பயன்பட வேண்டுமென நாம் சேவை செய்ய வேண்டும், அதை நம் சமுதாயம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் சந்திக்கும் மாணவர்களிடம் இவற்றை சொல்கிறீர்களா? அவர்கள் மனநிலை எவ்வாறு உள்ளது?

நிறைய பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்கிறேன். மதிப்பெண்களுக்காகவும், பணத்திற்காகவும் கடமைக்கென பிராஜக்ட் செய்வதும், படிப்பதுமாய் இருக்கும் சில மாணவர்களை பார்த்தால் வேதனையாய் உள்ளது. கிட்டத்தட்ட 250 கல்லூரிகளுக்கு இதுவரை சென்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது அனுபவத்தை பகிர்ந்துள்ளேன்.

எனக்கும் கூட வெளிநாடுகளில் வேலை செய்யும் வாய்ப்புகள் சில வருகின்றன. நான் அதற்கு செல்ல விரும்பவில்லை. லட்சியத்திற்காக இங்கே இருக்க விரும்புகிறேன். சம்பாதிக்கலாம், ஆனால் சந்தோஷமாக இருக்க முடியுமா? என் நாட்டில், என் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறேன். நம் வாழ்க்கை நமக்கு பிடித்தார்போல் தான் இருக்க வேண்டும். பணத்திற்காக இந்த மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் இழக்க நான் விரும்பவில்லை. ஆத்ம திருப்தி வேண்டும், அது மக்களுக்காக பணி செய்யும்போது தான் நிறைய கிடைக்கிறது. அதுவே போதும், வாய்ப்பளித்தமைக்கு நன்றி..

Likes(23)Dislikes(0)
Share
Share
Share