Aug 142016
 

dipa

தீபா கர்மாக்கர்! தற்போது பிரேசிலில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் Produnova Vault ஜிம்னாஸ்டிக் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்று, இதுவரை எந்த இந்திய பெண்ணும் செய்யாத சாதனையை புரிந்துள்ளார். இதுவரை உலகில் இந்த சாதனையை செய்த ஐந்தாவது பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

கரணம் தப்பினால் மரணம் என்பதை மெய்பிக்கும் வகையில் உள்ள இந்த Produnova Vault ஜிம்னாஸ்டிக் போட்டிகளில், சென்ற சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் வீரர் சமீரி அயிட் காலை இழந்த துயர சம்பவமும் நடந்தது.

இத்தகைய வீர விளையாட்டில், மிக வேகமாக ஓடிவந்து ஜிம்னாஸ்டிக் பலகையின் மீது இரு கைகளால் உந்தி, உயரே பறந்து, காற்றிலே இரு குட்டிக்கரணம் அடித்து லாவகமாக தரையில் இறங்கி, தீபா கர்மாக்கர் வெற்றிகரமாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்றதைக் கண்டு இந்தியாவே சிலிர்த்தது. ஒட்டுமொத்த இந்தியர்களின் பார்வையும், வேண்டுதலும் இவர் நம் நாட்டிற்காக ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என எதிர்பார்த்து ஏங்கியுள்ளது.

இறுதிப் போட்டி வரும் பதினான்காம் தேதி நடைபெற இருப்பினும், மக்கள் மனதில் இவர் ஏற்கனவே ஒரு சாதனையாளராக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை ஒரு மதமாகவே பார்க்கும் நம் நாட்டில் ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டிற்குத் தேவையான கட்டமைப்பு இன்றளவும் பெரிதாக இல்லை என்றே கூற வேண்டும். அப்படி இருக்கையில் பதினேழு வருடங்களுக்கு முன் எந்த வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் இந்த விளையாட்டுகளில் நுழைந்துள்ள தீபாவின் வரலாறு, இந்தியாவில் இனி வரவிருக்கும் பல ஜிம்னாஸ்டிக் வீரர்களுக்கு முன்னோடியாக இருக்கும்.

தீபாவிற்கு அப்போது ஆறு வயது. ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ஆர்வம் வந்து தனது தந்தையுடன் அந்த விளையாட்டுகளில் சேர செல்கையில், ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கு தேவையான பாத அமைப்பு சரியாக இல்லை என நிராகரிக்கப்படுகிறார்.

அடுத்த சவால் அவர் பிறந்து வளர்ந்த மாநிலம். எந்த மெட்ரோ நகரிலோ, பெருநகரிலோ தனது பயணத்தை அவர் தொடங்கவில்லை. பொதுவாகவே பல இந்தியர்களாலும் மீடியாக்களாலும் அதிகம் கண்டுகொள்ளப்படாத வடகிழக்கு மாகாணங்களில் ஒன்றான திரிபுராவில் இருந்து வந்தவர்.

பதினேழு வருட போராட்டங்களுக்கு, அயராமல் உழைத்ததற்கு கிடைத்துள்ளது இந்த வெற்றியும் அங்கீகாரமும். அவர் கடந்து வந்த பாதைகளையும் சவால்களையும் வைத்து பாலிவுட்டில் கூடிய விரைவில் அவரது வாழ்க்கை திரைப்படமாக மாறும் என எதிர்பார்க்கலாம்.

தீபாவின் சாதனைகளை ஒரு புறம் இவ்வாறு அடுக்கி பெருமை படுகையில், ஷோபா டே என்ற எழுத்தாளர், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் ஏதும் இதுவரை எடுக்காததை சுட்டிக்காட்டி மிக ஏளனமாக, ட்விட்டரில் ஒரு பதிவை செய்துள்ளார். “பிரேசில் செல்ல வேண்டும், செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும், பதக்கம் பெறாது வெறும் கையுடன் நாடு திரும்ப வேண்டும், இதுதான் இந்திய வீரர்களின் நோக்கம் என்றும் வாய்ப்புகளும் பணமும் இவர்களால் வீணாகி விட்டது” என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம், இவரது ஆதரவாளர்கள் சிலர் இவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், இந்த கருத்துக்கள் பெருவாரியான இந்தியர்களின் கோபத்தை கிளறியுள்ளது என்றே கூற வேண்டும். இவருக்கு எதிராக அதிகமான பின்னூட்டங்கள் சமூக தளங்களில் பதிவாகி வருகின்றன.

குட்டி குட்டி நாடுகள், மக்கள் தொகை குறைந்த நாடுகள், ஏழை நாடுகள் என பல நாடுகள் பதக்கங்களை வாங்க, இத்தனை பெரிய தேசம், 120 கோடி மக்கள் தொகை, பல வசதிகள் இருந்தும், நம் தேசம் பதக்கங்களை வாங்காதது, பல இந்தியர்களின் மனதில் ஏக்கத்தை உருவாக்கி இருக்கும் இந்நேரத்தில், ஷோபா டேவின் இந்த கருத்து மக்களின் கோபத்தை மேலும் வரவழைத்துள்ளது.

ஷோபா டே, நம் நாடு பதக்கம் வாங்கவில்லையே என்ற ஆதங்கத்தில் கூட அந்தப் பதிவை போட்டிருக்கலாம். ஆனால் அவர் வீரர்களை குறை கூறுவது சரிதானா என்று யோசிக்க வேண்டும். ஏன் நம்மால் பதக்கங்கள் மற்ற நாடுகள் போல் வாங்க முடியவில்லை என்ற கேள்வியின் மூலக்காரனத்தை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது தானே சரியாக இருக்கும்?

பதக்கங்கள் வாங்குவது வீரர்களின் பொறுப்பு மட்டுமே என இருந்துவிடாமல், இதை ஒட்டு மொத்த சமுதாய பொறுப்பாகத் தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இதற்கு சில காரணங்களை அலசுவோம்.

முதலில் இந்தியா போன்ற தேசத்தில் விளையாட்டு துறைகளுக்கு அத்தனை முக்கியத்துவமும் மதிப்பும் கிடைப்பதில்லை என்பதை நாம் உணர வேண்டும். கிரிக்கெட் விளையாட்டைத் தவிர மற்ற விளையாட்டுத் துறைகளை ஒருவர் தேர்ந்தேடுக்கிறார் என்றால் அவரது வாழ்க்கையையே பணயமாக வைக்கிறார் என்றாகிறது.

அடுத்து விளையாட்டுத் துறைகளுக்கு இங்குள்ள கட்டமைப்பு. பல நாடுகளில் உள்ளது போல் advanced பயிற்சி முறையும் நம் நாட்டில் இல்லை. விளையாட்டிற்குத் தேவையான Sponsors கிடைப்பதும் அத்தனை எளிதல்ல.

மேலும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள், தங்களது நண்பர்கள் ஏதாவது வேலைக்குச் சென்று சம்பாதித்துக் கொண்டிருக்கையில், குடும்ப மற்றும் சமூக அழுத்தங்களைத் தாண்டியும், தங்களது பயிற்சிக்காக மேலும் பணமும் நேரமும் முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.

அடுத்த முக்கிய காரணம் பள்ளிகள். பல பள்ளிகளில் விளையாட்டிற்கு என ஒதுக்கப்படும் நேரங்கள் மிக மிக குறைவு. மொத்தமாக வாரத்திற்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஒதுக்கி, அந்த ஒரு மணி நேரமும் மாணவர்களை விளையாட விடாமல் ஏதாவது ஸ்பெஷல் கிளாஸ் வைத்து விடுகின்றன பல பள்ளிகள்.

அதேபோல் நமது சமூகத்தின் வாழ்க்கை முறை. இங்கு மதிப்பெண்கள், நிரந்தர வேலை, இந்த வயதில் இத்தனை வருமானம், இந்த வயதில் திருமணம் என்ற Stereo Life-style இருப்பது. இதையெல்லாம் மீறி ஒருவர் சற்று வித்தியாசமாக யோசித்து விட்டால், சமூகத்தில் அவருக்கு தரப்படும் மன அழுத்தம் மிக அதிகம்.

விளையாட்டு வீரர்களின் தேர்வுகளில் நடக்கும் அரசியல், பொருளாதார பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்த பயத்தினால் பல பெற்றோர்கள் தங்களது மகள்களை இதுபோல் போட்டிகளுக்கு அனுப்பாமல் இருப்பது என்று பல பிரச்சினைகள், சவால்கள் நம் நாட்டில் உள்ளது.

இவை அத்தனையும் தாண்டி ஒருவர் பதக்கம் வெல்வது என்பது அத்தனை சுலபம் அல்ல. அதனால் தான் இங்கு ஒரு வெண்கல பதக்கம் வாங்கினால் கூட மீடியாக்கள் உட்பட ஒட்டுமொத்த தேசமே, சாதித்தவர்களை தலையில் வைத்துக் கொண்டாடுகிறது.

ஆனால் அது மட்டும் போதாது. சாதிக்க துடிக்கும் திறமையுள்ள அனைவரையும் ஆரம்பத்திலிருந்தே பொருளாதார மற்றும் உளவியல் ரீதியில் முடிந்த வகையில் ஊக்குவிக்கும் சமுதாயமாக நாம் மாறவேண்டும். அவ்வாறு இல்லையெனில் இழப்பு நமக்குதான்.

இதற்கு நம் எல்லோருக்கும் தெரிந்த இன்னொரு உதாரணத்தை காண்போம். 13வயதில் இங்கிலீஷ் கால்வாய் மற்றும் உலகின் பெரும் 5 கால்வாய்களை நீந்தி உலக சாதனை படைத்தவர் அவர். அவரின் திறமையை பார்த்த இத்தாலி, தன் நாட்டிற்கு தத்தெடுக்க விரும்பியது. ஆனால் அந்த சிறு வயதிலும் யாரிடமும் கேட்காமல் எனக்கு இந்தியாதான் உயிர், என்று காசுக்காக விலை போகாமல் இங்கே இருந்து விடுகிறார். அதையே அவர் பெற்றோரும் ஆமோதித்தனர். அவர் குற்றாலீஸ்வரன்.

ஆனால் அடுத்த சில மாதங்களில், பல போட்டிகளில் கலந்துக்கொள்ள தேவையான sponsorship தராமல், நம் சமூகம் அவரை மெதுவாக கை கழுவி விட ஆரம்பித்தன.

சாதனை நடந்தவுடன் பேசியவர்கள், ஊக்கமளித்தவர்கள், அரசு, அரசியவாதிகள், நமது சிஸ்டம் எல்லாம் அவரை மெதுவாக கை கழுவி விட ஆரம்பித்தன.

ஒரு long distance ஸ்விம்மிங் போட்டியில் உலக அளவில் கலந்து கொள்ள பணம் தேவை. முதலில் அரசாங்கத்தை நாடினார். இங்கே அங்கே என்று அழைக்கழித்தார்கள். அடுத்து பிரைவேட் நிறுவனங்களை நாடினார். கடலில் நீந்தும் போது கூட்டம் வராது என்று கிரிக்கட் பக்கம் திரும்பி கொண்டார்கள்.

அவர் அப்பாவே தன் சேமிப்பில் இருந்து செலவு செய்து போட்டிக்கு அனுப்பினார்.
ஜெயித்தால் கைதட்டுவார்கள். ஆனால் அவரின் அடுத்த போட்டிக்கு partial sponsorship கூட கிடைக்காமல் அவதிபட்டார். தனக்காக தான் தந்தை ஒவ்வொரு இடமாக sponsorship தேடி அலைவது பொறுக்காமல் தன் ஸ்கூல் பென்சிலில் swimming என்று எழுதி பின்னால் Full-stop ஒன்றை கண்ணீரில் வைத்தார்.

வருடங்கள் ஓடின. குற்றாலீஸ்வரன் கடலில் நீந்திக்கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணி, அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து, சாப்ட்வேர் என்ஜினீயராக இப்போது கலிபோர்னியாவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

இன்று அவர் ஒலிம்பிக் நீச்சல் போட்டியை பார்க்கும் போது எப்படி அவரின் மனது என்னவெல்லாம் நினைத்து பார்க்கும்? எப்படி வலிக்கும்?

நம் நாட்டை விட்டு வெளியே வந்தவர்களில் பல குற்றாலீஸ்வரன்கள் இருக்கிறார்கள். சாதனை படைத்த, படைக்க இருந்த பலரை இன்று நம் நாடு இழந்து இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் இப்படி பல குற்றாலீஸ்வரன்களை நாம் உருவாக்கியது தான் இந்த நூற்றாண்டின் நமது மிகப் பெரிய இழப்பு. (Kutraleeswaran Story Courtesy: Social Media)

இப்போது சொல்லுங்கள், நாம் யாரை குறை கூறுவது? வீரர்களையா அல்லது நம் சமூகத்தையா?

ஒன்று திறமையுள்ள அனைவரையும் ஆரம்பத்திலிருந்தே பொருளாதார மற்றும் உளவியல் ரீதியில் முடிந்த வகையில் ஊக்குவிக்கும் சமுதாயமாக நாம் மாறவேண்டும். அதெல்லாம் கடினம் என்றால், குறைந்தபட்சம் குறை கூறாமல் இருக்கும் மனநிலையாவது வேண்டும்.

நம் நாட்டில் குறை சொல்லும் ஆயிரம் ஷோபா டேக்கள் கிடைக்கலாம். தீபா கர்மாக்கரோ, குற்றாலீஸ்வரனோ கிடைப்பது என்பது அரிது. அத்தகைய திறமைகளை அங்கீகாரிக்காது, பதக்கத்தை மற்றும் எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

நாளை நாட்டின் எழுபதாவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நாம், இனியாவது நம் மனதில் உள்ள குறை கூறும் போக்கை விடுத்து, திறமையானவர்களை அங்கீகாரிக்க தொடங்குவோம்.

சாதனையாளர்களை ஊக்குவித்து, உருவாக்கி கொண்டாடுவோம்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(2)Dislikes(0)
Share
Share
Share