Mar 142014
 

இந்த மாதம் சாதனையாளர்கள் பக்கத்தில், ஒரு வித்தியாசமான மனிதரைப் பற்றிக் காண்போம். அவர் வீட்டருகில் பேசிக் கொண்டிருந்த ஒரு  கூட்டத்தினரிடம், ஓய்வுப் பெற்ற எஸ்.பி.மாணிக்கம் வீடு எது என விசாரக்கையில்,  “பச்சைத்தண்ணீ மாணிக்கமா, அதோ அந்த வீடுதான்” எனக் கூறினர். வித்தியாசமான இந்த அடைமொழியைக் கேட்டவுடன் ஆர்வமும் ஆச்சரியமும் பிறந்தது. அவர்களிடமே ஐயத்தைக் கூறியவுடன், அந்த மக்களிடம் வந்த பதில்  இன்னும் வியப்பில் ஆழ்த்தியது.

இவரது தனித்துவமே இது தான், மிகப் பெரிய அதிகாரியாக இருந்தும், தனக்கென்ற ஒரு பெரிய செல்வாக்கு இருந்தும், அதிகாரத்தை என்றுமே துஷ்பிரயோகம் செய்யாது, ஊழல் என்ற பேச்சுக்கே இடமளிக்காமல், “க்ளீன் ஹேண்டுடன் (Clean Hand)” சர்வீசிலிருந்து ஓய்வுப் பெற்றவர். பச்சைத் தண்ணீர் கூட தன்னை நாடி வருபவர்களிடமோ, சந்திக்கும் கேசுகளில் (CASES) ஈடுப்பட்டு இருப்பவரிடமோ பெற்றுக்கொள்ளாமல், இந்த அடைமொழியை மட்டும் பெற்றுக் கொண்டவர். பல  சாதனைகளுக்கு சொந்தமான திரு.மாணிக்கம் அவர்களிடம் பேசியவற்றிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

B+: வணக்கம் சார். காவல் துறைக்கு எவ்வாறு வந்தீர்கள்? அந்தப் பயணத்தைப் பற்றி?

மாணிக்கம்: அது ஒருப் பெரியப் பயணம். பள்ளிப் பருவத்தில் என்.சி.சி (NCC) யில், முழு ஈடுபாட்டுடன் இருந்து, என்.சி.சி. கேம்ப், சமூக சேவை கேம்ப் என பலவற்றில் ஈடுபட்டிருந்தேன். அதுவே எனக்குக் காக்கிச்சட்டை மீது ஒருப் பெரிய விருப்பத்தைக் ஏற்படுத்தியது. பிறந்தது, 1941 இல், பரமக்குடி பக்கத்தில் உள்ள வளநாடு என்ற ஒரு கிராமம். படித்தது ராமனாதபுரத்தில் உள்ள சுவார்ட்ஸ் பள்ளி. பின் அமெரிக்கன் கல்லூரியில் பீயூசியும், மதுரை மெஜிராக் கல்லூரியில் பீ.எ. வும் படித்தேன்.

              படிப்பு முடித்தவுடனே, முதல் வேலை உசிலம்பட்டியில் முதியோர்களுக்கான வருவாய்த்துறையில் உதவியாளர் பணி. பின், குருப்-4, சர்வீஸ் கமிஷன் எழுதியதில் கிருஷ்ணகிரியில் ஒரு சிறிய பணி, இவ்வாரெல்லாம் தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கோ, மிலிட்டரி அல்லது காவல் துறையில் தான் ஈடுபாடு இருந்தது. அதிருஷ்டவசமாக, கல்லூரியின் இறுதி ஆண்டில் எஸ்.ஐ வேலைக்கு விண்ணப்பித்திருந்தது கைக்கொடுத்தது. வெல்லூரில் எஸ்.ஐ பயிற்சிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அது 1962 ஆம் வருடம். அந்த வருடம் தான் முதன் முதலில் உடல் ரீதியான மிகக் கடினமான பயிற்சி அறிமுகப் படுத்தப்பட்டது. கயிறு ஏறுதல், தவ்விக்கொண்டே செல்லுதல் போன்ற ஆறு விதமான கடுமையான சவால் இருக்கும். கல்லூரியில் ஓட்டப்பந்தையம், கால்பந்து என பல விளையாட்டுத் துறையில் பரிசுகளை வென்று இருந்ததினால், இந்த ஆறு பயிற்சியிலும் நல்லபடியாக தேர்ச்சிப் பெற முடிந்தது. பின்னர், கண்ணியாக்குமரியில் உள்ள வடசேரி காவல் நிலையத்தில் போஸ்டிங் கிடைத்தது.

B+: காவல் துறையில் ஆரம்பக்கால அனுபவம் எப்படி இருந்தது?

மாணிக்கம்:  பயிற்சிக்காலத்தில் (Probation period) இருக்கும் போதே, நேர்மை, காலம் தவறாமை, ஒழுக்கம், மேல் அதிகாரிகளுக்கு கீழ்படிதல் இவற்றை திரு. கந்தசாமி (எஸ்.ஐ) அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். கேஸ் எழுதுவதிலிருந்து, குற்றவாளிகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பது வரையிலானப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தவர்.

பின், பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு என்னை அனுப்பினார்கள். அரிசிக்கடத்தல், சட்ட விரோதச் செயல் என்று  அங்கு நிறைய குற்றங்கள் நடந்துக் கொண்டிருந்த சமயம். களத்தில் இறங்கிக் கடுமையாக வேலை செய்ததில், குற்றங்கள் குறைந்து, மக்களிடம் நல்ல பெயர் கிடைக்க ஆரம்பித்தது.

B+: போலிஸ் தொழிலில் சுவாரசியமான சம்பவங்கள் ஏதேனும் சிலவற்றைக் கூறுங்கள்.

மாணிக்கம்: அப்போது ஒரு அருமையான நிகழ்வு. பக்கத்து கிராமத்தில் அடிக்கடி திருட்டு நடந்தது. மக்கள் என்னை அணுகி உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளவே நானும் அங்கு சென்றேன். சந்தேகிக்கும் அனைவரையும் அழைத்து கேஸ் ஏதும் போடாமல், கடினமான முறைகளைப் பயன்படுத்தாமலேயே, நிறைய நல்ல விஷயங்களைப் எடுத்துக் கூறினேன். நான் விரும்பி அணிந்த காக்கிச்சட்டை மரியாதை தரும் விதமாகவும், என் நேர்மைக்கு கிடைத்த பரிசாகவும், மக்கள் என் பேச்சைக் கேட்கவும், குற்றங்கள் குறைந்தன.

            பின் நாகர்கோயில் ட்ராஃபிக்கில் ஆறு மாதம் பணியாற்றும் போது, நாற்பது பேர் கொண்ட ஒரு பெரியக் கூட்டம் என்னைத் தேடி வந்து மாமுல் கொடுப்பதற்கு காத்துக்கிடந்தது. அலுவலகத்தின் இருக்கதவுகளையும் மூடிவிட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி திரு.கோபாலகிருஷ்னனுக்கு ஃபோன் போட்டு, வரவழைத்து, அனைவரையும் கைது செய்தோம். பயிற்சிக்காலத்தில், லஞ்ச ஒழிப்பில், சாதனை செய்த முதல் எஸ்.ஐ. நானாகத் தான் இருப்பேன். இது நேர்மை விரும்பும் பலரிடம், மிகப் பெரிய வரவேற்ப்பைப் பெற்றுத் தந்தது. மற்றவர்களுக்கு என் மீது கோபம் வரவே, என்னை சட்ட ஒழுங்குத் துறைக்கு (LAW & ORDER) மாற்றினர்.

            சட்ட ஒழுங்கில் ஒரு இரவு ரோந்து போகும்  வேளையில், ஒருவன் நடந்து சென்றது, சற்று வித்தியாசமாக இருக்கவே, அவனை ரகசியமாக பின்தொடர்ந்து,  அவனைப் பிடித்தபோது, அவன் நிறைய தங்க பிஸ்கட்கள் கடத்துவது தெரியவந்தது. அவனைப் பிடித்துக் கொடுத்ததுப் போன்ற பல கேசுகளை வெற்றிகரமாக முடித்தேன். பின்னர் 1966 முதல் 1972 ஆம் ஆண்டு வரை சீபிசீஐடி யில் எஸ்.ஐ ஆக சென்னைக்கு மாற்றப்பட்டேன். கஞ்சாக் கடத்தல், சிலைத்திருட்டு, கடையநல்லூர் கூட்டுறவு சங்கம் போன்ற பல கேசுகளை வெற்றிகரமாக முடித்தேன்.

                  பயிற்சிக் கல்லூரியில், அதற்குப்பின் இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வுப் பெற்று பல கான்ஸ்டபில்கள், எஸ்.ஐ கள், டீ.எஸ்.பி களுக்கு மூன்று வருடம் பயிற்சி ஆசிரியராக இருந்தேன் . பின்னர் மூன்று வருடம் ரயில்வே போலிஸாகப் பணியாற்றி பல ரயில்வேக் கடத்தல்களைத் தடுத்திருக்கிறேன். அதற்கு பின் சிட்டி போலிஸுக்கு (CITY POLICE) எனக்கு பணிமாற்றம் வந்தது. அங்கும், சிறப்பாகப் பணியாற்றி சட்டக் கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் நடந்த போராட்டங்களையும், கலாட்டாக்களையும் நிறுத்தினேன்.

                  1988 ஆம் ஆண்டு ஏ.சி யாக பணி உயர்வில் சைதாப்பேட்டை வந்தேன். பின் 1991 ஆம் ஆண்டு வரை திருவள்ளிக்கேனியில் எனக்கு மாற்றம். அங்கு தான் மிகக் கடினமான நேரம். பலப் பிரச்சினைகளையும், போராட்டங்களையும் அமைதியான மனதோடு அணுகி வெற்றிப்பெற்றது, பெரியப் பெயரை வாங்கித் தந்தது. பின் வன்னாரப்பேட்டையில் ஒரு திருடனைத் திருத்தினேன். விமான நிலையம், மவுண்ட் சீபிசீஐடி, திண்டுக்கலில் ஏ.டி.எஸ்.பி, மதுரை டிராஃபிக்கில் டீ.சி. யாக இருந்து கடைசியாக திண்டுக்கலில் எஸ்.பி யாக 1999 ஆம் ஆண்டில் ஓய்வுப் பெற்றேன்.

B+: இத்தனை பிஸியாக இருந்த வாழ்க்கை, ஓய்விற்குப் பின் எவ்வாறு இருக்கிறது?

மாணிக்கம்: ரிட்டையரானப் பிறகு, ஓய்வெடுக்க விருப்பமில்லை.  நிறைய மக்களுக்கு உதவிகளைச் செய்கிறேன். நிறையப் படித்து பல டிகிரிகளும், டிப்ளமோகளும் பெற்றுள்ளேன். அனைத்து அனுபவங்களையும், பயின்ற கல்விகளையும், பாடங்களையும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென்று, 2007 இல், அனைத்து மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறேன். www.ammkindia.org  என்ற இணையத் தளத்தில் நீங்கள் அதன் விவரங்களைக் காணலாம்.

B+: உங்கள் வாழ்க்கையில் லஞ்சம் பெறாமல் எவ்வாறு இருந்தீர்கள்?

மாணிக்கம்: இன்னொருவரிடம் கையேந்துவது என்ற எண்ணமே வரக்கூடாது. எனக்கும் அது வராமல் இருந்ததற்கு, எனது குடும்பப் பின்னணித் தான் முதல் காரணம், வருமானத்திற்கு ஏற்ற மாதிரி வாழக் கற்றுக் கொண்டு செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாய் வாழப் பழகினேன். மனசாட்சிக்கு பயந்து நேர்மையைக் கடைசி வரைக் கடைப்பிடித்தேன். வீட்டிலிருந்தே, சாப்பாடு, தண்ணீர் என அனைத்தையும் கொண்டு வந்து விடுவேன். யாரிடமும் பச்சைத் தண்ணீர்க் கூட இலவசமாக வாங்கிக் குடிக்காமல் இருந்தக் காரணத்தினால் “பச்சைத் தண்ணீர் மாணிக்கம்” என்றப் பெயர் பெற்றேன்.

B+: இந்த வயதிலும் உங்கள் சக்தியின் ரகசியம் என்ன?

மாணிக்கம்: எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு டீடோட்டலர் (teetotaler) நான்.     முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு, எப்போதும் மூளையை பிஸியாக வைத்துக்கொள்ளுதல், யோகா, சமூக நிகழ்ச்சிகள் எனப் பலவற்றைக் கூறலாம்.

B+: நேர்மையான போலிஸாக வரவிரும்பும் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது..

மாணிக்கம்: போராடத் தயாராக இருந்தால் முடியும். என்னை எத்தனையோ பேர் மிரட்டினார்கள், ட்ரான்ஸ்ஃப்ர் கொடுத்தனர். நானாக இது வரை ஒரு ட்ரான்ஸ்ஃப்ர் கூடக் கேட்டதில்லை. மடியில் கனம் இல்லை அதனால், எனக்கு வழியில் பயம் இருந்ததில்லை.  அவ்வாறு வர நினைக்கும் இளைஞர்களுக்கு சவால்களை எதிர்த்து போராடும் தைரியம் வேண்டும். அவர்களுக்கு பல்வேறு திறமைகள் வேண்டும். அவற்றை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்மையும், ஒழுக்கமும் இருக்க வேண்டும். நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் நம் நாட்டிற்கும், காவல் துறைக்கும் இன்று தேவை.

Likes(3)Dislikes(0)
Share
Share
Share