Jun 142015
 

6

ஓரு ஊரில் பலூன் வியாபாரி வாழ்ந்து வந்தான். அவனிடம் பல வண்ணங்களில் பலூன்கள் கிடைக்கும். வியாபாரம் சரியாக நடக்காத தருணங்களில், ஹீலியம் வாயு நிரப்ப பட்ட ஒரு பலூனை காற்றிலே பறக்க விடுவான். அப்போது அதைப் பார்த்து  சிறுவர்கள் பலரும் தங்களுக்கு ஒரு பலூன் வேண்டும் என்று கேட்டு வாங்கி செல்வார்கள். ஒவ்வொரு முறையும் வியாபாரம் மந்தமாகும் பொழுதும் இந்த யுக்தியை பயன்படுத்து வியாபாரத்தை பெருக்குவது அவன் வாடிக்கை.

ஒரு முறை காற்றில் ஹீலியம் பலூனை பறக்க விடும் பொழுது, யாரோ அவன் சட்டையை பிடித்து இழுப்பது தெரிந்தது. திரும்பி பார்த்தால் ஒரு சிறுவன் அவனையும் அவனது பலூன்களையும் பார்த்துக்கொண்டிருந்தான். “பலூன் வேணுமா தம்பி” என்று அவன் கேட்டதற்கு அச்சிறுவன், “எனக்கு பலூன் வேணாம், ஒரு பதில் வேணும்” என்று கூறினான்.

“நீங்க அப்பப்போ ஒரு பலூன காத்துல பறக்க விடுறீங்க, அது கருப்பு பலூனாக இருந்தாலும் பறக்குமா?”

“பறக்கும் பா”

“சிகப்பு பலூனாக இருந்தாலும் பறக்குமா?”

“பறக்கும் பா”

“உருண்டையான பலூனாக இருந்தாலும் பறக்குமா?”

சிறுவனின் சாதாரன பேச்சில் அவனுக்கு தெரியாமலேயே அவன் கேட்கும் கருத்தின் ஆழத்தை புரிந்த வியாபாரி, அச்சிறுவனின் தோள் மீது கைவைத்து,

“பலூன் சிகப்போ, கருப்போ, நீளமோ வட்டமோ, அதன் தோற்றம் அது பறக்கும் உயரத்தை தீர்மானிப்பதில்லை. உள்ளே அடைக்கப் பட்டிருக்கும் வாயுதான் முடிவு செய்கிறது. மேலே பறப்பதற்கு அந்த பலூன் ஓட்டை இல்லாமல் இருந்தால் போதும்” என்று கூறி அவனுக்கு ஒரு பலூனை  கையில் கொடுத்தார்.

வியாபாரி சொன்னது போல நாம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கு, வெளித்தோற்றங்கள் எந்த விதத்திலும் காரணம் ஆகாது. நம் உடலை விட்டு நம்பிக்கையும் உயிரும் பிறியாதவரை நாம் உயர்வதற்கு உள்ளே ஒளிந்திருக்கும் திறமையை பயன்படுத்தி வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.

– ரக்‌ஷன்

Likes(10)Dislikes(0)
Share
Apr 142015
 

6

மாதவன் மாடு மேய்க்கும் ஒரு சிறுவன். அவனுக்கு வினோதமான ஒரு ஆசை இருந்தது. ஒரு மாட்டை தூக்கிக் கொண்டு ஓட வேண்டும் என்பதே அது. இந்த ஆசைக்கு காரணம் அவன் ஊர் பெரியவர் பெரியசாமி தான். அவர் தினமும் தன் கொட்டகையில் உள்ள மாடுகளில் ஏதேனும் ஒன்றையாவது தூக்கிக் கொண்டு நடப்பார்.

மாதவனும் தினமும் அவன் மாடுகளை தூக்க முயற்சித்து கை கால்களில் காயம் பெற்றதே மிச்சம்.

அவன் பெரியசாமி இடமே சென்று இதற்கான தீர்வை கேட்டான்.

அதற்கு அவர் “தம்பி, நான் என் மாடுகளை நேற்று முடிவு செய்து இன்று தூக்கி விடுவதில்லை, அவை கன்றுகளாக இருக்கும் பருவத்திலிருந்தே அவற்றை தூக்கிக் கொண்டு செல்வேன். அவைகள் வளர்ந்தாலும் எனக்கு பாரமாக இருப்பதில்லை. நீயும் இந்த யுக்தியை முயற்சித்து பார்” என்று கூறினார்.

நம்மில் பலரும் மாதவனைப் போல் தான் இருக்கிறோம்.

முதல் அடியிலேயே பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என பலரும் நினைக்கிறோம். அதற்கான பலம் நம்மிடம் இருக்கிறதா என்று முதலில் நாம் சிந்திப்பது அவசியம்.

திறன் இல்லையெனில், அவைகளை வளர்துதுக் கொள்ள சின்ன செயலிலிருந்து தொடங்கி படிப்படியாக பெரிய செயலுக்கு செல்வது அவசியம்.

– ரக்‌ஷன்

 

Likes(4)Dislikes(0)
Share
Feb 142015
 

7 Kids

மாதவன் தன் வீட்டு முற்றத்தில் தொலைக்காட்சியை பார்த்தவாரே இறுக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தான். வடிவேலு தான் அடிவாங்கி பார்ப்பவர்களை சிரிக்க வைக்க முயற்சித்து கொண்டு இருந்தார். ஆனால் பயனில்லை. அலுவலக வேலை சுமை மாதவனை பயமுறித்தி கொண்டு இருந்தது. ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருப்பவன் மாதவன். நல்ல சம்பளம். பொறுப்புகள் அதிகம் உள்ள வேலை, போட்டியும் தான். கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வுக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் மாதவன், எப்போதும்விட கொஞ்சம் அதிகமாகவே உழைத்து கொண்டு இருந்தான். நாளை பதவி உயர்வு பற்றி தெரிய வரும்.

இந்த முறையாவது பதவி உயர்வு கிடைக்குமா? இல்லை என்றால் நான் என் சக ஊழியர்கள் முன் எப்படி நிற்பேன்? நான் என்ன அவ்வளவு முட்டாளா? ஒரே பதவியில், சம்பளத்தில் எப்படி 3 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பது? இந்த சமூகம் என்னை திறமையற்றவன் என்று தூற்றாதா? சம்பளம் கூடவில்லை என்றால் எப்படி வீட்டை மாற்றி கட்டுவது? மகனின் கல்வி என்ன ஆகும்’. இப்படி பல்வேறு உள்ள குமுறல்கள் அவனை வதைத்துக் கொண்டு இருந்தது.

மகன் செல்வன் தரையில் உட்கார்ந்து கொண்டு தமிழ் வார்த்தைகளை எழுத பழகி கொண்டு இருந்தான். தான் மகனை பார்த்துவாரே யோசனையில் ஆழ்ந்து இருந்தான் மாதவன்.

“அப்பா” என்ற மகனின் அழைப்பு அவனை நிகழ் காலத்துக்கு அழைத்து வந்தது.

“என்ன டா கண்ணு”, என்றான்

“கானல் நீர். அப்படினா என்ன பா” என்றான் செல்வன்.

“கானல் நீர் னா, ஒரு விஷயம் தூரத்துல இருக்கற மாதிரி இருக்கும் ஆனா உற்று பார்த்தால் இருக்காது”, என்றான் மாதவன்.

“அது எப்படிப்பா?”, என்று கேட்டான் செல்வன் ஆச்சரியமாக.

“தூரத்துல பார்த்த நிறைய தன்னி இருக்கற மாதிரியே இருக்கும். ஆனா கிட்ட போய் பார்த்த ஒண்ணுமே இருக்காது. ரொம்ப வெய்யிலா இருந்த ரோட்ல போறப்போ அப்படி ஆகும்”, என்று விவரித்த்தான் மாதவன்.

“அப்போ அன்னைக்கு நீங்க பயப்படாதே. பயம்னு ஒன்னு இல்லவே இல்ல. தைரியமா இருன்னு சொன்னினீங்களே. அப்போ பயமும் கானல் நீரா அப்பா?”, என்று கேட்டான் குழந்தைக்கே உள்ள வெகுளித்தனத்துடன்.

“ஆமாம் டா கண்ணு”, என்று வாரி அணைததான் மாதவன்.

ஆம் பயம் என்பதும் கானல் நீர் தானே? அவன் கையில் இப்போது என்ன உள்ளது? வருடம் முழுவதும் உழைத்து ஆகி விட்டது. உழைப்புக்கு பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை தவிர இப்பொழுது அவன் செய்ய வேண்டியது ஒன்னும் இல்ல. எதற்கு வீண் கவலை. ஒரு சிறு குழந்தை இதை அவனுக்கு ஒரு நொடியில் உணர்த்தியது. பயம் என்ற கானல் நீர் விலகியது. புதிய தெம்புடன் எழுந்தான். சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டு இருந்த மனைவியிடம் சென்று ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டான். அவள் வேண்டாமென்றாள். மறுபடியும் TV முன்னால் வந்து அமர்தான். வடிவேலு அடிவாங்கவில்லை. ஆனால் ஜெயித்து விட்டார். வீட்டை சிரிப்பு சத்தம் சூழ்ந்து கொண்டது!

– ஸ்ரீவாநி

Likes(2)Dislikes(0)
Share
Sep 172014
 

king-4

வழக்கமாக எல்லா கதையிலும் வருகிற மாதிரி, இந்த கதையிலேயும் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு யார் அதிக பங்களிப்பு செய்திருக்கின்றனர் என்பது தான் அந்த சந்தேகம். உடனே அவர் தன் சந்தேகத்தை தன் அமைச்சர்களிடம் கேட்டு, ஒரு வாரம் கழித்து வந்து பதில் தர சொன்னார்.

ஒரு வாரம் கழித்து அனைவரும் தங்களது பதிலைக் கூறினர்.

ஒரு அமைச்சர் “நமது தளபதி தான் சிறந்தவர்” என்றார்.

மற்றொருவார், “இல்லை! அனைவரின் உடல் நலமாய் இருந்தால் தானே எல்லா பணிகளையும் செய்யமுடியும். அதனால் நம்ம நாட்டு மருத்துவர் தான் சிறந்த பங்களிப்பு  செய்துள்ளார்” என்றார்.

இன்னொரு அமைச்சரோ, “இல்லை! நாட்டில் சுகாதாரம் நன்றாக இருந்தால் தான் நோய் இல்லாமல் வாழ முடியும். அதற்கு நல்ல கட்டிடங்கள் மற்றும் பாதாள  சாக்கடை செய்த பொறியாளர் தான் சிறந்த பங்களிப்பு  செய்திருக்கார்” என்றார்.

அதற்கு இன்னொரு அமைச்சர், “அரசே! நம்ம நாட்டு தலைமை காவல் அதிகாரிதான் சமுதாயத்தில் சிறந்த  பங்களிப்பவர். ஏனென்றால், காவல் துறையினரால் தான் குற்றமும், களவும் இல்லாமல், நாடு அமைதியுடன் இருக்கும்” என்றார்.

அப்போதுராஜா, “சரி, இவர்கள் நால்வருமே சிறந்த பங்களிப்பவர்கள் என்று கருதி, இவர்களுக்குபரிசுகள் கொடுத்திடலாமா?” என்றுகேட்டார்.

எல்லோரும் சரி என்று ஓத்துக் கொண்டனர்.

அதுவரை அமைதியாய் இருந்த ராணி, ஒரு கேள்வியை கேட்டார்.

“தளபதி, மருத்துவர், காவல்அதிகாரி, பொறியாளர் அனைவரும்  சிறந்தவர்கள் தான். ஆனால், அவர்களாகவே இப்படி திறமையாளர்களா ஆனார்களா அல்லது யாராவது அவர்களை அந்த திறமைகள் உள்ளவர்களாய் உருவாக்கினார்களா?” என்று.

எல்லோரும் சிறிது யோசித்து விட்டு, “இவர்கள் தாங்கள் பயின்ற கல்வியினால் தான் இவ்வாறு சிறந்து விளங்குகிறார்கள்” என்றனர்.

அதற்குராணி, “அப்போது அந்த திறமைகளை கற்றுத் தந்த அந்த ஆசிரியருக்கு தானே நாம் பரிசு கொடுக்கணும்” என்றார்.

எல்லோரும் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, “ஆமாம், ராணி சொல்வது சரி தான்” என்று ஒத்துக்கொண்டார்கள்.

ராஜா உடனே “நாம் நம்ம நாட்டையே அந்த குருவிற்கு எழுதி கொடுத்தால் கூட பத்தாது. ஏனென்றால் சமுதாயத்தை  நல்வழியில் நடத்தி செல்ல பல நல்ல விஷயங்களை கற்றுத் தரும் ஒரு குருவின் சேவைக்கு நாம் கொடுக்கும் தட்சிணை  நம்ம தகுதிக்கு ஏற்ற மாதிரி இருக்குமே தவிர, குருவின் தகுதிக்கு ஏற்ற மாதிரி இருக்காது. குருவிற்கு நாம் கொடுக்கும் சன்மானம் கடவுளுக்கு அருகில் வைத்து பூஜிப்பதுதான்” என்றார்.

எல்லாரும் இந்த கருத்தை ஏற்றனர்.

  –  D. சரவணன்

Likes(1)Dislikes(0)
Share
Share
Share