Sep 142016
 

k

பெண்ணே …  ..

நீ

வீட்டிலே

அடைந்து கிடக்கும்

கூண்டுக் கிளியல்ல

நாட்டையே ஆளும்

சுதந்திரப் பறவை !

 

நீ

நிற்கும்

நெடுமரம் அல்ல

நீரில் மிதக்கும்

மரக்கலம் !

 

நீ

அலங்காரப்

பதுமையல்ல

அணி வகுக்கும்

புதுமைப் பெண் !

 

நீ

பயனில்லாக்

காட்டுப் பூ அல்ல

மக்கள் விரும்பும்

மல்லிகைப் பூ !

 

நீ

பாலியல் தொந்தரவு

கண்டும் கேட்டும்

பதுங்கும் பூனையல்ல

பாயும் புலி !

 

நீ

நுகர்ந்து எறியும்

மலரல்ல

என்றும் எப்போதும்

மணக்கும் சந்தனம் !

 

நீ

வன்கொடுமை

கண்டும் கேட்டும்

வளைந்து செல்லும்

நதியல்ல

ஆர்பரிக்கும் கடல் !

 

நீ

பெண் உரிமைக்காக

மண்டியிடாமல்

உயிர் விடும்

கவரி மான் !

 

நீ

வெள்ளத்தில்

அடித்துச் செல்லும்

விலங்கல்ல

இல்லத்தில் என்றும்

ஒளி வீசும்

குத்து விளக்கு !

 

நீ

நீரோட்டம் அல்ல

மனித உள்ளங்களை

உணர்ந்து செல்லும்

உயிரோட்டம் !

 

 

 

–  பூ. சுப்ரமணியன்,

பள்ளிக்கரணை, சென்னை

Likes(0)Dislikes(0)
Share
Jul 142016
 

man

 

சுடர் விளக்காக இரு, அது முடியாவிடில் பரவாயில்லை.

இரவில் சுடர் விடும் மின் மினி பூச்சிகளை கொன்று குவிக்காதே !

 

பள்ளி செல்ல மனமில்லையா ? பாதகமில்லை

பள்ளி செல்லும் குழந்தைகளின் பாடப் புத்தகங்களை மறைத்து வைக்காதே !

 

உண்மை பேச மனமில்லையா ?  அது குற்றமில்லை

அரிச்சந்திரன் வரலாற்றை குற்றம் கூறி பொய்யின் உதட்டிற்கு சாயம் பூசி அழகு பார்க்காதே !

 

கொடுமை கண்டு குமுறவில்லையா ?  பரவாயில்லை !

கொடுமை கண்டு தடுக்க ஓடும் கால்களை வெட்டி வீழ்த்தாதே !

 

மனித நேயமிக்க மனிதர்கள் மீது மலர்களை தூவ முடியாவிடில்

முட்களை எறிந்து காயப்படுத்தாதே !

 

எவ்வுயிரும் தம் உயிர்போல் நினை! முடியாவிடில்

வாழும் வரையாவது மனிதனாக இரு !

 

– பூ. சுப்ரமணியன்,

பள்ளிக்கரணை, சென்னை

 

Likes(2)Dislikes(0)
Share
Aug 152015
 

kavithai

 

பாவம் நீக்கி புண்ணியம் சேர்க்கும் பூமியில் உதித்தவரே,

ராமணால் அரியப்படும் ராமேஸ்வரம்

இனி உம்மால் உயர்வு பெரும்

 

காலம் உம்மை காயப்படுத்தலாம்

காலத்தையே திரும்பி நின்று

காலை மாற்றி கலாமாய் நின்று காட்டியவரே

எங்கே போனீர்?!

 

பிற நாட்டு தொழில்நுட்பத்தை எதிர்பாராமல்,

ஏவுவூர்தியில் தாய்நாட்டை தூக்கி நிறுத்தியவரே

பொக்ரானில் பாரதத்தை பாதுகாத்து,

எம் மண்ணின் தலைக்குடிமகனாய்

பாரே நமை புகழ நிமிர்ந்து நிற்கச்செய்தவரே

 

மத மாச்சர்யங்களைக் களைந்து

யாதும் ஊரே யாவரும் கேளீர் என சமத்துவத்தைப் படைத்து

மக்கள் மனதில் மகானாய் வியாபித்துவிட்டீர்

 

உம்மால் எப்படி முடிந்தது

ஒரு மனிதனால் இது சாத்தியமா?!

எம் மண்ணில் நீர் புதைக்கப்படவில்லையைய்யா

எல்லோர் மனதிலும் வேரூன்றி விருட்சமாய் விதைக்கப்பட்டுள்ளீர்!

 

கனவு காணுங்கள் என்று உறங்காமல்,

தூங்கி கிடந்தவரை தட்டி எழுப்பிவிட்டு

நீர் கண்ட கனவை கானாமலே உறங்கிவிட்டிர்!

 

அக்டோபர் பதினைந்து மாணவர்கள் தினம்

உம்மால் மதிக்கப்பட்ட நாங்கள் காணுவோம்

நீர் கண்ட கனவை நாங்கள் காணுவோம்

வல்லரசாகும் எம் பாரதம்!

 

தமிழரே, தமிழனை தலை நிமிர்த்தியவரே

பொக்கிஷமாய் உம்மை போற்றிப் புகழ்கின்றோம்

நீர் வாழ்க..!!

– சிவரஞ்சனி விமல்

Likes(10)Dislikes(0)
Share
Jul 142015
 

Kavithai

 

பொறுமையிழந்த ஒரு காலைப் பொழுதில்..
என் வீட்டின் சாளரத்தின் கம்பிகளை
வளைத்தது என் நம்பிக்கை..

பரந்த வானத்தின் பறவைகளை பார்த்து
உயர எழும்பி அது செல்வதை
தடுக்க விருப்பமில்லாமல் அதை ..
அனுப்பி வைத்து விட்டு
அது திரும்பும் வழி பார்த்திருந்தேன்..

இதோ..

என் நம்பிக்கை இன்னும் பெரிதாக வளர்ந்து..
என்னை நோக்கி வருகிறதே..
கையில் கனி ஒன்றை ஏந்தியபடி..

இனி …

நிரந்தரமாய் சாளரத்தின் கதவுகளை
திறந்து வைப்பேன் என்று
நம்பியது ..நம்பிக்கை!
அதன் நம்பிக்கை வீண்போகவில்லை!
நான்தான் அதை முதலில் நம்பவில்லை!

– கவிஞர் ஜோஷுவா

(சௌதியிலிருந்து)

 

Likes(5)Dislikes(0)
Share
Jun 142015
 

4

ஈரணுவாய் அவதரித்த திங்களிலிருந்து

ஈரைந்து மாதங்கள் நீர் இருக்கையில் சுமந்து

தொப்புள் கொடி வாயிலாய் ஊனை உணவாக்கி

வருடலையும் குரலையும் வளர்ப்பினில் உணர்வாக்கி

தன்னுயிரின் மற்றொரு உருவமாய் உருவாக்கி

தரணிக்கு அறிமுகப்படுத்திய தாயே, தாய்மையே…

காவியங்களும் புராணங்களும் உன் பெருமையை

எக்காலத்திலும் கவிபாட மறந்ததில்லை…

 

தாயுடன் பகிர்ந்த காதலை மட்டுமே ஆதாரப்படுத்தி

அக்காதலுக்குமுன் இந்த பாசமே மிஞ்சுமளவுக்கு

பாசத்துடன் கரம் பிடித்து நடைபழக்கி

வைக்கும் ஒவ்வொர் அடியிலும் அச்சத்துடன் பெருமைக்கண்டு

பெருமிதத்துடன் கரம் பிடித்து எழுதுகோலையும் பழக்கி

சிந்தனை செயல்பாட்டை சிற்பியாய் செதுக்கி

சிற்றெறும்பை போல் எதிர்காலத்திற்காக சிறுகச் சிறுக சேமித்து

அன்றும் உனக்கு கிடைக்கும் மிகச்சிறந்த பட்டம் – “தாயுமானவனே”!!!!

 

சுமந்து பெற்றவளா!

பெற்று சுமந்தவனா!

 

-Dr. K. நந்தினி

(லண்டனிலிருந்து)

Likes(13)Dislikes(0)
Share
May 142015
 

4

பண்டு முதல் இன்றுவரை உயர்ந்த மொழி தமிழ்

கண்டுபலர் சிரம்தாழ்த்தி விண்டுரைத்தார் புகழ்

கண்டவரும் கேட்டவரும் மகிழ்கின்றார் காண்

பண்டவரும் பல்லவரும் சிறப்படைந்தார் தமிழால்தான்

நித்தம் நித்தம் விண்டுரைப் போம் தமிழின் புகழை

சித்தமதில் மகிழ்ந்திடுவோம் அத்தமிழின் எழிலை

பசுந்தமிழ் செந்தமிழ் பைந்தமிழ் தீந்தமிழ்

இசையுரு பொருளெல்லாம் குறிப்பது தமிழையே

சிறந்த புலவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா

நிறைந்தபொருள் கொண்டவர் தம்கவிதை வியப்பிலடங்கா

பசுந்தமிழ் உலகினில் பலகலை உயரவே

பழியறப் படித்திடு பாங்குடன் வாழவே

செந்தமிழ் நாட்டினில் செயல்படு உயரவே

செழிப்புடன் வாழ்ந்திடு சிந்தனை பெருகவே

கேளீர் கேளீர் செந்தமிழின் சிறப்பை யெல்லாம்

வாரீர் வாரீர் அழகுதமிழ் மொழியை கற்றுணர

 

– சரஸ்வதி ராசேந்திரன்

மன்னார்குடி

திருவாரூர் மாவட்டம்

Likes(4)Dislikes(0)
Share
Apr 142015
 

4

வானொலியில் பிடிபடாத அலைவரிசையில்
ஒலிக்கும் பழைய பாடல் போல
இருந்தது அந்த குரல்…

வசீகரம் ஏதுமில்லை
வர்ணம் ஏதுமில்லை

அந்த பாடல் முறையே பாடப்பட்ட ராகத்தின் சாயல்
எப்போதேனும் தென்பட்டது அந்த குரலில்…

இசையின் இலக்கணங்களைக் கண்டுகொள்ளாமல்
தன்னகத்தே ஒரு நேர்த்தியை
நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது அந்த பாடல்…

துணைக் கருவிகள் ஏதுமில்லாதது
அந்த குரலைத் தனிமை படித்தியிருந்தது

ஆயினும்…
சட்டைப்பையில் சில்லரைகளைத் தேடவைத்தது
விழி இழந்த அந்த பாடகனின் நம்பிக்கையும்
பாடி பிழைக்க வேண்டும் என்கிற நேர்மையும்

 

அ.க.ராஜாராமன்

 

Likes(7)Dislikes(0)
Share
Feb 142015
 

5Kavithai

 

நண்பா
வா…

நல்லதொரு காலம்
கணிந்திருக்கிறது;
நாம்
சேர்ந்து உழைப்போம்.

உன்னதங்களின் உறைவிடமாய் இருந்த
பாரதம் – இன்று
உருமாறிக் கிடக்கிறது!

உலகக் கயவர்களின்
சூழ்ச்சிகளில் சிக்கி – நம்
உயரியப் பண்பாட்டை
உதறித் தள்ளியதால்
உச்சியில் இருந்து
வீழ்ச்சி அடைந்தோம்

இனி வரும் காலம்
இந்தியாவின் காலம்;
இன்னல்கள் மாய்க்க
உழைத்திடுவோம் நாளும்…!

உற்றார் ஊரார்
உளருவதைத் தள்ளு;
உன் நாட்டுக்கு உழைப்பதை
உயர்வாய்க் கொள்ளு…

பிழைக்கத்தெரியாதவன் என்று
பிழை சொல்வார்கள்;
பெரிதுபடுத்தாதே!
பிழைப்பு மட்டுமே
வாழ்க்கை இல்லை.

உதவாக்கரை என்று
உதாசீனப்படுத்துவார்கள்;
உள்ளம் நோகாதே!
அவர்களுக்கும் சேர்த்துத்தான் நீ
அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறாய் என்பதை
அறியாதவர்கள் அவர்கள்.

வேலைக்கு ஆகாதவன் என்று சொல்லி
வெறுப்பேற்றுவார்கள்;
புன்முறுவல் பூத்துவிட்டு
போய் உன் வேலையைப் பார்…

பைத்தியக்காரனைப் போல்
பாவிப்பார்கள் உன்னை;
பயங்கொள்ளாதே!
மாபெரும் லட்சியவாதிகளை
மற்றவர்கள் புரிந்துகொள்வதில்லை…

உனக்கு
சரியெனப் படுவதை
செய்துகொண்டேயிரு…
மனிதர்கள் பழித்தாலும் – இந்த
மாநிலம் பயன்பெரும்!

அது தான்
உன் லட்சியம்…

–    வீர திருநாவுக்கரசு

Likes(3)Dislikes(0)
Share
Share
Share