Jul 142015
 

transistors-1

நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான டிரான்சிஸ்டர் ஒரு நினைவூட்டல்

இரண்டாம் உலகப் போர் 1945 ஆம் ஆண்டில் முடிவுற்ற பிறகு, மிகச் சரியாக அறுபத்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பு (July 01, 1948) இதே நாளில்தான் அமெரிக்காவில் உள்ள உலகப்புகழ் பெற்ற பெல் நிறுவனம் திரிதடையம் (Transistor) பற்றிய தங்கள் வடிவமைப்பினை உலகிற்கு அதிகார பூர்வமாக அறிவித்தனர்.

மிகச் சிறந்த இயற்பியலாளர்கள், வேதியலாளர்கள் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு  திண்ம நிலை எலக்ட்ரானியல் (Solid State Electronics)  ஆராய்ச்சிக்கு என்று ஒரு தனிக் குழுவினை 1940 களில் பெல் நிறுவனம் உருவாக்கியது (இந்நிறுவனத்தினை துவக்கியவர் தொலைபேசியினை கண்டுபிடித்த கிராம் பெல் ஆவார்).

இக்குழுவினை மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி வில்லியம் சாக்லீ (William Shockley)  தலைமை தாங்கி வழி நடத்தினார். இக்குழுவில் சான் பார்டீன் (John Bardeen), வால்ட்டர் பிராட்டேய்ன் (Walter Brattain) உள்ளிட்ட பன்னிரென்டு பேர் பணி புரிந்தனர்.

சுமார் பதினோரு ஆண்டுகள் கழித்து இம்மூவரும் 1956 ஆம் ஆண்டு “குறைக்கடத்திகள்  தொடர்பான அவர்களின் ஆய்வுகள் மற்றும் டிரான்சிஸ்டர் விளைவு ” கண்டுபிடிப்பிற்காக கூட்டாக இயற்பியல் பிரிவில் நோபல் பரிசினை பெற்றனர்.

இக்கண்டுபிடிப்பு எலக்ரானியல் துறையில் ஏற்பட்ட மிகப் பெரிய புரட்சிக்கு வித்திட்டது என்பது வரலாறு. அதே வேளையில் இக்கண்டுபிடிப்பின் பின்னால் இருந்த வணிக நோக்கிலான பயன்பாடு பல்வேறு குழப்பங்களை இக்குழுவில் ஏற்படுத்தின. அதனைப் பற்றி பெரிய புத்தகமே போடாலாம்.

பெல் நிறுவனத்தின் டிரான்சிஸ்டர் கண்டுபிடிப்பிற்கு முன்பே இலிலியன்பெல்டு (Julius Edgar Lilienfeld) என்ற ஆத்திரிய நாட்டினை சேர்ந்த இயற்பியலாளர் காப்புரிமை பெற்றிருந்தார். ஆனால் நடைமுறையில் செயலாற்றும் வகையில் டிரான்சிஸ்டர்கள் பற்றி அவர் எந்த ஆய்வு கட்டுரையினையும் வெளியிடவில்லை. ஆதலால் வரலாற்றில் அவருக்கு கிடைக்க வேண்டிய மிகப் பெரிய இடம் நழுவிப் போனது.

முதல் டிரான்சிஸ்டர் தொடுகை முனை அமைப்பில் (Point-Contact Transistors) வடிவமைக்கப்பட்டது. இவ்வடிவமைப்பில் செருமானியம் (Germanium) படிகங்கள் பயன்படுத்தப்பட்டது. அப்போதைய கால கட்டத்தில் இதற்கு முன் புழக்கத்தில் இருந்த வெற்றிட குழாய்களை (vacuum tube) ஒப்பிடும் போது இது எதிர்மின்னிகளை (எலக்ட்ரான்களை) வேகமாக கடத்தியது.

அண்மையில் ஜப்பானில் உள்ள உயனோ தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓர் அடி அளவில் இருந்த வெற்றிடக் குழாய் மாதிரியினைப் பார்த்த போது தலையே சுற்றி விட்டது. இதனைக் கொண்டு கணக்குகள் போடும் எனியாக்கு (ENIAC- Electronic Numerical Integrator and Computer) என்று அழைக்கப்பட்ட மிகப் பெரிய கணிப்பொறியை உருவாக்கி இருந்தார்கள். அது ஓர் அறை அளவிற்கு இருந்தது. இதனையும் அந்த அருக்காட்சியகத்தில் வைத்திருந்தார்கள். அக்காலகட்டத்தில் இதனைக் கொண்டு கணக்கீடுகள் செய்ய எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் எனப் புரிந்தது.

ஆனால் இதன் எடையும், அளவும் இன்றைய நகத்தின் அளவே உள்ள டிரான்சிஸ்டரை ஒப்பிடும் போது இதன் பின்னால் எத்தனை அறிவியலாளர்களின் உழைப்பு உள்ளதெனப் புரிந்து கொள்ள முடிந்தது.

1950-களுக்குப் பிறகு டிரான்சிஸ்டர்கள் வடிவமைப்பில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதன் தொடக்க புள்ளியாக சாக்லீ அவர்களது இடைச்செருகல் அமைப்பான (”சான்ட்விச்சு” அமைப்பிலான) பி-என் வகை டிரான்சிஸ்டர்கள் (Sandwich p-n junction transistor) புழக்கத்திற்கு வர ஆரம்பித்தன.

transistors-2

டிரான்சிஸ்டர்களை அளவில் சுருக்கி (miniaturization) எப்படி மிகச்சிறிய வடிவத்தில் செய்யலாம் என தெக்சாசு நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த பொறியாளர்களான ஜாக்கு கில்பி (Jack St. Clair Kilby), இராபர்ட்டு நாய்சு (Robert Noyce) ஆகிய இருவரும் இணைந்து ஒருங்கிணைந்த மின் சுற்றுகளை (integrated circuits- IC) வடிவமைத்து டிரான்ஸிஸ்டர்களின் பயன்பாட்டினை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவினர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஜாக்கு கில்பி அவர்களின் ஒருங்கிணைந்த மின்சுற்று (Integrated Circuits) கண்டுபிடிப்புக்கும் அதன்வழி நிகழ்ந்த தகவல் தொடர்பு நுட்ப வளர்ச்சியில் ஆற்றிய  முக்கிய பங்கிற்காக இயற்பியல் பிரிவில் நோபல் பரிசினை பெற்றார்.

சமகாலத்தில் இந்த ”ஐசி”-களில் (IC) பயன்படுத்தப்படும் டிரான்சிட்டர்களின் அளவு சுருக்கப்பட்டு ஒவ்வொரு ஒன்றை ஆண்டுகளுக்கும் டிரான்சிட்டர்களின் எண்ணிக்கை அதே இடத்தில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று கார்டன் மூர் (Gordon Moore) என்பவர் முற்கூறினார். இது மூர் விதி (Moor’s Law) என்று அழைக்கப்படுகிறது.

மிகப் பெரிய ஆச்சரியம் இன்றைய கணினியின் மூளையாகப் பயன்படும் நடுச்செயலி (மைக்ரோபிராசசர்) நுட்பத்தில் இந்த ஐசிக்களில் டிரான்சிஸ்டர்களின் பயன்பாடு ஏறத்தாழ மூர் சொன்னபடியே ஒத்துப் போகிறது. இந்த மூர் வேறு யாரும் அல்ல தற்போது  உலகப் புகழ் பெற்ற இன்ட்டெல் நிறுவனத்தின் (Intel Corporation) நிறுவனர்களில் ஒருவரானவரே.

2000 ஆம் ஆண்டிற்கு பிறகு நானோ நுட்பவியலில் ஏற்பட்ட புரட்சி டிரான்சிஸ்டர்களின் வடிவமைப்பில் புதிய பரிணாமங்களைக் கொண்டு வந்துள்ளது. நானோ அளவிலான குறைகடத்தி பூச்சுகளால் ஒரு செமீ அளவில் இலட்சக் கணக்கான டிரான்சிஸ்டர்களை கொள்ளும் அளவிற்கு அளவில் சுருக்கப்பட்டு விட்டது.

transistors-3

தற்போது கிராஃபின் நானோ பூச்சுகள் (atomic scale graphene coatings) நானோ அளவினை விடவும் சிறுத்து மூலக்கூறு அளவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதனால் நினைவகங்களின் (Memory Storage Devices) கொள்ளும் அளவீடு தெராபைட்டுகள் (ஆயிரம் கிகாபைட்டு) அளவினையும் தாண்டி இன்னும் பயணிக்கும்.

மேலும் நெகிழ் தன்மையுடைய எலக்ட்ரானிக்குச் சுற்றுகளில் டிரான்சிஸ்டர்களின் பயன்பாடுகள் (Flexible Electronic Circuits) தற்போது ஆய்வில் உள்ளன. இவை வெற்றி பெரும் என்றால் உடலில் பொருத்தி கொள்ளும் மருத்துவ கருவிகள் நகத்தின் அளவே உள்ள ஒட்டுத்துண்டுகளாக (ஸ்டிக்கர்களாக) சந்தையில் கிடைக்கும். நெகிழ் எலக்ட்ரானிக்குச் சுற்றுகள் (Flexible Electronics) மூலம் மருத்துவ துறையில் சாதனங்களை வடிவமைப்பதில் இல்லினாய்சு பல்கலைக் கழக்கத்தின் பேராசிரியர் சான் உரோச்சர்சு (Prof. John A Rogers) சில வருடங்களில் நோபல் பரிசு வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு வரலாற்றையே புரட்டி போட்ட டிரான்சிஸ்டரின் அளவு சிறுத்துக் கொண்டே போனாலும் அதன் புகழ் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா என்பது மெய்தான் போலும்.

குறிப்பு:

முதல் டிரான்சிஸ்டரை வடிவமைத்த நோபல் அறிவியலாளர் சாக்லீ 1956 ல் பெல் நிறுவனத்தில் இருந்து வெளியேறி சாக்லீ செமிக்கண்டக்டர்சு (Shockley Semiconductors Laboratory) என்ற நிறுவனத்தினை துவக்கினார். அதன் துணை நிறுவனமான பெக்மென் இன்ஸ்ட்ரூமென்ட்ன்ஸ் நிறுவனமே இன்று கலிபோர்னியா மாகானத்தில் சிலிக்கன் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பகுதியில் துவக்கப்பட்ட முதல் குறைகடத்தி (Semiconductor) நிறுவனம் ஆகும்.

———————

முனைவர் பிச்சைமுத்து சுதாகர்

தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகம்

ஜப்பான்

E-mail: vedichi@gmail.com

Likes(5)Dislikes(0)
Share
Jun 142015
 

7.1

(சென்ற இதழ் தொடர்ச்சி..)

ஜப்பானின் நிலப் பரப்பு மிகவும் குறைந்த அளவு இருப்பதால் தன்னிடம் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் மிதவை சூரிய மின் சக்தி நிலையங்களை அமைக்கத் தொடங்கி உள்ளார்கள். சமீபத்தில் கதோ (Kato) நகரத்தில் உள்ள நிசிகிரா (Nishikara) மற்றும் கிகாசிகிரா (Kihashikara) ஏரியின் மீது பிரம்மாண்டமான மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை கியோசிரா நிறுவனமும், தோக்கியோ லீசிங் நிறுவனமும் இணைந்து நிர்மானித்து உள்ளார்கள்.

இதனை கட்டுவதற்கு ஏழு மாதம் ஆகியிருக்கிறது. இந்த மின் உற்பத்தி நிலையமானது 11250 சோலார் பேனல்களை கொண்டு 3300 மெகாவாட் மின் உற்பத்தியினை கொடுக்கும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மின் உற்பத்தி மட்டுமல்ல, ஏரி நீரானது கோடை காலத்தில் ஆவியாவதும் தடுக்கப்படுகிறது. சூரிய மின் கல மிதவைகள் தண்ணீரில் மூடி உள்ளதால் இதன் அடியில் நிழற்பாங்கான பகுதியில் மீன்கள் உண்ணும் ஆல்கி (Alge) தாவரங்களும் நன்கு வளர்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

தற்சமயம் மிகப் பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையங்களில் சோலார் பேனல்களின் கீழ் தோட்டங்கள் அமைத்து காய்கறிகளை விவசாயம் செய்யும் ஆய்வு உத்திகள் முன்னெடுக்கப்பட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள். இதன் மூலம் சோலார் பேனல்களை சுத்தம் செய்யும் நீரானது வீணாகாமல் அதன் அடியில் இருக்கும் காய்கறி தோட்டத்திற்கு பாய்ச்சப்படும். இதன் மூலம் நீரை வீணாக்காமல் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்துள்ளனர் ஜப்பானியர்கள்.

மழை பெய்தால், மேக மூட்டமாக இருந்தால் சூரிய மின்சக்தி கிடைக்காது போன்ற எளிய கேள்விகள் நம்மில் பெரும்பாலானோருக்கு உள்ளது. ஜீரோ டிகிரி நிலவும் பனி பெய்யும் குளிர் காலத்தில்  கிடைக்கும் மிகக்குறைவான சூரிய  ஒளியின் (30 வெபர்/மீட்டர்3) மூலம் 30 கிலோ வாட் சூரிய மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஜப்பானில் உள்ளது (மேலுள்ள படத்தில் காண்க).

குளிர் காலத்தில் சூரிய ஒளியானது ஜப்பானில் குறைவாகவே இருக்கும். எனவே சூரிய வெளிச்சம் எப்போதும் கிடைக்கின்ற வான்வெளியில் இருந்து ஏன் சூரிய மின் உற்பத்தி செய்து அதனை பூமிக்கு ரேடியோ அதிர்வலைகளாக மாற்றம் செய்து அனுப்பக் கூடாது என்ற ஆராய்ச்சியில் ஜப்பான் விண்வெளி நிறுவனம் (Japan Aerospace Exploration Agency-JAXA) களத்தில் இறங்கியது.

இந்த நுட்பத்தின் மூலம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சூரிய மின்சக்தியின் (solar powered satellites) மூலம் இயங்கும் செயற்கை கோள்களைப் போல் விண்வெளியில் அமைக்கப்படும் பெரிய அளவிலான சூரிய மின்சக்தி செயற்கோள்கள் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ஜிகாவாட் மின் உற்பத்திக்கான எதிர்கால திட்ட விதையினை தற்போதே விதைத்துள்ளது.

இதன் சோதனை முயற்சியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் JAXA மற்றும் மிட்சுபிக்சி நிறுவனமும் இணைந்து 10 கிலோவாட் சூரிய மின் சக்தியினை கம்பிகளற்ற முறையில் (wireless) மைக்ரோஅலைகளாக மாற்றி 1.8 கிமீ அனுப்பி அவற்றினை ஆன்டெனாக்கள் (receiver antenna) மூலம் பெறப்பட்டு மீண்டும் மின்சக்தியாக மாற்றி சாதனை படைத்துள்ளனர். இது மின்சக்தி கடத்தும் (power transmission) துறையில் இனி வரும் காலங்களில் மிகப் பெரிய புரட்சிக்கு இச்சோதனை முன்னோடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மிகப் பெரிய சூரிய மின் சக்தி திட்டங்கள் ஒருபுறம் இருக்க, அன்றாட வாழ்க்கை சூழலில் மக்களின் தேவைக்கும் சூரிய மின் சக்தியினை பயன்படுத்த ஆரம்பித்தது ஜப்பான் அரசு. ஒரு முறை தோக்கியோவில் உள்ள அகிகாபாரா கடைத் தெருவிற்கு சென்றபோது அங்கிருக்கும் சாலையோர சிக்னல் கம்பங்கள் சூரிய மின்சக்தியின் மூலம் இயக்கும் வகையில் அமைத்து இருந்தார்கள். மேலும் ஜப்பானின் பெரும்பாலான தெரு சந்திப்புகளில் வாகன விபத்தினை தடுக்க, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதத்தில் தார் சாலைகளில் சூரிய மின் சக்தியின் மூலம் இரவில் ஒளிரும் சிகப்பு எல்ஈடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

பகலில் சூரிய மின் சக்தியினை இதில் இணைக்கப்பட்டுள்ள சிறிய வடிவிலான பேட்டரிகள் சேமித்து வைத்துக் கொண்டு இரவில் விளக்குகளுக்கு மின்சக்தியினை வழங்குகிறது. ஜப்பானில் ஏற்பட்டுள்ள எல்ஈடி துறையின் விஞ்ஞான சாதனைகளும், உற்பத்தி புரட்சியும் இது போன்ற புதுமை திட்டங்களுக்கு நன்கு கை கொடுக்கின்றது. (2014 ஆம் ஆண்டில் நீல நிற எல்ஈடி கண்டுபிடிப்பிற்காக மூன்று ஜப்பானிய பேராசிரியர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது).

தற்போது சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் தானியங்கி குளிர்சாதனங்களை தோக்கியோ நகர தெருக்களில் காணமுடிகிறது. பேரிடர் காலங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் போது கூட இந்த தானியங்கி இயந்திரங்கள் சூரிய மின்சக்தியின் மூலம் இயங்குவதால் மக்களுக்கு இது பெரும் வரப் பிரசாதம் ஆக இருக்கிறது. இது தவிர சூரிய மின்சக்தியின் மூலம் ஒளிரும் பேருந்து நிழற் குடைகள், சாலை ஓரங்களில் தட்பவெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் போன்றவற்றினை காட்டும் உணர்விகள் (sensors) சூரிய மின் சக்தி மூலம் பேட்டரிகள் துணையுடன் இயங்குகிறது. தோக்கியோவின் மியோதன் (Myoden) பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் உள்ள செடிகள் வண்ண ஒளியில் சூரிய மின் சக்தி மூலம் இரவிலும் ஒளிர்கிறது.

தற்போது ஜப்பானில் உள்ள தோபு உயிரியல் பூங்காவில் (Tobu Zoo, Japan) சிறிய ரக சோலார் பேனல் மூலம் இயங்கும் சுற்றுலா தகவல் விளக்க வழிகாட்டிகள் நிறுவப்பட்டுள்ளது (solar powered audio tour guide). சூரிய ஒளி மூலம் இயங்கும் இந்த இயந்திரத்தில் 100 யென் காசைப் (சுமார் 50 ரூபாய்) போட்டவுடன் இதில் இணைக்கப்பட்டுள்ள ஹெட்போனில் அந்த கருவிக்கு முன்னால் உள்ள உயிரினங்களை பற்றிய தகவல்களை கேட்கலாம். இதன் மூலம் மின்சாரம் சேமிப்பதுடன் நல்ல வருமானமும் கூட. இதே போன்று நமது ஊரிலும் காசை போட்டுச் சூரிய மின் சக்தியில் இயங்கும் மொபைல் போன் ரீசார்ஜர் நல்ல பயனளிக்கும். இவற்றினை பொது மக்கள் புழங்கும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் என வைத்தால் அரசுக்கு நல்ல வருமானமும் வரும்.

இது தவிர சூரிய ஒளியின் மூலம்  போட்டோ கேட்டலிஸ்ட்கள் (photocatalyst) துணை கொண்டு குடி நீரை சுத்திகரித்தல், காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற  நச்சு வாயுவினை சுத்திகரிப்பு செய்தல் போன்ற புதிய நுட்பங்களும் வந்து விட்டது.

கட்டிடங்களுக்கு வருடா வருடம் வண்ணம் பூசாமல் சூரிய ஒளி மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம் இவற்றின் மூலம் தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் (self-cleaning coating) அதி நீர் ஒட்டுமை தன்மை கொண்ட (super hydrophilic) டைட்டானியம் ஆக்சைடு பூச்சுகள் மூலம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பளிச்சிடும் வகையில் நானோ பூச்சுகளை (nano-coating) ஜப்பானியர்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். இதன் மூலம் பெரும் பொருட் செலவும், மனித உழைப்பும் சேமிக்கப்படுகின்றது.

7.2

இந்த புதிய வெற்றியின் சூட்சுமம் சூரிய ஆற்றலை கவரும் நீடித்த தன்மை கொண்ட குறைகடத்திகளை (semiconductors) கண்டறியும் ஆராய்ச்சியினை வெகு நேர்த்தியாக ஜப்பான் முன்னெடுத்து சென்றது. இதன் கூடவே, புதிய நுட்பங்களை மக்கள் ஊக்குவிக்கும் விதம் என இந்த இரண்டு காரணங்களும், இன்று ஜப்பான் நாட்டினை சூரிய ஒளியினை பயன்படுத்துவதில் உலகின் முன்னோடி நாடாக உயர்த்தி பிடித்துள்ளது.

நம் இந்திய தேசத்தினையும் உலக அரங்கில் சூரிய ஒளியின் மூலம் மாசற்ற, மரபு சார எரிசக்தியாக மாற்றுவதில் முன்னோடி நாடாக மாற்றிட மக்களாகிய நாம்தான் அரசுக்கு பக்க பலமாக நின்று உதவ வேண்டும்.

அதற்கு முன்பாக வெகு சன மக்கள் புழங்கும் இடங்களில் சூரிய மின்சக்தியின் மூலம் சிறிய கருவிகளை அரசு நிறுவி அவர்களுக்கு சூரிய மின்சக்தியின் மீதான நம்பகதன்மையினையும், விழிப்புணர்ச்சியினையும் கொண்டு வர வேண்டும். பொறியியல் பயிலும் கல்லூரி மாணவர்கள் சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் புதிய கருவிகளை வடிவமைத்து குறைந்த விலையில் மக்களுக்கு பயன்படும் வகையில்சந்தைப்படுத்தலாம்.

முனைவர். பிச்சைமுத்து சுதாகர்

தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகம்

ஜப்பான்

(E-mail: vedichi@gmail.com)

Likes(3)Dislikes(0)
Share
May 142015
 

8

பரப்பளவில் இந்திய தேசத்தினை ஒப்பிடும் பொழுது 8.6 மடங்கு சிறிய நாடு ஜப்பான். மேலும் ஒரு வருடத்திற்கான சூரிய ஒளி கதிர் வீச்சினை (solar irradiation) பெறுவதை ஒப்பிடும் பொழுது ஜப்பானை விட பல மடங்கு அதிகமாக இந்தியாவில் பெறப்படுகிறது. ஆனால் சூரிய ஒளியின் மூலம் தங்களது சுய தேவையினை பூர்த்தி செய்வதில் ஜப்பான் மிக குறைவான கால கட்டத்தில் இந்தியாவை விஞ்சி நிற்கிறது. இது எப்படி சாத்தியமானது, இந்தியா இந்த அனுபவத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலில் ஜப்பானில் ஆற்றல் வளத்தினை காண்போம். ஜப்பானின் எரிபொருள் கொள்ளளவு திறன் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவை சார்ந்தே இருந்து வருகிறது. ஜப்பான் ஆற்றல் பொருளாதார மைய ஆய்வேட்டின்படி (Japan Energy Economy Institute) கடந்த 1972 ஆம் ஆண்டிலிருந்து, சராசரியாக 80 சதவிகிதம் கச்சா எண்ணெய் வெளிநாட்டு இறக்குமதியிலும், 20 சதவிகிதம் உள்நாட்டு ஆற்றல் உற்பத்தியின் மூலம் தனது அனைத்து தேவைகளையும் எளிதாக சமாளித்து வந்திருக்கின்றது.

உலக வர்த்தகத்தில் கோலோச்சிய ஜப்பானின் பொருளாதார நிலையானது 2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் (Great East Japan earthquake) அதளபாதாளத்திற்கு தள்ளி விட்டது. மேலும் புகுசிமா (Fukushima Daiichi) அணு உலை விபத்து ஜப்பானின் பொருளாதாரத்தினை மட்டுமல்லாது அன்றாட வாழ்வில் மக்களுக்கு தேவையான மின்சார பகிர்வையும் சீர்குலைத்துள்ளது. இதன் விளைவாக ஜப்பானின் வெளிநாட்டு கச்சா எண்ணெய் இறக்குமதி தற்போது 92 சதவிகிதமாக உயர்ந்திருக்கின்றது.

2011 ஆம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் நேரடியாக பாதிக்கப்பட்ட ஜப்பானிய தமிழ் நண்பர்களுடன் உரையாடிய போது ஒரே நாளில் ஜப்பானின் எதார்த்த வாழ்க்கை எப்படி துக்கமானதாக இருந்திருக்கிறது என அறிய முடிந்தது.

நிலநடுக்கம் ஏற்ப்பட்ட அன்று தண்ணீர் தட்டுபாடு கடுமையாக இருந்திருக்கிறது. பெரும் நில நடுக்கம் ஏற்படும் போது ஒவ்வொரு தெருவிலும் வைக்கப்பட்டிருக்கும் தானியங்கி குளிர் பான இயந்திரத்தில் இருக்கும் தண்ணீர் பாட்டில்களை கூட அவர்களால் எடுக்க முடியவில்லை காரணம் அச்சாதனங்கள் இயக்கக் கூடிய மின்சாரமும் துண்டிக்கப்பட்டதே. மேலும் சாலையின் சமிக்ஞை விளக்குகள் மற்றும் தானியங்கி கதவுகள் என யாவும் மின்சாரம் இல்லாமல் முடங்கி விட்டிருக்கிறது. வீடுகளில் ஒரு வார காலத்திற்கு மின்சாரம் இல்லாமல் பெரிதும் அவதிப் பட்டிருக்கிறார்கள்.

இந்த அனுபவத்திற்கு பிறகு ஜப்பானின் ஆற்றல் பார்வை தற்போது மரபுசாரா ஆற்றல் வளங்களின் மீது திரும்பி உள்ளது. அதிலும் முக்கியமாக சூரிய மின் உற்பத்தியில் (solar power generation) ஜப்பான் மிகப் பெரும் ஆர்வம் செலுத்தி வருகிறது.

கடந்த ஆண்டில் ஜப்பானிய அரசால் வெளியிடப்பட்ட ஆற்றல் செயல் திட்டத்தின் (Stredgery Energy Plan 2014) மூலம் புதிய சூரிய மின்சக்தி நிலையங்கள் முன்னெடுப்பது பற்றிய அதன் விரிந்த பார்வையினை அறிய முடிகிறது.  அணு உலையின் மூலம் பெறப்பட்ட மின் சக்தியினை எவ்வாறு சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் பெற முடியும் என்ற பெரும் சவாலான பணிக்கு ஆயத்தமாகி உள்ளார்கள்.

தற்போது ஜப்பான் அரசு அணு மின் உலைகளின் பயன்பாட்டினை மெதுவாக நடைமுறையில் இருந்து குறைத்து கொண்டு வருகிறது. ஆனால் அதே சமயம், அணு உலைக்கு இணையாக மாற்று எரிசக்தியினை சூரிய மின் சக்தியின் மூலம் எப்படி பெறுவது என்ற தயக்கமான கேள்வியும் அவர்கள் முன் சவாலாய் நின்றது. உதாரணத்திற்கு ஒரு மணி நேரத்தில், ஒரு அணு உலையில் பெறப்படும் மின் சக்திக்கு (1.2 மில்லியன் கிலோ வாட் அல்லது 7.4 பில்லியன் கிலோவாட்/மணி) இணையான சூரிய மின் சக்தியினை பெற வேண்டுமாயின் குறைந்த பட்சம் 1.7 மில்லியன் வீடுகளின் கூரைகளில் சோலார் பேனல்களை பொறுத்த வேண்டும். இது கற்பனையில் தோக்கியோ நகரில் உள்ள எல்லா வீடுகளின் கூரைகளின் மீதும் பொருத்துவதற்கு சமம்.

இந்த இடத்தில் இந்தியாவின் சூரிய மின் சக்தி கொள்கையினையும் அதற்கு நாம் எடுத்து கொண்ட முயற்சிகளையும் நாம் அலச வேண்டும். ஜவகர்லால் நேரு சூரிய மின் சக்தி திட்டக் கொள்கையானது (Jawaharlal Nehru National Solar Mission) 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமானது, எதிர் வரும், 2020 ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் சூரிய மின் சக்தியினை உற்பத்தி செய்வதோடு, உள்நாட்டு மின் சக்தி கொள்முதலில் மிகக் குறைந்த விலையில் பெறும் வகையில் சூரிய மின் சக்தி தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது, மேலும் அதற்குத் தேவையான ஆய்வுகளை முன்னெடுப்பது போன்றவையாகும். இத்திட்டதில் நாம் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றுள்ளோம். ஆயினும் தொழிற்சாலைகள் அல்லாத குடியிருப்பு பகுதிகளில் சூரிய மின் சக்தி திட்டமானது அமல்படுத்துவதில் இன்னும் தேக்க நிலையிலேயே உள்ளது. அரசு போதிய மானியம் அளித்திருந்த போதிலும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் வழமையான அனல் மின் சக்தியானது மக்களை இன்னும் மாற்று எரிபொருளின் மீதான பார்வைக்கு திருப்பாமல் வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டது போல் ஜப்பானை விட இந்தியாவில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மிக தாராளமான இடங்கள் உள்ளது, குறிப்பாக வீடுகளில் நமது மேற்கூரை அமைப்புகள் அகலமாக, தட்டை வடிவில் உள்ளதால் மிக எளிதாக சோலார் பேனல்களை நிறுவ முடியும். ஆனால் ஜப்பானில் நில நடுக்கம் மற்றும் குளிர் காலத்திற்கு ஏற்றவாறு சாய்வான  மேற்கூரைகளே உள்ளது. ஆகையால் இந்தியாவை ஒப்பிடும் பொழுது இத்தையக V வடிவிலான கூரைகளின் மீது சோலார் பேனல்களை பொறுத்த தாங்கு கம்பிகளுக்கு நிறைய பணம் செலவாகும். மேலும் இந்தியாவினைப் போல் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்த மானியமும் கிடையாது.

இவ்வளவு சிரமத்திற்கு இடையிலும், கடந்த ஆண்டின் இறுதியில் மணிக்கு 6.7 மில்லியன் கிலோவாட் மின்சக்தியினை வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்களில் இருந்து மட்டும் பெற்று சாதித்து காட்டியுள்ளார்கள் ஜப்பானியர்கள். இந்த சாதனையினை எவ்வாறு இவர்களால் நிகழ்த்த முடிந்தது?

இந்த சவாலில் கிடைத்த வெற்றிக்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். முதலில் ஜப்பான் மக்கள் தங்கள் நாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவை தங்களுக்குடையது என கருதி தேசத்திற்காக களத்தில் இறங்கியது. மற்றொன்று அதுவரை ஜப்பானில் வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தியினை மின் வாரிய கம்பி தடத்தில் ஏற்றுமதி செய்யும் மின்சார இன்வெர்ட்டர்கள் (grid-tie type inverters) இல்லாமல் இருந்தது. இந்த தொழில்நுட்பத்தில் ஜெர்மனிதான் உலகத்திற்கே முன்னோடி எனலாம். ஆகவே சூரிய மின்சக்தியினை மின்வாரிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யும் இன்வெர்ட்டர்களை வடிவமைத்து சந்தைப்படுத்துதலில் எளிமைப்படுத்தியதன் விளைவு சூரிய மின் சக்தி உற்பத்தியில் புதிய பரிணாமத்தினை எட்டி உள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக ஜெர்மனிக்கு அடுத்து நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றலின் மூலம் பெறப்படும் மின்சாரத்தினை உடனுக்குடன் கண்காணிக்கும் மென்பொருள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தட்ப வெப்பநிலை, சோலார் பேனல்களில் இருந்து உருவாகும் மின் உற்பத்தி மற்றும் அதற்கு நிகரான கார்பன் டை ஆக்சைடு கழிவு எவ்வளவு தடுக்கப்படுகிறது என்பதனை அறுதியிட்டு தெரிந்து கொள்ளலாம். இப்போது இந்த வசதி திறன் அலைபேசிகளிலும் வந்து விட்டது.

தற்போது ஒரு கிலோவாட்/மணிக்கு ஏற்றுமதி செய்யப்படும் சூரிய மின்சக்தி ஏற்றுமதிக்கு (Feed-in tariff) 29 லிருந்து 35 யென் வரை மின் உற்பத்தி நிறுவனங்கள் தருகின்றது. இந்த மின்சக்தியினை வாங்குவதற்கு 10 லிருந்து 20 ஆண்டுகளுக்கு மின் உற்பத்தி செய்பவரோடு இந்நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்கிறது. ஆகையால் மக்களிடம் இத்திட்டதிற்கு தற்போது ஜப்பானில் நல்ல வரவேற்பு. இந்தியாவில் கடந்த ஆண்டுதான் சூரிய மின் சக்தியினை ஏற்றுமதி செய்யும் வகையிலான இன்வெர்ட்டர்கள் (grid-tie type inverters) சந்தைகளில் கிடைக்கத் தொடங்கி உள்ளன. இதன் விலையும், இதன் மீதான உள்நாட்டு உற்பத்தி வரியும் நீக்கப்பட்டால் நாமும் இதே போன்று சாதிக்க முடியும் என்று எண்ணுகின்றேன். ஆனால் சூரிய மின் உற்பத்தியினை உடனுக்குடன் கண்காணிக்கும் மென்பொருள் இன்னும் வடிவமைக்கப்படாமலே உள்ளது. இதனை இந்தியாவில் குறைந்த விலையில் வடிவமைத்தால் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் போது பெரும் செலவு மிச்சமாகும்.

(மேலும் தகவல்கள் அடுத்த இதழில் தொடரும்…)    

 

– முனைவர். பிச்சைமுத்து சுதாகர்

தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகம்

ஜப்பான்

(E-mail: vedichi@gmail.com)

 

 

முனைவர் பிச்சைமுத்து சுதாகர் பற்றி…

இயற்பியல் துறையில் 2009 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். குவாண்டம் துகள்களை கொண்டு செறிவூட்டப்பட்ட திறன் மிகுந்த சூரிய மின்கலங்களை (QDs-sensitized solar cells) எவ்வாறு நானோ நுட்பவியல் மூலம் வடிவமைப்பது என்ற தலைப்பில் பத்து ஆண்டுகளாக ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். தற்போது ஜப்பான் நாட்டின் மிகசிறந்த JSPS ஆராய்ச்சி விருதினைப் பெற்று தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தில் உள்ள சர்வதேச போட்டோ கேட்டலிஸ்ட் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணி புரிந்து வருகிறார். மேலும் இந்தியாவில் Solarix Energy System என்ற நிறுவனம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். சேலத்தில் இயங்கும் National Institute of Renewable Energy Technology என்ற நிறுவனத்தில் ஆராய்ச்சி பிரிவின் இயக்குநராகவும், சம கால சூழலில் ஸ்பெயின், இங்கிலாந்து, கொரியாவில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு சூரிய மின் சக்தி குறித்த ஆராய்சிக்கு வருகை பேராசிரியராகவும் உள்ளார்.

Likes(11)Dislikes(0)
Share
Share
Share