Feb 142015
 

6Youth

அதிகாலை நான்கு மணி -ஜனவரி மாதம் -ஹைதிராபாத்தில் நல்ல குளிர். இன்னும் கொஞ்ச நேரம் போர்வைக்குள் ஒளிந்துக் கொள் என்கின்றது மனம், இல்லையில்லை எழுந்துக்கொள் என்கிறது புத்‌தி. செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுசினிமா படம் போல் காட்டுகின்ற புத்தியை திட்டிக் கொண்டேஉடம்பை கட்டிலில் இருந்து தூக்கி உட்கார வைக்கின்ற மனதை பக்கத்து வீட்டு குக்கரின் விசில்சத்தமும், மிக்ஸீயின் லூட்டியும் பரபரப்பை ஏற்படுத்தி ஓட வைக்கிறது. “இவர்களுக்கெல்லாம் என்ன அவசரம்? இத்தனை காலை பொழுதில் என்ன சமையல் வேண்டி இருக்கிறது? பாவம் அந்த பெண்மணி புறநகரில் அமைந்த பொறியியல் கல்லூரியில் படிக்கும் அவளது பையனுக்கு காலேஜ் பஸ் காலை ஆறு மணிக்கே வந்துவிடும்; மெடிக்கல் நுழைவு தேர்விற்கு பயிலும் பெண் ஏழு மணிக்கு சென்றால் இரவு ஒன்பதுக்கு தான் வீடு திரும்புவாள். இவர்களுக்கு மூன்று வேளைக்கு தேவையான உணவு டப்பாக்களை நிரப்பி, தனது அலுவலகத்திற்கு ஓடும்”பொறுப்பான” தாயை நினைத்து மனதில் வாழ்த்திகொண்டே எழுந்து …….

பேஸ்ட் ஐ பிரஷிற்கு காட்டி அவை இரண்டையும் பல்லிற்கு காட்டி, முகத்துக்கு தண்ணீர் தெளித்து ஓடோடி வந்து பார்த்தால் மணி 4:30. குளிர் சாதன பெட்டியில் பால் பாக்கெட் இல்லை. சூடான காபிக்கு சபலப்பட்டு வாசலில் இறங்கினால் –“சார்ர்ர்” என்று இரண்டு சக்கர வாகனத்தில், முகமூடி கொள்ளைக்காரன் போல் சால்வை போர்த்திக்கொண்டு ஒருவர் நான்கு பள்ளி குழந்தைகளயும் அவர்களின் புத்தக மூட்டைகளயும் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் நைட்டியில் ஒரு தேவதை, ஸ்கூட்டியில் தனது அன்பு குவியலைக்கு, க்ரிஷ்ணா பரமாத்மாவே ஆச்சர்ய படும் அளவிற்கு, குட்டி அர்ஜூனனுக்கு எதிர் காலத்தை பற்றியும், படிப்பின் முக்கியத்துவத்தை பற்றியும் போதித்துக்கொண்டே ரதம் ஒட்டி சென்றார். அவ்வளவு குளிரில், அதிகாலையில் கூட்டம் கூட்டமாக துவக்க பள்ளி குழந்தைகள் முதல் முதுகலை பயிலும் மாணவர்கள் வரை, எங்கே எதை தேடி எதனை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்?

இந்த ஒரு நாள் மட்டும் அல்ல, வெய்யில் ஆனாலும், குளிரானாலும், மழை பெய்தாலும், புயல் அடித்தாலும், பனி மூட்டமானாலும், ராத்திரியில் ஒரு கும்பல், நண்பகலில் ஒரு கும்பல் என்று ஆறில் ஐந்து ஜாம்ங்கள் இவர்கள் எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள் என்று ஆலோசனை செய்தவாறே வீட்டிற்கு பால் பாக்கெட்டுடன் வந்தேன்.

இந்த மாதிரியான காட்சிகள் எனக்கொன்றும் புதிதல்ல என்றாலும் என்னை எண்ணற்ற முறை சிந்திக்க வைத்தது. பெரும்பாலான நாட்கள் எனது சிந்தனை மாணவர்களின் பற்றில் ஒரு பச்சாதாப உணர்விலும், பெற்றோரின் பால் பாவம் கலந்த கோபம் என்ற எண்ணத்திலும் முடிந்துவிடும். இல்லை “காலம் மாறிவிட்டது”என்ற அங்கலாய்ப்பில் முடியும் . ஒரு தாயாக என் குழந்தைகளயும் இப்படி தான் ஓட்டீனேனா அல்லது ஆசிரியையாக என்னிடம் பயின்ற மாணவர்களை உற்சாகபடுத்தினேனா? என்ற கேள்விகள் மனத்தில் எழாமல் இல்லை!!

அஷ்ட ஐஸ்வரியங்களில் பிரதானமாவை நன்மக்கட்செல்வமும், ஞானமும் ஆகும். தான் கருவில் உருவாகி கொண்டிருக்கும் சிசுவை பற்றிய கனவில் ஆனந்தப்படும் ஒவ்வொரு பெண்ணும் தன் குழந்தையின் எதிர் காலத்தை பற்றியும், அதன் புத்தி ஆற்றலை பெருக்கும் வழிமுறைகளையும் படிப்பாற்றல் பற்றியும் கனவு காண ஆரம்பித்து விடுகிறாள். பேச கற்றுக்கொண்டிருக்கும் போதே”நீ பெரியவன் ஆனப்புறம் என்ன ஆவே?” என்ற கேள்வியும், அதற்கு “டாக்டர்-என்ஜினீயர்” என்ற பதிலையும் தாய் தந்தையர், தாத்தா -பாட்டி என அனைவரும் அந்த குழந்தைக்கு பயிற்சி கொடுத்துவிடுகிறார்கள். அதோடு நிற்காமல் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கெல்லாம் பெருமையுடன் பறைசாற்றி கொள்கிறார்கள்! எனது தோழியின் ஒன்றரை வயதுமகனை, “உன் பெயர் என்ன?” என்று கேட்டால், “அனிருத் IIT” என்று அவன் மழலையில் பதிலளித்தது இன்னும் மறக்க முடியவில்லை. நிறங்கள், பூக்கள், காய் கனிகளின் பெயர்களை கூட சரியாக சொல்லததெரியாத குழந்தைக்கு IIT என்றால் என்னததெரியும் என்று எனக்குத்தெரியவில்லை.

பள்ளிக்கு செல்லும் முன்பே இந்த வகை பயிற்சி என்றால், இரண்டாம் பிறந்த நாள் முடிந்தால் போதும் – எந்த ஸ்கூலில் குழந்தையை சேர்க்க வேண்டும் என்னும் ஆராய்ச்சி எந்த பாடத்திட்டம் உயர்ந்தது என்றும் குறிப்பிட்ட பள்ளியில் நுழைவு பெற நடத்தப்படும் தேர்விற்கு பெற்றோர்களும் குழந்தைகளும் சித்தமாவதும், அதனையொட்டி அனுபவங்களின் பகிர்வு, கருத்து பரிமாற்றம் என்றெல்லாம் பெற்றோர்கள் பரபரப்படைகிறார்கள். இதுவரை மத்திய வர்க்‌க குடும்பங்களில் நாம் பெரும்பாலும் கண்டு வந்த இந்த நிலைமை இப்போது எல்லா வர்ககங்களிலும் ஊடுருவி இருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. ஆங்கில வழி கல்வி போதிக்கும் பள்ளிகளில் அலைமோதும் பெற்றோர்/ மாணவர் எண்ணிக்கையும், அரசினர் பள்ளிகளில் அதிலும் குறிப்பாக தாய் மொழியில் கல்வி கர்பவரின் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ளதையும் மறுக்க முடியாத ஒன்று!!

“இளமையில் கல்” என்றும்”எண்ணும் எழுத்தும் கண்ணெனா தகும்” என்ற அவ்வை பாட்டியின் சொல்லையும்“ஈன்றபொழுதினும்பெரிதுவக்கும்தன்மகனைசான்றோன்எனக்கேட்டதாய்”
என்ற வள்ளுவனின் வாக்கையும் நாம் சரியாக பேணி காத்து வருகின்றோமா? நாம் வீட்டு நம் நாட்டுகுழந்தைகள் தகுந்த செல்வங்களை பெற நம் கல்வி முறையும், திட்டங்களும் உதவி செய்கின்றனவா? வீடும் நாடும் பெருமை கொள்ளும் படி, சரியான சான்றோர்களும்விஞ்ஞானிகளும் உருவாக்கப்படுகிறார்களா? இந்த கேள்விகள் என் மனதை எப்போதும் அலைமோதிக் கொண்டே இருப்பதால்; ஒரு ஆசிரியையாக, ஒரு தாயாக சமூக நலத்தின் பால் ஆர்வம் உள்ளவளாக, தேசத்தின் நலம் இன்றைய மாணவர்களின் கையில்உள்ளது என்ற திடமான எண்னத்துடன் இதில் நம் எல்லோருக்கும் பொறுப்புண்டு என்ற வலுவான கருத்துடனும் இந்த தொடரை  B+ இணைய இதழில் எழுத துவங்குகிறேன். கருத்து பரிமாற்றம், நமது எண்ணங்களை வழிப்படுத்தவும், அணுகுமுறையில் சிறுதேனும் மாற்றம் ஏற்படுத்தும் என்ற கோரிக்கையுடனும் விடைபெறும்……………..

உங்கள் தோழி

பத்ம ரஞ்சனி

 

 

 

எழுத்தாளரைப் பற்றி..

இந்த தொடரை எழுதும் திருமதி பத்ம ரஞ்சனி அவர்கள் பற்றி ஒரு சிறு அறிமுகம்.கல்வி தொடர்பான இவர் எழுதும் இந்த தொடரின் நோக்கம் மாணவர்களுக்கு கல்வியின் மேல் ஒரு ஈடுபாட்டை, ஒரு ஆவலை, கற்றலை ஒரு சுகமான பயணமாக ஆக்க வேண்டும் என்பது தான்.

அவர் ஒரு ஹைதிராபாத் வாசி. பூர்விகம் நம் தமிழ்நாடு தான். 25 வருட கல்வி துறை அனுபவம் மிக்கவர்.மருத்துவ படிப்புக்கான தேர்ச்சி பெற்ற போதும் MBBS வேண்டாம்என்றுஇயற்பியல் எடுத்து. அந்த பாடத்தில் பல்கலைக்கழக முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.பிறகு ஆசிரியர் தொழிலின் மேல் உள்ள பற்றால் இயற்பியல் பேராசிரியராக பல்வேறு கல்லூரிகளில் பணி ஆற்றினார்.

தனது ஓய்வு நேரத்தில் மாணவருக்கு IIT JEE போன்ற தகுதி தேர்வுகளுக்கு பயிற்சி அளித்தார். திருமதி பத்ம ரஞ்சனி அவர்கள் இதை தவிர சமயம், அரசியல் மற்றும் சோதிடம் போன்ற துறைகளிலும் நல்ல ஈடுபாடும் தேர்ச்சியும் உள்ளவர். தமிழின் மேல் ஆளுமையும் பற்றும் உடையவர்.

Likes(4)Dislikes(0)
Share
Share
Share