May 142016
 

Untitled (640x334)

தென் இந்தியாவின் சிறந்த உணவான தோசையை பல ஊர்களில் பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறது இவர்களது குழு. அப்படி என்ன செய்கிறார்கள் இவர்கள்? “தோசாமேடிக்” (http://www.dosamatic.com/) என்ற நிறுவனத்தை தொடக்கி, அதன் மூலம் தோசை செய்யும் மெஷின்களை உலகெங்கும் விற்று வருகிறார்கள் அந்த நிறுவனத்தை தொடக்கிய திரு.ஈஸ்வர் விகாஸ் மற்றும் திரு.சுதீப் சபத் அவர்கள்.

2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இரண்டே ஆண்டுகளில் சுமார் ஆறு கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதித்துள்ளது. அவர்களது மெஷின்களை இப்போது உணவகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் என பல இடங்களில் விற்று வருகிறார்கள்.

கல்லூரியில் படித்துக் கொண்டே, சுயத் தொழில் தொடங்கும் சிந்தனை ஆழமாக பரவ, தங்களது கண்டுபிடிப்புகளின் செலவிற்காகவும், அனுபவதிற்காகவும் மாலை நான்கு மணிக்கு மேல் இருவரும் சில நிறுவனங்களில் வேலை செய்துள்ளது ஒரு ஆச்சரியம்.

சென்னை SRM  கல்லூரியில் 2013 ஆம் ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் படிப்பு முடித்து வெளிவந்தவுடன், தங்களுக்கு கிடைத்த பல நல்ல வேலைகளை நிராகரித்து, தங்கள் சுய தொழில் உறுதியாக நின்று வென்றும் உள்ளனர்.

பெங்களூரில் அலுவலகம் அமைத்து பல மெஷின்கள் ஆர்டர்கள் எடுத்து, நம் நாட்டில் விற்பதோடு மட்டுமன்றி, சுமார் 16 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யும் இந்த இருவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நம் B+ இதழுக்காக பேட்டி எடுத்தோம். இனி அவர்கள் பேட்டி..

பொறியியல் முடித்தப்பின் ஏன் வேலைக்குச் செல்வதை தேர்ந்தெடுக்காமல் சுயமாகத் தொழில் செய்யும் எண்ணம் ஏன் வந்தது?

பொறியியல் படிக்கும்போதே, சுய தொழில் தான் எங்களது பாதை என்பதை தீர்மானித்து விட்டோம். பொறியியல் பயின்ற எங்களது உறவினர்கள் பலரும் தனியார் அலுவலகங்களில் தினமும் பட்ட கஷ்டங்களை நாங்கள் கண்டதும் ஒரு முக்கிய காரணம். அதனால் முழுநேரம் இன்னொருவரிடம் சென்று வேலை பார்க்கும் எண்ணம் எங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே வரவில்லை. எனவே சொந்த நிறுவனத்தை துவக்கலாம் என்று முடிவெடுத்தோம்.

இந்த மெஷின் தயாரிக்கும் திட்டம் உங்களுக்கு எவ்வாறு தோன்றியது?

தில்லியில் ஒருமுறை நண்பர்களுடன் சேர்ந்து தோசை சாப்பிட வாய்ப்பு வந்தது. அப்போது ஒரு தோசைக்கு அங்கு 110 ரூபாய் பில் வந்தது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சென்னையில் ஒரு தோசை 25 முதல் 50 ரூபாய் என விற்கப்படும் போது, தில்லியில் மட்டும் ஏன் இந்த விலை என யோசித்தேன்.

மெஷின்களை வைத்து செய்யப்படும் உணவான பீட்சா, பர்கர் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையில் விற்கப்பட, மனிதர்களால் செய்யப்படும் தோசை போன்ற உணவுகளின் விலை அதிகம் இருப்பதற்கு காரணம், அவற்றை செய்யும்   (பயிற்சி பெறப்பட்ட) பணியாளர்களுக்கு தரும் ஊதியம் என்பதை உணர்ந்தோம். இதற்கென மெஷின்கள் இருந்தால், விலை குறையும் என எண்ணியதன் விளைவு தான் இந்தத் திட்டம்.

புது முயற்சி ஆயிற்றே, தோற்றுவிடுவோம் என்ற பயம் எப்போதாவது இருந்ததா? அதை எப்படி மீறி வெற்றிபெற்றீர்கள்? குடும்பத்தினர் ஆதரவு எவ்வாறு இருந்தது?

குடும்பத்தினர் ஆதரவு முழு அளவில் தொடக்கத்திலிருந்தே இருந்தது. அவர்கள் சிறு அளவில் நிதியும் தொடக்கத்தில் தந்தனர்.

தோல்வி பயம் எங்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை. புது முயற்சியோ, வெற்றிப் பெற்ற தொழிலோ, அனைத்திலுமே தோல்விகள் இருந்துள்ளன. தோல்வியை மட்டுமே யோசித்தால் வெற்றி பெற இயலாது.

நீங்கள் சந்தித்த சவால்கள் குறித்து?

சவால்கள் ஆரம்பகட்டமான டிசைன் நிலையிலேயே தொடங்கியது எனலாம். எங்களுக்கு டிசைன் அனுபவம் இல்லாததால் அதற்கேற்ற சவால்களை பெருமளவில் சந்தித்தோம். பின்னர் அந்த டிசைனை வேலை செய்யும் மெஷினாக மாற்றுவது மேலும் கடினமாக இருந்தது.

அடுத்து, தோசை மாவை மெஷினிற்குள் பரப்புவதற்கு, மிக மெதுவாக சுற்றக் கூடிய ஒரு மோட்டார் தேவைப்பட்டது, அனால் எங்களுக்கு கிடைத்ததோ ஒரு நிமிடத்திற்கு 1400 முறை சுழலும் மோட்டார் மட்டுமே. இந்த பிரச்சினையை சமாளிக்க பல பேராசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்டோம். கடைசியில் கல்லூரிக்குக் கூட செல்லாத சென்னையில் ஒரு மெக்கானிக் எங்களுக்கு அதற்கு முழு பதிலையும் சொல்லிக்கொடுத்தார்.

முக்கியமாக 150 கிலோ எடையுடன் இருந்த மெஷினை 60 கிலோவாக மாற்ற நினைத்தோம். அப்படி இருந்தால் தான் ஒரு ஆட்டோவில் அந்த மெஷினை ஏற்ற முடியும்.

இது போல் பல சோதனைகளை கடந்து, முதல் ப்ரோடோடைப் (மாதிரி) மெஷினை தயாரித்தும், அதலிருந்து சரியான முதல் தோசை வரவே எட்டு மாதம் ஆகியது.

இத்தனை பிரச்சினையால், எப்போதாவது ஏன் சுய தொழிலிற்கு வந்தோம், எங்காவது வேலைக்கே சென்றிருக்கலாம் எனத் தோன்றியதா? அவ்வாறு உள்ள மனநிலையை எவ்வாறு கையாண்டீர்கள்?

அதுபோல் சிந்தனை பல முறை வந்தது. OMR ரோட்டில் உள்ள IT நிறுவனங்களைப் பார்க்கும் போதும், ஏதாவது பெரிய நிறுவனங்களை பார்க்கும் போதும், அங்குள்ள வசதிகளைக் காணும்போதும் தோன்றும். அவைகளைப் பார்த்தப்பின்,  நம்மிடம் ஒரு நல்ல அலுவலகம் கூட இல்லையே, உட்கார கூட சரியான இடமில்லையே, அருந்துவதற்கு கூட நல்ல தண்ணீர் இல்லையே என்றெல்லாம் கூட தோன்றியதுண்டு.

ஆனாலும் யாரேனும் சவால் என அளித்தால் அதை எதிர்கொள்ள விரும்புவோம். நாம் எப்படி தோல்வி அடைவது? நாம் தோல்வி அடைந்து விடக்கூடாது என்ற எண்ணம் இத்தனை சவாலையும் தாண்டி வரவழைத்தது.

உங்கள் எண்ணத்தில் தொழில் தொடங்குவதற்கு சரியான வயது என எதைக் கூறுவீர்கள்?

21 வயது என்று தான் சொல்லுவேன். எவ்வளவு சிறிய வயதில் தொடங்குகின்றீர்களோ, அத்தனை நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் சிறு வயதில் நமக்கு பொறுப்புகள் மிகக் குறைவாக இருக்கும், குடும்பம் பிள்ளைகள் என கூடுதல் பொறுப்புகள் இருக்காது.

உங்களது வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக எதைக் கூறுவீர்கள்?

பல விஷயங்கள் இருந்தாலும், மிக முக்கியமாக விடாமுயற்சியை கூறுவோம். எப்போதுமே தொடங்கிய ஒரு செயலை, எத்தனை சவால்கள் வந்தாலும்  விட்டுவிடாதீர்கள்.

தொழில் அனுபவத்தில் ஏதேனும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத சம்பவங்கள் ஏதேனும் உள்ளதா?

எண்ணிலடங்கா சம்பவங்கள் உள்ளன. சுய தொழிலில் தினமும் ஏதேனும் அனுபவம் கிடைத்துக்கொண்டே தானிருக்கும்.

ஒருமுறை கல்லூரி நாட்களில் எங்களது மெஷின் டிசைனை ஆராய்ந்து ஒப்புதல் அளிக்க ஒரு மூத்த விஞ்ஞானியை அழைத்து வந்தோம். அவர் ஒப்புதல் அளித்தால் அரசிடமிருந்து எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் அவருக்கோ அந்த மெஷின் பிடிக்கவில்லை. எங்களுக்கு ஆதரவாகவும் அவர் இல்லை.

ஆனால் நாங்கள் இப்போது பெற்றுள்ள வெற்றியைப் பார்த்து பிரம்மித்த அவர், எங்களை வெகுவாக பாராட்டி அங்கீகாரித்தார். நமது முயற்சி பெற்றுள்ள வெற்றியைக் கண்டு நம்மைப் போன்றே பலர் முயற்சிப்பார்கள் என்றும் கூறிச் சென்றார்.

அடுத்த இலக்கு என்ன?

தோசை மெஷின் போலவே, சமோசா செய்யும் மெஷின், கறி செய்யும் மெஷின் என அடுத்தடுத்து திட்டம் வைத்துள்ளோம். இரண்டு வருடங்களில் 100 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டவும் எண்ணியுள்ளோம்.

உங்களைப் போன்றே சுயத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனை?

யோசித்தது போதும், உடனடியாக வேலை செய்யத் தொடங்குங்கள். அடுத்த மாதம் செய்யலாம், அடுத்த வருடம் செய்யலாம் என எந்த திட்டத்தையும் தள்ளிப் போடாதீர்கள்.

Likes(8)Dislikes(0)
Share
Share
Share