Nov 232016
 

cot

புதுசு கண்ணா… புதுசு… சீறுநீரக கற்களை அகற்ற புதிய கட்டில்

சீனா:
புதுசு கண்ணா… புதுசு… இது ரொம்பவே புதுசு என்று ஒரு புதிய கட்டிலை உருவாக்கி உள்ளார் சீனர் ஒருவர். இந்த கட்டில் எதற்காக தெரியுங்களா?

சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் வசிக்கும் ஜீ கிங்வா, சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்கு புதிய கட்டில் ஒன்றை உருவாக்கி உள்ளதுதான் விஷயமே.

இவரது மனைவிக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு, இடது சிறுநீரகம் அகற்றப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு வலது சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

ஏற்கெனவே ஒரு சிறுநீரகத்துடன் இருப்பவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்களை அகற்றுவது ஆபத்து என்ற நிலையால்  தினமும் சில நிமிடங்கள் தலைகீழாக நின்றால் கற்கள் இடம் மாறும் என்றும் ஆலோசனை வழங்கி உள்ளனர் டாக்டர்கள்.

என்ன செய்வது என்று யோசித்த அவர்… தன் மனைவிக்காக ஒரு புதுமையான கட்டிலையே உருவாக்கி விட்டார். எப்படி என்கிறீர்களா? மனைவியைப் படுக்க வைத்து, கட்டிலோடு சேர்த்து பிணைத்தார்.

டிராக்டர் இன்ஜின் மூலம் கட்டிலுக்கு அதிர்வுகளை உண்டாக்கினார்.
கட்டில் மேலும் கீழும் செல்லும்போது சிறுநீரகக் கற்கள் இடம்பெயர்ந்தன. விஷயம் பரவி, அந்த கிராமத்தில் மட்டும் மூன்று பேர் சிறுநீரகக் கற்கள் பிரச்னையில் இருந்து வெளிவந்து விட்டனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்க… இந்த கட்டிலுக்கான காப்புரிமை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஜீ கிங்வா. மனைவிக்காக களத்தில் குதித்து புதுகட்டிலையே கண்டுபிடித்துள்ளார்.

தர்றோம்… தர்றோம்… சுவிஸ் ஒப்புதல்… “கருப்பு பண” இந்தியர்கள் கலக்கம்

சுவிட்சர்லாந்து:
தர்றோம்… தர்றோம்… அந்த லிஸ்டை தர்றோம்… என்று சுவிஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

சுவிஸ் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரத்தை வழங்க அந்நாடு ஒப்புதல் தெரிவித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியர்கள் பலரும் முறைகேடான வகையில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்த பட்டியல் என்று அவ்வபோது ஒரு பட்டியல் வெளியாகும். பின்னர் அது போலி என்றும் வதந்தி என்றும் தெரிய வரும். பரபரப்பிற்காக இப்படி செய்யப்படுகிறது.

எனினும், மத்திய அரசு தரப்பில் போதுமான விவரங்களை கேட்டு, சுவிட்சர்லாந்து அரசுக்கு பல முறை விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு எதிர்பார்க்கும் விபரங்கள் கிடைக்காத நிலையே நீடித்து வந்தது.

இந்நிலையில் தற்போது தங்கள் நாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை வழங்குவதாக சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக, அந்நாடு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாக, சுவிஸ் வங்கிகளில் சேமிப்பு வைத்துள்ள இந்தியர்களின் விவரம் படிப்படியாக இந்திய அரசுக்கு வழங்கப்படும் என்றும் சுவிஸ் அரசு கூறியுள்ளது.

இந்த தகவல் கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்துள்ள இந்தியர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

மயக்கும் குரலால் பாடிய பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

சென்னை:
தன் மயக்கும் இசை புலமையால் புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா (86) உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார்.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் பாலமுரளி கிருஷ்ணா. இந்நிலையில் சென்னை, ஆர்.கே.சாலையிலுள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரு முறை தேசிய விருது பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா. பத்ம விபூஷன், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுகளையும் பெற்றவர்.

சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா.

துயரம், வேதனையடைந்தேன்… முதல்வர் ஜெயலலிதா இரங்கல் அஞ்சலி

சென்னை:
கர்நாடக இசை மேதை பாலமுரளிகிருஷ்ணா மறைந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாலமுரளிகிருஷ்ணா தனது 86வது வயதில் உடல்நலக்குறைவால்
காலமானார். அவரது மறைவுக்கு கர்நாடக இசை கலைஞர்கள், திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
பாலமுரளிகிருஷ்ணா மறைந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். கர்நாடக இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள அவர், சினிமா படங்களிலும் காலத்தால் அழியாத பாடல்களை பாடியுள்ளார்.

அவரது 75வது பிறந்த நாள் விழாவை ஒட்டி கடந்த 2005ம் ஆண்டு சென்னையில் எனது முந்தைய ஆட்சியின்போது அரசு சார்பாக விழா எடுத்து, கவுரவிக்கப்பட்டது. அந்த விழாவில், அவர் எனக்காக ஜெய ஜெய லலிதே என்ற ராகத்தை அர்ப்பணித்தார்.

பதிலுக்கு நான், கந்தர்வ கான சாம்ராட் என்ற பட்டத்தை வழங்கியதும் பசுமையான நினைவுகளாக உள்ளன. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

வின்னரும்… ரன்னரும்தான்… மற்றவங்களுக்கு டெபாசிட் கூட இல்ல…

தஞ்சாவூர்:
வின்னர், ரன்னருக்கு அப்புறம் யாருமே இல்லீங்களே… டெபாசிட்டையே காலி செய்து விட்டார்களே மக்கள் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

என்ன விஷயம் தெரியுங்களா? தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வின்னர் ஆகி உள்ளது. திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

ஆனால் பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகியவை டெபாசிட்டை இழந்து தவிக்கின்றன. இதில் 3ம் இடத்தை பெற்று சற்று கவுரவமாக தலை நிமிர்ந்துள்ளது பாஜ.

தேர்தலில் பதிவான வாக்குகளில் 6இல் ஒரு பங்கு பெறும் வேட்பாளர்கள் மட்டுமே செலுத்திய தொகையை திரும்பப் பெற முடியும். திருப்பரங்குன்றம் தொகுதியில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 57 வாக்குகள் பதிவானது. இங்கு டெபாசிட் தொகையை பெறுவதற்கு, 33 ஆயிரத்து 843 வாக்குகள் பெற வேண்டும்.

இதேபோல, 1 லட்சத்து 64 ஆயிரத்து 582 வாக்குகள் பதிவான அரவக்குறிச்சி தொகுதியில் 27 ஆயிரத்து 430 வாக்குகளும், ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 388 வாக்குகள் பதிவான தஞ்சாவூர் தொகுதியில் 31 ஆயிரத்து 65 வாக்குகளும், பெற வேண்டும்.

ஆனால், பாஜ, தேமுதிக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் மூன்று தொகுதிகளிலும் மிகக் குறைவான வாக்குகளையே பெற்றன. இதனால், அந்தக் கட்சிகள் டெபாசிட் தொகையை இழந்துள்ளன.

தமிழகத்தில் விரைவில் 4 ஜி சேவை… வோடோபோன் அறிவிப்பு

மும்பை:
தமிழகத்தில், விரைவில் 4ஜி சேவையை தொடங்க உள்ளதாக, வோடோபோன் இந்தியா தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வோடோபோன் நிறுவனத்தின் சேவையை 1.50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 4ஜி சேவை தொடங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

4ஜி ஸ்மார்ட்போன்களில் இச்சேவை எளிதாக கிடைக்கும். 4ஜி சிம் கார்டுகள் 2ஜிபி டேட்டா வேலிடிட்டி உடன் விநியோகிக்கப்படும் என்றும் வோடோபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக, தனது 4ஜி சேவையும் சிறப்பான வரவேற்பை பெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது இந்நிறுவனம்.

குழந்தை- ஐபேட்… இரண்டும் ஒரே வெயிட்… அபுதாபியில் அதிசயம்..

அபுதாபி:
அட என்னப்பா… உண்மையா… என்றுதான் மக்கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆமாங்க… நம்ப முடியாத அந்த விஷயம் இதுதான்…

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐ-பேடை விட குறைவான எடையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளதுதான் அனைவரின் புருவங்களும் கேள்விக்குறியாக காரணமாக அமைந்துள்ளது.

அந்த அதிசயக் குழந்தையின் எடை வெறும் 631 கிராம்தான் என்றால் நம்புவீர்களா. ஆனால் அதுதான் உண்மை. இந்த பிரசவத்தை வெற்றிகரமாக முடிந்து குழந்தை பிறந்ததை டாக்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர்.

இதுகுறித்து டாக்டர் குழு தலைவர் கோவிந்தா ஷெனாய் கூறுகையில், ‘‘அந்த அதிசய குழந்தை 26.5 வாரங்கள் கருவில் இருந்து பின்னர் பிரசவமானது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தை உள்ளது. குழந்தையை பிரசவம் செய்த நேரம் தான் மிகவும் முக்கியமானது.

அப்போது அந்த தாய் மிகவும் அபாயகரமான சூழலில் இருந்தார். பிரசவ வலி வந்து மருத்துவமனைக்கு வந்தபோது அவருக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தது. தாயும், குழந்தையும் மிகவும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குணமடைந்துள்ளனர்.

தற்போது குழந்தையின் எடை 2.05 கிலோவாக அதிகரித்துள்ளது. குழந்தை மிகவும் நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வாங்க… வாங்க… நாளையிலிருந்து பிக் பஜாரில் ரூ.2000 வாங்கலாம் வாங்க…

புதுடில்லி:
நாளொரு அறிவிப்பாக கொடுத்து மக்களின் பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் பிரச்னைக்கு மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக தீர்வு கண்டு வருகிறது. ஆமாங்க… இப்போ… வாங்க… வாங்க… பிக் பஜாருக்கு பணம் வாங்க வாங்க… என்று அறிவித்துள்ளது.

நாளை (24ம் தேதி) முதல் பிக் பஜாரில் டெபிட் கார்ட் மூலம் ரூ.2000 பெறலாம் என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 8-ந் தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள டிசம்பர் 30-ந் தேதி வரை அவகாசமும் அளித்தது.

இதனால் பணத்தை மாற்றுவதற்காக நாட்டின் அனைத்து வங்கிகளிலும் மக்கள் இன்றும் அலை மோதி வருகின்றனர். வங்கிகளுக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

ஏ.டி.எம்.களிலும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இது தேவைக்கு ஏற்ப பணம் எடுத்து செலவு செய்யும் மாத சம்பளக்காரர்களை அதிகளவில் பாதித்துள்ளது.

வரும் வாரம் 1-ந்தேதி சம்பளத்தையும் ஏ.டி.எம்.மில் எடுக்க முடியாமல் போய் விட்டால் நிலைமையை சமாளிக்க முடியாமல் போய் விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாத சம்பளத்தை ரொக்கமாக தருமாறு தனியார் நிறுவன ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நாளை (24ம் தேதி) முதல் பிக் பஜாரில் டெபிட் கார்ட் மூலம் ரூ.2000 பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஓரளவிற்கு பணத்தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாக்கிரதை… “தில்லாலங்கடி” வங்கி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

புதுடில்லி:
ஜாக்கிரதை என்று சுட்டு விரல் நீட்டி வங்கி அதிகாரிகளை கடுமையாக எச்சரித்துள்ளது ரிசர்வ் வங்கி. எதற்காக தெரியுங்களா?

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் தினமும் தங்களின் மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு வங்கியில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றிச் செல்கின்றனர்.

ஆனால், ஒருசில வங்கிகளில் அதிகாரிகள் தங்களுக்குத் தெரிந்த நபர்களுக்கு அதிகளவில் நோட்டுக்களை மாற்றிக்கொடுப்பதாக பெரிய அளவில் புகார் எழுந்துள்ளது. மக்கள் வரிசையில் காத்துக்கிடக்க இப்படி வங்கி அதிகாரிகள் முறைகேடாக நடந்து கொள்வது மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுங்களா!

சில இடங்களில் வங்கி கிளை அதிகாரிகள் அதிக ரொக்கமாக பணம் பறிமாறப்பட்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. வங்கி அதிகாரிகள் மோசடி முறைகளில் ஈடுபட வேண்டாம். ஊழியர்களை கண்காணித்து ரூபாய் நோட்டை மாற்றுவதில் முறைகேடு செய்யும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், ரூபாய் நோட்டு விவரத்தை வங்கிகள் பதிவு செய்ய வேண்டும். டெபாசிட் ஆவணங்களை வங்கிகள் முறையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பழைய ரூ.1000 நோட்டுக்கட்டுகளுடன் டில்லியில் ஆப்கன் பெண் சிக்கினார்

புதுடில்லி:
புதுடில்லியில் 10 லட்சம் ரூபாய் பழைய நோட்டுகளுடன் இருந்த ஆப்கான் பெண்ணை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த தகவல் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுகளுடன் பிடிபட்டுள்ளார்.

காபூலில் இருந்து புறப்பட்டு அவர் புதுடில்லி வந்துள்ளார். விமான நிலையத்திற்குள் இறங்கியவுடன் அந்த பெண் மீது சந்தேகப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது இந்தியாவில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள பழைய 1000 ரூபாய் நோட்டுகள் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  போதைப் பொருள் கடத்தலுக்காக அவர் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கான் பெண்ணிடம் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவரிடம் இருந்து 9.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. அவர் அணிந்திருந்த ஆடையிலும் பணத்தினை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காம்பீர் காலி… புவனேஸ்வர் வந்துட்டார்… இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

மும்பை:
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காம்பீர் இடம் பெறவில்லை. புவனேஸ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

2-வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த நிலையில் 3-வது போட்டி மொகாலியில் வரும் 26-ந்தேதி தொடங்குகிறது. மீதமுள்ள 3 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கம்பீர் காணாமல் போய் உள்ளார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி வீரர்கள் விபரம்: விராட் கோலி, ரகானே, லோகேஷ் ராகுல், முரளி விஜய், புஜாரா,  கருண் நாயர், சகா, அஸ்வின், ஜடேஜா, ஜயந்த் யாதவ், மிஸ்ரா, ஷமி,  உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா.

முதல் போட்டியில் மட்டும் பங்கேற்ற கம்பீர் 2வது போட்டியிலும் இடம்பெறவில்லை. தற்போது 3வது போட்டியிலும் இவருக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Nov 232016
 

Spl 2

சங்கீத சாம்ராஜ்ய த்தின் சக்ரவர்த்தி பால முரளி கிருஷ்ணா
தாலாட்டும் குரலால் மக்களை துயில வைத்த இசை மாமேதை

தூங்காத குழந்தைகளும் அமுதகானம் போன்ற இசையை கேட்டால் தூங்கிவிடும் என்பர். தாலாட்டும் அந்த வகைதானே! அப்படி இசையால் நம்மை தாலாட்டி துயில வைத்த இசை மேதை மீளாத் துயரில் நம்மை ஆழ்த்தி விட்டு நிரந்தரமாக துயில சென்றவிட்டது. ஆம்… இசையில் பல சாதனைகள் செய்த கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா (86) காலமாகிவிட்டார். தாலாட்டிய இசைக்கு நம் கண்ணீர் அஞ்சலி…

பாலமுரளி கிருஷ்ணா, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சங்கரகுப்தம் என்ற இடத்தில் 1930–ம் ஆண்டு ஜீலை மாதம் 6–ந் தேதி பிறந்தார். குடும்பமே இசைக்குடும்பம் என்று சொல்ல வேண்டும்.

காரணம் பாலமுரளி கிருஷ்ணாவின் தந்தை பட்டாபி ராமய்யா… இசையமைப்பாளர். தாயார் தாய் சூர்ய காந்தம்மாள். வீணை வாசிப்பதில் சிறந்தவர். குழந்தை பருவத்திலேயே சோகத்தை சுமந்தார் பாலமுரளி கிருஷ்ணா. இவரது தாயார் இறந்து விட தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார்.

இசையில் தவழ்ந்த வீட்டில் பிறந்த இந்த சிறுவனுக்கும் இசைத்துறையில பெரிய ஈடுபாடு ஏற்பட்டது. கர்நாடக இசையை கற்க தொடங்கினார். இவரது முதல் இசை நிகழ்ச்சி என்றால் அது 8 வயதிலேயே நடந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

ஆந்திரா விஜயவாடாவில் நடந்த தியாகராஜ ஆராதனை இசைநிகழ்ச்சியில் முதன்முதலாக பங்கேற்றார். ஆராதனையில் இவர் பாடிய விதத்தை கண்டு ‘பால’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.

இவரது துருதுருப்பும், சுறுசுறுப்பும் இசையில் அடுத்த பக்கங்களை ஏற்படுத்தின என்றுதான் சொல்ல வேண்டும். 15 வயதிற்குள் 72 மேள கர்த்தாக்களையும் ஆளும் திறமையும் அவற்றை பயன்படுத்தி கிருதிகளை உருவாக்கும் திறமையையும் பெற்றிருந்தார். இசை ஆர்வம் காரணமாகப் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு உதாரணமாக இவர் மஹதி, சுமுகம், சர்வபநீ, ஓம்காரி, கணபதி உள்பட பல்வேறு ராகங்களை உருவாக்கியவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதற்கு முக்கிய காரணம் இசையில் மீது இவருக்கு இருந்த அதீத ஆர்வம்தான்.

உலக அளவில், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்பட பல நாடுகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான இசைக்கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். சினிமாவிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது. இதனால்தான் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், சமஸ்கிருத மொழிகளில் 400–க்கும் அதிகமான பாடல்களுக்கு இசை அமைத்து உள்ளார்.

தில்லானாக்களில் சங்கதிகளைப் புகுத்தி புதுமை செய்தவர். இப்படிப் பல சாதனைகளை செய்திருந்தாலும் கூட இவரது புதிய முயற்சிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

முதன் முதலாக 72 மேளகர்த்தாக்களில் முதல் ராகமான கனகாங்கி ராகத்தில் கீர்த்தனையைத் தொடங்கி புதுப்புது கீர்த்தனைகளைப் பாடி, இசைக்கல்லூரி முதல்வராகி, இசைமேதையாகி, சரஸ்வதி கடாட்சத்துடன் இசையுலகின் உயரிய விருதுகளை அனைத்தும் பெற்று சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் பால முரளி கிருஷ்ணா.

1967–ல் வெளிவந்த ‘பக்த பிரகலாதா’ என்ற புராண படத்தில் நாரதர் வேடத்தில் நடித்துள்ளார். இசை, இசையமைப்பு, நடிப்பு என்று பல துறைகளிலும் “பக்காவாக”  கால் பதித்து வெற்றிக் கொடி நாட்டியவர். தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல் இசையில் இவர் செய்தது எல்லாம் சாதனை என்றே சொல்லவேண்டும்.

இசை குறித்த இவரது ஆய்வுகள் வாழ்நாள் சாதனையாகும். இசை வைத்தியத்தில் நம்பிக்கைக் கொண்டவர். அது குறித்து பல ஆராய்ச்சிகள் செய்தவர். தெலுங்கு, கன்னட, சம்ஸ்கிருத, மலையாள, பெங்காலி, பஞ்சாபி, ஹிந்தி மொழிகளில் பெரும் புலமை உடையவர்.

சிவாஜிகணேசன் நடித்த ‘திருவிளையாடல்’ படத்தில் ‘ஒரு நாள் போதுமா! இன்றொரு நாள் போதுமா! நான் பாட இன்றொரு நாள் போதுமா!…’ என்ற பாடல் இன்றும் பல கோயில்களில் மார்கழி மாதத்தில் ஒலிக்கிறது. இதை பாடியது இந்த இசை மேதைதான்.

இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. ‘கவிக்குவில்’ படத்தில் ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான், ராதையை…’ , ‘கலைக்கோவில்’ படத்தில் ‘தங்க ரதம் வந்தது…’, ‘நூல் வேலி’ படத்தில் ‘மவுனத்தில் விளையாடும் மனசாட்சி…’, ‘பசங்க’ படத்தில் ‘அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதற்குள்ளே தேடு’ என்ற காலத்தாலும் அழிக்க முடியாத கல்வெட்டு போன்ற அருமையான பாடல்களை பாடி இசையை ரசிக்க தெரியாதவர்களை கூட தாளம் போட வைத்தவர் பாலமுரளிகிருஷ்ணா.

இவரது இசை சாதனைகளுக்காக மத்திய அரசு பத்மபநீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை பெற்ற இசைக்கலைஞரும் இவர்தான். சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக 2 முறை தேசிய விருது தேடி வந்து இவரிடம் அடைக்கலமாகி உள்ளது.

கர்நாடக இசைத்துறையில் சங்கீத கலாநிதி, சங்கீத கலா சிகாமணி போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார். மயக்கும் சங்கீத குரலில் மக்களை தாலாட்டிய மகத்தான கலைஞர் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.

தனக்கே உரித்தான தனித்துவமான குரலால் மக்களை ஈர்த்து வந்த கானக்குயில் கண்மூடி நிரந்தரமாக தூங்கி விட்டது. இந்த இழப்பு இசைத்துறைக்கு பெரும் பேரிடிதான் என்பதை மறுக்க முடியாது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Nov 222016
 

Doc

மக்கள் நேய டாக்டரின் இறுதிச்சடங்கு… ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்பு

கோவை:
மக்கள் நேய டாக்டரின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஆயிரமும் வேண்டாம்… ஐந்நூறும் வேண்டாம்… வெறும் 20 ரூபாய் இருந்தால் போதும்… வாங்க… என்னிடம் மருத்துவம் பார்க்கலாம் என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் மனிதநேயத்தோடு மருத்துவம் பார்த்தவர் கோவை சிங்காநல்லூர் ராஜ கணபதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (67).

நல்ல உள்ளங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது போல் சின்ன காயத்திற்கு கூட அந்த டெஸ்ட்.. இந்த டெஸ்ட் எடுக்க சொல்லும் மருத்துவமனைகள் மத்தியில் தளராமல் தன் சேவை செய்து வந்தவர் பாலசுப்பிரமணியன்.

ஆவாரம்பாளையம் சாலையில் சிறிய அறை ஒன்றில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். நோயாளிகளிடம் 2 ரூபாயை மட்டுமே பெற்றுக் கொண்டு சிகிச்சை வழங்கி வந்தார். பணம் இல்லாதவர்களிடம் அதைக்கூட வாங்கமாட்டார் என்றால் பார்த்துக்கோங்க…

கடந்த சில ஆண்டுகளாக தனது கட்டணத்தை 2 ரூபாயில் இருந்து படிப்படியாக 20 ரூபாயாக உயர்த்தி மருத்துவ சேவையைத் தொடர்ந்து செய்து வந்தார். இதனால் பயனடைந்த ஆவாரம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி ஏழை, எளிய மக்கள், அவரை 20 ரூபாய் டாக்டர் என்றே அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பால் இவர் இறந்தார். நேற்று அவரது உடல் ஒண்டிப்புதூர் அருகே மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது நடந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர் என்றால் பார்த்துக்கொள்ளுங்க… மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய டாக்டருக்கு மக்களின் இறுதி அஞ்சலி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது.

நீ அன்பானவன்… கருணையானவன்… ஒபாமாவின் பாராட்டு மழையில் நனைந்த சிறுவன்…

வாஷிங்டன்:
நீ அன்பானவன், கருணையானவன் என்று ஒபாமாவால் பாராட்டப்பட்டுள்ளான் சிறுவன் ஒருவன். யார் தெரியுங்களா?

சிரியாவில் குண்டுவெடிப்பால் இடிந்து போன கட்டிடத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் புகைப்படம் வைரலானதே ஞாபகம் வருகிறதா? அந்த சிறுவனை சிரியாவில் இருந்து அழைத்து வந்து தன்னுடன் பள்ளியில் ஆங்கிலம் பயிற்றுவிக்க போவதாக ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினான் அமெரிக்க சிறுவன்.

அதை ஒபாமா படித்து மிகவும் உறைந்துபோனார். அந்த சிறுவனை நேரில் அழைத்து அவனுக்கு பார்ரட்டுகள் தெரிவித்தார். அந்த சிறுவனிடம், நீ மிகவும் அன்பானவனாகவும், கருணை உள்ளவனாகவும் இருப்பதோடு மட்டுமில்லாமல் பிறரையும் அதேவகையில் நினைக்கும்படி செய்து விட்டாய் என்று பாராட்டி தள்ளியுள்ளார்.

சின்ன வயதில் பெரிய விஷயம் அல்லவா? நாமும் பாராட்டுவோம்…

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் ஒரு பகுதி ரொக்கம்… மம்தா அதிரடி

கோல்கட்டா:
யார் என்ன அதிரடி திட்டம் கொண்டு வந்தா என்ன… எங்க மாநில அரசு ஊழியர்களுக்கு நாங்க இருக்கிறோம் என்று மம்தா குரல் எழுப்பி உள்ளார். எப்படி தெரியுங்களா?

”மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி ரொக்கமாக அளிக்கப்படும்,” என்று அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.

பழைய நோட்டுகள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

இதற்கிடையில் மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாக அளிக்கப்படும் என்று நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை, மாநில அரசே ரொக்கமாக அளிக்கும் என்றும் சொல்லியிருப்பதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 ஜப்பானை ஆட்டியது நிலநடுக்கம்… ரிக்டரில் 7.4 பதிவு… சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ:
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஜப்பான் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். என்ன காரணம் தெரியுங்களா?

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.4 எனப் பதிவாக… உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் ரிக்டரில் 7.4 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. புக்குசிமாவுக்கு அருகாமையில் 20 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.

நிலநடுக்கம் காரணமாக டோக்கியோ வரை நிலஅதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இதில் 2 பேர் காயடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் காரணமாக புக்குசிமா மற்றும் மியாகி பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி உடனடியாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புக்குசிமாவில் அணு உலை அமைந்துள்ளதால் சுனாமி ஏற்பட்டால் பெரும் விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியல் ஏற்பட்டுள்ளது.

அணு உலையில் 1 மீ., உயரத்துக்கு சுனாமி தாக்கியதாகவும், இதனால் பாதிப்பு இல்லை எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணு உலையில் நீர் குளிர்ச்சி கட்டமைப்பின் மூன்றாவது உலை செயற்பாட்டை நிறுத்தியுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல்தான் கடந்த 2011ம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் புக்குசிமா அணு உலை சேதத்துக்குள்ளானது என்பது இங்கு நினைவுப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை ஆகியவற்றால் மக்கள் வெகுவாக அச்சத்தில் உள்ளனர். பலர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

மழை தொடரும்… வானிலை மையம் தகவல்… வட தமிழகத்தில் வறண்ட வானிலையாம்…

சென்னை:
மழை தொடரும் என்று வானிலை மையம் வழக்கம் போல் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு மக்கள் கமெண்ட் என்ன தெரியுங்களா? வரும்… ஆனா வராது… என்பதுதான். சரி விஷயத்தை பார்ப்போம்…

‘குமரி கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால், தென் மாவட்டங்களில் மழை தொடரும்’ என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியை ஒட்டி, இலங்கை அருகே, இந்திய பெருங்கடலில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 3 நாட்களாக மையம் கொண்டுள்ளது. இதனால் தென் மாவட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 55 மி.மீ., மழையும், திருத்துறைப்பூண்டியில் 100 மி.மீ., மழையும் பெய்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: குமரி கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் வடக்கு நோக்கி நகர்வதால், தென் மாவட்ட கடலோரப் பகுதியில் கனமழை பெய்யும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். கேரளா, லட்சத்தீவு பகுதிகளிலும் கனமழை பெய்யும். வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

அடப்பாவிங்களா… என்ன நடக்குது நாட்டுல… வங்கியிலிருந்து பழைய நோட்டுக்கள் ரூ. 1 கோடி கொள்ளை

புவனேஸ்வர்:
எப்படிங்க… இது எப்படிங்க நடக்கும்… என்ன நடக்குது நாட்டுல என்று புரியாமல் மக்களி விழிப்பிதுங்கிடி வருகின்றனர். என்ன விஷயம் தெரியுங்களா?

மத்திய அரசு நோட்டு விவகாரத்தில் அதிரடிக்க… மக்கள் வங்கிகளுக்கு படையெடுக்க என்ற நாடே விழிப்பிதுங்கி கிடக்கும் நிலையில் ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது ஒடிசாவில். என்னன்னு பாருங்களேன்.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, பழைய, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள், ஒடிசாவில் உள்ள ஒரு வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதுதான் அது.

ஒடிசாவில் தென்கனல் மாவட்டத்தில் ஒடிசா கிராமிய வங்கியின் கிளை உள்ளது. மத்திய அரசால் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, பழைய 500 – 1,000 ரூபாய் நோட்டுகள், ஒரு பெரிய பெட்டியில், இங்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு, 8 கோடி ரூபாய்.

இந்நிலையில், 2 நாள் விடுமுறைக்கு பின், நேற்று காலை வங்கியை திறந்த அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பணம் வைக்கப்பட்டு இருந்த பெட்டி, உடைக்கப்பட்டு இருந்ததுதான் அது.

பெட்டியை சோதனையிட்டபோது, அதில் இருந்த, 1.15 கோடி ரூபாய் கொள்ளைஅடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  போலீசார் என்ன சொல்லியிருக்காங்க தெரியுங்களா? ‘வங்கியில் பணியாற்றுவோரின் உதவி இன்றி, இந்த கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை’ என்கின்றனர். உண்மைதானே… இந்த பழைய ரூபாயை வேறு எங்காவது மாற்றிக் கொள்ள முடிவு செய்து இப்படி ஒரு திட்டம் போட்டு இருக்காங்களா?

பிசிசிஐ., நிர்வாகிகளை ஒட்டு மொத்தமாக தூக்குங்க… லோதா குழு அதிரடி…

புதுடில்லி:
ஒட்டு மொத்தமாக தூக்குங்க… என்று லோதா குழு அதிரடியான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

பி.சி.சி.ஐ., நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என, லோதா குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய கிரிக்கெட் போர்டில் (பி.சி.சி.ஐ.,) செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் படி, லோதா குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

இவற்றை வரும் டிசம்பர் 3ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த சுப்ரீம் கோர்ட் அவகாசம் வழங்கியது. ஆனால், இதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பி.சி.சி.ஐ., காலம் தாழ்த்தி வருகிறது.

இதையடுத்து, பி.சி.சி.ஐ., மற்றும் மாநில சங்கங்கள் பண பரிவர்த்தனை செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதற்கிடையே லோதா குழு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய பரிந்துரை அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதில்தான் அந்த அதிரடி காட்டப்பட்டுள்ளது. தற்போதைய பி.சி.சி.ஐ., மற்றும் மாநில சங்க நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக நீக்கவேண்டும். முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை என்பவரை பி.சி.சி.ஐ., பார்வையாளராக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

லோதா பரிந்துரைகள் அப்படியே ஏற்கப்பட்டு, நிர்வாகிகள் நீக்கப்பட்டால், புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படும் வரை ஜி.கே.பிள்ளை பொறுப்பில் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தப்பியோடிய மல்லையாவுக்கு பிடிவாரண்ட்… மும்பை கோர்ட் உத்தரவு

மும்பை:
தப்பியோடியவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது மும்பை சிறப்பு நீதிமன்றம்… யாருக்கு தெரியுங்களா?

‘கிங் பிஷர்’ மதுபான ஆலை அதிபரான விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனை வாங்கி விட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார்.

இந்த வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளி என்று பணமோசடி தடுப்பு நீதிமன்றமும் சமீபத்தில் அறிவித்தது.

இதற்கிடையே பல்வேறு நிறுவனங்களுக்கு விஜய் மல்லையா கொடுத்திருந்த காசோலைகள் அவரது வங்கிக் கணக்குகளில் போதிய பணம் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டன.

மல்லையா குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில உறுதிப் பங்குகள், இது தொடர்பான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்து முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சிபிஐ தொடுத்துள்ள வழக்கில் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Nov 212016
 

naga


இலை, பட்டை, வேர், பழம், விதை என்று உடலுக்கு நலம் தரும் நாவல் பழம்… ஆமாங்க… பெரிய சைஸ் கருப்பு திராட்சை போல் இருக்குமே… அதுபற்றிய கட்டுரைதான் இது.

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே… பள்ளிக்கூட வாசலில் பாட்டியிடம் நாவல் பழம் வாங்கி தின்றது ஞாபகம் வருதே… என்று இப்போதும் பாடாத நபர்கள் இருந்தால்…. இல்லை கண்டிப்பாக இருக்கவே முடியாது. அந்த கால தலைமுறையினரும் சரி… இன்றைய ஸ்மார்ட் போன் கால தலைமுறையினரும் சரி. கண்டிப்பாக நாவல் பழத்தை ஒருமுறையாவது டேஸ்ட் செய்து இருப்பார்கள்.

இந்த நாவல் பழத்தில் சிறிது உப்பும், மிளகாய் தூளும் தூவி தருவாங்க பாருங்க… அடடா… டேஸ்ட் செம அள்ளு அள்ளும். ஆனால் அது டேஸ்ட்டுக்காக சாப்பிட்டு வேஸ்ட் செய்யும் பழம் இல்லீங்க. அற்புதமான இயற்கை அன்னை நமக்கு அள்ளித் தந்த வரப்பிரசாதம். இயற்கை மருத்துவர் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு அதில் பல நல்ல விஷயங்கள் அடங்கி இருக்கு.

அப்படி என்ன விஷயங்கள் இருக்கு என்று கேட்கிறீர்களா? இதோ சொல்லிடுவோம். நாவல் பலத்தை சாப்பிடுவதால் மூளை பலப்படும், ஈரல் நோய் குணமாகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதெல்லாம் பெரிய விஷயமாக என்று கேட்காதீர்கள். அதையும் தாண்டி… அதுக்கும் மேல என்று பல மேட்டர் இருக்குங்க பாஸ்.

நாவல் பழக்கசாயம், வாயுத்தொல்லை நீக்கும். மண்ணீரல் வீக்கம்,நாள்பட்ட கழிச்சல் நோய், உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி என்று நாவல் பழம் ஸ்மால் டாக்டர் போல நமக்கு உதவுகிறது.

இந்த பழத்தை சாப்பிட்டு வருவதால் ரத்தத்தை சுத்தி செய்யும் மகிமை கொண்டது. ரத்த விருத்திக்கு உதவும் சிறுநீர்க்கழிவை தூண்டும். நீர்ச்சுருக்கைக் குணப்படுத்தும். இன்னும் இருக்குங்க பாஸ்… நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாவது குறையலாம்.

இந்த பழத்தை சாப்பிடுவதால் நீர்வேட்கை நீங்கும். பழுக்காத காய்களை நன்கு உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து அருந்தினால் குணம் அடையும். இப்பழத்தில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் உள்ளது

சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தின் விதையை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து சலித்துக் கொண்டு தினமும் 2-4 கிராம் வீதம் மூன்று வேளை எனத் தண்ணீரில் கலந்து அருந்தி வரவேண்டும். அப்படி செய்வதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

மேலும் விதையைப் பொடித்து மாம்பருப்புத் தூளுடன் சேர்த்துத்தர சிறுநீரைப் பெருக்கும். இது பித்தத்தையும் போக்கும். நாவல் கொழுந்துச் சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கித் தர சீதக்கழிச்சல் போகும். இப்படி இயற்கை நமக்கு அருகிலேயே நாவல் மரம் என்ற பெயரில் ஒரு மருத்துவரை வைத்துள்ளது.

இப்படி இலை, பழம், விதையின் பயன்கள் இது என்றால்… நாவல்மரப்பட்டை குரல் இனிமையை அதிகரிக்கும். ஆஸ்துமா, தாகம், களைப்பு குருதி சீதபேதி, பெரும்பாடு, ஈளை இருமல் ஆகிய நோய்களுக்கும் ரொம்ப ரொம்ப நல்லது.

நாக்கு, வாய், தொண்டைப்புண்களுக்கும் இதன் சாற்றைப் பயன்படுத்தி வாய் கொப்புளிக்கலாம். மரப்பட்டையை இடித்து சலித்து எருமைத் தயிரில் சாப்பிட பெண்களின் உதிரப்போக்கு குணமாகும்.

மரப்பட்டைத் தூளை ரத்தம் வழிகின்ற புண்ணில் தூவ குணமாகும். அத்தகைய சிறப்பு இந்த மரத்தின் பட்டைக்கு இருக்கு. பட்டைக் கஷாயத்தைக் கொண்டு புண்களையும் கழுவலாம்.

இந்த மரத்தின் வேர் என்ன பயன் கொடுக்கிறது தெரியுங்களா? வாதம், கரப்பான், நீரிழிவு, குருதி, சீதபேதி, வாதகரம், மேகம், செரியாமை ஆகியவற்றைப் போக்கும்.  இப்படி நுனி முதல் வேர் வரை அருமையான பலன்களை அள்ளித்தருகிறது நாவல்.

நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இந்தியா மற்றும் இந்தோனீசியாவுக்கு உரியது. 30 மீட்டர் உயரம் வரை வளரும். 100 ஆண்டுகள் வரை வாழும். ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்க்கும் இந்த மரம்.

பிறகு மார்ச் – மே மாதம் பூப்பதும் அதன் பின்னர் ஜீலை–ஆகஸ்ட்– செப்டம்பர் மாதங்களில் பழங்களைத் தருவதும் இந்த மரத்தின் இயல்பு.

பெரும்பாலும் விதை மூலம் வளரும் அல்லது ஒட்டுச்செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும் நாவல் மரம் நட்ட 8 முதல் 10 ஆண்டுகளில் விளைச்சல் தரும். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் 12 மீட்டர் இடைவெளி விட்டு நடப்படும் நாவல் மரம் ஆண்டுக்கு 50 முதல் 80 கிலோ வரை பழங்கள் தருகிறது.

கருநாவல், கொடி நாவல், சம்பு நாவல் என நாவல் வகைகள் உள்ளன. இதை சாகுபடி செய்ய விவசாயிகள் தற்போது முன் வருகின்றனர். நீண்ட காலப்பயிராக இருந்தாலும் தொடர்ந்து வருமானம் தருவதால் தங்கள் தோப்புகளில் இதை பயிர் செய்து வருகின்றனர்.

இதேபோல் சேலம் மாவட்டத்தில் நாவல் மர சாகுபடி செய்துள்ள விவசாயி ராமச்சந்திரன் கூறியதாவது:

ஒரு ஏக்கரில் சம்பு நாவல் பழ சாகுபடி செய்துள்ளேன். 96 மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் 30 முதல் 35 அடி வரை வளரும். ஆனால் ஆண்டு தோறும் கவாத்து (மரத்தின் பக்க கிளைகளை வெட்டி சீரமைத்தல்) செய்து வருகிறேன். இதனால் 15 அடி உயரமுள்ள செடிகளாக வளர்ந்துள்ளன.

இயற்கை முறையில் மட்டுமே உரம் இட்டு வருகிறேன். இதனால் சாகுபடி அதிகரிக்கிறது. பழத்தின் சுவையும் கூடுதலாக இருக்கிறது. அசோஸ்பைரில்லம், ரைசோபியம், சூடோமோனாஸ், பஞ்சகாவ்யம் போன்ற இயற்கை நுண்ணூட்ட சத்துகளை பயன்படுத்துகிறேன்.

மரத்தில் நோய் தாக்குதல் இருக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நோய் தாக்குதலை தவிர்க்க இஞ்சிச்சாறு, மஞ்சள் பொடி பயன்படுத்தினால் போதும். நான்கு ஆண்டுகளில் இருந்து பழம் காய்க்கின்றன. ஒரு மரத்தில் 60 கிலோ வீதம் ஏக்கருக்கு 5.5 டன் கிடைக்கிறது.

சாதாரணமாக ஒரு ஏக்கரில் 2 டன் மட்டுமே மகசூல் கிடைக்கும். பழம் 5 கிராம் மட்டுமே இருக்கும். பறிக்கும்போதே பாதி பழங்கள் சேதமாகிவிடும். நான் சாகுபடி செய்துள்ள இந்த மரத்தில் உள்ள ஒரு பழம் 17 முதல் 20 கிராம் இருக்கிறது. உயரம் குறைவாக இருப்பதால் பழங்களை சேதமின்றி பறிக்க முடிகின்றது.

அதிக தண்ணீர் தேவையில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மே முதல் ஜீலை வரை சாகுபடி செய்கிறோம் என்றார்.

உடலுக்கு குளிர்ச்சியை அள்ளிதரும் நாவல் பழத்திற்கு அந்த பெயர் வந்த காரணம் என்னவென்று தெரியுங்களா? நாவல் பழத்தைத் தின்றால் நாவின் நிறம் கருமையாக மாறும். நாக்கு வறண்டு தண்ணீர்ங அதிகம் குடிக்க வேண்டும்போல் இருக்கும். இப்படி நாவின் தன்மையை மாற்றுவதால் ‘நா+அல்’ (நாவல்) என்றனர் என்று பெயர் விளக்கம் அளிக்கின்றனர்.

இந்த நாவல் பழச்சாற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக்கி கடைகளிலும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதனால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Nov 212016
 

images

அது ஒரு அழகிய கிராமம். விவசாய நிலங்கள், சுற்றி மலைகள் என இயற்கை பொலிவுடன் இருந்தது. விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த மக்களும்  கடுமையாக உழைத்து செழிப்பாக இருந்து வந்தனர்.

சோலையாக விளங்கிய கிராமம், ஒரு சமயத்தில் நீர் வரத்து குறையவே, பாலைவனமாக மாறத் தொடங்கியது. மூன்று வேலை சாப்பாட்டுடன் மகிழ்ச்சியாக இருந்த மக்களின் நிலை, ஓரிரு வேலை என சுருங்கியது.

பஞ்சம் தலை விரித்து ஆடியதில், மக்கள் அக்கம் பக்கம் உள்ள ஊர்களுக்குச் சென்று வேலை செய்ய ஆரம்பித்தனர்.  என்ன செய்வதென்று அறியாது துன்பத்தில் வாடினர்.

கிராமத்தின் இந்த முக்கிய பிரச்சினையை ஆராய்ந்த ஒரு முதியவர் மக்களிடம் ஒரு யோசனையை தெரிவித்தார்.

“மக்களே, நம் கிராமத்தை சுற்றியுள்ள மலைகளில், ஒரு உயரமான மலை தெரிகிறதல்லவா? அதன் உச்சியிலிருந்து நீர் பிரவாகித்து, ஓடையாக மாறி, வீணாக கடலில் சென்று கலக்கிறது. இந்த ஓடையை திசை மாற்றினால், நீர் முழுதும் நம் கிராமத்தை வந்து சேரும்.

ஆனால் அந்த மலையின் உச்சியை அடைவது சுலபமில்லை. போகும் வழியில் கொடிய பாம்புகளும், விஷ பூச்சிகளும் இருக்கும். மேலும், மலை உச்சியை நெருங்குகையில், அங்கு சுவாசிக்க போதுமான காற்று இல்லாமல் இருக்கலாம் என்ற நம்பப் படுவதால், இதுவரை யாரும் அங்கு செல்ல முயலவில்லை” என்றார்.

இதை கேட்ட மக்களுக்கு ஆச்சரியம். ஆனால் பாதைகளில் உள்ள ஆபத்தை நினைத்து, எவரும் மலை உச்சிக்கு செல்லும் திட்டத்தை செய்ய முன் வரவில்லை. தண்ணீர் கிடைக்கும் வழி இருந்தும், எடுக்க முடியாமல் இருக்கிறோமே, என்ன பண்ணலாம் என யோசித்தனர். நாட்கள் செல்ல செல்ல, தொடர் பட்டினியில் மக்கள் நிலை இன்னும் மோசமானது.

இந்த சூழ்நிலையில் கிராமத் தலைவர் ஒரு போட்டி அறிவித்தார். மலை உச்சிக்கு சென்று நீரோடையை நம் கிராமத்து பக்கம் எவர் திருப்பி விடுகிறாரோ, அவரே, அடுத்த தலைவராக நியமிக்கப்படுவார் எனவும், அவருக்கு சில நிலங்களும் பரிசாகத் தரப்படும் எனவும் அறிவித்தார்.

அந்த அறிவிப்பு பொது மக்கள் கூடும் பல இடங்களில் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போட்டித் துவங்கும் நாளும் வந்தது.

போட்டியைக் காண அனைத்து மக்களும் கூடியிருந்தனர். கிராமத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் மட்டும் போட்டியில் கலந்துக் கொள்வதாய் களம் இறங்கினர். அப்போது அந்த கிராமத்திற்கு வழிப்போக்கனாய் வந்த மற்றொரு இளைஞனும், அறிவிப்பு பலகையை பார்த்து தானும் கலந்துக் கொள்ள போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தான்.

ஒரு வழியாக மூன்று இளைஞர்கள் தேறிவிட்டனர் என கிராமத் தலைவரும் போட்டியைத் துவக்கி வைத்தார்.

மூன்று இளைஞர்களும் முன்னே நடக்க, பின் தொடர்ந்த மக்கள் மலை அடிவாரம் வரை வந்தனர்.

மலையில் மூவரும் நடக்கத் தொடங்க, கீழிருந்த மக்களில் சிலர், கரகோஷம் எழுப்பினர். வேறு சிலரோ “போகாதீர்கள், அது ஆபத்தான பாதை, அங்கு சுவாசிக்கும் காற்று கிடையாது, இதுவரை அங்குச் சென்றவர்கள் திரும்பி வந்ததில்லை. தண்ணீர் இல்லையென்றால் கூட பரவாயில்லை, இப்போது உள்ளது போலவே, ஒரு வேலை சாப்பாட்டுடன், உயிருடனாவது இருந்து விடலாம், திரும்பி வந்துவிடுங்கள்” என எச்சரித்தனர்.

ஆனால் இளைஞர்கள் மூவரும் விடுவதாயில்லை. மேலே என்ன தான் இருக்கிறது, ஒரு கை பாத்துவிடுவோம் என்ற தோரணையில் நடையைக் கட்டினர்.

கொஞ்சம் தூரம் சென்றபின், முதியவர் கூறியது போலவே கொடிய விஷப் பூச்சிகளும், பாம்புகளும் பாதையின் ஓரமாக ஊர்ந்துக்கொண்டிருந்தன. இதைக் கண்ட முதல் இளைஞன், பயந்து போய், நமக்கு இந்த வீர விளையாட்டு வேண்டாம் என கீழே இறங்கிவிடுகிறான்.

மற்ற இரு இளைஞர்கள் மட்டும் தொடர்ந்து மேலே செல்கின்றனர்.

மலை உச்சியை அடையும் தருவாயில், இரண்டாம் இளைஞனுக்கு கீழிருந்த மக்கள் கத்திய குரல்கள் மீண்டும் மீண்டும் காதில் விழுவது போல் ஒரு பிரம்மை ஏற்பட்டது. “ஆம் அவர்கள் சொன்னது சரிதான், இங்கு சுவாசிக்க காற்று இல்லைதான் போலுள்ளது” என நினைக்க ஆரம்பித்தான். நெஞ்சு படபடத்தது. உடல் வியர்க்க ஆரம்பித்தது. நடக்கையில் மூச்சு விட சிரம்மப்பட்டான். இதற்கு மேலும் நடந்தால், மரணம் நிச்சயம் என எண்ணி அவனும் கீழே இறங்கி விடுகிறான்.

வழிப்போக்கனாய் வந்த மூன்றாவது இளைஞனோ, எந்த வித சலனமும், பதட்டமும் இன்றி உறுதியுடனும் நம்பிக்கையுடனும் மேலே சென்றுக் கொண்டேயிருந்தான். மலை உச்சியை அடைந்து, நீரோட்டத்தையும் கிராமத்து பக்கம் வருமாறு திருப்பிவிட்டு, போட்டியில் வெற்றியும் பெறுகிறான்.

கிராமத்திற்குள் தண்ணீர் சர சரவென பாய்ந்து பெருக்கெடுத்து ஒடி வருகிறது. காய்ந்து போன பூமி உயிர்பித்து எழுகிறது!

மக்களுக்கு மற்றட்ட மகிழ்ச்சி. வழிப்போக்கன் கீழே இறங்கியதும், ஓடிச்சென்று அவனை உற்சாகத்துடன் சூழ்ந்துக்கொள்கின்றனர். அவனை வெகுவாக பாராட்டுகின்றனர். அவனிடம் மலை உச்சியில் நடந்த அனுபவம் பற்றி பல கேள்விகளை ஆர்வத்துடன் கேட்கின்றனர்.

அவனோ கொஞ்சம் கூட சலனமின்றி தான் வந்த குதிரையை நோக்கிச் செல்கிறான்.

அவனது இந்த செயல் கிராமத்து மக்களை கோபமடையச் செய்தது. வெற்றியினால் அவனுக்கு ஆணவம் வந்துவிட்டது. நாம் இத்தனை பேர் கேட்கிறோம், நம்மை கொஞ்சம் கூட மதிக்காமல் செல்கிறானே எனத் திட்டித் தீர்த்தனர்.

அமைதியாக குதிரை அருகில் சென்ற இளைஞன் தான் வைத்திருந்த காகிதத்தில், எதையோ எழுதி அந்த மக்களிடம் காண்பித்தான்.

அந்த காகிதத்தில், “நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஏனெனில், பிறந்ததிலிருந்து எனக்கு வாய் பேசவும், காது கேட்கும் திறனும் கிடையாது. எனக்கு எந்த பதவியும் பரிசும் வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ததே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறி தன் குதிரையில் ஏறி விடைப்பெற்றுக் கொள்கிறான்.

இந்த கதையை சற்று ஆராய்ந்து பார்த்தால் சில விஷயங்கள் புலப்படும். நம் வாழ்வில் நடந்த மற்றும் நடக்கும் சம்பவங்களையும் இது போல் கதைகளுடனும் தொடர்பு படுத்தி பார்க்கலாம்.

நாம் ஏதாவது புதிய முயற்சி எடுக்கலாம் என நினைக்கையில், நம்மை சுற்றியுள்ள சிலர், “வேண்டாம், அதை செய்யாதே, அது பெரிய ரிஸ்க்” எனக் கூறுவதை பார்த்திருப்போம்.

“ரிஸ்க் என்று சுற்றியுள்ளவர்கள் கூறுவதற்கு, இரண்டு காரணங்கள் உள்ளது. இதுவரை யாரும் அந்த காரியத்தை முயற்சித்ததில்லை என்பது ஒன்று. மற்றொன்று, அப்படி ரிஸ்க் என்று சொல்பவர்களுக்கு அந்த காரியத்தை செய்ய முடியாமலோ, செய்வதில் விருப்பம் இல்லாமலோ இருப்பது மற்றொன்று” என்கின்றனர் வெற்றிப் பெற்றவர்கள்.

இத்தனை பேர் சொல்கிறார்களே, நம்மீது உள்ள அக்கரையில் தானே சொல்கிறார்கள், உண்மையிலேயே இது ரிஸ்க் தான் போலுள்ளது என எண்ணி தங்கள் விருப்பத்தை தொடங்காமலேயே பலர் கைவிட்டு விடுவதுண்டு.

இன்னும் மோசமாக, சிலர் தொடங்கிய செயலை சுற்றியுள்ளவர்கள்  சொல்வதால் பாதியில் கைவிட்டு விடுவதுண்டு.

நம் வாழ்வின் அனைத்து முக்கிய முடிவுகளையும் பெரும்பாலும் தீர்மானிப்பது இது போல் சுற்றியுள்ளவர்கலாய் தான் இருக்கின்றனர். அவர்களது நோக்கம் நாம் தோற்று விடக்கூடாது என இருப்பதினால்,  பாதுகாப்பான பாதையிலேயே சென்றுவிட அறிவுரை வழங்குவார்களே தவிர, அந்த பாதை நமக்கு வருமா, பிடித்ததா என்று அவர்கள் பார்ப்பதில்லை.

மத்த எந்த முடிவானாலும் சரி, ஆனால் தொழில் (Career) சம்பந்தப்பட்ட முடிவை மட்டும் யாரிடமும் தராதீர்கள், நீங்களே உங்கள் மனதிற்கு பிடித்தவாறு எடுங்கள் என்கின்றனர் பல துறையில் சாதித்தவர்கள்.

தனக்கு பிடித்த வேலையை செய்வதில் முயற்சி எடுத்து அதனால் தோல்வி ஏற்பட்டால் கூட பரவாயில்லை, ஆனால் பிடித்த செயலை செய்யாமலேயே கடைசி வரை வாழ்ந்து விடுவது தான் உலகிலேயே மிகப் பெரிய ரிஸ்க் என்கின்றனர் சாதனையாளர்கள்.

அதனால் சரியான முடிவை எடுங்கள், சரித்திரம் படையுங்கள். வெற்றி உங்களதே!

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(4)Dislikes(0)
Share
Nov 212016
 

sindhu

 

சூப்பர் “சிந்து” – இந்தியாவின் கொடியை சீனாவில் உயரமாக பறக்க விட்டார்

பீஜிங்:
இந்தியாவின் கொடியை சீனாவில் உயரமாக ஏற்றி வைத்துவிட்டார் சிந்து என்று அவரது ரசிசகர்கள் கொண்டாடுகின்றனர். எதற்காக தெரியுங்களா?

சீன ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் சன் யூ-வை வீழ்த்தி இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றதுதான் இந்த கொண்டாட்டத்திற்கு காரணம்…

சீன ஓபன் போட்டியில் பங்கேற்று விளையாடிய சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சீனாவின் ஹி பி்ங்ஜியாவோவை எளிதில் வென்றார். பின்னர் அரையிறுதி ஆட்டத்தில் கொரிய வீராங்கனை சங் ஜி யுன்-ஐ எதிர்த்து விளையாடினார்.

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியிலும் சிந்துவுக்கே வெற்றிக்கனி கிடைத்தது. சாம்பியன் பட்டத்துக்காக நடந்த இறுதிப் போட்டியில், சீனாவின் சன் யூ-வை எதிர்த்து தன் ஆவேசமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சிந்து. இதில் 21-11, 17-21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சீன ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று, இந்தியாவுக்கு மேலும் புகழை தேடித் தந்துள்ளார்.

“அப்ப வெளுத்து துவைத்து காயப்போட்டீங்களா… பிரசிடெண்ட்…”

லிமா:
சார்… அவரு அப்படி இல்லீங்கோ… அப்படி நினைச்சுடாதீங்கோ என்று இவரு ரெக்கமண்ட் செய்து இருக்காருங்க… என்ன விஷயம் தெரியுங்களா?

டொனால்டு டிரம்பை மோசமானவராக கருத வேண்டாம் என்று லத்தீன் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தி உள்ளார் என்பதுதான் மேட்டரே!

ஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் நடந்து வருது. இதன் தலைநகர் லிமாவில் நடக்கும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துக்கிட்டார்.

அப்போது இளைஞர்களுடன் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் அவர் பேசியது இதுதாங்க… அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு தகுதி இல்லை என்ற தவறான முடிவுக்கு வர வேண்டாம்.

டிரம்பை மோசமானவராக கருத வேண்டாம். நிர்வாகம் எப்படி நடத்துகிறார் என்பதை பார்க்கும் வரை காத்திருங்கள். உலக நாடுகள் அமைதியாக, செழிப்புடன் ஒற்றுமையாக வாழும் பொறுட்டு அவருடன் நிர்வாகம் இருக்கிறதா இல்லையா, என்று பார்த்து பின்னர் தீர்மானியுங்கள்.

புதிய அதிபர் குறித்து உலக நாடுகள் உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம். இது உலக நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு முக்கியமானதாகும் என்று சொல்லியிருக்காருங்க… சரிதான்… வக்காலத்து வாங்க ஆரம்பிச்சுட்டாரா?

அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்பை வெளுத்து துவைத்து காயப்போட்டீங்களா… பிரசிடெண்ட்… இப்ப என்னாச்சு…

யாருய்யா… யாரு… போலீஸ் ஹெலிகாப்டரை சிதறடித்த மர்மநபர்கள்

ரியோடி ஜெனீரோ:
யாருய்யா… யாரு… என்று டென்ஷனில் இருக்கின்றனர் ரியோடி ஜெனீரோ நகர் போலீசார். இவர்கள் இப்படி டென்ஷன் ஆக காரணம் இருக்குங்க…

பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனீரோ நகரில் குற்றவாளிகளை வேட்டையாட சென்ற போலீஸ் ஹெலிகாப்டரை மர்மநபர்கள் சுட்டு வீழ்த்தியதுதான் அந்த டென்ஷனுக்கு காரணம்.

பிரேசில் நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும், ஆள் கடத்தல் கும்பலுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் ரியோடி ஜெனீரோ அருகேயுள்ள பாவலா என்ற இடத்தில் ஒரு கும்பலை பிடிக்க போலீசார் ஹெலிகாப்டரில் பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அதில் சென்ற 4 போலீசாரும் உடல் கருகி பலியான சம்பவம் சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஹெலிகாப்டரை கடத்தல் கும்பல் சுட்டு வீழ்த்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் பிரேசிலில் ஏற்கனவே நடந்துள்ளன. இருப்பினும் இந்த சம்பவம் போலீசாருக்கு செம டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது.

ரூபாய் நோட்டு விவகாரம்… இன்று கூடிப் பேசப்போகும் எதிர்கட்சிகள்…

புதுடில்லி:
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளின் எதிர்க் கட்சிகள் இன்று காலை ஒன்று கூடி ஆலோசனை நடத்துகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது. பாராளுமன்றத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் சபையை நடத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டதால் இன்று (திங்கட்கிழமை) ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளின் எதிர்க் கட்சிகளும் இன்று காலை ஒன்று கூடி ஆலோசனை நடத்துகின்றனராம்.

காலை 9.30 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. சுமார் 10 கட்சிகளின் உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்கின்றனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

வீண் போகாது  நீங்க செய்யும் இந்த தியாகம் வீண் போகாது… பிரதமர் சொல்றார்…

ஆக்ரா:
வீண் போகாது நீங்க செய்யும் இந்த தியாகம் வீண் போகாது என்று மக்களுக்கு ஆறுதல் கூறி பேசி உள்ளார் பிரதமர் மோடி. எதற்காக என்று தெரியுங்களா?

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், நாம் வசிக்க வேண்டிய வீட்டை நாமே கட்டுவோம். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.

2022-க்குள் அனைவருக்கும் வீடு இருக்கும். விவசாயிகள் முதல் ஆதிவாசிகள் வரை அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும். கருப்பு பண ஒழிப்பில் மத்திய அரசுக்கு ஏழைகள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

உங்கள் தியாகம் எதுவும் வீண் போகாது என்று உறுதி அளிக்கிறேன். கருப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ணப் பரிவர்த்தனை சீராக 50 நாட்கள் ஆகும் என்று கூறி இருக்கிறேன். நான் கூறியவாறு 50 நாட்கள் பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று பேசி இருக்காருங்க…

பிரதமர் ஜி நீங்க சொல்றது சரிதான். ஆனால் இந்த 50 நாளும் சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாம இல்ல மக்கள் அவதிப்பட போறாங்க என்கின்றனர் சிலர்.

ஊழியர்களை “கூல்” படுதிதிய மத்திய அரசின் புத்திசாலித்தனம்

சென்னை:
செம ஐடியா போட்டு களத்தில் குதிச்சு இருக்கு மத்திய அரசு என்கின்றனர் நடுநிலையாளர்கள். என்ன விஷயம்ன்னா….

பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்காக தன் ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.10,000 ஐ முன்பணமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

ரூபாய் நோட்டு பிரச்னையை அடுத்து அனைத்து தரப்பு மக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 17-ந் தேதி, மத்திய அரசின் குருப்-சி ஊழியர்கள் தங்களின் சம்பள பணத்திலிருந்து முன்பணமாக ரூ.10, 000 ஐ அவர்களின் அலுவலகங்களில் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி சென்னை கோட்டத்தில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.10,000 வழங்க ரிசர்வ் வங்கிகளிலிருந்து ரூ.10 கோடி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களின் மத்தியில் நல்ல பெயர் எடுத்து கொள்ள நினைக்கிறது மத்திய அரசு.

அத்துமீறி தாக்கிய பாக்., இந்திய ஜவான் பலி… எல்லையில் பதற்றம்

ஸ்ரீநகர்:
எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் பரபரக்கின்றன. எதற்றாக தெரியுங்களா?

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பாக்., ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ஜவான் ஒருவர் பலியானது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர்.

யூரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்திய எல்லைப்பகுதிகள் முழுவதிலும் பாதுகாப்பு வளையத்திற்குள் பலப்படுத்தப்பட்டது.

‛சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ தாக்குதலில் பாக்., பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி செக்டரில் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்கியதில் இந்திய எல்லைப் பாதுகாப்புபடை தலைமைக் காவலர் ராய்சிங் பலியானார். மேலும் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த 24 மணி நேரத்தில் இந்திய எல்லையில் பாக்., ராணுவம் 3 முறை அத்துமீறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் எல்லைப்பகுதியில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கொடுத்துட்டாங்க… சர்வதேச அமைதி விருதை கொடுத்துட்டாங்க…

புதுடில்லி:
கொடுத்துட்டாங்க… கொடுத்துட்டாங்க… சர்வதேச அமைதிக்கான விருதை கொடுத்துட்டாங்க… யாருக்கு என்கிறீர்களா?

உலக அமைதிக்காக பாடுபடும் ஆன்மீக குரு ரவிசங்கருக்குதான் சர்வதேச அமைதிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தில் முதல் இந்திய நீதிபதியாக இருந்தவர் டாக்டர் நாகேந்திர சிங். அவரது நினைவாக உலக அமைதிக்காக பாடுபவர்களுக்கு ‛சர்வதேச அமைதி விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

உலக நாடுகளின் அமைதிக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் ஆன்மீக குரு ரவிசங்கர். இவரை கவுரவிக்கும் விதமாக சர்வதேச அமைதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து டில்லி விக்யான்பவனில் நேற்று (20ம் தேதி) நடந்த விழாவில் டாக்டர் நாகேந்திர சிங் சர்வதேச அமைதி விருதை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரவிசங்கருக்கு வழங்கினார்.

உ.பி.யில் நடந்த கோர ரயில் விபத்து… 120 பேர் பலியான சோகம்… 200 பேர் காயம்

புக்ராயன்:
உத்தர பிரதேச மாநிலத்தில் இந்துார் – பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட கோர விபத்தில் 120 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்துாரில் இருந்து, பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், உ.பி.,யின் கான்பூருக்கு அருகே புக்ராயன் பகுதியில் நேற்று திடீரென தடம் புரண்டது.

இந்த விபத்தில் ரயிலின் 14 பெட்டிகள் கவிழ்ந்தன. எங்கும் அலறல் குரல்தான் கேட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிக கோரமான விபத்து இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான விபத்தில் 120 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அதில் 75 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த பலரது நிலைமை மோசமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த தகவல் அறிந்தவுடன் போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவ மருத்துவக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ரயிலின், இரண்டாம் வகுப்பு துாங்கும் வசதி உடைய, ‘எஸ் – 1’ மற்றும் ‘எஸ் – 2’ பெட்டிகள் தடம் புரண்ட வேகத்தில், மோதி நேர்க்குத்தாக நின்றன. இந்த பெட்டிகளில் தான், பாதிப்பு அதிகமாக இருந்தது. காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான ரயிலில், மத்திய பிரதேச மாநிலம், இந்துாரைச் சேர்ந்த, 200க்கும் மேற் பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அவர்கள் பயணம் செய்த பெட்டிகள், அதிகளவு சேதமடைந்ததாக, தகவல் வெளியானதால் உறவினர்கள் பதற்றம் அடைந்து கதறி தீர்த்தனர்.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றி தகவல்களை பெறுவதற்காக, உறவினர்கள்,இந்துார் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்; நீண்ட நேரமாக கூட்டம் அலைமோதியது; தொடர்ந்து அவர்களை விபத்து நடந்து பகுதிக்கு அழைத்துச் செல்ல, பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Nov 202016
 

Ashwin

வங்கியில் இதுவரை வந்து சேர்ந்த பணம் ரூ. 4 லட்சம் கோடியாம்… 

புதுடில்லி:
ரூ. 4 லட்சம் கோடி வங்கிகளுக்கு வந்து இருக்குங்க… இதுவரை என்று மத்திய அமைச்சர் சொல்லியிருக்கார்.

என்ன விஷயம்ன்னா… பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை மாற்றும் நடவடிக்கை காரணமாக இதுவரை வங்கிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வந்திருப்பதாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர். இதனால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில், ரூபாய் நோட்டுக்களை மாற்றும் நடவடிக்கையை பாராட்டி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க…

‘ரூபாய் நோட்டு மாற்றம் நடைமுறைக்கு வந்து 11 நாட்கள் ஆகிறது. இதற்கு பலன் கிடைத்துள்ளது. இதுவரை வங்கிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வந்துள்ளது. அனைத்தும் சுத்தமான வெள்ளைப் பணம்.

தீவிரவாதிகளால் புழக்கத்தில் விடப்படும் கள்ள நோட்டுக்கள் தடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புடன் கூடிய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது’ என்று சொல்லியிருக்காருங்க…

திருப்பதி  உண்டியலுக்கு வரும் புதிய ரூபாய் நோட்டுகள்…

திருப்பதி:
என்ன செய்தாலும் திருப்பதி பகவானுக்கு பாதிப்பில்லை. அவரது பக்தர்கள் அள்ளித்தான் தந்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இருப்பினும் திருப்பதி கோயில் உண்டியல் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள். இதுகுறித்து கோயிலின் மக்கள் தொடர்பு அதிகாரி தாலரி ரவி கூறுகையில், ”9-ந்தேதியில் இருந்து 10 நாட்களில் உண்டியலில் ரூ.30 கோடியே 36 லட்சம் வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஆன வசூலை விட இது ரூ.8 கோடி அதிகம்.

ஒரு நாளில் அதிகபட்ச வசூல், கடந்த 17-ந் தேதி வசூலான ரூ.3 கோடியே 53 லட்சம். குறைந்த வசூல் என்றால் 10-ந்தேதி ரூ.2 கோடியே 28 லட்சம் வசூலானதுதான். இப்போது புதிதாக வெளியாகியுள்ள ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் கூட பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருக்கின்றன” என்றார்.

மாற்றிட்டாங்க… சாதாரண வார்டுக்கு  மாற்றிட்டாங்க… அதிமுகவினர் உற்சாகம்

சென்னை:
மாற்றிட்டாங்க… மாற்றிட்டாங்க… சாதாரண வார்டுக்கு முதல்வரை மாற்றிட்டாங்க… என்று தகவலால் ரொம்பவே சந்தோஷத்தில் குதித்து வருகின்றனர் அதிமுக தொண்டர்கள்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இத்தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் வெகுவாக உற்சாகமடைந்துள்ளனர்.

லண்டன், எய்ம்ஸ், அப்பல்லோ டாக்டர்களின் கூட்டு முயற்சியால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்தார் முதல்வர் ஜெயலலிதா.

செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இயல்பான முறையிலேயே சுவாசித்து வருவதாகவும் வெறும் 15 நிமிடம் மட்டுமே செயற்கை சுவாசம் எடுத்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும் நேரத்தில் வீட்டுக்கு செல்லலாம் என அப்பல்லோ நிர்வாகம் கூறியது. தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முதல்வர் தற்போது 2 வது தளத்தில் சிகிச்சை எடுத்து வருகிறார். எனவே, தற்போது அதே தளத்தில் உள்ள சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.

அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பது, அப்பல்லோ வாசலில் இருக்கும் அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவோயிஸ்ட் 5 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலி

சத்தீஸ்கர்:
அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட பாதுகாப்பு படைவீரர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த 5 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படைவீரர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த 5 துபேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இந்த குழுவினரை வேட்டையாட நக்சல் ஒழிப்பு படை என்ற தனிப்படை பிரிவு இயங்கி வருகிறது.

காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கும் நக்சலைட்களையும், மாவோயிஸ்ட்களையும் இந்த தனிப்படையினர் கைது செய்தும், சுட்டுக் கொன்றும் வருகின்றனர்.

அதேபோல் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள பேச்சா என்ற கிராமத்தில் சில மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தொடர்ந்து அந்த கிராமத்தை போலீசார் சுற்றிவளைத்தனர்.

போலீசாரை கண்டதும் மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். தொடர்ந்து போலீசாரும் அதிரடியாக பதிலுக்கு சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருபெண் உள்பட 5 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.

48 மணி நேரம் சண்டை நிறுத்தம்… சவுதி அறிவிப்பு…

சவுதி:
48 மணிநேரம் சண்டை நிறுத்தம்… சண்டை நிறுத்தம் என்று அறிவித்துள்ளது சவுதி அரசு.

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் களம் இறங்கி, கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி வருகிறது.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படையினர் களம் இறங்கிய பிறகு நடந்த சண்டையில் இதுவரை 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது.

அங்கு பல முறை சண்டை நிறுத்தங்கள் அமலுக்கு வந்தாலும், அவை முறிந்துபோய் உள்ளன. இந்நிலையில் தற்போது அங்கு 48 மணி நேர சண்டை நிறுத்தத்தை சவுதி கூட்டுப்படைகள் அறிவித்துள்ளன. இந்த சண்டை நிறுத்தம் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முடியலை… 30 ஆயிரம் பேர் வேலை காலி… வோல்க்ஸ்வேகன் அறிவிப்பு

ஜெர்மனி:
முடியலை… முடியலை… அதனால இப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கு என்று வோல்க்ஸ்வேகன் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என்ன விஷயம் என்றால்.. 2017ம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக, வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் வோல்க்ஸ்வேகன். சமீபத்தில் அமெரிக்க வாகன சந்தையில் நச்சுப் புகை வெளியிடும் வாகனங்களை அதிகளவில் விற்பனை செய்ததாகக் கூறி வோல்க்ஸ்வேகன் மீது 10 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டது.

இதனால் அந்நிறுவனத்திற்கு பெரும் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கும் விதமாக 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளதாம்.

பணிநீக்கம் செய்யப்படும் பெருமளவு ஊழியர்கள் ஜெர்மனி, தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. வோல்க்ஸ்வேகன் குழுமத்தில் மொத்தம் 6 லட்சத்து 10 ஆயிரத்து 76 பேர் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2வது டெஸ்ட் போட்டி விக்கெட்டுக்களை அள்ளிய அஸ்வின்

விசாகப்பட்டினம்:
விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் 2 வது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் அசத்தல் தொடர்கிறது. இவர் 5 விக்கெட்டுக்களை கைப்பற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களில் சுருண்டது.

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 455 ரன் குவித்தது. விராட் கோலி (167 ரன்), புஜாரா (119 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர்.

ஆண்டர்சன், மொயீன் அலி தலா 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தார் அஸ்வின்.

நேற்று நடந்த 3-வது நாள் ஆட்டத்தில் 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 5 விக்கெட்டுடன் தொடர்ந்து விளையாடியது இங்கிலாந்து அணி. அணியின் ஸ்கோர் 225 ரன்கள் இருந்தது.

பாலோ ஆனைத் தவிர்க்க 256 ரன் எடுக்க வேண்டும். ஆனால், முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் இங்கிலாந்து அணி பாலோ ஆனை தவிர்க்க போராடியது. பின்னர், அன்சாரி 4 ரன்களிலும், பிராட் (13), ஆண்டர்சன் (0) ஆகியோர் விரைவில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இருப்பினும் இங்கிலாந்துக்கு பாலோ ஆன் கொடுக்கப்படவில்லை. 200 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது.

நான்காம் நாள் ஆட்டம்..

தற்போதய ஸ்கோர் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் – 158/7.

358 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா ஆடி வருகிறது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Nov 192016
 

2

 

கையில் மையுடன் மக்கள்… ஆமாங்க… 4 தொகுதிக்கு இன்று தேர்தல்

சென்னை:
கையில் மை வைக்க தேர்தல் அதிகாரிகளும் ரெடி… மக்களும் ரெடியாக இன்று காலை 7 மணியிலிருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 4 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு, இன்று தேர்தல் நடக்கிறது.

காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவுக்கு பின் 22ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவு சதவீதத்தை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறிய, புது வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இருந்து, ஓட்டுச்சாவடி அலுவலர்களை, மொபைல் போனில் அழைத்தால் அவர்கள் ஓட்டுப்பதிவு சதவீதத்தை, மொபைல் போனிலேயே பதிவு செய்து அனுப்புவர்.

தேர்தல் அமைதியாக நடைபெற, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை முதல் மக்களும் தங்கள் ஜனநாயக கடமையை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பார்த்துட்டார்… இவர் பார்த்துட்டார்… முதல் ஆளா பார்த்துட்டார்

நியூயார்க்:
பார்த்துட்டார்… பார்த்துட்டார்… இவர்தான் முதல்ல பார்த்துட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் வெளிநாட்டு தலைவர் சந்திச்சு இருக்கார் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பை. யார் தெரியுங்களா?
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேதான் அவர்.

நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவர் கட்டடத்தில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தது. தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின் அவரை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் அபே என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, டிரம்ப்பை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை அதிபர்கள், பிரதமர்கள் என 32 உலக நாடுகளின் தலைவர்களோடு டிரம்ப் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்துட்டாங்க… விண்ணிலிருந்து பூமிக்கு வந்துட்டாங்க…

பீஜிங்:
வந்துட்டாங்க… வந்துட்டாங்க… விண்ணிலிருந்து பூமிக்கு வந்துட்டாங்க… அட பயப்படாதீங்க… இவங்க சீன விஞ்ஞானிகள்தாங்க…

சீனா விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்தில், ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த 2 விஞ்ஞானிகள் ஒரு மாத பயணத்துக்குப் பின் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

சீனா வரும் 2022ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தர விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக விண்வெளிக்கு சென்று திரும்பும் வகையிலான விண்கலத்தை அனுப்பி வருகிறது.

இப்படி இதுவரை 5 முறை விண்வெளிக்கு விஞ்ஞானிகளை அனுப்பியு வைத்துள்ளது சீனா. இதன் தொடர்ச்சியாக 6வது முறையாக கடந்த அக்., 17ம் தேதி ‘செனஷோவ் 11’ என்ற விண்கலம் மூலம் ஜிங் ஹெய்பிங் (50), ஷென் டங் (38), என்ற 2 விஞ்ஞானிகள் விண்வெளிக்கு பறந்தனர்.

இதில் ஜிங் ஹெய்பிங் ஏற்கனவே 2 முறை விண்வெளிக்கு சென்ற வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஒரு மாதம் அங்கு தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

பணி முடிந்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். நீண்டகாலம் விண்வெளியில் தங்கிய சீன வீரர்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளனர்.

நான் தர ரெடி… நீங்க வாங்கிக்ஙகோங்க… எம்.பி. கடிதம்…

விஜயவாடா:
நான் ரெடிங்க… நீங்க வாங்கிக்கங்க என்று மத்திய அமைச்சருக்காக முன்வந்துள்ளார் எம்.பி. ஒருவர். என்ன விஷயம் என்கிறீர்களா?

சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜீக்கு தன் சிறுநீரகத்தை தானமாக வழங்க, தெலுங்கு தேச எம்.பி., முன்வந்துள்ளதுதான் விஷயமே.

மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் (64) சிறுநீரக கோளாறு காரணாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனராம்.

இந்நிலையில் அவருக்கு தன் சிறுநீரகத்தை தானமாக வழங்க, தெலுங்கு தேச எம்.பி., ராயபதி சாம்பசிவ ராவ் முன்வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் சுஷ்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் என்ன எழுதியிருக்கிறார் தெரியுங்களா?

தங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு குறித்து கேள்விப்ட்டு மிகவும் வருந்துகிறேன். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக எனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க விரும்புகிறேன். அதை தாங்கள் ஏற்றுக்கொண்டால் மிகவும் மகிழ்ச்சி என்று சொல்லியிருக்காருங்க… இவர் ரெடிதான்… வாங்க அவங்க ரெடியா… ரெடியா…

கனமழை ஸ்டார்ட் ஆகுது… கவனமா இருங்கோ… இருங்கோ…

சென்னை:
கனமழை இருக்கு. கவனமாக இருங்க என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. விஷயம் இதுதான்.

‘தமிழகத்தின் தென் மாவட்டங்களில், வரும், 22ம் தேதி வரை, மிக கனமழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 13ம் தேதி முதல் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும், தென் தமிழக கடலோர பகுதிகளிலும், பரவலாக மழை பெய்கிறது. டெல்டா மாவட்டங்களிலும், பரவலாக மழை பெய்துள்ளது.

‘தென் கிழக்கு வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த மண்டலம், இரு தினங்களில் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்பதால், தென் மாவட்டங்களில், வரும் 22ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது’ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Nov 182016
 

7

ஜிகு…ஜிகுன்னு மினுக்கும் கலர்புல் லைட்டுகள்… பளபளவென்று வெள்ளி பேப்பரால் சுற்றப்பட்ட இனிப்பு வகைகள்… பார்த்தாலே வாயில் எச்சில் சுரக்கும். வாங்கி சாப்பிட்டால்…  அட ஒரு நிமிஷம் இருங்க… இங்குதான் ஒரு ஆபத்து ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ரே…ரே.. என்று கண் பொத்தி விளையாடுகிறது.

அட என்னப்பா… இது ஸ்வீட் சாப்பிட்டால் சுகர் ஏறிடும் என்று சொல்ல வர்றீங்களா என்று கேட்கிறீர்களா? இல்லீங்க… உடல் நலத்திற்கு உலை வைக்க வாங்க… வாங்க என்று அந்த ஸ்வீட்ஸ் கூப்பிடுது என்றுதான் சொல்ல வேண்டும். விஷயம் என்ன தெரியுங்களா?

பார்த்த உடனே வாங்கி சாப்பிட வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டும் அந்த ஸ்வீட்ஸ் மேல் அழகாக… வெகு அழகாக ஒரு சில்வர் தாள் உட்கார்ந்து இருக்கும். ஸ்டாலில் அந்த ஸ்வீட் ஸ்டாண்டில் போகஸ் லைட்டுகள் மத்தியில் பளபளவென்று. ஸ்வீட்மேல் உள்ள அந்த வெள்ளி பேப்பர் என்னவென்று ஸ்வீட் கடையினரிடம் கேட்டுப்பாருங்க… சார் இது என்ன தெரியுங்களா? உண்மையிலேயே வெள்ளிப்பேப்பர்தான். உங்க உடல் ஆரோக்கியத்திற்கு நாங்க கேரண்டி என்பார்கள்.

அங்குதான் உள்ளது வினை. இந்த வெள்ளி இழை பேப்பர்கள் அனைத்து ஸ்வீட்களில் மேலும் இருக்காது. சில ஸ்வீட்ஸ் வகைகள் மீது மட்டும்தான் அப்ளை செய்யப்பட்டு இருக்கும். இப்படி ஸ்வீட்ஸ் மேலுள்ள அந்த வெள்ளி இழைகள் நம் உடலுக்குள்தானே செல்கிறது. அட வெள்ளி நல்லதுதானே என்று கேட்பீர்கள். சரி அது வெள்ளிதான் என்று உங்களுக்கு எப்படி தெரியும். அதான் கடைக்காரர் சொல்கிறாரே… அவர் என்ன ஏமாற்ற போகிறாரா என்று பதில் சொல்லாதீர்கள்.

அது உண்மையிலேயே வெள்ளி இழை பேப்பராக இருந்தால் ரொம்ப சந்தோஷம். காரணம் அதனால் உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அப்ப வேறு என்னவாக இருந்தால் பாதிப்பு என்கிறீர்களா? இதோ விஷயத்திற்கு வருவோம். அலுமினிய இழை பேப்பராக இருந்து விட்டால்… உங்கள் உடல் பஞ்சர்தான். நோய் பாதிப்புக்கு உள்ளாவது நிச்சயமோ…நிச்சயம்.

வெள்ளியையும், அலுமினியத்தையும் பேப்பர்போல் செய்து விட்டால் இரண்டுக்கும் எவ்வித வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாது. பார்ப்பதற்கு பளபளவென்று ஒன்றுபோல்தான் இருக்கும். வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட பேப்பர் ஸ்வீட் மீது ஒட்டப்படுவதால் அவை உடலுக்கு எவ்வித தீங்கையும் செய்யாது. ஆனால் அலுமினிய பேப்பர்கள் தீங்கு செய்யவே பிறப்பெடுத்தவை போன்று.

அப்புறம் எப்படிதான் கண்டுபிடிப்பது என்று டென்ஷனாக கேட்கிறீர்களா? ரொம்ப சிம்பிள். ஒரு சின்ன பரிசோதனை செய்து பாருங்க… சாயம் வெளுத்து விடும். அந்த பரிசோதனை இதுதான். வெள்ளி இழை மிக மெல்லியதாக தான் வெள்ளி என்பதை காட்டிக்கொள்ளாமல் தன்னடக்கத்தோடு இருக்கும். ஸ்வீட்டின் மீது உள்ளது வெள்ளிதானா என்பதை கண்டறிய இரண்டு விரல்களுக்கு இடையில் அந்த வெள்ளி பேப்பரை எடுத்து தேய்த்தால் அது தானாக கரைந்து தேய்ந்து அழிந்துவிடும்.

ஆனால் அலுமினிய இழை பேப்பரோ… அப்படி இல்லை… அழியாது உருண்டு திரண்டு ஒரு உருண்டையாக மாறிவிடும். இதிலிருந்து ஸ்வீட் மீது உள்ளது வெள்ளியா… இல்லை… அலுமினியமா என்று கண்டறிந்து விடலாம். அலுமினிய இழைகளோடு ஸ்வீட்சை சாப்பிடுவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் தெரியுங்களா?

ரத்தத்தோடு கலந்து சரும நோய்கள் ஏற்படும். நுரையீரல்களில் உள்ள காற்று அறைகளை பாதித்து மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். பாராதைராய்டு என்று சொல்லப்படும் கழுத்தின் முன்பகுதியில் இருக்கும் சுரப்பியை செயல்படவிடாமல் தடுத்து விடும். இப்படி பல பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டு அமைதியாக இருந்துவிடும் அலுமினிய இழை பேப்பர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

என்ன மின்னுவதெல்லாம் பொன்னில்லை என்கிறீர்களா? அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கும் சிலர்தான் இப்படி உணவு பொருட்களை விஷமாக்கி விற்கின்றனர். அதற்காக அனைவரும் இப்படி செய்வதில்லை. யார் எப்படி இருந்தாலும்… நம் உடல் நலனில் நாம்தானே முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனம்…

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Nov 182016
 

 

1

ஐயா ஜாக்கிரதை… அம்மா ஜாக்கிரதை… எடுத்தீங்க… அப்புறம் சிறைதான்

தஞ்சாவூர்:

ஐயா ஜாக்கிரதை… அம்மா ஜாக்கிரதை… குப்பைத் தொட்டிகளிலோ… சாலைகளிலேயே செல்லாத பணம் கொட்டப்பட்டு கிடந்தால் எடுக்காதீங்கோ… எடுக்காதீங்கோ… அப்புறம் நீங்க கம்பிதான் எண்ணும்… ஜாக்கிரதைங்கோ…

என்ன இம்புட்டு பில்டப் என்கிறீர்களா… உண்மைதாங்க… அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அதிரடியாய் அறிவித்ததை தொடர்ந்து, நடுத்தர மக்கள் வங்கிகளை நோக்கி ஓட்டம் பிடிக்க, பணத்தை அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள் நகைக்கடைகளை நோக்கி ஓடுகின்றனர். இதனால் சில தினங்களுக்கு நகை விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. தொடர்ந்து தங்கம் வாங்குபவர்கள், தங்களது பான் எண்ணை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு தடாலடியாக அறிவிக்க, இப்போ நகைக்கடைகள் காற்று வாங்குகிறதாம்.

இதனால் பலர் ரூபாய் நோட்டுகளை மூட்டையாக மூட்டையாக குப்பைகளில் தூக்கி போட்டு வருவதாகவும், சாலை ஓரங்களில் வீசப்பட்டு வருவதாகவும், கோயில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வந்தபடியே இருக்கிறது.

இங்குதான் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். ஏன் என்கிறீர்களா? இந்த பணம் எல்லாம் கள்ள  நோட்டுகள் என்பதுதான் விஷயமே.

“ரோட்டிலோ, குப்பையிலோ யாரும் செல்லுபடியாகும் நோட்டுகளை கொட்டுவதில்லை. எங்காவது ஓரிரு இடங்களில் அப்படி நடந்திருக்கலாம், ஆனால், பெரும்பாலான இடங்களில் கொட்டப்பட்டு கிடப்பது எல்லாம் கள்ள நோட்டுகள்தான். டிசம்பர் 30-ம் வரை பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால், அளவுக்கதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் அனைவரும் அதனை வேறு விதமாக புதிய நோட்டுகளாக மாற்றி வருகின்றனர். குப்பையில் கொட்டப்படுவது எல்லாம் செல்லாத கள்ள நோட்டுகளே” என்று சொல்கின்றனர் விபரமறிந்த சில அதிகாரிகள். எனவே ஜாக்கிரதை மக்களே… நீங்க ஆஹா குப்பையில் பணமா என்று எடுத்து வங்கிக்கு சென்றால் அங்கிருந்து நேராக மாமியார் (சிறை) வீட்டுக்கு செல்ல நேரிடும். கவனம்… கவனம்…

தபால் ஓட்டு இல்லீங்கோ… 3 தொகுதி தேர்தலிலும்… இல்லீங்கோ…

சென்னை:

தமிழகத்தில் தஞ்சை உட்பட 3 தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தல்களில் தபால் வாக்கு கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா காரணமாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் சட்டசபைத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவும் உடல் நலக்குறைவால் இறந்தார். தொடர்ந்து 3 தொகுதிகளுக்கான தேர்தலும் நாளை (19-ம் தேதி) நடைபெற உள்ளது.

இங்குதான் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி ஒரு ஸ்டேட்மெண்டை போட்டுள்ளார். என்ன தெரியுங்களா? 3 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் தபால் வாக்குகள் கிடையாது என்று ஒரே போடாக போட்டுள்ளார்.

அரசியல்ல… இதெல்லாம் சகஜமப்பா… ஆதரவாளர்களை சமாதானப்படுத்திய ஹிலாரி

வாஷிங்டன்:

அரசியல்ல… இதெல்லாம் சகஜமப்பா… என்ற நம்ம காமெடி நடிகர் கவுண்டமணியின் டயலாக்கை போல் தன் ஆதரவாளர்களை மனம் தளர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டன்.

அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8ம் தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் டிரம்ப் வெற்றி பெற்றார். அத்துடன் அமெரிக்க பார்லியில் அதிக இடங்களை குடியரசு கட்சி பெற்றதால், ஹிலாரி ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் வாஷிங்டனில் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் கூட்டம் நடந்தது. தேர்தல் தோல்விக்கு பின் முதன்முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹிலாரி என்ன பேசினார் தெரியுங்களா?

தேர்தல் தோல்வியால் நீங்கள் அடைந்துள்ள அதிருப்தி போலவே எனக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தோல்வியை கண்டு மனம் தளரா மல், தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். நாட்டு மக்களிடையே ஆழமான பிளவுகள் இருந்தாலும், அதையும் தாண்டி அமெரிக்கா உச்சத்தை எட்டும் என்று தன் ஆதரவாளர்களுக்கு “பூஸ்ட் அப்” கொடுத்துள்ளார்.

“ஐ சப்போர்ட்…” நான் அப்படி சொல்லைங்க… பில்கேட்ஸ் அலறல்…

புதுடில்லி:

யாருய்யா… அது இப்படி கிளப்பி விட்டு வெறும் தண்ணீரில் வெங்காயத்தை வதக்குறதுன்னு நொந்து போய் உள்ளார் பில்கேட்ஸ். எதற்காக தெரியுங்களா?

அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், ‘மைக்ரோசாப்ட்’ மென்பொருள் நிறுவன தலைவரும், பிரபல தொழிலபதிருமான, பில்கேட்ஸ், இந்தியா வந்துள்ளார்.

பிரதமர் மோடியின், கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு, அவர் ஆதரவு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்குதான் இப்படி ஒரு ரியாக்சன் கொடுத்துள்ளார். எப்படி?

பிரதமர் மோடியின் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை குறித்து, நான் எதுவுமே கூறவில்லை. ஆனால், இந்தியா, ‘டிஜிட்டல்’மயமாக மாறி வருகிறது என்றுதான் தெரிவித்தேன். இந்தியாவின், ஆதார் அடையாள அட்டை சிறப்பான திட்டம்.

அமெரிக்காவின், புதிய அதிபராக, டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி, எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. யார் அதிபராக இருந்தாலும், அவருடன் இணைந்து பணியாற்ற தயார். இப்படி சொல்லியிருக்கிறாருங்க…

உங்க அரசியலுக்கு நீதிமன்றம் இடமில்லை… நீதிபதிகள் “கடும் காட்டம்”

சென்னை:

உங்க அரசியலுக்கு இது இடமில்லை என்பதுபோல் நீதிமன்றம் “கடுமை” காட்டியுள்ளது. எதற்காக தெரியுங்களா?

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தஞ்சை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்று கூறி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. சிலபல தடைகளுக்கு பிறகு தற்போது நாளை (19ம் தேதி) தஞ்சாவூர் தொகுதியில் தேர்தல் நடக்கிறது.

இதற்கிடையில் இந்த தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ரமேஷ் காந்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் என்ன சொல்லியிருந்தார் தெரியுங்களா?

“தஞ்சை தொகுதி அதிமுக வேட்பாளர் ரங்கசாமியின் வேட்புமனுவில் சின்னம் ஒதுக்கும் படிவத்தில் முதல்வர் வைத்துள்ள கைரேகையின் உண்மைத் தன்மையை யாரும் நிரூபிக்கலை. இந்த காரணத்தால் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தலைமை நீதிபதி கூறுகையில், “இந்த கைரேகை தொடர்பாக ஒருவர் மாற்றி ஒருவர் வழக்கு தொடர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுவது மட்டுமல்லாமல் நீதிமன்றத்திலும் போட்டியிடுகிறீர்கள். அரசியலை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள்.

தேர்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர நீதிமன்றம் மூலம் எதிர்கொள்ளக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை எதிர்கொள்ள அச்சமிருந்தால் ஏன் சுயேட்சையாக போட்டியிட வேண்டும். தேர்தல் சின்னம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே இந்த மனுவை விசாரிக்க முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

டிவி நடிகர் மரணம்… தற்கொலையா… விபத்தா போலீசார் தீவிர விசாரணை

மும்பை:
தற்கொலையா… விபத்தா என்று புரியாமல் அதிர்ச்சி நிலையில் உள்ளனர் மக்கள். காரணம் டி.வி. நடிகர் ஒருவர் ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த சம்பவம்தான்.

சமீபத்தில் நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துவிட்டது. அதேபோல்தான் மும்பை மேற்கு வழி ரயில் தடத்தில் காந்திவிலி- போரிவிலி ரெயில் நிலையங்களுக்கு இடையே முதியவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வர  உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

இதில் அந்த முதியவர் பிரபல பாலிவுட் சீரியல் நடிகர் முகேஷ் ராவல் (66) என்பது தெரியவந்துள்ளது. இவர் இந்தி, குஜராத்தியில் டி.வி சீரியல்களில் நடித்துள்ளார். இந்தி ராமாயணத்தில் விபீஷணாக நடித்ததும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Nov 172016
 

images (1)

 

ரூ.1000க்கு ஸ்மார்ட் போன்ரிலையன்ஸ் ஜியோ அதிரடிஅடுத்த ஆண்டு களத்தில் இறங்குது

புதுடில்லி:

அடுத்து… அடுத்து என்று ரிலையன்ஸ் அதிரடிக்க ஆரம்பித்துள்ளதால் பிற செல்போன் நிறுவனங்கள் கதிகலங்கி போய் உள்ளன. என்ன தெரியுங்களா? ரூ.1000க்கு ஸ்மார்ட் போனை கொடுக்க போறாங்களாம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த அதிரடி ஆபராக 1000 ரூபாய்க்கு அன்லிமிடெடட் வீடியோ காலிங் மற்றும் வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சிம்மை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. 3 மாதங்களுக்கு இலவசமாக 4ஜி இன்டர்நெட் சேவையை மற்றும் வாய்ஸ்கால்களை பயன்படுத்தலாம் என்று அதிரடியாக அறிவிக்க… 25 மில்லியன் வாடிக்கையாளர்கள் சேர்ந்துட்டாங்க என்றால் பார்த்துக் கொள்ளுங்க…

இது போட்டி நிறுவனங்கள் வயிற்றில் பீதியை கிளப்பி பேதியை உண்டாக்கியது என்றால் மிகையில்லை. இந்நிலையில் அடுத்த அதிரடியாக 1000 ரூபாய் விலையில் அன்லிமிடட் வீடியோ காலிங் மற்றும் வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளதாம்.

இந்த ஸ்மாட் போன் VOLTE வசதியை கொண்டுள்ளதால் இந்த போன் மூலம் செய்யப்படும் அனைத்து கால்களும் இன்டர்நெட் வழியாகவே செல்லும். இதனால் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங்களுக்கு தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்த போனை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் லாவா மற்றும் ஒரு சீன நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. 2017 ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்.1ம் தேதிக்கு பிறகு… அடுத்த அதிரடிக்கு தயார் ஆகுது மத்திய அரசு

புதுடில்லி:

அடுத்த ஆண்டு ஏப். 1ம் தேதிக்கு பிறகு பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் வைத்திருக்கிறீர்களா… அப்போ… நீங்க குற்றவாளியாகிடுவீங்க… ஜாக்கிரதை…

செமத்தியாக டிரில் எடுக்கிறது மத்திய அரசு என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா? ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடித்தது. இப்போ அந்த நோட்டுக்களை மாற்ற மக்கள் பிஸியோ… பிஸி… இந்நிலையில் அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறதாம் மத்திய அரசு.

பிரதமரின் அதிரடியால் தற்போது மக்கள் வங்கிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். டிசம்பர் 30-ந் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்று அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி சந்திரகவுடு ஆகியோர் அடங்கிய பெஞ்சில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலக்குது மத்திய அரசு… கலங்கி நிற்கின்றனர் கருப்பு பண முதலைகள்…

அடுத்தது பினாமி சொத்துக்கள் மீது அதிரடி எடுங்க… முதல்வர் வேண்டுகோள்

பீகார்:

அடுத்தது இந்த அதிரடியாகத்தான் இருக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.

எந்த அதிரடியாக இருக்க வேண்டும் தெரியுங்களா? 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்றதை போல், ‛பினாமி’ சொத்துகளுக்கு எதிராகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் “வாய்ஸ்” விட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் என்ன சொல்லியிருக்கார் என்று பாருங்களேன்… 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றதை வரவேற்கிறேன்.

இது கறுப்பு பணம் மற்றும் சட்டவிரோதமாக செயல்படும் வர்த்தகங்களுக்கு முடிவு கட்டும். இதைப்போல ‛பினாமி’ சொத்துகளுக்கு எதிராகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ‛தாக்குதல்’ அவர்கள் மீது இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த மாதம் இந்தியா வர்றார்பாக்., பிரதமரின் ஆலோசகர்

இஸ்லாமாபாத்:

அடுத்த மாதம்… அடுத்த மாதம் வருவது உறுதி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.

யூரி சம்பவத்துக்குப் பின், பாக்., அரசின் உயர் அதிகாரி ஒருவர் இந்தியா வர உள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரின் யூரி பகுதியில் கடந்த செப்., 10ம் தேதி, பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இதை கண்டித்து பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கை, வங்கதேசம் உட்பட நாடுகளும் புறக்கணிப்பில் இறங்கின. இதனால்  மாநாட்டையே ரத்து செய்ய நேர்ந்தது.

இந்நிலையில் வரும் டிச., 3ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஆப்கானிஸ்தான் வளர்ச்சி தொடர்பாக ‘ஆசியாவின் இதயம்’ என்ற மாநாடு நடக்க உள்ளது. இதில் பாக்., சார்பில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் பங்கேற்க உள்ளார்.

இயல்பான மழையே பெய்யும்… வானிலை மையம் வழக்கம் போல் அறிவிப்பு

சென்னை:

தமிழகத்தில் இயல்பான மழையே பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை முடிவடைந்து அக்டோபர் 30-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. லேட்டாக இருந்தாலும் கொட்டித் தீர்க்கும் என்று பார்த்தால் சொட்டக்கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் மிதமான மழை மட்டுமே பெய்து வருகிறது.

பருவமழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் தம்பி கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி நீண்ட நாட்கள் ஆகியும் கனமழை பெய்யவில்லை. இது போல முன்பும் இருந்து இருக்கிறது.

அடுத்த 5 நாட்கள் வரை பெரிய அளவில் மழை இல்லை. இதுவரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 68 சதவீதம் குறைவாகத்தான் பெய்துள்ளது. இயல்பான அளவு மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் மழை மேகம் இருந்தும் ஈரப்பதம் இல்லாததால் கனமழை பெய்யவில்லை. மாறாக சமீபத்தில் குறைந்தழுத்த தாழ்வுநிலை அந்தமான் அருகே உருவாகி அது தாழ்வு மண்டலமாக தீவிரம் அடைந்து, மியான்மர் வழியாக சென்றது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடல் பகுதியில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துச்சென்றுவிட்டது. இதுவும் மழை அதிகளவில் பெய்யாததற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் 4.2 ரிக்டர் நிலநடுக்கம்… தூக்கம் கலைந்து மக்கள் அச்சம்

புதுடில்லி:

டில்லியில் 4.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டில்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அரியானா மாநிலம் பவால் நகரின் தெற்கு பகுதியிலிருந்து 13 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டது.

பூமிக்கடியில் 10 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவாகி உள்ளது. மிதமான நிலநடுக்கம் என்றாலும் மக்கள் அச்சத்தில்தான் உள்ளனர்.

டில்லி என்.சி.ஆர்., மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை உணரப்பட்ட இந்நிலநடுக்கத்தால் தூக்கம் கலைந்து எழுந்ததாகவும், கட்டடங்கள் குலுங்கியதாகவும் நிலநடுக்கத்தை உணர்ந்த பலர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

50வது டெஸ்டில் விளையாடிய 28வது இந்தியர் விராட்கோலி

மும்பை:

50 டெஸ்ட்டில் விளையாடிய 28வது இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

விராட் கோலிக்கு இன்றைய போட்டி 50-வது டெஸ்ட் ஆகும். இப்படி 50-வது டெஸ்டில் விளையாடிய 28-வது இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 28 வயதில் இந்த சாதனையை செய்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு ஜீன் மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக கிங்ஸ்டன் டெஸ்டில் அறிமுகம் ஆனார். விராட் கோலி அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 டெஸ்டில் விளையாடி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 11 டெஸ்ட், வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 10 டெஸ்ட், நியூசிலாந்துடன் 7 டெஸ்ட், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 6 டெஸ்ட், இலங்கையுடன் 3 டெஸ்ட், வங்காளதேசத்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் ஆடி அசத்தி உள்ளார்.

– N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Nov 112016
 

1

திரு.பரமன், மலர்ச்சி என்ற நிறுவனத்தின் மூலம் வாழ்வியல் பயிற்சி கொடுத்து பல மனிதர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் இருந்து வருகிறார். மேலும் வளர்ச்சி என்ற மாதாந்திர புத்தகத்தின் மூலம் பலரை ஊக்குவித்தும் வருகிறார்.

சிதம்பரம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து, பாலிடெக்னிக் படித்து,  கணினித்துறையில் ஆழமாக முத்திரைப் பதித்தவுடன், ஜப்பான் அமேரிக்கா போன்ற நாடுகளில் வேலை செய்துள்ளார். ஆனாலும் மக்கள் பணியில் ஈடுபாடு அதிகம் இருக்கவே, வாழ்வியல் துறையில் ஈடுபட்டு பல மக்களின் வளர்ச்சிக்கு ஒரு கருவியாக இருந்து வருகிறார்.

B+ இதழுக்காக, இந்த மாத சாதனையாளராக இவரை சந்தித்து பேட்டி எடுத்தோம். பல துறையில் பல விஷயங்களை மிகுந்த உற்சாகத்துடன் நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார். இவரது பேட்டியை கீழுள்ள கானொளியில் காணுங்கள்..

https://www.youtube.com/watch?v=sXzI6hBfyE8 – Part 1

https://www.youtube.com/watch?v=UIl4e_9pWYU – Part 2

2

 

 

 

 

 

3

 

 

 

 

Like our FB page for regular feeds  https://www.facebook.com/bpositivenews

Likes(3)Dislikes(0)
Share
Nov 112016
 

Art 2

விவசாயிகளின் உற்றத் தோழனான கோவைக்காய்…

கிராமப்புறங்களில் உள்ள ஆறு, குளம், வீடுகளின் பின்புற தோட்டத்தில் தானாக விளைந்து காய்த்து தொங்கும் கோவைக்காய் பார்த்திருப்போம். ஆனால் அவற்றை உணவுக்காக என்றும் தமிழக மக்கள் விரும்பியதில்லை. காய்கள் பழுத்து தொங்கும் போது அதை கல்வீசி பறித்து சிறுவர்கள் சாப்பிடுவார்கள்.

ஆனால் இன்று அந்த கோவைக்காய் தமிழக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவுப் பொருளாக உருமாற்றம் பெற்றுள்ளது. இதை சாகுபடி செய்து செம விளைச்சலும், கல்லா நிரம்பும் பணத்தையும் அறுவடை செய்து சந்தோஷத்தில் உள்ளனர் விவசாயிகள்.

காய்கறிகளை சாகுபடி செய்ய பல பட்டங்கள் இருந்தாலும், ஆடிப்பட்டம்தான் உகந்த ஒன்று. ஆடிப்பட்டத்தில் காய்கறி மட்டுமில்ல, வேற எந்தப் பயிர் விளைவித்தாலும் மகசூலுக்கு பாதகம் இருக்காது. இதைதான் நம் முன்னோர்கள் ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த ஆடிப்பட்டத்தில் கோவைக்காய் சாகுபடி செய்து செமத்தியாக வருமானம் பார்த்து வருகின்றனர் விவசாயிகள். இவர்கள் விளைவிக்கும் கோவைக்காய்கள்தான் தமிழகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கிறது.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளதாக்கு பகுதிகளான தென்பழனி, கே.கே.பட்டி, சுருளிபட்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், காலானப்பாடிபட்டி, திருச்சியில் துறையூர், மணச்சநல்லூர், கும்பகோணம் பகுதியில் சில பகுதிகள் என தமிழகத்தின் பல பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் தற்போது கோவைக்காய் சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

முதலுக்கும் மோசமின்றி அதிக வருவாயையும் அள்ளித் தரும் இந்த கோவைக்காய் தற்போது விவசாயிகளின் நண்பனாகவே மாறிவிட்டது. கோவைக்காய் சாகுபடி செய்து அதிக வருமானம் ஈட்டி வரும் சுருளிப்பட்டியை சேர்ந்த விவசாயி தனசேகரிடம் இந்த சாகுபடி பற்றி கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:

ஆரம்பத்தில் 3 ஏக்கர் நிலத்துல வருஷத்துல ஒரு போகம் ஆடிப்பட்டத்துல மட்டும் மானாவாரியா நெல், வேர்கடலை சாகுபடி செய்து வந்தோம். அதுல கிடைக்கிற வருமானமும், அப்பா வைத்திருந்த சிறிய மளிகை கடையின் வருமானமும்தான் குடும்பத்தை பிரச்னை இல்லாமல் ஓட்ட உதவியது.

எனக்கு திருமணம் நடந்த பிறகு, கடன் வாங்கி, 60 அடி ஆழத்துக்கு கிணறு வெட்டினேன். அந்தக் கிணற்றுத் தண்ணீரை வெச்சு தோட்டக்கால் பயிர் சாகுபடி செய்ய முடிவு செய்தேன். இதன்படி ஆரம்பத்தில் ஒரு போகம் நெல், கத்திரி, வெண்டைக்காய் சாகுபடி செய்தேன்.

அப்போதுதான் இப்பகுதியை சேர்ந்த வேளாண் அதிகாரிகளை சில சந்தேகங்களுக்காக சந்தித்த போது அவர்கள் கோவைக்காய் சாகுபடி பற்றியும், அதற்குள்ள வியாபாரம் பற்றியும் விளக்கி சொன்னார்கள். சரி இதை செய்து பார்க்கலாம் என்று 50 சென்ட் நிலத்துல கோவைக்காய் கொடிகளை நட்டு, பந்தலும் போட்டேன்.

இயற்கை விவசாய முறைப்படி ரசாயன உரங்கள் இன்றி முறையா பாரமரிப்பு செய்ய நல்ல விளைச்சல். அதிகாரிகளின் ஆலோசனையின் படி நேரடியாக காய்கறி விற்பனை நிலையத்துக்கு விற்க நல்ல லாபம் கிடைச்சது.

அதற்கு பிறகு எனக்கு கோவைக்காய் சாகுபடியே முதன்மையானதாக மாறிவிட்டது. இப்போ 2 ஏக்கரில் கடந்த பல வருடமாக கோவைக்காய் சாகுபடி செய்றேன். வருமானத்தை அள்ளித் தருகிறது. கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து நல்ல விலைக்கு கொள்முதல் செய்துக்கிட்டு போறாங்க…என்று சந்தோஷமாக கூறினார்.

கோவைக்காயை தமிழக மக்களும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் பெரிய ஓட்டல்களில் கூட கோவைக்காயை சமையலில் சேர்ப்பதால் விற்பனை வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம்.

இந்த கோவைக்காயை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவு ஆகிறது. கொடி வளர்ந்த 90 நாட்கள் பின்னர் 10 நாட்களுக்கு ஒருமுறை ஒன்றரை ஆண்டுகளுக்கு காய் பறிக்கலாம். ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தினால் 30முதல் 35டன் வரை காய்கள் பறிக்க முடியும். செலவு போக ரூ.5 லட்சம் வரை லாபம் ஈட்ட முடிகிறது என்று சொல்கின்றனர் விவசாயிகள்.

கோவைக்காய் சாகுபடி குறித்து வேளாண் அதிகாரி சாம்பசிவம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டோம். சாகுபடி முறைகள் குறித்து அவர் விளக்கமாக கூறினார்.

ஒரு முறை நடவு செய்யும் கோவைக்காய் செடிகளை, மூன்று ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம். வடிகால் வசதியுடன் கூடிய செம்மண், மணல்சாரி, லேசான களிமண் ஆகிய மண்வகைகள் கோவைக்காய்க்கு ஏற்றவை.

சித்திரை மாதத்தைத் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் கோவைக்காய் கொடித் தண்டுகளை நடவு செய்யலாம். ஆனால், ஆடிப்பட்டத்தில் நடவு செய்தால் முளைப்பு, செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 2 டிப்பர் எருவைக் கொட்டிக் கலைத்துவிட்டு, மூன்று சால் உழவு செய்து, நான்கு நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு முளைத்து வரும் களைகள் நீங்கும் அளவுக்கு உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பின்னர் 6 அடி இடைவெளியில் ஓர் அடி அகலத்தில் கிழக்கு-மேற்காக வாய்க்கால் அமைக்க வேண்டும். இந்த வாய்க்காலில் 6 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து… ஒவ்வொரு குழியிலும், இரண்டு கிலோ எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூடி, மூன்று அல்லது நான்கு கோவைக்காய் கொடித் தண்டுகளை நடவு செய்ய வேண்டும்.

விதைக்கான கொடித் தண்டுகளைத் தேர்வு செய்யும்போது இரண்டு முதல் இரண்டரை வயதுள்ளவையாக இருக்க வேண்டும். தரையில் இருந்து அரை அடி உயரத்துக்கு மேல் இருக்கும் கொடிகளாகப் பார்த்து, அரை அடி துண்டுகளாக வெட்டி, அவற்றை சாணிப்பாலில் நனைத்து நடவு செய்ய வேண்டும் (ஒரு ஏக்கருக்கு 10 கிலோ சாணியை, 30 லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்).

நடவு செய்த பிறகு குழிகள் மீது வைக்கோல் கொண்டு மூடாக்குப் போட்டு உயிர்த் தண்ணீர் கொடுக்க வேண்டும். மண்ணில் ஈரம் இருப்பதற்கு ஏற்ப 5 நாட்கள் வரை ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பின்னர் பாசன இடைவெளியைக் கூட்டிக் கொள்ளலாம். சாதாரண முறையில் பாசனம் செய்வதைவிட, சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது மிகவும் நல்லது. நான்கு நாட்கள் இடைவெளியில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் மற்றும் அமுதக்கரைசல் ஆகியவற்றை மாற்றி மாற்றி தண்ணீரில் கலந்து விட வேண்டும்.

15-ம் நாளில் கொடிகள் துளிர்விட்டு வைக்கோலுக்கு வெளியே தெரிய ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் வைக்கோலை அகற்றி விட வேண்டும்.
ஆறடிக்கு ஆறடி இடைவெளியில் ஐந்தரை அடி உயரத்தில் மூங்கில் கொம்புகளையோ அல்லது கல் தூண்களைக் கொண்டோ பந்தல் அமைக்க வேண்டும்.

20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். 30-ம் நாளில் செடியை ஒட்டி குச்சி ஊன்றி, கொடிகளைப் பந்தலில் ஏற்றிவிட வேண்டும். 60-ம் நாளில் கொடிகள் படர ஆரம்பித்து, 70-ம் நாள் முதல் காய்க்க ஆரம்பிக்கும்.

80-ம் நாள் முதல் தொடர்ச்சியாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்யலாம். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்களில் மகசூல் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவைக்காயை பொறியல் மட்டுமின்றி, கோவைக்காய் சில்லி, வறுவல், கூட்டு, சாம்பார் என பலவகையிலும் சமைக்கின்றனர். ஒரு சில இடங்களில் கோவைக்காயை நீளமாக நறுக்கி பஜ்ஜியாகவும் போட்டு விற்பனை செய்கின்றனர்.

– நாகராஜன், தஞ்சாவூர்

Like our FB page for regular feeds  https://www.facebook.com/bpositivenews

Likes(1)Dislikes(0)
Share
Nov 112016
 

5

நீ “சுனாமி”ன்னா… நான் காத்து நிற்கும் அரண்டா என்று கபாலி ஸ்டைலில் கம்பீரமாக மக்களை பாதுகாக்கும் இந்த காடுகளை, காப்பாற்றுவதும், பராமரிப்பதும் அரசின் வேலை மட்டும் இல்லை, மக்களாகிய நம் பங்கும் முக்கியம். அந்த காடுகள் எந்த காடுகள் என்று தெரியுங்களா? தெரிஞ்சுக்கிறீங்களா?

வாங்க… சுனாமியையே சுண்ணாம்பாக்கும் அந்த காடு பற்றி அறிவோம். மாங்குரோவ் காடுகள்தான் அவை. இதற்கு அலையாத்திக்காடுகள் என்ற பெயர் உண்டு. மாங்குரோவ் என்றாலும் கூட யோசிப்பவர்கள் அலையாத்திக்காடுகள் என்றால்… அட நம்ம முத்துப்பேட்டை காடுதானே என்று சொல்வார்கள்.

அந்தளவிற்கு இந்த காடுகள் பிரபலம் அடைய முக்கிய காரணகர்த்தா தமிழகத்தை தாக்கிய சுனாமிதான். கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி யாராலும் மறக்கமுடியாத சோகப்பதிவேடு. வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் பதிவாக காரணமாக இருந்த சுனாமி முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டை கண்டு மிரண்டது.

நாகையின் பல பகுதிகள் பாதிப்புகளை சந்தித்த போதும் முத்துப்பேட்டை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட காரணமாக இருந்தது அலையாத்திக்காடுகள்தான். அலையாத்திக்காடுகள் என்பது மருவி அழைக்கப்படும் வார்த்தை. உண்மையில் இந்த காடுகள் அலைகளின் வேகத்தை ஆற்றி (ஆசுவாசப்படுத்தி, அமைதிப்படுத்தி) திருப்பி அனுப்பும் செயலை செய்யும் திறன் வாய்ந்தவை. அதனால்தான் அலையாற்றிக்காடுகள் என்று அழைக்கப்பட்டவை

காலப்போக்கில் மருவி அலையாத்திக்காடுகள் என்று கூப்பிடப்படுகின்றன. இதுபோன்ற மரங்களை வேறு எங்கும் காண இயலாது. இதன் வேர்கள் தண்ணீரில் வளரும். இவற்றுக்கு தண்ணீரில், நிலத்திலும் ஆக்சிஜனை இழுத்து கொள்ளும் வகையில் வேர்களை இயற்கை வரப்பிரசாதமாக அளித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் பிச்சாவரத்திலும்… அடுத்த பெரிய அளவில் முத்துப்பேட்டை பகுதியிலும் தான் இந்த அலையாத்திக்காடுகள் உள்ளன. இவை சுனாமி மட்டுமின்றி, பெரும்புயல்களையும் தடுக்கும் திறன் கொண்டவை.

மக்களுக்கு பெரிய அளவில் அரணாகவும், வெளி நாட்டு பறவைகளின் விருப்பத்திற்கு உரிய இடமாகவும் விளங்கும் இந்த காடுகளின் இன்றைய நிலை… கண்ணில் கண்ணீரை… இல்லை… இல்லை… ரத்தத்தையே வரவழைத்துவிடுகிறது.

தமிழகத்தில் கோடியக்கரை தொடங்கி மரவக்காடு வரை தன் அன்புக்கரங்களை நீட்டியுள்ளது அலையாத்திக்காடு. இவை நன்னீரும், உப்பு நீரும் கலக்கும் கடல் முகத்துவாரத்தில் வளரும் தன்மை கொண்டவை.

நாகை, திருவாரூர் மாவட்டத்தில் கோரையாறு, பாமணி ஆறு ஆகியவை கடலில் கலக்கும் இடத்தில்தான் இவை அதிகளவில் உள்ளன. மண் அரிப்பை பெருமளவில் தடுக்கும் திறனும் இந்த வகை காடுகளுக்கு உள்ளது.

நீண்டு கிடக்கும் இந்த மரங்களின் வேர்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு தகுந்த இடமாக விளங்குகிறது. மீன் உற்பத்தியை பெருக்குவதிலும் இந்த மரங்கள் முன்னணியில் உள்ளன. தென்னகத்து ராம்சார் என்று இதை அழைக்கின்றனர்.

அதாவது மீன்களின் உற்பத்தி நிலையமாகவே இந்த காடுகள் விளங்குகின்றன. இதனால் சீசன்களில் வந்து சேரும் வெளிநாட்டு பறவைகளின் விருப்ப இடமாக இந்த அலையாத்திக்காடுகள் அமைந்திருந்தன.

அலையாத்தி மரங்களில் கூடு அமைத்து அதன் வேர்களில் மீனை உண்டு தங்களின் இனப்பெருக்கத்தை வளர்த்து வந்த வெளிநாட்டுப்பறவைகள் இப்போது இந்த பக்கம் தலையை கூட ஏன் இறக்கையை கூட காட்டுவதில்லை.

காரணம் வேறு யார்? நாம்தான். இந்த காடுகள் இயற்கை அரணாக அமைந்துள்ளன. இவற்றை இப்படியே விட்டு வைத்தாலே போதுமே. ஆனால் சுற்றுலா என்ற பெயரில் இங்கு இயக்கப்படும் மோட்டார் படகுகளின் அதீத சப்தம் வெளிநாட்டு பறவைகளை ஒரு பக்கம் அச்சப்படுத்தி வருகையை குறைத்தது என்றால்… சுற்றுலாவாக வரும் மக்கள் செய்யும் சேட்டைகள் மேலும் வேதனையில் ஈட்டி… இல்லை… சூலாயுதத்தையே பாய்ச்சுகிறது.

எப்படி தெரியுங்களா? வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் உணவுப்பண்டங்கள் சுற்றிய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை ஆற்றுப்பகுதியிலும், கடல் முகத்துவாரத்திலும் வீசி எறிகின்றனர். இதை உணவு என்று நினைத்து தின்னும் மீன்கள் பாதிக்கப்பட அவை மலட்டுத்தன்மைக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

மீன்பாடு குறைந்தால் பறவைகளுக்கு ஏது உணவு? இதனால்தான் வெளிநாட்டு பறவைகள் வரத்து வெகுவாக… குறைந்து… றைந்து… ந்து… து… போய்விட்டது. ஒரு பக்கம் இப்படி என்றால் மறுபக்கம்… இப்பகுதியில் உள்ள இறால் வளர்ப்பு குட்டைகள் இந்த பகுதியை நாசப்படுத்தி வருகின்றன.

இறால் குட்டைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த நீர் கடல் முகத்துவாரப்பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தை அழிக்கிறது. இதனால் மீன்கள் அதிகளவில் இறப்பை சந்திக்கின்றன. இப்படி இயற்கை அரணாக மக்களை பாதுகாத்து வரும் அலையாத்திக்காடுகளால் பல்வேறு பயன்கள் இருந்தாலும் அவற்றை அழிப்பதில்தான் நம்மவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

வருமானத்தையே குறியாக கொண்டு இயற்கையை நாம் அழிக்க அழிக்க நம்முடைய அழிவும் சேர்ந்து உருவாகிறது என்பதை என்று அறிவீர்கள். இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்வும்… நம் வாழ்வும் எத்தனை வித்தியாசங்களை கொண்டுள்ளது என்பதை உணர வேண்டும்.

இந்த அலையாத்திக்காடுகள் ஒரிசா உட்பட பல பகுதிகளில் காணப்பட்டன. ஆனால் அவை அழிவை சந்தித்ததால்தான் ஒரிசா பல வகையிலும் இயற்கையின் சீற்றத்தில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை தமிழகத்தில் ஒருங்கிணைந்த நாகை, திருவாரூர் மாவட்டத்திற்கும் தேவையா…?

இந்த காடுகளை பராமரிக்கவும், இவற்றின் பரப்பளவை அதிகரிக்கவும் கனடா, ஜப்பான் உட்பட பல வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி சென்ற இடம் தெரியாத நிலை.

இவற்றை முறையாக பயன்படுத்தி இருந்தால் அலையாத்திக்காடுகளின் பரப்பளவு இன்னும் அதிகரித்து இருக்கும். இப்போது அலையாத்திக்காடுகள் வளர்ச்சி குறைந்து கொண்டே இருக்கிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளும் பூமி அதிர்வால் அச்சப்பட்டு வருகிறது.

மீண்டும் ஒரு சுனாமி உருவானால் அதை தாங்கும் சக்தி நமக்கு இல்லை என்பதுதான் உண்மை. ஒரு பக்கம் ஓசோனில் நாம் போட்ட ஓட்டையால் தற்போது சூரியனின் அதிகளவு உஷ்ணம் நம்மை வறுத்தெடுத்து வருகிறது.

இப்படி இயற்கை நமக்கு அரணாக இருக்கிறது. நாம் அதற்கு அரணாக மாறினால் நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும். செய்வோமா? செய்தால்தான் நன்று.

N.நாகராஜன், தஞ்சாவூர்

Like our FB page for regular feeds  https://www.facebook.com/bpositivenews

Likes(1)Dislikes(0)
Share
Nov 112016
 

house

கணேஷ் , சென்னையில்  ஒரு வளர்ந்து வரும்  தொழில் அதிபர். அண்ணா நகரில் ஐ .சி. யு வங்கியில் ஐந்து கோடி கடனில் கட்டிய அட்டகாசமான வீடு.    அம்பத்தூர் தொழில் வளாகத்தில்அரசு வங்கியில் வாங்கிய நான்கு கோடி கடனில், ரெடி மேட் துணி தயாரிக்கும் பாக்டரி .  டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ்” .

கணேஷ் 45 வயது இளைஞன். வருஷம் ஒரு தடவை வெளிநாடு சுற்றுலா. அவனிடம் இரண்டு சொகுசு கார், மாதமிருமுறை  ஐந்து நட்சத்திர ஹோட்டல் கேளிக்கை,  வருமானத்தை மீறிய ஆடம்பர வாழ்க்கை. 

கணேஷின் மனைவி ஊர்மிளா கணேஷை விட ஒரு படி அதிக ஊதாரி. சரியான நகைப் பைத்தியம் . பகட்டு, படாடோபம், டாம்பிகத்திற்கு  அவள்  ஒரு ரோல் மாடல். கணேஷ் ஊர்மிளா தம்பதியின் அகராதியில் சேமிப்பு என்கிற வார்த்தைக்கு  இடமே இல்லை.

கணேஷின் அப்பா அடிக்கடி சொல்வார். இதோ பாரு கணேஷ்!. சம்பாதிக்கறதை செலவு பண்ணிட்டு, மிச்சமிருந்தா மீதியை சேமிக்கணும்னு நினைக்காதே. அது முட்டாள்தனம். சம்பாதிக்கிறதிலே, சேமிப்பு போக, மிச்சத்தை செலவு பண்ணு. அதுதான் புத்திசாலித்தனம்.அது கணேஷை பொருத்தவரை செவிடன் காதில்  ஊதிய சங்கு. பெருசுக்கு வேறே வேலை இல்லை. வாழ்க்கையை அனுபவிக்க தெரியாத வேஸ்ட் பீஸ்.

***

கணேஷ் வீடு

என்னங்க! ரொம்ப வாட்டமாயிருக்கீங்க! பாக்டரியிலே ஏதாவது பிரச்னையா?” – மனைவி ஊர்மிளா கேட்டாள்.

உனக்கு தெரியாததா ஊர்மிளா? பிசினஸ் கொஞ்ச நாளா ரொம்ப டல். எக்ஸ்போர்ட் ஆர்டர் எதுவும் இல்லை. கடன் கொடுத்தவங்க நெருக்கராங்க. பாக்டரி கடன், வீட்டு கடன், வட்டியோட சேர்ந்து பூதாகாரமா நிக்குது. என்ன பண்றதுன்னே தெரியலே! .

ஐயோ! நமக்கு ஏன்தான் இந்த கஷ்ட காலமோ? வேறே ஏதாவது கடன் கிடன் முயற்சி பண்ணீங்களா? ”

பண்ணேனே! ஒண்ணும் கிடைக்கலே. பேங்க் கையை விரிச்சுட்டாங்க. முதல்லே கடனை சரி பண்ணு. பின்னாலே பாக்கலாம்னு சொல்லிட்டாங்க. அப்பாகிட்டே பணம் கேட்டேன். அவரது திருச்சி பக்கத்திலே தரிசு நிலத்தை வித்துக்க சொன்னார்

நீங்க என்ன சொன்னீங்க?”

அது வேஸ்ட் ஊர்மிளா. எப்போவோ சல்லிசா வரதுன்னு வாங்கி போட்டார்.. அதை வித்து வர காசு, கால் வாசி கடனுக்கு கூட காணாதும்மா. எனக்கு குறைந்தது ஒரு இரண்டு கோடியாவது வேணும், இப்பத்திக்கு கடனை சமாளிக்க.

அப்ப , வேறே என்ன வழி?”

இந்த வீட்டை வித்துடலாம்!. கடன் போக, கிடைக்கும் மிச்சத்தை அங்கே இங்கே வாங்கி சமாளிச்சிப்பேன். ஆனால், ரியல் எஸ்டேட் காரங்க வீட்டை  அடி மாட்டு விலைக்கு கேக்கிறாங்க!

ஐயோ! அப்போ நாம்ப எங்கே போறது? நடு ரோட்டுக்கா? இப்பத்தான், நிறைய செலவு பண்ணி, வாசல் லான், தோட்டம், ஊஞ்சல் அப்பிடின்னு , பாத்து பாத்து பண்ணியிருக்கேன். வீட்டை உள்பக்கம் இடிச்சி ரிமாடல் பண்ணிட்டிருக்கேன். இந்த ஐடியாவை விட்டுடுங்க. ப்ளீஸ்

அதுவும் சரிதான். அப்போ நகைகளை வேணா வித்துடலாமா?”

என்ன, உங்களுக்கு விளையாட்டா இருக்கா? இதெல்லாம் பின்னாடி குழந்தைகள் கல்யாணத்திற்கு சேர்த்துக்கிட்டிருக்கேன் . அதுவுமில்லாமே, எல்லாமே பேன்சி நகைகள். கல் வெச்சி, மாடர்ன் டிசைன். வித்தா சேதாரம் போய், ரொம்ப கம்மியாத்தான் கிடைக்கும். போயும் போயும் உங்களுக்கு இப்படி கேவலமா ஐடியா தோணுதே? நகையை விக்கறதாம்? ம்..முகவாய்க் கட்டையை தோளில் இடித்துக் கொண்டாள்.

பின்னே என்னதான் வழி ஊர்மிளா? பேங்க் காரங்க ஜப்திக்கு நோட்டீஸ் கொடுப்பாங்க.போல

யோசனை பண்ணுங்க!. எதாவது பிளான் போடுங்க. பேங்க் மேனேஜர் கிட்டே டைம் கேளுங்க. வீடு விக்கறது, நகை விக்கறதெல்லாம் வேணாம்.

கணேஷ் யோசித்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பாவை கேட்கலாமா?  திட்டுவார் ! அன்னிக்கே சொன்னேனே‘  என்று கண்டபடி ஏசுவார் ! 

****

 அகமதாபாத்

ஒரு பதினைந்து நாள் கழித்து 

கணேஷ், வியாபார நிமித்தமாக குஜராத் போயிருந்தான். ஹோட்டல் அறையில், இரவு 10.15  மணிக்கு அவனுக்கு மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு.

ஊர்மிளா  பதற்றமாக, “என்னங்க! நம்ப பாக்டரி கோடவுன்லே தீ விபத்தாங்க! நம்ம சுபெர்வைசர், முத்துதான் போன் பண்ணினார்.

என்னது? எப்படி? எப்போ?”

இப்போதான் ஒரு பத்து மணிக்கு. எப்படின்னு தெரியலே. வாட்ச்மன் சொல்லி, தீயணைப்பு படை வரதுக்குள்ளே, உள்ளே இருந்த அத்தனை பொருளும் எரிந்து போச்சாம்

அத்தனையும் ஜெர்மனிக்கு அனுப்ப வேண்டிய லேடீஸ் ரெடிமேட் துணிகளாச்சே. ஷிப்பிங்க்கு ரெடியா கோடவுன் அனுப்பிச்சிட்டு வந்தேனே, அதுவா? ”

ஊர்மிளா அது தெரியலே. முத்து உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன்னு சொன்னார்

யாருக்காவது எதாவது விபத்து?”

நல்லவேளையா அப்போ அங்கே யாரும் இல்லையாம். நீங்க உடனே புறப்பட்டு வாங்க

சரிம்மா! நீ எதுக்கும் கவலைப் படாதே. நான் நாளைக்கே வந்துடறேன். ச்சே ! இப்படி அடி மேல அடியா விழுதே ! என்ன பண்ணப் போறேனோ தெரியலியே ?”

****

ஒரு பத்து நிமிடத்தில், கணேஷின் பாக்டரி சுபெர்வைசர் முத்துவிடமிருந்து போன் வந்தது.

சார்! நீங்க சொன்னமாதிரியே செஞ்சுட்டேன். ஒரு பிரச்னையும் இல்லே

வெரி குட் முத்து. யாருக்கும் தெரியாதே?”

மூச்! ஈ, காக்கைக்கு கூட தெரியாது சார். நானே, எல்லாத்தையும் கிட்டே இருந்து, அழகாக பண்ணிட்டேன். உதவிக்கு நம்பகமா , வெளி ஆட்களை என் சொந்த ஊரிலிருந்து வரவழைச்சிக்கிட்டேன்.

குட் ! என்ன பண்ணினே ? கொஞ்சம் விவரமா சொல்லு! ஏதும் பிரச்னை இல்லையே ?”

பிரச்சனை ஒன்னும் இல்லே சார் !. பாக்டரிலே எக்ஸ்போர்ட் பண்ற 2000 காலி அட்டை பெட்டிங்களை எடுத்து., அதன் உள்ளே பழைய பேப்பர், பழைய துணி, ரிஜெக்ட் பண்ணின டிரஸ் எல்லாம் வெச்சு நம்ம திருமழிசை கோடவுன்க்கு அனுப்பிட்டேன்

குட் முத்து !

அப்புறம், பாக்டரி எம்ப்ளாய்ஸ் ஒருத்தருக்கும் சந்தேகம் வராத மாதிரி, ராத்திரி பத்து மணிக்கு, யாரும் இல்லாத போது, வெளி ஆட்களை வச்சு, அந்த திருமழிசை கோடவுன்க்கு நெருப்பு வெச்சுட்டேன்.

குட். குட் ! . என் மனைவிக்கு கூட எதையும் சொல்லாதே. உளறிடுவா. சமயம் பார்த்து நானே சொல்லிக்கறேன்.

சரி சார்

அப்போ, முத்து,  நான் உடனே கிளம்பறேன். நாளைக்கு காலைலே முதல் ப்ளைட் பிடிச்சி சென்னை வந்துடறேன். அதுக்குள்ளே, நீ, போலீஸ் ரிப்போர்ட், எப்.ஐ.ஆர், தீ அணைப்பு படை ரிப்போர்ட். எல்லாம் வாங்கிக்கோ. நம்ப எம்.எல்.ஏ கிட்டே நான் இப்போவே பேசறேன். அவர் எல்லா ஏற்பாடும் பண்ணிடுவார். நீ அவரைப் போய் பார் !

சரி சார்

சொல்ல மறந்துட்டேன். இந்த விபத்து , மின்சார ஷார்ட் சர்கியுட்னாலே ஏற்பட்டதுன்னு , எப்.ஐ.ஆர், ரிபோர்ட் வாங்கு. அதிகாரிங்க கிட்டே நம்ம மினிஸ்டர் பேர் சொல்லி  நான் அவர் ஆளுன்னு  சொல்லு.   ஏதும் பிரச்சனை பண்ணாம கொடுத்துடுவாங்க. அவங்க என்ன கேக்கிராங்களோ, அதை நீயும் கொடுத்துடு.பேரம் பேசாதே ! என்ன சரியா ?”

அப்படியே பண்றேன் சார்

மறக்காமே, நான் சொன்ன மாதிரி, நம்ம தீ விபத்து, தினசரிலே நாளைக்கு இல்லே நாளன்னிக்கு வரதுக்கு ஏற்பாடு பண்ணிடு. தீ விபத்து நடந்தப்போ, போட்டோ எடுத்தாங்களா? அதை செக் பண்ணு முத்து.! விட்டுடாதே ! நீயும் கோடவுன் போய் , விபத்து நடந்த  இடத்தை  போட்டோ பிரிண்ட் போட்டுக்கோ. அது நமக்கு கட்டாயம் வேண்டும்

சரி சார்

இன்சூரன்ஸ் கிளைம் பாரம் உடனே, நம்ம ஏஜென்ட் மூலமா வாங்கி, தயாரா ரெடி பண்ணிக்கோ. நானும் அவரோட பேசறேன். என்ன பண்ணனும்னு அவருக்கும் சொல்லறேன்.

சரி சார்”.

நான் வந்து மிச்சத்தை பார்த்துக்கறேன். வெச்சுடட்டுமா?”

****

ஒரு வாரம் கழித்து

தனியார் இன்சூரன்ஸ் அலுவலகம் :வைஸ் பிரசிடென்ட்(க்ளைம்ஸ்) அறை.

மோகன், வைஸ் பிரசிடென்ட்(க்ளைம்ஸ்) , தனது உதவியாளன் மணியுடன் பேசிக் கொண்டிருந்தான் .

மணி, அந்த டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ், சென்னை கோடவுன் தீ விபத்து கிளைம் ஸ்டேடஸ் என்ன?  கொஞ்சம் உடனே பாரு !  அரசியல் செல்வாக்கு உள்ளவங்க போல. ஓயாம மினிஸ்டர் பேரை சொல்லிக் கிட்டிருக்காங்க!காலைலே யிருந்து கால் மேலே கால். ஓய மாட்டேங்குது !”

அதைதான் பாத்துக்கிட்டேயிருக்கேன் சார்”. – மணி, மோகனின் உதவி கிளைம்ஸ் அதிதாரி.

சரி, எவ்வளவு கிளைம் கேட்டிருக்காங்க?”

ரூபா 1.9 கோடி சார், பாலிசி அமௌன்ட். அவங்க மார்க்கெட் ரேட் இழப்பு ரூபா 2.7 கோடி. சார் .

எல்லா டாகுமென்ட்ஸ்ம் இருக்கா?”

எல்லாம் சரியா இருக்கு சார். அதிலே ஒரு பிரச்னையும் இல்ல.

கிளைம் இன்ஸ்பெக்டர் ஒப்புதல் கொடுத்திருக்காரா?”

அதுவும் இருக்கு சார்

சரி, அப்போ ப்ராசஸ் பண்ணி, உன் ஒப்புதலோட எனக்கு உடனே அனுப்பி வை

சார், அதிலே எனக்கு இரண்டு மூணு சந்தேகம் இருக்கு!இழுத்தான் மோகன்.

என்ன! போகஸ் கிளைமா? உனக்கு எதாவது இடிக்குதா?”

அப்படித்தான் தோணுது சார். ஆனா நிச்சயமா சொல்ல முடியலே

என்ன மோகன், எதை வெச்சி சந்தேகப் படறே?”

விசாரிச்சதிலே, டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ் முதலாளி கணேஷ்க்கு நிறைய கடன் தொல்லை இருக்கு போலிருக்கு சார். கொஞ்ச நாளா,தொழில் நஷ்டம்ன்னு தெரியுது.

மோசடி மோடிவ் போல இருக்கா என்ன ?”

ஆமா சார். என்னமோ தோணிச்சி, சந்தேகத்தின் பேரில், அவங்க ஸ்டாக் ஸ்டேட்மெண்ட் வாங்கி பார்த்தேன். கோடவுன்லே வைக்கற அளவு , ரா மட்டிரியல் அவங்க கையிருப்பிலே இல்லே போல சார்.

இது நல்ல பாய்ன்ட் தான். ஆனால், கிளைம் தள்ளுபடி செய்ய இன்னும் வேறே நல்ல ஆதாரம் வேணுமே.

நான் அந்த முதலாளி கணேஷ், அவர் சுப்பெர்வைசரோட பேசினேன். அவங்க கிட்டே எந்த பதட்டமும் இல்லே. கோடவுன் எரிஞ்சி போச்சேன்னு கவலை இல்லை. டெலிவரி டிலே பத்தி பேசவே மாட்டேங்கறாங்க. எதுக்கு இதை கேக்கறீங்கன்னு காட்டமா கேக்கறாங்க. வேறே ஏதோ பேசி மழுப்பறாங்க.

இதுவும் மோசடி கிளைம்க்கான நல்ல இன்டிகேட்டர் தான். ஆனால், இதுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிற தைரியம் கூட காரணமா இருக்கலாம் இல்லியா?”

இருக்கலாம் சார். நீங்க சொல்லுங்க சார், அப்படியே பண்ணிடலாம்.

ம். நீ சொல்றதும் யோசிக்கரா மாதிரி தான் இருக்கு. எதுக்கும், நீயும் ஒரு தடவை பாக்டரிலே செக் பண்ணு. விசாரி. தீ விபத்து நடந்த இடத்தை பார்வை இடு. ஏதாவது துப்பு கிடைக்குதான்னு பாரு. மூணு நாளிலே ரிப்போர்ட் கொடு. குட் லக்

தேங்க்ஸ் சார்

****

டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ் அலுவலக அறை

வணக்கம் சார், நான் இன்சூரன்ஸ் அதிகாரி மணி

வாங்க! வாங்க! காத்துக்கிட்டு இருக்கேன். கிளைம் கிளியரன்ஸ் ஆயிடுச்சா? செக் கொண்டுவந்திருக்கீங்களா? – வரவேற்றான் கணேஷ். அவனுடன் சுப்பெர்வைசர் முத்து.

இல்லே சார். இன்னும் கொஞ்சம் கோடவுன் தீ விபத்து பற்றிய தகவல் வேணும். அது பத்தி பேசத்தான் வந்திருக்கேன்

அதான் வேனப்பட்ட டாகுமென்ட்ஸ் கொடுத்திருக்கோமே! இன்னும் என்ன வேண்டும்?” எரிந்து விழுந்தான் கணேஷ். 

சொல்றேன் சார். கோபப் படாதீங்க. எரிந்து போன எக்ஸ்போர்ட் துணிமணிகள் சாம்பிள் இருக்கா?”

எதுக்கு கேக்கறீங்க?”

இல்லே. இதெல்லாம் ஒரு பார்மாலிட்டி தான்”- மணி ரொம்ப பணிவாக.

ம். சரி. கொடுக்கச்சொல்றேன். சீக்கிரமே கிளைம் செட்டில் பண்ணுங்க. இல்லாட்டி, மினிஸ்டர் கோபப் படுவாரு.

சார், தீ விபத்து நடந்த இடத்தை இன்னோரு முறை பார்க்கணும்.

எதுக்கு இப்படி டிலே பண்ணறீங்க? உங்க இன்சூரன்ஸ் இன்ஸ்பெக்டர் தான் பாத்து ரிப்போர்ட் கொடுத்திருப்பாரே!”- கணேஷ் சூடாக கேட்டான்.

இல்லே சார், நெருப்பு முதல்லே கோடவுன் பின்னாடிதான் ஆரம்பிச்சிருக்கு. ஆனால், மின்சார மெயின் போர்ட் முன் பக்கம் இருக்கு. அது எப்படின்னு பாக்கணும்?”

இதோ பாருங்க. விபத்து நடந்த போது, நான் ஊரிலேயே இல்லை. போலீஸ் ரிப்போர்ட்லே ரொம்ப தெளிவா , விபத்துக்கு காரணம் மின்சார குளறுபடின்னு சொல்லியிருக்கில்லே. அவங்களை போய் கேளுங்க. நீங்க என்ன தனியா செக் பண்றது? முத்து , நீ நம்ம  மினிஸ்டருக்கு போன் போடு !

இல்லே சார், கேக்க வேண்டியது என் கடமை. கோபப் படாதீங்க”- மணி பணிவாக 

சரி சரி, முத்து இவரை கோடவுன்க்கு அழைச்சிட்டு போ!

மணி மெதுவாக கனைத்தான். சார், அங்கே, கோடவுனிலே எதையும் வெளியே எடுத்து போடல இல்லையா? எரிஞ்ச சாமான்கள், துணி சாம்பல் எல்லாம், அப்படியே தானே இருக்கு?”

ஆமா. நீங்க கிளைம் அப்ரூவ் பண்ற வரைக்கும் அப்படியே விட்டு வைக்க சொன்னாங்க

சரி! நான் கிளம்பட்டுமா?”

இந்தாங்க! நீங்க கேட்ட எக்ஸ்போர்ட் துணி சாம்பிள் பாக்கெட்”-  கணேஷ் ஒரு பாக்கெட் கொடுத்தான் . 

தேங்க்ஸ்

கணேஷ் இப்போது தன் தொனியை மாற்றிக் கொண்டான்.

போகும்போது கொஞ்சம் குழைவாக சீக்கிரம் முடிங்க மிஸ்டர் மணி.. எனக்கு அரசியல் செல்வாக்கு இருக்கு. உங்களுக்கு தான் தெரியுமே ! உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணாலும் கட்டாயம் வீடு தேடி வந்து பண்ணி கொடுக்கறோம். நீங்க எதுக்கும் கவலையே படாதீங்க. நான் பாத்துக்கறேன்

இதெல்லாம் நீங்க சொல்லனுமா சார்! நான் பாத்துக்கிறேன். வரட்டுமா?” மணி கிளம்பினான்.

அப்பா!மூச்சு வந்தது கணேஷுக்கு. மணிக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து சரிக் கட்டிவிடலாம். நம்பிக்கை பிறந்தது கணேஷுக்கு !

***

இரண்டு நாள் கழித்து

இன்சூரன்ஸ் அலுவலகம் மணியின் அறை.

கணேஷ் மணியுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். என்ன மணி சார், வரச் சொன்னீங்க ! செக் ரெடியா? மினிஸ்டர் ஐயா கூட கேட்டாரு, ஏன் கணேஷ்! இன்னுமா கிளைம் செட்டில் ஆவலன்னு?”- கணேஷ்

மணி உதட்டை சுழித்து சிரித்தான். சார்! மன்னிக்கணும், செக் ரெடியாயில்லே. வேணா, உங்க கைக்கு போட, விலங்கு ரெடி பண்ணிடலாம்.

என்ன சார் சொல்றீங்க! நான் யாரு தெரியுமா?”

தெரியும். அதானலேதான், இங்கே உங்களை கூப்பிட்டு பேசிக்கிட்டிருக்கேன். இல்லேன்னா, இந்த நேரம் போலீஸ் கம்ப்ளைன்ட் போயிருக்கும், மோசடி குற்றத்திற்காக

கணேஷ் திகைத்தான் வாட்?”

எல்லாம் நல்லாத்தான் ஜோடனை பண்ணீங்க. ஆனால், சில விஷயங்களை கோட்டை விட்டுட்டீங்களே கணேஷ் சார்” – மணி சிரித்தான்

நிறுத்துங்க. நான் இப்போவே உங்க மேலதிகாரியை பாக்கிறேன்

அதுக்கு முன்னாடி நான் சொல்றதை கேளுங்க மிஸ்டர் கணேஷ்

சொல்லுங்க! உங்களுக்கு நீங்களே குழி வெட்டிக்கிறீங்க மணி

மணி பாக்கலாம் யாருக்கு வெட்டியிருக்காங்கன்னுட்டு. உங்க தீ விபத்து இடத்திலே நான் பார்வை இட்டதிலே, இந்த ஹூக்ஸ் கொஞ்சம் கிடைச்சது. இதெல்லாம், நம்ம ஊரு நைட்டீஸ், பாண்ட்ஸ் இதிலே தான் இருக்கும். இது எப்படி கோடவ்ன்லே வந்தது? கொஞ்சம் சொல்ல முடியுமா?”

அது எப்படி எனக்கு தெரியும்? முன்னாடி அங்கே சில துணிகள் இருந்திருக்கலாம்! அதிலே இந்த ஹூக்ஸ் இருந்திருக்கலாமே?”

ரொம்ப சரி. மிஸ்டர் கணேஷ். அப்படியும் இருக்கலாம். அப்போ, உங்க ஏற்றுமதி செய்யற துணியிலே ஏதாவது உலோக பாகம் இருந்தா, அவை அங்கே எரியாம இருந்திருக்கனுமில்லே?”

நீங்க என்ன சொல்லவரீங்க மணி? ” – கணேஷ் குரல் கோபத்தில் லேசாக நடுங்கியது. 

உங்க லேடீஸ் கார்மென்ட் ஏற்றுமதி சாம்பிள் பார்த்தேன், அதைதான் நீங்க கோடோவுன்க்கு அனுப்பியிருக்கீங்க, ஏற்றுமதிக்காக .  இதுதானே அது ? “

ஆமா !  அதுக்கென்ன இப்போ ?” கணேஷுக்கு புரியவில்லை.

 அந்த கார்மெண்ட்ஸ்  இடுப்பு பகுதியில் துணி பெல்ட் இருக்கு. அதை இறுக்கி கட்ட, ஒரு பான்சி மெடல் பின் அதோட இனைச்சிருக்கீங்க. பித்தளைலே. கழட்டி மாட்ட வசதியா! சரியா?”

ஆமா! அதுக்கென்ன இப்போ?” கணேஷ் முகம் கொஞ்சம் இருண்டது.

அங்கே தான் தப்பு பண்ணிட்டீங்க மிஸ்டர் கணேஷ். ! நெருப்பிலே அழியாத ஐட்டங்கள் சில இருக்கு .  உதாரணத்திற்கு, மெடல் பீசெஸ், பைபர் கிளாஸ், கருவிகள். எரிந்து போன அந்த கோடவுனில், மாதிரிக்கு கூட ஏற்றுமதி டிரஸ்லே இருக்க வேண்டிய ஒரு பான்சி மெடல் பின் கூட காணோம். உங்க கணக்கு படி கிட்டதட்ட 2000 பீஸ் மெடல் பின் இருக்கணும். ஒண்ணு கூட கோடவுனிலே காணோமே ! எங்கே போச்சு? எல்லாம்  எரிஞ்சு போச்சா?”

அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நான் தான் அப்போ,  ஊரிலேயே இல்லையே” – கணேஷ் குரல் கம்மியது. முகம் வெளிறி விட்டது.

இதோ பாருங்க கணேஷ். எனக்கு நடந்தது என்னன்னு தெரியும். உங்க கம்பனி நிதி நிலைமை, உங்க கடன், நஷ்டம் எல்லாம் எங்க கிட்ட ஆதாரம் இருக்கு. நீங்களா ஒப்புக்கொண்டு, உங்க கிளைமை வாபஸ் வாங்கிக் கொண்டால் ஓகே. இத்தோட விட்டுடலாம். இல்லையா, விசாரணை பண்ண வேண்டி வரும். கோர்ட், போலீஸ், இங்கே போனால், உங்க வண்டவாளம் வெளிலே வரும். என்ன சொல்றீங்க?”

சரி. . கிளைம்வாபஸ் வாங்கிக்கறேன்”  கணேஷ் தீனமாக 

அடுத்த தடவை, சரியா பிளான் பண்ணி, போகஸ் கிளைம் பண்ணலாமோன்னு நினைக்காதீங்க மிஸ்டர் கணேஷ். . வேறே ஏதாவது தப்பு வரும்.. மாட்டிக்குவீங்க

அப்போ என்கோடோவுன் எரிந்தது தான் மிச்சமா?”

நீங்க முதல் தடவையா இந்த மாதிரி மோசடி பண்றதாலே, அதுவும் பெரிய இடத்து சம்பந்தம் இருக்கிறதாலே, இந்த அளவோட விடறோம். அதுக்கு சந்தோஷப் படுங்க. குட் பை மிஸ்டர் கணேஷ்

தொங்கிய முகத்துடன் கணேஷ் வெளியே வந்தான்.

தனக்குள்  புலம்பினான் “மடையன், முத்து, இதை யோசிக்கலையே?போச்சே ! எல்லாம் போச்சே ! இப்போ என்ன பண்ணுவேன் ? இருக்கிற வீட்டை விக்க வேண்டியது தான். நகையையும் வந்த விலைக்கு விக்க வேண்டியதுதான். அப்பத்தான் கடனை அடைக்க முடியும்.”

அப்போது அவனது அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. கணேஷ், வேண்டாம்பா இந்த வீண் ஆடம்பரம். இதப்பாரு! கணேஷ் ! இன்னிக்கு தேவையில்லாமல் வாங்கினால், நாளைக்கு தேவையானதை எல்லாம் விக்க வேண்டியிருக்கும். சேமிப்பு அவசியம்பா.

– S.முரளிதரன்

Like our FB page for regular feeds  https://www.facebook.com/bpositivenews

Likes(2)Dislikes(0)
Share
Oct 142016
 

RB

கல்லூரியில் எங்களுடன் பொறியியல் படித்த நெருங்கிய நண்பருக்கு IITயில், டிசைன் பிரிவில் மேல் படிப்பு படிக்க ஆர்வம் வந்தது. டிசைனில் ஈடுபாடு இருந்தும், படங்கள் வரைவதில் அவருக்கு அத்தனை விருப்பம் இல்லை. ஆனாலும் டிசைன் பிரிவாயிற்றே, நேர்முகத் தேர்வின் போது ஏதேனும் படத்தை வரைய சொல்லி கேட்கலாம் என எண்ணி தன் வீட்டினுள் சுற்றி பார்த்திருக்கிறார். மேசை மீதுள்ள தொலைபேசி கண்ணில் படவே, அதையே வரைந்து பழகியுள்ளார். என்ன ஆச்சரியம்! நேர்முகத் தேர்வில் இவரை, தொலைபேசி படத்தை வரைய சொல்லிக் கேட்டுள்ளனர். அட்டகாசமாக வரைந்து, IIT யில் நுழைவும் பெற்று விடுகிறார்.

அடுத்ததாக, இன்னொரு முக்கிய நிகழ்வு. கோயமுத்தூர் ஆணையர் திரு.விஜய் கார்த்திகேயன் சமீபத்தில் நடந்த ஒரு கூடுதலில், சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்றதை பகிர்ந்துக்கொள்ளும் போது, ஒரு அருமையான சம்பவத்தை நினைவுக் கூர்ந்தார். ஒருநாள் அவரது நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார், அப்போது சில வண்டிகளில் Bharat Stage என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதைக் கண்டு, அது என்ன என்ற விவரத்தை சேகரித்தார். அது காற்று மாசுப்படுவதை தடுக்க ஏற்படுத்தியுள்ள Emission Standards என்பதை தெரிந்துக்கொள்கிறார். அதிர்ஷ்ட வசமாக, அவர் சிவில் சர்விஸ் எழுதிய அந்த வருடம் Bharat Stage குறித்து ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு நிகழ்வும் உணரத்துவது ஒரு விஷயத்தை தான். நம் மனது ஆழமாக ஒரு செயலில் வெற்றிப் பெற்று விடுவோம் என நம்புகையில் நமக்கே தெரியாத வகையில், சுற்றியுள்ள சில விஷயங்களை நாம் எதேச்சையாக கவனிக்க (observe செய்ய) நேரும். இந்த observation power மூலம் வெற்றிக்குத் தேவையான சின்னஞ்சிறு முக்கிய தகவல்களும், யோசனைகளும் நம்மை தானாகவே வந்து சேரும்.

நம்பிக்கையின் சக்தி அத்தகைய பெரியது. நடக்கவே முடியாது என உலகமே ஒதுக்கி விட்ட ஒரு விஷயத்தை தன் அசாத்திய நம்பிக்கை மூலம் நடத்திக் காட்டிய பிரிட்டனைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் ரோஜர் பானிஸ்டரின் வாழ்வை இதற்கு ஒரு பெரிய உதாரணமாக பலர் காண்கின்றனர். இவரது வெற்றிப் பயணம் தோல்வியினால் துவண்டு கிடக்கும் எந்த மனிதனையும் தூண்டி விட்டு ஓட வைக்கும். எத்தனை சவால்கள் வந்தாலும் சாதிக்க துடிப்பவர்களுக்கு, இவரது வாழ்க்கை ஒரு உதாரணமாகவும் உற்சாக டானிக்காகவும் அமைந்துள்ளது.

இவரது சாதனையைப் பற்றித் தெரிந்துக்கொள்ள சுமார் 60 வருடங்கள் பின்னோக்கி செல்வோம்.

ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் எந்த ஒரு மனிதனாலும் ஓடி கடக்க இயலாது என்ற ஒரு கூற்று பல வருடங்களாக ஓட்டப்பந்தய உலகத்தில் அசைக்கமுடியாத சவாலாக இருந்தது. இந்த வேகத்தில் ஓடினால் மன அழுத்தத்தில் உடல் நிலைகுலைந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை வரும் என ஓட்டப்பந்தய வீரர்களும், வல்லுநர்களும், ஆராய்ச்சியாளர்களும் எண்ணினர்.

“அனால் இந்த கூற்று உண்மையில்லை, என்னால் இந்த சவாலை உடைக்க முடியும்” என தன்னை முழுமையாக நம்பி 1954 ஆம் ஆண்டு அந்த சாதனையை படைத்தார் ரோஜர் பானிஸ்டர். அது மட்டுமல்லாது நான்கு நிமிடங்களில் ஒரு மைல் தூரத்தை ஓடி அடைந்த உலகின் முதல் மனிதர் என்ற பேரும் பெற்றார்.

சிறு வயதிலேயே மருத்துவராக வேண்டும் என கனவு கண்ட பானிஸ்டர், நலிந்துள்ள  தன் குடும்ப பொருளாதார சூழ்நிலையினால், தனது பெற்றோர்கள் தன்னை மருத்துவம் படிக்க வைக்கமாட்டார்கள் எனப் புரிந்துக்கொண்டார்.

வேறு வழியில்லை தன் கனவை விட்டுவிட வேண்டியது தான் என அவர் நினைக்கையில், தன்னுள் ஒரு ஓட்டப்பந்தய வீரன் ஒளிந்துள்ளான் என உணர்ந்தார். அந்த திறமை மூலம் பல போட்டிகளில் வென்று, விளையாட்டு வீரர்களுக்கான ஸ்காலர்ஷிப் மூலம் oxford பல்கலைகழகத்தில் நுழைந்தார்.

Oxford பல்கலைகழகத்தில் உள்ள பலர், அவர் ஓடும் திறமையைக் கண்டு, 1500மீட்டர் பந்தயத்தில் அவருக்கு வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது என, 1948 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துக்கொள்ள வற்புறுத்தினர். ஆனால் தன் படிப்பைத் தொடர வேண்டும் எனக் கூறி அந்த ஆண்டின் ஒலிம்பிக்ஸ் வாய்ப்பை நிராகரிக்கிறார் பானிஸ்டர்.

படிப்பு முடித்தவுடன் 1952 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில், தீவிர பயிற்சிகளுடன் 1500மீட்டர் பந்தயத்தில் களம் இறங்கினார். கண்டிப்பாக பதக்கம் வெல்வார் என மக்களின்  எதிர்பார்ப்பு இவர் மீது அதிகமாக இருந்தது. ஆனால் அந்த போட்டிகளில் நான்காம் இடத்தை மட்டுமே அவரால் பிடிக்க முடிந்தது.

பிரிட்டன் நாட்டின் பிரஸ்களும், அவர் எதிர்ப்பாளர்களும் அவரின் தோல்வியை கண்டு எள்ளி நகையாடினர். நான்கு ஆண்டு முன்னரே, வாய்ப்பு நன்றாக இருந்தது, அப்போதே  போட்டியில் கலந்திருந்தால் பதக்கம் வென்றிருக்கலாம் என பலரும் அவரை திட்டித் தீர்த்தனர். வெறுப்பின் உச்சம் ஒருபுறம். மீண்டும் ஓடலாமா அல்லது ஓட்டத்திற்கே முழுக்கு போட்டு விடலாமா என்ற குழப்பம் மறுபுறம்.

இந்த எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவருவதற்கே சுமார் இரு மாதம் காலம் தேவைப்பட்டது பானிஸ்டருக்கு.

ஆனால் தெளிவாக, பிரம்மாண்டமான கனவுடன் மீண்டு வந்தார். தன் உண்மையான திறமையை தனக்கும் உலகிற்கும் நிருபிக்க இன்னும் பெரிய இலக்கை நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்தார். அதுதான் நான்கு நிமிடத்தில் ஒரு மைல் தூரத்தை எட்டிப் பிடிக்க முடியும் என யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனையை புரிய அவருக்கு உதவியது.

இது அடையக்கூடிய இலக்கு இல்லை என்பது மட்டுமில்லை, அபாயகரமானது கூட எனவும் பலர் எச்சரித்தனர். ஆனாலும் உறுதியுடன் தன்னம்பிக்கையுடனும் பயிற்சியில் இறங்கினார். அவரது தீவர நம்பிக்கை வீணாகவில்லை. அவரது விடாமுயற்சி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. தன் லட்சியத்தின் வாயில் கதவை அடைந்துவிட்டதைக் காணத்தொடங்கினார்.

கடைசியாக அந்த நாளும் வந்தது. 1954 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி நடைப்பெற்ற ஒரு போட்டியில் அந்த அற்புதச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் பானிஸ்டர்.  3 நிமிடங்கள் 59 நொடிகளுக்குள் ஒரு மைல் தூரம் ஒடி உலக சாதனை படைத்து பலரை வியப்பில் ஆழ்த்தினார்.

முடியவே முடியாது என உலகம் ஒதுக்கிப் போட்ட ஒரு இலக்கை ஆழ்ந்த நம்பிக்கையின் மூலமும், தீவிர முயற்சியின் மூலமும் சாதித்த இவரை முன்னோடியாக வைத்து, “ஆம், இந்த இலக்கு சாத்தியம் தான்” என இவருக்கு பின் மேலும் பலர் இந்த சாதனையை செய்து முடித்துள்ளனர்.

இந்த செயல் நடக்காது என்று எப்போது எதிர்மறையாக நம்புவதை நிருத்துகிறோமோ, அப்போதே அது சாத்தியாமாக தொடங்குகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். நம்பிக்கை தான் பல அரும்பணிகளின் ஆணி வேராக இருக்கிறது.

ஒரு செயல் கண்டிப்பாக முடியும் என நீங்கள் நம்புகிறபோதும், அந்த செயலையே ஒவ்வொரு தருணமும் முழு மனதோடு எண்ணிக் கொண்டிருக்கையில், அந்த அற்புதம் நிகழ்கிறது, வெற்றிக் கதவை நீங்கள் திறக்கின்றீர்கள். மருத்துவ உலகம் இதை RAS (Reticular Activating System) எனப்படும் மூளை சம்பந்தப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் விளைவு என்கின்றனர்.

“ஆழமான காரணம் (Purpose), தெளிவான இலக்கு, அதை அடைந்தே தீரும் தீவிர நம்பிக்கை இந்த மூன்றும் இருந்தால் எத்தகைய சாதனைகளையும் புரிந்து விடலாம். இந்த நம்பிக்கையின் மூலம் RAS System வெற்றி பெற தேவையான எண்ணம், தேவையற்ற எண்ணம் என பிரித்து, நமது எண்ணங்களை ஒருமித்து, நம்மை கவனத்துடன் செயல் பட வைக்கிறது” என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள்.

இந்த சக்தி தான் மேலே குறிப்பிட்டதைப் போல், நம்மைச் சுற்றியுள்ள வெற்றிக்குத் தேவைப்படும் சின்னஞ்சிறு நிகழ்வுகளையும், உணர்வுகளையும் நம்மை கவனிக்க வைத்து, சரியான பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

அதே நேரத்தில் நம்பிக்கையில்லாது ஒரு செயலில் ஈடுபட்டோம் என்றால், வெற்றிக்குத் தேவையான சின்னஞ்சிறு முக்கியத் தகவல்களை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.

அதனால் வென்றிடுவோம் என ஆழமாக நம்பிக்கை வையுங்கள், சாதித்து காட்டுங்கள். வெற்றி உங்களுடையதாகட்டும்!!!

விமல் தியாகராஜன் & B+ TEAM

(To follow us, LIKE our FB Page https://www.facebook.com/bpositivenews)

Likes(6)Dislikes(0)
Share
Oct 142016
 

Spl 3

உறுதியான உடலும், தளராத மனமும் கொண்டவர்கள் நம் முன்னோர்கள். இவர்களின் முறையான உணவு பழக்கம், இவர்களை நீண்ட ஆயுள் உள்ளவர்களாக மாற்றி இருந்தது.

நாகரீகம் என்ற பெயரில் நாம் சமைக்கும் பாத்திரத்தில் ஆரம்பித்து உணவையும் மேற்கத்திய நாகரீகத்திற்கு மாற்றி கொண்டதால் ஏற்பட்ட வினை இன்று நமக்கு வரும் நோய்களுக்கு காரணமாக அமைகிறது.

35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலை.

இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. இது உண்மைதான் என்று உரக்கவே சொல்கிறார் அரசு டாக்டர் சிவக்குமார். அவர் கூறிய தகவல்கள் அப்படி தந்துள்ளோம்.

40 வயதைக் கடந்தவர்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படும். ஆனால் இப்போது 30திலிருந்து 35 வயது வரை உள்ளவர்களுக்கும் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

இதற்கு காரணம் சரியான உடலுழைப்பு இல்லாததும், மாறிப்போன உணவுப்பழக்க வழக்கமுமே காரணம். இப்படி எலும்பு தேய்மானத்தால் முதலில் பாதிக்கப்படுவது கால்கள்தான்.

அதிலும் மூட்டு வலி வந்து விட்டால் 30 வயதுக்காரர்களும் 60 வயது முதியவர்கள் போல்தான். இந்த மூட்டு வலிக்கு எளிமையான மருந்தை நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.

இந்த கீரைக்கு இந்த பெயர் வருவதற்கு என்ன காரணம் தெரியுங்களா? கை, கால்கள் முடங்கிப்போய்விடாமல் தடுக்கிறது என்பதால் இதற்கு முடக்கத்தான் என்று பெயர்.

மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கீரையை இப்போது உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவுதான். இதன் பலன் தெரியாமலேயே இதை முடக்கி விட்டோம். ஆனால் காலத்தின் சுழற்சியால் இப்போது முடக்கத்தான் கீரையை தேடிப்பிடித்து சாப்பிடும் நிலையில் உள்ளனர் மக்கள் என்பதும் நிதர்சனமான உண்மை.

இந்த கீரை புரதம், மாவுச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்தது. மிகக் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும் உள்ளது. இந்த கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், எலும்புகளுக்கு உறுதியைத் தருகிறது.

வாதத்தைக் கட்டுப்படுத்தும். மூட்டு வலி உள்ளவர்கள் இவற்றை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர, வலி பஞ்சாய் பறந்து விடும். மூட்டுகளில் வீக்கம் இருப்பவர்களும் சாப்பிடலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் சாப்பிட்டுவர கால் மூட்டு வலி வராது.

இப்படி அற்புதமான மூலிகை போல் செயல்படும் முடக்கத்தான் கீரை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ்சுக்கு ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் சிறப்புக் குணம்தான் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதே போல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நம் உடலிலே விட்டு விடுகிறது.

இது ஒரு மிக முக்கியமான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது. இதனால்தான் அந்த காலத்திலேயே தினம் ஒரு கீரை என்று சாப்பிடடு வந்த நம் முன்னோர்கள் முடக்கத்தான் கீரைக்கும் முக்கிய இடம் அளித்திருந்தனர்.

கடினமான உழைப்பை கொடுத்த அவர்களுக்கு எலும்பு தேய்மானத்தை தடுத்தது இந்த முடக்கத்தான் கீரைதான். சாதாரணமாக தண்ணீர் உள்ள இடத்தில் பரவலாக இந்த முடக்கத்தான் கீரை வளரும். அந்த காலத்தில் வீட்டின் பின்பக்கத்தில் அதிகளவில் இந்த கீரை வளர்ந்துள்ளது.

இன்றும் கிராமப்பகுதியில் இந்த கீரையை வளர்த்து உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். இந்த கீரையை எப்படி பயன்படுத்தலாம் என்கிறீர்களா? முடக்கத்தான் கீரையை பறித்து சுத்தம் செய்து அரைத்து தோசை மாவில் கரைத்து தோசையாக வார்த்து சாப்பிடலாம்.

இந்த கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. இதனால் இதில் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும் என்பதையும் நம் முன்னோர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி என அனைத்து வலிகளும் விட்டு விலகி ஓடிவிடும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

முடக்கத்தான் கீரையில் புரதசத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாதூப்புகள் நிறைந்து காணாப்படுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணைபுரிகிறது.

முடக்கத்தான் கீரையை துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம்.
கீரையைச் சாறு எடுத்து சூப்பாகச் சாப்பிடுவது பயன் தரும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாக முடக்கத்தான் கீரை உள்ளது.

தற்போது தமிழகத்தில் பல பிரபலமான ஓட்டல்களில் முடக்கத்தான் தோசை பிரபலம் ஆகி வருகிறது. இப்படி உணவுக்கு உணவாகவும், உடலை காக்கும் மருந்தாகவும் உள்ளது முடக்கத்தான் கீரை.

– N.நாகராஜன், தஞ்சாவூர்

Likes(2)Dislikes(0)
Share
Oct 142016
 

4

சென்னையில் 2009ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு, யு.கே நாட்டில் MBA, பின் 9 வருடங்கள் ஐடி துறையில் பிசினஸ் இதெல்லாம் முடித்து விவசாயத்தில் நுழைந்து உள்ளார் திரு.ஸ்ரீராம் அவர்கள்.

Future Farms என்ற நிறுவனத்தை தொடங்கி, Hydroponics  என்ற நவீன தொழில்நுட்ப  விவசாயம் செய்து, அதன் மூலம் நல்ல உணவு அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என விரும்புகிறார். இவரை சென்னை பெருங்குடியில் உள்ள இவரது தோட்டத்திற்குச் சென்று நமது B+ இதழின் சாதனையாளர்கள் பக்கத்திற்காக சந்தித்து பேட்டி எடுத்தோம்.

வணக்கம் ஸ்ரீராம், விவசாயம் ஆர்வம் எவ்வாறு வந்தது?

சுமார் பத்து வருடங்களாக வியாபாரம் செய்து, அதில் முன்னேற்றம் கண்டு வந்தாலும் ஏதோ முழு திருப்தி இல்லாத நிலை இருந்தது. உண்மையான சாதனை ஏதும் நாம் செய்யவில்லை என்ற எண்ணம் நிலவியது. Real life problem ஏதேனும் ஒன்றை கையில் எடுத்து அதில் வேலை செய்யலாம் என்று தேட ஆரம்பித்த போது, Hydroponics என்ற தொழில்நுட்பம் பற்றிய விவரங்கள் U-Tube இல் கிடைத்தன.

மண்ணே இல்லாது செய்யப்படும் இந்த விவசாய முறையைப் பார்த்து மிக ஆச்சரியமாக இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் சில இடங்களில் மட்டும் செய்கிறார்கள். இந்தியாவில் யாரும் செய்யாத நிலை. ஒரு பொழுதுபோக்கு மாதிரி ஆரம்பித்தோம். பின்னர் இதுவே Future Farms என்ற நிறுவனமாக மாறியது.

Hydroponics விவசாய முறை பற்றி?

சுருக்கமாக சொன்னால், இது ஒரு Integrated Urban Farming எனலாம். உரமற்ற முறையில் உயர் தர செடிகளை, காய் கனிகளை பைப்புகளில் தயாரிக்கும் ஒரு அறிவியல். இம்முறையில் உரம் மண்ணில் போடாமல், தண்ணீரில் கலக்கப்படுகிறது.

இந்த முறைக்கு சரியான அளவில் காற்று, தண்ணீர், சூரிய ஒளி, ஊட்டச்சத்து இருந்தால் போதும். வீடுகளில், மாடியில், பாலைவனத்தில் வேண்டுமானாலும் வளர்க்கலாம். சுமார் 80% வரை நீரை சேமிக்கலாம். மண் இல்லாததால், பூச்சிகள் வராது. அதனால் பூச்சிக்கொல்லி கிடையாது. தொழில்நுட்பம் மூலம் மின்சக்தி தேவையையும் சிக்கனமாக செலவு செய்ய முடிகிறது. வருங்காலங்களில் சூரிய ஒளி இதற்கு பயன்படும்.

பாதுகாப்பான சுத்தமான பயிர்வகை கிடைக்கும். நான்கு ஏக்கரில் வளர்க்க வேண்டிய செடிகளை இந்த முறை மூலம் ஒரு ஏக்கரிலேயே வளர்க்க முடியும். நான்கு மடங்கு வேலையாட்கள் தேவை குறையும். இம்முறையில் ஆற்றலும், திறனும் அதிகம்.

இந்த துறையில் சில ஆராய்ச்சிகளும் செய்து வருகிறீர்களே?

ஆம், எங்கள் ஆராய்ச்சி நிலத்தில், நாம் தொலைத்த மனிதர்களுக்குப் பயனுள்ள செடி வகைகள், கீரைகள், உணவு பயிர் வகைகளை தேடி அதை வளர்த்து வருகிறோம். ஒவ்வொரு விதமான விதையையும் எடுத்து கட்டுப்படுத்தப் பட்டுள்ள சூழ்நிலையில் எவ்வளவு அதிகமான மகசூலை பெற முடியும் என புள்ளி விவரங்களை சேகரிக்கிறோம். உதாரணமாக, இந்தப் பருவநிலையில், இந்த விதையை உபயோகித்தால், இவ்வளவு அறுவடை இருக்குமென எங்களால் உறுதியாக கூற முடியும்.

தோட்டத்தில் நீங்கள் வைத்துள்ள Controller வேலை செய்யும் முறைப் பற்றி..

விவசாயப் பின்னணி இல்லாத ஒருவர் கூட இம்முறையில் செய்யுமளவிற்கு இதை வடிவமைத்துள்ளோம். நாங்கள் பயன்படுத்தும் Sensor தண்ணீர், வெப்பம் உரம் அளவு எவ்வளவு உள்ளது என தெரிவித்துவிடும். இவை அனைத்தையும் இந்த Controller கணக்கிட்டு  தேவையான நீரையும், உரத்தையும் எடுத்துக்கொள்ளும்.

தனிநபர்கள் இந்த விவசாய முறையை அவர்கள் வீட்டில் செய்யலாமா?

கண்டிப்பாக முடியும், அவர்களுக்குத் தான் சிறு சிறு Kits விற்கிறோம். IFCA (Indian Federation of Culinary Association) ஒரு சர்வே எடுத்தார்கள். அதில் நாம் அதிகம் உட்கொள்ளும் புதினாவும் கொத்தமல்லியும் தான் அதிகம் நச்சுத்தன்மை வாய்ந்தது என்று தெரிவித்துள்ளனர். இந்த  முறையில் வீட்டு மாடியிலும், பால்கனியிலும் இம்மாதிரி சின்னஞ்சிறு செடிகளை, கீரை வகைகளை வளர்க்கலாம்.

இந்த முறைக்கு முதலீடு எவ்வளவு இருக்கும்?

கீரைகள் போன்ற இலைகள் உள்ள செடி வகைகளுக்கு ஆயிரம் சதுர அடியில் செய்வதற்கு ஆரம்ப முதலீடு மூன்று முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை ஆகும். Turnkey போன்று இந்த தோட்டத்தை முழுவதுமாக நாங்களே தொடக்கம் முதல் முடிவு வரை வைத்து கொடுத்து விடுவோம். மாதாமாதம் ஆகும் பராமரிப்பு செலவு மிகக் குறைவு.

தினமும் களை எடுக்க வேண்டும் என்ற பிரச்சினையெல்லாம் இல்லாததால் வயதானவர்கள் கூட இந்த தோட்டத்தை கவனித்துக்கொள்ளலாம். தொழில்நுட்பத்தால் ஆரம்ப கால முதலீடு சற்று அதிகம் இருப்பதால், விலை உயர்ந்த, தரம் அதிகம் தேவைப்படுகிற செடி வகைகளை வளர்ப்பது நல்லது. எப்படியும் குறைந்தது இரண்டே ஆண்டுகளில் நாம் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்து விடலாம்.

விவசாயத்தின் எதிர் காலம் எப்படியுள்ளது? அடுத்த தலைமுறை விவசாயிகள் தொழில்நுட்ப பின்னணியில் உள்ளவர்களாய் இருப்பார்களா?

நிறைய வாய்ப்புகள் உள்ளது. எங்கள் விவசாய முறையிலேயே வேதியியல், கணிதம், எலக்ட்ரானிக்ஸ், தானியங்கி முறை (Automation) என அனைத்தும் உள்ளது. பாரம்பரிய விவசாயிகள் அவர்கள் செய்யும் முறையை தொடர்ந்து கடைபிடிக்கலாம். எதிர்காலத் தேவை அதிகம் இருப்பதால், புது முறை விவசாயமும் தேவை. புதிய உக்திகளும் கண்டுபிடிப்புகளும் அவசியம். அப்போது தான் தேவைகளை சமாளிக்க முடியும்.

2050 இல் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும். விலை நிலமும் நீரின் அளவும் குறைந்துக்கொண்டே வருவதால் இது போன்ற புதிய விவசாய முறையும் (Integrated Urban Farming) தேவைப்படுகிறது.

இந்த முறையை ஆரம்பிக்கையில் எந்த மாதிரி சவால்களை சந்தித்தீர்கள்?

நம் நாட்டில் புதிய முயற்சி என்றாலே பெரிய சவால் தான்.

“நம்மூர் மக்களுக்கு தரத்திற்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள், விலை குறைவாக இருக்க வேண்டும் அது தான் பலர் இங்கு விரும்புவார்கள்” என்றெல்லாம் சிலர் ஆரம்பத்தில் கூறினர். இது உண்மை கிடையாது. பல மக்கள் பிராண்டட் (Branded) பொருள்களை தேடிப் போகிறார்கள். பிராண்டைத் தேடி போவது எதற்கு, தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தானே? அந்த தரத்தை தேடும் மனிதர்களை அடைந்தாலே போதும். எங்களது ஆரம்ப கால சவால் இதுவாகத் தான் இருந்தது. அதனால் எண்ணிக்கைக்கு (Quantity) முக்கியம் தராமல் தரத்திற்கு (Quality) முக்கியம் தரலாம் என்றே முடிவெடுத்தோம்.

நிதியுதவிக்காக யாரிடமும் செல்லவில்லை. முக்கிய குழுவில் பன்னிரண்டு பேர் உள்ளோம். எங்களது சுய முதலீட்டில் தான் செய்யத் தொடங்கினோம். பயிற்சி தருவது, இந்த Kits களை விற்பது இவைகளை வைத்து தினசரி செலவுகளை பார்த்துக்கொள்கிறோம்.

நல்லபடியாக சென்ற வியாபாரத்தை விட்டுவிட்டு விவசாயித்தில் வந்து  கஷ்ட்டப்படுகிறோமே என்று எப்போதாவது தோன்றியதா?

அதுமாதிரி இல்லை. அது தவறும் கூட. இறங்கும் வரை எவ்வளவு வேண்டுமானாலும் யோசிக்கலாம். இறங்கிய பின் கூடாது. Plan B, Plan C என்றெல்லாம் இருக்க கூடாது. திட்டமிட்ட செயல் நடக்கும் அல்லது நடக்காது என்ற தெளிவு வேண்டும். நடுவில் குழம்பிக் கொண்டிருந்தால் தான் பிரச்சினை. சிலர் செல்லும் பாதையில் சிரிய தடங்கள் வந்தாலும் பாதையை மாற்றிச் சென்றுவிடுவர். பாதுகாப்பான ரிஸ்க் இல்லை பாதி ரிஸ்க்  என்றேல்லாம் இருக்கக் கூடாது. ரிஸ்க் எடுத்தால் நல்ல பெரியதாக எடுக்க வேண்டுமென நம்புபவன் நான். ஒன்று வென்றிட வேண்டும் இல்லையெனில் கீழே விழ வேண்டும். நடந்தால் நல்லது இல்லையெனில் வேறு தொழில் செய்துக் கொள்ளலாம்.

உங்கள் நிறுவனத்தின் எதிர்கால திட்டம் என்ன?

நாங்கள் திட்டமிடுவது முழுவதுமாக நகர விவசாயம் தான். நிறைய பொருளீட்டும் சின்னஞ்சிறு விவசாயத் தோட்டங்கள் நகரத்தில் அமைத்துத் தரும் நிறுவனமாக இருக்க எண்ணம். தென்கிழக்கு ஆசியாவின் பெரிய Urban Farming Brand ஆக நமது நிறுவனம் இருக்க ஆசை. இதற்காக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பேசி வருகிறோம்.

விவசாயத்திற்கு தேவையான பொருள்கள், பயிற்சி, தகவல்கள், விதைகள் என என்ன கேட்டாலும் கிடைக்கும் One Stop Shop ஆக நம் நிறுவனம் இருக்க எண்ணுகிறோம்.

மேலும் காசு இருப்பவர்களுக்குத் தான் என இல்லை, சுத்தமான உணவு குறைந்த விலையில் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பது தான் முக்கிய நோக்கம்.

Right to Quality Food என்ற தனி சட்டமே வர வேண்டும். இதற்காக எங்கள் நிறுவனம் ஏதேனும் ஒரு வகையில் பங்களிக்க வேண்டும் என நினைக்கிறோம்.

உங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்ன?

CII நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான சிறந்த விவசாய Startup விருது கிடைத்துள்ளது, MIDH (Ministry of Integrated Horticulture) கிஸான் உன்னதி மேலா என்ற அவர்கள் விழாவில் எங்களை அழைத்தபோது, எங்கள் விவசாய முறையை காண்பித்தோம். ஆந்திர முதல்வர் திரு.சந்திரபாபு நாய்டு நடத்திய Aqua Aquaria என்ற கண்காட்சியில் நமது முறையை காண்பித்தோம்.

Likes(4)Dislikes(0)
Share
Oct 142016
 

u1

மனிதா நாம் மண்ணில் பிறந்தது மடிவதற்காகவா!

ஒரு முறை வீழ்ந்தால் என்ன, மறுமுறை எழுந்து வா

ஒரு நாள் வாழும் பூ கூட, தேன் தந்து செல்கிறது,

பல நாள் வாழும் நாம் பல தந்து செல்லலாமே?

 

வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று மூலையில் முடங்காதே

முடியும் என்று முயன்று பார் உலகம் முழுவதும் உனதாகும்

மண்ணுக்குள் புதைந்த விதை விருட்சமாக வெளிவருகிறது

மனிதனாகிய நாம் விறகாக வீழ்வது ஏனோ !

 

நிலத்தில் விழும் வியர்வை துளியே வானில் பறக்கும்

உன் புகழ் கொடியின் குறியாகும்

உனது ஏணியை வானில் போட்டு நீயும் ஏறு

இந்த உலகையும் உன்னோடு சேர்த்து முன்னேற்று .

 

– கோ.கோகுல்

Likes(13)Dislikes(0)
Share
Oct 142016
 

Hostel

சென்னை. திருவல்லிக்கேணி. 

வசதிகள் நிறைந்த, லேடீஸ் ஹாஸ்டல். வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி.

தனமும் மஞ்சுளாவும் கடந்த 15 நாட்களாக, விடுதியின் அறை தோழிகள்.

கொஞ்சம் கட்டை குட்டை தனத்திற்கு , இரண்டு வருடங்களாக இதே திருவல்லிக்கேணி ஹாஸ்டல் வாழ்க்கை தான்.

மஞ்சுளா இப்போதுதான் கோவையிலிருந்து வந்த, தனத்தின் புது ரூம் மேட். பார்க்க சுமாரான அழகுள்ள யுவதி.

இருவருக்கும் கிட்ட தட்ட 27 – 28 வயது. மணமாகாத குமரிகள் .

ஒரு ஞாயிறு. பிற்பகல் 4 மணி.

“தனம்!.. ஏய் தனம்!” மஞ்சுளா தனத்தின் தோளை பிடித்து தன் பக்கம் திருப்பினாள்.

“ம்.” தனம் சுரத்தில்லாமல்.

“ஏய்! தனம். இங்கே பாரு. ஏன் டல்லா இருக்கே!”

“ஒண்ணுமில்லே!”

“ஏன் ஹாஸ்டல்லே யாரோடும் பேச மாட்டேங்கிறே! ஒதுங்கி ஒதுங்கி போறே! நானும் பாத்துகிட்டு தான் வரேன் ! ரூமிலேயே இருக்கே !வெளியே எங்கேயும் வர மாட்டேங்கிறே? ஏண்டி?”

“போடி!. எனக்கு எதுவுமே பிடிக்கலை! என்னை ஏனோ யாருக்கும் பிடிக்கறதில்லை! ரொம்ப வெறுப்பாயிருக்குது!”

“உளறாதே! சரி வா!. இன்னிக்கு வெளிலே போய், ‘காபிடே’ லே காபி சாப்பிட்டு விட்டு ஜாலியா பீச்சுக்கு போய் வரலாம். வேடிக்கை பாத்தால் எல்லாம் சரியாயிடும்”

“நீ போப்பா. நான் வரல்லே !.” – தனம் மோட்டு வளையை பார்த்துக் கொண்டே.

“ஏண்டி! என்னாச்சு உனக்கு!” – மஞ்சுளாவின் குரலில் கரிசனம்.

“ஏன் கேக்க மாட்டே! பாரு என் மூஞ்சியை! எவ்வளவு பரு, மேடும் பள்ளமுமா! குண்டா இருக்கேன்! என் கலர் வேறே கம்மி. வெளிலே வந்தா, ஒரு பையன் கூட திரும்பி பாக்க மாட்டேங்கிறான். நீ பார்! எவ்வளவு அழகா இருக்கே!”

“அவ்வளவு தானே, தனம்! சரி வா! நல்ல பியூட்டி சலூன்க்கு போவோம். கொஞ்சம் ப்ளீச் பண்ணிக்குவோம். பளிச்சுன்னு ஆயிடலாம். ஹேர் ஸ்டைல் மாத்திக்கோ. சுடிதாருக்கு மாறு. நான் உன்னை அழகாக்கி காட்டறேன். அப்புறம் பாக்கலாம், எந்த பையன் உன்னை திரும்பி பாக்காம போறான்னு” (மஞ்சுளாவின் ஆர்வம் 100 %)

“பண்ணிக்கலாம்தான்! ஆனால் அதுக்கு செலவாகுமே! அடிக்கடி வேறே பண்ணிக்கணும்! வேண்டாண்டி! கையை கடிக்கும்.’

“அப்போ ஒண்ணு பண்ணலாம்!. ஸ்கின் டாக்டர் ஒருத்தி எனக்கு தெரியும். அவள் அழகு கலை நிபுணரும் கூட. பெஸ்ட் டாக்டர். ரொம்ப பீஸ் கேக்க மாட்டா. வரியா போகலாம்?”

“போலாம் தான்! ஆனால் வேண்டாம்பா!”

“ஏன் தனம் வேண்டாம்?”

“எனக்கே தெரியும் டாக்டர் என்ன சொல்லுவாளென்று!. சாப்பாட்டை கட்டு படுத்து! வெய்ட்டை குறை!. இதெல்லாம் எனக்கு முடியாதுப்பா! நொறுக்கு தீனி இல்லாமல் என்னால முடியாது!”

“அது சரி ! குண்டாயிண்டே போனால், அப்புறம் எப்படி அழகாறது?” (ஆர்வம் 80%)

“என்ன மஞ்சுளா ! நீயும் என்னை கேலி பண்றே? எனக்கு இந்த மருந்து மாத்திரை எல்லாம் அலர்ஜி ஆயிடும். ஒரு தடவை சாப்பிட்டு, தோல் கறுத்து போச்சு தெரியுமா? என் தலையெழுத்து அப்படி. டாக்டர் எல்லாம் வேண்டாம் மஞ்சுளா. இப்படியே இருந்து விட்டு போறேன்”

மஞ்சுளா விடுவதாக இல்லை. “ அப்படியெல்லாம் சொல்லாதே!  சரி, அப்போ ஒண்ணு செய். நீயே தினமும் பயத்தம் மாவு போட்டு முகம் கழுவு. மஞ்சள் பேஸ்ட், பரு மேல போடு. சரியாயிடும். . மருதாணி வெச்சுக்கோ. அப்புறம், கேலமைன் அப்பிக்கோ. இயற்கை வைத்தியம் தான் இருக்கவே இருக்கே! சீப் அண்ட் பெஸ்ட்!”

“பண்ணலாம்!. ஆனால், எனக்கு இந்த மஞ்சள் போட்டாலே, வெடிப்பு வந்துடும். வேண்டாம்பா!

“என்ன தனம்! எது சொன்னாலும் எப்படி நெத்தியடியா ‘நோ’ சொல்ற!. ச்சே! போப்பா!” – கொஞ்சம் அலுப்புடன் மஞ்சுளா.(ஆர்வம் 50%)

“நீ ஏன் சொல்ல மாட்டே மஞ்சுளா! உனக்கு அழகிருக்கு. பாய் பிரண்டு வேறே நீ கூப்பிட்ட நேரத்திற்கு ஓடி வரான்!. எனக்கு அப்படியா! போன வாரம் எங்க வீட்டிலே பெண் பார்த்த ரெண்டு வரங்களும் என்னை வேண்டாம்னுட்டாங்க! இத்தனைக்கும் பசங்க ஒன்னும் சுரத்தேயில்லை! அவனுங்க மூஞ்சிக்கு நான் வேண்டாமாம். என்ன பண்றது! நான் பிறந்த நேரம் அப்படி!”

ஐயோ பாவம் இந்த தனம். நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் தனது தோழிக்கு. (ஆர்வம் மீண்டும் 100%) 

“ஓ! இதுதான் விஷயமா? போகட்டும் விடு தனம்!. இதுக்கேல்லாம் மனசை போட்டு அலட்டிக்காதே!. வேறே எதிலயாவது மனசை செலுத்து. ப்ரோமோஷன் எக்ஸாம் எதாவது எழுதேன்! படியேன்!”

“பண்ணலாம். ஆனால், ரொம்ப கஷ்டம். என்னாலே முடியாது. நான் ரெண்டு தடவை ட்ரை பண்ணி விட்டுட்டேன். ஏற மாட்டேங்குது. ”

“அட பாவமே ! பரவாயில்லே! ஒண்ணு செய். என் கூட, எம்.பி.ஏ சேர்ந்திடு, லயோலா காலேஜ் லே. பார்ட் டைம். பொழுதும் போகும். வேறே நல்ல வேலையும் கிடைக்கும். நிறைய ஸ்மார்ட்டா பசங்க வேறே, கூட படிக்கிறாங்க !.. என்ன சொல்றே !” (80%) 

“வரலாம் தான் !. ஆனா சாயந்திரம் வகுப்பு , என்னாலே வர முடியாதே?”

“ஏன் தனம்! உன் ஆபிஸ் தான் 5.30 மணிக்கே முடிஞ்சிடுதே! நேர காலேஜ் வந்துடு.” (ஆர்வம் 70%)

“பண்ணலாம்! ஆனால், என்னால தினமும் முடியாதுப்பா!. ஆபிசிலேருந்து வரும்போதே ரொம்ப சோர்வா இருக்கும். வெளியே நகரவே பிடிக்காது.”

“என்னடி சொல்றே!. என்னாலே முடியரப்போ ஏன் உன்னாலே முடியாது?” (ஆர்வம் 50%) 

“இல்லேப்பா!. உன்னை மாதிரி நான் ஒன்னும் ஹெல்தி இல்லே!. எனக்கெல்லாம் அதுக்கு கொடுப்பினை இல்லை மஞ்சுளா!”

“சரி சரி!. வருத்தப்படாதே ! ம்ம்…இப்படி பண்ணலாமா! தபால் மூலமா படிக்கிறியா? என் பிரெண்ட்ஸ் நாலு பேர் எம்.பி.ஏ அப்படித்தான் படிக்கிறாங்க. ஏற்பாடு பண்ணட்டுமா? உனக்கு ஓகே வா!” (ஆர்வம் 30%) 

“ படிக்கலாம்தான். ஐடியா நல்லாதான் இருக்கு. ஆனால் எனக்கு ஒத்து வருமான்னு தெரியலியே?”

“ஏன்? இதுக்கு என்ன நொண்டி சாக்கோ ? தெரிஞ்சிக்கலாமா?” மஞ்சுளாவின் குரலில் இளப்பம். கொஞ்சம் காரம். (20%) 

“கோவிச்சுக்காதே மஞ்சுளா! சாரிடீ! பொதுவாவே, நான் ஒரு சோம்பேறி. அம்மாக்கு நாலு வரி லெட்டர் போடவே எனக்கு வணங்காது. யாராலே, இவ்வளவு ஹோம் வொர்க், அசைன்மென்ட் பண்ணி அனுப்ப முடியும்? இது ஆவர காரியமா எனக்கு படலே! எனை உட்டுருப்பா ”

என்ன பொண்ணு இவ. எதுக்கெடுத்தாலும் நொள்ளை சொல்லிக்கிட்டு. கடுப்பு தான் வந்தது மஞ்சுளாவிற்கு. அடக்கி கொண்டாள். “அதில்லை தனம்! நமக்கு தேவைன்னா படிச்சி தானே ஆகணும்? சோம்பேறித்தனம் பார்த்தால் யாருக்கு நஷ்டம்? பின்னாடி, இப்படி இருக்கொமேன்னு நீ தானே வேதனைப் படுவே!”. (10%) 

“நான் என்ன பண்ணட்டும், என்னை எங்க வீட்டிலே வளர்த்த விதம் அப்படி! ஆனால், நீ ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவ ! உனக்கு திறமை ஜாஸ்தி. நா அப்படி இல்லையே! எல்லாம் என் விதி !”

கோபம் பொத்து கொண்டு வந்தது கோவை மஞ்சுளாவுக்கு. “அதெப்படி! படிக்கறது முடியலை! ப்ரோமொஷன் வேண்டாம்! ஹெல்த் பாத்துக்க முடியலை! ஆனால், எல்லார் தூக்கத்தையும் கெடுத்துக்கிட்டு ராத்திரி ஒரு மணி வரை டி.வி. பாக்க முடியுது? அது பரவாயில்லியா?. அப்போ சோர்வு எங்கே போச்சு? ” (5%) :

“நல்லா இருக்கே மஞ்சுளா நீ பேசறது? எனக்கு வேறே என்ன பொழுது போக்கு இருக்கு? உனக்கு இருக்காப்போல எனக்கு பிரண்ட்ஸ் எங்கே இருக்காங்க? எனக்கு டி.வி. தவிர வேறே யார் துணை?”

“ஆமா! எப்படியோ போ! உனக்கு போய் ஹெல்ப் பண்ண நினைச்சேனே! என்னை சொல்லணும்!” – மஞ்சுளா கோபமாக அறையை விட்டு வெளியேறினாள். :ஆர்வம் 0%)

தனம், டிவி ரிமோட்டை தேடினாள். கூடவே, நேத்து வாங்கி வைத்த கார சேவு, முறுக்கு பொட்டலங்களை தேடினாள்.

அப்பாடா ! தல அஜித் படம். தொந்திரவு இல்லாமல் பாக்கணும்.

****

தனம் மாறவில்லை. மாறிவிட்டாள், மஞ்சுளாதான்வேறு அறைக்கு.

அவளுக்கு தனத்தின் புலம்பல், இம்சை தாங்கவில்லை. இப்போ வனிதா, தனத்துடன். மஞ்சுளாவிற்கு பதிலாக வனிதா இப்போது தனத்தின் புதிய ரூம் மேட். திருச்சியிலிருந்து வந்தவள். . சக்கரம் திரும்ப சுற்ற ஆரம்பித்து விட்டது. முதலிலிருந்து.

****

கிட்டதட்ட ஒரு மாதம் கழித்து. தனத்தின் அறை. 

ஒரு ஞாயிறு. பிற்பகல் 4 மணி.

“தனம்!.. ஏய் தனம்!”

“ம்.”

“ஏய்! தனம். இங்கே பாரு. ஏன் டல்லா இருக்கே!”

“ஒண்ணுமில்லே!”

“ஏன் விடுதியிலே யாரோடும் பேச மாட்டேங்கிறே! ஒதுங்கி ஒதுங்கி போறே! நானும் பாத்துகிட்டு தான் வரேன் ! வெளியே எங்கேயும் வர மாட்டேங்கிறே? ஏண்டி?”

“போடி!. எனக்கு எதுவுமே பிடிக்கலை! போரடிக்குது ! ரொம்ப வெறுப்பாயிருக்குது!

…….” ( ரிபிட் – மஞ்சுளாவுக்கு பதில் வனிதா என்று மாற்றி கதையின் 15வது வரியிலிருந்து படிக்கவும்).

*****

தனத்திற்கு இன்றும் புரியாத விஷயம் இதுதான்.

“என்னை ஏன் யாருக்கும் பிடிக்கவில்லை? அப்படி என்ன குறை என்னிடம்?”

தனம்! அவள் பாவம். தன்னிலை உணராத பரிதாபம். அவள் சோம்பி இருந்தே சுகம் கண்டவள்.காண்பவள்.

அவள் அப்படித்தான். சிலரை மாற்றுவது கொஞ்சம் கஷ்டம்.

தனம் போன்றவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறலாம். அவர்களே மனது வைத்தால். பிறரை பார்த்து. 

அதுவரை, கஷ்டம் தான்! கூட இருப்பவருக்கு !

இருப்பினும் சமாளிக்கலாம் யு ஆர் நாட் ஓகே ! பட் தட்ஸ் ஓகே! “என்று தனம் போன்றவரிடம் பரிவு காட்டினால்!

அவர்களை புரிந்து கொண்டால்!

– முரளிதரன்.S

Likes(2)Dislikes(0)
Share
Share
Share