Dec 172015
 

Prem

அமெரிக்காவில் சுண்டல் விக்கிற வேலை கிடைத்தாலும் பரவாயில்லை, அங்கே கிரீன் கார்டு வாங்கி தலைமுறையினராய் செட்டிலாகிவிடலாம் என்பது நம் நாட்டின் பல இளைஞர்களின் எண்ணம். ஆனால் அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தில்  வேலை கிடைத்தும், பிறந்த நாட்டிற்காக எதாவது செய்ய வேண்டும், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று தீவிரமாக உழைத்து வருகிறார் ராமனாதபுரத்தைச் சேர்ந்த திரு.பிரேமானந்த் சேதுராஜன்.

நமது நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, தொழில்நுட்பம் பெரியளவில் கைகொடுக்கும் என ஆழமாக நம்பும் இவர், அத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்டு, அறிவியலையும், கணிதத்தையும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில், கற்பித்து வருகிறார்.

கடந்து இரு ஆண்டுகளாக, அமெரிக்காவில் இருந்துக் கொண்டே, தமிழில் சுமார் 40 அறிவியல் மற்றும் கணித வகுப்புகளை வீடியோக்களாக பதிவு செய்து, LETS MAKE ENGINEERING SIMPLE என்ற ஒரு கான்சப்டைத் தொடங்கி, facebook மூலமும் youtube மூலமும்  வெளியிட்டுள்ளார்.

கணிதத்தைக் கண்டோ, அறிவியலைக் கண்டோ பயந்து ஓடுபவர்கள், இவரது வீடியோக்களைப் பார்த்தபின், “பாடங்களில் கடினம் என்று ஏதுவும்மில்லை, சொல்லித்தருபவர் கையில் தான் அனைத்தும் உள்ளது” என உணர்ந்து வருகிறார்கள். திரு.பிரேம் நமது B+ இதழின் சாதனையாளர்களின் பக்கத்திற்கு அமெரிக்காவிலிருந்து தொலைப்பேசியின் மூலம் அளித்த பேட்டியிலிருந்து..

உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறந்தது ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த தினைக்குளம் என்ற சிறு கிராமம். அதே கிராமத்தில் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி படித்தேன். பிறகு அங்குள்ள சையத் அம்மாள் பொறியியல் கல்லூரியில் 2006 ஆம் வருடம் எலக்ட்ரானிக்ஸ் (ECE) முடித்தேன். தந்தை எங்கள் ஊரில் ஒரு சிறு வியாபாரம் செய்து வருகிறார். தம்பி மருத்துவராகவும், தங்கை ஆசிரியராகவும் பணியாற்றுகின்றனர்.

படித்தவுடன் ஆறு மாதம் வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்த பின், சென்னையில் HCL Technologies நிறுவனத்தில் சாப்ட்வேர் வேலை கிடைத்தது. சுமார் இரண்டு வருடத்திற்கு பின் பணிநிமித்தமாக அமெரிக்கா சென்றேன். சாப்ட்வேர் சர்வீசஸ் தொடர்பான நிறுவனங்களில், தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வாய்ப்புகள் மிக குறைவாகத் தான் கிடைக்கும். நிறைய புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் ஏதாவது ப்ராடக்ட் தொடர்பான நிறுவனங்களில் பணிபுரியலாம் என முடிவு செய்தேன்.

அப்படி தான் ப்ளோரிடாவில் உள்ள ராக்வெல் காலின்ஸ் என்ற நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன். எதிர்பார்த்தது போலவே இப்போது புதியதாய் நிறைய விஷயங்களை ப்ராக்டிகலாக கற்றுக்கொள்ள முடிகிறது.

கல்வித்துறையை குறிப்பாக தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

என்னை பொறுத்தவரை எதுவும் உலகத்தில் கடினமான பாடம் என்று கிடையாது. யார் சொல்லித் தருகிறாரோ அவர்களிடம் தான் அனைத்தும் உள்ளது. ஐயன்ஸ்டினின் முக்கியமான ஒரு வாக்கியம் உண்டு – “உங்களுக்கு ஒரு விஷயத்தை எளிமையாக விளக்கி சொல்லித்தர இயலவில்லை என்றால், உங்களுக்கே அது புரியவில்லை என்று அர்த்தம்”

படிப்பது எதற்கு? அறிவை வளர்த்துக்கொள்ளத்தானே. ஆனால், போட்டி நிறைந்த உலகத்தில், மதிப்பெண் நிறைய வாங்கவேண்டும், அப்போது தான் நல்ல வேலை கிடைக்கும்” என தவறாக நினைத்து மதிப்பெண்ணை மட்டுமே  குறிவைத்து படிப்பதில் தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நிறைய மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் வாங்கிவிடுகிறார்கள், ஆனால் அறிவு எத்தனை தூரம் வளர்ந்தது என்று பார்த்தால், கேள்விக்குறியாகிறது.

பாடத்திட்டமானது, ப்ராக்டிகலாக இது, எங்கு, எவ்வாறு, பயன்படுகிறது என்பதை கற்றுத்தரவேண்டும். ஆனால் நம் நாட்டு கல்வி முறை அப்படியெல்லாம் சொல்லித் தருவதில்லை. ஏன் ஒரு பாடத்தை படிக்கிறோம் என்றே தெரியாமல் கல்லூரி வரை படித்தும் முடித்து விடுகிறோம். ஆகையால், கல்விமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பது என் எண்ணம்.

நம் நாட்டு கல்விமுறையில் மாற்றம்வேண்டும் என்பதற்கு ஏதாவது உதாரணம் கூற இயலுமா?

உதாரணமாக தொழில் கல்வி என்று நினைத்து தான் பொறியியல் படிக்கிறோம். அந்தப் படிப்பில் நமக்கு அடிப்படை எதிர்பார்ப்பு என்ன? தொழில்கல்வி முடித்தவுடன் மாணவர்களால் ஏதாவது சுயமாக ஒரு கண்டுபிடிப்பை தரமுடியும் அல்லது சுயமாக ஒரு தொழிலை தொடங்கும் அளவு அறிவு வரும் என்பது தான். ஆனால் என்ன படித்தோமென்றே தெரியாமல் படிப்பை முடித்து வருபவர்களால், எவ்வாறு தொழில் பண்ண முடியும்? அதனால் தான் வேலை வாய்ப்பை தேடுபவர்கள் வேறு வழி தெரியாமல், ஐ.டி. நிறுவனங்களிடம் சென்று விழுந்து விடுகிறோம்.

மெக்கானிக்கல், சிவில் துறை முடித்தவர்கள் கூட ஐ.டி.க்கு தான் செல்கின்றனர். மெக்கானிக்கல் துறைக்கும் ஐ.டி.க்கும் என்ன சம்பந்தம்? மெக்கானிக்கல் துறையில் முறையாக மாணவர்களுக்கு பயிற்சி தரப்பட்டிருந்தால், அவர்கள் கற்ற அறிவை வைத்து நான்கைந்து பேராக சேர்ந்து, கடன் வாங்கி ஒரு சிறு தொழில் பண்ணலாமல்லவா!

நீங்கள் பொறியியல் முடித்த பின் எத்தகைய மனநிலையில் இருந்தீர்கள்?

நானும் பொறியியல் முடித்து வெளிவரும்போது, அறிவை வளர்த்துகொள்ளாமல் தான் வந்தேன். 80% மதிப்பெண் எடுத்திருந்தேன், இருந்தும் திறமை, ப்ராக்டிகல் அறிவு போன்றவற்றை கற்றுக்கொள்ளாமல் வந்ததால், வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டேன். கல்லூரியில் இருந்தவரை பாதுகாப்புடன் இருப்பதாக நினைத்தேன். ஆனால் கல்லூரிக்குப் பின் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் ஆகிவிட்டது. வேலைக்கான நேர்முகத் தேர்வில், நான் படித்ததை வைத்து ப்ராக்டிகலாக கேள்வி கேட்கின்றனர். எனக்கு ஒன்றுமே தெரியவில்லை.

அதே மாதிரி வேலைக்குச் சேர்ந்த பிறகு தான் பள்ளிகளில் படித்த பல விஷயங்கள் ப்ராக்டிகலாக எவ்வாறு பயன்படுகிறது என தெரிந்தது. இதை எனக்கு பள்ளிகளிலோ, கல்லூரியிலோ யாராவது தெளிவாக சொல்லித் தந்திருந்தால், நான் கூட ஒரு விஞ்ஞானியாக வெளியே வந்திருப்பேன்.

உங்களது “LETS MAKE ENGINEERING SIMPLE” பணிகளை பற்றி.. இந்த ஐடியா உங்களுக்கு எப்படி தோன்றியது?

நமது கல்விமுறையில் மாற்றம்வேண்டும் என்பது அனைவரது விருப்பம். ஆனால்  யாரும் அதற்கான செயலைத் தொடங்குவது போல் தெரியவில்லை.

வேலைக்கு சேர்ந்து ஒரு எழு வருட அனுபவத்திற்கு பின் நாம் ஏதாவது தொடங்குவோமே, என நினைத்து நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து இந்த முயற்சியை 2014 ஆம் ஆண்டு ஆரம்பித்தோம். நமக்கு தெரிந்த, நமது நண்பர்களுக்கு தெரிந்த ப்ராக்டிகலான விஷயங்களை வீடியோ பதிவு செய்து போட்டால், படிக்கும் குழந்தைகளுக்கு, ஒரு விஷயத்தை ஏன் படிக்கிறோம் என்ற தெளிவு உண்டாகும் என நினைத்து தொடங்கினோம். ஆரம்பத்தில் குறைவாக இருந்த பார்வையாளர்களின் கருத்துக்களும் ஆதரவும் போக போக பெரிதானது. இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

முழுதும் இருட்டாக இருக்கும் சூழ்நிலையில் ஒரு தீக்குச்சியையாவது நாம் கொளுத்தினால் தான், வெளிச்சம் பரவும். நம்மை பார்த்து மேலும் சிலர் இது போல் செய்யத் தொடங்குகையில் மாற்றம் மெல்ல நிகழத் தொடங்கும். அதற்கு பதில்  தான் இந்த LETS MAKE ENGINEERING SIMPLEமுயற்சி.

Logarithm பற்றிய உங்கள் வீடியோ பார்த்தேன். எப்படி கடினமான கல்வி பாடங்களை கூட மிக எளிமையாக சொல்லிவிடுகிறீர்கள்?

முதலில் ஒரு கான்சப்டை கையில் எடுத்து விட்டால் அதற்கு ஸ்கிரிப்ட் முழுவதும் எழுதுவேன். ஸ்கிரிப்டிற்கு தேவையான கதைகளை நிறைய தேடி ஆராய்ச்சி செய்து தேர்ந்தெடுப்பேன். அதை எழுதுகையில், என் கிராமத்தில் உள்ள, வயலில் வேலை செய்யும் படிக்காத ஒருவர் அந்த வீடியோ பார்த்தால் கூட, அவருக்கும் 50 சதவீதமாவது புரிய வேண்டும் என நினைப்பேன். வீடியோ பார்ப்பவர்கள் யாராக இருப்பினும், ஆறு வயது குழந்தையாக இருப்பினும் கூட அவர்களுக்கும் புரிய வேண்டுமே என நினைப்பேன்.

ப்ராக்டிகலாக ஒரு கான்சப்ட் எங்கு பயன்படுகிறது என எனக்கு தெரியும், ஆனால் அதை எளிமையாக எடுத்துச்சொல்ல நிறைய புத்தகங்களை படிப்பேன். பெரிய பல்கலைகழகங்களின் பேராசிரியர்களின் வீடியோக்களையும் பார்ப்பேன். நம் நாட்டு கல்லூரிகளை காட்டிலும் அவை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். எங்கு இந்த கான்சப்ட் பயன்படும் என்று Application Oriented ஆக அவர்கள் சொல்லித்தருவார்கள். அவைகளையும் பயன் படுத்திக்கொள்வேன்.

முதலில் சொன்ன மாதிரி, சொல்லித் தருபவர்கள் தெளிவாக புரிந்திருப்பது மிக முக்கியம். அடுத்து சொல்லித் தருகையில், நிறைய உதாரணங்களை கொடுப்பேன். கான்சப்டை பற்றி மட்டும் பேசாமல், கதையோட சேர்ந்த கான்சப்டை தயார் செய்வேன். என் வீடியோ பார்ப்பவர்களுக்கு பக்கத்தில் உட்கார்ந்து யாரோ கதை சொல்வது போல இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

வேலையும் செய்துக்கொண்டு இவற்றை செய்வதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது?

காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை அலுவலகத்தில் முழு நேரம் வேலை. வேலை முடித்து வீட்டிற்கு வந்தபின், ஸ்கிரிப்ட் எழுதுவது, அனிமேஷன் வேலைகள், வீடியோ எடுப்பது, எடிட்டிங் வேலைகள் என ஒரு நாளில் சராசரியாக மூன்று முதல் நான்கு மணி நேரம் இதற்காகவே செலவிடுவேன்.

இருக்கும் வேளைகளில் மிக அதிகமாக நேரம் அனிமேஷன் வேலைகளுக்குத் தான் செல்லும். பத்து வினாடிகள் அனிமேஷன் திரையில் வருவதற்கு சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் தேவைப்படும். அனிமேஷன் காட்டும்போது, பார்வையாளர்களுக்கு உணர்ந்துகொள்வது (VISUALISE செய்வது) மிக எளிதாக இருப்பதால், அதற்கு நிறைய நேரம் ஒதுக்குகிறேன்.

எங்கெல்லாம் பார்வையாளர்கள் அனிமேஷன் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பார்களோ, அங்கெல்லாம் அனிமேஷன் சேர்த்துக்கொள்வேன். கடைசியாக வெளிவரும் ப்ராடக்ட் எனக்கு முழு திருப்தி இருந்தால் தான் யூ-ட்யூபில் பதிவு செய்வேன். அது போல் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு சரியில்லை என சில வீடியோவை பதிவு செய்யாமல் கூட விட்டிருக்கிறேன்.

இத்தனை சிரமம் எடுத்து, எவ்வாறு இதை தொடர்ந்து செய்து வருகிறீர்கள்?

அது ஒரு Passion என்று சொல்வேன். நான் ஆரம்ப காலங்களில் வேலையில்லாமல் கஷ்டப்பட்டபோதும், மற்ற நேரங்களிலும் நம் கல்வி முறையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமே என நண்பர்களிடம் புலம்பிக்கொண்டே இருப்பேன். நமக்கு பின் வரும் மாணவர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணம் ஆழமாக உருவானது.

ஒரு நாடு வளர வேண்டுமெனில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அந்நாட்டின் கால்தடம் ஆழமாக பதிய வேண்டும். அதற்கு, தொழில்நுட்பம் மாணவர்களுக்கு சரியான முறையில் சொல்லிக்கொடுக்கப் படவேண்டும்.

நாட்டின் வளர்ச்சி பல விஷயங்களை நம்பி இருப்பினும், என்னை பொறுத்தவரை, தொழில்நுட்பத்தின் பங்கு மிக அதிகமாகவே இருக்கிறது. கல்வித்துறையில் மாற்றம் வராமல், இது சாத்தியமாகாது. எனவே அந்த மாற்றம் எனக்கு ஒரு கனவு போல் ஆகிவிட்டது. கல்வித்துறையில் மாற்றம் ஏற்படுத்த ஏதாவது ஒரு நிறுவனம் கூட நடத்தலாம். ஆனால் வீடியோ எடுத்தல், போட்டோ எடுத்தல் எனக்கு பிடித்த மற்ற விஷயங்கள். இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்து செய்வதற்கான வாய்ப்பு இந்த பணியில் கிடைப்பதால், தொடர்ந்து செய்ய முடிகிறது என நினைக்கிறேன்.

நீங்கள் சந்தித்த சுவாரசியமான நிகழ்வு அல்லது நீங்கள் வெளியிட்ட வீடியோக்களில் உங்களுக்கு மனதிருப்தி அளித்தவை பற்றி?

எனக்கு ஆச்சரியமாகவும் மிகவும் வருத்தமாகவும் இருந்த ஒரு நிகழ்வு. ஒரு நாள் 15 வருட அனுபவமுள்ள கணித ஆசிரியர் ஒருவர், எனது Logarithm வீடியோவைப் பார்த்து விட்டு, “எனக்கே இப்போது தான் Logarithm என்றால் என்ன என்று புரிகிறது” என்று என்னிடம் தெரிவித்தார். இது என்னை மிகவும் பாதித்தது. இப்படியும் ஆசிரியர்கள் இருக்கின்றனரே? இவர்களுக்கே சரியாக தெரியாமல் பாடங்களை நடத்தினால், மாணவர்களுக்கு எவ்வாறு புரிந்துக்கொள்வார்கள் என நினைத்தேன்.

ஒரு அறிவியல் ஆசிரியர், ஒருநாள் என்னை தொலைபேசியில் அழைத்தார். “எனது வகுப்பில் உள்ள ஒரு மாணவி இருக்கிறார். அந்த மாணவிக்கு அறிவியல் என்றாலே சுத்தமாக பிடிக்காது, அந்த பாடத்தை வெறுக்கும் அளவிற்கு இருந்தார். அவர் இருந்த வகுப்பறையில் ஒருநாள் உங்களின் அறிவியல் வீடியோவை காண்பித்தேன். பின்னர் அவரே உங்களது மற்ற அறிவியல் வீடியோக்களையும் பார்த்து, அறிவியலைப் பற்றி நன்றாக புரிந்து, அறிவியலை விரும்பி படிக்க ஆரம்பித்தார்”  என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

எனது “relativity theory” வீடியோவைப் பார்த்துவிட்டு ஒரு இளைஞர், “அண்ணா, உங்களால் தான் எனக்கு வேலை கிடைத்தது” என்றார். எனக்கு ஒன்றும் புரியாமல் எப்படி என கேட்கவும், “சமீபத்தில் ஒரு நேர்முகத் தேர்வில் கலந்துக்கொண்டேன். அப்போது என்னிடம் உங்களுக்கு நன்று தெரிந்த ஏதாவது ஒரு கான்சப்டை விளக்கவும் என கேட்டனர்.  நீங்கள் சொன்ன relative theory யை அப்படியே சொன்னேன். அதை கேட்ட நேர்முகத் தேர்வு அதிகாரிகள், இதெல்லாம் எங்களுக்கே தெரியாதே, உனக்கு எப்படி தெரியும் என்று ஆச்சரியத்துடன் அந்த வேலையை எனக்கு கொடுத்தனர்” என்றார்.

மேலும் சில மாணவர்கள். “உங்கள் வீடியோக்களை பார்த்துவிட்டு, வகுப்பறையில் எங்களுக்கே தோன்றியது போல் அதை சொல்லித்தந்து ஆசிரியர்களிடமிருந்தும், சக மாணவர்களிடமிருந்தும் பாராட்டுக்களை பெறுவோம்” எனவும் சிலர் கூறியதுண்டு.

அது போல், நிறைய சம்பவங்கள் உள்ளன. ஆனால் அந்த 15 வருட அனுபவமுள்ள கணித ஆசிரியர் தெரிவித்த கருத்து தான், நம் கல்வி முறை எத்தனை மோசமாக உள்ளது என தெளிவாக புரியவைத்தது. நாம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன என உணர்த்தி யோசிக்க வைத்தது.

(மேலும் அதிக சுவாரசியமான தகவல்களும், கருத்துக்களும் உள்ள மீதமுள்ள இவரது பேட்டி, அடுத்த இதழிலும் தொடரும்….)

Likes(86)Dislikes(2)
Share
Aug 152015
 

3

இந்த மாத B+ இதழ் சுதந்திர தினத்தை ஒட்டி வருவதால், நாட்டு மக்களுக்காக தொண்டு செய்யும் எவரையேனும் பேட்டி எடுத்து வெளியிடலாமா என்று தேடியபோது, சென்னை அண்ணாநகரில் வசிக்கும் ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் P.கனேசன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.

ராணுவத்தில் பணிப்புரிந்த போது மட்டுமன்றி, ஓய்வு பெற்றப்பின்னும் பல அரும்பணிகளை செய்து வரும் திரு.கனேசன் அவர்களை இந்த மாத சாதனையாளர்கள் பக்கத்தில் காணலாம்.

வணக்கம் சார், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்.

வணக்கம், நான் கர்னல் P.கனேசன். திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் கிராமத்தில் பிறந்தேன். படித்தது நன்னீலம் தொடக்கப் பள்ளியில். பின்னர், டிப்ளமோ செட்டினாடு அண்ணாமலை பாலிடெக்னிக்கில் படித்தேன். படிப்பு முடித்தவுடன் பொதுப்பணித்துறையில் பொறியாளராக சேர்ந்தேன். 1962ஆம் வருடம் சீனாவுடனான போர் முடிந்தபோது, இந்தியா ராணுவத்தில் அதிகாரியாக (LIEUTENANT) சேர்ந்தேன்.

உங்கள் ராணுவ பணிகளில் முக்கியமான அனுபவம் பற்றி..

இந்திய ராணுவம், அண்டார்டிக்கா (தென் துருவ) பகுதியில் “தக்‌ஷின் கங்கோத்ரி” என்ற பெயரில் ஒரு ஆய்வுதளத்தை அமைத்து உள்ளது. நம்மைப் போன்றே 52 மற்ற நாடுகளும், அங்கு ஆய்வு நடத்துகின்றன. 1987இல் அந்த பகுதிக்கு ஆய்வுக்குழு தலைவராக நம் ராணுவத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு சென்றேன். 480 நாட்கள் அங்கு பணிப்புரிந்து திரும்பி வந்தேன். என்னுடன் சேர்ந்து 14 மற்ற ராணுவ ஊழியர்களும் வந்தனர். இந்தியாவின் 5ஆவது குளிர்கால குழு என்று எங்களுக்கு பெயர். அது என் வாழ்வில் ஒரு முக்கியமான அனுபவம்.

தென் துருவத்தில் நீங்கள் பணிப்புரிந்த அனுபவம் பற்றி..

தென் துருவம் கொடுமையான, பனி நிறைந்த, குளிர் நிறைந்த கண்டம். அதிசயமான உலகம். அங்கு பணி செய்த, ஒவ்வொரு நாளும் ஒரு ஆச்சரியத்தை சந்தித்தேன். அங்கு பனியின் அடர்த்தி (ICE THICKNESS) சுமார் 5000மீட்டர் வரை கீழே படர்ந்திருக்கும். அதற்கு கீழ் தான் மண்ணையே பார்க்க முடியும். சாப்பாட்டில் பால், தயிர், காய்கறி எல்லாம் அந்த 480 நாட்களாக எங்கள் குழு பார்த்ததே இல்லை. இத்தகைய சூழ்நிலையிலும், முழு ராணுவ கட்டுப்பாட்டுடன் மகிழ்ச்சியாகவே அங்கு பணிப்புரிந்தோம்.

4

ராணுவ வாழ்க்கைப் பற்றி..

ராணுவத்தில் எப்போதுமே, இளமையாகவும், துடிப்புடனும், சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டும். நான் தினமும் 20கிமீ ஓடுவேன், எனது ஜவான்கள் கூட சில சமயம் ஓட மாட்டார்கள், நான் தொடர்ந்து கடினமாக உழைப்பேன்.

ஒருமுறை எனது உடலின் முழு திறனை சோதித்துப்பார்க்க, ஒரே நாளில் 20கிமீ ஓட்டம், ஒன்னறை மணி நேரம் கூடைப்பந்து, பின் 5கிமீ நீச்சல் ஆகியவற்றை செய்தேன். இந்த மூன்றையும் தொடர்ந்து 5மாதம் செய்தேன். ராணுவத்தில் நீச்சல், கூடைப்பந்து, தடகளப் போட்டிகள் ஆகியவற்றில் சிறந்த வீரனாக தேர்வு செய்யப்பட்டேன்.

பெங்களூரில் ராணுவ பொறியாளர் படையின் பயிற்சி மையம் உள்ளது (MEG). அங்கு 1000 கணக்கான ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தருகிறார்கள். அந்த பயிற்சி மையத்தில், 3ஆண்டுகள் பயிற்சி அதிகாரியாக பணிப்புரிந்துள்ளேன்.

பின்னர் தென் துருவத்தின் ஆய்வு குழுவிற்கு தலைவர் என்ற வாய்ப்பு வந்தவுடன், என் சொந்த ஊரான சன்னாநல்லூருக்கு சென்று அங்கிருந்து மண்ணை எடுத்து வந்து, தென் துருவத்தில் தூவினேன். அதே போல் தென் துருவத்திலிருந்து கிளம்புகையிலும், அங்கிருந்து என்ன எடுத்து வரலாமென யோசித்தபோது, சுமார் 50 கோடி வருடங்கள் உறைபனியாய் கிடந்த 5கல் பாறைகளை நம் ஊருக்கு எடுத்து வந்தேன். அந்த பாறைகள் ஒவ்வொன்றும் 1டன் எடை இருக்கும்.

அந்த 5 கற்களையும் என்ன செய்தீர்கள்?

அந்த 5 கற்களையும் தமிழகத்தில் 5 வெவ்வேறு இடங்களில் வைத்து “அகத்தூண்டுதல் பூங்கா” (INSPIRATIONAL PARK) என்று அமைத்துள்ளேன். யாரேனும் இந்த கற்களை பார்க்கும்போது, தென் துருவத்திலிருந்து தெற்கு பசிஃபிக் கடல், தெற்கு அட்லாண்டிக் கடல், இந்திய பெருங்கடல், அரேபியக் கடல் என சுமார் 15000 கிலோமீட்டர் தாண்டி சன்னாநல்லூர் வரை அந்த காலத்திலேயே கொண்டு வர முடியும் என்றால், ஒரு மனிதன் நினைத்தால் எந்த விதமான லட்சியத்தையும், இலக்கையும் அடையலாம் என்ற எண்ணம் வரும். ஏனெனில் எண்ணங்கள் தான் வாழ்வை தீர்மானிக்கிறது.

கற்களை எந்தெந்த இடங்களில் வைத்துள்ளீர்கள்?

ஒரு கல்லை பெங்களூரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வைத்துள்ளேன். ராணுவத்தில் சேரும் வீரர்கள் அந்த கல்லை பார்க்கையில் ராணுவத்தை பற்றி பெருமையடைய வைக்கும் எண்ணத்தில் அங்கு வைத்தேன்.

இரண்டாவது கல்லை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் என்ற ஊரில், 10ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள வேதாந்த மஹரிஷி ஆசிரமத்தில் வைத்தேன்.

மூன்றாவது கல்லை எனது கிராமமான சன்னாநல்லூரில் வைத்துள்ளேன். கடைசி இரண்டு கற்களை சென்னை அண்ணாநகரில் உள்ள எனது வீட்டில் வைத்துள்ளேன்.

ராணுவத்தில் சேர நினைப்பவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

ராணுவம் ஒரு அற்புதமான அமைப்பு. ஆனால் ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் அதைப் பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்ட பின் தான் சேர வேண்டும். சிலர் அங்கு போனபின், அந்த சவால்களை கண்டு தாக்குபிடிக்க முடியாமல் ஓடி விடுவர். பெருமைக்கும் நாட்டிற்கும் பணி செய்ய நினைத்து வருபவர்கள், மகிழ்ச்சியுடன் அங்கு பணி செய்வர். அதை மக்களிடன் தெளிவு படுத்தவே, “ராணுவம் அழைக்கிறது” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளேன்.

என்னைப் பொருத்தவரை, இந்தியாவின் ஒவ்வொரு இளைஞனும், கட்டாயமாக மூன்று ஆண்டுகளேனும் ராணுவத்தில் பணிப்புரிய வேண்டும். அவ்வாறு செய்தால், நம் நாட்டில் மகத்தான மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

நீங்கள் இரண்டு போர்களில் கலந்துக் கொண்டதைப் பற்றி..

நான் ராணுவத்தில் சேர்ந்த ஒரு வருடத்திலேயே ஒரு போர் 1965 ஆம் ஆண்டு வந்தது. அந்த போரில், பாகிஸ்தான் பகுதிக்குள் வெகு தூரம், எங்களது படை சென்றது. மேற்கு பாகிஸ்தானின் சியால்கோட் பகுதி வரை சென்று தாக்கினோம். அது ஒரு அருமையான அனுபவம்.

இரண்டாவதாக டாக்கா 1971 இன் போர். கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானுடன் சண்டையிட்டு வெற்றிப் பெற்றோம். அந்த போரின் முடிவில் தான், கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆனது. போர் என்றால், வெற்றியும் வரும், தோல்வியும் வரும். அதிர்ஷ்டவசமாக நான் கலந்துக்கொண்ட இரண்டு போரிலுமே, நான் வெற்றிப் பெற்ற பக்கத்திலிருந்தேன்.

ராணுவத்தில் அத்தனை கஷ்டங்களை அனுபவித்து நம் தேசத்தை காக்கும் உங்களைப் போன்ற ராணுவ வீரர்களின் பார்வையில் இந்தியாவின் எதிர்காலம் எவ்வாறு இருக்கிறது?

மக்களின் மனதில் இன்றைய காலத்தில் சுயநலம் பெருகி இருப்பது போல் தோன்றுகிறது. மக்களின் மனநிலை மாற வேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்த அரசியல் சட்டமும், தலைவர்களும் மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. தனி மனித மாற்றம் வரவேண்டும். நாட்டுப்பற்று உடைய கல்வியை நாம் கொண்டு வரவேண்டும். அப்போது தான் இதெல்லாம் நடக்கும்.

உங்களது எதிர்கால திட்டம் என்ன?

கல்வி நிறுவனங்களில் கற்பதன் நோக்கம் என்ன என்று கேட்டால், மனிதனின் அறியாமையை நீக்க வேண்டும் என்ற பதில் வரும். மனிதன் இயற்கையில் மாபெரும் சக்தி படைத்தவன். ஆனால் அறியாமையால் மூடப்பட்டுள்ளான். அந்த அறியாமையை நீக்கும்போது, தான் ஒரு மகான் என்று அவனுக்கு தெரியவருகிறது. அதனால் மக்களிடம் உள்ள அறியாமையை எவ்வளவு நீக்க முடியுமோ, அவ்வளவு நீக்க பணி செய்வேன்.

அதைத் தவிர, என் சொந்த ஊரில், சொந்த நிலத்தில் வைத்துள்ள “அகத்தூண்டுதல் பூங்கா” சற்று வித்தியாசமானது. அந்த கிராமத்தில் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கிறேன்.

எனது பெற்றோர்களின் பெயரில் “பாவாடை தெய்வானை” பல்தொழில் பயிலரங்கம் என்ற கூடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன். வருடத்திற்கு 4-5 ஏழை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தந்து அவர்கள் வாழ்க்கை தரத்தை இதன் மூலம் உயர்த்தலாம் என்று நினைத்துள்ளேன். பயிலரங்கத்தின் முக்கிய நோக்கமே, நம் கிராம மக்கள் உலகலவில் பேரும் புகழும் பெற வேண்டும் என்பது தான். ஒத்த ஆர்வமும் நோக்கமும் உள்ள மற்றவர்களும் சேர்ந்தால் இந்த பணி விரைவில் நடக்கும்.

இந்த சுதந்திர தினத்திற்கு மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

இந்தியா ஒரு மாபெரும் தேசம். பல நூறு வருடங்களுக்கு முன்பே, பல நாடுகளுக்கு வழிகாட்டிய தேசம். யுவான் சுவாங் சீனாவிலிருந்து, மாத கணக்கில் பயணம் செய்து இந்திய மண்ணை தொட்டு வணங்க வந்தார். நாலந்தா பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் படிக்க வந்துள்ளனர். நம் நாட்டின் பழைய பெருமைகள் அனைத்தையும் இளைஞர்கள் உணர்ந்து, திரும்பவும் பழைய நற்பெயர் உருவாவதற்கு பாடுபட்டால், கண்டிப்பாக நம்மால் உலக அரங்கில் முன்னேற முடியும்.

இரண்டாவது, மனிதனின் திறமை அளவுகோலுக்கு அப்பாற்பட்டது. முயற்சி செய்கிறவர்கள் தான் வெற்றி பெருகிறார்கள். தாழ்வு மனப்பாண்மை இருக்க கூடாது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. அதை உணர வேண்டும்.

மனிதனின் செயல்பாடுகளுக்கு புறக்காரணங்கள், வெளியிலிருந்து தடைகள் ஆகியன இருக்க முடியாது. அவை அனைத்துமே, நமது எண்ணத்திலிருந்து தான் உள்ளது. மனதை திடமாகவும், உறுதியாகவும் வைத்து ஒரு காரியத்தை செயல்படுத்தும்போது, உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

Likes(5)Dislikes(0)
Share
Apr 142015
 

2

தான் இலக்கை அடைவது என்பது ஒரு வித சாதனை என்றால், தன் இலக்கை பல பேர்களை அடைய வைப்பது என்பது வேறு ஒரு வித சாதனை. அந்த அரும்பணியை KING MAKERS IAS ACADEMY என்ற நிறுவனம் மூலம் செய்து வரும் ஒரு தம்பதியினரை, நமது B+ இதழின் இந்த மாத சாதனையாளர் பக்கத்தில் பார்ப்போம்.

சென்னை அன்னாநகரில் உள்ள இந்த நிறுவனத்தை நடத்தி வரும் இவர்களின் முக்கிய லட்சியமே கிராமங்களுக்கு சென்று, பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள, திறமையுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பயிற்சி அளித்து, அரசு அதிகாரிகளாய் தயார் செய்யும் சமுதாயப்பணி தான். இனி அவர்கள் பேட்டியிலிருந்து..

வணக்கம், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்

வணக்கம், என் பெயர் பூமிநாதன். சொந்த ஊர் மதுரை அருகில் உள்ள அலங்கநல்லூர், கல்லணை என்ற கிராமம். பெற்றோர்கள் இருவரும் விவசாயத்தில் ஈடுபட்டவர்கள். நான் படித்தது MA, MPhil. மத்திய அரசுப் பணியில் SENIOR STATISTICS OFFICER ஆக பணிப் புரிகிறேன்.

என் மனைவி MA, MPhil. Phd முடித்துவிட்டு, எத்திராஜ் கல்லூரியில் பணிப் புரிந்தார். இப்போது KING MAKERS IAS ACADEMY நிறுவனத்தின் இயக்குனராகவும், தலைவராகவும் உள்ளார். நானும் இந்த நிறுவனத்தின் கவுரவ ஆலோசகராக இருக்கிறேன். எங்களின் 2 குழந்தைகளையும் IAS ஆக்கும் நோக்கத்துடன் உள்ளோம்.

வியாபாரம் செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளது. இந்தத் துறையை தேர்ந்தெடுத்த நோக்கம் என்ன?

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த சமயம் கல்விப் பற்றி தகவல்கள் சேர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். அந்த சமயம் நான் சந்தித்த  நிறைய பிரச்சினைகளும், சவால்களும் என்னை நிறைய கற்றுக் கொள்ள வைத்தது. அப்போதே சில நல்ல நண்பர்களுடன் உரையாடலின் போது, “சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் நாம் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும்; நாம் இறந்த பின்னும் நம் பெயர் சொல்லுவது போல் ஏதாவது விட்டுச் செல்ல வேண்டும்” என முடிவெடுத்தோம்.

அப்படி நினைக்கும்போது தான், பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள மாணவர்களின் மீது எங்கள் பார்வை திரும்பியது. அவ்வாறு உள்ள மாணவர்களுக்கு பயிற்சியளித்து, அரசு துறையில் வேலை வாங்க உறுதுணையாய்  இருந்தால், ஒரு தலைமுறையே வறுமையை விட்டு வெளிவரும் என நம்பினோம். தமிழகத்தில் நிறைய திறமையுள்ள மாணவர்கள் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும் என்று தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம்.

நிறுவனத்தின் பணி என்ன? மாணவர்களை எவ்வாறு தேர்ந்தெடுத்து பயிற்சியளிக்கிறீர்கள்?

இதை ஆரம்பிக்கும்போதே, என்னுடைய (GROUP-1 அதிகார்கள்) IAS, IPS, IRAS என்று பல நண்பர்களுடன் சேர்ந்து கலந்துரையாடி, எங்கள் இலக்கை தீர்மானித்தோம். அப்போதே முழுக்க வியாபாரமய நோக்கத்துடன் இந்தப் பணி இருக்க கூடாது என்றும், மக்கள் சேவையும் முக்கியம் என்றும் முடிவு செய்தோம். எங்களிடம் 100% கட்டணமும் இல்லை, அதே நேரத்தில் 100% இலவசமும் இல்லை.

கிராமங்களில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவித்தொகை கொடுத்து, அவர்களை அழைத்து வந்து பயிற்சி கொடுத்து, ஒரு அரசு அதிகாரியாய் உருவாக்கி, அவர்களும் பல மாணவர்களுக்கும், மனிதர்களுக்கும் பயன்படும் விதத்தில் தயார் செய்கிறோம்.

இரண்டாவதாக, சிவில் சர்வீஸ் பரீட்சைக்கு தயார் செய்யும் மாணவர்கள், வாழ்க்கையில் தோற்றுபோகவே மாட்டார்கள். அவர்களுக்கு அந்தளவிற்கு தன்னம்பிக்கை உருவாகும். எந்த சவால் வந்தாலும் வெற்றிப் பெற்றுவிடுவார்கள். இதையெல்லாம் அவர்களுக்கு உணர்த்தி பயிற்சியளிக்கிறோம்.

பாடப் பயிற்சிகளைத் தவிர வேறு என்ன மாதிரி மனரீதியான பயிற்சியளிக்கிறீர்கள்?

பேச்சு திறமை, சுய முன்னேற்றம், தலைமைப் பண்புகளை வளர்த்தல், தன்னம்பிக்கை வளர்த்தல் பற்றியெல்லாம் பயிற்சியளிக்கிறோம். சிவில் சர்வீஸ் பரீட்சைக்கு தயார் செய்துவிட்டாலே, தனிப்பட்ட வாழ்க்கையிலும் வித்தியாசமாக சிற்ப்பாக இருப்பீர்கள் என மாணவர்களை ஊக்கப்படுத்துவோம். அவர்களுக்கு எங்கள் பயிற்சி நிறுவனம் மூலம் பலதரப்பட்ட துறையிலிருந்து வரும் மாணவர்களின் நட்பு கிடைப்பதும் சிறப்பாகும்.

மாணவர்களை ஊக்குவிக்க கையாளும் யுக்தி பற்றி?

வாரத்திற்கு ஒருமுறை துறைவல்லுநர்களை சாதித்தவர்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து, ஊக்க உரை, கலந்தாய்வு, நேர்முகப்பயிற்சி அளித்து வருகிறோம். உதாரணமாக சமீபத்தில் உலகளவில் பல வருடமாக, சேவையில் ஈடுபட்டுள்ள திரு.ரவிக்குமார் அவர்களை கூட்டி வந்து பேசவைத்தோம். நம் நாட்டின் பெருமைகளையும், கலாச்சாரத்தையும் பற்றி எடுத்துரைத்தார். மாணவர்கள் மட்டுமன்றி, பெற்றோர்களும் அந்த நிகழ்ச்சிக்காக நன்றி தெரிவித்தனர். மாணவர்களுக்கு மறக்கவே முடியாத நிகழ்ச்சியாக அது அமைந்தது.

மேலும் IAS, IPS அதிகாரிகளை கூட்டி வருவோம். திரு.ஷைலேந்திர் பாபு ADGP அவர்கள், திரு.பாரி DIG அவர்கள், திரு.ரவி IG அவர்கள், திரு.பிரகாஷ் IAS அவர்கள், திரு.இறையன்பு IAS, போன்ற முக்கிய அதிகாரிகள், மாணவர்கள் சிந்தனையைப் பக்குவபடுத்தி, ஊக்குவித்து வருகின்றனர்.

இதுவரை எத்தனை மாணவர்க்ளுக்கு உதவியாக இருந்துள்ளீர்கள்?

இந்த ஸ்தாபனம் தொடங்கி 2ஆண்டுகள் ஆகிறது. இந்த குறுகிய காலத்தில் இதுவரை சுமார் 700 மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளோம். அவர்களுள் பெரும்பாலும் பின் தங்கிய வகுப்பையும், கஷ்டப்படும் விவசாய குடும்பங்களையும் சேர்ந்தவர்கள்.

எங்களிடம் சேர்ந்து படித்ததில், 50%க்கு மேல் மாணவர்கள், அரசு பணியில் சேர்ந்து வெற்றிப் பெற்றுள்ளனர். சிவில சர்வீஸில் 21 மாணவர்கள் நேர்காணலுக்கு சென்றுள்ளனர். அவர்களுள் 10 பேர் சர்வீஸும் வாங்கியுள்ளனர். இந்த வருடம் 52 பேர் MAINS EXAM எழுதியுள்ளனர். இரண்டே ஆண்டுகளில் இவையெல்லாம் ஒரு பெரிய சாதனை தான்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களுக்கும் சென்று மாணவர்களை சந்திக்கிறீர்களா? மாணவர்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

எங்கள் முக்கிய நோக்கமே வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் திறமையை கண்டுபிடித்து அவர்களை அழைத்து வந்து பயிற்சி கொடுப்பது தான். அதற்காக பல மாவட்டங்களுக்கு சென்று இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவோம். அந்நிகழ்ச்சிகளில் அரசு பணியில் உள்ள பலவிதமான வாய்ப்புகளை பற்றி எடுத்து சொல்லுவோம். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து படிக்க முடியாது இருக்கும் மாணவர்களுக்கு, தானாகவே அவர்கள் படித்து பரீட்சைக்கு தயார் செய்யும் முறையை பற்றியும் விளக்குவோம். மாணவர்களிடம் மனதில் அந்த தீப்பொறியை பற்ற வைத்துவிட்டு வந்துவிடுவோம்.

இதுவரை சுமார் 25000 மாணவர்களை பல மாவட்டங்களிலும், கல்லூரிகளிலும் சந்தித்து உரையாற்றியுள்ளோம். கல்லூரிகளுக்கு சென்று சிறிய தேர்வு ஒன்றை வைத்து தேர்வு செய்வோம். சமூக/பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு, 100% வரை, கட்டணச் சலுகைகள் தந்து, சிவில் சர்வீஸ் பயிற்சி அளிக்கிறோம்.

மாணவர்களிடம் விழிப்புணர்வு எவ்வாறு உள்ளது?

இன்னும் பெரியளவிற்கு விழிப்புணர்வு இல்லை. நன்கு படிக்கும் மாணவர்களுக்கு கூட அரசு துறைகளில் இத்தனை வாய்ப்புகள் உள்ளதா என்று தெரியவில்லை. ஏதாவது பணம் கொடுத்தால் அல்லது பெரிய சிபாரிசு இருந்தால் தான் மத்திய அரசு பணியில் சேர முடியும் என தப்பாக நினைக்கிறார்கள். UPSC, SSC, RRB, IBPS போன்ற பல பரீட்சைகள் என்ன என்றே தெரிவதில்லை.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (EMPLOYMENT EXCHANGE) பதிவு செய்துவிட்டால் வேலை நம் வீட்டைத் தேடி வரும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம்.

மாநில அரசு பதவிக்கு GROUP-1 முதல் GROUP-8 வரை பல பரீட்சைகள் வைத்து ஆட்களை தேர்வு செய்கிறார்கள். யூனிஃபார்ம் சர்வீஸ் தேர்வு (UNIFORM SERVICE RECRUITMENT) மூலம் சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபில் என ஆட்களை எடுக்கிறார்கள். இந்த தகவல்களை எடுத்து சொல்வோம். அதிலும் SC/ST பிரிவு மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண் எடுத்தாலே கிடைத்துவிடும் என்ற தகவல்களை கூறும்போது அவர்களின் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் அளவே இருக்காது. பெரிய எதிர்காலம் கிடைத்ததை போல் உணர்வார்கள்.

எங்கள் இணையதளத்தை படிக்கும் வாசகர்களும் சிலர் IAS போன்ற தேர்வுகளுக்கு தயார் செய்யலாம். அவர்களுக்கு நீங்கள் தரும் அறிவுரை..

IAS தேர்வு எழுத வேண்டும் என எண்ணம் வந்தவுடனே, குறைந்தபட்சம் நீங்கள் சிலவற்றை செய்தாக வேண்டும். IAS தேர்வு யார் நடத்துகிறார்கள்? எந்த மாதத்தில் விண்ணப்பத்திற்கு அறிவிப்பு வரும், தேர்வு முறை என்ன? கடந்த வருடங்களின் கேள்வித்தாள்கள் எங்கு கிடைக்கும்? சம்பந்தப்பட்ட இணையதளங்கள் என்ன? போன்ற விவரங்களை சேகரித்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் மாவட்டத்தில் யாரேனும் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தால், அவர்களை சந்திக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு என்று ஒரு தனி மையத்தை அரசு வைத்துள்ளது. பரீட்சைக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அங்குள்ளது.

ஆரம்ப பயிற்சி தேவைப்பட்டால், அரசு நடத்தும் இலவச பயிற்சி முகாமில் சேரலாம். SC/ST மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சியும், ஊக்கத்தொகையும் கொடுத்து அரசே தயார் செய்கிறது.

இது போன்ற நிறைய பயனுள்ள குறிப்புகள் (TIPS) நம் வாசகர்களுக்கு தேவைப்படலாம். உங்களால் அதை தர இயலுமா?

நிச்சயம் முடியும். போட்டித் தேர்வுகளுக்கு என பயனுள்ள குறிப்புகளை தருகிறேன். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு பரீட்சைப் பற்றி குறிப்புகள் தந்து, பயன் பெற செய்யலாம்.

உங்கள் லட்சியம் என்ன?

கிராமப்புற மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் விழிப்புணர்வும் தந்து, சிவில் சர்வீஸ் பக்கம் கூட்டி வருதல். அரசு வேலைக்கு, சிபாரிசு, பணம் எல்லாம் வேண்டாம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் போதும் என புரிய வைத்தல். இவைகளை நிறைய மாணவர்களிடம் கொண்டு சேர்த்து, சமுதாய மாற்றத்திற்கு ஒரு சிறிய கருவியாக இருக்க நினைக்கிறேன்.

நம் சமுதாயத்திற்கு நீங்கள் கூற விரும்புவது?

மூன்று விஷயங்களை கூற விரும்புகிறேன். உங்கள் B+ இணைய தளத்தில் சாதனையாளர்கள் பகுதியில் ஏற்கனவே இடம் பிடித்த, 100% பார்வையில்லாமல் IAS ஆகியிருக்கும் திருமதி.பெனோசஃபின் எங்கள் நிறுவனத்தில் தான் பயின்றார்; முதலாவது விஷயமாக, அவருக்கு பிடித்தமான ஹெலன் கெல்லரின்  வரிகளையே நானும் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

“என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியாது,

ஆனால் என்னால் சிலவற்றை செய்ய முடியும்,

அப்படி என்னால் செய்ய முடிந்தவற்றை, என்றுமே மறுக்காமல் செய்வேன்”

எங்களிடம் வரும் மாணவர்களிடம் நாங்கள் கூறுவது, உங்களை முழுமையாக நம்புங்கள். “BELIEVE YOU CAN. WE TEACH, YOU REACH.”

இரண்டாவது விஷயம். என் குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி. என் கிராமத்தை விட்டு சென்னைக்கு படிக்க வந்தபோது, மிகவும் கடினமாக இருந்தது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்வதற்கு கூட சிரமப்பட்டேன். மிகவும் தடுமாறி ஆங்கிலம் கற்று, இந்த நகரத்தில் ஒரு நிலைக்கு வந்தேன். போட்டி  தேர்வுகள் எழுதி 7 அரசுப் பணியில் வாய்ப்புகள் கிடைத்தது. SENIOR SUPERINTENDING OFFICERஆக இப்போது மத்திய அரசில் பணிபுரிகிறேன். என்னால் இது முடியும் என்றால், இங்குள்ள பல திறமையுள்ள மாணவர்களாலும் முடியும்.

மூன்றாவது விஷயம். என்னை சாதனையாளர் என்று பேட்டி எடுக்க வந்துள்ளீர்கள். ஆனால் கிராமத்திலிருந்து வந்த என் அண்ணன் திரு.நீலமேகம் அவர்கள் தான் இதற்கெல்லாம் முக்கிய காரணம். அவர் படிக்கவில்லை என்றாலும் எப்படியாவது நான் IAS ஆக வேண்டுமென நிறைய தியாகங்கள் செய்தவர். நீ IAS எழுதி வெற்றி பெற முடியவில்லை என்றாலும், இந்த KING MAKERS IAS ACADEMY மூலம் பல லட்சம் மாணவர்களை சந்தித்து, நிறைய IAS அதிகாரிகளை  உருவாக்க முடியுமென கூறி இன்றும் ஊக்கமளித்து வருகிறார். அவர் போல், ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒருவர், படிக்க விரும்பும், திறமை இருக்கும் மாணவர்களை ஊக்குவித்தாலே போதும், அவர்கள் வாழ்வில் நல்ல நிலையை அடைவர்.

குறிப்பு:

(இந்தியன் எஞ்சினியரிங் சர்வீசஸ் பரீட்சை பற்றி திரு.பூமிநாதன் அவர்கள் கூறியுள்ள விவரங்களை இந்த மாத இளைஞர்கள் பக்கத்தில் காணலாம்.

உங்களுக்கு ஏதேனும் போட்டி தேர்வுகள் குறித்து கேள்விகள் இருந்தால் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும் அல்லது KING MAKERS IAS ACADEMY ஐ தொடர்பு கொள்ளவும்)

Likes(1)Dislikes(0)
Share
Feb 142015
 

3Achiever

இன்றைய காலத்து இளைஞர்களை அவர்கள் கைப்பேசியில் அழைத்தால் பொதுவாக என்ன மாதிரி பாடல்கள் “CALLER TUNE” ஆக நமக்கு கேட்கும் என நாம் அனைவரும் அறிவோம். ஆனால் 25 வயதே ஆகியுள்ள திரு.பாலாஜியை அழைத்தால், “சிட்டி, தி ரோபாட், ஸ்பீடு ஒன் டெர்ராஹெர்ட்ஸ், மெமரி ஒன் ஜெட்டாபைட்” என எந்திரன் பட வசனம் தெரித்து விழுகிறது. இதை வைத்தே ரோபோடிக்ஸ் துறையில் இவரின் ஆர்வம் தெளிவாக புரிந்தது.

B+ இதழின் சாதனையாளர்கள் பக்கதிற்காக சந்திக்கலாமா என்றவுடன் மகிழ்ச்சியுடன் சரி என ஒத்துக்கொண்டார். பேசிக்கொண்டிருக்கையில், இவரின் தொழில்நுட்ப சாதனைகள் கூடவே, இவரின் சமுதாய நோக்கும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

பொருளாதாரத்தில் சிறு வயது முதலேயே சிரமப்பட்டிருந்தும், பணத்திற்காக எந்த சமரசமும் செய்துக் கொள்ளாமல், லட்சியத்தின் பின் தொடர்ந்து கடின உழைப்புடன் செல்லும் இவரைப் பார்க்கையில், இவரைப் போல் பல இளைஞர்கள் தான் இன்று நம் நாட்டிற்கு கண்டிப்பாக தேவை என்ற எண்ணம் தோன்றுகிறது. இனி இவரின் பேட்டியிலிருந்து..

வணக்கம், உங்களை அறிமுகம் படுத்திக்கொள்ளுங்கள்..

வணக்கம், என் பெயர் பாலாஜி. பிறந்தது, படித்தது எல்லாமே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் என்ற கிராமத்தில். அப்பா திருநாவுக்கரசு, அம்மா முருகவேனி. என் அப்பாவிற்கு அறிவியல் ஈடுபாடு அதிகம். கிராமத்தில் உள்ளவர்களுக்கு, விவசாயத்திற்கு தேவைப்படும் ஏர் மற்றும் களப்பைகளை மரத்தில் செய்து தருவார். அவரைப் பார்த்து வளர்ந்த எனக்கும் அறிவியலில் ஈடுபாடு அதிகம் வந்துவிட்டது. சிறு வயதிலிருந்தே எந்த பொருளை பார்த்தாலும் அதே மாதிரியே செய்து விடுவேன், பள்ளியில் படிக்கும் போதே, மாவட்டளவில் அறிவியலில் பரிசுகளை வாங்கியுள்ளேன். மயிலம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் பிறிவில் 2007 ஆம் ஆண்டு சேர்ந்தேன். பின் SRM கல்லூரியில் 2012 முதல் 2014 ஆம் அண்டு வரை ரோபோடிக்ஸ் பிறிவில், எம்.டெக் படித்தேன்.

கல்லூரிகளில் உங்கள் அறிவியல் தேடல் எவ்வாறு இருந்தது?

பள்ளியில் முழுக்க தமிழ் வழி கல்வியில் பயின்றதால், கல்லூரி படிப்பு மிக ஆரம்பத்தில் மிக கடினமாக இருந்தது. நிறைய அரியர்களும் வைத்தேன். ஆனாலும் பிராஜக்ட் மட்டும் சிறப்பாக செய்ய வேண்டுமென ஆர்வம் இருந்தது.

2010 ஆம் ஆண்டில், கல்லூரியில் மூன்றாம் வருடத்தில் படித்துக் கொண்டிருக்கையில், பறக்கும் விமானம் செய்யலாம் என தொடங்கினேன். என் அப்பா தான் அதற்கு தேவையான பண உதவி செய்தார். ஆனால் விமானத்தை பறக்க வைக்க முடியவில்லை. மீண்டும் முயற்சித்தேன். கல்லூரியில் பல ஆசிரியர்களிடம் சென்று கோரிக்கை வைக்க, ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அவர்கள் உதவி செய்யவே, மீண்டும் முயற்சித்தேன். விடாமுயற்சி பலனலித்தது. பிராஜக்ட் வெற்றிகரமாக முடிந்தது. சிறந்த பிராஜக்ட் என்ற பரிசும் எனக்கு கிடைத்தது.

பின் 2011 ஆம் ஆண்டு, எனது நான்காம் வருடத்தில், அதே பிராஜக்டை சூரிய கதிரின் சக்தியில், ஆளில்லா விமானமாக (UNMANNED AIRCRAFT AERIAL VEHICLE) செய்து, அரசு விருதும் வாங்கினேன். இந்த இரண்டு பெரிய விருதுகளும் கல்லூரியில் படிக்கையில் வாங்கினேன்.

விவசாயத்திற்கு ரோபோவை கொண்டு சேர்த்ததைப் பற்றி..

விவசாயமும் ரோபோவும் பிடித்த துறைகள் என்பதால், விவசாயத்தில் (AUTOMATION) தானியங்கி முறையில் செய்ய வேண்டுமென சிறு வயது முதல் ஆசை இருந்தது. ஏர் களப்பை முறையை இப்போது உள்ள தொழில் நுட்பத்துடன் தொடர்புகொள்ள (INTERFACE) செய்ய நினைத்ததன் விளைவு தான் இந்த விவசாயத்திற்கான ரோபோ.
1992 ஆம் ஆண்டில் அறிமுகமாகிய தொலைபேசி துறை பல வளர்ச்சிகளை கண்டு இன்று எங்கோ ஒரு உயரத்தை சென்றடைந்துவிட்டது. ஆனால், 1978 ஆம் ஆண்டே அறிமுகமாகிவிட்ட ரோபோ துறையை பற்றி நம் மக்களுக்கு அவ்வளவாக தெரியாது. அதனால் ரோபோவை வைத்து குறைந்த விலையில் பயன்படும் வகையில் ஒரு ரோபோ செய்துள்ளேன்.

ஒரு டிராக்டரை எடுத்துக் கொண்டால், சுமார் 5லட்சம் ரூபாய் செலவாகும், மனிதர்களை கொண்டு இயக்க வேண்டும், டீசல் தேவைப்படும். ஆனால் நான் செய்துள்ள இந்த ரோபோவிற்கு எதுவும் தேவையில்லை. தண்ணீர் தெளிப்பது, மருந்தடிப்பது, விதை விதைப்பது, களையெடுப்பது, நிலத்தின் தண்ணீர் அளவை கணித்து, தண்ணீரை தெளிப்பது போன்ற ஐந்து வேலைகளை இந்த ரோபோ செய்யும். ஜப்பான் நாட்டில் கூட விவசாயத்திற்கு ரோபோக்களை இப்போது தான் அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால், நாம் அதற்குள் ஒரளவிற்கு வந்துவிட்டோம். ஒரே நேரத்தில் வீட்டிலிருந்தபடியே 100 ரோபோக்களை விவசாயத்தில் கட்டுபாட்டுடன் இயக்க வைக்கும் திட்டம் ஒன்றையும் தயாரித்து வருகிறேன்.

இந்த திட்டங்களையும் ரோபோவையும் எங்கெல்லாம் காண்பித்து ஒப்புதல் வாங்கியுள்ளீர்கள்?

ஜப்பான் டோக்கியோ பல்கலைகழகத்தின் பெரிய அமைப்பான “ARTIFICIAL LIFE & ROBOTICS” இல், 2014 ஆம் வருடம் எனது ரோபோ டிசைனை காண்பிக்க விண்ணபித்து இருந்தேன். ஒரு நான்கு மாதம் கழித்து அருமையான பாராட்டு கருத்துக்களுடன் பதில் வந்தது. ஜப்பானிற்கு வந்து எனது டிசைனைப் பற்றி PRESENTATION தரவும் அழைப்பு வந்தது.
ஆனால் ஜப்பான் செல்லும் அளவு பொருளாதாரமும் இல்லை, பாஸ்போர்ட்டும் இல்லை. ஆனால் ஆர்வத்தை மட்டும் விடவில்லை. அப்போது வா.மணிகண்டன் என்ற நண்பர் தனது BLOG மூலம் என்னைப் பற்றி எழுத, அவரின் வாசகர்கள் மூலம் போதிய நிதி வரவே, ஜப்பான் சென்றேன். ரோபோடிக்ஸ் துறையில் ஜப்பான் பெரிய இடத்தில் உள்ளது, அப்படி இருக்கையில், என்னிடம் ஜப்பானியர்கள் ஆட்டோகிராஃப் வாங்கியது, BIODATA வாங்கியது போன்ற விஷயங்களை மறக்கவே முடியாது. அவர்களது அங்கீகாரம் மிகுந்த ஊக்கமளித்தது.

ஜப்பான் பயணத்திற்கு பின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது? வேறு எங்கெல்லாம் உங்கள் டிசைனை சமர்பித்துள்ளீர்கள்?

அமேரிக்காவின் ஆராய்ச்சி டாக்டர்கள் கமிட்டி, மலேசியாவில் ஒரு ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியது. ஜப்பானுக்கு அனுப்பியது போன்ற மற்றொரு ஆராய்ச்சி அறிக்கையை (MULTI PURPOSE AGRICULTURE RIDE என்ற தலைப்பில்) ஒரே மாதத்தில் தயார் செய்து அனுப்பினேன். அதுவும் தேர்வு செய்யப்படவே, என்னை மலேசியாவிற்கு அழைத்தனர். அதிலும் சிறந்த ஆராய்ச்சி அறிக்கை என்ற விருதை வாங்கினேன்.

பின்னர் சென்ற ஜூன் மாதம் உலகளவிலான ஒரு போட்டி “TECHNOLOGY UNIVERSITY OF MALAYSIA” வில் நடந்தது. எனது ரோபோவை அங்கு எடுத்து செல்லலாமென்று முடிவு செய்து, சுமார் 15 நாள், இரவு பகலாய் உழைத்து தயார் செய்தேன். எனது விண்ணப்பம் தேர்வாக, மீண்டும் மலேசியா சென்றேன்.

மலேசியா இரண்டாவது முறை சென்று, அங்கு சமர்பித்ததில், மிகுந்த வரவேற்பு கிடைத்தது. உடனே எனது டிசைனை அவர்கள் வெளியீடும் செய்தார்கள். அந்த போட்டியில் இரண்டாம் பரிசும், 25000 ரூபாய் பணமும் கிடைத்தது. பெரிய பதக்கமும், பதிப்புரிமையும் (COPYRIGHT) கொடுத்தார்கள். அங்கேயே சில நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் கொடுத்தனர். ஆனால் இந்தியாவில் தான் வேலை செய்ய வேண்டுமென மறுத்துவிட்டேன்.

சர்வதேச அளவில் தொடர்ந்து மூன்று விருதுகளை வென்றது எவ்வாறு இருந்தது? அடுத்த இலக்கு என்ன?

மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. மூன்று முறையும் வெளிநாடுகள் செல்வதற்கு எனது நண்பர்கள் தான் உதவி செய்தார்கள், அவர்களுக்கு இந்த வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

அடுத்த இலக்கு, 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமேரிக்காவில் “INTERNATIONAL YOUNG SCIENTIST AWARD” என்ற நிகழ்ச்சி ஒரு வாரமாக நடக்க இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி. பல பேராசிரியர்களின் வழிகாட்டலும், ஆலோசனைகளும் இதற்கு தேவை. ஒரு குழுவாக சேர்ந்து உழைக்க வேண்டும். அந்த விருதும் வாங்கிவிட்டால் உலகமே நம்மை திரும்பி பார்க்கும்.

உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

படித்தவர்கள் விவசாயத்திற்கு வரவேண்டுமென எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்து உண்டு. படித்தவர்கள் விவசாயத்திற்காக பெருமளவில் ஏதாவது செய்ய வேண்டும். மற்றைய நாடுகளை விட நாம் விவசாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். விவசாயத்திற்காக தேவையான பொருள்களை மலிவான விலையில் தயாரிக்க படித்தவர்கள் முயல வேண்டும். சீனா, ஏற்கனவே மலிவாக செய்வதால், அதை விட மலிவாக செய்ய நமக்கு சிறந்த தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. அதற்கு நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், அதிகம் தொழில்நுட்பத்தில் முன்னேறி நாம் இருக்க வேண்டும்.

எனக்கு ரோபோடிக்ஸ் துறை பிடிக்கும் என்பதால், நான் அதை கையில் எடுத்துள்ளேன். அது ஒரு மிகப்பெரிய துறை. ஆனால் இத்துறையில் என்னால் ஒரு 2 சதவீதமாவது மாற்றம் வரவேண்டுமென நினைக்கிறேன். ரோபோடிக்ஸை விவசாயத்தில் முடிந்தளவிற்கு கொடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளேன்.

இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பிடித்த துறையில் ஈடுபடவேண்டும். ஆர்வம் இருக்க வேண்டும். ஏதெனும் ஒரு வேலையில் சம்பாதிப்பதோடு நின்று விடாமல், நாட்டிற்கு ஏதெனும் நல்லது செய்ய வேண்டும் என்று கூடுதலாக ஒரு லட்சியத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் இளைஞர்கள் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். குறிப்பாக 25 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் நம் நாட்டில் தான் மிக அதிகம். அவர்கள் அனைவரும் இது போன்ற உயர்ந்த லட்சியத்துடன் உழைத்தால், 10 வருடத்தில் அல்ல, மூன்றே வருடத்தில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.

உங்கள் பார்வையில் தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சியிலும் நம் நாடு எவ்வாறு உள்ளது?

இன்றுள்ள நிலைமையில், தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதற்கு பதில், தொழில்நுட்பத்தை உபயோகபடுத்துவதோடு மட்டும் இருந்து, அதற்கு அடிமையாகி உள்ளோம். தேவையில்லாமல் பொழுதுபோக்குகளில் நேரத்தை கணினிகளிலும், கைப்பேசிகளிலும் வீணாக்குகிறோம். சீனாவில் சில பகுதிகளில் வீட்டிற்கு வீடு ஆய்வுக்கூடம் உள்ளது, ஆனால் நம் நாட்டில் சில கல்லூரிகளில் கூட ஆய்வுக்கூடங்கள் இல்லை.

இதுவரை எத்தனை தொழில்நுட்பத்தை நாம் கண்டுபிடித்துள்ளோம்? எத்தனை IIT க்கள், எத்தனை NIT க்கள், எத்தனை பெரிய பெரிய பொறியியல் கல்லூரிகள் உள்ளன, எத்தனை வளங்களும், திறமைகளும் உள்ளன?! இருந்தாலும் எத்தனை காப்புரிமைகள் (PATENTS) வருடத்திற்கு இதுவரை வாங்குகியுள்ளோம்? அமேரிக்காவில் ஒரு வருடத்திற்கு சுமார் 1700 காப்புரிமைகள் வாங்குகிறார்கள், நாமோ சராசரியாக ஒன்று மட்டுமே வாங்கும் சூழ்நிலையில் உள்ளோம். அப்படியெனில் நாம் எத்தனை பின் தங்கியுள்ளோம்?

தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது சமுதாயத்தில் உள்ள மனிதர்களுக்கு உதவதானே தவிர, நாமே பொழுதுபோக்கிற்காக அவற்றை பயன்படுத்தி, நம் நேரத்தை வீணடிக்க அல்ல. கல்வி முறையை குறை கூறுவதை தவிர்த்து, நம்மால் முடிந்ததை நாம் அனைவரும் செய்ய வேண்டும்.

நம் சமுதாயத்திற்கு நீங்கள் கூற விரும்புவது?

பணத்தை தேடி மட்டும் வாழ்க்கை போக வேண்டுமென ஒரு சமுதாயம் நினைத்தால், வரும் காலங்களில் எதுவும் செய்ய முடியாது. பணமும் முக்கியம், அதனோடு கூடவே சமுதாயத்திற்கு ஏதெனும் செய்ய வேண்டுமென லட்சியமும் வேண்டும். அதற்கு நிறைய உழைத்தாக வேண்டும். தேசிய சிந்தனை வேண்டும்.

பல லட்சம் பொறியாளர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கும் காரணம் இது தான். நாம் புதிதாக எதுவும் கண்டுபிடிப்பது இல்லை. வெளிநாட்டினரின் காப்புரிமை உள்ள பொருள்களை லைசன்ஸுடன் விலைக் கொடுத்து வாங்குகிறோம், மொத்தமாக, கும்பலாக பயன்படுத்துகிறோம். வெளிநாட்டினரும் நம்மை வைத்து நன்றாக சம்பாதிக்கின்றனர்.

IIT போன்ற பெரிய கல்லூரிகளில் இருந்து சிறந்த தேர்ச்சி பெறும் பல மாணவர்கள் வெளிநாடு சென்று விடுகின்றனர். வெளிநாடுகளில் பணம் அதிகம் தருவதற்கு காரணம் என்ன? நம் மூளை தான் அவர்களுக்கு வேண்டுமே தவிர, நாம் அல்ல. பணம் தான் பெரியது என்று சில இளைஞர்களும் கிளம்பி விடுகின்றனர். பணம் சிறிது குறைவாக கிடைத்தாலும் பரவாயில்லை, என் திறமையை வளர்த்துவிட்ட என் நாட்டிற்கு தான் என் அறிவு பயன்பட வேண்டுமென நாம் சேவை செய்ய வேண்டும், அதை நம் சமுதாயம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் சந்திக்கும் மாணவர்களிடம் இவற்றை சொல்கிறீர்களா? அவர்கள் மனநிலை எவ்வாறு உள்ளது?

நிறைய பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்கிறேன். மதிப்பெண்களுக்காகவும், பணத்திற்காகவும் கடமைக்கென பிராஜக்ட் செய்வதும், படிப்பதுமாய் இருக்கும் சில மாணவர்களை பார்த்தால் வேதனையாய் உள்ளது. கிட்டத்தட்ட 250 கல்லூரிகளுக்கு இதுவரை சென்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது அனுபவத்தை பகிர்ந்துள்ளேன்.

எனக்கும் கூட வெளிநாடுகளில் வேலை செய்யும் வாய்ப்புகள் சில வருகின்றன. நான் அதற்கு செல்ல விரும்பவில்லை. லட்சியத்திற்காக இங்கே இருக்க விரும்புகிறேன். சம்பாதிக்கலாம், ஆனால் சந்தோஷமாக இருக்க முடியுமா? என் நாட்டில், என் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறேன். நம் வாழ்க்கை நமக்கு பிடித்தார்போல் தான் இருக்க வேண்டும். பணத்திற்காக இந்த மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் இழக்க நான் விரும்பவில்லை. ஆத்ம திருப்தி வேண்டும், அது மக்களுக்காக பணி செய்யும்போது தான் நிறைய கிடைக்கிறது. அதுவே போதும், வாய்ப்பளித்தமைக்கு நன்றி..

Likes(23)Dislikes(0)
Share
Jan 152015
 

4

உடல் ஊனம் ஒரு தடை அல்ல, உள்ளத்தின் ஊனமே தடை என்பதை தன் வாழ்க்கையில் நிருபித்துக் காட்டியிருக்கிறார், சென்னையை சேர்ந்த 24வயது செல்வி பெனோசஃபைன். இரண்டு கண்களும் 100% பார்வையற்று இருந்தாலும், கடின உழைப்பின் மூலம் IAS ஆக உயர்ந்து நிற்கும் இவரை, B+ இதழின் இந்த மாத சாதனையாளராய் அறிமுகப் படுத்துவதில் மற்றற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

இவரைப் போன்ற சாதனையாளர்கள், உடல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி, நம்பிக்கை இழந்த சாமானியர்களுக்கும் பெரிய எழுச்சி தரும் சக்தியாக இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

இந்த நாடு எனக்கு வேலை தரவில்லை என்று சோம்பல் முறிக்கும் சில இளைஞர்களிடம் இவர் கேட்கும் சில கேள்விகள் சாட்டையடியாக இருப்பதோடு மட்டுமன்றி, இந்த உரையாடலை படிக்கும் அனைவருக்கும் உத்வேகமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இனி இவர் பேட்டியிலிருந்து..

கே: வணக்கம், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்.

வணக்கம், என் பெயர் பெனோசஃபைன். அப்பா சார்லஸ், இரயில்வே துறையில் பணிப்புரிகிறார். அம்மா மேரி பத்மஜா. அனைத்து இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தற்போது அறிவிக்கப்பட்ட ரிசல்டில் 343 ஆம் ரேங்கு வாங்கி தேர்வாகியதால், அடுத்து பயிற்சிக்கு செல்லவுள்ளேன்.

படித்தது பார்வையற்றோருக்கான லிட்டில் ஃபிளவர் கான்வென்டில். 2011 ஆம் ஆண்டு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பீ.ஏ. (ஆங்கில இலக்கியம்) படித்தேன். பின், லயோலா கல்லூரியில் 2013 ஆம் ஆண்டு எம்.ஏ. (ஆங்கில இலக்கியம்) படித்தேன். தற்போது பாரதியார் பல்கலைகழகத்தில் டாக்டரேட் படித்துக் கொண்டிருக்கிறேன். ஸ்டேட் பாங்கு ஆஃப் இந்தியாவில் பணிப்புரிந்துக் கொண்டிருக்கிறேன்.

கே: உங்கள் சிவில் சர்வீஸ் தேர்விர்கான பயணம் எவ்வாறு தொடங்கியது?

“எனக்கு கண் பார்வை இல்லாமல் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் IAS ஆக வேண்டுமென்ற தொலைநோக்கு பார்வை இருந்தது” என சின்ன வயதிலிருந்தே நான் அனைவரிடமும் கூறுவதுண்டு. நமது நாட்டின் பொருளாதாரம் ஏன் இப்படி உள்ளது, எவ்வாறு நாட்டை வளர்ச்சி அடைய செய்யலாம் என்று நம் நாட்டைக் குறித்த கேள்விகள் என் மனதில் எப்போதும் தோன்றும்.

நாம் ஒவ்வொருவரும் இந்நாட்டில் இருக்கும் வரை, நம்மால் முடிந்த ஏதாவது நல்ல பங்கினை அளிக்க வேண்டும். நம் நாட்டில் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் அனைவருக்கும் தேசபக்தியும் தேசத்தின் மீது பற்றும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த எண்ணம் எனக்குள் ஆழமாக என்றுமே இருந்து வருகிறது. இந்த மாதிரி சமுதாயம் குறித்த சிந்தனைகள் தான், என்னை IAS அதிகாரி ஆக வேண்டுமென்ற ஆசையை விதைத்தது என நினைக்கிறேன்.

கே: சமுதாயம் குறித்த விழிப்புணர்வை எவ்வாறு தெரிந்துக்கொள்வீர்கள்?

நம்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பேன். நிறைய தகவல்களை தினசரிகளின் மூலம் தெரிந்துக்கொள்வேன். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிய ஆரம்பிக்கும் போதுதான், நமக்குள் நல்ல தாக்கம் வரும்.

கே: IAS ஆகியவுடன் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு குறிப்பிட்ட சர்வீஸ் ஒதுக்கியப்பின் இரண்டு முதல் இரண்டரை வருடங்கள் வரை பயிற்சி இருக்கும். பயிற்சி முடிந்தபின், என்னால் எத்தனை சிறப்பாக செயலாற்ற முடியுமோ அனைத்தையும் செய்வேன். நான் இடும் ஒவ்வொரு கையெழுத்தும் ஒரு ஆக்கப்பூர்வமானதாக நிச்சயம் இருக்கும்.

கே: இந்தக் காலத்து இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது?

அவர்கள் கண்டிப்பாக அதீக திறமைகள் உள்ளவர்கள் தான். நம் நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு பிடித்ததை செய்வதில் தவறில்லை. ஆனால் அதே நேரத்தில், நாட்டில் என்ன நடக்கிறது, நாட்டிற்காக நாம் என்ன செய்யலாம், எப்படியெல்லாம் நாம் முழு செயல்திறனுடன் முன்னேறலாம் என்று யோசிக்க வேண்டும்.

வேலைக்குப் போகிறோம், சம்பாதிக்கிறோம், நன்றாக அனுபவிக்கலாம் என்று மட்டும் இருந்துவிடாமல், அதையும் தாண்டி நிறைய சேவை செய்து, சாதிக்கலாம். IAS மாதிரியான வேலைகளை தேர்வு செய்து, நாட்டிற்கு தேவையான நல்ல திட்டங்களை கொடுப்பதன் மூலம் மக்களுக்கு உதவி செய்யலாம் என்ற நல்ல மனநிலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக நம் நாட்டை நேசிக்க வேண்டும். நாட்டில் உள்ள உயர்ந்த விஷயங்களை வியந்து பார்க்க வேண்டும். இங்கு ஊழல் இருக்கிறது, பல பிரச்சினைகள் இருக்கிறது என்று கூறி நின்றுவிடாமல், இங்குள்ள நிறைய நல்ல சாதனைகளையும், சாதனையாளர்களையும் இளைஞர்கள் காணவேண்டுமென நினைக்கிறேன்.

கே: ஆனால் நம் இளைஞர்களுக்கு எத்தனை பிரச்சினைகள் உள்ளன? படிப்பு முடித்து பட்டம் வாங்கியவுடன் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. அவர்கள் பல சோதனைகளினால் சோர்ந்துவிடுகின்றனரே?

இந்த நாடு எனக்கு வேலை வாய்ப்பு தரவில்லை. நான் வேலையில்லா பட்டதாரியாக இருக்கிறேன் என்று கவலைப்படும் சில இளைஞர்களைப் பார்த்து கேட்கிறேன்.

முதலில் நாம் வேலைக்குத் தேவையான தகுதிகள் முழுதும் வளர்த்துக்கொண்டோமா? நாடு நமக்கு வேலை தரவில்லை என்று சொல்வதற்குமுன், அந்த வேலையில் சேரும் தகுதி நமக்கு முழுமையாக இருக்கிறதா என்று முதலில் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, வேலை வாய்ப்பை நாம் எவ்வாறு தேடுகிறோம்? கணினியில் உட்கார்ந்து வேலை வாய்ப்புக்கான இணைய தளங்களில் தேவையான நேரத்தை செலவிடுகிறோமா அல்லது சமூக வலைதளங்களில் பொழுதை வீணடிக்கிறோமா?

எத்தனை வேலை வாய்ப்பு செய்திகள் வருகிறது? எந்தெந்த செய்தித்தாள்களில், புத்தகங்களில் வருகிறது போன்ற தகவல்களை தேடி பின்பற்றும் ஒருவருக்கு தான் நம்நாடு எனக்கு வேலை தரவில்லை என்று சொல்கிற தகுதி இருப்பதாக நான் நினைக்கிறேன்.

கே: அப்படி என்றால் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்கிறீர்களா?

நான் மேலே கூறியது போல், ஒரு வேலை செய்யும் முழு தகுதியையும் நாம் வளர்த்துக்கொண்டால், அந்த வேலை கிடைக்கவில்லை என்றாலும், நாமாகவே ஓரு தொழிலையே உருவாக்கலாம். நம்நாட்டில் வேலை வாய்ப்புகள் இல்லை என சொல்வது மிகத்தவறு. இங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதை சரியான நேரத்தில், சரியான இடத்தில் சென்று பிடித்துக்கொள்ளும் பக்குவத்தையும் திறமையையும் நம் இளைஞர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

கே: தன்னம்பிக்கை வரும் வகையில் இளைஞர்களுக்கு என்ன அறிவுரைக் கூறுவீர்கள்?

அறிவுரை என்றில்லை. ஒரு தோழியாக சொல்கிறேன். தன்னம்பிக்கை என்பது நிறைய சாதனையாளர்களை பார்த்து ஒரு உந்துதளின் மூலம் பலசமயம் வரும், அதே நேரத்தில் நம் உள்ளத்திலிருந்தும் அது வரவேண்டும். என்றைக்கு என் வாழ்வில் நான் முடிவெடுக்க தயங்குகிறேனோ, என்றைக்கு என்னால் முடியாது என்று என்னை நானே குறைவாக மதிப்பிடுகிறேனோ, அன்றே நான் தோற்றுவிடிகிறேன். நான் இந்த வேலைக்கு லாயக்கு அல்ல, இது என்னால் முடியாது என்று சொல்கிற அளவு நான் தாழ்ந்து போகவில்லை என்ற உத்வேகம், தன்னம்பிக்கை, அனைவருக்கும் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

கே: உங்களுக்கு அந்தளவு தன்னம்பிக்கையும் வேகமும் வரக் காரணமாய் இருந்தது எது?

இயற்கையாகவே வந்த ஒரு விஷயமென்றும் சொல்லலாம். சிறு வயதிலிருந்தே, உன்னால் இந்த விஷயத்தை செய்ய முடியாதென்று யாராவது சொன்னால், கண்டிப்பாக அதை செய்து முடித்து விடுவேன். மேலும், எனது குடும்பமும், உறவினர்களும், நண்பர்களும் முக்கிய காரணம். நாம் ஒரு வேலையை நன்றாக செய்யும்போது, அதை பலர் பாராட்டுகையில், அந்த வேலையை இன்னும் சிறப்பாக செய்ய முடிகிறது.

5

கே: எத்தனை தூரம் சுயமாக ஊக்கப்படுத்திக் கொண்டாலும், பிராக்டிக்கலாக உள்ள பெரும் சவாலை நினைத்து, ஏதாவது ஒரு தருணத்தில் வருந்தியது உண்டா? அத்தனை சோதனைகளையும் தாண்டி எவ்வாறு வெற்றிக் கண்டீர்கள்?

நான் என்றுமே ஒரு குறைப்பாடு என்னிடம் உண்டு என்று கவலைப்பட்டதே இல்லை. நம்மிடம் அது இல்லை, இது இல்லை என்று கூறி வருத்தப்படுவதை விட, இத்தனை நல்ல விஷயங்கள் இருக்கிறது என்று அதைக்கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று எப்போதுமே பாஸிட்டிவான அணுகுமுறையில் தான் இருப்பேன்.

ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்க கூடிய உரிமை மட்டுமே என்னிடம் இருக்கிறது என என்றுவரை நினைக்கிறேனோ, அன்று வரை நல்ல முடிவுகள் மட்டும் தான் எடுப்பேன்.

சிலர் கேளி கிண்டல் எல்லாம் எவ்வாறு கடந்து வந்தீர்கள் எனக் கேட்பார்கள். எனக்கு அதுபோல் யாரும் கேளி செய்ததாக நியாபகம் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை வந்ததாகக் கூட தெரியவில்லை. ஏனெனில் நான் அவைகளை பெரியதாக எடுத்துக்கொண்டதும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என் தகுதி மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. என்னைப் பற்றி குறைவாக சான்றளிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்ற மனநிலை இருந்தால், இந்த மாதிரியான விஷயங்களுக்கு நாம் நேரம் கொடுக்கமாட்டோம்.

கே: IAS படிப்பிற்கு கடின உழைப்புடன், நிறைய படிக்க வேண்டுமென சொல்கிறார்களே? அதைப் பற்றி?

IAS பரீட்சைக்காக இவ்வாறு படித்தேன், அவ்வாறு படித்தேன், எந்த விழாக்களுக்கும் செல்லாமல் தியாகம் செய்தேன், இப்படியெல்லாம் சொல்வார்கள். பரீட்சைக்காக எதையும் நான் பெரிதாக இழக்கவில்லை. வேலைக்கு சென்றுக்கொண்டே தான் படித்தேன். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் தான் படிப்பேன். ஒருநாளில் படித்தது கொஞ்சம் தான் என்றாலும் மிகவும் ஈடுபாட்டுடன் படிப்பேன். படித்த விவரங்களை நன்றாக புரிந்துக்கொண்டு, ஆய்வு செய்து, தொகுத்து விளக்கமாக சொல்கின்ற அளவிற்குப் படிப்பேன்.

கே: IAS தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்கு நீங்கள் தரும் அறிவுரைகள்?

IAS தேர்விற்கு தன்னை தயார் செய்ய வேண்டும் என்று ஒருவர் நினைத்தலே பெருமையான விஷயம் தான். மேலும் அந்த முடிவை முழு நம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் எடுத்து செல்லும்போது வெற்றி நிச்சயம்.

கே: உடல் ரீதியாக எந்தக் குறையும் இல்லாத சிலர், தங்களிடம் அந்த பிரச்சினை உள்ளது, அது இல்லை என பலக் காரணங்களை காட்டி சவால்களை ஏற்க தயங்குகின்றனர். அவர்கள் அந்த எண்ணத்தை உடைப்பதற்கு சில உபாயங்கள் கூறுங்களேன்..

மனரீதியில் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு வயது குழந்தைக்குக் கூட சுயமரியாதை இருக்கிறது. அப்படி இருக்கையில் எந்த ஒரு சின்ன விஷயமும் என்னை தோற்க்கடிக்கும் அளவிற்கு நான் அத்தனை சாதாரன ஆள் இல்லை என முழுமையாக நம்புங்கள். என் வாழ்வில் என்னைக் கீழே தள்ளுவதற்கு என்னை உட்பட எவருக்குமே அதிகாரம் கிடையாது. அப்படி இருக்கையில், ஒரு கஷ்டம் என்னை கீழே இழுத்தது, ஒரு பெரிய சவால் வந்ததும் நான் தோற்றுப் போய்விட்டேன் என்று சிலர் சொல்வதை ஏற்க முடிவதில்லை.

மிகவும் எளிமையாக சொல்கிறேன்.

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி” போன்ற வரிகளை நினைத்துப் பாருங்கள். உங்களிடம் உள்ள தனிப்பட்ட சிறந்த விஷயங்களை வைத்து மேலே வாருங்கள். எத்தனை தூரம் சூழ்நிலை நம்மை பின்னே தள்ளுகிறதோ, அத்தனை தூரம் முன்னே வருவேன் என்ற வேகம் வேண்டும்.

ஒரு ஹெலன் கெளர், என்னால் பார்க்க முடியாது, கேட்க முடியாது என்று நினைத்து இருந்தால், அவரது சாதனைகள் எதுவுமே நடக்காமல் போயிருக்கும்.

ஒரு காந்திஜி, என்னால் பேச முடியவில்லை, எனக்கு எந்த ஆதரவு இல்லை, போராடினால் கைது செய்துவிடுவார்கள், இப்படியெல்லாம் அன்று நினைத்து இருந்தால், இன்று காந்தீய கருத்துக்கள் இல்லாமலே போயிருக்கும்.

எல்லா வெற்றியாளர்களுக்குப் பின்னும் மிகப்பெரிய நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இருந்துள்ளது. இது இரண்டும் இருந்தால், எந்த மாதிரியான மனரீதியான பிரச்சினைகளையும் தாண்டிவிடலாம். சவால்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால், வாழ்க்கையில் சுவை இருக்காது. அந்த சவால்களை எதிர்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கே: நமது சமுதாயத்திற்கு ஏதெனும் கருத்து சொல்ல நினைக்கிறீர்களா?

சமுதாயம் எப்போது ஆரோக்கியமாக இருக்குமென்றால், அறநெறிகளை கடைபிடிக்கப்படும்போது தான். முழுமனதோடு அடுத்தவர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்ற கேள்விக்கு விடையளித்துக் கொண்டே, தனக்குள்ள இலக்குகளை அடையும் தருணம் ஒரு சிறந்த சமுதாயத்தின் துவக்கமாக இருக்குமென நினைக்கிறேன்.

கே: இந்தியா வரும் ஆண்டுகளில் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?

எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அனைவருக்கும் நல்ல வேலை இருக்க வேண்டும். அவற்றை உருவாக்கி தரும் தகுதியும், வேலை செய்யக் கூடிய ஆற்றலும் அனைவருக்கும் இருக்க வேண்டும். தொழிற்சாலைகள் வளர்ச்சியுடன் கூடவே, அறநெறிகள் நிறைந்த சமுதாயமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை. நம்பிக்கை தானே எல்லாம்.

கே: IAS ஆக வேண்டும் என்று விரும்பி ஆகிவிட்டீர்கள், அடுத்த நோக்கம் என்ன?

IAS ஆக வேண்டும் என்பது தொடக்கமே தவிர, முடிவள்ள. இது தான் செய்யணும் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் என்னை அடைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் செய்கின்ற வேலையில் என்னால் முடிந்தளவிற்கு சிறப்பாக செய்ய விரும்புகிறேன்.

கே: உங்களுடனான இந்தப் பேட்டி நிறைய மனிதர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் நேரத்திற்கு நன்றி..

மிக்க நன்றி. Bepositive என்ற உங்கள் இணைய தளத்தின் தலைப்பு நன்றாக உள்ளது. பாஸிட்டிவ் அணுகுமுறை தான் வாழ்க்கை. பேசுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

Likes(6)Dislikes(0)
Share
Dec 132014
 

4

பல தலைமுறைகளாக விவசாயத்தை மட்டுமே சார்ந்து இருந்த பல விவசாயிகள் கூட தங்களது நிலத்தை விற்று விடக்கூடிய இன்றைய சூழ்நிலையில், விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பி கிட்டத்தட்ட 150 ஏக்கரில் மகத்தான  சாதனை புரிந்துள்ளார் லியோ ஆர்கானிக் பண்ணையின் உரிமையாளர் திரு.பாரதி.

வியப்பாக இருக்கிறதல்லவா? அதுவும், முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் ஒருவர் மகசூலில் பல சாதனைகள் புரிந்து வருகிறார் என்றவுடன் அவரையும், அவர் தோட்டத்தையும் காண மிக ஆவலுடன் சென்றேன். B+ இதழின் இந்த மாத சாதனையாளராய், அவரைப் பேட்டி எடுக்கலாமா என்றவுடன், மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றார்.

இவரது பண்ணை இருக்கும் இடம் காவேரிராஜபுரம். திருவள்ளூர் மாவட்டத்தின்,  திருவாலங்காட்டுப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அமைதியான மிக ரம்மியமான இந்த தோட்டத்தை எட்டியவுடன், சென்னையிலிருந்து 50கிமிக்கு மேல் பயணம் செய்து வந்த களைப்பு காணாமல் போய்விடுகிறது.

மா, பலா, சப்போட்டா, கொய்யா, நெல்லி போன்றவை காய்த்துக் குலுங்கி,  இயற்கை அழகு கொஞ்சி விளையாடும் இந்த தோட்டம், நம் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மயில்கள், வாத்துகள், கினிக்கோழிகள், சண்டைக்கோழிகள், வான்கோழிகள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடு மாடுகள் என பல உயிரிணங்கள் வாழும் ஒரு சிறு சரணாலயமாகவும் உள்ளது. இனி இவருடன் பேட்டியிலிருந்து..

 

கே: வணக்கம் சார், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்

வணக்கம் சார், என் பெயர் பாரதி. என் தம்பி சரவணன். நாங்கள் இருவரும் காவிராஜபுரத்தில் அங்ககப் பண்ணை வைத்து, இயற்கை முறையில் விவசாயம்   செய்துக் கொண்டிருக்கிறோம். 1997 ஆம் ஆண்டில் இந்த ஃபார்ம் ஹௌஸை வாங்கினோம். அப்போது இந்த இடம் முழுவதும் காடுமேடாகவும், கூழாங்கள் நிரம்பியும் இருந்தது. கடின உழைப்புடன் இந்த நிலையில் மாற்றியுள்ளோம்.

எங்களது பரம்பரைத் தொழிலே விவசாயம் தான். கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் டர்னர் பயிற்சி முடித்து, எங்கள் சிறுதொழில் நிறுவனத்தில் வேலை செய்தேன். விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் என்னை முழுநேர விவசாயி ஆக்கிவிட்டது. விவசாயம் செய்துக்கொண்டே, இப்போது கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாய பட்டையப் படிப்பும் (BFT) படித்து வருகிறேன்.

 

கே: இந்த இயற்கை முறை விவசாயம் செய்ய உங்களுக்கு தூண்டுதலாக இருந்த விஷயம் எது?

இரசாயனம் முறையில் செய்யும் விவசாய உணவு, உடல் ரீதியாக பல கேடுகள் விளைவிக்கிறது. எங்கள் அண்ணன் இறந்ததற்கு முக்கிய காரணமாக இரசாயனங்களை மருத்துவர்கள் குறிப்பிட்டனர். அது பெரிய தாக்கத்தை எனக்கு ஏற்படுத்தியது. அத்தகை இரசாயனங்கள் இல்லாத உணவுகளை நம் சமூகத்திற்கு வழங்கவேண்டும் என நினைத்து தான், இந்த பயணம் தொடங்கியது.

அதனால், ஆரம்பித்தலிருந்தே யூரியா, பூச்சிமருந்து, உரம் என எதுவும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசின் அங்கக சான்றளிப்புத் துறையில் மாநில அவார்டு வாங்கிய முதல் பண்ணையும் நம்முடையது தான்.

 

கே: உரம் போட்டு வளர்க்கும் முறையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இப்போது எங்கள் பண்ணையிலேயே 300 மூட்டை யூரியாபோட்டு விவசாயம் இந்த வருடம் செய்யலாம் என வைத்துக்கொள்ளுங்கள். செடியும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் இதில் இரண்டு பிரச்சினைகள் உள்ளது. ஒன்று அடுத்த வருடமும் அதே 300 மூட்டை யூரியாபோட வேண்டும், இல்லையேல் உற்பத்தி குறைந்துவிடும், இரண்டாவதாக, விளைச்சலும் இயற்கை விவசாயம் அளவிற்கு தரமுடன் இருக்காது.

5

கே: உங்கள் பண்ணை பற்றியும் நீங்கள் செய்யும் இயற்கை முறை விவசாயத்தைப் பற்றி கூறுங்கள்.

எங்கள் தோப்பில் சுமார் 200 வகை மரங்கள் உள்ளன. அனைத்து மரங்களுக்கும் தண்ணீர் பைப் லைன்கள் போடப்பட்டு, சொட்டுநீர்ப் பாசன வசதி செய்துள்ளோம். தோப்பு முழுவதும் சுற்றிப்பார்க்க சாலை வசதிகளும் செய்துள்ளோம். இயற்கை  முறையில் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம்வைத்து தான் விவசாயமே செய்கிறோம்.

எங்களது தோப்பில் உள்ள ஒவ்வொரு மரத்தின் அருகிலும் சென்று பார்த்தால், ஒவ்வொரு அடி அளவிற்கு மண்புழு வளர்த்துள்ளோம். ஒரு மரத்திலும் கிட்டத்தட்ட 200 கிலோ இலைகள் இருக்கும், இவை அனைத்தும் அடுத்த வருடத்திற்குள் அதே இடத்தில் கீழே கொட்டி விடும். அத்தனை இலைகளில் இருந்தும் குறைந்தது 50 கிலோ உரமேனும் வரும். ஆக அந்த மரத்தின்  தேவையான சத்து அந்த மரத்தருக்கிலேயே கிடைத்து விடுகிறது.இந்த தோட்டத்து பழங்கள் முழுதும் இயற்கை விவசாயத்தில் செய்ததினால், அதன்  ருசியும் அதிகமாக இருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் மிக உகந்ததாக இருக்கும், வாசனையுடன் அதிக நாட்கள் அழுகாமலும் இருக்கும்.

 

கே: இலைக் கொட்டாத நேரத்தில் எவ்வாறு உரம் வரும்?

எங்களிடம் 300 ஆடுகள், 25 மாடுகள் உள்ளன. இவை அந்த மரங்கள் அருகில் சென்று சாணம் போடும். அவை உரமாக இருக்கும். மாடுகள் பாலுக்காக வளர்க்கபடும் ஜெர்சி பசுக்கள் அல்ல. அத்தனையும் விதவிதமான மாடுகள். இவைகளின் சாணம், கோமியம் எங்களுக்கு மிக முக்கியம். எங்கள் மாடுகளின் கோமியத்‌தில் கிட்டதட்ட 65% யூரியா இருக்கும். இதே போல் ஆடுகளும் பல விதப் பட்டவை. இந்த ஆடுகளும் மாடுகளும் உரங்களுக்காகவே பல மாநிலங்களில் இருந்து வரவைத்துள்ளோம்.

 

கே: மற்ற விலங்குகளெல்லாம் எதற்கு?

சில குதிரைகளை வைத்துள்ளோம். இத்தனை பெரிய பண்ணயை சுற்றி பார்க்க, பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்தாமல்,காற்று மாசுபடாமல் இருக்க, இந்த குதிரைகள் மீதேறி சுற்றி பார்ப்போம்.

நம் தோட்டத்தில் மாம்பழ சீசனில் மாம்பழம் வாங்குவதற்கு நிறைய பேர் வருவார்கள். பள்ளிகளிலிருந்து மாணவர்கள், பொதுமக்கள் என ஒரு நாளில் 400-500 பேர் கூட வருவார்கள். மதிய உணவு கூட எடுத்து வருவார்கள், பார்வையாளர்கள் தோட்டத்திற்குள் சென்று நிறைய மாம்பழங்களை வாங்கிச் செல்வார்கள். அந்த மாம்பழங்களை தோட்டத்தில் இருந்து வாயில் வரை சுமந்து செல்வதற்கு, கழுதைகளையும் வளர்க்கிறோம். புகை பிடிப்பதையும், ப்ளாஸ்டிக் பொருள்களையும் பார்வையாளர்களிடம் அனுமதிக்க மாட்டோம்.

அது மட்டுமன்றி இரு ஒட்டகங்களும் வளர்க்கிறோம். நம் தோட்டத்து வேலியை சுற்றி தேவையில்லாத சிறு சிறு செடிகள் முளைக்கும். இந்த செடிகளை ஆடு மாடுகள் மேயாமல் விட்டுவிடும். அத்தகைய வேண்டாத செடிகளை மட்டும் இந்த ஒட்டகங்கள் சாப்பிட்டுவிடும். வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை இருக்கும் இந்த தருணத்தில், கிட்டத்தட்ட இரண்டு ஆட்கள் செய்யும் வேலையை ஒரு ஒட்டகம் செய்கிறது. ஒட்டகங்களின் சாணமும் ஒரு முக்கிய பூச்சிக்கொல்லியாய் இருக்கிறது.

பின், வாத்துக்கள், மயில்கள், வான்கோழிகள் பார்வையாளர்களின் கண்களை கவர்ந்து மகிழ்விக்க வளர்க்கிறோம். சிறு பூச்சிகளையும் இவைகள் தின்று விடும்.

 

கே: வேறு என்ன சிறப்பு இந்த தோட்டத்தில் உள்ளது?

எங்கள் தோப்பில் 5ஏக்கர் மூங்கில் மரங்கள் வைத்துள்ளோம். ஒரு ஏக்கர் மூங்கில் மரங்கள் கிட்டத்தட்ட 40டன் ஆக்ஸிஜனை  ஒருநாளில் தருகின்றன. 5ஏக்கர் மரங்களிலிருந்து 200டன் ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதனால் நம் தோப்பை முழுதும் சுற்றிப் பார்ப்பவர்களுக்கு, சுத்தமான ஆக்ஸிஜன் உடலில் உள்ளே சென்று, மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவர்.

தோப்பிற்கு வெளியிலிருந்து விவசாயத்திற்கு நாங்கள் எந்தப் பொருளும் வாங்கிக் கொண்டுவருவதில்லை. அனைத்தும் இந்த தோப்பிலேயேக் கிடைக்கிறது. சூரிய சக்தி மூலம் பம்புசெட்டுகளை இயக்குகிறோம். தோட்டத்தை சுற்றி முக்கியமான இடங்களில் கேமராக்கள் வைத்து பாதுகாப்பை மேற்கொண்டுள்ளோம். இத்தனை பெரிய தோட்டத்தை பராமரிக்க 2-3 ஆட்கள் இருந்தால் போதும் என்ற நிலை உள்ளதால் தான், இதை தானியங்கி தோட்டம் என்கிறோம்.

 

கே: இந்த விவரங்களையெல்லாம் எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள்?

இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும், கண்காட்சிகளிலும் கண்டிப்பாக கலந்துகொள்வேன். இது தொடர்பாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு சென்றுள்ளேன். இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து, ஜோர்டான், பெத்லஹாம், இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று அவர்கள் எவ்வாறு செய்கின்றனர் என்றும், அவர்களின் தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொண்டேன். பூச்சி மருந்தில்லாமல், எவ்வாறு செய்கிறார்கள் என்பதையும் அறிந்தேன். கற்றுக்கொண்ட அந்த விவரங்களை நம் தோட்டத்தில் அறிமுகம் செய்கிறேன்.

 

கே: இதை ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுத்தருகிறீரளா?

கண்டிப்பாக. இந்த இயற்கை விவசாய முறையை நம்மிடம் கற்றுக்கொள்ள பல  ஊர்களிலிருந்து, ஆர்வமுடன் நமது தோட்டத்திற்கு பலர்  வருவார்கள். அவர்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுத்து, அவர்களும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஊக்கமளிப்போம். காலையில் வந்தால், மாலை வரை இருந்து செல்வார்கள்.

 

கே: பல ஊர்களுக்கு சென்று கற்று வந்தவைகளில் முக்கியமான விஷயமாக  நீங்கள் உங்கள் தோப்பில் செய்வது எதை?

பொதுவாக நம் ஊரில் செய்யும் தவறு – மரத்தை சுற்றி மட்டுமே, மூன்றடி வட்டத்தில் தண்ணீர் ஊற்றி நிறுத்திவிடுவார்கள். அதனால், வேர்கள், அதே இடத்தில் நின்றுவிடுகிறது. நாங்கள் மரங்கள் எத்தனை தூரம் விரிந்து பரந்துள்ளதோ அத்தனை தூரம் வரை வட்டமிட்டு தண்ணீர் பாய்ச்சுவோம். இதனால் வேர்கள் நன்றாக விரிந்து பரந்து வளர்கினறன. பெரிய காற்று அடிக்கும்போதும் கூட, எங்கள் மரங்கள் மட்டும் விழாமல் நிற்பதற்கு வலுவான இந்த வேர்கள்தான் காரணம்.

மக்களுக்கு பயிற்சி தருவதன் முக்கிய நோக்கமே, நம்மைப் பார்த்து, அவர்களும் இயற்கை முறை விவசாயத்தை கையாள வேண்டும் என்பதே. விஷமற்ற உணவை அவர்களும் தயாரித்து, அவர்களும், மற்றவர்களும் பயன்படுத்தவேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு பூச்சிமருந்து இல்லாத நல்ல உணவுமுறை சென்றடைய வேண்டும். இதை ஒரு சேவையாக எடுத்துக்கொண்டு எத்தனை மக்கள் வந்தாலும் பயிற்சி தருகிறோம்.

 6

கே: உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி..

ஏற்கனவே கூறியதுபோல், எங்கள் தோட்டம் இந்த மாவட்டத்தில், தமிழக அரசின் அங்கக விவசாயச் சான்று பெற்ற முதல் தோட்டமாகும்.

மேலும் 18மாதத்தில் 4000 நெல்லிக்காய் காய்க்க வைத்து விருது வாங்கினோம்.

திரு.நம்மாழ்வாரும் நம் தோட்டத்திற்கு வந்து பார்த்து பாராட்டிவிட்டுச் சென்றார். சமீபத்தில் கூட கோவை வேளான் கல்லூரியின் துனை வேந்தர் வந்து பார்த்து பாராட்டிச் சென்றார். டெல்லியிலிருந்து சில அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். தமிழ்நாட்டு அதிகாரிகளும் வந்தனர்.

பசுமை ரத்னா என்ற விருது கொடுத்தார்கள். பச்சையப்பன் கல்லூரியில் நம்மாழ்வார் விருது கிடைத்தது. பல கல்லூரிகளிலிருந்து விருதுகளும் கிடைத்துள்ளது.

Likes(15)Dislikes(1)
Share
Jul 142014
 

 

5

ஒரு முறை மீயாப்பூரில் [ஐதராபாத்] உள்ள எனது நண்பர் இல்லத்திற்கு சென்று இருந்தேன். அவர் வீட்டு அருகில் உள்ள மூன்று மாடி நீர் சேமிப்புத் தொட்டி அருகில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.

விசாரித்ததில், திரு.ஸ்ரீநிவாசன் என்பவர், “பொட்டுக்குச்சி சோமசுந்தர சாஸ்திரி ட்ரஸ்ட்”

என்ற தொண்டு நிறுவனத்தை அங்கு நடத்தி வருகிறார் என்றும், அந்நீர் தொட்டி, வறுமை கோட்டிற்கு கீழிருக்கும் மாணவர்களுக்கு ஓர் டியுஷன் சென்டராக பயன் படுகிறது என்றும் தெரியவந்தது. அது மட்டுமில்லாமல், பல பொறியாளர்களை உருவாக்கும் பட்டறையாகவும் உள்ளது என்ற தகவலும் கிடைத்தது.

மிகவும் ஆச்சரியமான ஒரு சேவையாக இருக்கிறதே! என்றுத் தோன்றவும், நமது B+ பற்றியும், அவரின் சேவையைப் பற்றியும், B+ இதழில் எழுத அவரை சந்திக்கலாமா என்று கேட்டவுடன், உடனே ஒத்துக்கொண்டார். அந்த பேட்டியே இந்த பதிவு.

B+: ஐயா, உங்கள் ட்ரஸ்ட் பற்றி எங்கள் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துங்களேன்.

ஸ்ரீநிவாசன்:  “நான் இந்த ட்ரஸ்ட்டின் நிர்வாகி மற்றும் தலைவர். இந்த ட்ரஸ்ட்டின் குறிக்கோள் வறுமை கோட்டிற்கு கீழிருக்கும் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி, தொழிற்கல்வி கொடுத்து, அவர்களை  வறுமை கோட்டிற்கு மேல் கொண்டுவரவேண்டும் என்பது தான்.”

B+: உங்களைப் பற்றி, உங்கள் குடும்பத்தைப் பற்றி, இந்த ட்ரஸ்ட்டை தொடங்க வேண்டிய எண்ணம் ஏற்பட்ட நிகழ்வு பற்றியும் சில வரிகள்..

ஸ்ரீநிவாசன்: “எனது பூர்விகம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி கிராமம். எனது தந்தையார் மாநில மற்றும் தேசிய அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றவர். (சிரித்துக் கொண்டே..)ஆனால் எனக்கு படிப்பு ஏறவில்லை. நான் ஐ.டி.ஐ படித்துவிட்டு ஓர் பன்னாட்டு உற்பத்தி தொழிற்சாலையில் மெஷினிஸ்டாக (MACHINIST) வேலை செய்யத் தொடங்கினேன். பிறகு தொலைதூர கல்வி முறையில் எனது படிப்பைத் தொடர்ந்தேன். 1990-இல் எனக்கு திருமணம் ஆனது. நானும் எனது மனைவியும் எங்களுக்கென்று குழந்தைகள் தேவை இல்லை என முடிவு செய்து, சிறு சிறு சமுதாயப் பணிகள் செய்யத் தொடங்கினோம்.

என்னுடய தந்தை காலமான பின் வந்த முதல் நினைவு தினத்தில்(திதி) ஏழைக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று எண்ணி எனது வீட்டின் அருகினில் உள்ள அரசு பள்ளிக்குச் சென்றேன். அதன் பின் ஏற்பட்ட சில நிகழ்வுகளால் பணியில் இருந்து விருப்ப ஓய்வுப் பெற்று வெளியில் வந்து இந்த ட்ரஸ்ட் நடத்தி வருகிறேன்.”

B+: என்ன நிகழ்வு என்ன காரணம் என்று சிறிது விவரமாக சொல்ல முடியுமா?

ஸ்ரீநிவாசன்: “கண்டிப்பாக. என் தந்தையின் நினைவு தினத்தன்று எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா மற்றும் சில பொருட்கள் கொடுத்து வீடு திரும்பினேன். ஒரு வாரம் கழித்து அந்த மாணவர்களை சந்தித்து நான் கொடுத்த பொருட்களினால் ஏதாவது நன்மை இருக்கிறதா என தெரிந்து கொள்ள அந்த பள்ளிக்குச் சென்றேன்.

அவர்கள் கல்வி பயில நான் கொடுத்த பொருட்கள் ஒன்றும் உதவி செய்யவில்லை என்றுத் தெரியவந்தது. ஏனென்றால், அவர்கள் படிக்க முடியாததற்கு காரணம் அவர்கள் வாழும் சூழல் தானே தவிர பொருட்கள் இல்லாமை அல்ல என்று விளங்கியது. எனவே, அவர்கள் படிப்பதற்கு ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் விளைவே 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ட்ரஸ்ட்.”

B+:  படிப்பதற்கான சூழல் என்றால்? கொஞ்சம் விளக்கமாக சொலுங்களேன்.

ஸ்ரீநிவாசன்: “பெற்றோர்களுக்குக் கல்வியின் அவசியம் தெரியாதக் காரணத்தினாலோ,  வறுமையின் காரணத்தினாலோ இந்த மாணவர்கள் வீட்டிற்கு சென்றவுடன் வேறு வேலைக்கு அனுப்ப படுகிறார்கள். பெண் பிள்ளைகள் அம்மாவுடன் வேறு வீடு வேலை செய்யவேண்டி வரும், ஆண் பிள்ளைகள் அப்பாவுடன் கடைகளுக்கு செல்ல வேண்டிவரும். இல்லையெனில் வீட்டில் மின்சாரம் இருக்காது, அக்கம் பக்கத்தில் குடித்து விட்டு வருபவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் என பல விஷயங்களால் ஏழ்மையினில் உள்ள மாணவர்கள் படிப்பினில் கவனம் செலுத்த முடிவதில்லை. இந்த பிரச்சினையை எங்கள் ட்ரஸ்ட் முடிந்த அளவிற்கு சரி செய்ய முயற்சிக்கிறது.”

B+: ட்ரஸ்டில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் தின நிகழ்வுகள் குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.

ஸ்ரீநிவாசன்: “ஒன்பதாம் வகுப்பு அறையாண்டுத் தேர்விற்குப் பிறகு மாணவர்களை எங்கள் ட்ரஸ்டிற்கு அழைக்கிறோம். பள்ளி முடிந்து தினமும் 3 முதல் 4 மணிநேரம் வரை இங்கு வந்து படிக்க வேண்டும். இங்குள்ள ஆசிரியர்களும் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். சனி, ஞாயிறு, மற்றும் அனைத்து விடுமுறை நாட்களிலும் இங்கு வந்து விட வேண்டும். 10ம் வகுப்புத் தேர்விற்க்கும் பயிற்சி கொடுக்கிறோம். 10ம் வகுப்பு முடித்தவுடன், அரசு பாலிடெக்னிக்கில் சேர நுழைவு தேர்வு பயிற்சி அளித்து, அத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சிப்பெற்றால், அவர்களை பாலிடெக்னிக்கில் சேர்த்து விடுகிறோம். பாலிடெக்னிக் ஃபீஸ் ட்ரஸ்ட்டே கட்டிவிடும். பாலிடெக்னிக் முடித்த உடன், அதிக மதிப்பெண் இருந்தால் அரசு பொறியியல் கல்லூரி நுழைவு தேர்வு எழுதி சேர பயிற்சி கொடுக்கிறோம்.

ஆக, இந்த ட்ரஸ்ட்டிற்கு ஒரு மாணவன் 9ம் வகுப்பில் வந்து ஒழுங்காக படித்தால் பாலிடெக்னிக் அல்லது பொறியியல் கல்லூரி படிப்பு வரை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.”

B+: பள்ளி முடிந்து இங்கு வந்து தினமும் 3 முதல் 4 மணிநேரம் வரை இங்கு படிக்க வேண்டும் என்றால், மாணவர்கள் 6 அல்லது 7 மணிக்குத்தான் வீட்டிற்கு கிளம்புவார்களா? கொஞ்சம் கஷ்டம் இல்லயா?

ஸ்ரீநிவாசன்: “கஷ்டம் தான். கஷ்டப் படாமல் என்ன கிடைக்கும். இங்கு வரும் மாணவர்களுக்கு மாலையில் டீ, பிஸ்கட் மற்றும் இரவு உணவு கொடுத்தே வீட்டிற்கு அனுப்புகிறோம். வீட்டிற்கு குறிப்பிட்ட தூரம் வரை ஆட்டோவில் கொண்டு விடுகிறோம்.”

B+: நீங்கள் கூப்பிட்டவுடன் மாணவர்கள் வருகிறார்களா??

ஸ்ரீநிவாசன்: “தொடக்க காலத்தில் யாரும் வரவில்லை. நான் தினமும் அவர்களின் வீட்டிற்கு சென்று கல்வியின் அவசியத்தை எடுத்து சொல்லி பல அவமானங்கள் மற்றும் சிரமங்களுக்குப் பின் சிலர் வந்தனர். எங்களின் நோக்கம் உண்மையானது என்றும் அவர்களிடம் சில குறைகள் உள்ளது என்றும் புரிய ஆரம்பித்ததும்  வர ஆரம்பித்தனர்.”

6

B+: இப்போது எத்தனை மாணவர்கள் உங்கள் ட்ரஸ்டிர்க்யூ வருகிறார்கள்?

ஸ்ரீநிவாசன்: “350 மாணவர்கள்.”

B+: உங்கள் ட்ரஸ்டிற்கு ஆகும் செலவு பற்றி சொல்ல முடியுமா?

ஸ்ரீநிவாசன்: “உணவு, போக்குவரத்து, கரண்ட் பில், ஃபீஸ், மற்றும் ஆசிரியர் சம்பளம்.”

 

B+: இந்த செலவிற்கு வருமானம்?

ஸ்ரீநிவாசன்: “நான் இங்கு கடந்த 25 ஆண்டுகளாக உள்ளேன். 17 வருடங்களுக்கு மேலாக என் வேலையை இங்குள்ள மக்கள் பார்க்கிறார்கள். அவர்களிடம் இருந்து மாத மாதம் நன்கொடைப் பெற்றே இந்த பணியினை செய்கிறேன். இப்பொழுது நாகார்ஜுனா ஃபௌண்டேஷன் [Nagarjuna Foundation] மற்றும் யூத் ஃபார் சேவா [Youth For Sewa] போன்ற  அமைப்புகள் வெல்ஸ்ஃபார்கோ (Wellsforgo) போன்ற சில நிறுவனங்கள் எங்களுக்கு உறுதுணையாக உள்ளது.

உங்கள் நேயர்கள் கூட எங்களுக்கு உதவ விரும்பினால் எங்கள் வெப் சைட்டினைப் http://www.psstrust.org/ பார்க்கவும். இந்த வலைதளம் எங்கள் மாணவர்களால் உருவாக்கப் பட்டது

அதில் பிழைகள்இருக்கலாம்பொய்இருக்காது.

B+: ஐயா, நமது உரையாடலை bepositivetamil.com என்னும் தமிழ் இனைய இதழில் வெளியிடுவேன். எங்கள் தமிழ் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

ஸ்ரீநிவாசன்: “கருத்து சொல்லும் அளவிற்கு நான் பெரிய மனிதன் கிடையது. மேலும் மொழி என்பது கருத்தைப் பரிமாறி கொள்ளத் தானே தவிர மோதிக் கொள்ள அல்ல. தமிழர், தெலுங்கர், இந்திகாரர் என எந்த பெயரிட்டு அழைத்தாலும் நாம் மனிதர்களே. எனவே சக மனிதனை மனிதனாக பாவித்து அவர்கள் கஷ்டப்பட்டால் நம்மால் முடிந்த அளவிற்கு உதவுவேன் என்ற எண்ணத்தை கொண்டால் இந்த நாடும் உலகமும் விரைவில் மாறும் என்று நினைக்கிறேன்.”

Likes(4)Dislikes(0)
Share
Share
Share