Aug 152015
 

1

தன்னுடைய தேவைகள், லட்சியங்கள், மற்றும் ஆசைகள் எவை என பகுத்தறிந்து தேவைகளுக்கும் லட்சியங்களுக்கும் முன்னுரிமை அளித்து வாழ்பவர்கள் அடுத்து வரும் சந்ததியினருக்கு வழிக் காட்டியாக இருப்பார்கள். அதுபோல் ஓர் உன்னத மனிதர் தான் அப்துல் கலாம் ஐயா அவர்கள்.

இவரைப் பற்றி லட்சக்கணக்கான பதிவுகளை பல ஜாம்பவான்கள் எழுதி முடித்துவிட்ட நிலையில், எழுத்துலகில் சிறு குழந்தையாக தவழ்ந்துக் கொண்டிருக்கும் நாமென்ன பெரியதாக எழுதிவிட முடியுமென நான் நினைக்கையில், நமது B+ இதழின் சில வாசகர்களின் விருப்பத்திற்கு இனங்க, இவரைப் பற்றி சிலவற்றை இந்த மாதம் பதிவு செய்து, இவருக்கு காணிக்கையாக்குவது சரியாகத் தான் இருக்குமென தோன்றியது.

ராமேஸ்வர மன்னில் சாதாரன குடும்பத்தில் பிறந்த இவர், ஞானக் கதிரவனாக மாறி கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் இதயக் கோயிலில் கனவுக் கதாநாயகனாக குடிக்கொள்ள செய்த தண்ணிகரில்லா சாதனைகள், பல நூற்றாண்டுகளுக்கு பேசப்பட இருக்கும் மாபெரும் சரித்திரம்.

அரசு பள்ளியிலும், கல்லூரிகளிலும் பயின்றே, இத்தனை மாபெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரராய் ஆன கலாம் அவர்களின் ஆரம்பக் காலம் அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை. பல மைல் தூரம் கல்வி கற்பதற்கு நடைப்பயணம், பல தடைகள், பல சோதனைகள் என அவர் சந்தித்த பிரச்சினைகள், அவரை பக்குவபடுத்தியது. ராமேஸ்வர நகரத்து மக்களுக்கு, தனது சிறு வயதில் நாளிதழ் கட்டுகளை எடுத்து வந்து வினியோகித்த நாள் முதலே, தனது செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கத் தொடங்கினார் என்றே கூற வேண்டும்.

2007 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் குடிமகனாக, ஐரோப்பா பாராளுமன்ற கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய கலாம் அவர்கள், 3000 வருடங்களுக்கு முன்னரே, கணியன் பூங்குன்றனார் கூறிய, “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” வரியை அக்கூட்டத்தில் சிறப்பாகக் குறிப்பிட்டு உரைக்க, “தாம் கேட்டவற்றிலேயே மிகச் சிறப்பான பேச்சுகளில் ஒன்று” என்று அக்கூட்டத்தின் தலைவரின் பாராட்டுதலை கலாம் பெற்று “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று உலகரியச் செய்தார்.

தேச நலனுக்கு என்றே தியாகம் செய்த இவரின் வாழ்க்கை “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற வரிக்கு ஏற்றார் போல் அமைந்ததினால், எந்த ஒரு தமிழனுக்குமே இதுவரை கிட்டாத பேரும், பெருமையும், அன்பும், அங்கீகாரமும் நம் ஒட்டுமொத்த தேசமும் இவருக்கு வழங்கி, இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

இவ்வாறாக மகாத்மாவாக நம்மில் வாழ்ந்து சென்ற ஒருவரின் வாழ்க்கை சரித்திர புத்தகத்தின் சில பக்கங்களையாவது புரட்டுவது நிச்சயமாக நம் வாழ்வை செம்மைப்படுத்தும் என்பதால், என் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட, இவரின் மூன்று சம்பவங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

2

முதல் சம்பவம்: என் தந்தை, பண்ணிரண்டு வருடங்களுக்கு முன், ராமேஸ்வரத்திற்கு, எங்கள் அனைவரையும் சுற்றுலா அழைத்து சென்றார். கலாம் ஐயா வீட்டையும் நாங்கள் அனைவரும் சென்று காண நேர்ந்தது, எங்கள் பாக்கியம் என்றே கூற வேண்டும். அப்போது அவர் குடியரசு தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்த சமயம். நம் தேசத்தின் பெரும் சாதனையாளர் ஒருவரின் வீடு என்ற சுவடுகள் கொஞ்சம் கூட இல்லாதிருந்தது, பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

பெரிய தடுப்பு சுவர், காவல் துறையினர், செக்யூரிடி ஆள், ஆடம்பர வாகணம் என ஒரு வீ.ஐ.பி வீட்டின் எந்த வித அடையாளமும், கலேபரமும் இன்றி அமைதியான எளிமையான ஒரு சாதாரன நடுத்தர குடும்பத்தின் பிம்பம் மட்டுமே பிரதிபலித்தது. நாங்கள் சென்றபோது, அவர்கள் அண்ணனும், அவரது குடும்பத்தினர் மட்டுமே அங்கு இருந்தனர்.

ஒரு ஜனாதிபதியின் வீடு போன்றே தெரியவிலையே என்ற எங்களது கேள்விக்கு, கலாம் அவர்கள் வீட்டிற்கு வருவதெல்லாம் மிகவும் அரிதென்றும், தேசப்பணிகளில் அவரது வாழ்வை அர்ப்பணித்து விட்டதாகவும், வீட்டைப் பற்றிய எண்ணமே இல்லாமல், நாட்டைப் பற்றிய எண்ணங்களே அவருக்கு உண்டு என்றும் அவர் அண்ணன் தெரிவித்தார். இந்த எளிமையிதான், பல கோடி இதயங்களை தன் வசப்படுத்திக் கொள்ள அவருக்கு காரணமாயிருந்தது. அந்த சாட்டிலைட் நாயகனை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அன்று முதல் என்னுள் தொற்றிக் கொண்டது.

இரண்டாவது சம்பவம்: பல வருடங்களாக அவரை ஒருமுறையாவது காண வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியது. 2012ஆம் வருடம், சென்னை கீழ்பாக்கத்தில், 35ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடைப்பெற்றது. அங்கு ஒரு கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்க கலாம் அவர்கள் வர இருந்ததினால், நல்ல கூட்டம் அன்று. மேடையில் அவர் பேச்சைக் கேட்க அந்த கூட்டத்தில் ஒருவனாக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன். கலாம் அவர்கள் மேடையில் அவருக்கென்ற நாற்காலியில் அமர்ந்திருந்தார். மேடையின் இரு பகுதிகளிலும் இரு மைக் ஸ்டாண்டுகள் இருந்தன.

வழக்கமாக தலைமை ஏற்பவர்களைப் பற்றி பலர், பலவற்றை பேசியபின் தான், கடைசியில் விழா நாயகர்கள் பேசுவர். இந்த வழக்கத்தை ஒரே நிமிடத்தில் உடைத்தார் கலாம் அவர்கள். மேடையின் இடதுபுறம் நிறுத்தி வைக்கப்பட்ட மைக்கில் ஒருவர் கலாம் பற்றி பெருமையாக கவிதை வடிவில் பேசத் தொடங்கினார், இரண்டு-மூன்று வாக்கியங்கள் தான் படித்திருந்தார். அதற்குள் கலாம் அவர்கள் வேகவேகமாக சென்று, வலதுபுறம் நிறுத்தி வைக்கப்பட்ட மைக்கில் சிரித்துக்கொண்டே நிற்க, கவிதை வாசித்தவரும், சிரித்துக்கொண்டே சென்று அமர்ந்துவிடுகிறார்.

வீண் புகழ்ச்சியும், பாராட்டும் தமக்கு தேவையில்லை என்பதை அந்த கவிஞரின் மனதை காயப்படுத்தாமல் நாசூக்காக தெரிவித்த கலாம் அவர்களின் அந்த செயல், அவர் பேச தொடங்குவதற்கு முன்பே, கூட்டத்தினரின் பெரும் பாராட்டை கைத்தட்டல் மூலம் பெற்றுத் தந்தது.

ஒரு மனிதனின் சாதனைகளைப் பற்றி பெருமையாக அவரே பேசத் தேவையில்லை, அவர் சாதனைகளே, அவரைப் பற்றி பேசும் என்ற வாக்கியத்தை ஒரு சில நொடித்துளிகளில், அன்று கலாம் அவர்கள் எங்கள் அனைவரின் மனதிலும் சொல்லாமலேயே, தன் செயல் மூலம் ஆழமாக விதைத்தார்.

மூன்றாவது சம்பவம்: எங்கள் அலுவலகத்தில் உள்ள அந்த மனிதரைக் கண்டாலே, அனைவரும் ஓடி ஒதுங்கிச்சென்று விடுவோம். அப்படி ஒரு கோபக்காரர். சின்ன விஷயத்திற்கு கூட படு டென்ஷனாகிவிடும் பேர்வழி. சமீப காலமாக பல மாற்றங்கள் அவரிடம். மிகவும் அமைதியாக, மவுன சாமியாராகவே மாறியிருந்தார்.

காரணத்தை அவரே விளக்கினார். “கலாம் அவர்கள் இறந்த பின் தான், அவருக்கு எத்தனை மரியாதை, முகம் தெரியாதவர்களிடமிருந்து கூட இரங்கள், அஞ்சலி இவற்றையெல்லாம் கண்டேன். ஒருவேலை நான் இறந்து போனால், எனக்கு என்ன நடக்கும் என எண்ணிப்பார்த்தேன், எனது வீட்டில் உள்ளவர்களிடம் கூட அத்தனை வருத்தம் இருக்காது என தோன்றியது. எதற்காக வாழ்கிறோம், நமக்கும் அதுபோன்ற மரியாதைகளை கொஞ்சமாவது, யாராவது ஒருவரேனும் கொடுத்தால் எத்தனை நன்றாக இருக்குமென தோன்றியது. அதனால் கலாம் அவர்களின் பண்புகளை நானும் பின்பற்றலாம் என்று முடிவெடுத்து மாறிவிட்டேன்” என்றார்.

இவரைப் போன்று பல மனிதர்கள் கலாம் ஐயா அவர்களின் இறப்பின் மூலம் மாறியிருப்பதை, அவர்கள் கூறியே நம்மில் பலரும் கடந்த ஒரு மாதமாய் கேட்டிருப்போம்.

இப்படி கலாம் அவர்கள் குறித்து, எத்தனையோ அருமையான நிகழ்வுகளும், அனுபவங்களும், கட்டுரைகளாகவும், அவரே பேசிய வீடியோக்களாகவும், வலைதளங்களிலும், வாட்ஸப்புகளிலும் கடந்த மாதம் குவிந்தவன்னம் இருந்தன. அவைகளுள், நமக்கு எக்காலத்திற்குமே பாடமாக பயன்படக்கூடிய சில முக்கியமான சம்பவங்களும் இருந்தன.

உதாரணத்திற்கு, தலைமை பண்பு என்பது என்ன என்றும் ஒரு தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை, “மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து, ஏதாவது நல்லவற்றை கொடுத்துக்கொண்டே இருங்கள்” என்ற அவரது ஒரு பேட்டி சிறப்பாக எடுத்துக்கூறியது.

அடுத்து, பைலட்டாக நினைத்த தன் வாழ்வின் லட்சியம், கைக்கெட்டிய தூரத்தில் தகர்ந்த சோகத்தில், ஹ்ரிஷிக்கேஷ் சென்று, சிவானந்தரை சந்தித்த அனுபவத்தின் மூலம் தோல்வியை எவ்வாறு சமாளிக்கலாம் என்று தெளிவாக்கியது.

முக்கியமாக பள்ளி வயதில், தனது ஆசிரியர் திரு.சிவசுப்பிரமணி ஐயர் அவர்கள், பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை பிராக்டிக்கலாக பறவைகள் பறக்கும் இடத்தில் வைத்து விவரித்து கூறியது, தனக்கு ராக்கெட் விஞ்ஞானத்தில் ஆர்வத்தை தூண்டியது என்ற சம்பவம், ஒவ்வொரு ஆசிரியரும் இது போல் நினைத்தால் பல கலாம்களை நமக்காக உருவாக்க முடியும் என உணர்த்தியது.

அனைத்திற்கும் மேலாக, நம் சமுதாயம் நேர்மையாக, அழகாக மாற வேண்டுமெனில், தாய், தந்தை, ஆசிரியர்கள், இந்த மூவரின் பங்கு தான் முக்கியம் என்று ஆழமாக அறிவுரை வழங்கியது என அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

மாணவர்கள், கல்வி என்று மட்டுமன்றி மரம் வளர்த்தல், விவசாயம், அறிவியல் மற்றும தொழில்நுட்பம் முன்னேற்றம், நதிநீர் இனைத்தல், கிராமப்புர வளர்ச்சி போன்ற பணிகளுக்காக வாழும்போது, இவர் கூறி வந்த மெசேஜ்கள், அவர் இறந்தபின் காட்டுத்தீயாய் பரவின.

பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற இவரின் புகழ்பெற்ற வரி, இவர் புகைபடங்களுடன் சேர்ந்து, கட்-அவுட்களாக, பேணர்களாக தமிழகத்தின் பட்டித்தொட்டிகளெல்லாம் பரவி இவரது புகழை கோலோச்சின.

ஒரு சாதாரன மனிதனின் இறப்பை, அவனது குடும்பத்தினரும், நண்பர்களும் சிறிது நாட்களுக்கு போற்றுவர். ஆனால் அவதாரங்கள், பல நூறு வருடங்கள் தாண்டியும் மக்கள் மனதில் வாழ்ந்து வருவதை சரித்திரம் நமக்குச் சொல்கிறது. கலாம் ஐயா ஒரு அவதாரப்புருஷன் என்பதால், நம் மனதில் என்றென்றும் அவர் வாழ்வது உறுதி.

அறிவியல் தாண்டிய ஆன்மீகம், மதம் தாண்டிய மனிதம், தமிழினம் தாண்டிய தேசியம், பணிவையும், எளிமையையும் வைத்தே செய்த பயணம், பொருள்களின் மீதும், ஏன் புகழின் மீதுமே பற்றில்லாத சுயநலமற்ற சித்தாந்தம், என அவர் உருவாக்கிச் சென்ற புதிய பாதையில் “இந்தியா 2020” என்ற கனவு அனைத்து தேசபக்தர்களின் மனதிலும் எழுச்சி தீபங்களாய் உருவானது.

கலாம் ஐயா, “அக்னிச் சிறகுகள் புத்தகத்தில், உங்களது அன்னையைப் பற்றி பாராட்டி எழுதிவிட்டு, ‘என் பெருமைக்குரிய தாயே, மீண்டும் சந்திப்போம் அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்’ என முடித்திருந்தீர்கள். அவ்வாறே அந்த தீர்ப்பு நாளில் உங்களது அன்னையை சந்தித்து, ‘அன்னையே, நீங்கள் என்னை படைத்த நோக்கத்தை நான் நிறைவேற்றிவிட்டேன்’ என்று தெரிவித்து மகிழ்ந்திருப்பீர்கள்” என நம்புகிறோம்.

“பெருமைக்குரிய தமிழனாய், உண்மையான இந்தியனாய் நீங்கள் விதைத்த எண்ண விதைகளின் மூலம், அக்னிப்புத்திரர்களாகிய நாங்கள், எங்களால் முடிந்த பல மகத்தான காரியங்களை நம் தேசத்திற்காக செய்து, எங்களது நியாயத் தீர்ப்பு நாளில், உங்களை சந்திக்க, உங்களது ஆசிகளை கோருகிறோம்”.

மீண்டும் சந்திப்போம்..

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(12)Dislikes(0)
Share
Aug 152015
 

kavithai

 

பாவம் நீக்கி புண்ணியம் சேர்க்கும் பூமியில் உதித்தவரே,

ராமணால் அரியப்படும் ராமேஸ்வரம்

இனி உம்மால் உயர்வு பெரும்

 

காலம் உம்மை காயப்படுத்தலாம்

காலத்தையே திரும்பி நின்று

காலை மாற்றி கலாமாய் நின்று காட்டியவரே

எங்கே போனீர்?!

 

பிற நாட்டு தொழில்நுட்பத்தை எதிர்பாராமல்,

ஏவுவூர்தியில் தாய்நாட்டை தூக்கி நிறுத்தியவரே

பொக்ரானில் பாரதத்தை பாதுகாத்து,

எம் மண்ணின் தலைக்குடிமகனாய்

பாரே நமை புகழ நிமிர்ந்து நிற்கச்செய்தவரே

 

மத மாச்சர்யங்களைக் களைந்து

யாதும் ஊரே யாவரும் கேளீர் என சமத்துவத்தைப் படைத்து

மக்கள் மனதில் மகானாய் வியாபித்துவிட்டீர்

 

உம்மால் எப்படி முடிந்தது

ஒரு மனிதனால் இது சாத்தியமா?!

எம் மண்ணில் நீர் புதைக்கப்படவில்லையைய்யா

எல்லோர் மனதிலும் வேரூன்றி விருட்சமாய் விதைக்கப்பட்டுள்ளீர்!

 

கனவு காணுங்கள் என்று உறங்காமல்,

தூங்கி கிடந்தவரை தட்டி எழுப்பிவிட்டு

நீர் கண்ட கனவை கானாமலே உறங்கிவிட்டிர்!

 

அக்டோபர் பதினைந்து மாணவர்கள் தினம்

உம்மால் மதிக்கப்பட்ட நாங்கள் காணுவோம்

நீர் கண்ட கனவை நாங்கள் காணுவோம்

வல்லரசாகும் எம் பாரதம்!

 

தமிழரே, தமிழனை தலை நிமிர்த்தியவரே

பொக்கிஷமாய் உம்மை போற்றிப் புகழ்கின்றோம்

நீர் வாழ்க..!!

– சிவரஞ்சனி விமல்

Likes(10)Dislikes(0)
Share
Share
Share