Apr 132014
 

INA_Jubilation

இந்த மாதம் கதைக்கட்டுரையில் மூன்று குறும்படங்களைக் (VIDEOS) வெளியிடுகிறோம். இவை அனைத்தும் கடிண உழைப்பால் ஒரு குழுவின் முயற்சியில் வெளிவந்துள்ளன. இவைகளை நமக்குத் தந்த பேராசிரியர்.அண்ணாமலை அவர்களுக்கு நன்றிகள் பல.

நேதாஜியைப் பற்றியும், இந்திய தேசிய ராணுவத்தில் (INA) தமிழர்களின் பங்கும் இந்தப் படக்காட்சிகளில் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

எளிதாக டவுன்லோட் (DOWNLOAD) செய்வதற்காக மூன்று பாகங்களாகப் பிரித்து வழங்கியுள்ளோம். குறிப்பாக ஒன்று மற்றும் மூன்றாவது பாகங்களைக் கண்டிப்பாகக் காணவும். அதிலும் மூன்றாம் பாகத்தில் வரும் திரு.ராமுத்தேவரின் கடிதம், காண்போரைக் கலங்க வைக்கும். இத்தனைப் பேரின் தியாகத்தில் பெற்ற சுதந்திரத்தைக் காப்போம், சுயநலத்தை மறப்போம்..

பாகம் – 1    https://www.youtube.com/watch?v=kqsJQTYdSyg

பாகம் – 2    https://www.youtube.com/watch?v=vpenxBFZAZM

பாகம் – 3    https://www.youtube.com/watch?v=y1guzWFnjUw

Likes(1)Dislikes(0)
Share
Mar 012014
 

(இது ஈமெயிலில் ஆங்கிலத்தில் வந்த ஒரு கட்டுரை. இதனை எழுதியவரின் விவரமோ, இதன் ஆரம்பமோ நம்மிடம் இல்லை. B+, இந்தக் கட்டுரையை தமிழாக்கம் செய்து, வாசிப்பவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு சில வரிகளை மாற்றி இங்கே உங்களுக்கு அர்பணிக்கிறது)

ஒரு நல்ல சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பிராஜக்ட் மேனேஜரான விவேக் பிரதான், அன்று சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணித்துக் கொண்டிருந்தார். ரயிலின் அந்த குளிர் சாதன கோச்சின் இதமானக் காற்றுக் கூட அவரின் கோபத்தை தணிக்க முடியவில்லை.

பிராஜக்ட் மேனேஜரான பின்பும் விமான பயணத்திற்கு அனுமதி தராத தனது நிறுவனத்தின் விதிமுறைகளின் மீதும், அதனை நடை முறைப்படுத்தும், மனித வள துறையின் (HR Department) மீதும் படு டென்ஷனாய் இருந்தார். “நான் என்ன, கௌரவத்திற்காகவோ, வசதிக்காகவோ விமானப் பயணம் கேட்டேன்? எத்தனை வேலை உள்ளது, எத்தனை நேரம் மிச்சமாகும், புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே!” என்று எண்ணிக் கொண்டே மடிக்கணினியை (Laptop) திறந்தார். ரயிலில் பயணித்த படியே, ஏதாவது சில வேலைகளை பார்ப்போம் என்று நினைத்தார்.

அவரையும் அவர் வேலை செய்வதையும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞர், “நீங்கள் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்களா சார்?” என்று கேட்க, விவேக் அந்த இளைஞரையும் கணினியையும் பார்த்துக் கொண்டே, ஆம் என்பது போல் தலையாட்டினார். கணினியை இன்னும் சற்று அதிகப்படியான கவனத்துடன் பிடித்துக் கொண்டே உற்றுக் கவனித்தார்.

“நீங்கள் அனைவரும் தான் சார், நம் நாட்டிற்கு இத்தனை வசதிகளையும், வளர்ச்சியையும் கொண்டு வந்துள்ளீர்கள். இன்று எல்லாமே கணினி மயமாகிவிட்டது” என்று இளைஞர் கூறவும், “நன்றி” எனக் கூறி விவேக், அந்த இளைஞரைப் சற்று மெலிதான புன்னகையுடன் பார்த்தார். இந்த உலகில் பாராட்டும், அங்கீகாரமும் பிடிக்காமல் யார் தான் இருக்க முடியும்.

அந்த இளைஞருக்கு, ஒரு நல்ல விளையாட்டு வீரன் போல உறுதியான நேர்த்தியான உடல். பார்ப்பதற்கு, மிகவும் எளிமையாகவும், ஒரு கிராமத்து வாலிபன் போன்ற தோற்றம். “ஏதாவது ரயில்வே விளையாட்டு அணியின் வீரனாக இருக்க கூடும், தனது இலவச ரயில் சேவையை பயன்படுத்தி எங்கேயாவது பயணித்து கொண்டிருக்க வேண்டும்” என்று விவேகிற்கு தோன்றியது.

“உங்களை மாதிரி பொறியாளர்களைப் பார்த்து எனக்கு எப்போதுமே ஒரு வியப்பு உண்டு சார்.  நீங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதும் சில விஷயங்கள், வெளி உலகத்தில் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்துகிறது” என இளைஞர் தொடர, விவேக் இளைஞரை சற்று கூர்ந்து பார்த்து. தம்பி, அது அத்தனை சுலபமான காரியம் இல்லை. கணினியில் சில வரிகளை எழுதியவுடன் முடிந்து விடக் கூடிய  விஷயமும் இல்லை. அதற்கு பின்னனியில் நிறைய முறையான இயக்கங்கள் உள்ளன. ஒரு மணி நேரம் எடுத்து சாஃப்ட்வேர் துறையின் மொத்த நிகழ்வுகளையும், அது பணியாற்றும் விதத்தையும் இளைஞருக்கு எடுத்து சொல்ல நினைத்து, பின்னர், தன்னையே சற்று சமாதானப் படுத்திக் கொண்டு, ‘அது மிக மிக கடினமான ஒரு துறை’ என்று மட்டும் பதில் அளித்தார்.

அதற்கு அந்த இளைஞர் “கண்டிப்பாக சார், அது கடினமாகத் தான் இருந்தாக வேண்டும், அதனால் தான், உங்கள் அனைவருக்கும், சம்பளமும் அதிகமாகக் கிடைக்கிறது” என்று கூறியது, விவேக்கிற்கு சிறிய கோபத்தை வரவழைத்திருக்க  கூடும். அத்தனை நேரம், மெதுவாக இருந்த விவேக்கின் குரல், சற்று உயர்ந்து,  “எல்லோரும் சம்பளத்தை மட்டும் தான் பார்க்கின்றனர். யாருமே எங்கள் கடின உழைப்பைக் காண்பது இல்லை. குளிர் சாதன அலுவலகத்தில், உட்கார்ந்து இருந்தாலும், நாங்களும் மிகவும் கடினமாக உழைக்கிறோம், நீங்கள் உடல் ரீதியாக உழைக்கிறீர்கள், நாங்கள், மூளையைக் கடுமையாக பயன்படுத்தி உழைக்கிறோம்.

நான் இன்னொரு உதாரணத்தையும் தருகிறேன், “இந்த ரயில்வே பதிவு இயங்கும் முறையைப் பார்த்தால் தெரியும், ஏதாவது இரண்டு ஸ்டேஷன்களுக்கு பயணம் செய்ய வேண்டிய டிக்கட்டை, நம் நாட்டில் உள்ள நூற்றுக் கணக்கான, கணினியால் இயங்கும் பதிவு அலுவலகத்தில் எங்கு வேண்டுமானாலும், பதிவு செய்ய முடியும். ஒற்றை டேட்டாபேசில் (Database), ஆயிரக் கணக்கான தகவல்கள், தொடர்புகள், பரிமாற்றங்கள், ஒருங்கிணைப்புகள் அரங்கேருகின்றன, கூடவே தகவல்களின் பாதுகாப்பும், பராமரிப்பும் முறையாக நடந்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் உருவாக்கவும், ஒருங்கிணைக்கவும், எத்தனை Program coding எழுதி, இயக்க வேண்டும்” என்று விவேக் கூறவும், அந்த இளைஞருக்கு புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.

“இது அனைத்தும் எனது கற்பனைக்கு கூட எட்டாத மிகப் பெரிய விஷயம் சார். நீங்கள் coding எல்லாம் எழுதுவீர்களா” என இளைஞர் ஆர்வத்தோடு கேட்க,  “முன்னாடி எழுதிக் கொண்டிருந்தேன், இப்போது பிராஜக்ட் மேனேஜரான பின் எழுதுவது இல்லை” என விவேக் பதில் அளித்தார்.

அந்த இளைஞர், “ஓ, பரவாயில்லை சார், அப்படி என்றால், இப்போது உங்களுக்கு வாழ்க்கை சற்று சுலபமாக இருக்கும்” என்று கேட்க, விவேக் சற்று டென்ஷனாகி, “தம்பி, வயது ஏற ஏற, வாழ்க்கை என்றாவது, சுலபமாக இருக்குமா? பொறுப்புகள், வேலையை இன்னும் அதிகம் தான் ஆக்கும், இப்போது இருக்கும் வேலை முன்பை விடக் கடுமையானது. என் வேலையை, சிறிய நேரத்தில், மிக நேர்த்தியாகவும், விரைவாகவும் செய்து கொடுத்தாக வேண்டும்.

வேலை பளுவையும் மன அழுத்தத்தையும் சொல்ல வேண்டும் என்றால் தனது தேவைகளை மாற்றிக் கொண்டே இருக்கும் வாடிக்கையாளர் ஒரு புறமும், அனைத்து வேலைகளையும் நேற்றே முடித்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் எனது முதலாளி மறு புறமும், ஒரு வழி ஆக்கி விடுவார்கள்” நொந்து போன விவேக்கின் வலி அவர் பேச்சில் தெரிந்தது. “தம்பி, ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. “லைன் ஆஃப் ஃபையர்” (Line of Fire). உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இது தான் லைன் ஆஃப் ஃபையரில் இருப்பது”

இதைக் கேட்டவுடன், அந்த இளைஞர் கண்களை மூடி, ஏதோ ஒரு விஷயம் பலமாக தலையில் அடிப்பதுப் போல் ஒரு உணர்வுடன், சீட்டில் சாய்ந்து அமைதியாக உட்கார்ந்ததை விவேக் ஆச்சரியத்துடன் பார்த்தார்.

சிறிது நொடிகள் கழித்து இளைஞர் கண்களை திறந்து, நிதானமாகவும் ஆழமாகவும் பேசியது விவேகிற்கு இன்னும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. “லைன் ஆஃப் ஃபையரில் இருப்பது என்ன என்பது எனக்கும் தெரியும் சார்”

சிங்கத்தின் கம்பீரத்தோடு, இளைஞர் பேச்சைத் தொடர, “அன்று இரவு எங்களது அணியில் 30 பேர் இருந்தோம், பாயிண்ட் 4875 ஐ அடுத்த நாள் சூரியன் உதிப்பதற்குள் கைப்பற்ற வேண்டும் என்ற கட்டளை எங்களது அணிக்கு கொடுக்கப் பட்டது. எதிரிகள் மலை மேலிருந்து சுட்டுக் கொண்டு இருக்கின்றனர். கீழிரிந்து அனைத்து ஆயுதங்களையும், பைகளையும் எடுத்துக் கொண்டு, எங்கள் அணி கிளம்பியது. தோட்டாவும், குண்டும் எங்கிருந்து வரும், எப்படி வரும், எவரின் உடலுக்கு வரும், எங்கு கன்னி வெடி புதைந்து கிடக்கும் என்று தெரியாத ஒரு சூழ்நிலையில், “பாரத் மாதா கி ஜெய்” என்ற கோஷத்துடன், அக்கினி பிழம்பாக எங்கள் அணி மேலே சீறிப் பாய்ந்தது. சூரியன் உதிப்பதற்குள் ஒரு வழியாக, எதிரிகளை அழித்து, பாயிண்ட் 4875 ஐ கைப்பற்றி, நம் தேசத்து மூவர்ணக் கொடியை ஏற்றி, ஆழமாக நட்டு வைத்தோம். அப்போது எங்களது அணியில் நால்வர் மட்டுமே உயிருடன் இருந்தனர். ஆனால், நம் தேசம் நம்மோடு இருந்தது!

விவேக் கணினியை கீழே சட்டென்று வைத்துவிட்டு, சற்று படபடப்புடன் இளைஞரை நோக்கி, “நீ.. நீங்க யார்??” என்றார்.

நான் சுபேதார் சுசாந்த். கார்கிலை சேர்ந்த சிகரம் 4875 பகுதியில் எனக்கு  சிறப்புப் பணி. எனது போர்காலம் முடிந்துவிட்டது எனவும், நான் எளிதான வேலையை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்றும் என் நண்பர்கள் கூறினர்.

ஆனால் வாழ்க்கை சுலபமாக ஆக்கிக் கொள்ளலாம் என்று எவரேனும்  கடமையை விட்டுக் கொடுக்க முடியுமா சார்? அன்று விடிவதற்கு முன், நாங்கள் ஒரு பங்கருக்கு பின் ஒளிந்திருந்தோம். எங்களது அணியில், எதிரியின் குண்டுக்கு இரையாகி, ஒரு வீரர் காயப்பட்டு கீழே விழுந்துக் கிடக்கிறார். அவரைக் காப்பாற்றி, பாதுகாப்பான பகுதிக்கு தூக்கி வர வேண்டியது என் பணி. ஆனால் என் கேப்டன் அவர்கள் எனக்கு அனுமதி தர மறுத்து விட்டார் சார்.

அவர் எங்களிடம் அன்று சொன்னது, இன்றும் கேட்டுக் கொண்டே இருக்கிறது சார். “நான் பதவி ஏற்கும் போது, செய்து கொடுத்த சத்தியத்தின் படி, முதலில் நம் தேசிய நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் முன்னுரிமை கொடுப்பேன், அடுத்து எனது தலைமையில் இயங்கும் எனது அணியின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பேன், கடைசியில் தான் என் பாதுகாப்பிற்கு கவனம் கொடுப்பேன்” என்று  கூறி அவரே அந்த செயலை செய்வதற்கு சென்றார்.

என் கேப்டன், அந்த காயப்பட்ட வீரனை பாதுகாத்து தூக்கி வரும்போது, பல குண்டடிப்பட்டு உயிர் துறந்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும், பணிக்குப் போகும் போதும், அவர் எனக்கு பதிலாக, தன் உடம்பில் வாங்கிக் கொண்ட அனைத்து தோட்டாக்களும் நினைவிற்கு வருகிறது. அதனால், எனக்குத் தெரியும்… “லைன் ஆஃப் ஃபையரில் இருப்பது என்ன என்பது எனக்குத் தெரியும் சார்” என்று முடித்தார்.

விவேகிற்கு என்ன சொல்லுவதென்றும், என்ன செய்வதென்றும் புரியவில்லை. சட்டென்று கணினியை தன்னையும் அறியாமல், அணைத்து வைத்தார். விவேகிற்கு  கணினி இப்போது துச்சமாக பட்டது, தினசரி வீரத்தையும், தியாகத்தையுமே கண்களாய் பார்க்கும் இப்படி ஒரு மனிதனுக்கு முன் கணினியில் ஒரு சிறிய விஷயம் செய்வதையும் அந்த மாமனிதனுக்கு கௌரவம் இல்லை என்று என  விவேக் எண்ணினார்.

அடுத்த ஸ்டேஷன் வரவிருந்ததால், ரயிலின் வேகம் குறைய ஆரம்பித்தது.  சுபேதார் சுசாந்த் ரயிலின் இருக்கைக்கு அடியிலிருந்த தனது பெரிய மிலிட்டரி பையை வெளியில் எடுத்தவாறே, “உங்களை சந்தித்தது ரொம்ப மகிழ்ச்சி சார்” என்றார் விவேகிற்கு கை குடுத்தவாறே.

அந்த கை, காய்ச்சுப் போய், இரும்பு போல் இருந்தது. அந்த கை பல மலைகளை பற்றி ஏறி கடந்திருக்கின்றது, பல துப்பாக்கிகளை தேச நலனுக்காக பயன் படுத்தி இருக்கிறது, மூவர்ணக் கொடியை ஏத்தி இருக்கிறது. விவேகிற்கு உடலில் ஒரு பெரிய சிலிர்ப்பு, ஒரு பெரிய இடி தாக்கியது போல் இருந்தது. தன்னையும் அறியாமல், இரண்டு கால்களையும் ஒன்றாக்கி நேராக நின்று வலது கையால், சுபேதார் சுசாந்தைப் பார்த்து, ஒரு ராயல் சல்யூட் அடித்தார்.

பி.கு: பாயிண்ட் 4875 ஐ குறித்து சொல்லப்பட்டது கார்கில் போரின் போது நடைப்பெற்ற உண்மை சம்பவம். வெற்றியின் கோடு, வெகு அருகில் இருந்தபோதும், கேப்டன் பத்ரா, தனது  படைவீரர் ஒருவரை காப்பாற்ற தனது இன்னுயிரை தியாகம் செய்தார். இந்த வீரசெயலுக்கும், தியாகத்திற்கும், நம் நாட்டின் ராணுவ உயரிய விருதான “பரம் வீர் சக்ரா” அவருக்கு வழங்கப்பட்டது.

Likes(9)Dislikes(0)
Share
Share
Share