Mar 142016
 

Photo

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் படப்பைக்காடு. அந்த ஊரிலிருக்கும் அரசுப்பள்ளியில் சுமார் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் 150 மாணவர்கள் வரை பயின்று வந்த அந்தப் பள்ளியில் இன்றைய மாணவர்கள் எண்ணிக்கை வெறும் 50. அதே படப்பைக்காட்டிலிருந்து தினமும் தனியார் பள்ளி வேன்களில் சென்று கான்வெண்டில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 60 க்கு மேல்.

இது படப்பைக்காட்டு பள்ளியின் நிலை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் அத்தனை கிராமங்களில் உள்ள பல அரசுப் பள்ளிகளின் நிலையும் இது தான். தனியார் பள்ளிகளில் பயில்வதை மக்கள் ஒரு கவுரமாகவும் அரசுப் பள்ளிக்கு செல்வது தரக்குறைவாகவும் எண்ணும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நமது மக்களிடையே வேரூன்ற ஆரம்பித்திருக்கிறது. விளம்பரங்கள் வாயிலாக பல அபத்தங்களை தனியார் பள்ளிகள் மக்கள் மனதில் விதைப்பதும் இதற்கு மற்றொரு முக்கியக் காரணம்.

மக்களிடையே இருக்கும் இந்த மனப்பாங்கை மாற்றும் முயற்சியில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளனர் படப்பைக்காடு இளைஞர்கள். ஆறு மாதத்திற்கு முன்னர் எதேச்சையாக தான் பயின்ற பள்ளிக்கு சென்ற ஒரு இளைஞர் பள்ளி மிகவும் மோசமான நிலையில் இருப்பதை உணர்ந்தார். உடனே மற்ற இளைஞர்களுக்கும் பள்ளியின் நிலையை எடுத்துக்கூற, ஒரே வாரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் “பள்ளி வளர்சிக் குழு” எனும் பெயரில் திரண்டனர்.

அரசாங்கம் எவ்வளவு குறைந்த செலவில் மாணவர்களுக்கு கல்வியைக் கொடுத்தாலும், அதையும் தாண்டி எவ்வளவு செலவு செய்தாலும் என் குழந்தையை தனியார் பள்ளிக்குத்தான் அனுப்புவேன் எனும் பெற்றோர் பக்கம் உள்ள நியாயத்தையும் நாம் சற்று மனதில் கொள்ள வேண்டும். ஒரு பள்ளியில் மாணவர்கள் பயில ஒருசில அடிப்படை வசதிகள் இன்றியமையாதவைகளாகின்றன.

  1. முறையான சுற்றுச்சூழல்
  2. சுத்தமான கழிப்பிடம்
  3. தூய்மையான குடிநீர்

இவை மூன்றையும் மாணவர்களுக்கு அளிப்பது பள்ளியின் கடமையாகின்றது.

படப்பைக்காடு இளைஞர்கள் பள்ளியின் நிலையை அறியும் போது இவை மூன்றுமே அங்கு இருந்ததாகத் தெரியவில்லை. முறையான கழிப்பிடம் கிடையாது. சுத்தமான குடிநீர் கிடையாது. மாணவர்கள் உட்காரும் தரைப்பகுதி ஆயிரம் குழிகளுடன் காணப்பட்டது. எனவே மக்களிடம் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க கோரிக்கை விடுப்பதற்கு முன்னர் இவற்றையெல்லாம் சரி செய்வதென முடிவெடுத்து அரசை நாடிய பொழுது தற்பொழுது இவற்றை சரி செய்ய நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை, ஒருவருடத்திற்குப் பிறகு பார்க்கலாம் என கூறி அனுப்பிவிட்டனர் அதிகாரிகள்.

அரசுக்காக காத்திருப்பதை விட நம்மை உருவாக்கிய இப்பள்ளியை நாமே சரிசெய்வோம் என களத்தில் இறங்கினர் படப்பைக்காடு இளைஞர்கள். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பணத்தை பள்ளிக்காக நன்கொடையாக அளித்து பள்ளியில் ஒவ்வொன்றாக சரிசெய்யத் துவங்கினர். இன்று வரை சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வசதிகளை இந்த இளைஞர்கள் “பள்ளி வளர்ச்சிக் குழு” எனும் பெயரில் செய்து கொடுத்து சென்ற வாரத்தில் முதன் முதலாக அனைவரும் வியக்கும் வண்ணம் பள்ளி ஆண்டு விழாவையும் நடத்தி முடித்துள்ளனர்.

தற்பொழுது இந்தப் பள்ளி நல்ல புறத்தோற்றத்துடனும், தூய்மையான கழிப்பறைகளுடனும், R.O ஃபில்டர் மூலம் தூய்மையான குடிநீருடனும், சுற்றி மரக் கன்றுகள் நடப்பட்ட முறையான பள்ளி மைதானத்துடனும் காணப்படுகிறது.

அரசையும் சூழ்நிலைகளையும் குறை கூறுவதை விட்டு, தானே இறங்கி களப்பணி செய்யும் இத்தகைய இலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கு ஒரு பெரிய முன்னுதாரணமாய் விளங்குகின்றனர்.

– முத்துசிவா

Likes(6)Dislikes(0)
Share
Share
Share