Nov 142015
 

1

சில சந்திப்புகள், சில அனுபவங்கள் நம் ஒட்டுமொத்த எண்ண ஓட்டங்களையும் புரட்டிப்போடும் அளவு சக்திவாய்ந்தது. நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை மறக்க வைத்து, எதிர்கால சிந்தனையுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நம்மை, இதுபோன்ற சம்பவங்கள் நாம் வாழும்முறை சரிதானா என்று யோசிக்கவைக்கிறது. அது போன்ற ஒரு நிகழ்வு சென்ற ஞாயிற்று கிழமை நடந்தது.

அன்று என் எழு வயது மகனுடன் வீட்டருகே இருக்கும் முடி திருத்தகத்திற்கு சென்றிருந்தேன். அங்குள்ள சோஃபாவில் இரண்டு நபர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவருக்கு சுமார் 50 வயது இருக்கும். மற்றொருவர் ஒரு இளைஞர். அந்த இளைஞருக்கு உயரமான விளையாட்டு வீரனின் உடல்வாகு, சுமார் 20 வயது இருக்கும். டி-சர்ட், ஷாட்ஸில், ஏதும் பேசாமல் ஒரு அசால்ட்டான தோரணையுடன் அவர் அமர்ந்திருந்தது, ஏதோ பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவர் என்ற எண்ணத்தை வரவழைத்தது.

என் மகனும் அந்த சோஃபாவில் உட்கார விரும்பியதால், இரண்டாவதாக உட்கார்ந்திருந்த இளைஞரை பார்த்து, “சார், கொஞ்சம் நகருங்களேன், பையன் உட்கார விரும்புகிறான்” என்றேன். அந்த இளைஞரோ, கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாமல், அதே தோரணையுடன், சற்றும் நகராமல் அமர்ந்தவாறே இருந்தார்.

என்னப்பா இது, ஒரு சிறுவன் உட்கார நினைக்கிறான், இடம் தர மறுக்கிறாரே என நினைத்து, அருகில் இருந்த அந்த முதியவரை நான் பார்க்கவும், முதியவரோ என்னைப் பார்த்து மெலிதாக சிரித்து, “ஒரு நிமிடம்” என்று என்னிடம் கூறிவிட்டு, “விஜய், move a  little bit” என்றவாறே இளைஞனின் கால்களை தன் பக்கம் இழுக்கவே, சோஃபாவில் அமர போதிய இடம் கிடைக்கவும், என் மகன் அங்கு சென்று அமர்ந்தான்.

விஜய்யை மேலும் கீழும் பார்த்த நான், ஒருவேளை நேற்று சனி கிழமை, அதனால் நண்பர்களுடன் சினிமா அல்லது பார்ட்டி என சுற்றிய மப்பில் (Hangover) இருக்கிறாரோ என எண்ணிக் கொண்டேன். அதை ஊர்ஜிதப் படுத்தும் விதத்தில் விஜய்யும் சற்றுக் கூட எங்கள் பக்கம் திரும்பாமல் அதே அலட்சியப் பார்வையுடனே அமர்ந்திருந்தார்.

ஒரு நபர் முடிவெட்டிக் கொண்டு கிளம்பவும், விஜய் முடி வெட்டிக்கொள்ள வாய்ப்பு வந்தது. அப்போது அந்தப் பெரியவர், “come on, let’s go” என விஜய்யை அழைக்க, அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது.

கைத்தட்டிக்கொண்டே, ஒரு குழந்தையின் பலத்த சிரிப்புடனும் உற்சாகத்துடனும் விஜய் எழுந்தார். பல விதமான ஒலிகளை எழுப்பியதோடு, வித்தியாசமான ரியாக்ஷனை கொடுத்தவாரே, முடிவெட்டும் நாற்காலியின் அருகில் சென்றவரை நாங்கள் அனைவரும் மிகவும் வியப்புடன் கண்டோம்.

முதியவரோ, கொஞ்சமும் சலனம் இல்லாமல், விஜய்யை கவனமாக முடிவெட்டும் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு, அவரை பிடித்துக்கொண்டே “that’s all, இன்னும் அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு போயிடலாம், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று ஒரு குழந்தைக்கு சொல்வதைப் போல் சொல்லியது எங்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.

“சே, விஜய்யை தப்பாக நினைத்துவிட்டோமே, அவருக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது போல” என்று உணர்ந்த நான், குற்ற உணர்ச்சியில், அந்தப் பெரியவரிடமே பேசுவோம் என முடிவு செய்து, “என்ன சார், ஏதேனும்…?” என்றேன் தயங்கியபடியே.

பெரியவர் சிரித்துக்கொண்டே, “பெரிதாக ஒன்றும் இல்லை சார், இவன் என் பையன். சிறு வயதிலிருந்தே அவனுக்கு ஆட்டிசம் (AUTISM)  என்ற பிரச்சினை. 20 வயது தாண்டியும் சிறு குழந்தைகளிடம் இருப்பதைப் போல பய உணர்ச்சி இவர்களுக்கு இருக்கும். இப்போது இங்கே உட்கார்ந்திருக்கையில் கூட முடிவெட்டிக் கொள்ளவேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருக்கும், ஆனால் கத்தியோ, கத்திரியோ தன்னை குத்தி ரத்தம் வந்துவிடும் என்ற பயமும் அவனுள் கூடவே இருக்கும்.

இவனைப் போல் உள்ளவர்களுக்கான பள்ளியில் படிக்கிறான். பேசக் குறைவாகத் தான் வரும், ஆனாலும் நாம் பேசுவதை நன்றாகப் புரிந்துக்கொள்வான். பொய் சொல்லமாட்டான். வீட்டில் நாங்களும் யாரும் பொய் சொல்வதில்லை. ஏனெனில், நாம் செய்வதை தான் அவர்களும் செய்வார்கள்” என்றார் உற்சாகம் கலையாமல்.

நடுநடுவே கத்திரியின் முனை பயத்தையும் கூச்சத்தையும் விஜய்க்கு தந்திருக்க வேண்டும். எழுந்து செல்ல பல முறை முனைப்பட்டவரை, கட்டுப்படுத்திக்கொண்டே, “இதோ பார், முடி வெட்ட வெட்ட இன்னும் அழகாய் இருக்கிறாய், ஷேவ் பண்ணிகிறாயா, இன்னும் ஸ்மார்ட் ஆகிடுவ” என்று அவனை ஊக்கப் படுத்திக்கொண்டே என்னிடம் பேச்சைத் தொடர்ந்தார் பெரியவர்.

“சார், விஜய் ரொம்ப சமத்து, அனாவசிய தொந்திரவு கொடுக்கவே மாட்டான், வீட்டில் பாத்ரூம் வரைக் கொண்டு விட்டால் போதும், அவனது வேலையை அவனே பார்த்துக்கொள்வான். ஆனாலும் யாராவது ஒருத்தர் முழு நேரமும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதால், என் வேலையை சில வருடங்களுக்கு முன் ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் இவனுடனே இருக்கிறேன். என் மனைவியும் நானும் பார்த்துக்கொள்கிறோம்.

விளையாட்டுத் துறையில் அவனுக்கு ஆர்வம் அதிகமாக உண்டு. நீச்சல் மற்றும் ஓட்டப் பந்தையங்களில் கலந்துக்கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறான்”.

முகத்தில் எந்த வித சோகமோ, களைப்போ இல்லாது, அந்தப் பாசமுள்ள, பொறுப்புள்ள தந்தை தன் மகனைப் பற்றி பெருமிதத்துடன், அவனது பாசிடிவான விஷயங்களை அடுக்கிக்கொண்டே சென்றார். அவரைப் பற்றி கேட்டதும், தன் பெயர் ஹரிஹரன் என்றும், பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் என்றும், விஜய்யின் ட்ரீட்மென்ட் வசதிக்காக சென்னையிலே செட்டிலாகி விட்டதாகவும் தெரிவித்தார். தன் மகனுக்காக வாழ்வையே தியாகம் செய்த அந்த மனிதனின் மீது பெரும் மரியாதை வந்தது.

“நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம், இருக்கும் வரை நாங்கள் அவனைப் பார்த்துக்கொள்வோம். அதற்குப் பின் என்ன நடக்கும் என்று நினைத்தால் தான் சிறு வருத்தமாக இருக்கும்” என்று பேச்சை நிறுத்தியவர், பார்ப்போம், அவர் இருக்கிறார் என்று மேலே கையை காட்டி, மீண்டும் உற்சாகத்துடன் சிரித்தார்.

கிளம்பும்போது, “விஜய், இவருக்கு ஹாய் சொல்லு” என்றவுடன், என் முன் அமைதியாக நின்ற விஜய்யைப் பார்த்து “How are you Vijay” என நான் கைநீட்ட, விஜய்யும் என் கையை குலுக்கியவாறே,  “Fine” என்று கூறி சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார்.

கனத்த இதயத்துடன் என் மகனைத் தேடிய என்னுள் சில கேள்விகள். அவன் செய்யும் சிறு தவறுக்கு எத்தனையோ முறை கோபப் பட்டுள்ளேன்? வீண் கோபத்தை தவிர்த்து அவனுக்கு பொறுமையுடன் எடுத்து சொல்லி இருக்கலாமே என்று தோன்றியது. அருகிலிருந்த என் மகனை அணைத்துக் கொண்டேன். எத்தனையோ ஹரிஹரன்கள் மகிழ்வுடன் இருக்கையில், நமக்கெல்லாம் பிரச்சினையே இல்லை எனவும் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் எனவும் தோன்றியது.

நாம் அன்றாடம் கவலைப் படும் பிரச்சினைகள் பலவும், நம் மனதில் நாமாகவே ஏற்படுதிக்கொள்பவை. இல்லாதவைகளை பற்றியே சிந்தித்து, கையில் இருக்கும் அழகிய வரமான நிகழ்காலத்தை இழக்கும் நாம், அதை உணருகையில், வாழ்வின் பெரும் பகுதி நம்மைக் கடந்துச் சென்று விடுகின்றது.

“நமக்கும் கீழே உள்ளவர் கோடி” என்ற பொன்னான வாக்கியத்தை நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடுவோம். வாழ்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து, அர்த்தமுள்ளதாய் அமைத்துக்கொள்வோம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(15)Dislikes(1)
Share
Oct 142015
 

offer-Sandals-Halcyon-Beach-Saint-Lucia-660-425x250

இத்தாலி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அழகிய பெரிய தீவு சிசிலி. சரியாக மத்தியத் தரைக் கடலின் நடுவில் உள்ள அந்த தீவில் சுற்றுலா விடுதி ஒன்றை தமக்குச் சொந்தமாக வைத்திருந்தார் ரெக் கிரீன் என்ற அமெரிக்கர்.

அக்டோபர் மாதம் 1994 ஆம் ஆண்டு. ரெக் தனது மனைவி மேகி மற்றும்  குழந்தைகளுடன் (நிக்கோலஸ் 7 வயது,  எலினார் 4 வயது), சிசிலியில் உள்ள தனது இல்லத்திற்கு விடுமுறையை கழிக்க, காரில் சென்றுக் கொண்டிருந்தார். பயணத்தின் போது, ரெக்கின் குழந்தைகள் காரின் பின்னிருக்கையில் அமர்ந்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

ரெக்கின் காரை பின் தொடர்ந்தவாரே இன்னொரு கார் மிக வேகமாக வந்தது. அடுத்த காரில் வந்த மனிதர்கள் இரண்டு முறை ரெக்கின் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆம், பின் தொடர்ந்த காரில் வந்தவர்கள் ஒரு கொள்ளைக் கூட்டத்தினர். ஒரு நகைக் கடையில் கொள்ளை அடித்துச் சென்ற மற்றொரு கூட்டத்தை தேடி வந்த அவர்கள், தவறாக ரெக்கின் காரை வழிமறித்து அந்த தாக்குதலை நடத்தினர். ரெக் தனது இலக்கு இல்லை என தெரிந்தவுடன் அந்த கொள்ளைக் கூட்டத்தினர் வேகமாக அங்கிருந்து மறைந்துவிடுகின்றனர்.

நொடிப்பொழுதில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தை சற்றும் எதிர்பாராத ரெக் மற்றும் மேகி தம்பதியினர், சற்று சுதாரித்தப்பின், பின்னிருக்கையை திரும்பி பரபரப்புடன் பார்க்க இரண்டு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

சற்று நிமிட பயணத்திற்குப் பின், ஒரு சாலை விபத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு ஆம்புலன்ஸ் குழு, ரெக்கின் காரை நிறுத்தி உதவி கோரவே, ஆம்புலன்ஸின் வெளிச்சத்தில் ரெக் அப்போது தான், தனது காரின் உள்ளே கவணிக்கிறார். தனது மகன் நிக்கோலஸின் கைகள் மிக மெதுவாக அசைய, அவனது வாயில் நுரை கக்கியிருந்தது. அந்த இரு தோட்டாக்களில் ஒன்று நிக்கோலஸின் பின் மண்டையில் பலமாக தாக்கியிருந்தது.

நிக்கோலஸின் நிலைமை மிக மோசமாக இருக்கவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப் படவேண்டும் எனவும், சிசிலியில் உள்ள பெரிய மருத்துவமணைக்கு அவனைக் கொண்டுச் செல்ல வேண்டுமென அங்குள்ளவர்கள் அறிவுறுத்தினர். நிக்கோலஸ் அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டான்.

ஆனால் அங்குள்ள மருத்துவர்களோ, நிக்கோலஸின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், தங்களது நம்பிக்கை சிதைந்து விட்டதாகவும் ரெக்கிடம் தெரிவித்தனர். இரண்டு நாட்கள் மேலும் கடந்தது. மருத்துவர்கள் ரெக் தம்பதியினரிடம், நிக்கோலஸ் கிட்டத்தட்ட இறந்துவிட்டதாகவும், மூளையின்  செயல் இழந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

நிக்கோலஸ் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்கமுடியாமல் மாபெரும் துயரத்துடன் நின்றுக் கொண்டிருந்த ரெக்கிடம், மேகி தயக்கத்துடன் “நம் மகன்   நிக்கோலஸ் இறப்பது உறுதியாகி விட்டது, அவனது உறுப்புகளையும் திசுக்களையும் நாம் ஏன் தானம் செய்யக்கூடாது?” என கேட்கிறார்.

அந்த நிலையில், ரெக்கிடம் இரண்டு வழிகள் இருந்தன. காலம் முழுதும் அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதே என எண்ணி உலகின் மீது வெறுப்பை அள்ளி வீசுவது அல்லது நிக்கோலஸின் உறுப்புகளை தானம் செய்வது மூலம் சில முன்பின் தெரியாத மக்களுக்கு பேருதவியாய் இருப்பது.

நிதானமாய் யோசித்த ரெக்கின் மனதில் சிறு மாற்றம் ஏற்பட்டது. “மேகி சொல்வது சரிதான், இனி நிக்கோலஸின் உடல் அவனுக்கு தேவைப் படாது, குறைந்தபட்சம் வேறு எவருக்கேனும் தேவைப்படட்டுமே” என எண்ணி அதற்கு ஒத்துக்கொள்கிறார். அந்த மாபெரும் துயர நேரத்திலும், ரெக் எடுத்த அந்த உன்னதமான முடிவு, ஐந்து முன்பின் தெரியாத மனித உயிர்களை காப்பாற்றியது.

தங்கள் நாட்டில் சுற்றுலா வந்த ஒரு வேறொரு நாட்டின் குடும்பத்திற்கு ஏற்பட்ட   அந்த துயர சம்பவத்திற்கு இத்தாலி மக்கள் மிகவும் வருந்தினர். ஆனால் அந்த நிலையிலும், தங்களின் ஐந்து குடிமகன்களின் உயிரைக் காப்பாற்றிய அந்த அமெரிக்க குடும்பத்தின் தியாக குணம், இத்தாலி நாட்டு மக்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைய வைத்தது.

ரெக் குடும்பத்தின் இந்த தியாக உணர்வு, இத்தாலி, பிரிட்டென் மற்றும் அமெரிக்காவின் நாழிதள்களில் முக்கிய செய்தியாக பல நாட்கள் வெளிவந்தன.

நிக்கோலஸின் ஒவ்வொரு உறுப்பும் எங்கு யாருக்கு பயன்பட்டன என்று ஒவ்வொரு கட்டமாய் ஊடகங்கள் மக்களுக்கு “நிக்கோலஸின் பரிசு” என்ற தலைப்பில் காண்பித்தன.

இத்தாலியில் அந்த சம்பவத்திற்கு பின், உறுப்பு தானம் நான்கு மடங்காக உயர்ந்தது. நிக்கோலஸின் பெயர் இத்தாலியில் பல பள்ளிகளுக்கு, சாலைகளுக்கு, பூங்காக்களுக்கு சூட்டப்பட்டது.

ரெக்கிற்கு இப்போது 80 வயதை தாண்டிவிட்டது. அவர் குடும்பம், இன்று கூட நிக்கோலஸிற்கு நடந்த அந்த துயர சம்பவத்தை நினைத்து கண்ணீர் விடுகின்றனர். ஆனாலும் பல நாடுகளுக்கு சுற்றி உறுப்புகள் தானத்தைப் பற்றி பல அரங்குகளில் எடுத்துறைக்கிறார் ரெக்.

தினமும் பிரிட்டெனில் மூன்று மனிதர்கள், அமெரிக்காவில் 18 மனிதர்கள் என உலகம் முழுதும் ஆயிரக்கணக்கான மனிதர்கள், ஓராண்டில் உறுப்புகளுக்காக காத்திருக்கும் பட்டியலிலிருந்து இறக்கின்றனர். உறுப்புகள் தானம் சராசரியாக மூன்று அல்லது நான்கு உறுப்புகளை தருவதின் மூலம் மூன்று அல்லது நான்கு குடும்பத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றுகிறது என்று தீர்க்கமாக கூறுகிறார் ரெக்.

மிகவும் நேசிக்கும் ஒருவரின் உறுப்புகளை தானம் செய்ய மக்கள் ஒத்துழைக்காதது தான், தனக்குள்ள ஒரே வருத்தம் என்று குறிப்பிடும் ரெக், “எங்களுக்கு ஏற்பட்ட துயரம் போல் நடந்து தான் அது போல் ஒரு முடிவு எடுக்கும் மனநிலைக்கு யாரும் தள்ளப்படக் கூடாது” எனவும் “மக்கள் தாமாகவே முன் வந்து தானம் செய்வது பல மக்களின் உயிரைக் காப்பாற்றும்” என்கிறார்.

நிக்கோலஸ் இறந்தும், பல வருடங்களிற்கு பல மனிதர்களின் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வாய்ப்பை ரெக் குடும்பம் ஏற்படுத்தியது.

ரெக் குடும்பத்தினர் செய்த அந்த தியாகத்தினை போல் பல எண்ணற்ற குடும்பங்களும், தனி மனிதர்களும் நம் நாட்டிலும், மற்ற பல நாடுகளிலும் இன்று வரை மருத்துவ துறையில் தியாகம் செய்து கொண்டு தானிருக்கின்றனர்.

எத்தனையோ மருத்துவர்கள் மிக நன்றாக சம்பாதித்த பின்னும், அதையெல்லாம் விட்டுவிட்டு ஏதோ கிராமத்திலோ, ஏழை மக்கள் வாழும் பகுதிகளுக்கோ சென்று, இலவசமாக மருத்துவம் செய்வதை இன்றும் நாம் பார்த்தும், கேள்விப்பட்டும் தான் வருகிறோம். இதற்கு பல உதாரணப்புருஷர்கள் இன்றும் உள்ளனர்கள்.

இவையெல்லாம் எதற்கு? மனிதர்களின் உயிர்களை வாழவைக்க தங்களால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்ற ஒரு உயர்ந்த எண்ணம் தானே?

ஆனால், நம் சமூகத்தில் பல பெற்றோர்கள், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தங்கள் குழந்தைகளை மருத்துவ படிப்பிற்கு அனுப்புவதை அன்றாடம் பார்க்கிறோம்.

சக மனிதனின் உயிரை காப்பாற்றும் மருத்துவ துறை உயர்ந்த சேவை செய்வதற்கான துறை என்ற எண்ணம் நம் அனைவர் மனதிலும் தோண்ற வேண்டுமே தவிர, அந்த உயிரை வைத்து விளையாடி பணம் சம்பாதிக்க நினைக்கும் வியாபார களமாக மாற்றும் எண்ணம் வரக்கூடாது.

தனி மனிதனின் தூய்மையான சிந்தனை, சுயநலமின்மை, சமூக அக்கறை இவைகள் தான் இந்த நேரத்தின் தேவையாக உள்ளது.

மாற்றம் நம் அனைவரிடத்திலும் வரவேண்டும்.

மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில்,

விமல் தியாகராஜன் & B+ TEAM.

Likes(12)Dislikes(0)
Share
Sep 142015
 

Arvind4_jpg_2528474g

முற்றிலும் பொழுதுபோக்கு சாதனமாக இருந்துவிடாமல், தங்களுக்கும் சமுதாய அக்கறை உள்ளது என்று நம் சினிமாத் துறையினர் அவ்வப்போது தெரிவிப்பதுண்டு. சென்ற வருடம், மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை பகிரங்கமாக தெரிவித்து, விழிப்புணர்வை ஏற்படுத்திய படம் “சதுரங்க வேட்டை” என்றால், கண்டிப்பாக “தனி ஒருவன்” படம் இந்த வருடத்திற்கான சமூக விழிப்புணர்வை தந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

தனி ஒருவனில், சித்தார்த் அபிமன்யுமாகவே மாறி வாழ்ந்திருந்த நடிகர் அரவிந்த ஸ்வாமியின் பாத்திரத்தை செதுக்கிய விதம் உலகத் தரம். அவரது உடல் மொழி, முக பாவனைகள், சிரித்துக்கொண்டே செய்யும் வில்லத்தனம், வசன உச்சரிப்பு அனைத்தும் ஆஸ்காரையும் தாண்டி பயணம் செய்யக்கூடியவை.

சினிமாப் பதிவுகளை பொதுவாக தொடாத நமது B+ இதழில், இந்த சினிமாவைப் பற்றிக் குறிப்பிட 2 முக்கியக் காரணங்கள் உள்ளன.

முதல் காரணம் – அந்த படத்தில் வரும் பல தீப்பொறி வசனங்களுக்கு இடையே, விஞ்சி நிற்கும் 2 சிறந்த வசன வரிகள்..

“வாழ்க்கையில் ஒரே ஒரு ஐடியாவ எடுத்துக்கோங்க, அந்த ஐடியாவையே உங்க வாழ்க்கையா ஆக்கிகோங்க” என்ற வசனமும்,

“சுத்தி சாக்கடை நடுவில் வாழ்ந்துட்டு, மூக்கை மூடிக்கிட்டு, நாத்தமே அடிக்கலனு, என்ன நானே ஏமாத்திக்க போறனா, இல்ல, தைரியமா, மூக்கிலேந்து கைய எடுத்துட்டு, நாத்தம் அடிக்கத்தான் செய்யுது, என் சுத்தத்த நானே செய்ய எறங்க போறனானு, அன்னைக்கி நான் கேட்ட கேள்விக்கு, இன்னைக்கி என் வாழ்க்கை தான் பதில்” என்று ஹீரோ முடிக்கும் மற்றொரு வசனமும் மிகச் சிறப்பாய் அமைந்தன.

இரண்டாவது காரணம், தொழிலதிபர்கள் நினைத்தால், என்னென்னவெல்லாம் நம்நாட்டில் செய்ய முடியுமென்றும், மருத்துவ உலகில் நடக்கும் வியாபார அவலங்களையும் போட்டு உடைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

அதற்கேற்ப, மருத்துவ உலகில் நடக்கும் வியாபார விளையாட்டுகளை, நேரடியாக அறியும் வகையில், சில சம்பவங்களை சமீபத்தில் நான் காண நேர்ந்தது. இரண்டு வாரங்களிற்கு முன், சென்னையின் ஒரு பெரிய கார்ப்பொரேட் மருத்துவமனையில் என் தாயாரை அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது.

அங்கு அனுமதிக்கப் பட்டிருந்த 10நாட்களில், எனக்கு மட்டுமன்றி, நான் சந்தித்த பல நோயாளிகளும், அவர்கள் கூட வந்த அட்டெண்டர்களின் மன உளைச்சலும், கண்ட அந்நியாயங்களையும், ஒரு புத்தகமாகவே வெளியிடலாம்.

கார்ப்பொரேட் மருத்துவமனைகளில், பல்ஸ் ரேட்டை (PULSE) கவனிப்பதைவிட, பர்ஸ் ரேட்டை (PURSE) பற்றி மட்டுமே அதிக குறி வைப்பதும், மனித உயிரையெல்லாம் துச்சமாக கருதப்பட்டு, பணம் மட்டுமே கண்ணிற்கு தெரியும், பேசும் கருவியாக மாறி வருவதும், பெருந்துயரம், அவலம், கேவலம்.

மற்றொரு சோகமான விஷயம், அங்கு வேலை செய்யும் மருத்துவர்கள், தாங்கள் படித்த படிப்பையும், உன்னத மருத்துவ தொழிலின் புனிதத்தையும் அடமானம் வைத்துவிட்டு, நிர்வாகத்தின் முதலை முதலாளிகளுக்கு கைக் கட்டி வாய்பொத்தி அடிமைகளாக நிற்பதுதான்.

“படிப்பு, மார்க்கு என்று பள்ளிகளில் இருந்தே அரும்பாடுபட்டு MBBS, MD என படிக்கும் எல்லா மருத்துவ துறை மாணவர்களும் தனியாக கிளினிக் அமைத்து, பெரும் பேரையும் பணத்தையும் சம்பாதிக்கும் மருத்துவர்களாகி விட முடிவதில்லை. அதெல்லாம், வெகு சிலருக்கு மட்டும் தான் சாத்தியப் படுகிறது. நிறைய மருத்துவர்கள், இதுபோன்ற கார்ப்பொரேட் மருத்துவமனைகளை நம்பி தான் பணி செய்து கொண்டு இருக்கின்றனர். பல லட்சங்களை நோயாளிகளிடம் கறக்கும் கார்ப்பொரேட் மருத்துவமனைகள், அங்கு வேலை செய்யும் மருத்துவர்களுக்கு சில ஆயிரங்களை மட்டுமே தருகின்றனர்” என்று அவர்கள் தரப்பு கவலைகளை தெரிவித்தார் என் மருத்துவ நண்பர் ஒருவர்.

மனசாட்சி உள்ளவர்கள், மூக்கின் மீது வைத்தக் கையை எடுத்துவிட்டு, ஆமாம் சாக்கடையில் தான் இத்தனை நாட்களாக வாழ்ந்துள்ளோம், என்று உணரவாவது செய்யட்டும், இல்லாதவர்கள், மூக்கை மூடிக் கொண்டு, எல்லாம் சரியாக உள்ளது என்று நினைத்துக் கொள்ளட்டும்.

மருத்துவமும் கல்வித்துறையும் எந்த நாட்டில் 100% வியாபாரம் ஆக்கப்படுகிறதோ, அந்த சமுதாயத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

மிக்ஸி, டீவி, மின்விசிறி என இலவசங்களை அள்ளி வீசும் அரசாங்கம், அம்மாதிரியான இலவசங்களை தவிர்த்து, “தனியார் மருத்துவமனைகளை அனுமதிக்காமல், 100% அரசு மருத்துவமனையில் தான் மக்களுக்கு சிகிச்சை” என்று அறிவித்து அதன் செலவுகளை நாட்டு மக்களுக்காக ஏற்று நடத்தினால் எப்படி இருக்கும்?

துயர சிந்தனையுடன் இருந்த எனக்கு, அந்த ஒரு நிகழ்வு பெரும் நம்பிக்கை விதையாய் தெரிந்தது.

கூடிய விரைவில் அதைப் பற்றி பேசுவோம்..

தொடரும்….

விமல் தியாகராஜன் & B+ TEAM

 

Likes(11)Dislikes(0)
Share
Jul 142015
 

 

Intro

 

ஆங்கஸ் மாடிஸன் – இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார மேதையான இவர்,  “உலக பொருளாதாரம்: வரலாற்றுப் புள்ளிவிவரங்கள்” என்ற தனது புத்தகத்தின் மூலம் கடந்த 2000 வருடங்களாக உலக பொருளாதாரம் எவ்வாறு இருந்துள்ளது என்பதை ஒரு தொகுப்பாக வழங்கியுள்ளார். மேலுள்ள வரைப்படமும் (நன்றி: விக்கிபீடியா) புள்ளிவிவரங்களும் உலகிற்கு இவர் விட்டுச்சென்ற தொகுப்புகளில் ஒன்று.

கிட்டத்தட்ட 1600 வருடங்களுக்கு மேலாக உலக பொருளாதாரத்தில் பாதிக்கு மேல் தங்கள் கைவசம் வைத்திருந்து, பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளாய் வீரநடை போட்டது இரண்டு நாடுகள் மட்டுமே – ஒன்று நம் இந்தியா, மற்றொன்று சீனா. அதுவும் சரியாக 1500 ஆண்டுகள் உலக பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருந்தது இந்தியா தான் என்பதில், நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சட்டைக் காலரை தூக்கிக்கொண்டு பேசி பெருமைப்பட வேண்டிய சரித்திரம்.

இன்று அயல்நாட்டு மோகத்தில், சில நாடுகளுக்கு சென்று வாழவிரும்பும் நம்மில் பலர், அந்த நாடுகளின் சில நூறு ஆண்டுளின் முந்தைய நிலையை நம்நாட்டின் புகழ்பெற்ற நிலையினோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.

2000 வருட சரித்திரத்தின் பக்கங்களை இன்று நாம் புரட்டிப் பார்பதற்கு காரணம் என்ன? இருக்கிறது.. அத்தனை சரித்திர புகழ்பெற்ற நம்நாட்டின் இப்போதைய நிலை என்ன என்று ஒப்பிட்டு பார்ப்போம்? கடந்த மூன்றாம் தேதி, சமூக-பொருளாதார கணக்கெடுப்பின் மூலம் நம்நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் பற்றி வெளிவந்துள்ள பல தகவல்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது.

குறிப்பாக, 75% கிராமப்புற மக்களின் வீடுகளில், முக்கிய சம்பாதிக்கும் உறுப்பினரின் சம்பளம் ரூ.5000/- மட்டுமே இருப்பது, 50% க்கும் அதிகமான மக்கள் தினக்கூலியாளர்களாக இருப்பது, சுமார் 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சைக்காரர்களாக இருப்பது போன்ற புள்ளி விவரங்கள், நாட்டு நளனில் அக்கறை உள்ளவர்களை சற்று யோசிக்க தான் வைக்கிறது.

சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாயை பாதுகாப்பிற்காக நமது பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. அந்த தொகையில் சிறிதளவேனும் ஏழ்மையை விரட்ட பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? ஆனால் அது சாத்தியம்தானா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் நமது அண்டை நாடுகளும், மேற்கத்திய நாடுகளும் பாதுகாப்பிற்காக மிக அதிகமான பட்ஜெட்டை ஒதுக்குகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்கா, நம்மை விட பதினைந்து மடங்கிற்கும் அதிகமாக ஒதுக்கியுள்ளது.

உலக நாடுகள் ஒவ்வொன்றும் போருக்கென்றும், பாதுகாப்பிற்கென்றும் ஒதுக்கும் மொத்த தொகையையும், சரியான நோக்கத்திற்கு, சரியான வழியில் செலவழித்தால், ஏழ்மை, பசி, பிணி போன்றவை இல்லாத அழகிய இடமாக நம் உலகம் இருக்கும். ஆனால் இவை சாத்தியமும் இல்லை, சாதாரண மக்காளாகிய நமக்கு இதெல்லாம் அணுகக்கூடியதாகவும் இல்லை.

நாட்டையும் தன் குடிமக்களையும் எண்ணாத ஆட்சியால் என்ன பயன்? முடி யாட்சியில், மக்களிடம் இருந்தே ஆட்சியாளர்கள் வருகிறார்கள். சுயநலமிக்க மக்களிடம் இருந்து சுயநல அரசியல்வாதிகளே வருவார்கள்? தன்னலமற்ற மக்கள் கூட்டத்திலிருந்து தான் தன்னலமற்ற அரசியல் தலைவர்களை வர முடியும்.

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்பது மன்னர் ஆட்சியில்.

மக்கள் எவ்வழி, ஆட்சியாளர்கள் அவ்வழி என்பதே மக்கள் ஆட்சியில்.

சரி, ஏழ்மையை குறைக்க சாமானிய மனிதனாக, நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசித்தால், நிறைய சாத்தியங்கள் உள்ளது. அலசி பார்ப்போம்.

இன்று பல சாஃப்ட்வேர் நிறுவனங்களிலும், கார்ப்பொரேட் நிறுவனங்களிலும் உள்ள முக்கியமான பிரச்சினை செலவு குறைப்பு (COST CUTTING) மற்றும் ஆட்கள் குறைப்பு தான். பல நிறுவனங்கள், லட்சங்களில் சம்பாதிக்கும் 40வயதை தாண்டிய ஊழியர்களை, செலவாகத்தான் (COST) காண்கின்றனரே தவிர, மதிப்பாக (VALUE) காண்பதில்லை.

பத்து முதல் பதினைந்து வருடங்கள் தங்களுக்காக கடினமாக உழைத்தனர் என்றெல்லாம் யோசிக்காமல், 40வயதிற்கு மேல்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய நினைக்கின்றன பல நிறுவனங்கள். இதற்கு அந்நிறுவனங்களின் தரப்பிலிருந்து நியாயமான பல காரணங்களை தெரிவித்தாலும் பாதிக்கபடுபவர்கள் நாம்தானே?

அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் பெரும் மாதச்செலவாக காண்பது, அவர்கள் வீட்டிற்காக வாங்கிய கடன் தொகைக்கு கட்டும் ஈ.எம்.ஐ (EMI) மட்டுமே. பல லட்சங்களை சம்பாதித்த 40வயதை தாண்டியவர்களில் பெரும்பான்மையினர், தங்களது இரண்டாம் வீட்டின் 15வருட EMI தொகையை கட்டிக்கொண்டிருப்பர்.

முதல் சொந்த வீடு என்பது அவசியம். ஆனால் இரண்டாவது சொத்தாக 40வயதிற்கு மேல், 15வருட கடனாக திட்டமிடுவது சரிதானா என்று எண்ண வேண்டும். இதே வருமானம் 15வருடமும் தொடர்ந்து தமக்கு வருமா, கடனை அடைக்கும் திறன் இருக்குமா என்றெல்லாம் யோசிக்க வேண்டுமல்லவா?

வாட்ஸப்பில் சமீபத்தில் வந்த ஒரு பதிவு. எந்த சொத்திற்கும் நாம் நிரந்திர உரிமையாளர்கள் அல்ல, சொத்துப் பத்திரங்களில் தற்காலிக உரிமையாளராக நமது பெயர் இருக்கும் அவ்வளவே. அப்படி இருக்கையில் ஏன் இந்த சொத்து சேர்க்கும் ஆசையில் சென்று நாமாகவே மாட்டிக் கொள்கிறோம்?

இன்று நிறைய சிறுதொழில்கள் செய்வதற்கான சூழ்நிலை அதிகரித்துள்ளன. பல வாய்ப்புகள் பெருகியுள்ள சிறுதொழில்களில், நமக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை தொடங்கி சில தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கலாம். பெருநகரங்களில் வேலை பார்க்கும் பலரும், தங்கள் சொந்த ஊரில் கஷ்டப்படும் சில மனிதர்களுக்கு தங்களால் இயன்றளவிற்கு இவ்வாறு வாய்ப்பு தருகையில், அந்த மனிதர்களின் மொத்த குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்குமே உதவுகிறோம்.

சில ஆண்டுகளில் அத்தொழில்களின் மூலம், மாதாமாதம் சிறிதளவேனும் வரும் வருவாய், அலுவலக சம்பளம் திடிரென்று நின்று போனால் கூட ஓரளவிற்கேனும் நமக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும். நாம் ஆரம்பித்த சிறுதொழில், வேலை இல்லை என்ற சூழ்நிலையில், கண்டிப்பாக நமக்கு கைகொடுத்து உதவும்.

அதிக சம்பளங்களில் உள்ளவர்கள் என்று இல்லை. பொதுவாக நாம் அனைவருமே நலிந்த சமூகத்தினரிடம் உதவி செய்யும் மனப்பாண்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

சமீபத்தில் நண்பர் ஒருவருடன், ஹோட்டலுக்கு சாப்பிட செல்ல நேர்ந்தது. சாப்பாடு பில் தொகையில் சேவை வரியை போடும் ஹோட்டலில் உள்ள சப்ளையர்களுக்கு தான் பொதுவாக டிப்ஸ் தருவதில்லை எனவும் அதற்கு பதிலாக, ஹோட்டலுக்கு வெளியே வெயிலில் நின்றுக் கொண்டு கார்களையும், பைக்குகளையும் பார்த்துக் கொள்ளும் வயதான செக்யூரிட்டி நபர்களுக்கு கொடுத்துவிடுவதாகவும் கூறினார். நல்ல யோசனையாக எனக்கும் தோன்றியது.

மேலும் சூப்பர்மார்க்கெட்டுகளில், மற்ற கடைகளில் பன்னாட்டு குளிர்பானங்களை வாங்கி குடிக்கும் நாம், ரோட்டில் இளநீர் விற்பவர்களிடமும், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்பவர்களிடமும் பேரம் பேசிக்கொண்டிருப்போம். இந்த இடங்களிலெல்லாம் நம் பார்வையை கொஞ்சம் மாற்றி கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு உதவும் மனப்பாண்மையை வளர்த்துக்கொள்ளலாம்.

இவையெல்லாம் போக, சாதாரண மக்கள் பலர், தங்கள் வருமானத்தில் சிறு சதவிகிதத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவ, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தர என்று பல தொண்டுகளை செய்கின்றனர். இவ்வாறு பண உதவி செய்ய இயலாத சிலர், தங்களால் முடிந்த வேறு விதத்தில் நலிந்த சமூகத்தினருக்கு உதவிப்புரிகின்றனர்.

இவ்வுலகில் நமக்கு நிறைய கிடைத்துவிட்டது, பெற்றது போதும், இனி சிறிதானும் சமுதாயத்திற்கு திரும்பி செய்வோம் என நம்மில் ஒரு 10% மக்கள் எண்ணினால் கூட பல ஏழை மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்து விடும்.

குறுகிய வட்டத்தை விட்டு வெளியில் வந்து, பார்வையையும் மனதையும் விஸ்தரிப்போம். நம்மால் முடிந்தளவிற்கு சிலரையாவது வாழவைப்போம்.

தம்மால் ஒரு பத்து ஏழை மக்ககளின் குடும்ப நிலை முன்னேறி உள்ளது என ஒரு நிலை வந்தால், எத்தனை திருப்தியும், மனநிறைவும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும்?! இறந்த பின்னும் இறைவனாக அந்த மக்கள் மனதில் அவர் வாழ்ந்துக் கொண்டு தான் இருப்பார் அல்லவா?

பல நாடுகளின் சரித்திரங்களை மாற்றி எழுதி மகத்தான சாதனைப் படைத்தது, நம்மை போன்ற சாமானிய மனிதர்களே. மக்கள் சக்தி மகத்தானது, இதை உணர்ந்து செயல்படுவோம், சிறு சிறு துளிகள் தான் பெரும் வெள்ளமாக மாறும்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(10)Dislikes(0)
Share
May 142015
 

1-ReachingyourGoals

ஒரு கதை. அது ஒரு அடர்ந்த காடு, அதில் தனியாக வசித்து வரும் அந்த வயதான துறவியை காண ஒருநாள் இளம் சீடன் ஒருவன் வந்தான். “குருவே, எனக்கு அமைதியும், பக்தியும் வேண்டும், அதற்காக தான் உங்களைத் தேடி வந்தேன்” என்றான். துறவியும், “சரி தம்பி, என்னை காண இத்தனை தூரம் எவ்வாறு வந்தாய்?” என்று கேட்டார். சீடனோ, “ஒரு குதிரையில் தான் இங்கு வந்தேன் குருவே” என்றான்.

துறவி சற்று யோசித்துவிட்டு, “சரி தம்பி, நாளை முதல் உனக்கு பயிற்சி ஆரம்பம். நாளை முதல், இங்கு வருவதற்கு, ஒரு ஆற்றுவழி பாதை உண்டு. அதில் படகுகள் ஓடும். அதில் சவாரி செய்து வா. இன்று நீ போகலாம்” என்றார்.

சீடனும், குரு சொன்ன நேரத்தில், அடுத்த நாள் அந்த படகில் ஏறுவதற்கு கரையில் தயாராக நின்றான். அப்போது அவனுடன் சேர்ந்து படகில் இன்னொரு முதியவரும், இருமிக்கொண்டே ஒரு பெரிய மீன் கூடையுடன் ஏறவே, படகோட்டி படகை ஓட்ட ஆரம்பித்தார்.

இளம் சீடனுக்கோ அந்த சவாரியே பெரும் சவாலாக ஆயிற்று. அந்த பெரியவரை பார்த்தாலே அவனுக்கு பிடிக்கவில்லை. முதியவரின் துணிகள், பழையதாகவும், கிழிந்தும் இருந்தன. அவரின் மீன் கூடையிலிருந்து வந்த மணமும், சைவமாகிய அந்த சீடனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவ்வப்போது, பெரியவரின் இருமல் சத்தம் வெறுப்பின் உச்சத்திற்கே அவனை கொண்டு சென்றது.

குருவின் எல்லை வந்தவுடன், ஓடி சென்று, அந்த சம்பவத்தை அவரிடம் அப்படியே விவரித்தான். “எனக்கு அந்த பெரியவரை பார்த்தாலே பிடிக்கவில்லை. தினமும் நான் வருகின்ற நேரத்தில் தான், அவரும் சவாரி செய்கிறார் என்றும் கேள்விப்பட்டேன், அதனால் நாளை முதல் குதிரையிலேயே வந்துவிடுகிறேனே” என்று கெஞ்சினான்.

துறவியோ, சிரித்துக்கொண்டே, “உனக்கு பக்தியை சொல்லித்தர இதை விட ஒரு சரியான அனுபவம் கிடைக்காது. நீ கண்டிப்பாக படகில் தான் வர வேண்டும். பக்தியை அடைய நீ மூன்று நிலைகளை கடக்க வேண்டும். முதல் நிலையை உனக்கு நாளை தெரியும். அதனால் நாளை அந்த மீனவரை கரிசனத்துடன் பார்த்து, ‘என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்று மட்டும் கேள், அவர் கூறும் பதிலை என்னிடம் தெரிவி” என்றார்.

சீடனுக்கோ, மிகுந்த கோபம். அந்த நாளோடு, போதுமென்று ஓடி விடலாமா என்று தீவிரமாக யோசித்தான். ஆனாலும் இந்த செயலில் இறங்கியாயிற்று, என்ன தான் நடக்கிறது என்று நாளை ஒருநாள் மட்டும் பார்த்துவிட்டு முடிவெடுப்போம் என்று தீர்மானித்தான்.

அடுத்த நாள் படகு வந்தவுடன், சிறிது நேர சவாரிக்கு பின் கோபத்தை தள்ளி வைத்துவிட்டு, அந்த பெரியவரிடம் கரிசனத்துடன் “ஐயா, நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்” எனக் கேட்டான். அந்த பெரியவரும் இருமிக்கொண்டே தன் நிலை குறித்து விளக்க தொடங்கினார்.

“தம்பி, நான் யாருமே இல்லாத ஒரு அனாதை. மீன்களை தினமும் கடலிலிருந்து பிடித்து, சந்தையில் விற்பது என் தொழில். அந்த தொழின் வருமானம் மூலம் என்னைப் போன்றே கைவிடப்பட்ட மூன்று அனாதை சிறுவர்களை வளர்த்து,  படிக்க வைத்து வருகிறேன். கடந்த ஆறு மாதமாக, தீவிர இருமல் நோயிற்கு  ஆளானது சற்று வேதனையாக உள்ளது. எனக்கு பின், யார் அந்த சிறுவர்களை காப்பாற்றுவார்கள் என தெரியவில்லை” என்றார் வருத்தத்துடன்.

இந்த பதிலை சற்றும் எதிர்பாராத சீடனோ, மிகவும் வெட்கி, “சரி ஐயா, நீங்கள் தான் சம்பாதிக்கிறீர்களே, நல்ல உடைகளை உடுத்தலாமே?” என்று கேட்டான். பெரியவரோ, “என் காலம் முடிய போகிறது தம்பி, எனக்கு எதற்கு அதெல்லாம்? அந்த பணத்தில் மூன்று சிறுவர்களுக்கும் பள்ளிக்கு கட்டணம் செலுத்திவிடுவேன்” என்றார் பரிதாபமாக.

இந்த உரையாடலை யோசித்துகொண்டே குருவின் இடத்தை அடைந்த சீடனின் கண்கள் கசிந்திருந்தன. குருவை சந்தித்தவுடன் அன்று நடந்தவற்றை அப்படியே தெரிவித்தான். சலனமற்ற அவன் முகத்தை பார்த்த குரு, “இன்று உன்னிடம் ஒரு மாற்றம் தெரிகிறது. பக்தியின் முதல் நிலையான ‘ஏற்றுக் கொள்ளும்’ நிலையை நீ எட்டிவிட்டாய், தொடர்ந்து அதே படகில் பயணம் செய்துவா” என்றார்.

நாட்கள் சில அவ்வாறே ஓடி இருந்தது. சில நாட்கள் சீடன், மீனவரின் மூன்று சிறுவர்களையும், அவர் மீன் விற்று கஷ்டப்படுவதையும் பார்த்துவந்தான். ஒரு கட்டத்தில் தன் குருவின் மீதிருந்த மரியாதை, அந்த மீனவர் மீதும் அவனுக்கு வந்தது. அதை குருவிடமே தெரிவிக்க, குரு சிரித்துகொண்டே “மீண்டும் சில நாட்கள் வா” என்று கூறி அனுப்பினார்.

ஒருநாள் மிகவும் மகிழ்ச்சியுடன் குருவை பார்க்க வந்த சீடன் அன்று நடந்தவற்றை தெரிவித்தான். “குருவே, இன்று அந்த பெரியவரின் இருமலுக்கு புது மருந்தை கொண்டு கொடுத்தேன். அந்த சிறுவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்றும் உத்திரவாதமும் அளித்துள்ளேன். என் அன்பை பார்த்த அந்த பெரியவரிடம் நன்றி கலந்த ஆனந்த கண்ணீர் பெருகியது. அந்த உணர்வு என்னை புது சக்தியுடன், உற்சாகத்துடன் திளைக்க வைக்கிறது” என்றான்.

குருவோ அப்போது பொருமையாக, “சீடனே, இதை தான் உன்னிடம் எதிர்பார்த்தேன். ஆரம்பத்தில் நீ இங்கு வந்தபோது, அந்த பெரியவரின் மீது அத்தனை வெறுப்புகளை தேவையே இன்றி வைத்திருந்தாய். பின்னர் அவரை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டாய். பின்னர் அவருக்கு மரியாதை கொடுக்க ஆரம்பித்தாய். பின்னர் அவரிடம் தன்னலமற்ற அன்பை தர ஆரம்பித்துள்ளாய். இந்த மூன்று நிலைகளை கடந்த உனக்கு பக்தியை அடையும் அனைத்து தகுதியும் வந்துவிட்டது.

அதனால் இவை அனைத்திற்கும் அடிப்படையான “ஏற்றுக்கொள்ளுதலை” மனிதர்களிடமும் தொடங்கு. அனைவரையும் ஏற்றுக்கொள், யாரையும் வெறுத்து  அவதூறை பேசாமல், அன்பை பரப்பு” என்றார்.

சீடனோ, “குருவே மிக்க மகிழ்ச்சி, ஆனால் சமூகத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?” என்றான். குரு மிகவும் நிதானத்துடன், “சீடனே, சக மனிதர்களுக்கும், தனக்கும் ஏதேனும் ஒரு சமூக பிரச்சினை யாராவது மூலம் வந்தால், எவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவரவருக்கு முடிந்த வகையில் அந்த பிரச்சினைகளை எதிர் கொள்ளலாம். ஆனால் காரணமேயின்றி ஒருவரை பார்த்தவுடனே, அவரை வெறுப்பதும், அவரை பற்றி மற்றவர்களிடம் குறை கூறுவதும் தவறு. சுயநலமற்ற அன்பு தான் இந்த உலகத்தை காக்கும்” என்று விளக்கி அனுப்பினார்.

கிட்டத்தட்ட அந்த கதையில் வரும் சீடனின் மனநிலையில் தான், இன்று நாம் பலரும் உள்ளோம். வீட்டிலும், அலுவலகத்திலும், சமூகத்திலும் நாமும், நமக்கு தெரிந்தவர்களும், எவரை பற்றியேனும் தெரிந்தோ தெரியாமலோ, எத்தனை குறைகளை அன்றாடம் கூறுகிறோம்?

ஒருவர் நடந்துக்கொள்ளும் விதம் பிடிக்கவில்லை என்றால், நேரடியாக அவரிடமே சென்று அந்த பிரச்சினையை விவாதிப்பது தான் சிறந்த தீர்வாக இருக்கும். அவ்வாறு செய்வதினால், அந்த நபரிடம் உண்மையிலேயே தவறு இருந்தால், அவர் திருத்திக்கொள்ள நாம் ஒரு சந்தர்பம் தருகிறோம். ஒருவேளை  அவர் அப்படியில்லை என தெரியவந்தால், நம் மனநிலையை மாற்றிக்கொள்ள ஒரு சந்தர்பத்தை பெறுகிறோம்.

இதை விடுத்து சம்பந்தமே இல்லாமல், மற்றவர்களிடம் சென்று அவர் பற்றி தவறான கருத்துக்களை கூறுவது, எந்த வகையிலும் பலன் அளிக்காது. நாம் ஒருவரைப் பற்றி அவதூறு கூறியது, அவருக்கு யார் மூலமாக தெரிய வருகையில், நம் மனநிலை எத்தனை தர்மசங்கடத்திற்கு உள்ளாகும்?

அதனால், அனைத்து மனிதர்களையும் புரிந்துக்கொண்டு, ஏற்றுக்கொள்ள  முயற்ச்சிப்போம். சக மனிதர்களை பற்றி நல்ல விஷயங்களை கூறவில்லை என்றாலும், தவறான வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் கூறாமலிருப்பதே ஒரு உயர்ந்த உள்ளத்தின் அடையாளம் தான்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், எந்த ஒரு மனிதரும் அடுத்த மனிதரைப் பற்றி குறை கூறுவதில்லை என்று ஒரு சமுதாயம் இருந்தால் இந்த உலகம் எத்தனை அருமையாக இருக்கும்!!

எது எப்படி சாத்தியமாகும் என நினைப்பவர்கள், “நான் அடுத்தவர்களை பற்றி குறை கூறுவதை இன்றிலிருந்து தவிர்ப்பேன்” என கடைபிடிக்க தொடங்கினால் கூட, நம்மை சுற்றி ஒரு சிறந்த சமுதாயம் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டுமே?

அமெரிக்காவில் நீண்ட நாட்கள், “FIRST LADY” ஆக பெயர் பெற்ற திருமதி.எலியனார் ரூஸ்வெல்ட் அவர்கள் மக்களுக்காக கூறிய மிக பிரபலமான வரிகள்..

SMALL MINDS DISCUSS ABOUT PEOPLE,

AVERAGE MINDS DISCUSS ABOUT EVENTS, BUT

GREAT MINDS DISCUSS ABOUT IDEAS….!!!

இந்த மூன்று வகைகளில், நாம் தினமும் விரும்பி பேசுகின்ற, விவாதிக்கும் விஷயங்களை வைத்தே, நம்மை யார் என்று நாமே சுய பரிசோதனை செய்து தெரிந்துக்கொள்ளலாம். மேலும், தனது உயர்ந்த லட்சியத்தை மட்டுமே சிந்தித்து வாழும் மனிதர்களுக்கு, சக மனிதர்களை பற்றி குறை கூறும் நேரமும் எண்ணமும் இருப்பதில்லை என்பதும் நிதர்சனம்.

நம்மை சுற்றியுள்ள மனிதர்களை ஏற்றுக்கொண்டு, தன்னலமற்ற அன்பை வழங்குவதும், மாபெரும் சிந்தனைகளை வளர்த்துக்கொள்தலும் எத்தனை உன்னதமான செயல்?! இவற்றை கடைபிடிக்கையில், வாழும்போதே நம்மை சுற்றி அழகான அமைதியான சொர்க்கம் அமையும் என்பது உறுதி. நம் பாதையும், வாழ்க்கையும் நம் கையில் தானே இருக்கிறது?

உங்கள் பயணம் அழகானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைய வாழ்த்துக்கள்…

பயணம் தொடரும்,

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(27)Dislikes(0)
Share
Mar 142015
 

 

1

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் இளம்பெண் அவர். மிகவும் முற்போக்கான சிந்தனையும், படைப்பாற்றல் திறமையும் உடையவர். அவருக்கு  மாப்பிள்ளை தேடும் நோக்கத்தில் அவரின் பெற்றோர்கள், வழக்கமாக அனைத்து பெற்றோர்களும் செய்வது போல் MATRIMONIAL SITE இல் அவரைப் பற்றிய விவரங்களை தந்து, தகுந்த மாப்பிள்ளை வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

பெற்றோர்களின் இந்த விளம்பரம், மிகவும் வழக்கமான ஒன்றாக உள்ளது என்று, அந்த பெண்ணே ஒரு இணையதளம் தொடங்கி அதில் அவர் பற்றியும் தனக்கு வரவிருக்கும் கணவர் எவ்வாறு இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

வித்தியாசாமான முறையில் தன்னைப் பற்றியும் தனது எதிர்பார்ப்புகளையும் பற்றியும் அவர் கொடுத்த விவரங்கள், இணையத்தில் வேகமாக பரவி, ஏகப்பட்ட விருப்பங்களும், ஆதரவுகளும் கிடைத்தது.

கூடவே வருங்கால கணவரை பற்றிய இவர் தெரிவித்திருந்த இரு நிபந்தனைகள் சர்ச்சையைக் கிளப்பி அதிர்ச்சியும் அளித்தது. அந்த நிபந்தனைகள்..

– முதலாவது, குழந்தைகளை வெறுப்பவராக இருக்க வேண்டும்.

– இரண்டாவது, அவரது பெற்றோர்களிடமோ, குடும்பத்திலோ பெரிதாக ஆர்வம் உள்ளவராக இருக்க கூடாது.

இவரின் இந்த நிபந்தனைகளை ஆதரித்தும், எதிர் கருத்தை கொண்டவர்களுக்கு  பதில் அளிக்கும் வகையில், வேறு ஒரு பெண்ணின் பகிர்வு இவ்வாறாக இருந்தது.. “பெருநகரங்களில் நடுத்தர வர்கத்தின் வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது? காலை 5மணிக்கு எழவேண்டும், குழந்தைகளுக்கும், கணவருக்கும் உணவு தயாரித்து, குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்ய வேண்டும். காலையில் உண்ணாமலே அவசரம் அவசரமாக கிளம்பி, 2மணி நேரம் கூட்டநெரிசலில் பேருந்தையோ, ரயிலையோ பிடித்து அலுவலகம் செல்ல வேண்டும். அலுவலகத்திலும் பல பிரச்சினைகளை சந்தித்து, பின் மீண்டும் அதே 2மணி நேரம் வீட்டிற்கு பயணம்.

களைப்புடன் வீட்டிற்கு வந்தவுடன், வீட்டு வேலைகளை முடித்து, குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லிக்கொடுத்து, வீட்டில் உள்ள பெரியோர்களையும் அனுசரித்து நடக்க வேண்டும். இதே போராட்டத்தில் கிட்டத்தட்ட 20வருடங்கள் வாழ்ந்தபின், குழந்தைகளும் ஒரு சமயத்தில் எதிர்காலத்திற்காக வீட்டை விட்டு வேறிடம்  சென்று விடுகையில், இவர்களுக்கு கடைசியில் எஞ்சி இருப்பது, தனிமையும், வியாதியும், முதியோர் இல்லங்களும் தான்.

இதில் எங்கே பெண்கள் வாழ்கின்றனர்? அதனால் இணையத்தில் அந்த இளம்பெண் கூறியுள்ள எதிர்பார்ப்புகளும் கருத்துக்களும் தவறில்லை” என  தெரிவித்திருந்தார்.

பல வேலைகளில், பெண்கள் திருமணத்திற்கு மனரீதியில் தயாராகாத நேரத்தில், சமுதாயம் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதால், திருமணம்  சுமையாகவும் மன அழுத்தம் தரும் வைகையிலும் அவர்களுக்கு வாழ்க்கையை அமைத்து விடுகிறது. எனவே இணையத்தில் அந்த பெண் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள்  இன்றைய புதுயுக இந்தியப் பெண்கள் பலரின் மனநிலை” என்று மேலும் சிலர் தெரிவித்திருந்தனர்.

வேறு சிலரோ, “கணவன் மட்டும் தான் வேண்டும், அவரது குடும்பம் தேவையில்லை, அந்தளவிற்கு கணவனை சேர்ந்தவர்கள் எங்களுக்கு துன்பத்தை தருகின்றனர். மேலும் நாங்கள் மனக்க விரும்பியது கணவரைத் தான் தவிர, அவர் குடும்பத்தை அல்ல” எனவும் குறிப்பிட்டிருந்ததை காண முடிந்தது.

பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் தான் என்று இல்லை, காதல் திருமனங்களிலும் பிரச்சினைகள் அதிகம் தான். நிறைய பெண்களின் வாழ்க்கை இன்று போராட்டம் தான்” என்றும் சிலர் கூறியிருந்தனர்.

இந்த நிகழ்வையும், கருத்துக்களையும் சமீபத்தில் காண நேர்ந்தது. மேலே சிலர் தெரிவித்துள்ள பிரச்சினைகள் நம் சமுதாயத்தில் பெண்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தருகின்றன என்றும், அது எல்லை மீறுகின்ற போதுதான், இது போன்ற எண்ணச் சிதறல்கள் வெளிவருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

நாம் உண்மையில் சமூகம் மீது அக்கறை உள்ளவர்கள் எனில், பெண்கள் வாழ்வின் தினசரி பிரச்சினைகளைப் புரிந்துக்கொள்தல் வேண்டும். அவர்களுக்கு சிறந்த வேலை சூழ்நிலைகளையும், சமூக சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுத்து, அவர்களை மகிழ்வுடன் இருக்க செய்ய வேண்டும். குறைந்தது, அவர்கள் முன்னேற்றத்திற்கு தடையாய் இல்லாமல், அவர்கள் நல்ல செயல்களுக்கு இடையூராய் இல்லாமலும் இருக்க வேண்டும். அவர்களுக்கு முழு மரியாதையும், அங்கீகாரமும், ஆதரவும் கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும்.

இது ஒருபுறம் என்றால், இரண்டாவது பக்கமாக, விட்டுக்கொடுத்தலும்  சகிப்புத்தண்மையும் இப்போதுள்ள தலைமுறையினரிடம் குறைந்து வருகிறதோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. பொருளாதார சுதந்திரம், யாரையும் சார்ந்திருக்க வேண்டாம் என்ற எண்ணத்தை தந்திருந்தாலும், அதை தவறாக உபயோகப் படுத்தும் சிலரையும் இன்று காண்கிறோம்.

இப்போது இரண்டு பக்கங்கள். ஒன்று பெண்களுக்கு பிரச்சினைகளும், மன அழுத்தமும் தராத ஒரு சமுதாயமாக இருத்தல், மற்றொன்று விட்டுக்கொடுத்தல் மற்றும் சுயநலமற்ற வாழ்க்கை முறைகளை இந்த தலைமுறையினருக்கு  உணர்த்துதல்.

இந்த இரு விஷயங்களையும் குறித்து, என்னுள் எழுந்த சில கேள்விகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பிகிறேன்.

  • பெண்களுக்கு நல்லாதரவும் சமத்துவமும் இருந்து, அவர்கள் மகிழ்வுடன் உள்ள சமுதாயமாக இருக்க நாம் அனைவரும் என்ன செய்யலாம்?
  • கூட்டு குடும்பம் என்ற கலாச்சாரம் காலப்போக்கில் முற்றிலுமாக அழிந்துவிடுமா? இன்று கணவன் அல்லது மனைவி என்ற ஒரே ஒரு உறவு மட்டும் போதும் என நினைக்கும் சில இளைஞர்களின் இந்த மாற்றம், அடுத்த தலைமுறையில் ஒரு உறவும் வேண்டாமென நினைக்க வைக்கும் பாதையாகிவிடுமா? அதை நம்மால் முடிந்தளவிற்கு தடுக்கும் விதத்தில், அடுத்த தலைமுறைக்கு நல்லது எது, தீயது எது என்றும், உண்மையான, சுயநலமில்லாத வாழ்வு எது எனவும் புரியவைப்பது எப்படி?

ஒரு மகளையும், மகனையும் கொண்ட தந்தையாகிய என்னை சமீபத்தில் செய்தித்தாள்களிலும் இனையத்திலும் வந்த இது போன்ற பல பகிர்வுகள் உலுக்கியதால், இந்த எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து, உங்கள் பதில்களை எதிர்பார்க்கிறேன்.

நம் குழந்தைகளை எவ்வாறு நல்வழியில் நடத்துவது? அவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சியான வாழ்வை எவ்வாறு கற்றுத் தரப்போகிறோம்? உங்களுக்கு தெரிந்தால், B+ வாசகர்கள் அனைவருடனும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..

PARENTING (குழந்தை வளர்த்தல்) பற்றி பல கருத்து பறிமாற்றங்களும், ஆராய்ச்சிகளும் நடந்து வரும் இந்த வேலையில், உங்களது சிறந்த பொருத்தமான கருத்து, இந்த பகிர்வைப் படிக்கும் இன்றைய மற்றும் நாளைய பெற்றோர்களுக்கு உதவலாம். சிறந்த சமுதாயம் அமையவும் வழிவகுக்கலாம்.

விமல் தியாகராஜன் & B+ TEAM.

Likes(11)Dislikes(0)
Share
Jan 152015
 

1

“நீண்ட இரவு முடிவுறுகிறது, கடும் துன்பம் விலகுகிறது, பிணம் போல் கிடந்த உடல் விழிக்கிறது. வரலாறும் மரபுகளும் கூட எட்டிப்பார்க்க முடியாத காலத்திலிருந்து புறப்பட்ட, நம் தாய்நாட்டின் குரல் கம்பீரமாக, இந்நேரத்தில் நம்மை நோக்கி வருகிறது. நாளுக்கு நாள் அதன் ஒலி அதிகரித்துக் கொண்டே வந்து தூங்கிக் கொண்டிருப்பவர்களை தட்டி எழுப்புகிறது.

தூங்கியவன் விழிக்கிறான்! அந்த குரல் உயிரிழந்த நிலையில் இருக்கும் எலும்புகளுக்கும் தசைகளுக்கும் உயிர்துடிப்பை தருகிறது. சோம்பல் நீங்க தொடங்குகிறது. நம் பாரதத்தாய் நீண்ட ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிக்கிறாள். அவளை யாரும் இனி தடுக்க முடியாது. இனி அவள் தூங்க போவதுமில்லை. புறசக்திகள் எதுவும் இனி அவளை அடிமைப்படுத்த முடியாது, ஏனெனில் அவளது காலடியில் எல்லையற்ற பேராற்றல் எழுந்துக் கொண்டிருக்கிறது.

என் சகோதரர்களே, நாம் அனைவரும் கடுமையாக உழைப்போம். தூங்குவதற்கு இது நேரமில்லை. மகத்தான வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. எதிர்கால இந்தியா நம் உழைப்பை பொருத்தே அமைய இருக்கிறது. எழுந்திருங்கள், விழித்திருங்கள்…!!”

– சுவாமி விவேகானந்தர், 29 ஜனவரி 1897 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் பேசியது (சிகாகோ பாராளுமன்றத்தில் தனது உலக பிரசித்தி பெற்ற உரையை முடித்து இந்தியா திரும்புகையில் அவர் முதலில் தமிழகம் வந்தது குறிப்பிடத்தக்கது)

சுவாமிஜியின் இந்த பொன்னான வரிகளை படித்தவுடன் எனக்குள் ஒரு வியப்பு, ஒரு ஈர்ப்பு! வெள்ளையர்கள் நம்மை ஆட்சி செய்யும்போது, அதாவது நூறாண்டுகளுக்கு முன்பே அவர் கூறிய இந்த வரிகள் இன்றும் பொருந்துமா, செயல்படுத்தக் கூடிய விஷயம்தானா?

சமீபத்தில் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பேருந்தில் சென்றேன். அப்போது பேருந்தில் என் சீட்டருகில் ஒரு இளைஞர் வந்து அமர்ந்தார். இருவரும் பரஸ்பர அறிமுகம் செய்துக் கொண்டோம். அவர் பெயர் நாராயணன் என்றும், பெங்களூரில் ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் தற்போது பணிபுரிகிறார் என்றும் தெரிவித்தார். அவருடன் நடந்த உரையாடல் சுவாமிஜியின் வரிகளைக் குறித்த எனது கேள்விக்கு பதிலாக அமைந்தது.

நாராயணன், புதுச்சேரிக்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்து, படித்திருக்கிறார். அவரைப் பற்றி மேலும் அவர் கூறியது…
“நான் சிறு வயதிலிருந்தே அரசு பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் தான் படித்தேன். அதனால் ஆங்கிலம் என்றாலே சிறு வயதிலிருந்தே ஒரு பயம். கல்லூரியிலும், வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் ஆங்கிலம் தெரியாமல் தாழ்வு மனப்பாண்மையில் நொந்துபோவேன். அப்போதெல்லாம் யாரிடமும் பேசவும் மாட்டேன். ஆரம்ப நாட்கள் மிகக் கடினமாகத் தான் ஓடியது.

ஆனாலும் மனம் தளராமல், கடின உழைப்பினால், சிறிது சிறிதாக ஆங்கிலத்தை கற்றேன். அன்றாட பேச்சிற்கு தேவைப்படும் ஒவ்வொரு வார்த்தையாக குறித்துக் கொண்டு, அதன் அர்த்தங்களையும் சேகரித்து பயிற்சி செய்தேன்.

இவ்வாறாக சுமார் 3000 ஆங்கில வார்த்தைகளும், அதன் அர்த்தங்களும், எங்கே எவ்வாறு அந்த வார்த்தைகள் பயன்படுகிறது என ஒவ்வொரு வார்த்தைகளை வைத்தும் ஐந்து வரிகள் கொண்ட ஒரு தொகுப்பை தயார் செய்து வைத்துள்ளேன். பிறந்த ஊர் வரும்போது இந்த தொகுப்பை பயன்படுத்தி, சுற்றியுள்ள பல அரசு பள்ளிகளில் சென்று இலவசமாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுக்கிறேன்.

நான் பட்ட கஷ்டங்களும், என்னுள் ஆரம்பத்திலிருந்த தாழ்வு மனப்பாண்மையும் இந்த மாணவர்களுக்கு எதிர்காலத்தில் இருக்க கூடாது என்பதில் மிக அக்கறையாக உள்ளேன்.

ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அது தெரியாததனால் ஒரு பிரச்சினையும் இல்லை, உங்கள் தாழ்வு மனப்பாண்மையை தூக்கி எறியுங்கள் என நம்பிக்கையும் அளிப்பேன். மாணவர்களை தயார் செய்யும் இந்த வேலைகளினால், பெரிய திருப்தியும், மனநிறைவும் ஏற்படுகிறது.

இப்போது எங்கள் நிறுவனத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கும் ஒரு பெரிய டீமை கையாளும் நிலைமையில் வளர்ந்துள்ளேன். ஆனாலும் என்னைத் தவிர அவர்கள் அனைவரும் ஹிந்தியில் சிலசமயம் பேசும்போது சிறிய வருத்தம் இருக்கும், என் அடுத்த இலக்கு ஹிந்திதான் என்று முடிவு செய்துள்ளேன்” எனறு முடித்தார்.

எனக்கு அவர் பேச்சை கேட்டவுடன் மிகப்பெரிய ஆச்சரியம். “ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்தும், இத்தனை பெரிய சாதனைகளை செய்கிறீர்களே?” எனக் கேட்டேன்.

நாராயணனோ மிக அமைதியாக “நான் செய்வதெல்லாம் ஒன்றுமே இல்லை, எனக்கு தெரிந்த நிறைய நண்பர்கள், பல சமுதாய முன்னேற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மரங்கள் நடுவது, இயற்கை விவசாயங்களில் ஈடுபடுவது, சில பகுதிகளுக்கு சென்று சுத்தம் செய்வது, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் சென்று கணக்கு, ஆங்கிலம் போன்ற பாடங்களை சொல்லித்தருவது, ஆதரவற்ற குழந்தைகள் இருப்பிடம் மற்றும் முதியோர்கள் இல்லம் சென்று அவர்களுக்கு உதவுவது, என பல சேவைகளை அவரவர்களுக்கு முடிந்தளவு தனியாகவோ, குழுவாகவோ செய்கின்றனர்” என்றார்.

2

சமூக வலைதளங்களில் இதுபோல் சில சாதனைகளைப் நாம் படித்திருப்போம். ஆனால் அத்தகைய சாதனையாளர்களில் ஒருவரான நாராயணனை சந்தித்தும் அவருடன் நடந்த உரையாடலும், எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அவர் மாதிரியான இளைஞர்கள் தான் இன்று நாட்டிற்கு தேவை, அவ்வாறு இருந்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம், வலிமையான பாரதத்தை வரும்காலத்தில் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையையும் தந்தது.

விவேகானந்தரின் மேலேக் கூறியுள்ள வரிகளின் கூடவே, “தன்னலமற்ற நூறு இளைஞர்களை தாருங்கள், நம் நாட்டை வல்லரசாக மாற்றித் தருகிறேன்” எனக் கூறிய அவரது வரியும் நியாபகத்திற்கு வந்தது.

மஹாபுருஷர்களின் தீர்க்கதரிசனமும், வாக்கும் என்றுமே பொய்த்ததில்லை. அதனால், சிங்கமென எழுவோம், மகத்தான காரியங்களின் மூலம் இந்தியர்கள் யாரென உலகிற்கு பறை சாற்றிக் கொண்டே இருப்போம். நம்மால் எதுவும் முடியும் என்று நம்பிக்கையுடன் செயல்பட தொடங்குவோம்…!

நண்பர்களே, இந்த தமிழர் திருநாளில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் B+ டீமிற்கு உங்கள் ஆதரவும், ஊக்குவிப்பும் தொடரும் என மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

இரு பார்வையுமற்ற சென்னை மாணவி IAS தேர்வெழுதி வெற்றிப்பெற்று சாதித்ததால், இந்த மாத சாதனையாளர்கள் பகுதியில் அவரைப் பற்றி விரிவாக காணலாம். புதிய எழுத்தாளர்களை தொடர்ச்சியாக அறிமுகப் படுத்தும் நம் நோக்கத்தில் இந்த மாதம் மூன்று புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை காணலாம்.

நெஞ்சை நெகிழ வைக்கும் கதையான “மாற்றம் எங்கே” வையும், மற்ற அருமையான பதிவுகளையும், B+இன் இரண்டாம் ஆண்டு சிறப்பு இதழாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கள் மற்றும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(16)Dislikes(0)
Share
May 142014
 

hd-wallpaper-nature-40

வணக்கம் நண்பர்களே!

ஒரு வாரத்திற்கு முன்னர் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரிடம் B+ இதழைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், என் முயற்சிகளைப் பாராட்டிவிட்டு எதேச்சையாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டுச் சென்றார் “இப்பொழுதெல்லாம் மக்களின் கவனத்தை ஈர்ப்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. செய்தித்தாள்களில் கூட பத்து சினிமா செய்திகளுக்கு மத்தியில் தான் ஒரு நல்ல செய்தியை வெளியிடுகின்றனர். இதில் அவர்களை குறை சொல்வதற்கில்லை. மக்களும் சினிமா விளையாட்டு போன்ற பொழுதுப்போக்கு விஷயங்களில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே தான் மக்களைப் படிக்க வைக்க அதுபோன்ற கமர்ஷியல் விஷயங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. அப்படியிருக்க உன்னுடைய கட்டுரைகளை மக்கள் எப்படி விரும்பிப் படிப்பார்கள் என எதிர்பார்க்கிறாய்?”  என்றார்.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் அவர் கேட்ட கேள்விக்கு அப்போது என்னிடம் எந்த பதிலும் இல்லை. அன்று இரவு சரியான உறக்கமும் இல்லை. ஒரு வேளை தவறான பாதையை தெரிவு செய்து விட்டோமோ? நாம் கூற விரும்புவது மற்றவர்களைச் சென்றடையாவிட்டால் நம் உழைப்புக்கு என்ன பலன்? என்று என்னுள் பல கேள்விகள். ஆனால், மறுநாள் எனக்குள் எழுந்த அத்தனை கேள்விகளுக்கும் விடையாய் வந்தது ஒரு மின்னஞ்சல்.

முகம்மது ரஃபீக் என்பவர் அனுப்பிய அந்த மின்னஞ்சல் இது தான்.

“சார், உங்களது மார்ச் மாத இதழைப் எதேச்சையாக ஒரு சமூக வலைத்தளப்  பகிர்வின் மூலம் படித்தேன். அதில் நீங்கள் முதல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததைப் போலவே, ஒரு பைக் விபத்தைக் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நான் சந்திக்க  நேர்ந்தது. ஒரு நண்பரைப் பார்க்க சென்னை முகப்பேரில் உள்ள அவரது வீட்டிற்கு  எனது பைக்கில் சென்றுக் கொண்டிருந்தேன்.

அப்போது முகப்பேர் சிக்னலைத் தாண்டி ஒரு சிறியக் கூட்டம். பைக்கை ஓரங்கட்டிவிட்டு உள்ளே நுழைந்து பார்த்தால், தலையில் நல்ல அடியுடன் ரத்தம் வழிய 25 வயதுள்ள வாலிபர் கீழே மயங்கி விழுந்துக் கிடக்கிறார். கூடியிருந்த அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த அதே மாதிரியான சம்பவம், அதே மாதிரியான உரையாடல்கள் நடந்தது. 2-3 காவல் அதிகாரிகளும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ஒரு ஆச்சரியம். நொடிப்பொழுதில் என்னுள் ஏதோ ஒரு மாற்றம், அனுதாபத்துடன் கூடிய ஒரு மனித நேயம் எட்டிப் பார்த்தது. என்ன நடந்தாலும் சரி, இந்த மனிதனுக்கு தேவையான உதவியைச் செய்வோம் என்று மனது சொல்லியது. முதலில் அடிப்பட்டவரை கொஞ்சம் ஓரமாக படுக்க வைத்து ஓய்வெடுக்க வைத்தேன். அவரது செல்ஃபோனில் அதிர்ஷ்டவசமாக அவர் நண்பரின் அழைப்பு வரவே, நடந்த விஷயத்தைக் கூறினேன். கூட்டத்தில் உள்ள ஒருவர் அடிப்பட்டவருக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஃபோன் பேசி முடித்தவுடன், அடிப்பட்டவரின் தலையில் ரத்தம் வந்த இடத்தை நான் பார்த்தபோது, நல்ல ஆழமாக கீரி இருந்தது. கூட்டத்தில் காவலாளிகள் இருந்தும் கூட, அடிப்பட்டவரை அழைத்துச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க கிளம்பினேன். அவரை என் பைக்கில் உட்கார வைத்து அழைத்து சென்றபோது கூட்டத்தினர் ஒவ்வொருவரும் என்னை வித்தியாசமாகவும், மிகவும் வியப்புடனும் பார்த்தது நன்றாகத் தெரிந்தது.

மருத்துவமனையில் மருத்துவரோ, காயம் நல்ல ஆழமாக உள்ளது, தையல் போட்டு விடலாமா அல்லது முதலுதவி மட்டும் போதுமா என்றுக் கேட்க எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஐந்து நிமிடங்களுக்கு முன் ஃபோனில் பேசியதன் பலன், சரியான தருணத்தில் அடிப்பட்டவரின் இரண்டு நண்பர்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். அவர்கள் காயத்தைப் பார்த்து, தையல் போடுமாறுக் கேட்டுக்கொள்ளவே, தையல் போடப்பட்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தார் இளைஞர்.

சில நிமிடங்களில் ஓரளவுக்குத் தெளிவான இளைஞரும், அவர் நண்பர்களும்   எனக்கு நன்றித் தெரிவித்தனர். அவர்கள் அனைவரின் கண்களில் கண்ட நன்றி உணர்ச்சி, என்னை அன்று ஒரு மனிதனாக உணர வைத்தது. வாழ்க்கையில் அன்று உருப்படியாக ஒரு விஷயத்தை செய்ததாக உணர்ந்தேன்.

இதற்குமுன் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், காவலாளிகளே உள்ளார்கள், மருத்துவமனையில் பல கேள்விகள் வரும், நமக்கு ஏன் தேவையில்லாதப் பிரச்சினை என்று ஒதுங்கிருப்பேன். எதேச்சையாக உங்கள் இதழைப் படித்ததன் பாதிப்பு, என்னை சற்று வித்தியாசமாக யோசித்து நடந்துக் கொள்ள வைத்தது. தொடர்ந்து இதுப்போன்றக் கட்டுரைகளை நீங்கள் எழுதவும், என்னைப் போல் ஓரிருவரின் மனதிலாவது மாற்றத்திற்கான விதையை விதைக்கும். அதனால் எவரேனும் சமுதாயத்தில் பலனடைவர்” என்று முடித்திருந்தார்.

2

இதேப்போல் ஹைத்ராபாத்திலிருந்து மற்றொரு வாசகர், B+ இன் ஏப்ரல் மாத இதழைப் படித்துவிட்டு அவரது வீட்டு பால்கனியில் பறவைகளுக்காக நீரும், அரிசியும் வைப்பதாகவும் அதனை ஃபோட்டோ எடுத்தும் அனுப்பியிருந்தார்.

3

இப்போது திரும்ப முதல் பத்தியில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு வருகிறேன். தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் கோடிக் கணக்கில் உள்ளனர். அந்த அனைவரும் B+ இதழை படிப்பார்கள் என்றோ, அனைவரிடமும் மாற்றம் உடனே ஏற்படும் என்றோ நாம் எதிர்பார்க்கவில்லை. இதனைப் படித்துவிட்டு ஒருவருக்கேனும் சில கேள்விகள் எழுந்து, அவர்களுக்குள் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட நமக்கு அது மிகுந்த மகிழ்ச்சிதான். அவ்வாறான சிறந்த மனிதர்களின் எண்ணிக்கை ஒன்று, பத்து நூறாகும் என்பது தான் நமது கனவும், நம்பிக்கையும்.

கீழுள்ள படமும் அதில் உள்ள வாசகமும் நான் சொல்ல விரும்புவதை எளிமையாகத் தெரிவிக்கிறது.

1

நண்பர்களே, நமது B+ இதழ் ஒரு சிறிய முயற்சி. நல்ல விஷயங்கள் பரவுவதற்கு, கண்டிப்பாக காலம் சற்று அதிகமாகவேத் தேவைப்படும். B+ இதழ் ஒரு நல்ல சிந்தனையின் விதை. சிறு விதைக்குள் தான் பல பெரும் விருட்சங்கள் ஒளிந்துக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு மாபெரும் பயணத்திற்கும், முதல் அடி எடுத்து வைத்து தான் துவக்க வேண்டும். போகும் பாதை தூரம் தான், ஆனால் பயணம் தொடங்கிவிட்டது. நிறைய நல்ல மனிதர்களின் மனமும், சிந்தனையும் இந்த  இனியப் பயணத்தில் பங்கேற்கும்போது நம்மைச் சுற்றி சிறந்த சமுதாயம் படைக்கப்பட்டிருக்கும்.

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ Team

Likes(2)Dislikes(0)
Share
Apr 132014
 

index

மதுரை!! அலுவலகப் பணியை முன்னிட்டு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த அழகிய நகருக்கு பலமுறை செல்ல நேரி்ட்டதுண்டு. ஒருமுறை அவ்வாறு சென்றபோது, அங்கு நடந்த ஒரு அருமையான நிகழ்வு, அதன் தொடர்பாக என்னுள் எழுந்த பலக் கேள்விகளை உங்களுடன் இந்த மாதம் பகிர்ந்துக் கொள்கிறேன்.

மதுரையில் ஒரு பிரசித்திப்பெற்ற தனியார் நிறுவனம். அந்நிறுவனத்தின் தொழிற்சாலைக்குள்ளே நுழைய வேண்டுமெனில், நம் பைகளை வாயிலில் உள்ள பாதுகாப்பு அதிகாரி (SECURITY OFFICER) சோதணையிட்டுத் தான் உள்ளே அனுப்புவார். கேட்டருகில் உள்ள அவரது உதவியாளரிடம் உள்ளேக் கொண்டுசெல்லும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் விவரங்களைப் பதிவு செய்துக்கொள்ளுமாறும் கூறினார்.

மேளாலரின் அறையை விட்டு வெளியே வந்த நான், தொழிற்சாலைக்கு நுழையுமுன் கேட்டருகில் உள்ள அந்த செக்யுரிட்டி உதவியாளரிடம் பதிவு செய்ய சென்றேன். அந்த உதவியாளர், அப்போது தான் புதியதாக வேலைக்கு சேர்ந்திருக்க வேண்டும் என்றும், படிப்பறிவு சிறிது குறைவு என்பதை அவர் நடந்துக் கொண்ட விதமும், அவரது பேச்சும் எடுத்துக் காட்டியது. “சார், உங்களிடம் உள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் விவரங்களை இந்த படிவத்தில் எழுதி, நீங்கள் கிளம்பும்போது உள்ளே சந்திக்கும் அலுவலரிடம் கையெழுத்து வாங்கிவிடுங்கள்” என்றுக் கூறினார்.

நானும் ஒவ்வொருப் பொருளாய் பையினிலிருந்து வெளியே எடுத்து, படிவத்தில் எழுத ஆரம்பித்தேன். செல்ஃபோன், லேப்டாப், டேட்டாகார்டு (DATA CARD), ஹார்டு டிஸ்க் (HARD DISC), பெண் டிரைவ் (PEN DRIVE) என எல்லாப் பொருள்களையும் காட்டிப் படிவத்தில் பதிவு செய்ததை ஆர்வமாகப் பார்த்தார் அந்த உதவியாளர். செல்ஃபோன், லேப்டாப் தவிர மற்ற பொருள்கள் எதற்கு பயண்படுகிறது என்று ஒவ்வொன்றைப் பற்றியும் அவர் கேட்கவும், நானும் ஓரிரு வரிகளில் அந்தப் பொருள்களின் பயண்பாட்டினை அவரிடம் தெரிவித்தேன்.

“இந்தப் பொருள்களின் மூலம், உலகமே உள்ளங்கையில் அடங்கிவிடுகிறது” என நான் முடிக்கவும், சற்றும் தாமதிக்காது அந்த நபரோ, “சார், மனிதன் எத்தனையோ நல்லவற்றைக் கண்டுபிடித்துவிட்டான், மிகவும் சந்தோஷமான விஷயம் தான், ஆனால் ஓரிரு வருடங்களுக்கு முன் நம்மூரில் நிறைய சிட்டுக்குருவிகளும், சின்னஞ்சிறு பறவைகளும் விலங்குகளும் சுற்றிக் கொண்டே இருக்கும், இப்போதெல்லாம், அவற்றைக் காண முடியவில்லை, உங்களை மாதிரி படித்தவர்கள் அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பீர்களா” என்று கேட்டதும், நான் திடுக்கிட்டுப் போனேன்.

வெகு சாதாரணமாக அந்தக் கேள்வியைக் கேட்டு முடித்த அவர், அடுத்த வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் இன்றும் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரு நியாயமானக் கேள்வி அது. என்ன ஆகிவிட்டது மனித இனத்திற்கு? நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது இந்தப் முன்னேற்ற பாதை? முன்னேற்றத்தையும் விட்டுக் கொடுத்துக்கொள்ளாமல், நாம் செய்யவேண்டிய சில முக்கியமான கடமைகள் என்ன? பரபரப்பாக இயங்கிக் கொண்டும் ஓடிக்கொண்டிருகும் நாம், ஓரிடத்தில் நின்று நம்மையே சிலக் கேள்விகள் கேட்டுப் பார்த்தால் பல விஷயங்கள் தெரியவரும்.

1

எத்தனையோ தினசரி வசதிகளை விஞ்ஞான மற்றும் பொருளாதார ரீதியில் நாம் பெற்றுவிட்டாலும், நிம்மதியும், உடல் ஆரோக்கியமும் சென்றத் தலைமுறையினரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறதோ என்ற கேள்வி எழாமல் இல்லை.

முன்பெல்லாம், இணையத் தளம் இல்லை, சமூக வலைகளில் இன்றுபோல்  பல ஆயிரக்கணக்கில் நண்பர்களை தனது அக்கவுண்டுகளில் குவித்து வைத்திருப்போரும்  இல்லை. ஆனால் உண்மையான உறவும், தோழமையும், உயிர்க்காக்கும் ஒன்று இரண்டு நண்பர்களும் கட்டாயம் இருந்திருப்பர். இன்றையக் காலத்தில் மருத்துவமணையில் அட்மிட் ஆகியிருந்தும், அட்டெண்டராக (ATTENDER) யாரையாவது தேடினால், நம் வீட்டில் உள்ளவர்களைத் தவிர, ஒருவர் கிடைப்பது கூட மிகக் கடிணமாக உள்ளது. நமது நண்பர்கள், உறவினர்கள் அனைவரின் வேலைப்பளுவும், நேரமிண்மையும் நமக்குத் தெரிவதனால், நாமும் அதை எதிர்பாராமல் இருந்து விடுகிறோம்.

மரம் வளர்ப்பது மட்டுமில்லை, மனிதநேயம் வளர்ப்பதும் இன்றையக் காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. எப்படி இந்தக் பிரச்சினைகளுக்கெல்லாம் விடைகாணப் போகிறோம்? இனி வரும் தலைமுறைகளுக்கு முன்னேற்றத்துடன் சேர்த்து, என்னென்ன நல்ல விஷயங்களை விட்டுச் செல்லப் போகிறோம்?

சுயநலமின்மை, விட்டுக்கொடுத்தல், தேசிய சிந்தனை, சமுதாயத்தில் பழகுமுறை, சகோதரத்துவம், இயற்கையின் மீது அக்கறை, இயற்கையோடு ஒன்றி வாழ்தல் எனப் பல விஷயங்களை குழைந்தைகளுக்கு சொல்லித்தரும் பெரும் கடைமை நம் அனைவருக்கும் உள்ளது.

NECESSITY IS THE MOTHER OF ALL INVENTIONS. அதாவது எந்த ஒரு தேடலுக்கும் “தேவை” என்கிற முக்கியமான விஷயம் ஆழமாக இருந்துள்ளது. தேவை இப்போது மிக அதிகமாகி விட்டதனால், தேடல் கூடிய விரைவில் பிறக்கும், நம் இனிய தமிழ் புத்தாண்டுடன்…

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ Team

2

Likes(3)Dislikes(0)
Share
Mar 142014
 

வணக்கம் நண்பர்களே!!!

சென்ற வாரம் அலுவலகப் பணி முடிந்து மாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சாலையில் ஓரிடத்தில் சிறு கும்பலாக சுற்றி நின்று மக்கள் எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த கும்பலைத் தாண்டிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேகத்தை சிறிது குறைத்து, அந்த கூட்டத்தின் உள்ளே எட்டிப்பார்த்துவிட்டே புறப்பட்டுச் சென்றன. எனக்கும் ஒரு ஆர்வம். அன்று வீட்டில் பெரிய வேலை எதுவும் இல்லையாதலால் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு நானும் அந்த கும்பலுக்குள் எட்டிப் பார்த்தேன்.

ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன்,  விபத்தில் அடிபட்டுத் தரையில் குப்புறக் கிடந்தான். அவன் ஓட்டிவந்திருந்த பல்சர் அவனுக்கு 5 அடி இடைவெளி விட்டு அவனைப் போலவே சாலையில் புரண்டு கிடந்தது. தலைப்பகுதியில் அடிபட்டிருக்கக்கூடும் என தலையைச் சுற்றிக்கிடந்த ரத்தம் சொன்னது. ஆனால் உயிர் இருக்கிறது. கால்களும் கைகளும் அசைந்துகொண்டே இருக்கின்றன. அவனைச் சுற்றி ஐந்தடி தூரத்தில் வட்டமிட்டு நின்று கொண்டிருக்கும் மக்கள் அதற்குமேல் முன்னேறி அவனுக்கு உதவும் எந்த எண்ணத்திலும் இல்லை என்பது நன்றாகத் தெரிந்தது.

“இவனுங்கல்லாம் வண்டியா ஓட்டுறானுங்க.. ஏறி உக்காந்தா ஃப்ளைட் ஓட்டுறோம்னு நெனைப்பு” என்றது கூட்டத்திலிருந்த ஒரு குரல். “ஆளப்பாருங்க… ஃபுல் மப்புல இருப்பான் போலருக்கு.. அதான் கொண்டு போய் விட்டுட்டான்” என்றது மற்றொரு குரல். உதவி செய்யவேண்டும். ஆனால் நமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என எண்ணிய மற்றொருவர் “ஹலோ… நூத்தியெட்டா… சார் மீனம்பாக்கம் ஃப்ளை ஓவர் பக்கத்துலருந்து பேசுறேன் சார்.. இங்க ஒரு டூவீலர் ஆக்ஸிடண்ட்.. உடனடியா வாங்க” என கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

மற்றொரு ஒரு இளைஞர் அடிபட்டுக் கிடந்தவரை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிந்தார். வீட்டுக்குச் சென்றவுடன் சமூக வளைத்தளங்களில் மற்றவர்களுடன் அந்த புகைப்படங்களை பகிர்வார் போலத் தெரிந்தது. ஐந்து நிமிடமாக சுற்றி நிற்கும் கூட்டம் வேடிக்கை பார்ப்பதில் மட்டுமே மும்முரமாக இருந்தது. அப்போது தான் ஒருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வேகவேகமாக வந்தார். மற்றவர்களைப் போலவே அவரும் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருப்பவர் என்பதை அவர் தோற்றமே காட்டிக்கொடுத்தது. அவர் தோளில் மாட்டியிருந்த பையை அருகில் கழற்றி வைத்துவிட்டு கீழே கிடப்பவரின் கழுத்தையும் தலையையும் சேர்த்துப் பிடித்தவாறு தூக்கி மடியில் வைத்துக் கொண்டார். அந்த இளைஞனின் ஒரு புற முகம் முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்த்து. தன் பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து மெல்ல அவன் முகத்தை துடைத்துவிட்டார் அந்த மனிதர். இளைஞனுக்கு நெற்றியின் ஒரு ஓரமாக உடைந்து ரத்தம் கசிந்துகொண்டே இருக்க, கைக்குட்டையை அதில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டார். “சார் அந்த தண்ணி பாட்டில குடுங்க” என அருகிலிருந்த மற்றவரிடம் வாங்கி அவனுக்கு தண்ணீரும் கொடுத்தார்.

அப்போதுதான் விபத்தைக் கேள்விப்பட்ட போக்குவரத்து காவலர் வந்து சேர்ந்தார். சுற்றியிருந்தவர்களை கலைத்து காற்றுவரச் செய்தார். சரியாக 10 நிமிடம். ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. அடிபட்ட இளைஞனை அவர் மடியிலிருந்து மெல்ல தூக்க, அடிபட்ட இளைஞன் மெதுவாக எழுந்து நின்றான். அவர் கொடுத்த கைக்குட்டையை தலையில் வைத்து அழுத்தியவாறே ஆம்புலன்ஸில் நடந்து சென்று ஏறினான். ஆம்புலன்ஸ் புறப்படும் வரை அங்கு நின்றிருந்த அவர், பின்னர் ரோட்டில் கிடந்த தனது பையை எடுத்துக்கொண்டு, ரத்தக் கரை படிந்த ஆடையுடன் அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார். அவர் உருவம் சாலையில் மறையும் வரை நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

யார் அவர்? அடிபட்டுக் கிடந்தவனுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? எனக்கும் அடிபட்டவனுக்கும் என்ன உறவோ அதே உறவுதான் இவருக்கும் அவனுக்கும். அவர் செய்ததை என்னால் ஏன் செய்ய முடியவில்லை? எனக்கு ஏன் அது தோன்றவில்லை? அவர் ஒன்றும் மருத்துவர் இல்லை. எனக்குத் தெரியாத எதையும் அவர் செய்துவிடவும் இல்லை. ஆபத்தில் இருக்கும் ஒருவனுக்கு அல்லது உதவி தேவைப்பட்ட ஒருவனுக்கு அவரால் ஆன உதவியை எந்த பலனும் எதிர் பாராமல் எதைப்பற்றியும் சிந்திக்காமல் செய்தார். எனக்கும் என் அருகில் இருந்தவர்களுக்கும் அவர் ஒரு மனிதானகத் தெரிந்தார். ஆனால் கீழே அடிபட்டுக் கிடந்தவனுக்கு அவர் நிச்சயம் கடவுளாகத்தான் தெரிந்திருப்பார்.

நானும் ஒரு முறை கடவுளைப் பார்த்திருக்கிறேன். சிறு வயதில் பள்ளி செல்லும் போது நடந்த ஒரு நிகழ்ச்சி. 1989 ஆம் வருடம். எனது பிறந்த ஊரான நாகை மாவட்டம், கடல் சார்ந்தப் பகுதி. தமிழகத்தில் எப்போதெல்லாம் மழையோ, புயலோ மிகுதியாக இருக்குமோ, நாகையிலும் அதன் சுற்றியுள்ள ஊர்களிலும் அதன் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அடை மழைக்காலத்தில், ஊரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கும்.

பொதுவாக நான் பள்ளிக்கு நடந்து செல்வதே வழக்கம். அது ஒரு நல்ல மழைக்காலம். முதல்நாள் பெய்த கனமழையில் நாங்கள் பள்ளிக்குச் செல்லும் பாதை முழுவதும் சேரும் சகதியுமாக நசநசத்திருந்தது. மழையில் நனைந்துக்கொண்டே நானும், வீட்டருகே உள்ள நண்பரும் பள்ளிக்கு (நாகை புனித அந்தோனி பள்ளி) சென்றுக் கொண்டிருந்தோம். அவருக்கு என்னை விட ஐந்து/ஆறு வயது அதிகம் இருந்திருக்கலாம், அதே பள்ளியில் மேல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். வீட்டிலிருந்து, இரண்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் அந்தப் பள்ளி அமைந்திருந்தது. பள்ளியின் வளாகத்தில் ஒரு பெரிய ஆழமான குளம் இருந்தது.

நான் அப்போது சபரிமலைக்கு மாலைப் போட்டிருந்ததால், காலணிகள் அணியவில்லை. தெருக்களில் சேற்றிலும் மழைநீரிலும் நடந்து வந்ததால் முதலில் கால்களை அந்தக் குளத்தில் கழுவிக்கொண்டு வருகிறேன், பிறகு இருவரும் அவரவர் வகுப்புக்கு செல்வோம் என நான் கேட்டுக்கொள்ளவும், நண்பரும் சரி என்றுக் கூறி குளத்தின் கரையில் காத்துக்கொண்டிருந்தார்.

அது ஒரு பெரியக் குளம் என்பதால், அந்தக் குளத்திற்கு நான்கு ஐந்து இடங்களில் படித்துறைகள் இருக்கும். அதன் வழியாக குளத்திற்குள் இறங்கியிருந்தால் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால், குளம் முழுவதும் நிறைந்திருந்ததால், ஒரு இடத்தில் படி இருக்கும் என்று தவறாக எண்ணி நான் காலை வைக்க, துரதிருஷ்டவசமாக அங்கு படிகள் இல்லை. காலை வைத்தவுடன் சர்ரென்று இழுக்கப்பட்டு முழுமையாகக் குளத்தின் உள்ளே சென்றுவிட்டேன். எனக்கோ நீச்சல் கொஞ்சம் கூட தெரியாது. முதன் முதலாக நீருக்கு அடியில் இருக்கும் உலகத்தைக் காண்கிறேன்.

தலை முதல் கால் வரை முழுதும் தண்ணீர். எனது முழு உடலுக்குக் கீழேயும் மூன்று நான்கு அடிக்குத் தண்ணீர் இருந்திருக்கும். நண்பரைக் கூப்பிட நினைக்கிறேன், அதெல்லாம் தண்ணீரினுல் மூழ்கிக் கொண்டிருக்கும்போது முடியாது என்று அப்போது தான் புரிகிறது. மடக் மடக் என்று தண்ணீரைக் குடித்துக் கொண்டே குளத்தின் அடிக்கு மூழ்கிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். எனது இடது கையின் ஓரிரு விரல்கள் மட்டும் வெளியேத் தெரிந்திருக்க வேண்டும்.

mp1

கரையில் சுற்றுமுற்றும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பருக்கு திகைப்பு. தண்ணீரினுள் மூழ்கியதை நொடிப்பொழுதில் புரிந்துக்கொண்டு சட்டெனக் குளத்தில் பாய்ந்து, என் தலை முடியைப் பிடித்து இழுத்து, கரையில் ஏற்றினார்

அவருக்கு நன்றாக நீச்சல் தெரியும். இருப்பினும் இவனைக் காப்பாற்றப் போய் நம்மையும் இவன் உள்ளிழுத்து விட்டால் என்ன செய்வது எனவோ, நினைந்த ஆடைகளுடன் வகுப்புக்கு எப்படி செல்வது எனவோ அவர் ஒரு நிமிடம் யோசித்திருந்தால், நான் நீருலகிலேயே ஐக்கியமாகியிருப்பேன். அந்த நாளிலிருந்து, நான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு அவரால் கிடைத்தது. அந்த மனிதனை என் வாழ்நாளில் மறக்க இயலுமா? துரதிருஷ்டவசமாக அந்த நண்பர் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.

இன்று நடந்த சம்பவம் மீண்டும் அவரை ஞாபகப்படுத்தியது. என்னை மிகவும் வருத்தப்பட வைத்து, சிந்திக்கவும் வைத்தது. தன்னலமற்ற ஒருவரிடமிருந்து நான் வாழ்நாளில் மறக்க முடியாத அளவு உதவிகளைப் பெற்றேன். ஆனால் அதையே நான் மற்றவர்களுக்குச் செய்ய ஏன் தயங்குகின்றேன்? பிறகு, அன்று அவர் என்னைக் காப்பாற்றியதற்கு என்ன பலன்? என் மேல் எனக்கே கோவமாக வந்தது. சிறிது நேரம் புறப்படாமல் அங்கேயே இருந்துவிட்டுக் கிளம்பினேன். என்மேல் எனக்கு இருந்த கோபம் தீர்ந்ததா என்றால் தெரியவில்லை. ஆனால் அடுத்தமுறை என் கண்முன் இதுபோன்றொரு சம்பவம் நிகழும்போது, ஓடிச்சென்று முதலில் உதவுபவன் நானாகத்தான் இருப்பேன்.

காலத்தினால் செய்யப்படும் மிகச் சிறிய உதவிகள் கூட, அது சென்று அடையும் நபர்களுக்கு அது ஞாலத்தை விட பெரிய விஷயமாக இருக்கும். நம்மால் இயன்ற உதவியை சக மனிதர்களுக்கு செய்வோம். சுயநலத்தை முடிந்தளவு மறப்போம். இறந்தப் பின்னும் மக்களின் மனதில் வாழும் வழியைத் தேர்ந்தெடுப்போம். நமது இந்த மண்ணுலக வாழ்க்கை பயனத்தை அர்த்தமுள்ளதாகவும், பயணுள்ளதாகவும் இருக்கச் செய்வோம்.

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ Team

Likes(3)Dislikes(0)
Share
Share
Share