Jun 142015
 

2.1

செய்யும் தொழிலே தெய்வம் என தனது தொழிலில் ஒருவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்துவிட்டால், எந்த இலக்கையும் அடையலாம், எத்தனை உயரத்தையும் எட்டலாம் என நிறுபித்து வருகிறார் சென்னை போரூரை சேர்ந்த திரு.அப்பர் லக்ஷ்மணன்.

தச்சுத் தொழில் செய்து வரும் இவர், தன் தொழில் மீது உள்ள பக்தியாலும், கற்பனை திறனாலும், யோசிக்க கூட முடியாத பல பொருட்களையும் வடிவமைத்து, தன்னை மிகவும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்.

தன் குருவின் ஆசிர்வாதத்தால், திரு.அப்துல் கலாமை சந்தித்தது, தன் வாழ்வின் பெரும் பாக்கியம் என்று கூறியவர், சுனாமியிலும் வள்ளுவர் சிலை நின்ற தன்மையையும், மாமல்லபுரம் “மரபு சிற்பக் கட்டிட கலைக் கல்லூரியின்” பெருமையையும், நமது சிற்பத்துறை விவரங்களை சேகரித்து அமெரிக்காவில் “MYONIC SCIENCE AND TECHNOLOGY” ஆரம்பித்தது பற்றியும் விளக்கியது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மரங்களை வைத்து, இவர் செய்த கார், பைக், சைக்கிள், விளக்கு போன்ற என்னற்ற எழில்மிகு பொருட்கள் இவரின் தனி அடையாளமாய் திகழ்கின்றன. இனி இவரது பேட்டியிலிருந்து..

வணக்கம் சார், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்..

வணக்கம், என் பெயர் அப்பர் லக்ஷ்மணன். என் தகப்பனார் பெயரான அப்பர் என்பதை எனக்கு அடைமொழி ஆக்கிக்கொண்டேன். காரணம், என் தகப்பனார், குரு, நண்பர் அனைத்துமே அவர்தான். 18வயதிலிருந்தே இந்த தச்சு தொழிலை செய்து வருகிறேன்.

எட்டாவது தலைமுறையாக இத்தொழிலை நான் செய்வதால், இந்த வேலைத்திறன் என் இரத்தத்தில் ஊறியிருக்கும் என நினைக்கிறேன். அதுதான் இத்தொழிலின் மீது தீராத ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் கொடுத்திருக்கிறது. நமக்குறிய குலத்தொழிலை, நாம் விரும்பும் பணியை, நம்க்கு வருகின்ற செயல்களை செய்கையில் பேரின்பமும், ஆன்மதிருப்தியும் கிடைக்கிறது.

உங்கள் சாதனைகள் குறித்து..

என் மூதாதையர்கள் செய்ததை ஒப்பிடுகையில், நான் பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை என நினைக்கிறேன். ஆனாலும் மக்கள் நான் முழுவதுமாக வேலமரத்திலேயே செய்த கார் வண்டி, இருசக்கர வண்டி (பைக்), சைக்கிள், மின்விசிரி, லைட்டுசெட்டுகள், கடிகாரம் என மரத்தில் செய்த மற்ற பலப் பொருட்களை வித்தியாசமானதாக, புதுமையானதாக  பார்த்து சிறப்பாக பேசுகின்றனர். ஆனால் இதைவிட பலமடங்கு புதுமைகளையும், தொழில்நுட்பங்களையும், விஞ்ஞானத்தையும் எனது முன்னோர்கள் இத்துறையில் சாதித்துள்ளனர். தகவல் உலகம் வளர்ச்சியே அடையாத அந்த காலத்தில் அவர்கள் எவ்வாறு அச்சாதனைகளை புரிந்துள்ளனர் என்பதே ஒரு ஆச்சரியம்.

2.2

அக்காலத்தில் ஒரு துறையை சார்ந்தவர்கள் அத்துறையிலேயே தங்களை அற்பணித்து இருந்துள்ளனர். 24மணி நேரமும் வேறு சிந்தனையின்றி அதே எண்ணத்துடன் வாழ்ந்துள்ளனர். அதன் மூலம் ஏற்பட்ட உணர்வுகள் தான் அவர்களை வழிநடத்தியுள்ளது. உலகம் உருண்டையென சுற்றிப் பார்த்தா கலிலியோ கூறினார்? அது ஒரு ஞானதிருஷ்டி. அதேபோல் தான், இந்த துறையில் பல ஞானிகள் வாழ்ந்தனர். ஒரு மரத்தைப் பார்த்தவுடன் அதனைப் பற்றிய முழு குணங்களையும் கூறும் பக்குவத்தை பெற்று இருப்பார்கள்.

நீங்களும் உங்கள் முன்னோர்களும் அந்த மாதிரி உணர்ந்த ஞானத்தை ஏன் எழுத்து வடிவமாக பெரியளவில் வைக்கவில்லை?

இத்தொழிலை செய்தவர்கள் யாரும் பெரியளவில் படிக்கவில்லை என்பது தான் முக்கிய காரணம். இரண்டாவது, சில விஷயங்களை உணர்ந்து செய்தல் வேண்டும். எல்லாவற்றையும் ஏட்டில் எழுதியதை படித்து புரிந்துக்கொள்ள இயலாது.

இதே கேள்வியை என் தந்தையிடம் ஒருமுறை கேட்டப்போது, அவர் கொடுத்த பதில். “நீ சக்கரை, வெல்லம் இரண்டையும் எடுத்துக்கொள், இரண்டையும் சுவைத்தப்பின் சுவையில் வேறுப்பாட்டை அறிகிறாய். ஆனால் அவற்றை ஒரு பெரிய கோப்பாக எழுத முடியுமா?” என்றார். அதேபோல் தான் இத்தொழிலும்.

ஸ்தபதி வேலைகளில் உங்களின் அனுபவம் பற்றி..

அது ஒரு ஆச்சர்யமும் அற்புதமும் கொண்ட தொழில். ஸ்தபதிகளிடம் இல்லாத கட்டிடக் கலை நிபுணத்துவமும், அறிவியலும் யாரிடமும் இல்லை என கூறுவேன். அதிலும் இந்தியாவில், குறிப்பாக தமிழக ஸ்தபதிகள் பல சாதனைகளை படைத்துள்ளனர். எனது குருநாதரும், பத்மபூஷன் விருதுப்பெற்ற சிற்பத்துறையின் மாமேதையுமான டாக்டர்.வை.கணபதி ஸ்தபதியும் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.

கணபதி ஸ்தபதி கன்னியாக்குமரியில் உள்ள 133அடி திருவள்ளுவர் சிலை, சென்னை வள்ளுவர் கோட்டம், சென்னை அண்ணா ஆர்ச் (வளைவு) போன்ற பல சிறப்பு கட்டிடங்களை வடிவமைத்தவர் (DESIGN). உலகுமெங்கும் 600 கோயில்களுக்கு ஸ்தபதியாக பணிப்புரிந்தவர். மாமல்லபுரம் சிற்பத்துறை கலைக்கல்லூரியில் 35ஆண்டுகள் பணிப்புரிந்தார்.

சில வருடங்களுக்கு முன் ஜப்பானில் மிகப்பெரிய புத்தர் சிலையை கல்லினால் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கு கல் வேலைப்பாடில் சிறந்த தேசம் எது என அவர்கள் ஆராய்ந்து, இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். பின் அப்போதைய பிரதமர் திருமதி.இந்திரா காந்திக்கு கடிதம் அனுப்பினர். ஸ்தபதிகள் அதிகம் உள்ள தமிழகத்திற்கு அந்த கடிதம் வரவும், மகாபலிபுரம் சிற்பக் கல்லூரிக்கு தமிழக அரசு அதை அனுப்பியது. அதில் யார் சிறப்பான ஸ்தபதி என் பார்த்து, கணபதி ஸ்தபதியை தேர்ந்தெடுத்து, அவரை ஜப்பானுக்கு அனுப்புகின்றனர். அவரும் மிக சுலபமாக அந்த வேலையை செய்து முடித்தார். இது போல் ஜப்பானுக்கும், வேறு சில நாட்டிற்கும் பல முறை அழைப்பு வரவே, அங்கெல்லாம் சென்று வெற்றிகரமாக பல கட்டிடப் பணிகளைச் செய்தார்.

சிற்பத்துறையில் ஏதெனும் சுவாரசியமான அனுபவம் பற்றி..

சுனாமி வந்தபோது கன்னியாகுமரி வள்ளுவர் சிலையையும் உயரமான கடல் அலைகள் சீற்றத்துடன் தாக்கின. இருந்தும் சிலைக்கு ஏதும் பாதிப்பு வராமல் பாதுகாப்பாக இருந்துததைப் பார்த்து வியந்த அப்போதைய குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்கள், சிலையை கட்டிய கணபதி ஸ்தபதியை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு விவரத்தை அறிய டில்லிக்கு வருமாறு அழைத்தார். அப்போது ஸ்தபதிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவர் என்னை அனுப்பி வைப்பதாக கூறி, என்னை குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்பிவைத்தார்.

12நிமிடம் என்று வரையருக்கப்பட்ட மீட்டிங் நானும், திரு.கலாம் அவர்களும் பேச பேச, 35 நிமிடங்கள் தாண்டி ஓடிவிட்டது. என் கூடவே இருந்து, மதிய உணவும் அவர் சாப்பிட்டதும் மறக்கவே முடியாத தருணமும் பாக்கியமும்.

அடுத்த விஷயம். அரசு பதிவுப்பெற்ற 36814 கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. மீனாட்சி கோவில், தஞ்சை பெரிய கோவில், ராமேஷ்வரம் கோவில், இவைகளுக்கு எல்லாம் மதிப்பை கணக்கிடவே முடியாது. அக்கோவில்களில் உள்ள ஒரே ஒரு தூண் மட்டும் எத்தனை லட்சம் மதிப்புடையது, எத்தனை நாட்கள் செய்வதற்கு ஆகும் என்பதெல்லாம் ஆச்சரியமான விஷயம். எத்தனை விலை உயர்ந்த சிற்பங்களை நமது முன்னோர்கள் உருவாக்கியுள்ளனர்! சிற்பங்களில் உள்ள கதை, அதன் கருத்து, அதை வடித்த விதம் இதெல்லாம் மிகச் சிறப்பு வாய்ந்தவை. என்னைப் போன்ற கலைஞர்கள் கோவில்களுக்கு செல்லும்போது, வெளியே உள்ள தூண்கள், கட்டிடங்களின் சிறப்பு, சிற்பங்கள், இவற்றை பார்த்தே பிரமித்து நின்று விடுவோம்.

சமீபத்தில் கூட, சென்னை அண்ணா ஆர்ச்சை சீர் செய்யும் பணியில், பல பொறியாளர்கள், படித்த கட்டிட வல்லுநர்கள் வந்தும், அதை செய்து முடிக்க முடியாத சூழ்நிலையில் எங்களைப் போன்ற சிற்பிகளை வைத்து தான் அச்செயலை முடிக்க முடிந்தது. அரசு துறைகளில், பொதுபணித்துறை, வனத்துறை போன்ற துறைகளில் எங்களைப் போன்றவர்களை ஆலோசனையாளர்களாய் வைத்துக்கொள்தல் பலனளிக்கும்.

MODERN SCIENCE உங்களைப் போன்றோருடன் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ் மருத்துவம் அழிந்து வருவது போலவே, ஒவ்வொரு துறையை சார்ந்த அறிவியலும் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. இப்போது இந்த துறையில் படித்து வருபவர்கள் தாங்கள் செய்தவற்றை ஆராய்ந்து இந்த பழைய அறிவியல் முறைகளை வெளிக்கொண்டு வரலாம். இதற்காக இரண்டு உதாரணங்களை கூறுவேன்.

என் தந்தை காலத்தில், சுண்ணாம்பு பூச்சிவலை செய்வார்கள். அப்போது ஒரு தண்ணீர் தொட்டில் கட்டி, குறவ மீனை அதனுள் விடுவார்கள். மீனும் சலசலவென அந்த தொட்டியில் சுற்றிக்கொண்டே இருக்கும். மீனின் கழிவுகள் நிறைந்த கொழகொழப்பாக இருக்கும் அந்த நீரை எடுத்து, சுண்ணாம்பில் ஊற்றி கலப்பார்கள். சிறிது நாட்களில் அது கல் போன்று உறுதியாக மாறிவிடும் என என் தந்தை கூறுவார். இது போன்ற பல விஷயங்களை நம் முன்னோர்கள் உணர்ந்து செய்துள்ளார்கள். ஆனால் ஏன், எதற்கு இவற்றையெல்லாம் எழுதி வைக்கவில்லை. அதை அடுத்த தலைமுறையினரிடம் கூறிமட்டும் உள்ளனர். அந்த கழிவு நீர் எவ்வாறு கல்லாக மாறுகிறது, என்ன தொழில்நுட்பம், அதன் ரசாயன தன்மை என்ன என்று இன்றைய அறிவியலின் துணைக் கொண்டு இத்துறையை சேர்ந்த மாணவர்கள் படிக்கலாம்.

இரண்டாவது, நான் செய்த காரில் சைலன்சர் மரம் தான். இன்று வரை, அது தீப்பற்றி எரியாமல் நன்றாக தான் ஓடுகிறது. என் அனுபவத்தை வைத்து தேவைப்பட்ட மரங்களைக் கொண்டு செய்தேன். இன்றைய அறிவியல் இவற்றையெல்லாம் ஆராய்ந்து உலகுக்கு சொல்லி கோப்புகளை ஏற்படுத்தலாம்.

வைத்தியநாத ஸ்தபதியும், கணபதி ஸ்தபதியும் எழுதிய சில புத்தகங்கள் தான் இன்று வரை இத்துறைக்கு என கோப்புகளாக உள்ளன. கணபதி ஸ்தபதி எழுதிய “சிற்பச் செந்நூல்” என்ற ஒரு புத்தகத்தை வைத்து அமெரிக்காவில் “MYONIC SCIENCE AND TECHNOLOGY” என்று ஆரம்பித்துவிட்டார்கள்.

நீங்கள் இந்த கலையை எவ்வாறு அடுத்த தலைமுறையினரிடம் சென்று சேர்க்கிறீர்கள்?

பொருளாதார இந்த துறையில் சற்று குறைவு தான். அதனால் இன்று பலரும் வேறு துறைக்கு செல்லும் சூழ்நிலை. ஆனால் பொருளாதாரம் மட்டும் முக்கியமில்லை, செய்யும் தொழிலில் திருப்தி தான் முக்கியம் என ஈடுபாடு உள்ளவர்களுக்காக இத்துறைக்கு என ஒரு பாடசாலையை நிறுவியுள்ளேன். இதில் இளம் மாணவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து வருகிறேன். இத்தொழிலை காப்பாற்றவும், வருங்காலத்தில் நல்ல தச்சர்களை தயார் செய்யவும் இதை செய்து வருகிறேன். இப்போது 300க்கும் மேற்பட்டவர்கள் இதில் சேர்ந்துள்ளனர். கலைஞன் அழிந்தால், கலை அழியும்; கலை அழிந்தால் ஒரு கலாச்சாரமே அழியும். அதை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளேன்.

மகாபலிபுரம் சிற்பக் கல்லூரியைப் பற்றி..

காந்தி மண்டபத்தை கட்டிய திரு.வைத்தியநாதன் ஸ்தபதி தான் இந்த கல்லூரியை ஒரு பயிற்சி பட்டரையாக ஆரம்பித்தார். அதுதான் இன்று “மரபு சிற்பக் கட்டிட கலைக் கல்லூரி” என மாமல்லபுரத்தில் உள்ளது.

இந்தக் கல்லூரியில் 4300 ரூபாய் தான் கட்டணம். நிறைய மாணவர்கள் சேர்வதில்லை, ஒருவேலை லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்தால் தான் மாணவர்கள் சேருவார்கள் என நினைக்கிறேன். 12ஆம் வகுப்பு முடித்த எந்த மாணவருக்கும் அங்கு அனுமதி கிடைக்கும். என் மகனையும் கூட இந்த கல்லூரியில் தான் சேர்த்துள்ளேன். நான்கு வருடங்களில் இந்தியா முழுதும் உள்ள பல புராதன கோவில்களுக்கு கூட்டிச் சென்று, சிற்பக் கலைகளை மாணவர்களுக்கு சொல்லித்தந்து சிறப்பான சிற்பிகளாய் தயார் செய்கின்றனர்.

மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

அவரவர் துறையை அவரவர் விட்டுவிடாது செய்ய வேண்டும், எங்களைப் போன்ற அனுபவம் உள்ளவர்களிடம், நடைமுறை அறிவை கட்டிடத்துறையில்  படித்து வரும் மாணவர்கள் சேகரித்துக் கொள்ள வேண்டும். கோவிலைப் பற்றியோ, கட்டிடக்கலைப் பற்றியோ ஆராய்ச்சி செய்பவர்கள் அதன் முடிவுகளை வெளியிடுமுன், எங்களைப் போன்றோரிடம் கலந்து ஆலோசிக்கலாம். அரசும் அதிகார்களும் கட்டிடங்களுக்கு எங்களைத் திட்டம் தீட்டுகையில் உபயோகப் படுத்திக்கொள்ளலாம். கலையையும், கலாச்சாரத்தையும் பராமரித்து வரும்  எங்களைப் போன்றோருக்கான அங்கிகாரமும் மதிப்பும் இன்னும் நன்றாக இருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.

உங்கள் தொழிலிற்காக மரங்களை வெட்ட வேண்டி வருமே?

ஒரு உயர்ந்த மனிதர் கடைசி வரை சாகாமல் வாழ்ந்து கொண்டே இருக்கலாமா? பழைய மனிதர்கள் செல்வதும், புதியவர்கள் பிறப்பதும் தானே இயற்கை. அதே போல் தான் மரங்களும். முற்றிய மரங்களை வெட்டி தான் ஆக வேண்டும். அவ்வாறு வெட்டப்படாமல் இருக்கும் முற்றிய மரங்களில் இருந்து தான் காட்டுத்தீ பரவி சுற்றியுள்ள பல மரங்கள் எரிந்து சாம்பலாக காரணமாகிறது. அதனால் முற்றிய மரங்களை வெட்டி, பல புது மரக்கன்றுகளை, செடிகளை வளர்க்க வேண்டும்.

நீங்கள் வாங்கிய விருதுகள் பற்றி..

மரத்தினாலேயே ஆன ஒரு விளக்கை செய்துள்ளேன். அதைப் பாராட்டி தமிழக அரசு 1லட்சம் பரிசும் விருதும் கொடுத்துள்ளது. பூம்புகார் துறை விருது கிடைத்துள்ளது. கேரள அரசு என் மரக் காரின் வடிவமைப்பிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இவை அனைவற்றிர்கும் மேல், கணப்தி ஸ்தபதி, எனக்கு பெருந்தட்சர் என்ற விருதை வழங்கி கவுரவித்தார்.

NDTV, BBC, ஹிந்து, சன் டீவி, தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளில் உள்ள பல தினசரி பத்திரிக்கைகள் வந்து என் மரத்தின் பணிகளை கண்டு பாராட்டிச் சென்றுள்ளனர். நான் வடிவமைத்த கார், இருசக்கர வண்டி பற்றி பெருமையாக பேசிச் செல்கின்றனர். எங்கள் சித்தாந்தம், அறிவியல் அனுபவம் பற்றி சிறப்புகளையும் பேசினால் நன்றாக இருக்கும். இந்த ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இடம் கொடுத்ததில் 10நாள் கண்காட்சி நடத்தினேன். மாணவர்களுக்கு இவைகளை சொல்லிக்கொடுத்து, இத்துறையை முடிந்தவரை வளர்த்து கொண்டிருக்கிறேன்.

Likes(7)Dislikes(0)
Share
Share
Share