Feb 142016
 

banner1

சென்ற மாதம் மத்திய அரசு அறிவித்த, நாட்டின் உயர்ந்த விருதுகளான பத்ம விருதுகள் பெயர் பட்டியலில், நடிகர் திரு.ரஜினிகாந்தின் பெயரும் இடம்பெற்றது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் பெருமளவில் விவாதிக்கப்பட்டது. அவரின் பெயர் சேர்க்கப்பட்டது சரி என அவர் ரசிகர்களும், தவறு என மற்றவர்களும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

திரு.ரஜினிக்கு விருது கொடுத்தது சரியா தவறா என்ற வாதம் ஒரு புறம் இருக்க, சிறிதும் சர்ச்சையோ, சத்தமோ இல்லாமல், சினிமா அல்லாத மற்றத் துறைகளில்,  தமிழகத்தை சேர்ந்த மேலும் நால்வரின் பெயர்களும் பத்ம விருதுகள் பட்டியலில் அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக பத்மஸ்ரீ விருதைப் பெற்ற, கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு.அருணாசலம் முருகானந்தம் பற்றி பல சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே முடித்து, சாதாரண தொழிலாளியாக தன் வாழ்வை தொடங்கிய இவர், பெண்களுக்காக சானிட்டரி நாப்கின் (SANITARY NAPKIN) பேடுகளை மிக குறைந்த செலவில் தயாரிக்க  எடுத்துக்கொண்ட முயற்சியில் பெற்ற பிரம்மாண்ட வெற்றி, பல சமூக ஆர்வலர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்த நாப்கின் பேடுகளை வாங்க பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் பல பெண்களின் நிலையை மனதில் வைத்து அவர் எடுத்த முயற்சி, பல தடைகளை மீறி வெற்றி அடைந்ததை, இந்தியா மட்டுமன்றி உலகின் பல கல்வி நிறுவனங்களின் மேடைகளில் அவரே எடுத்துரைத்து வருகின்றார்.

இவரது பேச்சு, இவரை போன்றே புதிதாக சாதிக்க துடிக்கும் பல மனிதர்களுக்கு எழுச்சியூட்டுகிறது. அமெரிக்காவின் TED TALKS என்ற பிரபல அரங்கில், அந்நாட்டினரிடம் இவர் ஆற்றிய உரையை கேட்ட அனைத்து பார்வையாளர்களும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த பாராட்டாக அமைந்தது.

திரு.முருகானந்தம் மட்டுமன்றி, சென்னை அடையார் புற்று நோய் மைய்யத்தின் மருத்துவர் சாந்தா, சமூக ஆர்வலர் சீனிவாசன், மருத்துவர் சந்திரசேகர் ஆகியோரின் பெயர்களும் தமிழகத்திலிருந்து விருது பெரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

திரு.முருகானந்தம் போன்று சாதாரண நிலையில் ஆரம்பித்து, சாதனை செய்ய துடிக்கும் பலர், போராட்டத்தின் உச்சியில் இன்றும் உள்ளனர். வெற்றிக்கு மிக அருகில் இருந்தும் பொருளாதார சூழ்நிலையாலும், அன்றாட வாழ்க்கையின் பிரச்சினையாலும், எத்தனையோ மனிதர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளை பாதியில் விட்டுவிடுகின்றனர்.

திரு.ரஜினிகாந்த் தவிர விருதுகள் அறிவிக்கப்பட்ட மற்ற நால்வரின் விவரங்கள் ஏன் சமூக தளங்களில் அத்தனை பிரபலமாக வரவில்லை?  குறிப்பாக, திரு.சீனிவாசன் மற்றும் திரு.சந்திரசேகர் பற்றி எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை.

அத்தகைய மனிதர்களை காணும்போது, அவர்களை அங்கீகரித்து, வலைதளங்களில்  அவர்களைப் பற்றி பகிர்வது அவர்களுக்கான நிதியுதவியையும் (SPONSORSHIP), மற்ற உதவிகளையும் நிச்சயமாக எவர் மூலமாவது ஏற்படுத்தித் தரும்.

சினிமாவிற்கு நாம் தரும் முக்கியத்துவம் தவறில்லை, ஆனால் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தையும், நடிகர்களுக்கு தரும் ஆதரவையும் மற்ற துறையினருக்கு, குறிப்பாக மக்கள் முன்னேற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு நாம் ஏன் தருவதில்லை  என்ற கேள்வி எனக்கு எழுந்தது. என் நண்பருடன் இதை விவாதிக்கையில், அவர் கூறிய பதில் தெளிவை ஏற்படுத்தியது.

“சினிமா மாதிரியான பொழுதுபோக்கு செய்திகள் தற்காலிக பரபரப்பை ஏற்படுத்தினாலும், சில வருடங்களைத் தாண்டி வருவதில்லை. அதோடு மட்டுமன்றி, ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த பல நடிகர்களை மக்கள் மறந்துவிடும் சூழ்நிலையை கண்டுள்ளோம்.

ஆனால் சுயநலமின்றி மக்களுக்காக தியாகம் மற்றும் தொண்டு செய்யும் அஸ்திரங்களை கையில் எடுத்தவர்களே, பல நூற்றாண்டுகளைத் தாண்டியும் மக்கள் மனதில் நிரந்திரமாய் வாழ்கிறார்கள் என்பதை வரலாறு தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.

‘பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்று முழங்கிச் சென்ற பாரதியும், இரண்டே அடிகளில் இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழர்களை ஆட்கொண்டுள்ள வள்ளுவனும் தான் சரித்திரத்தின் உண்மையான கதாநாயகர்கள்” என்று முடித்தார் நண்பர்.

மீண்டும் சந்திப்போம்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(2)Dislikes(0)
Share
Share
Share