Mar 142016
 

invest_ag_600

பள்ளிகளும் கல்லூரிகளும் கற்று தர இயலாத வாழ்க்கை பாடங்களை, சில சந்திப்புகளின் மூலமும், சம்பவங்களின் மூலமும் நாம் கற்றுக் கொள்ளலாம். சென்ற மாதம் நான் சந்தித்த இரு வேறு மனிதர்கள், இதை மிகத் தெளிவாகப் புரிய வைத்தனர்.

முதல் நபர் – பெயர் பிரபு. 18 வயது கூட நிறைந்திருக்குமா என நினைக்க வைக்கும் தோற்றம். தள்ளு வண்டியில் வேர்கடலை வறுத்து விற்பது இவனது தொழில். இந்த விற்பனை மூலம் இவனது மாத வருமானம் ரூபாய் முப்பாதாயிரத்திற்கும் மேல் என்பது ஒரு இன்ப அதிர்ச்சி.

அன்று எதேச்சையாக பிரபு விற்று செல்லும் தெருவில் சென்ற நான், கடலை வாங்க அவனை அணுகினேன்.

கடலையை பெற்றுக்கொண்டபின், “என்னப்பா படிக்கிறியா?” என்ற எனது கேள்விக்கு அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. “கடலை தான் வாங்கிட்டீல, கெளம்பி போயிட்டே இரு” என என்னை சொல்வது போல் ஒரு ரியாக்ஷனை கொடுத்தான்.

சிறு குழந்தை போல் தோற்றத்தில் இருப்பினும், அவனது செயல்களின் வேகமும் சுறுசுறுப்பும், அவனைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள தூண்டவே, “ஏம்பா, படிப்ப நிறுத்திட்டியா” என சிரித்தவாறே தொடர்ந்தேன். இதற்கும் அவனிடம் பதில் வரவில்லையெனில் அங்கிருந்து கிளம்பலாம் என்றிருந்தேன். ஆனால் நல்ல வேலையாக, பேசினான். ஒரு நெடிய உரையாடலும், புது சிந்தனையும் அந்த சூழ்நிலையில்  கிடைக்கும் என நாங்கள் இருவருமே அப்போது நினைக்கவில்லை.

“ஆமாண்ணே, நமக்கு படிப்பு வரல, படிப்பு புடிக்கவுமில்ல, அதான் ஏதாவது செய்யலாமென இத செஞ்சிட்ருக்கேன்.  வீட்ல வசதி இல்ல, அப்பா ஊர்ல வேல செய்றார், அம்மா இல்ல, அக்கா அண்ணால்லாம் இருக்காங்க” என்றும் சொந்த ஊர் திருவாரூர் எனவும் மாதம் ஒருமுறை ஊர் செல்வதாகவும் தெரிவித்தான்.

“இதோ இந்த பொட்டலம் பத்து ரூபா, ஒரு நாளைக்கு நுறு நூத்தம்பது பொட்டலம் ஈசியா விக்கும். இந்த கடலைங்க, லைட்டு, வண்டி இதுக்கெல்லாம் ஒரு நாளைக்கு ஐநூறு ரூபா போயிடும். கடைசியா ஆயிரம் ரூபா நிக்கும். மாசத்துல எல்லா நாளும் ஓட்ட முடியாது. மாசத்துக்கு ரெண்டு தட ஊருக்கு மிச்சமுள்ள பணத்த அனுப்புவேன்” தொடர்ந்து கடலை வாங்க வந்த வாடிக்கையாளர்களிடம் விற்றுக்கொண்டும், கடலை வறுத்துக்கொண்டும், வண்டியை தள்ளிக்கொண்டும் அவனது பேச்சு தொடர்ந்தது.

பத்து நிமிட உரையாடளுக்குப்பின், அவன் வழக்கமாய் டீ குடிக்கும் கடையில் வண்டியை நிறுத்தினான். இருவரும் டீ குடித்த பின், ஒரு செல்ஃபி  எடுத்துக்கலாமா என்று கேட்டேன், “என்ன அண்ணே, கடலை வாங்கிட்டு பொதுவா, எல்லாரும் போயிட்டே இருப்பாங்க, நீங்க இதெல்லாம் பண்றீங்க??” என இழுத்தான்.

நமது B+ இதழை பற்றி தெரிவித்து, “உன்ன பத்தி அதில் எழுதுறேன் தம்பி. கஷ்டத்துல இருக்கிற யாராவது உன்ன பத்தி படிச்சா, ஒரு சின்ன பையனே தனியாளாக இருந்து, நல்லா சம்பாதிக்கிறான், நம்மால ஏன் முடியாதுனு யோசிப்பாங்க, அவங்களுக்கு உன் கதை தேவப்படலாம்” என தெரிவிக்கவும், “அதெல்லாம் வேண்டாண்ணே” என முதலில் தயங்கியவன், பின் “சரிண்ணே, ஆனால் ஃபோட்டாலாம் போடாதீங்க” என சிரித்தவாறே கேட்டுக்கொண்டான்.

கிளம்புமுன், “ஒரே ஒரு கேள்வி தம்பி, தெனமும் இதே வேல செய்ய ஒனக்கு போரடிக்கல?” என நான் கேட்கவும், “ஆமாண்ணே கஷ்டம் தான், அதுவும் ஆரம்பத்துல கை கால்லாம்  வலிக்கும், இப்போ அப்டியே பழகிடுச்சி” என்றான். “ஆனா, இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல ஒரு டிரைவரா ஆகிடலாம்னு ஆசப்படுறேன்”  என்றவனிடம் ஒரு பெரிய நம்பிக்கை வெளிப்பட்டது.

இரண்டாவது நபர் – பெயர் பார்த்திபன். இவர் ஒரு டாக்ஸி ஓட்டுனர். சென்ற மாதம் ஒருநாள் நள்ளிரவில் அலுவலக பணி முடித்து தில்லியிலிருந்து சென்னை திரும்புகையில், விமான நிலையத்தில் இவரை சந்திக்க நேர்ந்தது.

பொதுவாக இரவு நேரங்களில் டாக்ஸி ஓட்டுநர்கள் கொஞ்சம் தூக்க கலகத்துடன் தான் இருப்பர். டிராபிக்கும் இரவில் குறைவாகவே இருக்கும் என்பதால், ஏதும் பேசாமல் வேகமாக வண்டியை ஓட்டி, நம்மை வீட்டில் சேர்த்துவிடும் நோக்கத்தில் மட்டும் இருப்பர்.

ஆனால் விமான நிலையத்தில் என்னை pickup செய்ததிலிருந்தே மிக வித்தியாசமாக இருந்தது பார்த்திபனின் பேச்சும் செயலும். “Good evening Sir, welcome” என புன்னகையோடு வரவேற்று வண்டியை ஓட்ட ஆரம்பித்தார்.

பொதுவாகவே டாக்ஸி ஓட்டுனர்கள் உரையாடுகையில் அரசியலும், நாட்டு நடப்பும் தான் அதிகம் இருக்கும். அனால் பார்த்திபன் பேசுகையில், பொருளாதாரம், வணிகவியல், நாட்டின் வளர்ச்சி என பல விஷயங்களை புள்ளி விவரங்களுடன் அடுக்க எனக்கு பயங்கர ஆச்சரியம்.

“என்ன பார்த்திபன், பல விஷயங்கள தெரிஞ்சி வச்சிருகீங்க, என்ன படிச்சிருகீங்க” எனவும் “MBA FINANCE SIR” என்ற பதில் அவரிடம் வந்தது.

“அப்புறோம் ஏன் ஏதாவது கம்பெனியில் வேல செய்யாம வண்டி ஓட்றீங்க? என்ற என் கேள்விக்கு, “யார்கிட்டையும் போய் கைகட்டி வேல பாக்றதெல்லாம் விருப்பம் இல்ல சார், நமக்கு அது செட்டும் ஆகாது. ஒரு சின்ன பிஸினஸ் ஐடியா வச்சிருக்கேன், அதுக்கு கொஞ்சம் பணம் வேணும், ஏற்கனவே கொஞ்சம் சேர்த்துட்டேன், இன்னும் ஆறு மாசம் ஓட்டினா ரெடி ஆயிடுவேன்” என முடித்தார்.

“அதெல்லாம் சரி, உங்க சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கல்லாம், ஏன் படிச்சிட்டு இந்த வேல பாக்குறனு கேக்கலையா” என்றேன்.

“நிறைய பேர் கேட்டாங்க சார், அப்டி கேட்டவங்கள்ட்ட, சரி நா ஒரு பிஸினஸ் பண்றேன், கொஞ்சம் பணம் தர்ரீங்களானு கேட்டேன், அதுக்கப்புறம் அவங்க யாரும் வாயே தொறக்கல. நம்ப நாட்டில தான் சார், தெரிஞ்சவங்க என்ன நினைப்பாங்க, அவர் என்ன சொல்லுவார், இவர் என்ன சொல்லுவார்னு தேவையில்லாம குழப்பிக்கிறோம்.  நம்ம வாழ்க்கைய, சுத்தி உள்ள ஒரு நாலு பேர் தான் முடிவு பண்றாங்க. இத்தனைக்கும் அந்த தெரிஞ்ச நாலு பேரால எந்த உபயோகமும்  நமக்கு இருக்காது, ஆனா பல சமயம் முகமே தெரியாத ஆளுங்க தான் நமக்கு உதவி செஞ்சிருப்பாங்க. அப்டி இருக்கும்போது, அந்த நாலு மனுஷங்கள பத்தி நாம ஏன் யோசிக்கணும்னு முடிவு பண்ணி, சும்மா இருந்தா பணம் வராது என இதில் இறங்குனேன். இப்போ பாதி கிணறு தாண்டிட்டேன், கூடிய சீக்கிரம் மீதியவும் முடிச்சிடுவேன். நா திருடல, பொய் சொல்லல, அது போதும் சார்” என தெளிவாக முடித்தார்.

முற்றிலும் மாறுபட்ட இந்த இருவேறு மனிதர்களையும் இணைத்து பார்க்கையில், “வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்” என்ற பாடலின் அர்த்தம்  புரிந்தது.

இந்த இருவர் போல், எத்தனையோ பேர் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். அவ்வளவு ஏன், இன்றைய சூழ்நிலையில் நன்றாக படித்தவர்கள், பெரிய கார்பொரேட் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள் எல்லாம், சில வருடங்களுக்கு முன் இருந்த தயக்கத்தை எல்லாம் வீசிவிட்டு, விவசாயம் பக்கம் வருவதையும் பார்க்க முடிகிறது. இவர்கள் சமூகம் என்ன கேள்வி எழுப்பும் என்ற என்னத்தை உடைத்து, விவசாயத்தில் இன்று சாதனை படைத்து வருகின்றனர்.

படித்துவிட்டு, தனக்கு ஏத்த வேலை கிடைக்கவில்லை என நிறைய இளைஞர்கள்  வருந்தி நேரத்தை வீணாக்காமல், இத்தகைய மனிதர்களிடம் பாடம் கற்க வேண்டும். சிறியதோ, பெரிதோ கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நழுவ விடாமல், அந்த வேலையை எப்படி சிறப்பாக செய்ய முடியும் என சிந்திக்க வேண்டும்.

அதேபோல் இன்றைய உலக பொருளாதார சூழ்நிலையில் ஸ்திரமற்ற நிலை இருப்பதாக நினைத்தும், நாளை என்ன நடக்குமோ என்ற பதட்டம் (ANXIETY) நம்மில் பலருக்கு, குறிப்பாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு இருப்பதையும் காண முடிகிறது.

ஏதேனும் பிரச்சினை வந்துவிட்டாலோ, பாதையில் ஒரு சறுக்கல் வந்துவிட்டாலோ, வாழ்க்கையே முடிந்துவிட்டது என தோல்வி முகத்துடன் அமர்ந்துவிடும் அத்தகைய சிலரை பார்க்கிறோம். பிரபு போன்ற, பார்த்திபன் போன்ற மனிதர்கள் தான் இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில், உற்சாக தரும் உதாரணங்களாய் இருக்கின்றனர்.

கரடு முரடான சவால்கள் நிறைந்த பாதை தான் வாழ்க்கை. அதை சரியாகப் புரிந்து,  அந்த சவால்களை சந்தர்பங்களாய் மாற்றுபவர்கள் தான் சரித்திரம் படைக்கிறார்கள்.

விடாமுயற்சி, கடின உழைப்பு, நம்பிக்கையுடன் சேர்ந்து போராடும்போது, எந்த இலக்கும் அடையக்கூடியதே. நாம் மனது வைத்து விட்டால், எல்லா மார்க்கமும் உண்டு என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

வெற்றி கொடி கட்ட வேண்டிய நேரமும், வழியும் நம் சிந்தனையில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து, உங்களுள் உள்ள சாதனையாளனை தட்டி எழுப்புங்கள், எத்தகைய சரித்திரத்தையும் உங்களால் படைக்க முடியும்.

மீண்டும் சந்திப்போம்,

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(4)Dislikes(1)
Share
Share
Share