Oct 142015
 

e339fa41-6a58-4932-825e-503d1d72f5d7.Burma_

நண்பர்களே, இந்த மாத B+ இதழில், “உலகத் தமிழர்கள்” என்ற ஒரு பகுதியை ஆரம்பித்துள்ளோம். பல்வேறு நாடுகளில் குடிப்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களின் நிலை என்ன என அறியும் ஆர்வத்துடனும், நோக்கத்துடனும் இந்தப் பகுதியை ஆரம்பித்துள்ளோம். (இந்தப் பகுதியில், நீங்கள் இருக்கும் நாட்டில் தமிழர்களின் நிலையை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் அறிய வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்கள் பெயர் மற்றும் வாழும் நாட்டின் பெயரை மட்டும் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்)

இந்த மாத “உலகத் தமிழர்கள்” பக்கத்தில், பர்மா நாட்டைப் பற்றி காண்போம். அங்கு ஆறு தலைமுறைகளாக செட்டிலாகியிருக்கும் குடும்பத்தை சேர்ந்த திருமதி.நாமகள் அவர்களின் பதில்களை காணலாம்.

பர்மாவின் சிறப்புகள் என்ன? உங்களுக்கு பர்மாவில் பிடித்த விஷயங்கள் என்ன?

இயற்கை சூழல் மற்றும் வேளாண்மை. நதிகள் இங்கு தேசிய மயமாக்கப்பட்டதால், விவசாயம் செழிப்புடன் இருக்கிறது.

எத்தனை வருடங்களாக அல்லது தலைமுறையினராக பர்மாவில் உள்ளீர்கள்? தமிழ் படிக்கத் தெரியுமா?

ஆறு தலைமுறையினராக எங்கள் குடும்பம் இங்கு வாழ்ந்து வருகிறோம். எனக்கு தமிழ் நன்றாக எழுத, படிக்க, பேசத் தெரியும். என் அம்மா எனக்கும், என் பாட்டி என் அம்மாவிற்கு தமிழைக் கற்றுக் கொடுத்தனர்.

உங்கள் உணவு வகைகள் என்ன?

அம்மியில் அரைத்து சமைக்கும் தமிழர் பாரம்பரிய உணவு முறை தான். சில பர்மா உணவுளும் சேர்த்து சாப்பிடுவோம்.

எத்தனை தமிழர்கள் மொத்தம் பர்மாவில் இருப்பார்கள்?

சரியான கணக்கெடுப்பு இதுவரை இல்லை. சுமார் 20லட்சம் பேர் வரை இருப்பார்கள் என சில தகவல்கள் உள்ளது.

தமிழர்கள் பொதுவாக என்ன பணிப்புரிவர்?

பொதுவாக வியாபாரம் மற்றும் விவசாயம் செய்கிறார்கள்.

அரசு/தனியார் அலுவலகங்களில் தமிழர்களின் வாய்ப்புகள் உண்டா?

எல்லா இடத்திலும் அடையாள அட்டை கேட்கப்படுவதாலும், சில இன வேறுபாடு பார்ப்பதனாலும், அரசு மற்றும் தனியார் வேலைகளில் தமிழர்கள் குறைவு தான்.

தமிழ் மக்கள் தங்கள் தமிழ் பெயரோடு சேர்த்து பர்மாவின் பெயரும் வைக்க காரணம் என்ன?

எத்தனை தலைமுறை வாழ்ந்தாலும் குடியுரிமை வாங்கும் நிலை மிகவும் கடினமாக உள்ளது. இனவெறுப்பு காட்டப்படுவதும் ஒரு காரணம்.

என்ன படித்தீர்கள்? எந்த பள்ளியில் படித்தீர்கள்? தமிழர்கள் எங்கு பொதுவாக  படிப்பர்?

நான் கணினி பொறியியல் படித்தேன். அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தேன். தமிழர்கள் இந்நாட்டில் யாங்கோன், மோன், அயிராவதி, பகோ, போன்ற  மாநிலங்களில் அதிகமாக வசிக்கிறார்கள்.

இந்திய அல்லது தமிழக கலாச்சாரத்தையோ பழக்கங்களையோ இத்தனை வருடங்கள் கழித்தும் கடைப்பிடிக்கின்றீரா? ஏதாவது அப்படி உண்டெனில் கூறுங்களேன்..

அத்தனையும் சற்றும் மாறாது கடைப்பிடிக்கிறோம். பொங்கல் பண்டிகை உட்பட தமிழர் கலாச்சாரங்கள் அனைத்தையும் செய்து வருகிறோம். ஜல்லிக்கட்டுக் கூட நடத்துகிறோம்.

தமிழர்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் வேட்டி, துண்டு, சட்டையுடன் காட்சியளிப்பார்கள். மற்ற இடங்களில் பர்மியரைப் போலவே வாழ்கின்றனர்.

பர்மாவில் உள்ள நம் கோவில்கள் பற்றி..

பிரசித்திப் பெற்ற பிலிக்கன் கோவில் உட்பட நிறைய உள்ளது. திருவிழா, கும்பாபிஷேகம் என அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்.

தமிழ்நாடு குறித்து எந்தெந்த விஷயங்களில் ஆர்வம் உள்ளது?

சினிமா மற்றும் அரசியல்

தமிழகத்தின் உதவி வேண்டுமென்றால் எந்தெந்த விஷயங்களில் உங்களுக்கு தேவைப்படும்?

தமிழ் மொழி வளர்ச்சிக்கு மற்றும் பர்மா வாழ் தமிழர்களின் அரசியல் விழிப்புணர்விற்கு

இந்தியா வருவதுண்டா? வந்தால் என்ன செய்வீர்கள்? இங்கு யார் இருக்கிறார்கள்?

கோவில் வேண்டுதலுக்கும், உறவினர்களை சந்திக்கவும் இந்தியா வருவதுண்டு. சிலர் தொழில் ரீதியாகவும் வருவார்கள்.

தங்களைப் போல் பர்மாவில் தங்கிவிட்ட தமிழ் மக்களுக்கு என்ன கூற விரும்புவீரகள்?

தமிழை நேசியுங்கள். இன மொழி அடையாளங்களை காப்பாற்றுங்கள். தமிழர்கள் பர்மாவில் தன்மானத்தோடு வாழ, முக்கியமான தேவை ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பு. அதற்காக ஒற்றுமையுடன் வழி தேடுங்கள். இனத்திற்காக குரல் கொடுங்கள்.

—– X ——

(இந்தப் பகுதியில், நீங்கள் இருக்கும் நாட்டில் தமிழர்களின் நிலையை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் அறிய வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்கள் பெயர் மற்றும் வாழும் நாட்டின் பெயரை மட்டும் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்)

Likes(17)Dislikes(0)
Share
Share
Share