Nov 142014
 

Time

“நா மட்டும் அப்பவே ஒழுங்கா படிச்சிருந்தா இந்நேரம் ஒரு நல்ல வேலையில இருந்துருப்பேன்” “இந்த வேலைய நேத்தே செஞ்சிருந்தேன்னா இன்னிக்கு யாரும் என்ன திட்டிருக்க மாட்டாங்க” என்று பலர் புலம்புவதை நம் காதால் கேட்டிருக்கிறோம். இழந்த பிறகு இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என மனிதன் ஏங்கும் ஒருசில விஷயங்களில் இந்த நேரமும் ஒன்று. கடந்து போன பிறகே அதன் முக்கியத்துவத்தை மனிதனுக்குப் புரிய வைக்கிறது. எந்த ஒரு நடந்து முடிந்த செயலையும் நம்மால் மறுபடி நிகழ்த்திக் காட்ட முடியும். ஆனால் அதே நேரத்தில் நிகழ்த்துவதென்பது தான் இயலாத காரியம்.

இதற்காக தீவிரமாக யோசித்த ஆங்கிலேயர்கள், இழந்த நேரத்தில் நாம் செய்யத் தவற விட்ட செயல்களை செய்து முடிப்பதற்காக டைம் மெஷின் என்ற ஒரு கருவியைக் கண்டுபிடித்தனர். அதனை உபயோகித்து இறந்த காலத்திற்குச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் நாம் செய்யாமல் விட்ட செயல்களை செய்து கொள்ளலாம். ஆனால் பின்னர் தான் அந்த டைம் மெஷின் திரைப்படங்களில் மட்டுமே வேலை செய்யும் என்றும் நிஜ வாழ்க்கையில் வேலை செய்யது என்றும் தெரிய வந்தது. எனவே இழப்பதற்கு முன்பாகவே நேரத்தை முறையாக உபயோகப் படுத்திக் கொள்வது அவசியமாகிறது.

ஒரு சிறிய கதை. ஒரு நாட்டில் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் முனிவர் ஒருவர் இருந்தார். அவரிடன் ஒரு இளைஞன் செல்ல “குழந்தாய் உனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது ?” என்று முனிவர் கேட்க அதற்கு அவன் “சுவாமி வாழ்வில் நிம்மதியே இல்லை. நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. நினைத்ததை சாதிக்க முடியவில்லை. என்னுடைய லட்சியங்களை அடையவும் முடியவில்லை. குடும்ப வாழ்க்கையிலும் அவ்வளவு நிம்மதியில்லை இதற்கு தாங்கள் தான் எனக்கொரு வழி கூற வேண்டும்” என்றான்.

சிறிது நேரம் யோசித்த முனிவர், “சரி நான் உனக்கு ஒரு நாளுக்கு 1440 வெள்ளிக்காசுகள் தருகிறேன். அதை நீ எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம். ஆனால் நீ அதை சேமிக்க முடியாது. நான் காசு கொடுப்பதை ஒரு நாள் நிறுத்தி விடுவேன். என்றுடன் நிறுத்துவேன் என்றும் சொல்ல மாட்டேன். இப்போது சொல். அந்த காசுகளை நீ எவ்வாறு செலவிடுவாய்?” என்றார்

சற்று யோசித்து அவன் “ஐயா.. அந்தக் காசுகள் எனக்கு மிகவும் முக்கியமானவை. அவற்றை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் செலவு செய்வேன். எனக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்வேன். என் குடும்பத்தினருக்கும் தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பேன். எஞ்சியிருக்கும் காசுகளை என் நண்பர்ளும், உறவினர்களும் சுற்றத்தாரும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு செலவிடுவேன்” என்றான்.

இதனைக் கேட்ட முனிவர் “உன்னுடைய நேர்மையான பதிலைக்கண்டு மகிழ்கிறேன். இப்போது உன்னுடைய பிரச்சனைக்கு நீயே விடை கண்டுவிட்டாய்” என்றதும் இளைஞன் “புரியவில்லையே சுவாமி” என்றான்.

அதற்கு முனிவர் “நான் 1440 வெள்ளிக் காசுகள் என்று கூறியது ஒரு நாளில் இருக்கும் 1440 மணித்துளிகளைக் குறிக்கிறது. அந்த மணித்துளிகள் வெள்ளிக்காசுகளைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. அது ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட ஒரு பொக்கிஷம். அதை ஒரு மனிதன் எவ்வாறு செலவிடுகிறானோ அதைப் பொறுத்தே அவனுக்கு வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். இப்போது உன்னுடைய பதிலிலேயே உன்னுடைய அத்தனை பிரச்சனைக்கும் தீர்வுகள் உள்ளது” என்றதும் தெளிவடைந்தவனாய் இளைஞன் வீடு திரும்பினான்.

இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்மில் எத்தனை பேர் அந்த இளைஞனைப் போல் வாழ்ந்து வருகிறோம்? நம்மில் எத்தனை பேர் நம் குடும்பத்திற்காகவும், நண்பர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் நேரத்தை ஒதுக்குகிறோம்? வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தை கடக்கும் போது பல நண்பர்களுடனான நட்பு அறுபட்டுவிடுவது தவிர்க்க முடியாத உண்மை.

ஆனால் இதற்கு நம்மிடம் இருக்கும் காரணங்களோ “ஆஃபீஸ்ல ஒர்க் ரொம்ப ஜாஸ்தி.. “ரெண்டு குழந்தைங்களாயிருச்சி அவங்கள பாத்துக்கவே டைம் போயிருது” என்று ஒரிரு வலுவில்லாத காரணங்களே..

அலுவலக வேலை என்பது முடிவில்லாத ஒண்று. எவ்வளவு செய்தாலும் செய்து கொண்டே இருக்கலாம். நம்மை நாம் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். அதே போல் குடும்பம், குழந்தைகள் மட்டுமே நம் உலகமல்ல. அதை தாண்டியும் வெளியில் நமக்கு உறவுகள் தேவைப்படுகின்றன.

இந்த அனைத்து சூழலையும் ஒருவன் திறமையாகக் கையாண்டு அலுவலகப் பணிகளுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்குமிடையே ஒரு சமநிலையை கொண்டு வரவேண்டுமானால் நிச்சயம் நேரத்தை முறையாகப் பயன்படுத்துதல் மிகவும் அவசியமாகிறது. எவ்வளவு நேரம் வேலை செய்தோம் என்பதை விட அந்த நேரத்தில் உபயோகமாக என்ன செய்தோம் என்பதே முக்கியம். எப்படி நம் ஒவ்வொரு செயலுக்கும் இந்த நேரத்தை முறைப்படுத்தி முறையாகப் பயன்படுத்துவது? அடுத்த இதழில் விரிவாகக் காணலாம்.

-முத்துசிவா

 

Likes(6)Dislikes(0)
Share
Share
Share