Apr 132014
 

இந்த மாதம் சாதனையாளர்கள் பக்கத்தில் திரு.அண்ணாமலை அவர்களைப் பற்றி பார்ப்போம். இவரது சென்னை பெசன்ட்நகர் வீட்டிற்கு பேட்டி எடுக்கலாம் என்று சென்றிருந்தபோது, கன்னிமாரா நூலகத்திற்குள் நுழைந்துவிட்டோமோ என்ற உணர்வு உதிக்கிறது. காரணம், புத்தகங்கள்!! வீட்டின் பெரும் பகுதிகளை புத்தகங்களே ஆக்கிரமித்திருந்தது. இவரது சாதனைகள் என்னை மிகவும் வியக்கவைத்தது.

இந்திய விடுதலை, சுதந்திரத் தியாகிகள், இந்திய தேசிய ராணுவம் (INA), INAவில் தமிழர்கள் பங்கு என நாம் சுதந்திரம் பெற்றதைப் பற்றி பல புத்தகங்களை படித்து ஆராய்ச்சி செய்து, வைத்திருக்கின்றார். வரலாறு குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது, இடையிடையே பல நூல்களை எடுத்து வந்து, மிகுந்த ஆர்வத்துடன் உதாரணம் காட்டுகிறார்.

விடுதலைக்காக தமிழக வீரர்கள் செய்த தியாகங்கள், அனுபவித்த துயரங்கள் பற்றிய அருமையான குறும்படத்தை திரு.எம்.ஈ.ஸ்வர்னவேல் அவர்கள் எடுத்தபோது, பெரும் பின்புலமாய் இருந்துள்ளார் (அந்த வீடியோக் காட்சிகளை இந்த மாதம் கதைக்கட்டுரைகள் பகுதியில் காணலாம்

தன் வாழ்வின் பெரும் பகுதியை, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்ட வீரர்களை ஆராய்ச்சி செய்வதில் செலவிட்டவர். மறைக்கப்பட்ட தமிழர் வீரவரலாற்றை அனைவருக்கும் தெரியப்படுத்த, சில புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள், “இந்திய தேசிய ராணுவம் தமிழர் பங்கு” மற்றும் “தூக்கிலிடப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்கள்” என்ற இரு புத்தகங்களும் ஒவ்வொருத் தமிழனும் படிக்க வேண்டியவை. இவரின் பேட்டியிலிருந்து..

B+: வணக்கம் சார். உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள்.

அண்ணாமலை: 1966-1968 இல், ஐ.ஐ.டியில் எம்.எஸ்.ஸி கணிதம் (Msc Maths, IIT) படித்தேன். கணிதப் பேராசிரியராக கோவை பொரியியல் கல்லூரியில் சில வருடங்களும், பின்னர் 34 வருடம் சென்னை அரசு கலைக்கல்லூரியிலும் பணிப்புரிந்தேன். பலத் துறைகளைப் பற்றி நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அப்போதிலிருந்தே இருந்தது.

என் வாழ்வில் திருப்புமுனையாக திரு.சிவலை இளமதி என்ற எழுத்தாளரின் புத்தகம் அமைந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைப் பற்றி அவர் எழுதியப் புத்தகத்தை 1994 இல் நான் படித்தேன். அந்தப் புத்தகத்தில் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த பல பேரை சென்னைச் சிறையில் தூக்கில் போட்டார்கள் என்ற விவரங்களைக் கொடுத்திருந்தார். இந்தத் தகவலைப் பற்றி எந்த செய்தித்தாளிலோ, பிற ஊடகத்திலோ, காணாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தூக்கிலிடப்பட்டோரைக் குறித்து மேலும் விவரங்களை அறிய எனது பயணமும் ஆராய்ச்சியும் தொடங்கியது. இந்தத் தேடல், என்னை பல இடத்திற்கும், உயர்ந்த மனிதர்களைச் சந்தித்து விவரங்களை சேமிப்பதற்கும் வித்திட்டது.

old-india-photos-unknown-freedom-fighters-hanged

B+: உங்களின் அந்த அருமையானப் பயணத்தை பற்றி..

அண்ணாமலை: ஆரம்பத்தில் தகவல்கள் சேகரிப்பது மிகக் கடிணமாக இருந்தது, இந்திய தேசிய ராணுவத்தைப் பற்றியும், நேதாஜிப் பற்றியும் பல விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். தமிழில், நேதாஜிப் பற்றி ஒரு சில புத்தகங்கள் இருந்தன. ஆனால் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் (INA) பற்றியத் தகவல்கள் இல்லை.

பின் எனது சொந்த விருப்பத்தில் பணியில் இருந்தபோதே, கொல்கத்தா மற்றும் பல இடங்களுக்குச் சென்று பல விவரங்களைச் சேகரித்தேன். கல்லூரியில் காலையில் பேராசிரியர் வேலை, மாலையிலோ INA வைப் பற்றித் தகவல்கள் சேர்ப்பதற்கு பல பேரைத் தொடர்புக் கொள்ளுதல், இவ்வாறாக கழிந்தன நாட்கள். தூக்கில் இடப்பட்டவர்களின் விவரங்களை வெளியுலகத்திற்கு கொண்டு வரவேண்டுமென்ற வெறி என்னுள் இருந்தது. இதை அறிவதற்காக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பர்மா போர்முனை, அயர்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆவணக் களங்களையும் ஆராய்ந்தேன்.

ஆச்சரியமாக, “ஹிந்து” பத்திரிக்கையில் திரு.C.G.K.ரெட்டி என்பவர், இந்த நிகழ்வுக் குறித்து ஒருக் கட்டுரை எழுதியிருந்தார். பெங்களூரில் இருந்த அவரை நான் சென்று சந்தித்தது ஒரு பெரிய வரம். திரு.ரெட்டியின் வாழ்க்கை சுவாரஸ்யம் வாய்ந்தது. அவர் INA வில் பணியாற்றி, இந்திய விடுதலைக்காக மட்டுமல்லாது பல நல்ல விஷயங்களுக்கு போராடிய மாமனிதர். திரு.ரெட்டி அவர்கள், INA வைப் பற்றி 16 பக்கப் புத்தகம் ஒன்றை எனக்குக் கொடுத்தார். அவரது புத்தகமும், கூடவே தூக்கில் இடப்பட்ட வீரர்கள் பற்றிய சிலத் தீர்ப்புகளும் கிடைக்கவே, அந்த வீரர்கள் குடும்பத்தைத் தொடர்புக் கொண்டு தகவல்களைத் திரட்டினேன்.

B+: அந்தப் பயணத்தில் உங்களை நெஞ்சை உருக்கிய சம்பவம்..

அண்ணாமலை: நிறைய சம்பவங்கள் இருந்தது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், ராமாநாதபுரத்தைச் சேர்ந்த திரு.ராமுத்தேவர் என்ற இளைஞனின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரிய ஒரு சரித்திரம். 1945 ஆம் வருடம், அவருடைய 18 வது வயதில், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டார்.  சிங்கப்பூருக்கு படிப்பதற்கு சென்ற திரு.ராமுத்தேவர், இந்திய விடுதலையின் ஆர்வத்தினால், INA வில், உளவுத்துறைப் பிரிவில் சேர்ந்தார். சிங்கப்பூரிலிருந்து பர்மா வழியாக இந்தியாவிற்க்கு, உளவுபார்க்க நடந்தே வருகிற பொழுது, பர்மாவில் கைதுசெய்யப்பட்டு, கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார்.

திரு.ராமுத்தேவருடன் சேர்த்து, INA வைச் சேர்ந்த இன்னமொரு 8 பேர், சென்னை சிறைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களில் 4 பேரை மட்டும் தேர்வு செய்து, பிரிட்டிஷ் அரசு 1945 இல் தூக்கில் போட்டது. சுதந்திரம் கிடைத்தப்பிறகும் கூட, தூக்கிலிடப்பட்ட தகவல் ராமுத்தேவரின் வீட்டிற்கு தெரியப்படுத்தவில்லை.  . உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை, அவரது தாயார் தொடர்ந்து  அலைந்து திரிந்து 1948ல் தான் தெரிந்துகொண்டது தான் வேதனையின் உச்சம். 1945-1946 வரை இந்தியாவில் அதிகமாக தூக்கிலிடப்பட்டது சென்னைச் சிறையில் தான்.

நாங்கள் 10பேர் ஒருக் குழுவாக சென்று தூக்கிலிடப்பட்டவர்களின் உடலை எங்கு புதைத்தார்கள் என்ற விவரங்களைச் சேகரித்தோம். ஓட்டேரி இடுகாட்டில் என்று தெரிந்து, அங்கு சென்று இறுதி மரியாதை செய்தோம். கேரளாவிலும் மற்ற மாநிலங்களிலும், அவ்வாறு INA வில் பணியாற்றித் தூக்கிலிடப்பட்டு வீரமரணமடைந்த வீரர்களுக்கு இன்று வரை விழா எடுத்துக் கொண்டாடும்போது, INA வில் பெரும் பங்கு வகித்த தமிழர்களின் வரலாறு வெளியேத் தெரியாமலும், தமிழகத்தில் அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததும் எனக்கு பெரும் ஏமாற்றமும் கவலையையும் தருகிறது. (INA வின் ஜெனரல் தில்லான் அவர்கள், INA வின் இதயமும், உயிரோட்டமும் தமிழர்கள் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.)

B+: இதற்காக என்ன செய்யலாம் என்று நினைக்கின்றீர்கள்?

அண்ணாமலை: இந்திய விடுதலை வரலாறு சிறப்பு வாய்ந்தது. இதன்  உண்மை சரித்திரம் மக்களுக்கு இன்று வரை சரியாக சென்றடையவில்லை. பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தை பற்றி நாம் சொல்லித்தர வேண்டும். அந்தப் பாடங்களில் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு அங்கீகாரம் தர வேண்டும். உதாரணமாக “வீர் சாவர்கர்” என்ற ஒரு மிகப்பெரிய வீரரைப் பற்றி சொல்லலாம். விடுதலைக்காக பல தியாகங்கள் புரிந்து, மிகக் கொடுமையானத் தண்டனைகளைப் 11 வருடங்கள் அந்தமான் சிறையில் பெற்றவர். அவரைப் பற்றி தமிழ்நாட்டில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? INA வைப் பற்றியும், அதில் தமிழர்கள் பங்குப் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும்.

B+: வீர் சாவர்கர் அவர்களைப் பற்றி சிறு வரிகள்..

அண்ணாமலை:  சாவர்கர் ஒரு பெரும் சகாப்தம். ஊக்கத்தொகை (SCHOLORSHIP) கிடைத்து லண்டனுக்கு படிக்க செல்கிறார். இந்திய விடுதலையில் தீவிர ஆர்வத்தை லண்டனிலும் வெளிக்காட்டுகிறார். அப்போது 1857ல் போராட்டம் (சிப்பாய்க் கலகம்) இந்தியாவில் வெற்றிகரமாக முடிகிறதை ஒட்டி சாவர்கரும் அவரது பெரும் குழுவும் லண்டனில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். 1857 போராட்டம் குறித்து  அருமையான புத்தகம் ஒன்றை வெளியிடுகிறார். வெளிவந்தால், இந்தியர்களின் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்று அஞ்சிய பிரிட்டிஷ் அரசு, அந்தப் புத்தகத்தைத் வெளியிடும் முன்பே தடை செய்தது.

Savar images

அந்தப் புத்தகம் தான் ஏறத்தாழ 100வருடங்களுக்கு முன் பஞ்சாபில் “கத்தார் புரட்சி” ஏற்படக் காரணமாய் இருந்துள்ளது. அமெரிக்கா, கணடா, மலேசியா மற்றும் பல நாட்டில் மிக நன்றாக வாழ்ந்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் பெரும் செல்வம், தொழில் இவற்றை எல்லாம் துறந்து, விடுதலைக்காக கத்தார் புரட்சியில் கலந்துக்கொண்டனர். பிரிட்டிஷ் அரசு இவர்களில் சுமார் 200 பேரைத் தூக்கிலிட்டது. நிறையப் பேரை 20 முதல் 30 வருட தண்டனையாக அந்தமான் சிறையில் அடைத்தது. கத்தார் புரட்சியில் ஈடுபட்டத் தமிழர் “திரு.செஞ்சைய்யா” சொல்ல முடியாத் தியாகங்களைப் புரிந்துப் பல துன்பங்களைச் சந்தித்தவர். செஞ்சைய்யா போல் நிறையத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களைப் பற்றிய வரலாறு தெரியாமலையேப் போய்விட்டது.

சாவர்கரையும் கைது செய்து, அந்தமான் சிறையில் பிரிட்டிஷ்ஷர் அடைத்தனர். அந்தமான் சிறையில் காந்திஜி, பகத்சிங், சாவர்கர் இவர்கள் மூவரின் வரிகள் மூன்றுக் கல்வெட்டுகளாய் ஒருக்காலத்தில் பிரசித்திப்பெற்று இருந்தது. பின்நாளில் சாவர்கர் “தீவிர ஹிந்துத்வாவில்” தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை அடுத்து, அவரது கல்வெட்டை மட்டும் நம் முன்னால் மந்திரி ஒருவர் அரசியலுக்காக சமீபத்தில் உடைத்து எரிந்தார். சாவர்கரைப் பற்றி நிறைய விஷயங்களை கீழே உள்ள இணையத் தளங்களில் கண்டறியலாம்.

www.savarkar.org/en/veer-savarkar

http://en.wikipedia.org/wiki/Vinayak_Damodar_Savarkar

B+: நேதாஜி அவர்களைப் பற்றி நீங்கள் அறிந்த சில விஷயங்கள்..

அண்ணாமலை: நேதாஜியின் மிக நெருங்கிய செயலாளராக இருந்த, சென்னையைச் சேர்ந்த திரு.பாஸ்கரனைச் சந்தித்து பல முறைப் பேட்டி எடுத்துள்ளேன். அவரைப் போல் நேதாஜியுடன் நெருங்கி பழகி வாய்ப்புப் பெற்ற பல மாமனிதர்களைச் சந்தித்துள்ளேன். நேதாஜியின் INA வில் 65 முதல் 70% வரைத் தமிழர்களே இருந்தனர். நேதாஜிக்கு அப்போது பெருமளவு ஆதரவு அளித்ததும் நமது தமிழர்கள் என்பது உலகரிந்த விஷயம்.

2294974.cms

ஒரு சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வு. 18 மார்ச் 1944 அன்று, INA பர்மா வழியாக இந்தியாவில் நுழையத் திட்டமிடுகின்றனர். இப்போது உள்ள மணிப்பூரில் “மோரெ” என்ற இடத்தை பிரிட்டிஷ் அரசுடன் போரிட்டு INA வீரர்கள் கைப்பற்றுகின்றனர். அந்த மாகாணத்தை மூன்று மாதம் INA ஆட்சி செய்தது பெரும் சாதனை. இந்த நிகழ்வும் வரலாற்றில் பெரிதாகக் கூறப்படவில்லை. இன்று வரை INAவில் 60000 பேர் போரில் இறந்திருக்கிறார்கள். ஆனால் INA விற்கு ஒரு நினைவுச் சின்னம் கூட நம் நாட்டில் இல்லை.

INA வீரர்களைச் சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய ராணுவத்தில் (INDIAN ARMY) நேரு அரசு சேர அனுமதிக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் மவுண்ட்பேட்டனின் மனைவி. அவர் நேருவைக் கேட்டுக் கொண்டதனால் தான் INA வீரர்களை இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்த்துக்கொள்ளவில்லை என்று அதிகாரப்பூர்வமானப் பதிவுகள் (OFFICIAL RECORDS) உள்ளன. மவுண்ட்பேட்டனின் மனைவியின் வாழ்க்கை வரலாற்றில் கூட இந்தத் தகவல் பதிவாகி உள்ளது.

B+: உங்களது முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்..

அண்ணாமலை: தினமனியில் எனது நேதாஜிப் பற்றி பல கட்டுரைகள் வெளிவந்துள்ளது. அது மட்டுமின்றி செஞ்சைய்யா, கத்தார் புரட்சி, கத்தார் புரட்சியில் தமிழர் பங்கு, M.P.T.ஆச்சார்யா பற்றியெல்லாம் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளது. தமிழக அரசிடமிருந்து பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். ஹைதர் அலி தமிழகத்திற்கு வந்த வரலாற்றை 700 பக்கம் கொண்ட புத்தகமாக சமீபத்தில் வெளியிட்டுள்ளேன்.

B+: இளையத் தலைமுறைக்கு நீங்கள் சொல்ல விரும்புவது..

அண்ணாமலை: நீண்ட வருடங்கலாக தடை விதிக்கப்பட்டிருந்த INA விவரங்கள், ஆறு வருடத்திற்கு முன் தடைநீங்கப் பெற்று, இப்போது ஆவணக் காப்பகங்களில் (ARCHIVES) இருக்கிறது. நம் நாட்டில் கிடைப்பதை விட நிறைய ஆவணங்கள் லண்டனில் இருக்கின்றது.

இந்திய சுதந்திர வரலாற்றைப் பற்றி நாம் அனைவரும் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டும். இத்தனைக் கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை நினைத்து, நல்ல வழியில் வாழ்ந்து பேணிக் காக்க வேண்டும். அது நம் அனைவரதுக் கடமை.

ஜெய் ஹிந்த்!!

Likes(5)Dislikes(0)
Share
Share
Share