Jul 142015
 

Kavithai

 

பொறுமையிழந்த ஒரு காலைப் பொழுதில்..
என் வீட்டின் சாளரத்தின் கம்பிகளை
வளைத்தது என் நம்பிக்கை..

பரந்த வானத்தின் பறவைகளை பார்த்து
உயர எழும்பி அது செல்வதை
தடுக்க விருப்பமில்லாமல் அதை ..
அனுப்பி வைத்து விட்டு
அது திரும்பும் வழி பார்த்திருந்தேன்..

இதோ..

என் நம்பிக்கை இன்னும் பெரிதாக வளர்ந்து..
என்னை நோக்கி வருகிறதே..
கையில் கனி ஒன்றை ஏந்தியபடி..

இனி …

நிரந்தரமாய் சாளரத்தின் கதவுகளை
திறந்து வைப்பேன் என்று
நம்பியது ..நம்பிக்கை!
அதன் நம்பிக்கை வீண்போகவில்லை!
நான்தான் அதை முதலில் நம்பவில்லை!

– கவிஞர் ஜோஷுவா

(சௌதியிலிருந்து)

 

Likes(5)Dislikes(0)
Share
Mar 012014
 

வணக்கம் நண்பர்களே…

நம் வாழ்வில் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகள், எதிர்கொள்ளும் சவால்கள், சந்திக்கும் மனிதர்கள் நமக்கு பல அனுபவங்களை அளித்து, நமது பண்புகளையும் சமுதாயம் குறித்த நம் சிந்தனைகளை உருவாக்கவும் மாற்றவும் செய்கின்றன. சில நாட்களுக்கு முன் நடந்த என்னை மிகவும் பாதித்த ஒரு சம்பவத்தை உங்களுடன் இந்த இதழில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இடம்: சென்னை எழும்பூர் ரயில்வே நிலையம்

ஒரு மாலை நேரம், எக்ஸ்பிரஸ் வருகைக்காக குறிப்பிட்ட பிளாட்பார்மில், காத்துக் கொண்டிருந்தேன். அன்று நடந்த ஒரு நிகழ்வு, இன்றும் மனதில் நங்கூரமாய் பதிந்து கிடக்கிறது. அன்று சந்தித்த நபர், நம்பிக்கை வேரை, மிக ஆழமாக மனதில் ஊன்றி சென்றார் என்றே கூற வேண்டும்.

பிளாட்பாரத்தில் ஆங்காங்கே சிறு சிறு கூட்டமாக மக்கள் நின்று கொண்டும் நடந்துகொண்டும் இருக்க, “டக்.. டக்” என்ற சத்தமும் ”சார் கொஞ்சம் நகருங்க” என்ற சத்தமும் மாறி மாறி கேட்கவே, என் கவனமும் பார்வையும் சத்தம் வந்த திசையில் திரும்பியது.

ஒரு பத்து மீட்டர் இடைவெளியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு மாற்றுத் திறனாளி, இரண்டு கால்களும் இல்லாத நிலையில், நான்கு சக்கரம் உள்ள ஒரு சிறு பலகையின் மீது அமர்ந்து கொண்டு பிளாட்பாரத்தில் உள்ள அனைத்து குப்பைகளையும் கூட்டி ஓரம்கட்டிக் கொண்டிருந்தார். சற்று ஆச்சர்யத்துடனும் ஆர்வத்துடனும் அவரை உற்று கவனித்தேன்.

சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். இரண்டு கால்களும் செயல் இழந்த நிலையில், இடது கை மிகவும் மெலிதாக சிறிய செயல் திறனுடன் இருக்கிறது. வலது கை மட்டும் முழு திறனுடன் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. உடலை குனிந்து  இரண்டு கைகளாலும் வண்டியை இயக்குகிறார். வலது கையால் ஒரு துணியாலும், சிறு பிரஷ்ஷாலும் குப்பைகளை கூட்டித் துடைத்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு இடமாக, சுத்தம் செய்தபின், அங்கு நின்று கொண்டிருக்கும் மனிதர்களை பார்க்கிறார். சிலர் அவருக்கு கையில் இருக்கும் சில்லரைகளை கொடுக்கின்றனர். சிலர் அவரின் பரிதாபப் பார்வைக்கு எந்த வித பதிலும் அளிக்காமல் விலகிச் செல்கின்றனர். அவ்வாறே கூட்டிக்  கொண்டு என்னை நெருங்க, என்னையும் அறியாமல் ஒரு பத்து ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்து சற்று பரிதாபத்துடன் பார்த்தேன். எனது பரிதாபமோ, கரிசனப் பார்வையோ அவருக்கு ஒரு நிம்மதியையும் அங்கீகாரத்தையும் தந்திருக்க கூடும். அதனால் சற்று வேலையை நிறுத்தி சில நிமிடங்கள் பேச ஆரம்பித்தார்,

அவர்: என்ன சார் சென்னைக்கு புதுசா?

நான்: புதுசு இல்லைங்க. ஒரு பதினைந்து வருஷத்துக்கு மேலாகுது. உங்க பேர் என்ன? உங்க வீடு எங்க இருக்கு?

அவர்: என் பேரு முருகன் சார். வீடு இங்க பக்கத்தில் ரெண்டு கிலோமீட்டர் போகணும்.

நான்: இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்றீங்க. எப்படி உங்களால் முடிகிறது?

அவர்: ரொம்ப கஷ்டம் தான் சார். ஆரம்பத்துல உடம்பு ரொம்ப வலிக்கும். ஆனாலும் அதை பெரியது படுத்தாமல் வந்து சுத்தம் செய்வேன். ஆனால் சிலர், இவ்வளவு கஷ்டப்பட்டு எதாவது வேலை செய்கிறேன் என்று கூட நினைக்காமல், என்னைப் பார்த்தாலே திட்டுவாங்க. அப்போதான் சார் எனக்கு ரொம்ப வலிக்கும்.

சிறிது நாளில் அது எல்லாமே பழகிவிட்டது. கோவில்களிலோ, தெருக்களிலோ உட்கார்ந்து பிச்சை எடுக்க மனம் வரவில்லை சார். அதனால், ஏதோ என்னால முடிஞ்ச வேலை செய்யலாம் என்று இந்த வேலையில் இறங்கி விட்டேன். இந்த கஷ்டங்களைப் பார்த்தால், வாழ முடியாது. எவ்வளவு தூரம் முடிகிறதோ, அவ்வளவு தூரம் சுத்தம் செய்கிறேன். சிலர் அவர்களால் முடிந்ததை தருகிறார்கள். அவர்கள் தரும் காசில்தான் என்னோட வாழ்க்கை ஓடிகிட்டு இருக்கு. ஆனால் நான் இதை கேவலமா நினைக்கவில்லை சார்.

என்னை மாதிரி இருக்கும் சில மாற்றுத் திறனாளிகள், ஃபோன் பூத்தோ, சிறிய பெட்டிக் கடையோ வைத்து பிழைக்கின்றனர். அவர்களைப் பார்த்தால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். இந்த ஸ்டேஷன்லயே, நிறைய பிக்பாக்கெட்டுங்க இருக்காங்க சார். உடம்பு நல்லா இருந்தும், அடுத்தவர் காசுக்கு ஆசைப்படுகிற அவர்களை பார்க்கும் போது, என்னை நினைத்து எனக்கே ரொம்ப பெருமையாக இருக்கும் சார்.

யாரிடம் கொட்டுவது என்று தெரியாமல் தேக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டிக்கொண்டிருந்தார். ஒரு பத்து நிமிடத்திற்கும் மேல் பேசிக்கொண்டிருந்தவர், திடீரென “மன்னிச்சிருங்க சார். உங்க நேரத்தையும் வீணாக்கிட்டேன்… வருகிறேன் சார்” என்று கூறிவிட்டு வண்டியை நகர்த்திக் கொண்டு அடுத்த இடத்தை சுத்தம் செய்யப் புறப்பட்டார். என் பார்வை அவரை விட்டு விலக மறுத்தது. இதயம் சற்று கனமான ஒரு உணர்வுடன் கண்களில் லேசாக நீர்த்துளி எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.

அன்று அவரிடம் கண்டது ஒரே ஒரு கையில்லை, அது தாங்க நம்பிக்கை.

மனிதர்களுக்கு உடலில் உள்ள குறைபாடுகள் ஒரு குறையே அல்ல, மனம் தான் ஊனப்படக் கூடாது என்ற உண்மையை ஆழமாக உணர வைத்தது அந்த சம்பவம்.

உடல் ரீதியில் எந்த குறையும் இல்லாமல் இருக்கும் நம்மில் சிலரோ சிறிய பிரச்சனை நம் வாழ்வில் வந்தால் கூட ஆண்டவா எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டத்தை தருகிறாய் என்றோ, வாழ்க்கையை வெறுத்தவர் போன்றோ பேசுவதை நிறைய பார்த்திருக்கிறோம். அப்போது, முருகனைப் போல் உள்ள தன்னம்பிக்கை மனிதர்களை கண்டு புரிந்து கொள்ளலாம், நமக்கு உள்ளதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்று.

நண்பர்களே, இறைவன் நம்மை நன்றாக படைத்திருக்கிறான். நம்மிடம் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது. அதனை வீணடிக்காமல் தன்னலத்தை மறந்து, ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழப் பழகுவோம். நம்மால் இயன்ற வரை சக மனிதர்களுக்கு உதவிகளைச் செய்து, இவ்வுலகை வாழ்வதற்கு உகந்த நல்ல இடமாக மாற்ற முயற்சிப்போம்.

Likes(3)Dislikes(0)
Share
Share
Share