Jul 142015
 

athirsam

“அம்மாடி முத்துலட்சுமி, அந்த முறுக்கு மாவை சீக்கிரம் எடுத்து வந்து நல்லா பிசைந்து கொடு. முறுக்கை இப்போ பிழிந்தால் தான் நாளைக்கு சப்ளை கொடுக்க முடியும். டேய் முனியா, அந்த அதிரசத்தை பெட்டியில் எடுத்து அடுக்கி வைக்கலாம், வா” என்று கூறியபடி அடுக்கியிருந்த லட்டை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள் அம்சவேணி அம்மாள்.

இரண்டு கால்களிலும் சக்கரம் கட்டிவிட்டது போல் ஓடிக்கொண்டிருந்தாள். 50வயதிலும் தேனீயை போல் சுறுசுறுப்பு. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் அம்சவேணியின் மகன் ராமன்.

மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான் ராமன். ஒருவேலை தானும் உதவலாம் என்று போனால், “ஐயா, ராசா.. வேண்டாயா.. நீ டாக்டருக்கு படிக்கிற புள்ள, இந்த வேலையெல்லாம் நான் செஞ்சுக்கிறேன், நீ நல்லா படிச்சு உன் சொந்த கால்ல நிக்கனும், அது போதும்பா” என்பாள்.

இதையெல்லாம் பார்த்தும் யோசித்தபடியே இருந்த ராமனுக்கு வாசலில் யாரோ நிற்பது போன்ற சத்தம் கேட்டு விரைந்து வாசலுக்குச் சென்றான்.

ஒரு பெண், கொஞ்சம் ஆடம்பரமான தோற்றம். முகத்தில் தெளிவு, நடை உடை பாவனையில் ஒரு மிடுக்கு. பார்ப்பதற்கு கிராமத்து பெண் போல் அல்ல. யோசித்தபடியே சென்று, “யார் நீங்க, என்ன வேண்டும் உங்களுக்கு?” என்றான்.

“நான் கயல்விழி, ஒரு பத்திரிக்கை ஆசிரியை, இது தானே அம்சவேணி அம்மாள் வீடு?” என்றாள்.

“ஆமாம்” என்றான் ராமன்.

“நான் அவர்களை பார்க்க வேண்டும். பார்க்கலாமா?” – கயல்விழி

“ஓ, பார்க்கலாமே, உள்ளே வாங்க, அம்மாவை கூப்பிடுகிறேன்” என்று உள்ளே விரைந்தான்.

வீட்டை நோட்டம் விட்டபடியே நின்றுக் கொண்டிருந்தாள் கயல்விழி.

அழகான கிராமம் அம்மாப்பட்டி. அம்சவேணியின் மாமனார் குடும்பம் அந்த கிராமத்தில் வாழ்ந்த பெரிய குடும்பங்களில் ஒன்று. செல்வ செழிப்பு மிகுந்த குடும்பம். நஞ்ச புஞ்ச எல்லாம் ஏராளமாக இருந்தது. விவசாயம் தான் அவர்களது முக்கியத் தொழில். யார் உதவி என கேட்டு வந்தாலும் ஓடிச்சென்று உதவும் உள்ளம் கொண்டவர்கள். நன்றாக வாழ்ந்து, விவசாயத்தில் நஷ்டம் அடைந்து, விதி வசத்தால் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்ற பெயர் இருந்தாலும் தன்னம்பிக்கையோடு உழைத்து வாழ்வில் வெற்றியை தேடும் அம்சவேணியை பற்றி கேள்விப் பட்டதையெல்லாம் நினைவுக் கூர்ந்தாள் கயல்விழி.

“அம்மாடி, யார் தாயி, என்ன வேணும்” என்ற அம்சவேணியின் குரலைக் கேட்டுத் திரும்பி பார்த்தாள் கயல்விழி.

“வணக்கம்மா, என் பெயர் கயல்விழி, நான் ஒரு பத்திரிக்கை ஆசிரியை. உங்களைப் பற்றி தெரிய வந்தது. உங்களை பேட்டியை என் பத்திரிக்கையின் நம்பிக்கை நட்சத்திரம் பகுதியில் எழுதலாம் என்று உங்களை பார்க்க வந்தேன்” என்றாள்.

“என்ன பத்தியா? அய்ய நா அப்புடி என்ன செஞ்சுப்புட்டேன்? எனக்கு ஒன்னும் புரில. ஏதோ நீ வந்துட்ட, இப்படி உக்காரு தாயி. நா போயி காபி தண்ணி கொண்டு வாரன்” என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றாள். அடுத்த இரண்டு நிமிடத்தில், காபி பலகாரத்தோடு வந்தாள்.

“மொதல்ல சாப்டுமா, அப்புறம் பேசுவோம்”

“இல்லம்மா, பரவாயில்லை இருக்கட்டும். நீங்க உக்காருங்க. இந்த வயசிலும் எப்படி உங்களால இப்படி சுறுசுறுப்பா இருக்க முடியுது, பார்க்கவே வியப்பா இருக்கு” என்றாள்.

“என்னம்மா பன்றது? வேல செஞ்சே பழக்கப்பட்ட ஒடம்பு. முடியாதுனு என்னிக்கி நினைக்கிறனோ, அன்னிக்கி நா உயிரோட இருக்கமாட்டம்மா” என்றாள் அம்சவேணி.

“பல வசதி வாய்ப்புகளோடு இருந்துட்டு இப்படி ஒரு நிலைமையிலும் தன்னம்பிக்கையோடு எப்படி உங்களால இருக்க முடியுது?”

“நான் கல்யாணம் பண்ணிட்டு வந்தப்போ, என் மாமனார் வெவசாயத்துல நல்ல லாவம், வியாவரத்துல கேரளா, கர்நாடகானு நெல், காய்கறி, பழம்னு அனுப்புவாங்க. ஒரு சமயத்துல 10லட்சம் ரூவா நஷ்டம் வந்துட்டுது. என்ன பண்றது, இருக்கறத எல்லாம் வித்துட்டு கடன கொடுக்கவே சரியா இருந்துச்சு. நடுரோட்டுக்கு வந்தோம். என் மாமனார் அந்த கவலைலே எறந்துட்டாரு.

என் புருஷனும், இனிமே இந்த ஊருல இருக்க வேணாம், வேற எங்கையாவது போயிர்லாம்னு சொன்னாரு. எனக்கு மூனு புள்ளைங்க. கூட்டிட்டு வேற ஊருக்கு போனோம். கைல இருந்த காச வச்சு சின்னதா ஒரு காய்கறி கட போட்டோம். அதுவும் நஷ்டமாச்சு. இதுக்கு மேல இழக்கறதுக்கு ஒன்னுமே இல்ல, வாங்க திரும்பி நம்மூருக்கே போய்டலாம்னு சொன்னேன். இந்த ஊருக்கே வந்துட்டோம்.

அவரு எங்ககிட்ட வேல செஞ்ச ஆளுங்ககிட்ட போய் வேல செஞ்சாரு. எனக்கு பாக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எனக்கு நல்லா சமைக்க வரும். ஒரு சின்ன பலகாரக் கடைய ஆரம்பிச்சேன். பலகாரங்க நல்லா விக்க ஆரம்பிச்சுது. அப்டியே கொஞ்ச கொஞ்சமா மேல வர ஆரம்பிச்சோம். இப்போலாம் நெறய பலகாரம் செய்ய ஆர்டருங்க வருது. என் ரெண்டு பொண்ணுகளையும் கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டேன். என் மவன் டாக்டருக்கு படிக்கிறான். இப்போ நம் கடைள ஒரு பத்து பேரு வேல பாக்குறாங்க, ஒரு பத்து குடும்பம் பொழைக்குது. வேற என்னம்மா வேணும்?” என்று முடித்த அம்சவேணியை ஆச்சரியத்துடன் பார்த்தாள் கயல்விழி.

“ஒரு பெண்ணாக இருந்து இத்தனை பெரிய சாதனை பண்ணியிருக்கீங்க. கஷ்டப்படுகிறவர்களுக்கு என்ன சொல்ல ஆசைப் படுவீங்க?” என்று கேட்டாள்.

“வாழ்க்கை கொடுத்த வசதிய விதி பறிச்சா, துவண்டு போவாதீங்க. மனசுல வைராக்கியம் இருந்தா, வாழ்ந்து கெட்டவங்களும் வாழ்ந்து காட்டலாம்.” என்றாள் அம்சவேணி தன்னம்பிக்கையோடு.

“பலகாரத்த சாப்பிடும்மா. நானே செஞ்சது“ என்றாள்.

சிரித்துக்கொண்டே அதிரசத்தை கடித்தாள் கயல்விழி. உழைப்பின் சுவை இனித்தது நாவில்…

– சிவரஞ்சனி.வி

 

Likes(4)Dislikes(0)
Share
Share
Share