Nov 142015
 

2B8C652400000578-3206031-India_s_Cochin_International_Airport_is_now_the_first_in_the_wor-a-29_1440161749578

 

மணி, சென்னை

சாதிக்கத் தூண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஏதும் வருவதில்லையே?

சாதிக்க விரும்புபவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லையே.


மயுரி, நாகர்கோவில்

கொச்சி விமான நிலையம் உலகின் முதல் சோலார் விமான நிலையம் என பெயரெடுத்து வெற்றிப்பெற்றது பற்றி?

45 ஏக்கரில் 46150 சூரியத் தகடுகள் (SOLAR PANELS) அமைத்து, ஒருநாளில் 60000 யூனிட்கள் வரை மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்துள்ளார்கள். இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலகத்திற்கே முன்னோடியாய் இருக்கும் கேரளாவின் இந்த செயல், பாராட்டப் படவேண்டியது மட்டுமல்ல பின்பற்ற வேண்டியது கூட.


வினோதினி, மும்பை

சமீபத்திய லெக்கின்ஸ் கலாச்சாரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சமீபத்திய என்பது சரியா என்று தெரியவில்லை. அன்றைய ராஜா காலத்து படத்தில் எம்.ஜி.அர். வீரப்பபா போன்றோர்கள் அணிந்து இருப்பார்களே அது தான் இப்போது பெண்கள் அணிகிறார்கள். லெக்கின்ஸோ புடவையோ நாம் செய்யும் வேலைக்கு சௌகரியமான ஆடை அணிவது தவறில்லை. ஓட்டப்பந்தய வீராங்கனை சேலை கட்டி ஓட முடியுமா? சில மக்களிடம் மந்தை மனப்பான்மை [herd mentality] இருப்பது இயல்பு. ஆகையால், ஆணோ பெண்ணோ அடுத்தவர் போல உடை உடுத்த தயங்குவதில்லை.


பிரசன்னா, மதுரை

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 தங்க முதலீடு திட்டங்களைப் பற்றி?

பலர் தங்கம் வாங்குவதை முதலீடாகவே பார்ப்பதால் கோல்டு பாண்டு திட்டத்துக்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. கோல்டு பாண்ட் திட்டம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திட்டம் என்பதால் மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்றே நம்புகிறேன்.


ரவி ஷங்கர், துபாய்

உண்மையிலேயே சகிப்புத்தன்மை நம்மிடம் குறைந்து வருகிறதா அல்லது மீடியாக்களின் வளர்ச்சியினால் எல்லா விஷயங்களும் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளதா?

“எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.” என்ற சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு இன்றும் உண்மை என்றே நம்புகிறேன்.
சகிப்புத்தன்மை குறையவில்லை. ஆனால் அவசரத்தன்மை, பொறுப்பின்மை, பொறுமையின்மை போன்றவை கூடியுள்ளதாக தெரிகிறது.


சரவணன், ஹைதராபாத்

தேசத்தின் பழம் பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பதால் பயன் உண்டா?

பேசிக் கொண்டு மட்டும் இருந்தால் பழசோ புதுசோ பெருமை இல்லை. ஆனால், முன்னேறுவதற்கு பழம் பெருமையைப் பற்றி தெரிந்து வைத்தல் நமது நாட்டிற்கு மிக மிக அவசியம்.

“பழம் பெருமையும், தற்கால அவல நிலையும், எதிர் கால கனவும் உள்ள இளைஞர்களே இந்தியாவை முன்னேற்றுவர்” என்ற அரவிந்தர் வார்த்தை பொய்யாகுமா?


மாலதி, திருவண்ணாமலை

கோயில்களில் செய்யும் அபிஷேகங்கள், பிரசாதங்கள் போன்றவற்றை வீனடிக்காமல், ஏதெனும் குழந்தைகள் காப்பகங்களுக்கு கொடுத்தாக வேண்டுமென்ற சட்டம் வந்தால்?

அனைத்துமே சட்டத்தின் மூலமாக தான் நிறைவேற வேண்டும் என்றில்லை.

பிறகு கல்வியின் அவசியம் என்ன? நமது கல்வி ஓர் மனிதனிடம் சமுதாயத்தின் மேல் அக்கறையை வளர்க்க வேண்டும். சக மனிதன் மேல் பரிவு வந்தாலே பாதி சங்கடங்கள் குறையும்


சுந்தர், சேலம்

Oct 31 வல்லபபாய் படேல் பிறந்ததினம். அவரைப் பற்றி..

யார் இந்த வல்லபபாய் படேல் – என்ற கேள்வியை எழுப்பினார் ராஜகோபாலாச்சாரியார். அதற்கு அவரே பதிலும் தந்தார்: ஓயாத உத்வேகம், என்றும் சாயாத துணிவு, மாறாத தன்னம்பிக்கை, மலை போன்ற ஆற்றல் – ஆகியவற்றின் ஒட்டுமொத்த வடிவமாக அவதாரம் எடுத்து வந்தவர்தான் இந்த வல்லபாய். இவரைப் போன்ற இன்னொருவரை நாம் மீண்டும் காணப் போவதில்லை என்றார். மூதறிஞரே சொன்னப் பிறகு இனி நான் இல்லை வேறு எவர் எதை சொல்ல.


ஜோசப், சென்னை

நமது பாடங்களில் வரலாறு திரிக்கப்படுகின்றனவா?

திரிக்கப்படுகின்றதா என தெரியவில்லை. ஆனால், மறைக்கப் படுகிறது.. பல பக்கங்களை அலெக்சாந்தருக்கு ஒதுக்கியவர்கள் அரைப் பக்கத்தில் ராஜராஜ சோழனை ஒடுக்கிவிட்டார்களே!


முருகேசன், திருப்பதி

விவசாயத்தில் தற்போதைய சவால்களினால், விவசாய நிலத்தை விற்று, பலர் வேறு வேலைகளுக்கு செல்லும் தற்போதைய நிலை தொடருமா?

தொடரவேண்டுமா? கார்பொரேட் துறையினர் சிலர் விவசாயம் பக்கம் வரும் போது பரம்பரை விவசாயி வெளியில் போகலாமா?

வள்ளுவன் என்ன சொல்கிறான் பாருங்கள்:

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை [1031]

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

Likes(1)Dislikes(0)
Share
Share
Share