Dec 132014
 

4

பல தலைமுறைகளாக விவசாயத்தை மட்டுமே சார்ந்து இருந்த பல விவசாயிகள் கூட தங்களது நிலத்தை விற்று விடக்கூடிய இன்றைய சூழ்நிலையில், விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பி கிட்டத்தட்ட 150 ஏக்கரில் மகத்தான  சாதனை புரிந்துள்ளார் லியோ ஆர்கானிக் பண்ணையின் உரிமையாளர் திரு.பாரதி.

வியப்பாக இருக்கிறதல்லவா? அதுவும், முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் ஒருவர் மகசூலில் பல சாதனைகள் புரிந்து வருகிறார் என்றவுடன் அவரையும், அவர் தோட்டத்தையும் காண மிக ஆவலுடன் சென்றேன். B+ இதழின் இந்த மாத சாதனையாளராய், அவரைப் பேட்டி எடுக்கலாமா என்றவுடன், மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றார்.

இவரது பண்ணை இருக்கும் இடம் காவேரிராஜபுரம். திருவள்ளூர் மாவட்டத்தின்,  திருவாலங்காட்டுப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அமைதியான மிக ரம்மியமான இந்த தோட்டத்தை எட்டியவுடன், சென்னையிலிருந்து 50கிமிக்கு மேல் பயணம் செய்து வந்த களைப்பு காணாமல் போய்விடுகிறது.

மா, பலா, சப்போட்டா, கொய்யா, நெல்லி போன்றவை காய்த்துக் குலுங்கி,  இயற்கை அழகு கொஞ்சி விளையாடும் இந்த தோட்டம், நம் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மயில்கள், வாத்துகள், கினிக்கோழிகள், சண்டைக்கோழிகள், வான்கோழிகள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடு மாடுகள் என பல உயிரிணங்கள் வாழும் ஒரு சிறு சரணாலயமாகவும் உள்ளது. இனி இவருடன் பேட்டியிலிருந்து..

 

கே: வணக்கம் சார், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்

வணக்கம் சார், என் பெயர் பாரதி. என் தம்பி சரவணன். நாங்கள் இருவரும் காவிராஜபுரத்தில் அங்ககப் பண்ணை வைத்து, இயற்கை முறையில் விவசாயம்   செய்துக் கொண்டிருக்கிறோம். 1997 ஆம் ஆண்டில் இந்த ஃபார்ம் ஹௌஸை வாங்கினோம். அப்போது இந்த இடம் முழுவதும் காடுமேடாகவும், கூழாங்கள் நிரம்பியும் இருந்தது. கடின உழைப்புடன் இந்த நிலையில் மாற்றியுள்ளோம்.

எங்களது பரம்பரைத் தொழிலே விவசாயம் தான். கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் டர்னர் பயிற்சி முடித்து, எங்கள் சிறுதொழில் நிறுவனத்தில் வேலை செய்தேன். விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் என்னை முழுநேர விவசாயி ஆக்கிவிட்டது. விவசாயம் செய்துக்கொண்டே, இப்போது கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாய பட்டையப் படிப்பும் (BFT) படித்து வருகிறேன்.

 

கே: இந்த இயற்கை முறை விவசாயம் செய்ய உங்களுக்கு தூண்டுதலாக இருந்த விஷயம் எது?

இரசாயனம் முறையில் செய்யும் விவசாய உணவு, உடல் ரீதியாக பல கேடுகள் விளைவிக்கிறது. எங்கள் அண்ணன் இறந்ததற்கு முக்கிய காரணமாக இரசாயனங்களை மருத்துவர்கள் குறிப்பிட்டனர். அது பெரிய தாக்கத்தை எனக்கு ஏற்படுத்தியது. அத்தகை இரசாயனங்கள் இல்லாத உணவுகளை நம் சமூகத்திற்கு வழங்கவேண்டும் என நினைத்து தான், இந்த பயணம் தொடங்கியது.

அதனால், ஆரம்பித்தலிருந்தே யூரியா, பூச்சிமருந்து, உரம் என எதுவும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசின் அங்கக சான்றளிப்புத் துறையில் மாநில அவார்டு வாங்கிய முதல் பண்ணையும் நம்முடையது தான்.

 

கே: உரம் போட்டு வளர்க்கும் முறையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இப்போது எங்கள் பண்ணையிலேயே 300 மூட்டை யூரியாபோட்டு விவசாயம் இந்த வருடம் செய்யலாம் என வைத்துக்கொள்ளுங்கள். செடியும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் இதில் இரண்டு பிரச்சினைகள் உள்ளது. ஒன்று அடுத்த வருடமும் அதே 300 மூட்டை யூரியாபோட வேண்டும், இல்லையேல் உற்பத்தி குறைந்துவிடும், இரண்டாவதாக, விளைச்சலும் இயற்கை விவசாயம் அளவிற்கு தரமுடன் இருக்காது.

5

கே: உங்கள் பண்ணை பற்றியும் நீங்கள் செய்யும் இயற்கை முறை விவசாயத்தைப் பற்றி கூறுங்கள்.

எங்கள் தோப்பில் சுமார் 200 வகை மரங்கள் உள்ளன. அனைத்து மரங்களுக்கும் தண்ணீர் பைப் லைன்கள் போடப்பட்டு, சொட்டுநீர்ப் பாசன வசதி செய்துள்ளோம். தோப்பு முழுவதும் சுற்றிப்பார்க்க சாலை வசதிகளும் செய்துள்ளோம். இயற்கை  முறையில் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம்வைத்து தான் விவசாயமே செய்கிறோம்.

எங்களது தோப்பில் உள்ள ஒவ்வொரு மரத்தின் அருகிலும் சென்று பார்த்தால், ஒவ்வொரு அடி அளவிற்கு மண்புழு வளர்த்துள்ளோம். ஒரு மரத்திலும் கிட்டத்தட்ட 200 கிலோ இலைகள் இருக்கும், இவை அனைத்தும் அடுத்த வருடத்திற்குள் அதே இடத்தில் கீழே கொட்டி விடும். அத்தனை இலைகளில் இருந்தும் குறைந்தது 50 கிலோ உரமேனும் வரும். ஆக அந்த மரத்தின்  தேவையான சத்து அந்த மரத்தருக்கிலேயே கிடைத்து விடுகிறது.இந்த தோட்டத்து பழங்கள் முழுதும் இயற்கை விவசாயத்தில் செய்ததினால், அதன்  ருசியும் அதிகமாக இருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் மிக உகந்ததாக இருக்கும், வாசனையுடன் அதிக நாட்கள் அழுகாமலும் இருக்கும்.

 

கே: இலைக் கொட்டாத நேரத்தில் எவ்வாறு உரம் வரும்?

எங்களிடம் 300 ஆடுகள், 25 மாடுகள் உள்ளன. இவை அந்த மரங்கள் அருகில் சென்று சாணம் போடும். அவை உரமாக இருக்கும். மாடுகள் பாலுக்காக வளர்க்கபடும் ஜெர்சி பசுக்கள் அல்ல. அத்தனையும் விதவிதமான மாடுகள். இவைகளின் சாணம், கோமியம் எங்களுக்கு மிக முக்கியம். எங்கள் மாடுகளின் கோமியத்‌தில் கிட்டதட்ட 65% யூரியா இருக்கும். இதே போல் ஆடுகளும் பல விதப் பட்டவை. இந்த ஆடுகளும் மாடுகளும் உரங்களுக்காகவே பல மாநிலங்களில் இருந்து வரவைத்துள்ளோம்.

 

கே: மற்ற விலங்குகளெல்லாம் எதற்கு?

சில குதிரைகளை வைத்துள்ளோம். இத்தனை பெரிய பண்ணயை சுற்றி பார்க்க, பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்தாமல்,காற்று மாசுபடாமல் இருக்க, இந்த குதிரைகள் மீதேறி சுற்றி பார்ப்போம்.

நம் தோட்டத்தில் மாம்பழ சீசனில் மாம்பழம் வாங்குவதற்கு நிறைய பேர் வருவார்கள். பள்ளிகளிலிருந்து மாணவர்கள், பொதுமக்கள் என ஒரு நாளில் 400-500 பேர் கூட வருவார்கள். மதிய உணவு கூட எடுத்து வருவார்கள், பார்வையாளர்கள் தோட்டத்திற்குள் சென்று நிறைய மாம்பழங்களை வாங்கிச் செல்வார்கள். அந்த மாம்பழங்களை தோட்டத்தில் இருந்து வாயில் வரை சுமந்து செல்வதற்கு, கழுதைகளையும் வளர்க்கிறோம். புகை பிடிப்பதையும், ப்ளாஸ்டிக் பொருள்களையும் பார்வையாளர்களிடம் அனுமதிக்க மாட்டோம்.

அது மட்டுமன்றி இரு ஒட்டகங்களும் வளர்க்கிறோம். நம் தோட்டத்து வேலியை சுற்றி தேவையில்லாத சிறு சிறு செடிகள் முளைக்கும். இந்த செடிகளை ஆடு மாடுகள் மேயாமல் விட்டுவிடும். அத்தகைய வேண்டாத செடிகளை மட்டும் இந்த ஒட்டகங்கள் சாப்பிட்டுவிடும். வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை இருக்கும் இந்த தருணத்தில், கிட்டத்தட்ட இரண்டு ஆட்கள் செய்யும் வேலையை ஒரு ஒட்டகம் செய்கிறது. ஒட்டகங்களின் சாணமும் ஒரு முக்கிய பூச்சிக்கொல்லியாய் இருக்கிறது.

பின், வாத்துக்கள், மயில்கள், வான்கோழிகள் பார்வையாளர்களின் கண்களை கவர்ந்து மகிழ்விக்க வளர்க்கிறோம். சிறு பூச்சிகளையும் இவைகள் தின்று விடும்.

 

கே: வேறு என்ன சிறப்பு இந்த தோட்டத்தில் உள்ளது?

எங்கள் தோப்பில் 5ஏக்கர் மூங்கில் மரங்கள் வைத்துள்ளோம். ஒரு ஏக்கர் மூங்கில் மரங்கள் கிட்டத்தட்ட 40டன் ஆக்ஸிஜனை  ஒருநாளில் தருகின்றன. 5ஏக்கர் மரங்களிலிருந்து 200டன் ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதனால் நம் தோப்பை முழுதும் சுற்றிப் பார்ப்பவர்களுக்கு, சுத்தமான ஆக்ஸிஜன் உடலில் உள்ளே சென்று, மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவர்.

தோப்பிற்கு வெளியிலிருந்து விவசாயத்திற்கு நாங்கள் எந்தப் பொருளும் வாங்கிக் கொண்டுவருவதில்லை. அனைத்தும் இந்த தோப்பிலேயேக் கிடைக்கிறது. சூரிய சக்தி மூலம் பம்புசெட்டுகளை இயக்குகிறோம். தோட்டத்தை சுற்றி முக்கியமான இடங்களில் கேமராக்கள் வைத்து பாதுகாப்பை மேற்கொண்டுள்ளோம். இத்தனை பெரிய தோட்டத்தை பராமரிக்க 2-3 ஆட்கள் இருந்தால் போதும் என்ற நிலை உள்ளதால் தான், இதை தானியங்கி தோட்டம் என்கிறோம்.

 

கே: இந்த விவரங்களையெல்லாம் எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள்?

இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும், கண்காட்சிகளிலும் கண்டிப்பாக கலந்துகொள்வேன். இது தொடர்பாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு சென்றுள்ளேன். இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து, ஜோர்டான், பெத்லஹாம், இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று அவர்கள் எவ்வாறு செய்கின்றனர் என்றும், அவர்களின் தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொண்டேன். பூச்சி மருந்தில்லாமல், எவ்வாறு செய்கிறார்கள் என்பதையும் அறிந்தேன். கற்றுக்கொண்ட அந்த விவரங்களை நம் தோட்டத்தில் அறிமுகம் செய்கிறேன்.

 

கே: இதை ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுத்தருகிறீரளா?

கண்டிப்பாக. இந்த இயற்கை விவசாய முறையை நம்மிடம் கற்றுக்கொள்ள பல  ஊர்களிலிருந்து, ஆர்வமுடன் நமது தோட்டத்திற்கு பலர்  வருவார்கள். அவர்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுத்து, அவர்களும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஊக்கமளிப்போம். காலையில் வந்தால், மாலை வரை இருந்து செல்வார்கள்.

 

கே: பல ஊர்களுக்கு சென்று கற்று வந்தவைகளில் முக்கியமான விஷயமாக  நீங்கள் உங்கள் தோப்பில் செய்வது எதை?

பொதுவாக நம் ஊரில் செய்யும் தவறு – மரத்தை சுற்றி மட்டுமே, மூன்றடி வட்டத்தில் தண்ணீர் ஊற்றி நிறுத்திவிடுவார்கள். அதனால், வேர்கள், அதே இடத்தில் நின்றுவிடுகிறது. நாங்கள் மரங்கள் எத்தனை தூரம் விரிந்து பரந்துள்ளதோ அத்தனை தூரம் வரை வட்டமிட்டு தண்ணீர் பாய்ச்சுவோம். இதனால் வேர்கள் நன்றாக விரிந்து பரந்து வளர்கினறன. பெரிய காற்று அடிக்கும்போதும் கூட, எங்கள் மரங்கள் மட்டும் விழாமல் நிற்பதற்கு வலுவான இந்த வேர்கள்தான் காரணம்.

மக்களுக்கு பயிற்சி தருவதன் முக்கிய நோக்கமே, நம்மைப் பார்த்து, அவர்களும் இயற்கை முறை விவசாயத்தை கையாள வேண்டும் என்பதே. விஷமற்ற உணவை அவர்களும் தயாரித்து, அவர்களும், மற்றவர்களும் பயன்படுத்தவேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு பூச்சிமருந்து இல்லாத நல்ல உணவுமுறை சென்றடைய வேண்டும். இதை ஒரு சேவையாக எடுத்துக்கொண்டு எத்தனை மக்கள் வந்தாலும் பயிற்சி தருகிறோம்.

 6

கே: உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி..

ஏற்கனவே கூறியதுபோல், எங்கள் தோட்டம் இந்த மாவட்டத்தில், தமிழக அரசின் அங்கக விவசாயச் சான்று பெற்ற முதல் தோட்டமாகும்.

மேலும் 18மாதத்தில் 4000 நெல்லிக்காய் காய்க்க வைத்து விருது வாங்கினோம்.

திரு.நம்மாழ்வாரும் நம் தோட்டத்திற்கு வந்து பார்த்து பாராட்டிவிட்டுச் சென்றார். சமீபத்தில் கூட கோவை வேளான் கல்லூரியின் துனை வேந்தர் வந்து பார்த்து பாராட்டிச் சென்றார். டெல்லியிலிருந்து சில அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். தமிழ்நாட்டு அதிகாரிகளும் வந்தனர்.

பசுமை ரத்னா என்ற விருது கொடுத்தார்கள். பச்சையப்பன் கல்லூரியில் நம்மாழ்வார் விருது கிடைத்தது. பல கல்லூரிகளிலிருந்து விருதுகளும் கிடைத்துள்ளது.

Likes(15)Dislikes(1)
Share
May 142014
 

Hannde

இந்த மாத சாதனையாளர் பக்கத்தில் மருத்துவம், அரசியல், இலக்கியம், சமூக சேவை என பலதரப்பட்ட களத்தில், தன் திறமையாலும் கடிண உழைப்பாலும், ஆழமாக முத்திரையைப் பதித்த டாக்டர் H. V. ஹண்டேவை பற்றிக் காண்போம் http://www.handehospital.org/hvhande.htm.

86 வயதாகும் இவர், சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஹண்டே மருத்துவமனையில், தொடர்ச்சியாக 60 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவ பயிற்சி செய்துக்கொண்டு வருகிறார். பல நோயாளிகளுக்கு நான்கு தலைமுறைகளாக ஒரு குடும்ப மருத்துவராக இருந்து வரும் இவர், இன்றும் சமுகத் தொண்டிலும் அரசியலிலும் தனது கால்தடையங்களைச் சிறப்பாகப் பதித்து வருகிறார்.

1942 இல் கல்லூரி மாணவராக இருந்தபோதே,  “வெள்ளையனே வெளியேறு“ போராட்டத்தில் கலந்துக்கொண்ட டாக்டர், அரசியலில் நுழைந்து பல சாதனைகள் புரிந்து, பல அரசியல் தலைவர்களின் பாராட்டுகளை பெற்றார். 1965 ஆம் ஆண்டு முதல், மூதறிஞர் ராஜகோபாலச்சாரியின் (இராஜாஜி) அடிச்சுவடில் முன்னேரினார்.

தமிழ்நாடு சட்டசபைக்கு (மேலவை மற்றும் பேரவைக்கு) ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் அமைச்சரவையில் சுகாதார மந்திரியாக பணியாற்றி உள்ளார். சுகாதார துறையில் தனது சிறந்த பணிக்காக 1985 ஆம் ஆண்டு டாக்டர் பி சி ராய் விருது பெற்றார்.

பேரரிஞர் அண்ணா, Dr.அம்பேத்கர், மூதறிஞர் இராஜாஜி, இவர்களின் மீது பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள டாக்டர் ஹண்டே, தற்போது பா.ஜ.க வில் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும், தமிழக பா.ஜ.க. வின் செய்தி தொடர்பாளராகவும் உள்ளார். இவருடன் பேட்டியிலிருந்து..

 

B+: வணக்கம் சார். உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள்.

டாக்டர்: எனது தந்தை தான் எனக்கு மருத்துவத் துறையில் முழு ஈடுபாடு வரக் காரணமானவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற அவரின் தொழில் நாட்டத்தைப் பார்த்து மிகவும் வியந்திருக்கிறேன். பல நாட்கள் அவராகவே நோயாளிகளின் இல்லத்திற்கு, இரவில் கூட சென்று மருத்துவப் பணி செய்து வருவார். பணத்தைப் பற்றியெல்லாம் யோசிக்கமாட்டார். ஒரு மாபெரும் அர்பணிப்பை நேரடியாகவே அவரிடம் பார்த்து வளர்ந்ததன் தாக்கம் தான், பிற்காலத்தில் நான் செய்த வேலைகளுக்கு அடித்தளம் இட்டது.

 

B+: மருத்துவத் துறை அனுபவம் பற்றி..

டாக்டர்: 1945-50 இல் சென்னை கே.எம்.சி கல்லூரியில், மருத்துவம் படித்தேன். என் தந்தை 1000ரூபாய் கொடுத்ததை வைத்து 1950 இல் இந்த ஷெனாய் நகர் மருத்துவமனையை ஆரம்பித்தேன். நல்ல பெயர் கிடைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் தேடி வர ஆரம்பித்தனர். அப்போதிலிருந்தே பணத்தைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதில்லை. குறைந்தக் கட்டணம் தான் வாங்குவேன். பல நோயாளிகளுக்கு அவர்களது இயலாத நிலைக் கண்டு இலவச சிகிச்சை வழங்குவேன்.

1951 முதல் 53 ஆண்டு வரை, கே.எம்.சி கல்லூரியில், பயிற்சி ஆசிரியராகவும் இருந்தேன். கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரியின் தந்தை கூட என்னிடம் மாணவராகப் பயின்றவர். 1955 இல் எனக்கு திருமணம் நடந்தது. இரண்டு மகன்களும் இப்போது  மருத்துவர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

மருத்துவராக ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே ஒரு மகிழ்ச்சி, திருப்தி, மன நிறைவு. மிகவும் ரசித்து, முழுமையாக என்னை அர்பணிதது, இந்தத் தொழிலை செய்து வருகிறேன். இந்த சேவையில் பெருமை அடைகிறேன். நிறையப் பேருக்கு இலவச மருத்துவம் செய்து, அவர்களைக் குணப்படுத்தியது எல்லாம் ஒருப் பெரியத் தியாகமாக இல்லை. அது எனக்கு ஒரு பெரிய ஆனந்தத்தையும், பெருமிதத்தையும் கொடுத்தது. அந்த உணர்வுக்கெல்லாம் மதிப்பே இல்லை. இந்த சேவை மனப்பான்மையில் கிடைக்கும் திருப்தி வேறு எங்கும் கிடைக்காது.

 

B+: ஏதேனும் சுவையான நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

டாக்டர்: நிறைய இருக்கிறது. அரசியல் சம்பந்தப் பட்ட ஒரு உதாரணமே சொல்கிறேனே. திரு.இராஜாஜியின் கட்சியில் எம்.எல்.ஏ வாக இருந்தேன், அப்போது கலைஞர் முதல்வராக இருந்தார். எதிர்கட்சியில் இருக்கும் சிலர் கூட  என்னைத் தேடி வந்து என்னிடம் மருத்துவம் பார்ப்பார்கள். அவர்களுக்கு குடும்ப மருத்துவராகவும் இருந்துள்ளேன். அவ்வாறுள்ள ஒரு அரசியல்வாதி, தன் பெண்  திருமணத்திற்கு என்னையும் அழைத்தார். திருமணத்தில் எதிர்கட்சிக்காரர்கள் எல்லோரும் இருக்க, நானும் அழைக்கப்பட்டுக் கலந்துக் கொண்டேன். அப்போது நான் அங்கு அரசியல்வாதியாக இல்லை, மருத்துவராக அழைக்கப்பட்டேன்.அரசியலில் எதிரெதிராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நட்புடன் இருக்க  மருத்துவத் துறை உதவியது. இதெல்லாம் மிகப் பெரிய திருப்தி அளிக்கும்.

எத்தனையோ நோயாளிகளுக்கு வைத்தியம் செய்துவிட்டேன். அவர்கள் குணமடைந்து சந்தோஷமாக திரும்பச் செல்லும் போது அத்தனை பேரானந்தம். நிறைய நோயாளிகளிடம் கொடுப்பதற்கு பண வசதிக் கூட இருக்காது. அதையெல்லாம் சேவையாக மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வேன்.

 

B+: இப்போது பயிலும் மாணவர்களைக் காணும்போது, அவர்களுக்கு என்ன மாதிரியான குறிப்புகள் வழங்குவீர்கள்?

டாக்டர்: என் மாணவர்களுக்கும், இப்போது மருத்துவம் பயில்பவர்களுக்கும்  சிலவற்றை அடிக்கடி கூறுவேன். இந்தத் துறைக்கு நுழையும்போது எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று யோசித்து வந்தீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை தோல்வியில் முடியும். எவ்வாறு நற்சேவை செய்யலாம், எவ்வாறு நல்ல மருத்துவம் மக்களுக்கு செய்ய முடியும் என்று நினைத்து வந்தீர்கள் என்றால், மிகப்பெரிய வெற்றியைச் சந்திப்பீர்கள். இதை நான் அனைத்து மருத்துவர்களிடமும் கூறுகிறேன்.

பல மாணவர்களைப் பார்க்கிறேன். எம்.எம்.சி, ஸ்டேன்லி, கே.எம்.சி போன்ற கல்லூரியில் நுழைவு கிடைத்தவுடன் அத்தனை மகிழ்ச்சி அவர்களிடம். ஆனால் அது இரண்டாம் வருடம், மூன்றாம் வருடம் என்று போகும்போது, படிப்படியாகக் குறைந்து, கல்லூரி முடித்து வெளிவரும்போது மிகவும் சோர்ந்து போய் வருகின்றனர். இங்கே போட்டி அதிகம், உடனேயெல்லாம் சம்பாதிக்க முடியாதென்றும், வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் எம்.பி.பி.எஸ் முடித்தவுடன் தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. அவர்கள் மனதில் குறிக்கோலை நிர்னயிக்கவில்லை. நான் அதைத் தான் அவர்களிடம் கூறுவேன். முதலில் உன் லட்சியத்தை நிர்னயித்துக்கொள், பின் மருத்துவத் துறையில் நுழை என்று.

என் வாழ்க்கையில் ஆரம்பத்திலிருந்தே இந்த மனநிறைவை அடைந்ததாலும், வேலையை ரசித்து செய்வதாலும், எனக்கு ஒரு நாள் கூட சோர்வே வருவது கிடையாது. உங்களது பேட்டி முடிந்தவுடன் நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்து விடுவேன். நோயாளிகளிடம் தெளிவாகப் பேசி பிரச்சினைகளை எடுத்துக் கூறுவேன். என்னவெல்லாம் செய்ய வேண்டும், எதெல்லாம் செய்யக் கூடாது என்றும் பொருமையோடு சொல்லித் தருவேன். இதை ஒரு சேவையாகவே பார்ப்பதால், மிகவும் ரசித்து, அனுபவித்து செய்ய முடிகிறது.

 

B+: அரசியல் அனுபவம் பற்றி..

டாக்டர்: அரசியல் வாழ்க்கையைப் பற்றி சொல்ல வேண்டுமெனில் நிறைய இருக்கிறது. முக்கியமான விஷயங்களைப் பற்றி மட்டும் கூறுகிறேன். மொத்தம் 9 தேர்தலில் நின்றேன், அதில் 6 இல் வெற்றிப் பெற்றேன் – இதில் மூன்று முறை எம்.எல்.ஏ ஆகவும், மூன்று முறை மேல்சபை பட்டதாரி தொகுதியிலும் வென்றேன்.

முதலில் 1962 இல் எனக்கு சென்னை மாநகரத்தின் பட்டதாரித் தொகுதி கிடைத்தது. நிறையப் பேருக்கு மருத்துவ சேவை செய்து நல்ல பெயர் எடுத்ததாலும், மிகக் கடிணமாக ஓராண்டு உழைத்ததாலும் முதல் வெற்றி கவுன்சில் தலைவராக (Legislative Council Chairman) கிடைத்தது. Dr.A.L. முதலியார், Dr.P.V. செரியன், திரு.காமராஜரின் வேட்பாளர், திரு. இராஜாஜியின் வேட்பாளர், அறிஞர் அண்ணாவின் வேட்பாளர் என்று பல ஜாம்பவான்கள் நின்றும் கூட, எனக்கும் Dr.A.L. முதலியார் அவர்களுக்கு மட்டும் தான் வெற்றிக் கிட்டியது. அப்போது இரண்டு சீட்கள் உண்டு, எங்கள் இருவரைத் தவிர அனைவரும் டெப்பாசிட்டை இழந்தனர்.

அப்போது திரு. S.V.சுப்ரமணியம் மூலம் திரு.இராஜாஜி அழைப்பு விடுக்க, அவரைப் போய் சந்தித்தேன். திரு.இராஜாஜி அவர்களிடம் மிக நேரடியாக அவரிடம் பிடித்த மற்றும் பிடிக்காதக் கொள்கைகளை எடுத்துக் கூறினேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும். தனது “சுதந்திரா கட்சி” யில் சேருமாறு கேட்டுக்கொள்ளவே, நானும் அவரிடம் சேர்ந்தேன். “நீ என்ன நினைக்கிறாயோ அதை வெளிப்படையாகச் சொல், யாருக்கும் பயப்படாதே” எனக் கூறினார்.

இன்னொரு சம்பவம். அப்போது 1966 ஆம் வருடம். சென்னையில் பயங்கர மழை. சமூகத் தொண்டில் ஆர்வம் அதிகம் என்பதால், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினேன். சென்னையில் உள்ள வியாசர்பாடி, பெரம்பூர், சௌகார்பேட்டை போன்ற பகுதிகளில் கடுமையாக உழைத்து மக்களுக்காக வேலை செய்தேன். பேரரிஞர் அண்ணாவிடம் நெருங்கிப் பழக அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. அண்ணாவைப் போல் ஒருத் தலைவரை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. அவர் மீது எனக்கு பெரும் மதிப்புண்டு. அவர் என் பெயரை வழிமொழிந்ததில், 1967 தேர்தலில் “பூங்கா நகரத்” (PARK TOWN) தொகுதியில் போட்டியிட்டேன். திரு.காமராஜர் நிறுத்தி வைத்த, பெரிய பேர்பெற்ற  ஒரு வேட்பாளரை வென்றேன்.

நிறைய அருமையான அனுபவங்கள் அரசியலில் கிடைத்தது. வெற்றி பெற்றவுடன், தொகுதியை, 9 வட்டமாகப் பிரித்தேன். ஒவ்வொரு வட்டத்திலும் கிட்டத்தட்ட 12000 மக்கள் இருப்பர், 10-12 தெருக்கள் இருக்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மதியமும் ஒரு வட்டத்திற்கு செல்வேன். பொதுவான இடத்தில், அந்த வட்டத்து மக்களை வரவைத்து, சந்திப்பேன். அவர்கள் பிரச்சினைகளைக் கேட்டுத் தேவையானதை செய்து தீர்த்து வைப்பேன். இவ்வாறாக மூன்று மாதங்களில் ஒருமுறை, அனைத்து வட்டத்தில் உள்ள மக்களையும் சந்தித்து விடுவேன். இந்த களப்பணி செய்ததால், 1971இல் நடந்த மற்றொரு கடினமான தேர்தலிலும் வென்றேன். எந்தப் பணியிலும், நம்மை முழுமையாக அர்பணித்து, கடுமையாக உழைத்தால் வெற்றிப் பெறலாம் என்பதற்காக இதையெல்லாம் கூறுகிறேன்.

 

B+: இலக்கியத்தில் உங்களது பங்குப் பற்றி?

டாக்டர்: தமிழை எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டேன். நிறைய இலக்கியங்கள் படித்தேன். தமிழில் உள்ள நிறையப் புத்தகங்கள், செய்யுள்கள் என நிறையப் படித்தேன். கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து, ஒரு புத்தகத்தை வெளியிட்டேன். மற்ற நிறையப் புத்தகங்களும் எழுதியுள்ளேன். அரசியலிலும், மருத்துவத்திலும் செய்ததை விட, இரு மடங்கு இலக்கியத்திற்காக செய்துள்ளேன். படிக்கும் காலத்தில் நான் சராசரி மாணவன் தான். பிற்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். மிகவும் கஷ்டப்பட்டு இலக்கியத்தையும், ஆங்கிலத்தையும் கற்று இதையெல்லாம் செய்தேன்.

 

B+: குடும்பத்திற்கு எப்படி நேரம் ஒதுக்குவீர்கள்?

டாக்டர்: எத்தனை வேலை இருந்தாலும் குடும்பத்திற்கு கண்டிப்பாக நாம் நேரம் ஒதுக்க வேண்டும். நான் அரசியலில் தீவிரமாக இருந்த சமயம், கோட்டைக்கு சென்றுக்கொண்டும், வந்துக்கொண்டும் இருப்பேன். ஆனால் அப்போது கூட, மதிய உணவிற்கு வீட்டுக்கு போகும்போது, மகன்களிடம் நல்ல நேரம் கொடுத்து, அவர்களிடம் கலந்துரையாடுவேன். நாம் என்றுமே குடும்பத்தை புறக்கணிக்கக் கூடாது. நம் நாட்டுக் கலாச்சாரப்படி குடும்பம் மிக முக்கியம். வீட்டில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும்.

 

B+: எப்படி இத்தனை நேரம் கிடைக்கிறது?

டாக்டர்: நம் அனைவருக்கும் நேரம் நிறைய இருக்கிறது. நாம் தான் அதை விரயம் செய்கிறோம். நான் ஒரு நிமிடம் கூட விரயம் செய்வதை விரும்பமாட்டேன். எல்லா நண்பர்களிடமும் இதை சொல்வதுண்டு – எனக்கு விலை உயர்ந்தப் பொருள் என்றால் அது நேரம் தான். நேரத்தை சிக்கனமாக பயண் படுத்தினோம் என்றால், 24மணி எனது 48மணி ஆக கூட மாற்றலாம்.

 

B+: மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏதேனும் நீங்கள் கூற விரும்பும் செய்தி.

டாக்டர்: நான் கூற விரும்புவது இது தான். வேலையில் திருப்தி ரொம்ப முக்கியம். இதை நான் மருத்துவத்துறைக்கு மட்டும் சொல்லவில்லை. பொதுவாக எல்லோருக்குமே தான். என்ன வேலை செய்தாலும், உங்களுக்கு அதனால், சந்தோஷமும், திருப்தியும் வந்தால் மட்டும் செய்யுங்கள். வேறு வழி இல்லை, பணத்திற்காக மட்டும் இந்த வேலையைச் செய்கிறேன் என்று செய்தீர்கள் என்றால், அதில் உங்களுக்கு உபயோகம் இருக்காது. மனதிற்கு பிடித்த வேலையை மட்டும் செய்யுங்கள்.

மகிழ்ச்சியும், மன நிறைவும், குறிக்கோளாக இருக்க வேண்டும். மகிழ்ச்சி தருகிறது என்று தவறான பாதையில் சென்று பொருளீட்டினாலோ, அல்லது வேறு எதாவது தவறு செய்தாலோ, அது மகிழ்ச்சிக்கு பதில் துன்பத்தையே தரும். அதனால் போகும் பாதை நல்ல பாதையாக இருக்க வேண்டும். செய்கிற வேலையில் ஆர்வமும் பிடிப்பும் வேண்டும். வாழ்க்கையில் பிடிப்பு இல்லையென்றால் எதையும் சாதிக்க முடியாது.

உலகத்தில் நாம் இருப்பது நிரந்தரம் இல்லை. வாழும் வரை மனநிறைவுடனும், திருப்தியுடனும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இந்தத் தேவைக்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் செய்யவேண்டும். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள, ஏதெனும் பாசிடிவான செயல்களை செய்துக் கொண்டே இருங்கள்.

Likes(1)Dislikes(0)
Share
Mar 142014
 

இந்த மாதம் சாதனையாளர்கள் பக்கத்தில், ஒரு வித்தியாசமான மனிதரைப் பற்றிக் காண்போம். அவர் வீட்டருகில் பேசிக் கொண்டிருந்த ஒரு  கூட்டத்தினரிடம், ஓய்வுப் பெற்ற எஸ்.பி.மாணிக்கம் வீடு எது என விசாரக்கையில்,  “பச்சைத்தண்ணீ மாணிக்கமா, அதோ அந்த வீடுதான்” எனக் கூறினர். வித்தியாசமான இந்த அடைமொழியைக் கேட்டவுடன் ஆர்வமும் ஆச்சரியமும் பிறந்தது. அவர்களிடமே ஐயத்தைக் கூறியவுடன், அந்த மக்களிடம் வந்த பதில்  இன்னும் வியப்பில் ஆழ்த்தியது.

இவரது தனித்துவமே இது தான், மிகப் பெரிய அதிகாரியாக இருந்தும், தனக்கென்ற ஒரு பெரிய செல்வாக்கு இருந்தும், அதிகாரத்தை என்றுமே துஷ்பிரயோகம் செய்யாது, ஊழல் என்ற பேச்சுக்கே இடமளிக்காமல், “க்ளீன் ஹேண்டுடன் (Clean Hand)” சர்வீசிலிருந்து ஓய்வுப் பெற்றவர். பச்சைத் தண்ணீர் கூட தன்னை நாடி வருபவர்களிடமோ, சந்திக்கும் கேசுகளில் (CASES) ஈடுப்பட்டு இருப்பவரிடமோ பெற்றுக்கொள்ளாமல், இந்த அடைமொழியை மட்டும் பெற்றுக் கொண்டவர். பல  சாதனைகளுக்கு சொந்தமான திரு.மாணிக்கம் அவர்களிடம் பேசியவற்றிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

B+: வணக்கம் சார். காவல் துறைக்கு எவ்வாறு வந்தீர்கள்? அந்தப் பயணத்தைப் பற்றி?

மாணிக்கம்: அது ஒருப் பெரியப் பயணம். பள்ளிப் பருவத்தில் என்.சி.சி (NCC) யில், முழு ஈடுபாட்டுடன் இருந்து, என்.சி.சி. கேம்ப், சமூக சேவை கேம்ப் என பலவற்றில் ஈடுபட்டிருந்தேன். அதுவே எனக்குக் காக்கிச்சட்டை மீது ஒருப் பெரிய விருப்பத்தைக் ஏற்படுத்தியது. பிறந்தது, 1941 இல், பரமக்குடி பக்கத்தில் உள்ள வளநாடு என்ற ஒரு கிராமம். படித்தது ராமனாதபுரத்தில் உள்ள சுவார்ட்ஸ் பள்ளி. பின் அமெரிக்கன் கல்லூரியில் பீயூசியும், மதுரை மெஜிராக் கல்லூரியில் பீ.எ. வும் படித்தேன்.

              படிப்பு முடித்தவுடனே, முதல் வேலை உசிலம்பட்டியில் முதியோர்களுக்கான வருவாய்த்துறையில் உதவியாளர் பணி. பின், குருப்-4, சர்வீஸ் கமிஷன் எழுதியதில் கிருஷ்ணகிரியில் ஒரு சிறிய பணி, இவ்வாரெல்லாம் தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கோ, மிலிட்டரி அல்லது காவல் துறையில் தான் ஈடுபாடு இருந்தது. அதிருஷ்டவசமாக, கல்லூரியின் இறுதி ஆண்டில் எஸ்.ஐ வேலைக்கு விண்ணப்பித்திருந்தது கைக்கொடுத்தது. வெல்லூரில் எஸ்.ஐ பயிற்சிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அது 1962 ஆம் வருடம். அந்த வருடம் தான் முதன் முதலில் உடல் ரீதியான மிகக் கடினமான பயிற்சி அறிமுகப் படுத்தப்பட்டது. கயிறு ஏறுதல், தவ்விக்கொண்டே செல்லுதல் போன்ற ஆறு விதமான கடுமையான சவால் இருக்கும். கல்லூரியில் ஓட்டப்பந்தையம், கால்பந்து என பல விளையாட்டுத் துறையில் பரிசுகளை வென்று இருந்ததினால், இந்த ஆறு பயிற்சியிலும் நல்லபடியாக தேர்ச்சிப் பெற முடிந்தது. பின்னர், கண்ணியாக்குமரியில் உள்ள வடசேரி காவல் நிலையத்தில் போஸ்டிங் கிடைத்தது.

B+: காவல் துறையில் ஆரம்பக்கால அனுபவம் எப்படி இருந்தது?

மாணிக்கம்:  பயிற்சிக்காலத்தில் (Probation period) இருக்கும் போதே, நேர்மை, காலம் தவறாமை, ஒழுக்கம், மேல் அதிகாரிகளுக்கு கீழ்படிதல் இவற்றை திரு. கந்தசாமி (எஸ்.ஐ) அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். கேஸ் எழுதுவதிலிருந்து, குற்றவாளிகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பது வரையிலானப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தவர்.

பின், பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு என்னை அனுப்பினார்கள். அரிசிக்கடத்தல், சட்ட விரோதச் செயல் என்று  அங்கு நிறைய குற்றங்கள் நடந்துக் கொண்டிருந்த சமயம். களத்தில் இறங்கிக் கடுமையாக வேலை செய்ததில், குற்றங்கள் குறைந்து, மக்களிடம் நல்ல பெயர் கிடைக்க ஆரம்பித்தது.

B+: போலிஸ் தொழிலில் சுவாரசியமான சம்பவங்கள் ஏதேனும் சிலவற்றைக் கூறுங்கள்.

மாணிக்கம்: அப்போது ஒரு அருமையான நிகழ்வு. பக்கத்து கிராமத்தில் அடிக்கடி திருட்டு நடந்தது. மக்கள் என்னை அணுகி உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளவே நானும் அங்கு சென்றேன். சந்தேகிக்கும் அனைவரையும் அழைத்து கேஸ் ஏதும் போடாமல், கடினமான முறைகளைப் பயன்படுத்தாமலேயே, நிறைய நல்ல விஷயங்களைப் எடுத்துக் கூறினேன். நான் விரும்பி அணிந்த காக்கிச்சட்டை மரியாதை தரும் விதமாகவும், என் நேர்மைக்கு கிடைத்த பரிசாகவும், மக்கள் என் பேச்சைக் கேட்கவும், குற்றங்கள் குறைந்தன.

            பின் நாகர்கோயில் ட்ராஃபிக்கில் ஆறு மாதம் பணியாற்றும் போது, நாற்பது பேர் கொண்ட ஒரு பெரியக் கூட்டம் என்னைத் தேடி வந்து மாமுல் கொடுப்பதற்கு காத்துக்கிடந்தது. அலுவலகத்தின் இருக்கதவுகளையும் மூடிவிட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி திரு.கோபாலகிருஷ்னனுக்கு ஃபோன் போட்டு, வரவழைத்து, அனைவரையும் கைது செய்தோம். பயிற்சிக்காலத்தில், லஞ்ச ஒழிப்பில், சாதனை செய்த முதல் எஸ்.ஐ. நானாகத் தான் இருப்பேன். இது நேர்மை விரும்பும் பலரிடம், மிகப் பெரிய வரவேற்ப்பைப் பெற்றுத் தந்தது. மற்றவர்களுக்கு என் மீது கோபம் வரவே, என்னை சட்ட ஒழுங்குத் துறைக்கு (LAW & ORDER) மாற்றினர்.

            சட்ட ஒழுங்கில் ஒரு இரவு ரோந்து போகும்  வேளையில், ஒருவன் நடந்து சென்றது, சற்று வித்தியாசமாக இருக்கவே, அவனை ரகசியமாக பின்தொடர்ந்து,  அவனைப் பிடித்தபோது, அவன் நிறைய தங்க பிஸ்கட்கள் கடத்துவது தெரியவந்தது. அவனைப் பிடித்துக் கொடுத்ததுப் போன்ற பல கேசுகளை வெற்றிகரமாக முடித்தேன். பின்னர் 1966 முதல் 1972 ஆம் ஆண்டு வரை சீபிசீஐடி யில் எஸ்.ஐ ஆக சென்னைக்கு மாற்றப்பட்டேன். கஞ்சாக் கடத்தல், சிலைத்திருட்டு, கடையநல்லூர் கூட்டுறவு சங்கம் போன்ற பல கேசுகளை வெற்றிகரமாக முடித்தேன்.

                  பயிற்சிக் கல்லூரியில், அதற்குப்பின் இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வுப் பெற்று பல கான்ஸ்டபில்கள், எஸ்.ஐ கள், டீ.எஸ்.பி களுக்கு மூன்று வருடம் பயிற்சி ஆசிரியராக இருந்தேன் . பின்னர் மூன்று வருடம் ரயில்வே போலிஸாகப் பணியாற்றி பல ரயில்வேக் கடத்தல்களைத் தடுத்திருக்கிறேன். அதற்கு பின் சிட்டி போலிஸுக்கு (CITY POLICE) எனக்கு பணிமாற்றம் வந்தது. அங்கும், சிறப்பாகப் பணியாற்றி சட்டக் கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் நடந்த போராட்டங்களையும், கலாட்டாக்களையும் நிறுத்தினேன்.

                  1988 ஆம் ஆண்டு ஏ.சி யாக பணி உயர்வில் சைதாப்பேட்டை வந்தேன். பின் 1991 ஆம் ஆண்டு வரை திருவள்ளிக்கேனியில் எனக்கு மாற்றம். அங்கு தான் மிகக் கடினமான நேரம். பலப் பிரச்சினைகளையும், போராட்டங்களையும் அமைதியான மனதோடு அணுகி வெற்றிப்பெற்றது, பெரியப் பெயரை வாங்கித் தந்தது. பின் வன்னாரப்பேட்டையில் ஒரு திருடனைத் திருத்தினேன். விமான நிலையம், மவுண்ட் சீபிசீஐடி, திண்டுக்கலில் ஏ.டி.எஸ்.பி, மதுரை டிராஃபிக்கில் டீ.சி. யாக இருந்து கடைசியாக திண்டுக்கலில் எஸ்.பி யாக 1999 ஆம் ஆண்டில் ஓய்வுப் பெற்றேன்.

B+: இத்தனை பிஸியாக இருந்த வாழ்க்கை, ஓய்விற்குப் பின் எவ்வாறு இருக்கிறது?

மாணிக்கம்: ரிட்டையரானப் பிறகு, ஓய்வெடுக்க விருப்பமில்லை.  நிறைய மக்களுக்கு உதவிகளைச் செய்கிறேன். நிறையப் படித்து பல டிகிரிகளும், டிப்ளமோகளும் பெற்றுள்ளேன். அனைத்து அனுபவங்களையும், பயின்ற கல்விகளையும், பாடங்களையும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென்று, 2007 இல், அனைத்து மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறேன். www.ammkindia.org  என்ற இணையத் தளத்தில் நீங்கள் அதன் விவரங்களைக் காணலாம்.

B+: உங்கள் வாழ்க்கையில் லஞ்சம் பெறாமல் எவ்வாறு இருந்தீர்கள்?

மாணிக்கம்: இன்னொருவரிடம் கையேந்துவது என்ற எண்ணமே வரக்கூடாது. எனக்கும் அது வராமல் இருந்ததற்கு, எனது குடும்பப் பின்னணித் தான் முதல் காரணம், வருமானத்திற்கு ஏற்ற மாதிரி வாழக் கற்றுக் கொண்டு செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாய் வாழப் பழகினேன். மனசாட்சிக்கு பயந்து நேர்மையைக் கடைசி வரைக் கடைப்பிடித்தேன். வீட்டிலிருந்தே, சாப்பாடு, தண்ணீர் என அனைத்தையும் கொண்டு வந்து விடுவேன். யாரிடமும் பச்சைத் தண்ணீர்க் கூட இலவசமாக வாங்கிக் குடிக்காமல் இருந்தக் காரணத்தினால் “பச்சைத் தண்ணீர் மாணிக்கம்” என்றப் பெயர் பெற்றேன்.

B+: இந்த வயதிலும் உங்கள் சக்தியின் ரகசியம் என்ன?

மாணிக்கம்: எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு டீடோட்டலர் (teetotaler) நான்.     முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு, எப்போதும் மூளையை பிஸியாக வைத்துக்கொள்ளுதல், யோகா, சமூக நிகழ்ச்சிகள் எனப் பலவற்றைக் கூறலாம்.

B+: நேர்மையான போலிஸாக வரவிரும்பும் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது..

மாணிக்கம்: போராடத் தயாராக இருந்தால் முடியும். என்னை எத்தனையோ பேர் மிரட்டினார்கள், ட்ரான்ஸ்ஃப்ர் கொடுத்தனர். நானாக இது வரை ஒரு ட்ரான்ஸ்ஃப்ர் கூடக் கேட்டதில்லை. மடியில் கனம் இல்லை அதனால், எனக்கு வழியில் பயம் இருந்ததில்லை.  அவ்வாறு வர நினைக்கும் இளைஞர்களுக்கு சவால்களை எதிர்த்து போராடும் தைரியம் வேண்டும். அவர்களுக்கு பல்வேறு திறமைகள் வேண்டும். அவற்றை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்மையும், ஒழுக்கமும் இருக்க வேண்டும். நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் நம் நாட்டிற்கும், காவல் துறைக்கும் இன்று தேவை.

Likes(3)Dislikes(0)
Share
Mar 012014
 

நாம் பிறந்து வளர்ந்த இடத்திற்கும், வாழ்வில் நாம் அடைய இருக்கும் உயரத்திற்கும் சம்பந்தம் இல்லை, கடின உழைப்பும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் முன்னேரலாம் என்பதை நமக்கு உணர்த்தி கொண்டு இருக்கும் வக்கீல் திரு.கே.பாலு அவர்களைப் பற்றி இந்த மாத சாதனையாளர் பக்கத்தில் பார்ப்போம்.

இவர் பிறந்தது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி என்னும் கிராமம். இந்த ஊரை தமிழக வரைப்படத்தில் தேடினால், கிடைக்குமா என்று கூட தெரியாது, ஆனால் இன்று இவர் சாதனைகளையும், பேச்சுகளையும், பேட்டிகளையும் தொலைக்காட்சிகளிலும், youtube லும், மிகுதியாக காணலாம். சட்டத்தைப் பற்றி பல தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளில், இவர் இடம் பெறுவது நிச்சயம்.

ஒரு சிறிய கிராமத்தில் உள்ளவர்கள், குடும்ப சூழ்நிலையாலும், தகவலோ, தொழில்நுட்பமோ, அவர்களை இன்னும் சென்றடையாத நிலையாலும், பள்ளி மேல்படிப்பை தாண்டுவதே பெரிய விஷயம் என்று இருக்கும்போது, ஐ.நா. சபை வரை சென்று சாதித்துக் காட்டிய ஒரு கடின உழைப்பாளி.

சட்டத்தைப் பற்றி பல விஷயங்களை கரைத்து குடித்திருக்கும் இவரிடம் பேசியவற்றிலிருந்து சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். நமதுB+ இதழில் தனிப்பட்டக் கட்சி சார்ந்த அரசியலை முடிந்தளவு தவிற்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் இருப்பதால், இவர் நம்முடன் பகிர்ந்த சில அரசியல் நிகழ்வுகளையும், தலைவர்களையும், கட்சியையும் நீங்களாக, மற்ற விஷயங்கள் இதோ..

B+:  வணக்கம் சார்உங்கள் பிசியான நேரத்திலும் எங்கள் விண்ணப்பத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. சட்டத்துறைக்கு எவ்வாறு வந்தீர்கள்?

பாலு: அது ஒரு ஆச்சரியமான விஷயம். சொக்கலிங்கபுரம் என்ற ஊரில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கணேச அரசு உதவி ஆரம்ப பள்ளியில் படித்தேன். அது ஒரு ஓராசிரியர் பள்ளி.  ஒரே ஒரு ஆசிரியர் தான் வகுப்பில் உள்ள அனைத்து பாடங்களையும் எடுப்பார். மொத்த பள்ளிக்குமே, ஐந்தாம் வகுப்பு வரை, ஐந்து ஆசிரியர்கள் தான் இருப்பார்கள். ஆங்கிலம் சுத்தமாக இருக்காது.

ஆறாவதிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மீன்சுருட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்தேன். சாதாரண கிராமத்து வாழ்க்கை. ஆறாவதில் தான், ஆங்கிலமே படித்தோம். அப்பா ஊரில் விவசாயி. எங்க குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி. அதற்கு முன் யாரும் படிக்கவில்லை. அக்கா மட்டும் ஆசிரியர் பட்டையப் பயிற்சி முடித்து இருந்தார்கள். அந்த கிராமத்திலும், முற்போக்காக சிந்தித்து, “என் பையனை ஒரு பட்டதாரி ஆக்கனும்” என்று விருப்பப்பட்டது எங்க அம்மா தான். அவர்களால் தான் நான் கல்லூரியில் சேர்ந்தேன்.

மயிலாடுதுரை அடுத்து உள்ள மன்னபந்தல் AVC கல்லூரியில், பி.காம் படித்து முடித்தேன். பி.காம் படித்தால், பி.எல். போக முடியுமா என்று கூட தெரியாத நிலை. பொதுவாக பி.எ. படித்தால் தான் பி.எல். படிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பி.காம். முடித்துவிட்டு மன்னபந்தல் பேருந்து நிலையத்தில், ஊர் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தோம்.

நண்பன் ஒருவன் மட்டும், திருச்சி சென்று பி.எல். விண்ணப்பிக்க போகிறேன் என்றான். அப்போது தான் பி.காம் படித்தால் கூட, பி.எல். போக முடியும் என்ற தகவலே தெரிந்தது. பின்னர், நானும் பி.எல். படிப்புக்கு விண்ணப்பித்து நுழைவு தேர்வு எழுதினேன். நல்ல மதிப்பெண் எடுத்ததினால், சென்னை சட்டக் கல்லூரியிலேயே அனுமதி கிடைத்தது. சட்டக் கல்லூரி படிப்பு 93 லிருந்து 96 ஆம் ஆண்டு வரை, ஒரு அற்புதமான வாழ்க்கை என்று சொல்லலாம். பிரச்சினைகள், தகராறுகள் என்று நிறைய சந்தித்தோம்.

பள்ளியில் மாணவர் தலைவராகவும், கல்லூரி இறுதி ஆண்டில் மாணவர் செயலாளராகவும் இருந்தேன். படிப்பை விட அதிகமாக, பொது பிரச்சனைகளில் தான் கவனம் செலுத்துவேன். அதில் ஆர்வம் சற்று அதிகமாக இருக்கும். கல்வி வாழ்க்கையை பொறுத்த வரையில், சிறு வயதில் இருந்தே, முதல் மதிப்பெண் என்றெல்லாம் கிடையாது, எதோ படித்து தேர்ச்சி மட்டும் பெற்று விடுவேன்.

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஆரம்பம், மிக மிக சிறிய அளவில் தான் தொடங்கியது. பள்ளி முடித்து, கல்லூரி போவோம் என்று நினைத்தது இல்லை. பிற்காலத்தில், சென்னை வருவேன் என்றும்  நினைத்தது இல்லை. ஆனாலும் என்னால் வர முடிந்தது என்றால், என்னை போல் உள்ள அனைவருக்கும் இது முடியும்.

B+:  உங்களது ஆரம்ப கால வக்கீல் வாழ்க்கை எவ்வாறு இருந்தது?
பாலு:  96 இல் கல்லூரி முடித்து வெளியில் வந்து வக்கீல் தொழிலை ஆரம்பித்தேன். பி.எல். முடித்து, வக்கீலாக பதிவு செய்து விட்டு, உயர்நீதி மன்றத்தில் நுழையும் போது, நீதிமன்ற வளாகத்து அறையில், எல்லோரும் கருப்பு கோட் அணிந்து இருப்பதையும், அவர்கள் பேசுவதைப் பார்த்தும், பயந்து விட்டேன். இங்கெல்லாம் நம்மால் இருக்க முடியாது, ஒடி விடுவோம் என்று நினைத்தேன்.

அன்றைய காலத்தில், சீனியர் வக்கீல் N.T.வானமாமலை, குற்றவியல் துறையில் மிகப்பெரிய ஜாம்பாவான். நடிகர் M.R.ராதா சுடப்பட்ட வழக்கில் ஆஜரானவர். அவரது ஜூனியரான அனந்தநாராயணனிடம் ஜூனியராக சேர்ந்தேன். அவருக்கு ஜூனியராக ஒரு 5 வருடம் 2001 வரை இருந்தது, எனக்கு ஒரு பெரிய வரம். என்னை விட திறமை வாய்ந்த பல வக்கீல்கள் எல்லாம், சீனியர் சரி இல்லாத காரணத்தினால், வக்கீல் துறையை விட்டே போய் விட்டார்கள். ஆனால் எனது சீனியரோ, நான் என்ன தப்பு செய்தாலும், என்னை நன்றாக ஊக்குவித்து, முன்னேற்றினார். அவர் எனக்கு ஒரு குருநாதர் மாதிரி. முதல் சம்பளமாக சீனியர் கொடுத்தது 300ரூபாய் காசோலை. பின் எனது உழைப்பையும், ஆர்வத்தையும் பார்த்து சிறிது சிறிதாக உயர்த்தினார்.

இன்று தமிழ்நாட்டில் 60,000 வக்கீல்களும், சென்னை உயர் நீதி மன்றத்தில் மட்டும் 6,000 வக்கீல்களும் இருக்கிறார்கள். இதெல்லாம் மீறி ஒரு வழக்கறிஞர் என்ற ஒரு அந்தஸ்தை நம் சமுதாயத்தில் அடைவது ரொம்ப கடினம். வக்கீல் ஆன பிறகு, இத்துறையில் பல சவாலான குற்ற வழக்குகளை சந்தித்திருக்கிறேன். அவை எல்லாம் மிக மிக நெருக்கடியான வழக்குகள். அப்படியே வாழ்க்கை ஓடுகிறது என்று இது மட்டும் இல்லாமல், இந்த துறையில் இருந்து கொண்டே வேறு என்ன வித்தியாசமாக செய்யலாம் என்று யோசிக்கும் போது தான், பொது நலன் சார்ந்த வழக்குகளை நடத்தலாம் என்ற ஒரு விஷயத்தை எடுத்தேன்.

 

B+:  உங்கள் சாதனைகளை நிறைய மீடியாக்களில் நாம் பார்த்திருக்கிறோம். உங்களுக்கு மன நிறைவைத் தந்த சாதனைகளைப் பற்றி?

பாலு:  முதலாவதாக, தேசிய நெடுஞ்சாலைகளில், மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று ஒரு மனுப் போட்டேன். உயர்நீதி மன்றமும் 31/3/2013 தேதிக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. வழக்கை டாஸ்மாக் உச்சநீதி மன்றம் எடுத்துச் செல்லவே, உச்சநீதி மன்றத்திலும் அந்த வருட சுதந்திர தினத்திற்குள் –(15/8/2013 தேதிக்குள்), அந்தக் கடைகளை அகற்ற வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. இது ஒரு மிக சவாலான வழக்கு.

அடுத்ததாக, சமச்சீர் கல்வி ரத்து ஆகும் சூழ்நிலை வந்த போது, அதை எதிர்த்து முதலில் வழக்கு எடுத்து நடத்தினேன். உயர்நீதி மன்றம் ரத்து செய்தது தப்பு என்று கூறியவுடன், தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்சநீதி மன்றம் சென்று, அங்கு வழக்கை நடத்தி, சமச்சீர் கல்வியை மீண்டும் வேண்டும் என்று கூறிய உச்ச நீதி மன்றத் தீர்ப்பை பெரிய விஷயமாக நினைக்கிறேன்.  நம் சமுதாயத்தில், பல தரப் பட்டவர்கள் இருக்கிறார்கள். FC, BC, MBC, SC, ST என்று அனைவருக்கும் ஒரே மாதிரி கல்வி இருந்தால் தான் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் என்பது தான் ஒரு சமூக நீதிக்கான பார்வை. அந்த வகையில் சமச்சீர் கல்வி வந்தது மகிழ்ச்சி.

அடுத்ததாக, “சட்டப் பாதுகாப்பு” என்ற ஒரு மாத இதழை நடத்தும் ஆசிரியராக உள்ளேன். “Ignorance of law is not an excuse”  என்று சொல்லுவார்கள். அதாவது, சட்டம் எனக்குத் தெரியாது என்று கூறி ஒருவன் குற்றத்திலிருந்து தப்ப இயலாது. சட்டம் அனைவருக்கும் தெரியும் என்று சட்டம் நம்புகிறது. ஆனால், நம் சமூகமோ, பள்ளிக் கல்வியோ ஒரு தனி  மனிதனுக்கு சட்டம் தெரிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதே இல்லை. பள்ளிகளில் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை, அடிப்படை சட்டம் கூட ஒரு பாடமாகவே இருப்பதில்லை. பி.எல். படிப்பிற்கு போனால் மட்டுமே, சட்டத்தைப் பற்றி படிக்க முடியும். அரசியல் அமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது, ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்ன? என்பது போன்ற மிக அத்தியாவசமான தகவல்கள் கூட நம் மக்கள் பலருக்குத் தெரியாதது தான் வேதனை.

சட்டத்தைப் பற்றி தெரிவதற்கான வாய்ப்பு எங்கேயாவது இருக்கிறதா என்று பார்த்தால், மிக மிக குறைவு தான். நம் நாட்டில், முக அழகிற்கு, உடல் ஆரோக்கியத்திற்கு, விளையாட்டு என அனைத்து துறைகளுக்கும் புத்தகங்கள் பல உண்டு. ஆனால், சட்டத்திற்கு இல்லை. அப்படியே இருந்தாலும் அது ஆங்கிலத்தில் தான் இருக்கிறது.

புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில், 80% பேர் தாய்மொழி மட்டுமே தெரிந்தவர்கள் ஆக இருக்கின்றனர். 16 முதல் 17% தான் ஆங்கிலம் படிக்கவும், எழுதவும் தெரிந்தவர்களாய் உள்ளனர். அப்படி உள்ள ஒரு மாநிலத்தில், சட்டம் தொடர்பான ஒரு புத்தகமாவது தமிழில் உள்ளதா என்று பார்த்தால் ஒன்று கூட இல்லை. அதனால் எளிய தமிழில் சட்டத்தைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அந்த புத்தகத்தை ஆரம்பித்து, ஏழு ஆண்டுகளாய், நடத்தி வருகிறேன். அது மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற ஒரு இதழ். அதற்கு ஒவ்வொறு ஆண்டும் ஊக்கத் தொகை தருகின்றனர். நிறைய பொது மக்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு, சட்டம் தொடர்பான ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல புத்தகமாய் சென்று அடைகிறது.

அடுத்தது, முக்கியமாக ஐ.நா. சபை சென்ற அனுபவத்தை பற்றி சொல்ல வேண்டும். ஈழத்தில் தமிழர்களின் இனப்படுகொலை நடந்தது. அதற்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும், அதை போர்குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று, ஐ.நா.வில் நடந்த மனித உரிமை மன்றத்தில் கலந்து கொள்வதற்கு, ஜெனிவா வரை போகும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து உலகத்தின் ஒரு உச்சம் என்று விளங்கும் ஐ.நா.விற்கு போகக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கும்போது, நம்மால் முடியும் என்ற ஒரு நம்பிக்கை எல்லாரிடமும் இருந்தால், என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

 

B+:  ஐ.நா சபை சென்று வந்த அனுபவத்தை பற்றி கொஞ்சம்..

பாலு: ஐ.நா.வில் “பசுமை தாயகம்” என்ற ஒரு அமைப்பு, சிறப்பு ஆலோசனை வழங்கும் அமைப்பாக (“Special Consultative Status”)  உள்ளது. இலங்கைக்கு எதிராக கொண்டு வந்தத் தீர்மானத்திற்கு பொது வாக்கெடுப்பு நடை பெற்றது. அந்தத் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்குமா அளிக்காதா என்று ஒரு போராட்டம் தமிழகம் முழுதும் 2009 ஆம் ஆண்டு நடந்தது. வாக்கெடுப்பின் போது, ஐ.நா.வில் “பசுமை தாயகம்” அமைப்பின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில், நானும், அமைப்பின் செயலாலர் திரு.அருளும், தர்மபுரி டாக்டர்.செந்தில் என்பவரும் ஐ.நா. சென்று இருந்தோம். அந்த வாக்கெடுப்பு ஐ.நா.வில் நடை பெறும்போது, ஐ.நா. மன்றத்தில் இருந்தோம்.

B+:  இத்தனை பிரச்சனைகளைப் பார்த்த பிறகு, இந்த துறையை விட்டே சென்று விடலாம் என்று தோன்றியது உண்டா?

பாலு: ஒரு போதும் அப்படி தோன்றியது இல்லை. எத்தனையோ மிரட்டல்கள், சோதனைகள் வந்த போதும் கூட, இந்த துறையை விட்டு போக வேண்டுமென்று  யோசித்தது இல்லை. இந்தப் பிரச்சனைகளை எல்லாம் என் குடும்பத்தினருடன் கூட பகிர்ந்து கொண்டதும் இல்லை.

இந்தத் துறையில் மிக மிக அருமையான அனுபவங்களும் கிடைப்பதும் உண்டு. சவால்களும் நிறைய உள்ளது. தைரியமாக நின்று எதிர் கொள்ள வேண்டும்.  முன்பெல்லாம் வக்கீல் தொழில் என்றால், மக்கள் மத்தியில், ஒரு மிக பெரிய கௌரவம் இருக்கும். ஆனால் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் அந்த மதிப்பை சற்று குறைத்தன. அப்படி இருந்தாலும் இந்த துறையை புனிதமாக செய்கிறவர்கள், நேர்மையாக இருப்பவர்கள் என்று இன்றும் இருக்கிறார்கள்.

B+:  கிராமத்து சூழ்நிலையில் இருந்து, ஐ.நா. செல்லும் அளவு உயர்ந்து உள்ளீர்கள். மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது? 

பாலு: உங்கள் B+ சென்ற மாத இதழை படித்தேன். ஒரு இடத்தில், சமுதாயத்தில் எத்தனையோ குறைபாடுகள், குற்றங்கள் நடந்து கொண்டிருந்தாலும், பாஸிடிவான விஷயங்களை மட்டுமே focus செய்வோம் என்று கூறி இருக்கிறீர்கள். அதன்படி சில நம்பிக்கைத் தரும் விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

எத்தனையோ துறைகளில் செய்ய வேண்டிய நல்ல காரியம் நிறைய உள்ளது. இந்தக் காலத்து இளைஞர்கள் சிலர், வேலை கிடைக்க வில்லை என்று கூறுகின்றனர். வேலை கிடைக்கவில்லை என்பதே ஒரு தவறான பிம்பம்.

வெறும் கை என்பது மூடத்தனம்

விரல்கள் பத்தும் மூலதனம்..

அப்படி என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், கண்டிப்பாக வேலை கிடைக்கும். நீங்களே இன்னொருத்தருக்கு வேலைக் கொடுக்கும் அளவிற்கு கூட போக முடியும்.

இரண்டாவது, ஆங்கிலம் இல்லை என்றால் கடினம் என்று, சரளமாக  ஆங்கிலம் பேசுவோரைக் கண்டால், சிலருக்குத் தாழ்வு மனப்பான்மை  வரும். இந்தக் கூட்டத்தில் ஆங்கிலம் தெரியாமல் நிற்க முடியுமா, சாதிக்க முடியுமா என்றும் யோசிக்கிறார்கள். அதெல்லாம் தேவையில்லை. மொழி என்பது, ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளும் முறை தான். தொடர்பு கொள்ள பயன்படும் ஒரு சாதனம் மட்டுமே. அது தான் அறிவா என்று பார்த்தால், இல்லை என்று தெளிவாகத் தெரியும். இங்கிலாந்து நாட்டில்  பிச்சைக்காரர்கள் கூட, ஆங்கிலத்தில் பேசி தான் பிச்சை எடுப்பார்கள், அதற்காக, அவர்கள் நம்மை விட அறிவாளிகள் என்று சொல்ல முடியுமா?

B+:  உங்களது வெற்றியின் ரகசியம் என்ன?

பாலு:  நான் வெற்றிப் பெற்றதாக நினைக்கவில்லை. என்றாலும் இந்தளவு வந்ததற்கு காரணம் விடாமுயற்சி. பிடித்த விஷயமான வக்கீல் துறையில் உள்ள சவால்களை எல்லாம் தெரிந்து தான் வந்தேன், துறைக்கு வந்தப்பின், அவற்றை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற ஒரு அர்ப்பணிப்பு.

B+:  இப்போது உங்கள் கிராமத்தினர் நீங்கள் தொலைக்காட்சிகளில் வரும்போது மிகவும் மகிழ்ச்சி அடைவார்களே?
பாலு: கண்டிப்பாக. இந்த முறை, பொங்கலுக்கு ஊருக்கு சென்றபோது, எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஒவ்வொரு ஆசிரியரையும்  நண்பர்களோடு வீடு வீடாக சென்று பார்த்தேன். அந்த ஆசிரியர்களுக்கெல்லாம் 85 வயதுக்கு மேல் ஆகிறது. ஆசிரியர்களும், கிராமத்து மக்களும் எனது வளர்ச்சியைப் பார்த்து மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றனர்.

B+:  கிராமத்து மக்களுக்கு சில வரிகள்?

பாலு: கிராமத்தில் இருந்து பார்க்கும் போது, நகரத்தில் உள்ளவர்கள் எல்லாரும் நம்மை விட மிகவும் அறிவாளிகள் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் கிராமத்தில் இருந்து வந்தவர்கள், தாய்மொழி கல்வி படித்தவர்கள், ஒரு பின்புலமும் இல்லாமல் சென்னைக்கு வருபவர்கள், இவர்கள் எல்லாரும், எங்கள் நீதி மன்றத்தில் மிகப் பெரிய வக்கீல்களாக பிரகாசித்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் கிராமத்து மாணவர்கள், நகரத்திற்கு வந்தால், நம்மால் முடியாது என்றெல்லாம் நினைக்கக் கூடாது, ஆரம்ப நாட்களில் கொஞ்சம் சிரமமாக இருக்கும், அதையெல்லாம் உறுதியுடன் தாண்டி விட்டால், மிகப் பெரிய வெற்றி அடையலாம்.

Likes(1)Dislikes(0)
Share
Share
Share