Oct 142015
 

krishna-godavari-link

நண்பர்களே, நமது B+ இதழிற்காக திரு.சாரதி அவர்கள், வாசகர்களின் கேள்விகளுக்கு ஒவ்வொரு மாதமும் பதில் அளிக்க உள்ளார். இதுவரை வாசகர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து நமது B+ இதழிற்கு ஈமெயிலில் வந்த கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் திரு.சாரதி இந்த மாதம் பதில் அளித்து உள்ளார்.

*** குறியிட்ட கேள்வி இந்த மாதத்திற்கான சிறந்த கேள்வியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது

(நீங்களும் உங்கள் கேள்விகளை கேட்க விரும்பினால், உங்கள் பெயர், ஊர், கேள்வி ஆகியவற்றை bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.)


ரஞ்சித், தஞ்சாவூர்

நம் நாட்டினர் அயல் நாட்டினர்களிடமிருந்து கற்க வேண்டிய ஒரு விஷயம் என எதை சொல்வீர்கள்?

காலந்தவறாமை.


ஷாகுள் ஹமீத், வந்தவாசி

*** அரசு செய்யும், அதிகாரிகள் செய்வார்கள் என இல்லாமல், தேச நலனுக்காக சாதாரன மக்களாகிய நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஏதேனும் உண்டா?

இந்த தேசம் ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் மட்டும் தானா என்ன? அனைவருக்கும் கடமைகள் உண்டு. நமது அரசியல் சாசனம் ஷரத்து 51A-ல் குடிமகனின் கடமைகள் என்ன என்று ஓர் பட்டியல் இட்டுள்ளது. அதை படிக்க நேரமில்லையெனில், ஓர் செடியையாவது நடுவது நல்லது.


கீதா, திருச்சி

அன்றாட உணவிற்கே கஷ்டப்படும் மக்களிடம் தேசம் குறித்த கடமைகளையும், விழிப்புணர்வையும் எப்பொழுது ஏற்படுத்த முடியும்?

உணவிட்டப் பிறகு.


சுப்பிரமணி, மதுரை

நம் நாட்டில் அனைத்து நதி நீர் இணைப்பு சாத்தியமாகுமா?

குஜராத் மற்றும் ஆந்திரம் பதில் சொல்லியுள்ளதே!


ரவிச்சந்திரன், சென்னை

ஏன் நம் நாட்டில் வெளிநாட்டு மோகம் அதிகமாக உள்ளது?

எப்பொழுதோ எழுத்தாளர்ளார் சுஜாதா சொன்னது- வெளிநாட்டு மோகத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ஒன்று – வெளிநாட்டுப் பொருட்களின்மேல் மோகம்

இரண்டு -வெளிநாட்டுப் பழக்கவழக்கங்களின்மேல்

மூன்று – வெளிநாடு சென்றே ஆகவேண்டும் என்கிற மோகம்.

நல்ல கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தால் மாக்கின்டோஷ் கணிப்பொறி வாங்கலாம். லெட்டர் அடிக்கவும் கேம்ஸ்விளையாடவும் அதைப் பயன்படுத்துவது முட்டாள்தனம்.

நம் நாட்டில் கிடைக்காத, தரம்வாய்ந்த, விலை குறைந்த வெளிநாட்டுப் பொருட்களை, அவற்றுக்குத் தேவை இருக்கும்போது வாங்கலாம். வெளிநாடு என்கிற ஒரே காரணத்திற்காக, அவற்றை ஒதுக்கத் தேவையில்லை.

வருடத்திற்கு ஒரு முறை துவைத்து போட்டுக்கொள்வதில் சௌகரியம் இருக்கிறது என்றால் ஜீன்ஸ் தாராளமாகப் பயன்படுத்துங்கள். அதை கௌரவம், அயல்நாட்டு பிராண்டு ஜீன்ஸ்தான் உடம்புக்கு ஆகும், அதுதான் பெருமை என்றெல்லாம் சொல்லாதீர்கள்.

வெளிநாடு தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.


சுசிலா, அமெரிக்கா

இளைய தலைமுறையினரிடம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறதா?

பெரியவர்களிடம் பெருகி வருகிறதா? இளைய தலைமுறையினர் பெரியவர்களிடமிருந்து தானே கற்றுக் கொள்கிறார்கள்.


பிரசன்னா, துபாய்

டெக்னாலஜி இத்தனை வளர்ந்தும், எதற்குமே நேரம் இல்லாதது போன்ற மாயை இருக்க காரணமென்ன?

முக்கியத்துவத்திற்கேற்ப செயல்களை அல்லது காரியங்களை வரிசைப்படுத்த தெரியாததே காரணம் என்ற ஞானம் வந்தால் மாயை அகலும்.


பாண்டியன், வெல்லூர்

பெண்களுக்கு மரியாதையும், சமத்துவமும் ஏன் நம் சமுதாயத்தில், முழு அளவில் வரவில்லை?

வேறு ஏதோ ஒரு சமூகத்தில் அல்லது நாட்டில் பெண்களுக்கு மரியாதையும், சமத்துவமும் உள்ளது போல் கேட்கிறீர்கள்?


மைக்கேல், சென்னை

வீட்டில் இருக்கும் பெண்கள், தங்களுக்கு கிடைக்கும் உபரி நேரங்களில் செய்யக்கூடிய சுயமுன்னேற்ற பணிகள் என்ன?

அது என்ன வீட்டில் இருக்கும் பெண்கள்? வேலைக்குப் போகும் ஆண் பெண்கள் உபரி நேரத்தை வீனடிக்கலாமா?


சிவா, சிங்கப்பூர்

தமிழைப் பற்றியும் தமிழர்களின் பெருமை பற்றியும் தமிழ்நாட்டில் உள்ளவர்களை விட, வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வதுப் பற்றி..

அதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. கார்கிலிலிருந்து துவங்கி, நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் அதிக மரியாதை வருகிறது. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு, எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்!!


(நீங்களும் உங்கள் கேள்விகளை கேட்க விரும்பினால், உங்கள் பெயர், ஊர், கேள்வி ஆகியவற்றை bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.)

Likes(4)Dislikes(0)
Share
Share
Share