Mar 142014
 

வணக்கம் நண்பர்களே!!!

சென்ற வாரம் அலுவலகப் பணி முடிந்து மாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சாலையில் ஓரிடத்தில் சிறு கும்பலாக சுற்றி நின்று மக்கள் எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த கும்பலைத் தாண்டிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேகத்தை சிறிது குறைத்து, அந்த கூட்டத்தின் உள்ளே எட்டிப்பார்த்துவிட்டே புறப்பட்டுச் சென்றன. எனக்கும் ஒரு ஆர்வம். அன்று வீட்டில் பெரிய வேலை எதுவும் இல்லையாதலால் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு நானும் அந்த கும்பலுக்குள் எட்டிப் பார்த்தேன்.

ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன்,  விபத்தில் அடிபட்டுத் தரையில் குப்புறக் கிடந்தான். அவன் ஓட்டிவந்திருந்த பல்சர் அவனுக்கு 5 அடி இடைவெளி விட்டு அவனைப் போலவே சாலையில் புரண்டு கிடந்தது. தலைப்பகுதியில் அடிபட்டிருக்கக்கூடும் என தலையைச் சுற்றிக்கிடந்த ரத்தம் சொன்னது. ஆனால் உயிர் இருக்கிறது. கால்களும் கைகளும் அசைந்துகொண்டே இருக்கின்றன. அவனைச் சுற்றி ஐந்தடி தூரத்தில் வட்டமிட்டு நின்று கொண்டிருக்கும் மக்கள் அதற்குமேல் முன்னேறி அவனுக்கு உதவும் எந்த எண்ணத்திலும் இல்லை என்பது நன்றாகத் தெரிந்தது.

“இவனுங்கல்லாம் வண்டியா ஓட்டுறானுங்க.. ஏறி உக்காந்தா ஃப்ளைட் ஓட்டுறோம்னு நெனைப்பு” என்றது கூட்டத்திலிருந்த ஒரு குரல். “ஆளப்பாருங்க… ஃபுல் மப்புல இருப்பான் போலருக்கு.. அதான் கொண்டு போய் விட்டுட்டான்” என்றது மற்றொரு குரல். உதவி செய்யவேண்டும். ஆனால் நமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என எண்ணிய மற்றொருவர் “ஹலோ… நூத்தியெட்டா… சார் மீனம்பாக்கம் ஃப்ளை ஓவர் பக்கத்துலருந்து பேசுறேன் சார்.. இங்க ஒரு டூவீலர் ஆக்ஸிடண்ட்.. உடனடியா வாங்க” என கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

மற்றொரு ஒரு இளைஞர் அடிபட்டுக் கிடந்தவரை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிந்தார். வீட்டுக்குச் சென்றவுடன் சமூக வளைத்தளங்களில் மற்றவர்களுடன் அந்த புகைப்படங்களை பகிர்வார் போலத் தெரிந்தது. ஐந்து நிமிடமாக சுற்றி நிற்கும் கூட்டம் வேடிக்கை பார்ப்பதில் மட்டுமே மும்முரமாக இருந்தது. அப்போது தான் ஒருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வேகவேகமாக வந்தார். மற்றவர்களைப் போலவே அவரும் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருப்பவர் என்பதை அவர் தோற்றமே காட்டிக்கொடுத்தது. அவர் தோளில் மாட்டியிருந்த பையை அருகில் கழற்றி வைத்துவிட்டு கீழே கிடப்பவரின் கழுத்தையும் தலையையும் சேர்த்துப் பிடித்தவாறு தூக்கி மடியில் வைத்துக் கொண்டார். அந்த இளைஞனின் ஒரு புற முகம் முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்த்து. தன் பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து மெல்ல அவன் முகத்தை துடைத்துவிட்டார் அந்த மனிதர். இளைஞனுக்கு நெற்றியின் ஒரு ஓரமாக உடைந்து ரத்தம் கசிந்துகொண்டே இருக்க, கைக்குட்டையை அதில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டார். “சார் அந்த தண்ணி பாட்டில குடுங்க” என அருகிலிருந்த மற்றவரிடம் வாங்கி அவனுக்கு தண்ணீரும் கொடுத்தார்.

அப்போதுதான் விபத்தைக் கேள்விப்பட்ட போக்குவரத்து காவலர் வந்து சேர்ந்தார். சுற்றியிருந்தவர்களை கலைத்து காற்றுவரச் செய்தார். சரியாக 10 நிமிடம். ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. அடிபட்ட இளைஞனை அவர் மடியிலிருந்து மெல்ல தூக்க, அடிபட்ட இளைஞன் மெதுவாக எழுந்து நின்றான். அவர் கொடுத்த கைக்குட்டையை தலையில் வைத்து அழுத்தியவாறே ஆம்புலன்ஸில் நடந்து சென்று ஏறினான். ஆம்புலன்ஸ் புறப்படும் வரை அங்கு நின்றிருந்த அவர், பின்னர் ரோட்டில் கிடந்த தனது பையை எடுத்துக்கொண்டு, ரத்தக் கரை படிந்த ஆடையுடன் அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார். அவர் உருவம் சாலையில் மறையும் வரை நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

யார் அவர்? அடிபட்டுக் கிடந்தவனுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? எனக்கும் அடிபட்டவனுக்கும் என்ன உறவோ அதே உறவுதான் இவருக்கும் அவனுக்கும். அவர் செய்ததை என்னால் ஏன் செய்ய முடியவில்லை? எனக்கு ஏன் அது தோன்றவில்லை? அவர் ஒன்றும் மருத்துவர் இல்லை. எனக்குத் தெரியாத எதையும் அவர் செய்துவிடவும் இல்லை. ஆபத்தில் இருக்கும் ஒருவனுக்கு அல்லது உதவி தேவைப்பட்ட ஒருவனுக்கு அவரால் ஆன உதவியை எந்த பலனும் எதிர் பாராமல் எதைப்பற்றியும் சிந்திக்காமல் செய்தார். எனக்கும் என் அருகில் இருந்தவர்களுக்கும் அவர் ஒரு மனிதானகத் தெரிந்தார். ஆனால் கீழே அடிபட்டுக் கிடந்தவனுக்கு அவர் நிச்சயம் கடவுளாகத்தான் தெரிந்திருப்பார்.

நானும் ஒரு முறை கடவுளைப் பார்த்திருக்கிறேன். சிறு வயதில் பள்ளி செல்லும் போது நடந்த ஒரு நிகழ்ச்சி. 1989 ஆம் வருடம். எனது பிறந்த ஊரான நாகை மாவட்டம், கடல் சார்ந்தப் பகுதி. தமிழகத்தில் எப்போதெல்லாம் மழையோ, புயலோ மிகுதியாக இருக்குமோ, நாகையிலும் அதன் சுற்றியுள்ள ஊர்களிலும் அதன் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அடை மழைக்காலத்தில், ஊரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கும்.

பொதுவாக நான் பள்ளிக்கு நடந்து செல்வதே வழக்கம். அது ஒரு நல்ல மழைக்காலம். முதல்நாள் பெய்த கனமழையில் நாங்கள் பள்ளிக்குச் செல்லும் பாதை முழுவதும் சேரும் சகதியுமாக நசநசத்திருந்தது. மழையில் நனைந்துக்கொண்டே நானும், வீட்டருகே உள்ள நண்பரும் பள்ளிக்கு (நாகை புனித அந்தோனி பள்ளி) சென்றுக் கொண்டிருந்தோம். அவருக்கு என்னை விட ஐந்து/ஆறு வயது அதிகம் இருந்திருக்கலாம், அதே பள்ளியில் மேல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். வீட்டிலிருந்து, இரண்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் அந்தப் பள்ளி அமைந்திருந்தது. பள்ளியின் வளாகத்தில் ஒரு பெரிய ஆழமான குளம் இருந்தது.

நான் அப்போது சபரிமலைக்கு மாலைப் போட்டிருந்ததால், காலணிகள் அணியவில்லை. தெருக்களில் சேற்றிலும் மழைநீரிலும் நடந்து வந்ததால் முதலில் கால்களை அந்தக் குளத்தில் கழுவிக்கொண்டு வருகிறேன், பிறகு இருவரும் அவரவர் வகுப்புக்கு செல்வோம் என நான் கேட்டுக்கொள்ளவும், நண்பரும் சரி என்றுக் கூறி குளத்தின் கரையில் காத்துக்கொண்டிருந்தார்.

அது ஒரு பெரியக் குளம் என்பதால், அந்தக் குளத்திற்கு நான்கு ஐந்து இடங்களில் படித்துறைகள் இருக்கும். அதன் வழியாக குளத்திற்குள் இறங்கியிருந்தால் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால், குளம் முழுவதும் நிறைந்திருந்ததால், ஒரு இடத்தில் படி இருக்கும் என்று தவறாக எண்ணி நான் காலை வைக்க, துரதிருஷ்டவசமாக அங்கு படிகள் இல்லை. காலை வைத்தவுடன் சர்ரென்று இழுக்கப்பட்டு முழுமையாகக் குளத்தின் உள்ளே சென்றுவிட்டேன். எனக்கோ நீச்சல் கொஞ்சம் கூட தெரியாது. முதன் முதலாக நீருக்கு அடியில் இருக்கும் உலகத்தைக் காண்கிறேன்.

தலை முதல் கால் வரை முழுதும் தண்ணீர். எனது முழு உடலுக்குக் கீழேயும் மூன்று நான்கு அடிக்குத் தண்ணீர் இருந்திருக்கும். நண்பரைக் கூப்பிட நினைக்கிறேன், அதெல்லாம் தண்ணீரினுல் மூழ்கிக் கொண்டிருக்கும்போது முடியாது என்று அப்போது தான் புரிகிறது. மடக் மடக் என்று தண்ணீரைக் குடித்துக் கொண்டே குளத்தின் அடிக்கு மூழ்கிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். எனது இடது கையின் ஓரிரு விரல்கள் மட்டும் வெளியேத் தெரிந்திருக்க வேண்டும்.

mp1

கரையில் சுற்றுமுற்றும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பருக்கு திகைப்பு. தண்ணீரினுள் மூழ்கியதை நொடிப்பொழுதில் புரிந்துக்கொண்டு சட்டெனக் குளத்தில் பாய்ந்து, என் தலை முடியைப் பிடித்து இழுத்து, கரையில் ஏற்றினார்

அவருக்கு நன்றாக நீச்சல் தெரியும். இருப்பினும் இவனைக் காப்பாற்றப் போய் நம்மையும் இவன் உள்ளிழுத்து விட்டால் என்ன செய்வது எனவோ, நினைந்த ஆடைகளுடன் வகுப்புக்கு எப்படி செல்வது எனவோ அவர் ஒரு நிமிடம் யோசித்திருந்தால், நான் நீருலகிலேயே ஐக்கியமாகியிருப்பேன். அந்த நாளிலிருந்து, நான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு அவரால் கிடைத்தது. அந்த மனிதனை என் வாழ்நாளில் மறக்க இயலுமா? துரதிருஷ்டவசமாக அந்த நண்பர் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.

இன்று நடந்த சம்பவம் மீண்டும் அவரை ஞாபகப்படுத்தியது. என்னை மிகவும் வருத்தப்பட வைத்து, சிந்திக்கவும் வைத்தது. தன்னலமற்ற ஒருவரிடமிருந்து நான் வாழ்நாளில் மறக்க முடியாத அளவு உதவிகளைப் பெற்றேன். ஆனால் அதையே நான் மற்றவர்களுக்குச் செய்ய ஏன் தயங்குகின்றேன்? பிறகு, அன்று அவர் என்னைக் காப்பாற்றியதற்கு என்ன பலன்? என் மேல் எனக்கே கோவமாக வந்தது. சிறிது நேரம் புறப்படாமல் அங்கேயே இருந்துவிட்டுக் கிளம்பினேன். என்மேல் எனக்கு இருந்த கோபம் தீர்ந்ததா என்றால் தெரியவில்லை. ஆனால் அடுத்தமுறை என் கண்முன் இதுபோன்றொரு சம்பவம் நிகழும்போது, ஓடிச்சென்று முதலில் உதவுபவன் நானாகத்தான் இருப்பேன்.

காலத்தினால் செய்யப்படும் மிகச் சிறிய உதவிகள் கூட, அது சென்று அடையும் நபர்களுக்கு அது ஞாலத்தை விட பெரிய விஷயமாக இருக்கும். நம்மால் இயன்ற உதவியை சக மனிதர்களுக்கு செய்வோம். சுயநலத்தை முடிந்தளவு மறப்போம். இறந்தப் பின்னும் மக்களின் மனதில் வாழும் வழியைத் தேர்ந்தெடுப்போம். நமது இந்த மண்ணுலக வாழ்க்கை பயனத்தை அர்த்தமுள்ளதாகவும், பயணுள்ளதாகவும் இருக்கச் செய்வோம்.

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ Team

Likes(3)Dislikes(0)
Share
Share
Share