Aug 142016
 

JP

திரு.ஜே.பி என்ற ஜே.பிரபாகர் செய்து வரும் சமுதாய தொண்டுகள் நம்மை வியப்பில் ஆழ்த்த கூடியவை. எண்ணங்களின் சங்கமம் என்ற அமைப்பின் மூலம் 1100 சமுதாய தொண்டு புரிபவர்களையும், தன்னார்வ நிறுவனங்களையும் இணைத்து வைத்துள்ளார்.

வருடாவருடம் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, பல நல் எண்ணங்களின் சங்கமத்தை  கடந்த பதினொரு வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

தற்போது இருளர் சமுதாயததிற்காக கடுமையாக உழைத்து, அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். இருளர்களின் வாழ்க்கையையும் அவர்களின் அவல நிலையையும் மிகவும் துயரத்துடன் விவரித்தார். இனி அவருடனான பேட்டியிலிருந்து..

வணக்கம் சார், உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்..

வணக்கம், நான் பிறந்தது ஆந்திரா சித்தூர் மாவட்டத்தில் உள்ள சீதாராம்பெட் என்ற ஒரு ஊர். 1973 ஆம் வருடம் முதல் சென்னையில் உள்ளேன். தொண்டு பணிகள் செய்வதில் ஈடுபட்டு வருகிறேன். 1973 முதல் 2002 ஆம் வருடம் வரை, அஷோக் லைலான்ட் நிறுவனத்தில் பிட்டராக பணி புரிந்தேன். அங்கும் “நல்லோர் வட்டம்” என்ற அமைப்பின் மூலம் சில தொண்டு பணிகளை செய்து வந்தோம். 2002 ஆம் வருடம் விருப்ப ஒய்வு பெற்று சுமார் பத்து வருடங்கள் ஆனந்த விகடனில் ஓவியம் வரையும் வேலைகளை செய்தேன். 2005 ஆம் வருடம் “எண்ணங்களின் சங்கமம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினோம்.

தொண்டு செய்யும் எண்ணம் எவ்வாறு வந்தது?

சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களை நிறைய படித்ததன் விளைவாக இருக்கும் என நினைக்கிறேன். பத்தாவது படிக்கும் போதே அவரின் “ஞான தீபம்” பத்து புத்தகங்களையும் தொடர்ந்து படித்திருக்கிறேன்.

எண்ணங்களின் சங்கமம் அமைப்பு பற்றி?

இன்றும் தினசரி உலகத்தில் பல நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது, நிறைய நல்ல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் வருகிறது. ஆனால் இந்த செய்திகள் வெளியே மீடியாக்களின் மூலம் வருவதில்லை. அதையெல்லாம் மக்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம் என நினைக்கும்போது தான் இந்த அமைப்பு உருவானது.

முதலில் சமுதாயத்தில் தொண்டு செய்கிறவர்களை கண்டுபிடித்தோம். உதாரணத்திற்கு கல்வி, மருத்துவம், சுற்றுப்புறச் சூழல், கிராம முன்னேற்றம், இயற்கை வேளாண்மை, மது ஒழிப்பு, அரசியல் தூய்மை, இப்படி ஒவ்வொரு துறையிலும் பல ஊர்களில் பல தொண்டு நிறுவனங்கள் வேலை செய்கின்றன. அவைகளை ஒன்றிணைத்து அந்த தகவல்களை வெளியே தெரிவிக்க ஆரம்பித்தோம்.

முதலில் வருடத்தில் 100 தொண்டு அமைப்புகளை நேராகச் சென்று பார்க்க நினைத்தோம். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்தோம். ஒவ்வொரு அமைப்பின் பணிகளையும் மற்ற அமைப்புகளை சந்திக்கும்போது தெரியப்படுத்தினோம். முதல் வருடத்தில் 100 அமைப்புகளின் தொடர்பை வைத்திருந்த நம் அமைப்பு, இரண்டாம் வருட முடிவில் 200 அமைப்புகளின் தொடர்பை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறே தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளில் 1100 அமைப்புகளின் தொடர்பை ஏற்படுத்தி உள்ளோம்.

இந்த தொண்டு அமைப்புகளை எவ்வாறு ஒருங்கினைக்கிறீர்கள்? என்ன வேலைகள் அமைப்பின் மூலம் செய்வீர்கள்?

தொண்டு செய்பவர்களை முதலில் அங்கீகரித்து மதிப்பு கொடுக்க நினைத்தோம். அதற்காக அவர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, அவர்கள் செய்யும் தொண்டை அனைவருக்கும் தெரியப்படுத்த நினைத்தேன். முதலில் இது குறித்து சங்கர நேத்ராலயா டாக்டர்.பத்ரிநாத்திடம் இது குறித்து பேசினேன். அவருக்கு இந்த திட்டம் பிடிக்கவே, அவரது இடத்திலேயே இந்த நிகழ்ச்சியை நடத்த ஒப்புதல் அளித்தார். 2006, ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுகிழமை அவர் தலைமையில் முதல் நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வும் அதில் கலந்துக்கொண்டவர்களின் உற்சாகமும் அடுத்தடுத்து வேலைகளை செய்யும் உற்சாகத்தை கொடுத்தது. அதே போன்ற நிகழ்வு வருடாவருடம் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை ஹிந்துக் கல்லூரி, திருச்சி, கோயம்புத்தூர், கும்பக்கோணம் ஆகிய இடங்களில் இதுவரை நடந்துள்ளது.

சமீபத்தில் என்ன தொண்டுகள் செய்து வருகிறீர்கள்?

சமீபத்தில் பெருவெள்ளம் பாதித்த பகுதியில் தொண்டு வேலைகள செய்யும்போது தான், இருளர் சமுதாயத்தைப் பற்றியும் அவர்களின் அவல நிலைப் பற்றியும் தெரிந்துக்கொண்டேன். வெள்ளத்திற்கு பிறகு அவர்கள் வீடுகள் முற்றிலுமாக சேதமாகி தங்க முடியாத சூழ்நிலை உருவானது. வீடுகளை திரும்பவும் கட்டிக்கொள்ள தேவையான பொருளாதார சூழ்நிலை அவர்களுக்கு இல்லாததால், அவர்களுக்கு வீடுகளை நாங்களே கட்டித்தரலாம் என முடிவு செய்தோம்.

திருக்கண்டலம் என்ற பகுதியில் 24 வீடுகளை கட்டித்தந்துள்ளோம். அதேபோல் ஈச்சங்காடு என்ற பகுதியில் 11  வீடுகளும் உப்புநெல்வாயிலில் 10 வீடுகளும் கட்டும் பணிகளில் உள்ளோம். இதையெல்லாம் எண்ணங்களின் சங்கமத்தின் சில அமைப்புகளே செய்துக்கொண்டிருக்கின்றன. மேலும் சுமார் 100 வீடுகளை கட்டும் பணிகளை எங்கள் அமைப்பு மூலம் செய்து வருகிறோம்.

அடுத்து வீடுகள் மட்டும் போதாது, இருளர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். மீன் பிடி தொழிலைச் சேர்ந்த சில இருளர்களின் வலைகள் வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்படுவிடவே, மீன் பிடிக்கும் வலைகளை வாங்கித் தந்தோம். சிலர் படகுகள் கேட்டனர். படகுகள் செலவு மிக அதிகம். ஒரு படகு 60000 ரூபாய் முதல்  1லட்சம் வரை ஆகும். அதை CII நிறுவனம் மூலம் செயல் படுத்துகிறோம். பழவேற்காடு அருகில் காமராஜர் நகரைச் சேர்ந்த மீனவர்களுக்கு 10 படகு வாங்கித் தருவதாக முடிவாகியுள்ளது.

சில இடங்களில் பெண்களுக்கு தையல் பயிற்சி கொடுத்து, தையல் மெஷின்களும் வாங்கி கொடுத்துள்ளோம். அடுத்து மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த “மகாத்மா காந்தி Study Centre” என்ற அமைப்பை கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு மையத்திலும் 3000 ரூபாய் செல்வு செய்து இரு ஆசிரியர்களை நியமித்து செய்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் இது போன்ற Study Centre வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.

இருளர்களின் வாழ்க்கை நிலை எவ்வாறு உள்ளது?

பண்ருட்டி அருகில் அங்குச்செட்டிப்பாளையம் என்ற கிராமத்திற்குச் சென்ற போது தான், அவர்களது துயரமான வாழ்க்கை பற்றி தெரியவந்தது. அங்கு 75குடும்பங்கள் உள்ளன, 26 வீடுகள் மட்டும் உள்ளன. பெற்றோர்கள் மாலையில் வீடு திரும்பியவுடன் அனைவரும் தெருக்களில் தான் படுக்கின்றனர்.

அடுத்து அவர்கள் வாழ்வில் நடக்கும் சில விஷயங்களைப் பார்க்கையில் இப்போது கூட இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகம் வரும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காஞ்சவயல் என்ற கிராமத்தில் சில இருளர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் இருக்கும் பகுதி தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் அந்த கிராமத்தில் நல்ல தண்ணீர் வருகிறது.

அதேபோல், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விட்டலாபுரம் என்ற பகுதியில் உள்ள இருளர்களுக்கு கிடைக்கும் நீர் மஞ்சள் நிறத்தில் உள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் அவர்களுக்குச் சென்றடையவில்லை.

அவர்களுக்கும் இதையெல்லாம் கேட்டுப் போராடும் என்ற விழிப்புணர்வும் இல்லை. இருளர்களுக்கு ஆதரவாக போராடும் தலைவர்களும் பெரியளவில் இல்லை என்ற நிலை. விருத்தாச்சலம் அருகே, தாழைநல்லூர் என்ற கிராமம். அவர்கள் தண்ணீர் பிடிக்க விருத்தாச்சலம் ரயில் நிலையம் வரை தினமும் செல்ல வேண்டியுள்ளது. அங்கு சுமார் 25 இருளர் குடும்பங்கள் உள்ளன. அனைத்து மக்களும் 20 முதல் 40 வருடங்களாக அங்குள்ளனர். அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்டெடுத்து அரசாங்கம் இந்த இடங்களில் தங்க வைத்துள்ளது.

சிலருக்கு ரேஷன் கார்டுகளும், ஜாதி சான்றிதழ்களும் இல்லை.

இருளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு வந்தது?

செஞ்சிமாநகர் என்ற கிராமத்திற்கு சென்றபோது நடந்த ஒரு சம்பவம். வெள்ளத்திற்குபின் எல்லாரும் அரிசி உணவு எல்லாம் தருகின்றனர். ஆனால் ஒரு வாரமாக எங்களுக்கு மாற்றுத்துணிகள் இல்லை, உடைகள் கிடைக்குமா என்று எங்களை கேட்டனர். உடனே நாங்களும் சென்னையிலிருந்து 100 உடைகளை வாங்கி வந்து கொடுத்தோம். கொடுத்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

செஞ்சிமாநகர் அருகில் உள்ள மற்றொரு கிராமத்திலிருந்து அந்த அழைப்பு வந்தது. உடைகள் தந்து உதவியதற்கு நன்றி தெரிவித்தனர். எனக்கு மிகுந்த வியப்பு. உங்கள் கிராமத்திற்கு நாங்கள் உடைகளை தரவில்லையே என்று தெரிவித்தேன். அதற்கு அவர்கள், “ஐயா, நீங்கள் செஞ்சிமாநகர் கிராமத்திற்கு 100 உடைகளை தந்துள்ளீர்கள், அங்கு மொத்தமே 25 பெண்கள் தான் உள்ளனர். அவர்கள் 25 உடைகளை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள உடைகளை அருகில் உள்ள எங்கள் கிராமத்திற்கு கொடுத்து விட்டனர் என்றனர்.

அப்போது எனக்கு வெள்ள நேரத்தில் தினசரிகளில் சென்னை கடலூர் போன்ற பகுதிகளில் மக்களின் மனநிலை நினைவிற்கு வந்தது. சில மக்கள், சில இடங்களில் நிவாரணப் பொருள்களை அபகரித்தனர், ஆனால் அதற்கு மாறாக நடக்கும் இருளர்களின் இந்த குணம் என்னை பெரிதும் கவர்ந்தது.

அதேபோல் சாய்பாபா நகர் என்ற கிராமத்தில் வெள்ள நிவாரணமாக அரசாங்கம் 25 வீடுகளுக்கு 4000 ரூபாய் வழங்கியது. அனால் அங்கு மொத்தம் 35 வீடுகள் உள்ளது. நிவாரணத்தை 35 வீடுகளும் சரி சமமாக அமர்ந்து பிரித்துக்கொண்டனர்.

பணத்தை சரியாக, நேர்மையாக பயன்படுத்தும் பழக்கம் இந்த மக்களிடம் தான் காண்கிறேன். அடுத்து இருளர்களிடம் ஏமாற்றும் பழக்கம் சுத்தமாக இல்லை. இருளர் சமுதாயத்தில் மது அருந்தும் பழக்கம் மிக குறைவு. அவர்களுக்குள் நல்ல ஒற்றுமை உள்ளது. இந்த நல்ல குணங்களே இவர்களுக்கு உதவும் எண்ணத்தை மேலும் வரவழைத்தது.

இருளர்களின் குழந்தைகள் என்ன செய்வார்கள்? படிக்க செல்வார்களா?

இருளர்களின் குழந்தைகளுக்கு படிக்கும் வாய்ப்புகள் இருப்பதில்லை. உதாரணமாக திருவள்ளூர் பகுதியில் உள்ள இருளர் சமுதாயத்தில் பெற்றோர்கள் பூப்பறிக்கும் வேலைக்காக காலை 4மணிக்கே வீட்டை விட்டுச் சென்றுவிடுவர். திரும்ப வருவது மதியம் ஒரு மணிக்குத்தான். அதுவரை குழந்தைகள் சாப்பிட்டார்களா, குளித்தார்களா என்று கூட அவர்களுக்குத் தெரியாது. அதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள இருளர்கள் கட்டைகள் வெட்டச் செல்வர். அதில் ஒரு மாதம் இரு மாதம் என வீட்டை விட்டுச் செல்வர். அதுவரை இந்த குழந்தைகள் அந்த கிரமாத்தில் உள்ள மற்றவர்கள் வீட்டில் இருப்பர். குழந்தைகள் பள்ளிகள் செல்கிறார்களா என்பதெல்லாம் பற்றி அவர்களுக்குத் தெரிவதுமில்லை, விழிப்புணர்வும் இல்லை.

சில இடங்களில் செங்கல் சூளைகளுக்கு செல்வார்கள். அங்கும் இதே நிலை தான். எங்கள் அணி அதுபோன்ற இடங்களுக்குச் சென்று குழந்தைகளுடனும் பெற்றோர்களுடனும் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். குழந்தைகளிடம் படிப்பின் அவசியத்தை கூறும்போது அவர்கள் அதை நன்றாக புரிந்துக்கொல்கின்றனர், படிப்பதற்கு தயார் எனவும் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக,  சென்னையில் “சுயம் Charitable Trust” நடத்தி வரும் திருமதி.உமா அவர்களிடம் பேசினேன். அவரும், இருளர் சமுதாயத்திற்காக தான் ஒரு அகாடமி ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இப்போது திருவள்ளூர் கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆறு கிராமங்களில் பேசி, தேவந்தவாக்கம் என்ற பகுதியில் ஏற்கனவே இருந்த ஒரு கட்டிடத்தை பயன்படுத்தி சிறு பள்ளியை ஆரம்பித்துள்ளோம். இதுவரை 68 குழந்தைகள் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்கேயே தங்கி படிக்க உள்ளனர். சில வருடங்களில் அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இருளர்களை எவ்வாறு தொடர்பு கொள்வீர்கள்?

அவர்களுள் சிலரிடம் செல்போன் இருக்கிறது. ஆனால் எண்களை கேட்டால் அவர்களுக்குத் தெரியாது. படிக்கத் தெரியாது. முப்பது வயது இளைஞர்களை கூப்பிட்டு, “என்ன படித்திருக்கிறீர்கள்?” எனக் கேட்டால், பதில் சொல்லாமல் நழுவி செல்வார்கள். ஏழு வயது தாண்டிவிட்டால் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி விடுவர்.

வாக்குகள் சேகரிக்க வருபோர்களிடம் இவர்கள் நிலைமையை கூறமுடியாதா?

இருளர்கள் எதையுமே கேட்க முடியாத, கிட்டத்தட்ட ஒரு அடிமை மனப்பான்மையில் தான் உள்ளனர். செங்கல் சூளை, சாலைகள் போடுவது, கட்டைகள் வெட்டுவது, மீன் பிடிப்பது, மல்லிகைப்பூ பறிப்பது போன்ற கூலித் தொழில் செய்யும் இவர்களுக்கு 200 முதல் 300 ரூபாய் வரை தினக்கூலியாய் கிடைக்கும். அதுவும் எல்லா நாட்களுக்கு வேலை இருக்காது. மூன்று மாதம் வேலை இருக்கும், மூன்று மாதம் வேலை இருக்காது. வேலை இல்லாத நேரங்களைப் பயன்படுத்தி சிலர் அவர்களுக்கு பணம் கடனாக கொடுப்பர். அந்த கடனை திருப்பி அடைக்க மீண்டும் வேலைக்குச் செல்வர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உள்ள மக்கள், அரசியல்வாதிகளிடம் பேசவோ உரிமைக்காக குரல் கொடுக்கவோ முடியாமல் உள்ளனர்.

வீடுகளே இல்லாமல் இருளர்கள் எங்கு தங்குவார்கள், உறங்குவார்கள்?

வெள்ளம் வந்ததால் தான் இவர்களை நாம் சந்திக்க முடிந்தது. இவர்களைப் பற்றித் தெரியவும் வந்தது. ஒவ்வொரு ஆண்டும் மழை நேரங்களில் பெரிய பிரச்சினை  தான். அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று தங்கிவிடுவர். மழை வந்தாலே பயந்து ஓடும் சூழ்நிலையில் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் நல்ல வீடுகள் கட்டித்தரவேண்டும்.

சரியாக பேசக்கூட வெட்கப்படும், பயப்படும் இவர்களுக்கு கல்வி சென்று அடைந்தால் தான், தங்களுக்கு தேவையானவற்றை கேட்கும் தைரியம் வரும். அப்போது தான் உண்மையான மாற்றம் வரும். கல்வி சென்றால் தான் செல்வம் வரும், கல்வியும் செல்வமும் வந்தால் தைரியம் வரும். அதை தான் நான் எதிர்பார்க்கிறேன். நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அங்குள்ள பெற்றோர்களிடம் நான் இதை எடுத்துக்கூருகிறேன். அனைத்தையும் அரசிடம் எதிர்பார்க்காதீர்கள், நீங்கள் கல்வி பயின்று உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி தேவையானவற்றை அடையும் நிலைக்கு உயருங்கள் எனக் கூறியதைக் கேட்டுத் தான் குழந்தைகளை எங்களுடன் அனுப்பினர்.

தொண்டு செய்யும் இன்றைய இளைஞர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது?

இளைஞர்கள் அருமையாக வேலை செய்கின்றனர். வெள்ளம் வந்தபோது,  இருளர்களுக்கு வீடு கட்டலாம் என்று ஒரு திட்டம் தீட்டினோம். இரண்டே நாட்களில் பத்து லட்சம் ரூபாய் வரை நம் இளைஞர்கள் சேகரித்துக் கொடுத்தனர். இளைஞர்களுடன் இணைந்து வேலை செய்வதே பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.

பொது மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது? அவர்களுக்கு உங்கள் அறிவுரை.

சுயநல சிந்தனையைக் குறைத்து, பொது சிந்தனையை நிறைய வளர்த்துக்கொள்ள வேண்டும். நகர மக்கள், தன்னார்வ நிறுவனங்கள், வசதியானவர்கள், இவர்கள் எல்லாம் ஒரு கிராமத்தை தத்தெடுக்கலாம். கல்வி கொடுக்கலாம், வேலை கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.

நகர மக்கள் இருளர்கள் போன்று துயரத்தில் உள்ள மக்களை அவர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று சந்திக்கலாம். இருளர்கள் எல்லாம் இன்றும் இருக்கிறார்களா, அவர்கள் பாம்புகள் தானே பிடிப்பார்கள் என்றெல்லாம் என்னிடம் நிறைய பேர் கேட்பார்கள். அப்படியெல்லாம் இல்லை, அதெல்லாம் மாறிவிட்டது என்று அவர்களிடம் கூறுவேன். அவர்கள் வாழும் முறையை சென்று பார்த்தால் தான் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். சம்பாதிப்பதில் ஒரு சிறு பங்கு அது போல் கஷ்டத்தில் இருபவர்களுக்கு என தரலாம். இந்த மனநிலை வந்தால் தான் மாற்றம் வரும்.

Likes(4)Dislikes(1)
Share
Jan 142016
 

AqGKNIko95nqq35myqZhcIKa2NvIfypxqO7HL-eemgjn

கடந்த ஆறாம் தேதி, அணுகுண்டை விட சக்திவாய்ந்த ஒரு  ஹைட்ரஜன் குண்டை வெடிக்கும் சோதனையை நடத்தி உலகையே உலுக்கி இருக்கிறது வட கொரியா. “அந்த ஹைட்ரஜன் குண்டு எழுப்பிய ஒலியை கேட்க மிகவும் குதுகலமாக இருந்தது, இதையே உலக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக தருகிறேன்” என்றும் கொக்கரித்துள்ளார் அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் யுன்.

உலகத்திலேயே அதிகமாக சுற்றுலா பயணிகள் செல்லும் நகரம் பாரிஸ். வருடத்திற்கு சுமார் மூன்று கோடி மக்களுக்கும் அதிகமாக  சுற்றுலாவிற்கு வரும் பாரிஸில், சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் (13 நவம்பர் 2015) ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலின் சோகத்திலிருந்து மீண்டு வந்த உலக மக்களுக்கு, கிம் நடத்திய இந்த வெடிகுண்டு சோதனை மற்றொரு பேரிடியாய் அமைந்தது.

இவை மட்டுமன்றி, கடந்த இரண்டாம் தேதி நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட்டில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நமது 7 ராணுவ வீரர்களின் வீர மரணம், அந்த 7 குடும்பத்தினரையும், தேசபக்தர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது போல், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், உலகத்தை ஒருபக்கம் ஆட்டிப் படைக்க, இயற்கையோ பேய்மழை, வெள்ளம், சுனாமி என்று இன்னொரு புறம் நம்மை அச்சுறுத்தி வருகிறது.

என்ன தான் நடக்கிறது நம் உலகத்தில்? எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, தீவிரவாதம்.. நல்ல விஷயங்களே நடப்பதில்லையா என ஏங்கி பெருமூச்சு விடுகையில், சமீபத்தில் கும்பகோணத்தில் நடந்த அந்த அருமையான விழா, இந்த ஏக்கத்தையும் கவலையையும் மறக்க வைத்து, நம்பிக்கையை தந்தது.

“எண்ணங்களின் சங்கமம்” என்ற அமைப்பு, சமூகத்திற்காக சேவைகளையும், தொண்டுகளையும் ஆற்றி வரும், துடிப்பான நூற்றுக்கும் அதிகமான இளைஞர்களை ஒன்றாக இணைத்து அவர்களைப் பற்றி உலகிற்கு இந்த விழாவின் மூலம் அடையாளம் தந்து, அவர்களை கவுரவித்து, பரிசுகளையும் வழங்கியது.

11 வருடங்களாக இந்த அமைப்பு, இத்தகைய காரியங்களை நடத்தி, சமூக சேவகர்களை தேடி கண்டுபிடித்தும், ஒன்றாக இணைத்தும், ஊக்குவித்தும் வருகிறது. விழாவில், சமுதாய முன்னேற்றத்திற்காக தங்கள் வாழ்வை முழுதுமாக அர்பணித்த பல நல்ல உள்ளங்களை சந்திக்க நேர்ந்தது.

AqqDXoz4bt-tubxkstA_jgr25Ha7nUxmQbJDxIycp-VS (1)

அந்த அமைப்பின் தலைவர் திரு.ஜே.பிரபாகரும் அவர் குழுவும் சேர்ந்து வெற்றிகரமாக நடத்தி முடித்த அந்த விழாவில், சுமார் ஆயிரம் சமூக ஆர்வலர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து கலந்துக்கொண்டனர்.

ஒரு நாள் முழுதும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் சிறப்பாக, திரு.பாமையன் உணவு பாதுகாப்பு குறித்தும், சேலம்  திரு.பியுஸ் மனுஷ் நீர் மேலாண்மை குறித்தும் சென்னை திரு.ஆனந்து இயற்கை விவசாயம் குறித்தும் பேசினர்.

திரு.ஜே.பிரபாகர் போன்ற நல்ல சிந்தனையும், ஆற்றலும் உள்ள மனிதர்களும் நம் நாட்டில் பலர் இன்றும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லங்கள், முதியோர் இல்லம், கிராமப்புற மக்களுக்கு பள்ளிகள், மாற்றுத்திரனாளிகளுக்கு இல்லங்கள், உதவித் தொகை அளித்தல்,  பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருவது போன்ற பல சேவை காரியங்களை செம்மையாக செய்துக் கொண்டும் இருக்கின்றனர்.

சரி, தீவிரவாதிகள் தாக்குதல், கொலை, கொள்ளை போன்ற செய்திகள் அளவிற்கு ஏன் இது போன்ற நல்ல நிகழ்வுகளின் செய்திகள் பெரியளவில் வெளியே தெரிவதில்லை என எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

“இதற்கு பொதுவாகவே நமது பதில் ஊடகங்களை குறை கூறும் விதத்தில் தான் இருக்கும். நாளிதழ்கள், செய்தி சேனல்கள், பத்திரிக்கைகள் என மீடியாக்கள் முழுதும் எதிர்மறையான செய்திகளை தான் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன, அது தான் முக்கிய காரணம் என்றார்” நண்பர் ஒருவர்.

சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால், இது மட்டுமே பதிலாக இருக்க முடியுமா என்று தோன்றவில்லை. ஏனெனில் நம் B+ இதழை தொடங்குகையில், சமுதாயத்தின் ஒரு முக்கியப்புள்ளி என்னிடம், “தம்பி, பாசிடிவான விஷயங்களை மட்டும் வைத்தெல்லாம் ஒரு ஊடகத்தை நடத்தாதீர்கள், நம்மூர் மக்களுக்கு மசாலா நிறைந்த செய்திகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் தான் அதிகம் பிடிக்கும்” என்று ஆலோசனை வழங்கினார்.

அவர் ஆலோசனைக்கு அன்று கேட்டிருந்தால், இதோ இன்று நமது B+ இதழின் மூன்றாம் வருடத்தின் முதல் பதிப்பை படித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள்.

வெறும் பாசிடிவ் சிந்தனைகளை மட்டும் தரும் மீடியா என்று மற்றும் நின்றுவிடாது, இதன் மூலம், நமது ஆதரவாளர்களின் கருணை உள்ளத்தால், சமீபத்தில் வெள்ள நிவாரணமாக 200 குடும்பங்களுக்கு உதவி செய்தது நமது குழு. இதை இங்கே பதிவு செய்ய ஒரு காரணம் இருக்கிறது.

மேலே நண்பர் கூறியது போல், பல மீடியாக்கள் இன்று தவறான விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்பது ஓரளவிற்கு மறுக்க முடியாத உண்மை என்றாலும், அது மட்டும் தான் காரணமா என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு சாதாரண மக்களாகிய நம் கையில் ஏதாவது செய்ய இருக்கிறதா என கேட்டால், கண்டிப்பாக நிறைய இருக்கிறது என்றும் தோன்றுகிறது. உதாரணமாக சமூக வலைதளங்களில் சினிமா அல்லது பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட அல்லது எதிர்மறை உணர்சிகளை தூண்டிவிடக்கூடிய பல தொகுப்புகளை நாம் நம்மை அறியாமலே பகிர்வதுண்டு.

இந்த பொழுதுபோக்கு அம்சங்களை எல்லாம் முழுதுமாக விட்டுவிடக் கூட தேவையில்லை. ஆனால் அதன் கூடவே நல்ல தொகுப்புகளை, நல்ல செய்திகளை, பாசிடிவான சம்பவங்களை பகிரலாமே?

நல்ல விஷயங்கள் கிடைப்பதற்கு கடினமாக இருக்கிறதா? அதற்கும் ஒரு எளிய வழி இருக்கிறது. நமக்கு கண்டிப்பாக நிஜம் என்று தெரியாத வதந்திகளை, எதிர்மறை விஷயங்களை பரப்பாமல் இருந்தாலே, நல்ல விதத்தில் பெரும் மாற்றம் வரும்.

மீடியாக்களை மாற்றுவது நம் கையில் இல்லை, ஆனால் நம் மூலம் சில எதிர்மறை செய்திகள் பரவாமல் இருப்பது நம் கையில் கண்டிப்பாக உள்ளது.

நம் சிந்தனைகளையும், செயல்களையும் கவனித்து செயல்படும் முக்கிய காலகட்டத்தில் உள்ளோம். வன்முறை, வெடிகுண்டு, ரத்தம் என்று இல்லாத அமைதியான சூழலை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வதில் நம் அனைவருக்குமே பெரும் பங்குண்டு.

இன்று விதைக்கப் போவதை தான் நாளை அறுவடை செய்யப்போகிறோம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுவோம்.

அனைவருக்கும் அறுவடை திருநாளான இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(3)Dislikes(0)
Share
Share
Share