Dec 132014
 

8

பணம்… மனிதனின் வாழ்க்கையை விதவிதமாக மாற்றவல்ல ஒரு தவிர்க்க முடியாத காரணி. முதலில் உணவு, உடை, இருப்பிடம் போன்ற வாழ்வாதாரங்களுக்காக பணத்தைதேடி அலைந்து அவற்றை அடைந்ததும் பின்னர் நல்லஉணவு, நல்லஉடை, நல்லஇருப்பிடங்களுக்காக பணத்தை தேடுகிறோம். அவையும் கிடைத்துவிட்டால் நின்றுவிடுவோமா? அதற்கும்மேல் என்ன இருக்கிறதோ அதை இலக்காக்கிக் கொள்கிறோம். எனவே மனிதனின் மூச்சிருக்கும்வரை இந்தத் தேடல் நிற்கப்போவதில்லை.

ஆனால் இந்தத் தேடுதலின் போது நாம் சேர்க்கும் செல்வத்தை விட பலமடங்கு விலைமதிப்புள்ள சிலவற்றையும் இழக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இரண்டு மாதத்திற்கு முன்னர் வேறொரு அலுவலகத்தில் புதிதாக பணியில் சேர்ந்திருந்தேன். அனைத்தும் புதிது.  அலுவலகம் புதிது.. சுற்றியிருந்த ஆட்களும் புதிது. எதோ வேற்றுக்கிரக மனிதர்களுக்கு நடுவே நான் மட்டும் மாட்டிக்கொண்டது போல ஒரு மனநிலை. அனைவரும் அவரவர் வேலைகளிலேயே கண்ணாயிருந்தனர். நம்மிடம் பேசுவதற்கோ பழகுவதற்கோ யாரும் இல்லை.

அப்பொழுது நாற்பது வயதைத் தாண்டியிருந்த ஒரே ஒருவர் மட்டும் என்னுடன் இன்முகத்துடன் பேசிப்பழகினார். நீண்டகாலம் பழகிய நண்பர் போல வெகுசகஜாமகப் பேசினார். குடும்பத்தைப்  பற்றி விசாரித்தார். புதிதாக வீடு பார்ப்பதற்கு உதவுவதாகக் கூறினார். புதிய அலுவலகத்தில் கிடைத்த முதல் நண்பராக அவரைப் பார்த்தேன். ஓரிரு நாட்கள் அவ்வாறே ஓடியது.

ஒருநாள் மதிய உணவை முடித்துவிட்டு இருவரும் வெளிவந்தோம். “சற்று மரநிழலில் நடந்து விட்டு இருக்கைக்கு செல்லலாம்” என்றார். சரி என்று நானும் அவரும் அங்கு வரிசையாக இருந்த மரநிழலில் நடக்க ஆரம்பிக்க அவர் பேச ஆரம்பித்தார்.

“ஆமா நீங்க வீட்டுக்கு ஒரே பையன்ல” என்றார்.

”ஆமாசார்..”

“கடன் வேற கொஞ்சம் இருக்குன்னு சொன்னீங்கல்ல”

“ஆமாசார்.. கொஞ்சம் இருக்கு… ரெண்டு வருஷத்துல அடைச்சிருவேன் “ என்றேன்.

“நீங்க future ஐ பத்தி எதாவது யோசிச்சி பாத்தீங்களா?” என்றார்.

எனக்கு ஒன்றும் புரியாமல் “future எதப்பத்தி சொல்றீங்க”  என்றேன்

”அத எப்டி சொல்றது.. உதாரணமா நீங்க டூவீலர்ல தான் ஆஃபீஸ் வர்றீங்க..  திடீர்னு உங்களுக்கு எதாவது ரிஸ்க் ஆயிப்போச்சின்னு வைங்க..உங்க குடும்பத்த யாரு பாத்துக்குறது? கடனெல்லாம் அவங்க எப்படி சமாளிப்பாங்க?” என்றார்.

“அதுக்கு என்ன சார் பண்றது.. நம்ம கையில என்ன இருக்கு” என்றேன்

“என்ன இப்டி சொல்றீங்க.. நம்ம இல்லைன்னாலும் நம்ம குடும்பத்த நாமதான் பாத்துக்கனும்”

“சரிசார்… இப்ப என்ன சொல்ல வர்றீங்க?” என்றேன்.

“அஞ்சே அஞ்சி வருஷம் ப்ரீமியம் மட்டும் கட்டுனா போதும். உங்க லைஃப்டைம் ஃபுல்லா கவர் ஆகுறமாதிரி ஒரு புது பாலிஸி வந்துருக்கு” என்றார்.

எனக்கு உடனே ஒரு மாதிரி ஆகிவிட்டது.  “ஓ அப்டியா சார்… ஆனா நா ஏற்கனவே ரெண்டு பாலிஸி போட்டுருக்கேன் சார்.. இப்ப புது பாலிஸி எதுவும் எடுக்குற ஐடியா இல்லை” என்றேன்.

சிறிய ஏமாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு “சரிசரி.. ஆனா கொஞ்சம் நல்லா யோசிச்சிப்பாருங்க.. எவ்வளவு அதிகமா காப்பீடு இருக்கோ அவ்வளவும் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் சேஃப்டிதானே.. இப்ப ஒண்ணும் அவசரம் இல்லை. ஆனா நீங்க நம்மகிட்ட ஒரு பாலிஸி கண்டிப்பா எடுத்துக்கனும் தம்பி” என்றார்.

“சரிங்க.. நா யோசிச்சிப் பாக்குறேன்” என்று கூறிவிட்டுக் கிளம்பினேன்.

9

கடந்த நான்கு நாட்களில் அவர் என்னோடு இன்முகத்துடன் பழகியதை ஒருமுறை ஓட்டிப்பார்த்தேன். இதற்குத் தானா இவ்வளவும் என்று அவர்மீது நான் வைத்திருந்த மொத்த மரியாதையும் கரைந்துவிட்டது. என்னுடன் சிரித்துப்பழகிய இவரைவிட பேசாமல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தவர்கள் எவ்வளவோமேல் என்று தோன்றியது.  தொடர்ந்த நாட்களில் அவர் என்னுடன் பேசுவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார்.

அனைவரும் டாம் & ஜெர்ரி பார்த்திருப்பீர்கள். அதில் ஃப்ரிட்ஜை திறந்தது பார்க்கும்போது ஜெர்ரி எலிக்கு கண்ணில்படும் அனைத்து ஐட்டங்களும் cheese துண்டுகளாகத் தெரியும். டாம் பூனைக்கு ஜெர்ரியைப் பார்க்கும்போதெல்லாம் சாப்பிட உணவு தயாராக இருப்பதைப்போலத் தோன்றும். அதைப் போலத்தான் இந்த சில ஏஜெண்டுகளுக்கும் கண்ணில் படுபவர்களெல்லாம் மனிதர்களாக அல்லாமல் ஒவ்வொரு பாலிஸிகளாகத் தெரிவார்கள் போல என  தோன்றியது எனக்கு.

நிறைய பேர் பணம் சம்பாதிக்க நிறைய யுக்திகளைக் கையாளுகின்றனர். இலவசங்களை கொடுத்து இழுக்கின்றனர். ஆசைகாட்டி நம்மை அழைக்கின்றனர். விதவிதமாக ஏமாற்றுகின்றனர். நாமும் ஏமாறுகிறோம். அவர்களின் உண்மையான பழகுதலின் நோக்கம் தெரியாமல், நமக்குள்ளேயே கலந்திருந்து போலியாகப் பழகி கடைசியில் வியாபாரமுகம் காட்டும்போது தான் நமக்கு வலிக்கிறது. இவ்வளவு அன்பாக பேசியது கேவலம் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் தானா?

செயற்கை அன்பு செயற்கை பாசம் செயற்கை சிரிப்பு இவற்றை உற்பத்தி செய்து உலவ விடுவதில் இவர்களுக்கே அதிகபங்கு உண்டு. உங்கள் தொழில் நீங்கள் செய்கிறீர்கள். அதில் தப்பில்லை. ஆனால் மற்றவர்களுடன் பழகுவதற்கு இந்த ஒரு காரணத்தை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு பழகாதீர்கள். பணம் மதிப்பிழக்கும்போது மனிதம் மட்டுமே எஞ்சி நிற்கும்.

-முத்துசிவா

Likes(5)Dislikes(1)
Share
Aug 152014
 

Scared-Face

பயப்படாத மனிதர்கள் என்று யாரும் இந்த உலகில் இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைக் கண்டால் பயம். சிலருக்கு பேய் என்றால் பயம், சிலருக்கு இருட்டு என்றால் பயம், சிலருக்கு பாம்பைக் கண்டால் பயம், சிலருக்கு தனிமை என்றால் பயம், சிலருக்கு மனைவியைக் கண்டால் பயம், இன்னும் ஏன், சில ஹீரோயின்களுக்கு கரப்பாம்பூச்சிகளைக் கண்டால் கூட பயம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றிற்கு பயந்துகொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஏன் திடீரென பயத்தைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறோம் என்றால், ஒவ்வொரு மனிதனின் முன்னேற்றத்திற்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடையாக இருப்பது அவரவரின் பயமே. புது முயற்சிகளை நம்மில் பலர் எடுக்க  தயங்குவதற்கும், இந்த பயம் முக்கியக் காரணமாக இருக்கிறது. நம்மிடமிருக்கும் பயம் என்ற உணர்வானது நாம் செய்யும் சில செயல்களை தன்வசம் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்கின்றது. ஒரு மனிதனுக்கு ஏற்படும் கோபத்தின் முதற்படி இந்த பயமே.

ஒரு விஷயத்தைக் கண்டு நாம் அதிகம் பயப்படுகின்றோம் என்றால், அந்த விஷயத்தை நாம் அதிகம் சந்தித்ததில்லை, நமக்கு அதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றே அர்த்தம். மிக எளிமையான ஒரு உதாரணத்துடன் ஆரம்பிப்போம்.

நம்மால் தரையில் 5 அடி தூரம் வரை தாண்ட முடியும். அதே, 30 அடுக்கு மாடி கட்டிடங்கள் இரண்டு அருகருகே உள்ளன. இரண்டிற்கும் இடையில் உள்ள இடைவெளி வெறும் மூண்றடி தான். இப்போது நம்மை முதல் கட்டிடத்தின் உச்சியிலிருந்து இன்னொன்றிற்குத் தாண்டச் சொன்னால் செய்வோமா?  இங்கு நம்மைத் தடுப்பது எது? தரையில் நம்மால் 5 அடி தாண்ட முடியும் என்ற நம்பிக்கையை ஆகாயத்தில் வெறும் மூன்றடி கூட தாண்ட முடியாத படி உடைத்தது எது? தவறி கீழே விழுந்தாலும் விழுந்து விடுவோம் என்ற பயமே.

ஒரு சின்ன கதை. ஒரு முறை ஒரு அரசர் தன் அரசவையில் ஒரு மிகப்பெரிய பாராங்கல்லை வைத்துவிட்டு, இதை யார் தூக்குகின்றனரோ அவருக்கு நூறு பொற்காசுகள் வழங்கப்படும். அப்படி தூக்க முயன்று தோற்றுவிட்டால் மூன்று கசையடி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். அனைவரும் அந்தக் கல்லின் அளவைப் பார்த்து பயந்து “இவ்வளவு பெரிய கல்லை எப்படி நம்மால் தூக்க முடியும்?” என்று போட்டியில் கலந்து கொள்ளவே வரவில்லை.

பல நாட்களாக கல் அப்படியே இருந்தது. அப்போது வந்தான் ஒரு இளைஞன் நான் தூக்குகிறேன் என்று. அவனைப் பார்த்து வியந்த அரசர் “இளைஞனே உன்னைப் பார்த்தால் அவ்வளவு பலமுள்ளவனாகவும் தெரியவில்லை. அந்தக் கல்லின் அளவைப் பார்த்தாயா? அதை உன்னால் தூக்க முடியும் என்று நம்புகிறாயா இங்கு யாருக்குமில்லாத தைரியம் உனக்கு மட்டும் எப்படி வந்தது?” என்றார். அதற்கு அந்த இளைஞன் “என் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது அரசே. என்னால் இந்தக் கல்லை தூக்க முடியும் என்று நம்புகிறேன். அப்படியே முடியாவிட்டாலும் என்ன, மூன்று கசையடிதானே, வாங்கிக் கொள்கிறேன்” என்றான்.

சரி ஆகட்டும் பாராங்கல்லை தூக்கிவிட்டு பொற்காசுகளை வாங்கிக்கொள் அல்லது கசையடி உனக்காக காத்திருக்கிறது என்றார் அரசர். அனைவரும் கூடி நிற்க இளைஞன் அந்தப் பாராங்கல்லை நெருங்கி இரண்டு புறமும் கைவைத்து முழுபலத்தையும் கொண்டுதூக்க, கல் சற்று கூட கனமில்லாமல் இருக்க, டக்கென்று அதை தலைக்கு மேல் தூக்கினான். அப்போது தான் தெரிந்தது அது பாராங்கல் அல்ல வெறும் பாராங்கல் போல வடிவமைக்கப்பட்ட ஒரு பஞ்சுமூட்டை என்று.

மக்கள் அனைவரும் ஆச்சர்யமாகப் பார்க்க, மன்னர் கைதட்டி சிரித்துக் கொண்டே கீழிறங்கிவந்து இளைஞனைப் பாராட்டினார். “எனது நாட்டுமக்களின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் சோதித்துப்பார்க்கவே இப்படிச் செய்தேன். கல்லின் அளவை பார்த்து பயந்து நம் நாட்டு மக்கள் ஒருவர் கூட இதை தூக்க முயற்சி கூட செய்து பார்க்கவில்லை. நல்ல வேளை நீயாவது தைரியமாக வந்தாயே” என்று கூறி நூறு பொற்காசுகளை அந்த இளைஞனுக்கு அளித்தார்.

நம்மிடமிருக்கும் பயமும் இந்தப் பாராங்கல் போலத்தான். நாம் அதனை முயற்சி செய்யாதவரை அது நம்மை பயமுறுத்திக் கொண்டுதான் இருக்கும். ஒரு முறை அதனை சந்தித்துப் பாருங்கள். அப்படி பயத்தை எதிர்கொள்ளும் போது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றே ஒன்று அதனால் ஏற்படும் மிக மோசமான விளைவு என்னவாக இருக்கும்? அதனை நம்மால் எதிர்கொள்ள முடியுமா என்பதுவேயாகும். மேலே கூறப்பட்ட சம்பவத்தில், ஒருவேளை இளைஞன் கல்லைத் தூக்கவில்லை என்றால் அவனுக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான விளைவு என்றால் அந்த மூன்று கசையடி மட்டுமே.

பயம் என்ற உணர்வு கண்டிப்பாக மனிதனுக்கு தேவை. ஆனால் எதற்காகப் பயப்படவேண்டும் என்ற ஒன்றை மட்டும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் பயப்படும் ஒரு விஷயம் நாம் பயப்பட வேண்டிய அளவுக்கு தகுதியுடைது தானா என்பதை முதலில் ஆராய வேண்டும். உயிர் பயம் (Fear of Death) என்பதும், வாழ்வாதாரத்தை பாதிக்கும் பயமும் (Fear of Survival) எல்லா மனிதர்களுக்குமுள்ள பொதுவான ஒரு பய உணர்வு. மற்றவை அனைத்தும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது. பெரும்பாலான சமயங்களில் நமக்குள் ஏற்படும் பயத்திற்கு நாமே காரணமாகின்றோம்.

பள்ளியில் படிக்கும் போது சில ஆசிரியர்களைப் பார்த்தால் பயப்படுவோம். ஏன் பயப்படுகிறோம்? அவர் அதிகம் நம்மை கேள்வி கேட்பார். கேள்வி கேட்டால் என்ன, பதில் சொன்னால் விட்டு விடுவாரல்லவா? ஆனால் நமக்கு பதில் தெரியாது எனவே அவரைப் பார்த்து நமக்கு பயம் வருகிறது. இங்கு தவறு யார் மேல் இருக்கிறது? கேள்வி கேட்கும் ஆசிரியர் மீதா இல்லை பதில் தெரியாத நம் மீதா?

வளரும்போதுள்ள அதே பழக்கமே வளர்ந்து ஒரிடத்தில் வேலைக்கு செல்லும் போதும் ஏற்படுகிறது. சிலருக்கு அவர்களது மேலதிகாரியைப் பார்த்தால் பயம். ஏன் பயப்படவேண்டும் அவரும் நம்மைப் போல் ஒருவர் ஆனால் நமக்கு முன்னால் சேர்ந்த ஒருவர். அவ்வளவு தான் வித்யாசம். எதனால் பயம் வருகிறது? அவர் கொடுத்த வேலயை நாம் முடிக்காமல் இருக்கலாம். அல்லது நமக்குத் தெரியாத எதோ ஒன்றை அவர் கேட்டுவிடுவார் என்ற பயமாக இருக்கலாம். இங்கும் யார் மீது தவறு?

பெரும்பாலான இடங்களில் நாம் நம்மைச் சரிபடுத்திக் கொள்வதன் மூலமும், நம்மை பயமுறுத்தும் விஷயங்களைப் பற்றிய நம் அறிவைப் பலப்படுத்துவதன் மூலமுமே பல பய உணர்வுகளைத் தகர்த்தெரியலாம். பயத்தை துணிந்து எதிர்கொள்ளுங்கள். மேலே கூறியது போல ஒரு சிலவற்றைத் தவிற பெரும்பாலானவை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட பயங்கள். அவற்றை நாமே உடைத்தெரிவோம்.

ஆங்கிலத்தில் பயத்திற்கு (FEAR) இரண்டு அர்த்தம் உண்டென்று கூறுவர்.

          1)  FEAR – FORGET EVERYTHING AND RUN 

          2)  FEAR – FACE EVERYTHING AND RISE.

இவை இரண்டில் பயத்தை எவ்வாறு கையாளுகிறோம் என்பது நம் கையிலேயே உள்ளது.

கடைசியாக, “வாழ்க்கையில் பயம் இருக்கலாம். ஆனால் பயமே வாழ்க்கை ஆயிடக்கூடாது”

– முத்துசிவா

 

Likes(2)Dislikes(0)
Share
May 142014
 

6

உலகில் மனிதர்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களும், பார்வைகளும், செயல்களும்,  இடத்திற்கு இடம் வேறுபட்டுக்கொண்டே இருக்கின்றது. மனிதர்கள் அனைவருக்குமே பிடித்த பொதுவான விஷயங்கள் என்று பார்க்கப்போனால், ஒரு சில விஷயங்கள் மட்டுமே. அவற்றில் ஒன்றே இந்தப் பாராட்டு.

புகழ்ச்சி பிடிக்காத மனிதர்கள் என்று எவருமே கிடையாது. முகத்திற்கு நேராக மறுத்தாலும் உள்ளுக்குள் மனது மற்றவர்கள் நம்மைப் புகழ்வதை விரும்புகிறது. மற்றவர்கள் செய்யும் செயல் மிகச்சிறியதாக இருப்பினும் அதனை உணர்ந்து பாராட்டும் பண்பு அனைவருக்கும் இருப்பதில்லை.

“கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என கீதை உரைத்தாலும், இரண்டாவது முறையாக நம் கடமையைச் செய்ய, முதல் முறை செய்த கடமைக்கு ஒரு சிறிய பாராட்டு தேவைப்படுகின்றது. இந்த பாராட்டு என்பது மிகப்பெரிய பரிசாகவோ,  இல்லை பணமாகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை. “நன்றி” என்ற ஒரு  சொல்லே போதுமானது. இந்த  வார்த்தையின் தாக்கம் மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது பெரிதாகத்  தெரியவில்லை  என்றாலும் சற்று உள்ளிறங்கிப் பார்ப்போமேயானால், மனிதர்கள் இந்த வார்த்தைக்கு  எவ்வளவு ஆசைப்படுகின்றனர் என்று விளங்கும்.

பெரிதாக ஒன்றும் இல்லை. நாம் ஒரு சாலையில் செல்லும் போது எதிரே வந்து கொண்டிருப்பவர், தவறுதலாக கையில் வைத்திருக்கும் புத்தகத்தை கீழே தவற விட, அது நம் காலடியில் வந்து விழுகிறது. உடனே அதனை

நாம் எடுத்துக் கொடுக்க, அவர் நமக்கு “ரொம்ப நன்றிங்க” என்று சொல்கிறார். உடனே அதற்கு நம் பதில்  “அட பரவால்லீங்க இதுல என்ன இருக்கு?”.  அதாவது நாம் செய்த உதவிக்கு நன்றி தேவையில்லை..  நன்றிக்காக நாம் அதைச் செய்யவில்லை, என்று பொருள் படும்படிக் கூறி அவரை அனுப்புகிறோம். அதே  மனிதர் நாம் அந்த புத்தகத்தைக் கீழிருந்து எடுத்துக் கொடுக்கும் போது பதில் எதுவும் கூறாமல் புத்தகத்தை  வாங்கிக்கொண்டு கிளம்புவாரேயானால் நாம் “இதுல என்ன இருக்கு” என்றா நினைப்போம். “கீழக்கிடந்து  புத்தகத்த எடுத்து கொடுத்துருக்கேன், ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம போகுது பாரு” என்று  திட்டுவோமா இல்லையா?  நாம் செய்த மிகச்சிறிய உதவிக்கு கூட நன்றி என்ற ஒரு வார்த்தையை  எதிர்பார்க்கிறோம். அதே போலத்தான் ஒவ்வொருவரும். அவர்கள் செய்யும் செயல்களுக்கு அதற்கேற்றார் போல் அங்கீகாரமாய் ஏதையாவது எதிர்பார்க்கின்றனர்.

பல உறவுகளில் இன்று பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் அங்கீகாரமோ, பாராட்டுதலோ மிக அவசியமாக  இருக்கிறது. உதாரணத்திற்கு நம்மில் எத்தனை பேர், நம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு இன்று சாப்பாடு நன்றாக இருந்தது எனக் கூறுகிறோம்?  இது ஒரு சின்ன விஷயம் தான். ஆனால் அந்தப் பாராட்டை பெறுபவருக்கு  அது ஒரு ஊக்க டானிக்காக இருக்கும். பொதுவாழ்க்கையைக் காட்டிலும் பெரும்பாலும் பணி சார்ந்த  இடங்களிலேயே இந்த பாராட்டுதல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு வேலையை எவ்வளவு கடினமாக உழைத்து செய்தாலும், அந்த வேலையைச் செய்ததற்காக நான்கு பேருக்கு  மத்தியில் நம்மை ஒருவர் பாராட்டும்பொழுது, அந்த வேலையைச் செய்ய நாம் பட்ட துன்பங்கள் அனைத்தும்  மறைந்து போகின்றன. அதே போல் அவ்வளவு கடினமாக உழைத்தும், அந்த வேலையை முடித்தற்கான ஒரு  சிறிய பாராட்டு கூட கிடைக்கவில்லை  என்றால் ஏற்படும் மன உழைச்சல் என்ன என்பதையும் நாம் நன்றாக  அறிவோம்.

வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஒரு சிறு ஆய்வு முடிவு என்ன சொல்கின்றது என பார்ப்போம். என்பது சதவீத பணியாளர்கள், மேல் அதிகாரிகள் தாங்கள் செய்த பணிகளை அங்கீகரித்துப் பாராட்டும்போது மட்டும் மிகவும் உற்சாகமாகவும் கடினமாகவும் உழைப்பதாகவும், மீதமுள்ள இருபது சதவிகிதத்திற்கும்  குறைவான பணியாளர்களே மேலதிகாரிகள் வேலையில் குறை சொல்லும் போதோ அல்லது பணிநீக்கம் செய்யப்படுவோம் என்ற பயத்திலேயோ கடினமாக உழைப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

இன்னொரு ஆய்வில், ஐம்பது  சதவீதத்திற்கும் அதிகாமான பணியாளர்கள் ஒரே அலுவலகத்தில் நீடித்திருக்கக் காரணம் மேலதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் முறையான பாராட்டும், அங்கீகாரமுமே என்றும் வேறு அலுவலகத்திற்கு மாறும் பணியாளர்களோ, முந்தைய அலுவலகத்தில் பணிக்குத் தகுந்த  அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற காரணத்தை முக்கியமாகக் கூறியிருக்கின்றனராம்.

மனிதனுக்குள் காணப்படும் மிக உயரிய பண்புகளில் இந்த பாராட்டுதலும் ஒன்று. சிலருக்கு மற்றவர்களைப் பாராட்டுவது என்பதே தெரியாது. மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும், ஆனால்  நாம் யாரையும் பாராட்டி விடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள். ஏனென்றால் மற்றவர்களை பாராட்டினால் இவர்களின் கவுரவம்  பாதிக்கப்படும் என்றும் பாராட்டு பெருபவர்களுக்கு தலைக்கனம் கூடிவிடும் என்றும் கருதுவார்கள்.

ஒரு விதை தானாக விருட்சம் விட்டு வெளியே  வருகிறது என்றால், அதன் வளர்ச்சியைத் தூண்டும் தண்ணீர் போன்றதே இந்தப் பாராட்டு. ஒருவரின் செயலைப் பாராட்டுவதின் மூலம் அந்த செயல் மென்மேலும் சிறக்குமே தவிர எக்காரணம் கொண்டும்  மங்கிப்போகாது.

அலுவலகத்தில் சக பணியாளர்களை பாராட்டுவதற்கும் அங்கீகரிப்பதற்கும் சில வழிமுறைகள்:

1. நம் ஒவ்வொரு பணியாளர்களையும் நம்மிடமிருக்கும் விலைமதிப்பில்லாத சொத்தாக மதிக்கவேண்டும்.  ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்துகள் எதுவாக இருந்தாலும், முதலில் அதனை முழுவதுமாகக் “திறந்த மனதோடு (OPEN MIND)” கேட்பதே அவர்களுக்குக் கிடைக்கும் முதல் மற்றும் பெரிய அங்கீகாரம்.

2. சக ஊழியர்கள் செய்யும் ஒவ்வொரு சிறந்த வேலைக்கும் அவ்வப்போது சிறு பரிசுகளை வழங்குவது நல்லது. அது அவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற ஊழியர்களுக்கு இடையிலும் ஒரு ஆரோக்கியமான  போட்டியாக அமையும்.

congratulations

3. அவ்வப்போது சக ஊழியர்களுக்கு உணவு விருந்தளித்து ஆச்சர்யப்  படுத்துங்கள்.

4. வெற்றிகளைக் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். சிறு விஷயமாக இருந்தாலும் அதனைக் கொண்டாடுவது, அதைவிட மிகப் பெரிய வெற்றிகளை அடைவதற்கு வித்தாக அமையும்.

5. பாராட்டும் பொழுது குறைகள் கூறுவதை தவிருங்கள். “நீ இந்த வேலையை நன்றாக செய்திருக்கிறாய்.. ஆனால் இப்படி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்” என்று ஒருவரிடம் கூறும் பொழுது பாராட்டியதற்கான அர்த்தமே இல்லாமல் போகிறது. முடிந்த வரை பாராட்டும் பொழுது ஆனால் என்ற  வார்த்தையை தவிருங்கள். ஒரு வாக்கியத்தில் ஆனால் என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் பொழுது அதற்கு  முன் கூறிய வார்த்தைகள் மதிப்பிழக்கின்றன.

6. அப்படி வேறு வழியே இல்லை, ஒருவர் தவறு அதிகம் செய்கிறார். அவரிடம் பேசி அவர் தவறை எடுத்துச் சொல்ல வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால், அவரை பத்து பேர் முன் நிறுத்திவைத்து, அந்த  தவறை சுட்டிக்காட்டாதீர்கள். அவரைத் தனியாக அழைத்து, உங்கள் கருத்தை அவருக்கு புரியும்படி சொல்லுங்கள்.

             “PRAISE IN PUBLIC, PUNISH WHEN ALONE” என்பார்கள்.

அதாவது, எல்லோருக்கும் முன் ஒருவரைப் பாராட்டலாம், ஆனால், எவர் முன்பும் ஒருவரை திட்டாமல் இருப்பது என்பது ஒரு பெரிய நற்பண்பாக இருக்கும்.

சிறு சிறு விஷயங்களைக்கூட பாராட்ட ஆரம்பிக்கும் போது, நமக்குள் இருக்கும் பொறாமை குணங்களும் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்து நட்புறவுகள் வலுப்பெறுகின்றன.

கடைசியாக ஒரு விஷயம். பாராட்டும்போது, வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல், பெருந்தன்மையோடும், நல்ல மனதோடும், உண்மையாகவும் பாராட்டுங்கள்.

Likes(1)Dislikes(0)
Share
Mar 012014
 

சமரசம் (compromises)

சமரசம் (compromises). நம்முடிய வாழ்வில் அமைதிக்காகவும் சகமனிதர்களின் சந்தோஷங்களுக்காகவும் நம்முடன் நாமே செய்துகொள்ளும் ஒரு உடன்பாடு. ஆனால் ஓவ்வொரு மனிதனின் வாழ்விலும் இந்த சமரசம் என்ற சொல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்வதே மகிழ்ச்சியை தருவதுபோல் தோன்றினாலும், ஒவ்வொருவர் வாழ்விலும் அதன் உண்மையான தாக்கம் என்ன? வாங்க கொஞ்சம் உள்ளே போய் பாக்கலாம்.

இந்த சமரசம் செய்துகொள்ளுதல் (compromises) என்பது என்ன? தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ நமக்கு விருப்பம் அல்லாத ஒன்றை ஏற்றுக் கொள்கிறோம். நாளைடைவில் அதன் கூடவே வாழக் கற்றுக்கொண்டும் விடுகிறோம். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? ஒரு சிறிய உதாரணம். நாம் இப்பொழுது என்ன வேலை செய்து கொண்டிருக்கின்றோம்? நமக்கு ஒரு 15 வயது இருக்கும் பொழுது இந்த வேலைதான் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டோமா? நூற்றுக்கு 90 சதவீத பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். நம்மில் சிலர் மருத்துவர்களாக ஆசைப்பட்டிருக்கலாம், சிலர் வக்கீல்களாக ஆசைப்பட்டிருக்கலாம். சிலர் நடிகர்களாக ஆசைப்பட்டிருக்கலாம், ஏன், சிலர் அரசியல்வாதிகளாகக் கூட ஆசைப்பட்டிருக்கலாம்.

ஆனால் எதோ ஒரு சூழலில், சில நிர்பந்தங்களால் நாம்  இப்பொழுது செய்யும் வேலைக்கான பாதையை தேர்ந்தெடுத்திருக்கின்றோம். கொஞ்சம் கொஞ்சமாக அதிலேயே பழகியும் விடுகிறோம். இப்பொழுது சிறு வயதில் உண்மையிலேயே நாம் என்னவாக ஆக விரும்பினோம் என்பதையே மறந்து எதோ ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம். காரணம் நம் வாழ்க்கையின் எதோ ஒரு சூழலில் நாம் செய்துகொண்ட compromise.

இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமானால், உதாரணமாக நான் ஒரு மருத்துவராக ஆசைப்படுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராத விதமாக என்னுடைய மதிப்பெண், மருத்துவப் படிப்பில் சேர போதுமானதாக இல்லை. உடனே நான் என்ன செய்ய வேண்டும்? ஒன்று நான் முன்னதாகவே ஒழுங்காகப் படித்திருக்க வேண்டும். அல்லது ஒரு வருடம் காத்திருந்து மறுதேர்வெழுதி  மருத்துவராக வேண்டும். இதை இரண்டையுமே செய்யாமல் மருத்துவர் ஆகவேண்டும் என்ற என்னுடைய கனவை விட்டுக்கொடுத்து பொறியியல் என்ற ஒரு பிரிவுக்குள் நுழைகின்றேன். இந்த இடத்தில் நான் செய்து கொண்ட சமரசமே என்னுடையை வாழ்வை திசைமாற்றியதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  அன்றிலிருந்து என் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நான் அன்று செய்த அந்த சமரசமே காரணமாகவும் அமைகிறது.

இங்கே ஒரு கேள்வி எழழாம்..”நான் மருத்துவராக ஆசைப்பட்டேன். ஆனால் சூழ்நிலை காரணமாக வேறு துறைக்கு சென்றுவிட்டேன். அதனால் என்ன இந்த துறையிலேயே நன்றாகத்தான் சம்பாதிக்கிறேன். இதற்கு மேல் என்ன வேண்டும்?” என்று. சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாக விளங்கும். நமக்கு விருப்பமல்லாத ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அதில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு நம்மால் இந்த அளவு வெற்றிபெற முடிகிறதென்றால், நமக்கு பிடித்தமான ஒரு துறையையே தெரிவு செய்து நம் வாழ்க்கையை அமைத்திருந்தால் நம் வெற்றி எந்த அளவு இருக்கும் என்பதை யோசிக்க முடிகிறதா?

நமது ஊரில் ஒருவரைப் பார்த்தால் என்ன கேட்போம். “what are you doing?” அதாவது அவர் என்ன வேலை செய்கிறார் என்பதைத் தான் நாம் அவ்வாறு கேட்போம். ஆனால் சில வெளிநாடுகளில் “what you do for living” என்றே கேட்பார்கள். என்னைப் பொறுத்தவரை மிகப் பொருத்தமான கேள்வி இதுவே. வாழ்வாதாரத்திற்காக மட்டுமே நாம், நமக்குப் பிடிக்காத துறைகளில் இருக்கின்றோமே தவிற வேறொன்றுமில்லை. பெரும்பாலும், நாம் பணி செய்யும் துறை நமக்கு பிடித்த துறையாக இருப்பதில்லை.  எப்பொழுது நம்முடைய விரும்பிய துறையே நாம் பணி செய்யும் துறையாகவும் மாறுகின்றதோ அதன் பிறகு நம் வெற்றிக்கு அந்த வானமே எல்லை

சமரசத்தில் இரண்டு வகை இருக்கின்றது.

முதலாவது நன்மைக்கும் நன்மைக்கும் இடையே நடைபெறும் சமரசம் (Good vs Good compromise). உதாரணத்திற்கு நீங்கள் உங்களது பைக்கை 20,000 ரூபாய்க்கு விற்க ஆசைப்படுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஒருவர் அதனை 15000 ரூபாய்க்கு கேட்கின்றார். இறுதியில் இருவரும் 17500 க்கு ஒப்புக் கொள்கிறீர்கள். இதனை ஒரு சரிசமான பரிமாற்றம் என கூறலாம். இந்த பரிமாற்றத்தில் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. பெரிய லாபமும் இல்லை. இந்த வகையான சமரசங்களால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இரண்டவது ஒரு வகை உள்ளது. நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் சமரசம்  (Good Vs Bad compromise). இதனை கீழ்வரும் ஆங்கில வாசகம் ஒன்று எளிதாக விளக்குகின்றது.

If there is any compromise between food and poison death will be the winner. If there is a compromise between good and evil it is only evil that can profit

உதாரணமாக நமது இருசக்கர வாகனங்கள் பெட்ரோல் என்ற எரிபொருளில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மண்ணென்னையும் ஒரு எரிபொருள் தான். அதிலும் நமது வாகனங்கள் இயங்கும். ஆனால் விலைகுறைவு என்பதற்காக மண்ணென்னையை உபயோகிக்க ஆரம்பித்தோமேயானால் என்னவாகும்? 10 வருடம் இயங்கவேண்டிய நம் வாகனங்கள் 2 வருடத்தில் பழுதடைந்துவிடும். இந்த வகை சமரசம் பொதுவாக நீண்டகால பிரச்சினையாக மாறும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக நம் நாட்டில் சமூக அந்தஸ்து அல்லது சமூக பார்வை” என்பது மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. ஒரு மாணவன் விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பினால், சிறு வயதிலிருந்தே அதில் ஈடுபட நேரிடலாம், ஆனால் நம் சமூகமோ, முதலில் படிப்பு, பின்னர் மற்றவை என்று அவனை சமரசப் படுத்தி விடுகிறது.

இது போன்று பல அன்றாட விஷயங்களில் நடைபெறும் சமரசங்களை நாம் காண்கிறோம். இவ்வாறு சமூக அந்தஸ்து காரணமாகவோ, பொருளாதாரத்தின் அடிப்படையிலோ, மற்ற சில காரணங்களினால் செய்துக் கொள்ளும் சமரசங்கள், நீண்டகால அடிப்படையில் சமரசம் ஆகிக்கொள்பவர் மனதில் ஒரு சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தியிருக்கும் என்பதுதான் உண்மை.

இறுதியாக நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு மனிதரைப் பற்றி இந்த பதிவுக்கு சம்பந்தமான சில விஷயங்களைக் கூறி முடிக்கின்றேன். ஜேம்ஸ் கேமரூன் என்பவரைப் பற்றி அனைவருக்குமே தெரியும். இன்றும் உலக அளவில் பெரும் வசூலை குவித்த முதல் இரண்டு படங்களை இயக்கியவர் இவரே. ஆனால் அவரைப் பற்றி சிலருக்குத் தெரிந்த பலருக்கு தெரியாத சில விஷயங்களை இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.

1990 களின் ஆரம்பத்தில் நீருக்கடியில் படம் பிடிக்கும் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அன்றைய சூழலில் இருந்த வசதிகளின் மூலம், சில கோணங்களில் மட்டுமே படம் பிடிக்க முடியும். நீருக்கடியில் வீடியோ கேமராக்களை எடுத்துக் கொண்டு நமக்கு தேவையான கோணங்களில் இயக்கி காட்சிகளை பதிவு செய்வது, அன்று பெரும் சவாலான ஒரு விஷயமாக விளங்கியது. தனது டைட்டானிக் படத்திற்குத் தேவையான சில காட்சிகளை எடுக்க அப்போதிருந்த வசதிகள் போதவில்லை என்பதை கேமரூன் உணர்ந்திருந்தார். உடனே தனக்கு தேவையான வசதி இல்லை என்றவுடன் சமரசம் செய்துகொண்டு இருக்கின்ற வசதியை வைத்துக் கொண்டு அந்த திரைப்படத்தை எடுத்துவிடவில்லை. அவருக்குத் தேவையான வசதிகளை அவரே  உருவாக்கிக் கொண்டார்.

அவரும் அவரது சகோதரரும் இணைந்து நீருக்கடியில் கேமராக்களை எடுத்துக் கொண்டு, வெகு இலகுவாக தேவையான எந்த கோணத்திலும் இயக்கும் படியான ஒரு இயந்திரத்தை உருவாக்கி அதனை அமெரிக்காவில் பதிவும் செய்து அதன் பின்னரே டைட்டானிக் உருவாக்கதில் ஈடுபட்டிருக்கின்றனர். (Under water dolly – US patent No: 4,996,938)

அந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றி், வெளியாகி 19 வருடங்கள் ஆன பின்னரும் இன்றும் மற்ற எந்த திரைப்படத்தாலும் நெருங்க முடியாத அளவு வசூல் சாதனை படைத்து, இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கே இப்படி என்றால் முதலிடத்தில் உள்ள அவதார் திரைப்படத்தை பற்றி கூறினால் என்ன மனிதர் இவர் என்று தோன்றும். அவதார் திரைப்பட கதையை உருவாக்கி தேவையான தொழில் நுட்ப வசதிகள் இல்லாததால் 10 வருடம் காத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.அவதார் திரைப்படத்தின் கதை ”பேண்டூரா” என்ற ஒரு கிரகத்தில் வசிக்கும் ”நாவி” இன மக்களை சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. நாவி இனத்தவர்கள் நமக்கு புரியாதது போல ஒரு மொழி பேசுகின்றனர் அல்லவா?  அது எதோ புரியாத வார்த்தைகளை வைத்து எழுதப்பட்டது அல்ல. அது ஜேம்ஸ் கேமரூனால் அவதார் திரைப்படத்திற்காக புதிதாக உருவாக்கப்பட்ட, ஆயிரம் வார்த்தைகள் கொண்ட, இலக்கணத்துடன் கூடிய ஒரு புதிய மொழி. நாவி இனத்தவர் பேச ஒரு மொழி வேண்டும். ஆனால் அது பூமியில் பேசப்படும் எந்த மொழிகளுடனும் ஒத்துப் போகக் கூடாது. விளைவுதான் அந்த புதிய மொழியின் உருவாக்கம்.

அந்தப் படத்தில் தொடர்புடைய நடிகர்கள் அனைவருக்கும் அந்த மொழியை கட்டாயமாக கற்பித்த பின்னரே படப்பிடிப்பை துவங்கியிருக்கின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எதோ புரியாத சில வார்த்தைகளை உபயோகித்திருந்தால் கூட நாம் பார்த்து தான் இருப்போம். ஆனால் அவருக்கு தேவையான ஒன்று கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு படி மேலே போய் ஒரு புதிய மொழியையே உருவாக்கியிருக்கின்றார். எங்குமே சமரசம் செய்துக் கொள்ளாமல், தனக்கு விருப்பான ஒரு விஷயத்தை அடைய எத்தனை தூரம் உறுதியாக நின்றதால், பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்றார்.

இதனை ஏன் கூறுகின்றேன் என்றால், சமரசம் செய்துகொள்வது சில இடங்களில் நன்மையை தந்தாலும், சமரசம் செய்துகொள்ளாமலிருப்பது பல இடங்களில், நீண்டகால அடிப்படையில் நன்மையை தரும். மாபெரும் வெற்றிகளைத் தரும். இந்த உலகத்தின் எந்த விஷயத்தை அடையவும் நமக்கு உரிமை உண்டு. அதற்குத் தேவையானவை சமரசம் இல்லாத தெளிவான நோக்கமும், கடின உழைப்பும் மட்டுமே.

Likes(1)Dislikes(0)
Share
Share
Share