Mar 142015
 

 

5

“அம்மா எனக்கு இந்த மாசம் பத்தாம் தேதிக்குள் பத்தாயிரம் ரூபாய் தா…… மாசாமாசம் சம்பளத்துல புடிச்சிக்கோ” என்று தலை சொரிந்தாள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் ரேணுகா. அவள் கேட்ட தொகை என் காதுகளில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் உடனே எழ, அவளை திரும்பி பார்த்தேன். பளிச்சென்ற வெள்ளை சிரிப்பு, கண்களில் நம்பிக்கை கலந்த ஏக்கத்துடன் கெஞ்சல் பார்வை …….”எதற்கு ரேணுகா இவ்வளோ பணம்? என்று கேட்டபடியே, அவள் பெண்ணிற்கு கல்யாணம் நிச்சயமானதோ அல்லது அரசின் ஏழைகளுக்கு மனை வழங்கும் திட்டத்தில் வீடு வாங்க வேண்டும் என்றாளே” அதற்காகவோ? என எண்ணங்கள் ஓட… “ஒண்ணுமில்லமா பையனை ‘ஐ ஸ்கூல்’ இங்க்லீஸ் மீடியத்துல படிக்க வைக்கலாம்னு இருக்கேன் மா…. நாலு எழுத்து படிக்க வெச்சா அவன் எங்களாட்டும் கஷ்ட பட வேணாம் பாரு” என்று அவள் சொன்னதும் அவள் தாய் பாசத்தையும் அதை விட மேலாக குழந்தையின் எதிர்காலத்தை பற்றிய பொறுபுணர்வையும் மெச்சினேன்.

டாக்டரிடம் சென்று வந்த தோழியின் உடல் நலத்தை பற்றி விசாரிக்க சென்றேன். ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டாலே இப்போது எப்படி இருக்கிறாளோ என்று மனம் நெகிழுந்தது. வாசற்கதவை திறந்த அவள் கணவன், அவள் உள்ளே இருக்கிறாள் என்று செய்கை செய்தார். சலியால் வீங்கிய முகத்துடன் ஜுரத்தால் நீர் ஒழுகும் கண்களுடன் கூகல் குருநாதாரிடம் கேள்வி வேள்வி செய்து கொண்டிருத்தாள். கோபத்துடன் அவளிடம் நான் வினவ “டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன். அவற்றின் ரசாயன தொகுப்பையும், செயல் படும் விதத்தையும், பக்க விளைவுகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்று ஆர்வம் ஏற்பட்டது” என்று நீட்டி முடக்கினாள். ஆர்வத்திற்காக தெரிந்து கொள்ளும் தோழியை பாராட்டுவதா அல்லது கடிந்து கொள்வதா தெரியவில்லை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என் செல்ல “செல்” சிணுங்கினாள். தெரியாத நம்பரை கண் சிமிட்டி காட்டினாள். தூக்கம் கலையாமலே சிடுசிடுப்புடன் “ஹலோ” என்றது தான் தாமதம், எதிர் முனையில் உற்சாகத்துடன் ஒரு ஆண் குரல் . “மேடம் நீங்கள் விஞ்ஞானமும் கணிதமும் வீட்டில் தனி பாடமும் கற்று தருகிறீர்களாமே? அதை பற்றி உங்களிடம் பேச வேண்டும்” என்றார். என்னிடம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் போட்டி தேர்விற்கு பயிற்சி எடுப்பது பற்றி கேள்வி பட்டிருக்கிறார், என்று நினைத்து உங்கள் குழந்தை +1 , +2 வா? எந்த தேர்வுக்கு தயார் படுத்த வேண்டும் என்று கேட்டேன்.

அவரின் பதிலை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. இல்லை மேடம் டியூஷன் எனக்கு தான். எனக்கு இப்போ 55 வயதாகிறது. பசங்களுக்கு கல்யாணம் பண்ணி விட்டேன். அந்த காலத்துல 10 வகுப்பு முடிச்சு வேலைக்கு சேர்ந்து விட்டேன். +2 தேர்ச்சி பெற்றால் என் ஓய்வூதியம் இரட்டிப்பு ஆகும். நீங்கள் உதவி செய்து என்னை “just pass” செய்ய வைத்தால் போதும் என்று கெஞ்சினார். இவரிடத்தில் கற்பதற்கான ஆர்வமோ பொறுப்புணர்ச்சியோ இல்லை. ஏதோ படித்தால் பணம் கிடைக்கும் என்ற சபலம் மட்டுமே இருந்தது.

நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வேத மந்திரங்கள் உபனிட ஸ்லோகங்கள் ராமாயணம் பாகவதம் போன்ற பல்வேறு ஆன்மீக நூல்கள் கற்பிக்கப்பத்கின்றன. அவ்வகுப்புகளுக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு சில அதிகாரிகள், ராக்கெட் மற்றும் ஏவுகணை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சில விஞ்ஞானிகள், கை தேர்ந்த மருத்துவ நிபுணர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் இவர்களின் எண்ணிக்கை முப்பதை தொடும். நன்றாக சம்பாதித்து பெயரும் புகழும் அடைந்த இவர்கள் ஒரு ஆர்வத்திற்காக கற்றுக்கொள்கிறார்கள் என்று தோன்றவில்லை. அவர்களின் ஈடுபாடும் புலமை பெற அவர்கள் முயற்சியும் கண்டு நான் எப்போதும் வியந்ததுண்டு.

இந்த துறையில் முதிர்ச்சி பெற்றால் அவர்களுக்கு சம்பள உயர்வோ உயர் பதவியோ கிடைக்கப்போவதில்லை. மாறாக விடுமுறை நாட்களில் ஓய்வு எடுக்காமல் நேரத்தையும் பணத்தையும் எதற்காக செலவிடுகிறார்கள்? அவ்வாறு ஒரு கலை கற்றால் அது இனிமையான இசையோ, இன்சுவை படைக்கும் சமையலோ, ஓவியமோ, ஒய்யார அழகுடன் இருக்கும் ஆடை செய்தாலோ மனத்திற்கு ஒரு நிறைவு கிடைக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஆக மொத்தம் “கற்றல் எதற்காக “? என்றும் பார்த்தால் நமக்கு பல்வேறு காரணங்கள் புலப்படுகின்றன.

நல்ல எதிர்காலம் அமைய குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள் , தகவல் சேர்க்கும் ஆர்வத்தில் படிக்கிறார்கள் சிலர். கருத்து கழன்சியங்கள் ஆகிறார்கள் சிலர், விருப்பு வெறுப்புகளை பின்னுக்கு தள்ளி பணம் சம்பாதிக்க பதவி உயர்வு பெற சிலர் படிக்கிறார்கள், உள்கடந்து நிற்கும் பூர்ணதுவத்தை உணர ஆனந்தத்தில் திளைக்க மிகவும் சிலர் ஈடுபாட்டுடன் கற்று பயில்கின்றனர். காரணம் எதுவானாலும் பிறந்தது முதல் இறக்கும் வரை கற்றல் என்பது ஒரு தொடர் பயணம் இதை SITUATIONAL LEARNING NEEDS (தேவைக்கேற்ப கற்றல்) என்கிறார்கள் கல்வி நிபுணர்கள்.

பிச்சை புகினும் கற்கை நன்று என்று எதை கற்க சொன்னார்கள் நம் ஆன்றோர்கள். கற்றதனால் ஆய பயன் என்கோல்” என்று நீங்களும் நானும் சிந்திப்போம் மீண்டும் சந்திப்போம்.

உங்கள் தோழி

பத்ம ரஞ்சனி

Likes(3)Dislikes(0)
Share
Jan 152015
 

Youth

இன்று விடுமுறை தினம். எனது மடிக்கணினியை எடுத்து ஈமெயில்களை பார்க்கத் தொடங்கினேன். எனது நண்பனிடமிருந்து ஒரு ஈமெயில். அதில் ஒரு கடவுளின் புகைப்படம். அதை ஒட்டி ஒரு ஆண்மீக கருத்து. கடைசியில் ஒரு செய்தி. “உங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டுமா, இதை உடனே 25 நண்பர்களுக்கு அனுப்புங்கள்”. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது, அந்த மெயிலை DELETE செய்துவிட்டு, முகப்புத்தகத்தில் வலம் வரத் தொடங்கினேன். அதில் ஒரு பதிவு “இந்த புகைப்படத்தை அடுத்த 10வினாடிகளுக்குள் ஷேர் செய்யாவிடில் துரதிர்ஷ்டம் வந்தடையும்” என்று இருந்தது.

இவை இரண்டையும் பார்த்த எனக்கு, சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம்  நினைவிற்கு வந்தது. பல வருடங்களுக்கு முன் ஒரு நாள் காலை எட்டு மணி. அன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். காரணம் எனது பள்ளியில் அன்று முதல் முறையாக ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கணினி கூடத்திற்கு அழைத்து செல்வதாய் இருந்தார்கள். கணினி என்பதே கேள்விப்படாத பல பள்ளிகள் இருக்கும்போது எங்கள் பள்ளி ஒரு கணினியை வாங்கி, ஒரு ஆசிரியரை பணி அமர்த்தி, ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினியை ஒரு பாடமாக அறிவித்திருந்தது.

முதல் நாள் கணினி அறையை நுழைய எல்லா மாணவர்களும் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். நானும் மிகுந்த சந்தோஷத்துடன், காலணிகளை கழற்றிவிட்டு, ஆவலுடன் உள்ளே செல்ல காத்திருந்தேன். எங்கள் பள்ளியில் கணினி அறை குளிர்சாதன வசதியுடன் இருந்த ஒரே அறை. அதுவரை படத்திலும், பாடத்திலும் மட்டுமே கணினியை பார்த்த எனக்கும் மற்ற மாணவர்களுக்கும் மிகவும் வியப்பு.

எங்கள் பெயரை “BASIC” என்ற ப்ரோகிராமில் டைப் செய்து அதை DOT MATRIX PRINTERஇல் பிரிண்ட் செய்ய வேண்டும். அதுதான் அன்றைய கணினி பயிற்சி வகுப்பு. அந்த பிரிண்டை எனது புத்தகத்தில் ஒட்டி வைத்து, வீட்டில் எனது பெற்றோர், உறவினர் என்று எல்லோரிடமும் காண்பித்து மகிழ்ந்தேன்.

அப்போது தபால்காரர் மணியடிக்க, அவரிடம் அந்த தபாலை பெறுவதற்கு வாசலுக்கு விரைந்தேன். அந்த தபாலில், இந்த உலகம் கூடிய விரைவில் அழிய இருக்கிறது, உடனே இந்த தபாலில் உள்ளது போல் 10தபால்கார்ட் செய்து நண்பர்களுக்கு அனுப்பும்படி எழுதியிருந்தது. இதை என் தந்தையிடம் கேட்டபோது, அவர் இது யாராவது வேலையில்லா விஷமிகளின் செயல், இதை பொருட்படுத்தாதே என்று அந்த கார்டை கிழித்துக் குப்பையில் போட்டார்.

அந்த பழைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டு இப்போது நடக்கும் நிகழ்வுகளையும் சிந்திக்க ஆரம்பித்தேன்.

நமக்கு தினமும் இது போன்ற பல தவறான மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகள் பல வருகிறது. சமூக வலைதளங்களில் பல நண்மைகளுக்கு இடையில் இது போன்ற பல பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. அவற்றில் கீழுள்ள சிலவற்றை அடிக்கடி பார்த்திருப்போம்.

1)   கைப்பேசி டவரின் அலைக்கற்றையினால் சிட்டுக்குருவிகள் இறந்துவிடும் என வரும் ஒரு தகவல். உண்மையில், துபாயில் எனது வீட்டருகே அடுத்தடுத்து 3 டவர்கள் உள்ளன. ஆனாலும் எங்கள் வீட்டருகே பல சிட்டுக்குருவிகளை அடிக்கடி காணமுடிகிறது.

2)   இன்னொரு தகவல் – பிரபல குளிர்பான நிறுவனம் பற்றியும் அதில் உள்ள உடல்கேடு குறித்தும் படித்திருப்போம். இதுவும் ஒரு வியாபார உக்தி, NEGATIVE PUBLICITY. சக்கரை அளவு மற்றும் பதப்படுத்தப்பட்ட பானம் என்று வேண்டுமானாலும் ஒதுக்கலாமே தவிர வதந்திகளுக்காக கூடாது. அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் கூட, அனைத்து வாயு குளிர்பானமும் கேடுதானே, ஏன் ஒரு நிறுவனத்தை மட்டும் குறை சொல்லவேண்டும்?

3)   இன்னொரு தலைசுற்ற வைக்கும் தகவல் – ஒரு அழகான, பிரம்மாண்டமான வீடு மற்றும் பல வித கோணங்களில் அந்த வீட்டின் உள்கட்டமைப்பின் புகைப்படம். இது பிரபல தொழிலதிபரின் வீடு என்றோ, வரி ஏய்ப்பு செய்த நடிகரின் வீடு என்றோ, ஒரு விளையாட்டு வீரரின் வீடு என்றோ வரும் தகவல்களை பார்த்திருப்போம்.

4)   சமீபத்து வரவாக, ஒரு பெண்ணின் புகைப்படத்தை போட்டு, இவர் வீட்டிற்குள் புகுந்து, சிலிண்டரை சோதனை செய்யும் அதிகாரி எனக்கூறி வீட்டில் உள்ள பொருள்களை சூரையாடி ஓடிவிடுகிறார் என வேகமாக பரவிய ஒரு பதிவு. அது உண்மையில்லை, யாரும் நம்பாதீர்கள், அந்த புகைப்படத்தில் உள்ளவர் என் சகோதரி தான் என்று ஒரு வாரம் கழித்து இன்னொரு பதிவு. நமக்கு இரண்டில் எது உண்மை எனத் தெரியாது. அப்படியிருக்கையில் நாம் ஷேர் செய்வது ஒருவேலை ஒரு நிரபராதியை தண்டித்து காயப்படுத்தலாம்.

இவைகளைப்போல் தினமும் நாம் பல தவறான செய்திகளைக் காண்கிறோம், ஷேர் செய்கிறோம். இதையெல்லாம் வேலையில்லாத விஷமிகளின் விலையாட்டாகவும், தவறான உள் நோக்கத்துடன் அனுப்புகிறார்கள் என்பதையும்புரிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும், இவ்வாறு நாம் ஷேர் மற்றும் லைக் செய்யும்போது, நமது PROFILE SECURITY SETTING குறைவாக இருந்தால், நமது புகைப்படம் மற்றும் நம் சொந்த விவரங்கள் அனைவருக்கும் தெரியவரும். இதனால் தேவையில்லாத பல இன்னல்களுக்கு ஆலாககூடும்.

இந்த புத்தாண்டு முதல் நாம் அனைவரும் ஒரு நல்ல தீர்மானம் எடுக்கலாமே? நமக்குத் தெரியாத செய்திகளை பரப்பாமல் இருப்போம்.

சமூக வலைதளங்கள், மற்ற தகவல் தொழில் நுட்ப கருவிகளை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுதிதினால் நமது சமுதாயமும், அடுத்த தலைமுறையினரும் பயன்பெறுவது உறுதி.

காந்தியடிகள் சொன்னதுபோல், நல்லதையே படிப்போம், நல்லதையே பகிர்வோம், நலமாக வாழ முற்படுவோம்.

–    ச.கார்த்திகேயன்

(துபாயிலிருந்து)

 

Likes(1)Dislikes(0)
Share
Share
Share