Dec 142015
 

Intro (800x498)

சுனாமிக்கு நிகரான  பேரிடராய் தமிழகத்தை வதம் செய்து சென்றுள்ளது கடந்த இரண்டு வார கனமழை. தமிழகமே, குறிப்பாக சென்னையும் கடலூரும் வெள்ளக்காடாய் சிக்கித் தவிக்க, இயற்கையின் கோரப்பிடியிலிருந்து மக்களை மீட்டெடுக்க மக்களே களம் இறங்கினர். எத்தனை கோடி பொருட்செலவில் நிவாரண பணிகள், எத்தனை கருணை இதயங்கள், பல மனிதர்கள் இறந்த சோகத்திலும் மனிதத்தன்மை இறக்கவில்லை என நிருபித்தனர். கலி முத்திவிட்டது, நல்லவர்கள் குறைந்துவிட்டனர் என்ற கூற்றெல்லாம் பொய்யானது.

வாட்ஸப்பில் சென்ற வாரம் வந்த ஒரு தகவல். வெள்ள நிவாரண பணிகளை செய்ய சென்ற ஒரு குழுவிடம், நிவாரணத்தை பெற்ற ஒருவர், “நீங்கள் யார், எந்த கட்சியை சேர்ந்தவர்கள், எந்த பின்னணியில் இந்த பணியை செய்கிறீர்கள்?” என கேட்கிறார்.

நிவாரண பணியில் ஈடுபட்ட ஒருவர் மிக அமைதியாக, “சார் பேருந்துகளில், ரயில்களில், பயணம் செய்கையில் ஒரு இளைஞர் குழு எப்போதும் கைபேசியை இயக்கிக் கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். சமூக அக்கறை இல்லாமல் எப்போதும் சமூக தளங்களிலும், வாட்ஸப்பிலும் அப்படி என்ன தான் செய்கிறீர்கள் என பெரியவர்கள் பலரும் வசைபாடும் அந்த இளைஞர் கூட்டத்தை சேர்ந்த சாதாரண மனிதர்கள் தான் நாங்கள். எந்த சமூக தளத்தை வைத்து எங்களை திட்டினார்களோ, அதன் மூலம் இன்று பல குழுக்களாக இணைந்து அவர்களுக்கே  வேலை செய்கிறோம்” என்றார்.

நமது B+ வாட்ஸப் குழுவும் இரண்டு முறை நிவாரணப்பணிகளை சமீபத்தில் மேற்கொண்டது. நாம் களப்பணி செய்ய ஈடுபட்டதே ஒரு ஆச்சரியமான செயல். சென்ற சனிக்கிழமை இரவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம் குழுவும் ஏதாவது செய்யாலாமா என எதேச்சையாகத் தான் விவாதித்தோம், அடுத்த நாளே சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தை தேர்வு செய்து, அங்குள்ள குடிசைப் பகுதிகளுக்கு நமது குழு பணியாற்றியது மறக்க முடியா அனுபவம்.

அதன் தொடர்ச்சியாக இந்த வாரமும் சென்னை ஷெனாய் நகரை அடுத்துள்ள பாரதிபுரத்திற்கும், அதிகளவில் பெரியளவில் தொண்டு செய்தோம்.

நமது B+ குழுவில் உள்ள வெளிநாட்டு இந்தியர்களும், களப்பணி செய்ய வர இயலாதவர்களும் பெருமளவில் பண உதவி செய்தனர் என்றால், நகரத்தில் இருந்தவர்களோ, பொருள்களை மக்களுக்கு விநியோகம் செய்யும் பணியை ஆற்றினர். குடும்பத்தை மறந்து, கொட்டும் மழையிலும், முழங்கால் வரையிலான சாக்கடை நீரில் நடந்தே, பல வீடுகளுக்கு சென்று கொண்டுவந்த பொருள்களை கொடுத்தோம்.

பொருள்களை வாங்கிய மக்கள் யாரென்று எங்களுக்கு தெரியாது, நாம் யாரென்று வாங்கியவர்களுக்கும் தெரியாது. அங்கு மனிதம் மட்டுமே மேலோங்கி நின்றது.

வாங்கியவர்கள் நம் குழுவிற்கு, நட்பும் இல்லை உறவும் இல்லை, ஆனாலும் முகம் தெரியாத அந்த மனிதர்களுக்கு செய்த சேவையில் எங்கள் அனைவருக்கும் மன நிம்மதி. எங்களைப் போன்றே லட்சக்கணக்கான குழுக்கள், கோடிக்கணக்கான  செலவில் பல நாட்டில் வாழும் தமிழர்களும், இந்தியர்களும் உதவி செய்தது கண்கூடானது. மக்களிடம் ஒரு பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ள சூழ்நிலை மழைக்குப் பின் அப்பட்டமாக தெரிகிறது.

Intro2 (800x473)

ஒரு புறம் இத்தகைய எழுச்சியைக் கண்டு மகிழ்ச்சி தோன்றினாலும், வேறு கண்ணோட்டத்திலும் இந்த சூழ்நிலையை சற்று பார்க்க தோன்றுகிறது. சென்னையும், கடலோரப் பகுதிகளை சார்ந்த பல தமிழக ஊர்களும், கிட்டத்தட்ட கடல் தளத்தின் நிலையிலேயே அமைந்துள்ளது, அந்த ஊர்களுக்கு இயற்கையின் மூலம் ஏற்பட இருக்கும் பேராபத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இரண்டு விஷயங்கள் என்னுள் சற்று ஆழமாக தோன்றி யோசிக்க வைக்கிறது.

முதலாவதாக, நாம் செய்ய வேண்டிய முக்கிய சமூகப் பணி. மழையெல்லாம் முடிந்தபின் நமது பணி முடிவடைந்துவிட்டது என்று களைந்து விடாது, இந்த இளைய, இணைய சக்தி மீண்டும் களத்தில் இறங்கி தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட நிறைய பணிகள் காத்துக்கிடக்கிறது.

இன்னொரு பேரிடரை தமிழகம் சந்திக்க நேர்ந்தாலும், தேவைப்படும் அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளையும் செய்து கொள்வது முக்கியம். உதாரணமாக இந்த வாட்ஸப் குழுக்கள் அனைத்தும் இணைந்து, தமிழகத்தில் மூடி மறைந்துள்ள ஏரிகள், கால்வாய்கள், கண்மாய்கள், குளம், குட்டை ஆகியவற்றை தூர்வாரி சீரமைக்கலாம்.

இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சியின் மூலம் இது போன்ற பல சமூகப் பணிகளை செய்துக்கொள்வது, அடுத்த தலைமுறையினருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கடமையாகும். பல நீர்தேக்கங்களை தொலைத்து, மக்கள், அரசாங்கம் என ஒட்டு மொத்த சமுதாயமாக இன்று தோல்வியடைந்துள்ள நாம், இத்தகைய பணிகளை செய்வதன் மூலம் கடந்த காலங்களின் நமது சுயநல தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பை பெறலாம்.

இரண்டாவதாக,  தமிழகத்தை ஆட்கொண்டுள்ள இலவசம் கலாசாரம். வெள்ளம் இப்போது பல வீடுகளில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது உண்மை. இத்தகைய சூழ்நிலையில் வெள்ள நிவாரண பொருள்களை பாதிப்படைந்த மக்கள் ஏற்றுக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால் தேர்தல் நேரங்களிலோ மற்ற நேரங்களிலோ கிடைக்கும் இலவசங்களைப் பற்றி நாம் யோசிக்க வேண்டியுள்ளது.

ஃபேன், மிக்ஸி, தொலைக்காட்சி, கணினி என பொருள்களை ஆட்சியாளர்களிடம் எதிர்பாராமல், தாங்கள் நிரந்தரமாக பிழைக்கவும் உழைக்கவும் மக்கள் ஆட்சியாளர்களிடம் கோரவேண்டும். உழைப்பின் உன்னதத்தையும் பலன்களையும் சிறு வயது முதலே அனைவருக்கும் நம் சமூகம் சொல்லித்தரவேண்டும்.

உழைப்பும், தொழில் திறமையும், தொழில் புரியும் வாய்ப்பும் இருந்துவிட்டால், எந்த மனிதனும் அரசிடமோ, மற்ற மனிதர்களிடமோ பிச்சை எடுக்கும் நிலையில் இருக்க மாட்டான். இலவசமாக பெற்று சேமித்த செல்வம் நம்மை ஒருநாள் விட்டுச்செல்லலாம். அனால் நாம் கற்ற தொழில் எத்தகைய பேரிடரிலும் நம்மை காக்கும்.

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற வரியைப் போல், மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால் இலவசத்தை ஒழிக்க முடியாது. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பதெல்லாம் பழைய காலம். மக்கள் எதை எதிர் பார்க்கிறார்களோ, அதை அரசாங்கம் செய்ய நினைப்பது தான் இந்த காலம். அதனால் மக்களே உழைப்பதற்கு வாய்ப்பையும், சூழ்நிலையையும் அரசிடம் கேட்கத் தொடங்கினால், அரசும் அவற்றை செய்ய முன் வரும்.

அதை தவிர்த்து மக்கள், இனியும், அரசிடம் இலவசங்களை எதிர்பார்த்தால், எந்த முன்னேற்ற கழகம் வந்தாலும் தமிழகத்தை முன்னேற்ற முடியாது.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணு குண்டு வெடிப்பிற்குப் பின் புல் பூண்டு கூட முளைக்காது என தீர்ப்பு எழுதி முடித்துவிட்ட தங்கள் நாட்டை, உலகே திரும்பி பார்க்குமளவு பொருளாதார முன்னேற்றம் அடைய வைத்த ஜப்பானியர்களின் வெற்றி ரகசியம் கடின உழைப்பு மட்டுமே.

புத்தாண்டு பிறக்க இருக்கும் இந்த வேலையில், இலவசங்களை உதறி தள்ள புது சபதம் எடுப்போம். நம் கைகள் தாழ்ந்து வாங்கும் நிலையிலிருந்து, கைகள் மேலே ஏழுந்து கொடுக்கும் நிலைக்கு உயர்வோம். அதற்கு தேவையான திறமையையும், உழைப்பையும், வாய்ப்புகளையும் பெருக்குவோம்.

இலவசமில்லா புதியதொரு தமிழகத்தை உலகிற்கு காண்பித்து, தன்னிகரில்லா தமிழகம் என்ற பெயரை மீட்டெடுப்போம்.

வரும் புத்தாண்டு புது உத்வேகத்தையும், நல்ல எண்ணத்தையும் தந்து உழைப்பின் பாதையில் நம்மை அழைத்துச்செல்லும் என்ற நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(7)Dislikes(0)
Share
Share
Share