Jul 142016
 

1

சமீபத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் திரு.எத்திராஜன் ராதாகிருஷ்ணன் என்ற உயர்ந்த மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் கான்பூர் ஐஐடி (IIT) முப்பது வருடங்களுக்கும் மேல் பல பொறியியல் துறைகளில் பாடங்கள் எடுத்து வருபவர். அவரது பொறியியல் புத்தகங்களை சுமார் பதிமூன்று உலக மொழிகளில், மற்ற நாடுகள் மொழி பெயர்த்துள்ளனர்.

பொறியியல் மட்டுமன்றி தமிழ் மீதும், இலக்கியங்கள் மீதும் தீராத ஆர்வம் கொண்டுள்ள இவர், தமிழில் சில நல்ல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பல நாடுகளுக்கு வகுப்புகள் எடுக்கவும் ஆராய்ச்சி பணிகளுக்கும் சென்றுள்ள இவர், ஜப்பான் நாடு குறித்த இரண்டு அருமையான புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகங்களில் ஜப்பானியர்களின் நல்ல பழக்கங்களும் அவர்கள் நாடு பல சவால்களுக்குப் பின்னும் எப்படி இத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளது  என்பதையும் தனது சொந்த அனுபவங்கள் மூலம் விளக்கியுள்ளார்.

ஜப்பானியர்கள் குறித்து பெருமையாக அவர் குறிப்பிட்ட சில முக்கிய பண்புகளை மட்டும் இங்கே பார்ப்போம்.

 • நேரம் தவறாமை
 • அதீத தேச பக்தி மற்றும் சமூகப் பார்வை
 • கடின உழைப்பு மற்றும் நேர்மை
 • பொய் சொல்லும் பழக்கமே இல்லாத நிலை
 • பிறரின் பொருளுக்கு ஆசைப் படாத மனநிலை
 • எல்லாத் தொழிலும் உன்னதமென்ற நினைப்பு. செய்யும் தொழிலே தெய்வம் என்ற கோட்பாடு
 • தாய் மொழிப்பற்று
 • ஆசிரியர்களுக்கும் விவசாயம் செய்பவர்களுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்
 • அனைத்து மனிதர்களுக்கும் மரியாதை செலுத்துவது
 • ஊழல் இல்லாத நிலை
 • சுத்தம் மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல்
 • எல்லாவற்றிற்கும் மேல் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு தரும் நாடாக இருப்பது.

இவ்வாறு பேராசிரியரின் புத்தகங்கள் ஜப்பானைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை அடுக்கிக் கொண்டே போவது அந்நாட்டின் மீது அதிக மதிப்பை வரவைக்கிறது.

அதுவும் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு குறித்த தகவல்களை எண்ணி பெருமையும் படவைத்து, வியப்பிலும் ஆழ்த்துகிறது. நம்மூரிலும் இது போன்ற நல்ல விஷயங்கள் நடந்தால் எவ்வாறு இருக்கும் என்ற ஏக்கமும் படிப்போர் மனதில் வருகிறது.

நம்மூரில் சமீப காலமாக, இளம் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் அசம்பாவிதங்கள் நம்மை பெருமளவு அதிர்ச்சிக்குள்ளாக்கி, தீவிரமாக விவாதிக்கப் பட்டும் வருகின்றன. அந்த சம்பவங்களை யார் செய்தனர், என்ன காரணங்கள் என்று பலரால் பல வித கோணங்களில் ஆராயப் பட்டும் வருகிறது. இது ஒருப்புறம் இருக்க, நல்ல பண்புகளை இளைய சமுதாயத்திற்கு சொல்லித் தரும் பொறுப்பு எங்கிருந்து தொடங்கும் என யோசிக்கையில், பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளின் பங்கு பெருமளவு இருப்பதாகத் தெரிகிறது.

உதாரணமாக மகன்களைப் பெற்றவர்கள், பெண்களிடம் தங்கள் மகன் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்றும், பெண்களுக்கு எவ்வாறு மரியாதை தருபவர்களாக இருக்க வேண்டும் என்றும் சிறு வயது முதலே சொல்லி வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அது மட்டுமன்றி மேலேக் கூறிய சில நல்ல விஷயங்களை எடுத்துக்காட்டி பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்களின் முக்கிய கடமையாக உள்ளது. அதையெல்லாம் விடுத்து, பணம் சம்பாதித்தால் போதும், அதற்கு தேவையான மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று மட்டும் கூறி வளர்த்தால் நாளைய சமுதாயம் எந்த நிலையை சென்றடையும் என்ற கவலை  எழுகிறது.

பணம் மட்டுமே வாழ்க்கை அதை சம்பாதிக்கத் தேவையான மதிப்பெண்களை குறி வைக்கும் கல்வி, இது இரண்டு மட்டும் போதும், மற்ற நல்ல குணங்கள் எல்லாம்  வேண்டாம் என்று நிறைய பெற்றோர்கள் மாறி வருவது அபாயகரமான பாதை தான்.

இந்த கருத்தை நறுக்கென்ற வசனங்களின் துணையுடன் உணர்த்தி உள்ளது தற்போது வெளி வந்து ஓடிக்கொண்டிருக்கும் “அப்பா” திரைப்படம். இத்திரைப்படம் இன்றைய கல்வியின் அவல நிலையையும், சில பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தவறான சித்தாந்தங்களையும் தவறு என அழுத்தமாக சுட்டிக் காட்டி சிந்திக்க வைத்திருக்கிறது.

சமுத்திரக்கனி அவர்கள், சில தனியார் பள்ளிகளின் கொடுமைகளை கண்டு, அத்தகைய பள்ளிகளே வேண்டாம் என முடிவெடுத்து தன் மகனை ஒரு அரசுப் பள்ளியில் சேர்த்து விடுகிறார். அவனுக்கு பிடித்த துறையிலேயே அவனை வளரவிட்டு, அவனை கின்னஸ் சாதனை புரிய வைப்பது பாசிட்டிவ் திரைக்கதையின் உச்சம் எனலாம். இயக்குனரையும் படத்தின் மொத்தக் குழுவையும் இந்த சமூக அக்கறைக்கு கிரீடம சூட்டி பாராட்டலாம்.

படத்தில் இன்னொரு பையனின் தந்தை “படி படி” என்று அவனை கொடுமைப் படுத்தி வேறு எந்த சந்தோஷங்களையும் தராமால், அவனை மன உளச்சலில் ஈடுபடுத்தி, முடிவில் அவன் தற்கொலை செய்துக்கொள்வது சற்று சினிமாத்தனமாக தோன்றினாலும் இது போன்ற சம்பவங்கள் இன்றைய சூழலில் நடக்காமல் இல்லை என்றும் நினைக்க வைக்கிறது.

இத்தகைய நல்ல திரைப்படங்களை ஊக்குவித்து, வெற்றி பெற வைப்பதும், சமூகத்தில் நிறைய மனிதர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதும், ஒரு சமூக மாற்றத்திற்கான சிந்தனையையாவது தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

பெற்றோர்களே, படிப்பு மட்டும் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை என்று அவர்களை வீணடித்து விடாதீர்கள். அவர்களுக்கு தேசியக்கடமை, சமூக விழிப்புணர்வு, சமுதாய அக்கறை, பெண்கள் மீது மரியாதை போன்றவற்றையும் சேர்த்து கற்றுக்கொடுங்கள்.

அதே போல் பெண் குழந்தைகளுக்கு படிப்போடு மட்டும் நிறுத்தி விடாமல், ஏதாவது தற்காப்பு கலைகளையும் சொல்லிக் கொடுத்து வளர்ப்பது முக்கியமாக ஆகிறது.

பெண்கள் சிறிது ரௌத்திரமும் பழக வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக ஆகிறது. எல்லா பள்ளிகளும் கூட, பெண்களுக்கு கராத்தே, குங்ஃபு, குத்துச்சண்டை போன்ற தற்காப்பு கலைகளுள் ஏதேனும் ஒன்றை கட்டாயப் பாடமாக வைத்து, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களை தயார் படுத்தலாம். அந்த கலைகளை எங்கு எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதையும் அவர்களுக்கு சொல்லித் தர வேண்டியது பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளின் கடமையாக இருக்க வேண்டும்.

மாணவர்களும் இளைய சமுதாயமும் நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள தயாராகத் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லது சொல்லி கொடுத்து நல் வழிப்படுத்த வேண்டியது நம் அனைவர் கையிலும் உள்ளது.

மீண்டும் சந்திப்போம்,

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(4)Dislikes(1)
Share
Nov 142014
 

red-rose-wallpaper

 

அன்பு என்ற மூன்றெழுத்தில்
வந்தார் தந்தையாக !

அறிவு என்ற மூன்றெழுத்தை
தந்தார் ஆசானாக !

பாசம் என்ற மூன்றெழுத்தை
தந்தார் தாயாக !

இறப்பு என்ற நான்கெழுத்தில் மட்டும்
விட்டுச்சென்றார் தனியாக !

தனிமை என்ற மூன்றெழுத்தில்
விட்டுச்சென்றார் கொடுமையாக !

நினைவு என்ற மூன்றெழுத்தில்
வாழ்ந்தார் என்றும் என் அன்புள்ள அப்பாவாக !

 

– S.நித்தியலக்ஷ்மி,   தஞ்சாவூர்

Likes(6)Dislikes(0)
Share
Share
Share