Mar 142015
 

 

1

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் இளம்பெண் அவர். மிகவும் முற்போக்கான சிந்தனையும், படைப்பாற்றல் திறமையும் உடையவர். அவருக்கு  மாப்பிள்ளை தேடும் நோக்கத்தில் அவரின் பெற்றோர்கள், வழக்கமாக அனைத்து பெற்றோர்களும் செய்வது போல் MATRIMONIAL SITE இல் அவரைப் பற்றிய விவரங்களை தந்து, தகுந்த மாப்பிள்ளை வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

பெற்றோர்களின் இந்த விளம்பரம், மிகவும் வழக்கமான ஒன்றாக உள்ளது என்று, அந்த பெண்ணே ஒரு இணையதளம் தொடங்கி அதில் அவர் பற்றியும் தனக்கு வரவிருக்கும் கணவர் எவ்வாறு இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

வித்தியாசாமான முறையில் தன்னைப் பற்றியும் தனது எதிர்பார்ப்புகளையும் பற்றியும் அவர் கொடுத்த விவரங்கள், இணையத்தில் வேகமாக பரவி, ஏகப்பட்ட விருப்பங்களும், ஆதரவுகளும் கிடைத்தது.

கூடவே வருங்கால கணவரை பற்றிய இவர் தெரிவித்திருந்த இரு நிபந்தனைகள் சர்ச்சையைக் கிளப்பி அதிர்ச்சியும் அளித்தது. அந்த நிபந்தனைகள்..

– முதலாவது, குழந்தைகளை வெறுப்பவராக இருக்க வேண்டும்.

– இரண்டாவது, அவரது பெற்றோர்களிடமோ, குடும்பத்திலோ பெரிதாக ஆர்வம் உள்ளவராக இருக்க கூடாது.

இவரின் இந்த நிபந்தனைகளை ஆதரித்தும், எதிர் கருத்தை கொண்டவர்களுக்கு  பதில் அளிக்கும் வகையில், வேறு ஒரு பெண்ணின் பகிர்வு இவ்வாறாக இருந்தது.. “பெருநகரங்களில் நடுத்தர வர்கத்தின் வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது? காலை 5மணிக்கு எழவேண்டும், குழந்தைகளுக்கும், கணவருக்கும் உணவு தயாரித்து, குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்ய வேண்டும். காலையில் உண்ணாமலே அவசரம் அவசரமாக கிளம்பி, 2மணி நேரம் கூட்டநெரிசலில் பேருந்தையோ, ரயிலையோ பிடித்து அலுவலகம் செல்ல வேண்டும். அலுவலகத்திலும் பல பிரச்சினைகளை சந்தித்து, பின் மீண்டும் அதே 2மணி நேரம் வீட்டிற்கு பயணம்.

களைப்புடன் வீட்டிற்கு வந்தவுடன், வீட்டு வேலைகளை முடித்து, குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லிக்கொடுத்து, வீட்டில் உள்ள பெரியோர்களையும் அனுசரித்து நடக்க வேண்டும். இதே போராட்டத்தில் கிட்டத்தட்ட 20வருடங்கள் வாழ்ந்தபின், குழந்தைகளும் ஒரு சமயத்தில் எதிர்காலத்திற்காக வீட்டை விட்டு வேறிடம்  சென்று விடுகையில், இவர்களுக்கு கடைசியில் எஞ்சி இருப்பது, தனிமையும், வியாதியும், முதியோர் இல்லங்களும் தான்.

இதில் எங்கே பெண்கள் வாழ்கின்றனர்? அதனால் இணையத்தில் அந்த இளம்பெண் கூறியுள்ள எதிர்பார்ப்புகளும் கருத்துக்களும் தவறில்லை” என  தெரிவித்திருந்தார்.

பல வேலைகளில், பெண்கள் திருமணத்திற்கு மனரீதியில் தயாராகாத நேரத்தில், சமுதாயம் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதால், திருமணம்  சுமையாகவும் மன அழுத்தம் தரும் வைகையிலும் அவர்களுக்கு வாழ்க்கையை அமைத்து விடுகிறது. எனவே இணையத்தில் அந்த பெண் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள்  இன்றைய புதுயுக இந்தியப் பெண்கள் பலரின் மனநிலை” என்று மேலும் சிலர் தெரிவித்திருந்தனர்.

வேறு சிலரோ, “கணவன் மட்டும் தான் வேண்டும், அவரது குடும்பம் தேவையில்லை, அந்தளவிற்கு கணவனை சேர்ந்தவர்கள் எங்களுக்கு துன்பத்தை தருகின்றனர். மேலும் நாங்கள் மனக்க விரும்பியது கணவரைத் தான் தவிர, அவர் குடும்பத்தை அல்ல” எனவும் குறிப்பிட்டிருந்ததை காண முடிந்தது.

பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் தான் என்று இல்லை, காதல் திருமனங்களிலும் பிரச்சினைகள் அதிகம் தான். நிறைய பெண்களின் வாழ்க்கை இன்று போராட்டம் தான்” என்றும் சிலர் கூறியிருந்தனர்.

இந்த நிகழ்வையும், கருத்துக்களையும் சமீபத்தில் காண நேர்ந்தது. மேலே சிலர் தெரிவித்துள்ள பிரச்சினைகள் நம் சமுதாயத்தில் பெண்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தருகின்றன என்றும், அது எல்லை மீறுகின்ற போதுதான், இது போன்ற எண்ணச் சிதறல்கள் வெளிவருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

நாம் உண்மையில் சமூகம் மீது அக்கறை உள்ளவர்கள் எனில், பெண்கள் வாழ்வின் தினசரி பிரச்சினைகளைப் புரிந்துக்கொள்தல் வேண்டும். அவர்களுக்கு சிறந்த வேலை சூழ்நிலைகளையும், சமூக சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுத்து, அவர்களை மகிழ்வுடன் இருக்க செய்ய வேண்டும். குறைந்தது, அவர்கள் முன்னேற்றத்திற்கு தடையாய் இல்லாமல், அவர்கள் நல்ல செயல்களுக்கு இடையூராய் இல்லாமலும் இருக்க வேண்டும். அவர்களுக்கு முழு மரியாதையும், அங்கீகாரமும், ஆதரவும் கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும்.

இது ஒருபுறம் என்றால், இரண்டாவது பக்கமாக, விட்டுக்கொடுத்தலும்  சகிப்புத்தண்மையும் இப்போதுள்ள தலைமுறையினரிடம் குறைந்து வருகிறதோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. பொருளாதார சுதந்திரம், யாரையும் சார்ந்திருக்க வேண்டாம் என்ற எண்ணத்தை தந்திருந்தாலும், அதை தவறாக உபயோகப் படுத்தும் சிலரையும் இன்று காண்கிறோம்.

இப்போது இரண்டு பக்கங்கள். ஒன்று பெண்களுக்கு பிரச்சினைகளும், மன அழுத்தமும் தராத ஒரு சமுதாயமாக இருத்தல், மற்றொன்று விட்டுக்கொடுத்தல் மற்றும் சுயநலமற்ற வாழ்க்கை முறைகளை இந்த தலைமுறையினருக்கு  உணர்த்துதல்.

இந்த இரு விஷயங்களையும் குறித்து, என்னுள் எழுந்த சில கேள்விகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பிகிறேன்.

 • பெண்களுக்கு நல்லாதரவும் சமத்துவமும் இருந்து, அவர்கள் மகிழ்வுடன் உள்ள சமுதாயமாக இருக்க நாம் அனைவரும் என்ன செய்யலாம்?
 • கூட்டு குடும்பம் என்ற கலாச்சாரம் காலப்போக்கில் முற்றிலுமாக அழிந்துவிடுமா? இன்று கணவன் அல்லது மனைவி என்ற ஒரே ஒரு உறவு மட்டும் போதும் என நினைக்கும் சில இளைஞர்களின் இந்த மாற்றம், அடுத்த தலைமுறையில் ஒரு உறவும் வேண்டாமென நினைக்க வைக்கும் பாதையாகிவிடுமா? அதை நம்மால் முடிந்தளவிற்கு தடுக்கும் விதத்தில், அடுத்த தலைமுறைக்கு நல்லது எது, தீயது எது என்றும், உண்மையான, சுயநலமில்லாத வாழ்வு எது எனவும் புரியவைப்பது எப்படி?

ஒரு மகளையும், மகனையும் கொண்ட தந்தையாகிய என்னை சமீபத்தில் செய்தித்தாள்களிலும் இனையத்திலும் வந்த இது போன்ற பல பகிர்வுகள் உலுக்கியதால், இந்த எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து, உங்கள் பதில்களை எதிர்பார்க்கிறேன்.

நம் குழந்தைகளை எவ்வாறு நல்வழியில் நடத்துவது? அவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சியான வாழ்வை எவ்வாறு கற்றுத் தரப்போகிறோம்? உங்களுக்கு தெரிந்தால், B+ வாசகர்கள் அனைவருடனும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..

PARENTING (குழந்தை வளர்த்தல்) பற்றி பல கருத்து பறிமாற்றங்களும், ஆராய்ச்சிகளும் நடந்து வரும் இந்த வேலையில், உங்களது சிறந்த பொருத்தமான கருத்து, இந்த பகிர்வைப் படிக்கும் இன்றைய மற்றும் நாளைய பெற்றோர்களுக்கு உதவலாம். சிறந்த சமுதாயம் அமையவும் வழிவகுக்கலாம்.

விமல் தியாகராஜன் & B+ TEAM.

Likes(11)Dislikes(0)
Share

  2 Responses to “சிறந்த சமுதாயம்!!”

 1. விளம்பரம் தந்திருந்த அந்தப் பெண்ணின் கருத்துக்கள் மனதை உறுத்துவதாக இருந்த போதிலும், உண்மையில், கணவன் வீட்டாரை மனமார விரும்பும் பெண்களைக் காண்பது எந்தக் காலத்திலுமே சற்று அரிதான விஷயம்தான்.

  ஆனால், குழந்தை வேண்டாம் என்று சொல்லும் பெண்கள் சற்று மனதளவில் வேறுபட்டவர்கள் தான் என்பதை மறுக்க முடியாது. இன்று, பல பெண்களுக்கு கிடைத்துள்ள கல்வி, பொருளாதார மற்றும் கருத்து சுதந்திரம் தான் இதற்கு காரணம். இது, ஒரு தனி மனித பிரச்சினை. இதை பொதுவாகக் கொள்ளவேண்டியதில்லை.

  இன்றைய சமுதாயத்தில், உறவுகள் இற்றுப் போனாலும், நண்பர்கள் பலர் அதை நிறைவு செய்கின்றனர். மாமா அல்லது அத்தை, சித்தப்பா மக்களைவிட பலருக்கு அவரவர் தோழர்களிடமும், தோழிகளிடமும் அதிக நெருக்கம் உள்ளது.

  முந்தய தலைமுறையைச் சேர்ந்து கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்த எனக்கே என்று நெருக்கமாக இருப்பவர்கள் நண்பர்கள்தான். நாம், யாரை தினம் பார்க்க முடிகிறதோ, பேச முடிகிறதோ, நம் மனதை எவர் புரிந்து கொள்கிறார்களோ அவர்களும் நம் உறவுதானே?

  உங்கள் குழந்தைகளுக்கு, நட்போ, உறவோ அதை எப்படிப் பாதுகாப்பது, நடத்திச் செல்வது, மரியாதையை தருவது என்பதை மட்டும் உணர்த்தினால் போதும் என்று நான் நினைக்கிறேன்.

  ஜி. சுவாமிநாதன்

  Likes(2)Dislikes(0)
  • அருமையான கருத்துக்களுக்கு நன்றி திரு.சுவாமிநாதன் அவர்களே. அந்த பகிர்வில் உள்ள மற்ற கருத்துக்களுக்கும், கேள்விகளுக்கும் நம் வாசகர்களிடம் இருந்த தகுந்த பதில்கள் வருகிறதா என ஆவலுடன் எதிர்பார்ப்போம்..

   Likes(1)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share