Feb 142015
 

4 Stories

 

சென்னை, அம்பத்தூர் தொழிற் பேட்டை. நான் எனது சின்ன தொழிற்சாலைக்குள் நுழைந்தேன். நான்கு லேத்துகள், இரண்டு பிரஸ்ஸிங் மிஷின், மூன்று ட்ரில்லிங் மிஷின் இவ்வளவு தான் என் பட்டறை..

முன்னுக்கு வர முயன்று கொண்டிருக்கும் சிறிய தொழில் அதிபர் நான். என் பாக்டரியில் மொத்தமே 15 பேர்தான், என்னையும் சேர்த்து. ஆனால், சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க ! எனக்கு எக்கச்சக்க பிரச்னைகள்!

என்னன்னு சொல்ல? தொழிலாளர்களின் தேவைகள் , என்னோட கஸ்டமர் டிமாண்ட்ஸ், அரசாங்க கெடுபிடிகள், வங்கி சம்பந்த பிரச்சனைகள் , எச்சைஸ் வரி, சேல்ஸ் வரி இப்படி எவ்வளவோ ? அப்பப்பா ! போதுமடா சாமி !

உள்ளே நுழையும் போதே குரல் கொடுத்தேன் . “துரை! கொஞ்சம் என் ரூமுக்கு வா!”. துரை, எனது கம்பெனி சுபெர்வைசெர், என் அறையின் உள்ளே நுழைந்தான்.

“என்ன சார்! போன காரியம் என்னாச்சு? கஸ்டமர் கிட்டே டைம் கேட்டீங்களா?”

“இல்லே துரை, ரொம்ப நெருக்கறான். இன்னும் பதினைந்து நாளில் ஷூ ப்ரேக் உதிரி பாகம் 1000 யூனிட் டெலிவரி வேணுமாம்!”

“அதுக்கு சான்சே இல்லே சார். குறைந்தது ஒரு மாசமாவது ஆகும். இன்னும் பிரசிஷனே வரல்ல!”

“என்ன துரை, நாலு நாளா அதேதான் சொல்லிக்கிட்டு இருக்கே!”

“நான் என்ன சார் பண்ணட்டும்! ஒரு வாரமா மூணு லேபர் வரல்லே, மத்த வேலையெல்லாம் அப்படி அப்படியே நிக்குது. அதை பாக்கிறதா, இல்லே இந்த வேலையை பாக்கறதா?”

“இதை ஏன் என் கிட்டே முன்னாடியே சொல்லலே?”

“சொன்னேன் சார், நீங்க தான் காதிலேயே போட்டுக்கலே”

“ஏன் லேபர் வரலியாம்?”

“கூலி கட்டுப்படி ஆகலியாம். அதிகம் கேக்கிறாங்க”

“சரியா போச்சு! இது வேறையா? நான் எங்கே போறது? சரி நீ போ! அந்த ஷூ பிரேக் டிசைனை என்கிட்டே அனுப்பு. என்னன்னு நானே பாக்கிறேன்”

எப்படி 15 நாளைக்குள்ளே டிசைன் சரி பார்த்து , 1000 யூனிட் டெலிவரி பண்றது? போற போக்கிலே ஒரு மாசம் ஆகிடும் போலிருக்கே! பெரிய கம்பனி அக்கௌன்ட் கை விட்டு போயிடுமே! என்ன பண்றது? யோசனை பண்ணி, நெற்றி பொட்டு வலித்ததுதான் மிச்சம்.
****

மதியம் ஒரு மணி இருக்கும்! இன்னும் சாப்பிட போகவில்லை. பசி வயிற்றை கிள்ளியது. அப்போது, துரை வேகமாக உள்ளே வந்தான்.

“சார்! சார்! இன்கம் டாக்ஸ் ஆபீசர் வந்திருக்கார்! உங்களை பாக்கணுமாம்”
“என்னையா! என்னை எதுக்கு பாக்கணும்? நாந்தான் ரிடர்ன் பைல் பண்ணிட்டேனே. ம்ம். சரி, உள்ளே அனுப்பு”

இது என்னடா கஷ்ட காலம்! இருக்கிற தொந்திரவிலே இது என்ன புது குழப்பம்?

“நீங்க தானே சுந்தர்? லஷ்மி எகுப்மென்ட் முதலாளி?” – உள்ளே நுழைந்து அமர்ந்த அதிகாரி, தனது பைலை புரட்டிக் கொண்டே கேட்டார்.

“ஆமா சார். நீங்க?”

“நான் ஐ.டி இன்ஸ்பெக்டர், கோவிந்தன். உங்க பான் , டான் நம்பர் கொஞ்சம் சொல்ல முடியுமா?” சொன்னேன். கோவிந்தன் தனது பைலில் சரி பார்த்தார்.

“சுந்தர், உங்க பேரிலே ஒரு புகார் வந்திருக்கு. நீங்க வரி ஏய்ப்பு செய்யறீங்கன்னு. அது விஷயமா உங்களை பாக்க வந்திருக்கேன்”

“இல்லியே! எனது ஆடிடர் எல்லாமே பைல் பண்ணியிருக்கிறாரே?” எனக்கு நெற்றி பொட்டில் வியர்வை துளி. கொஞ்சம் படபடப்பு. கைகுட்டை தேடினேன்.

“டென்ஷன் ஆகாதிங்க. இது ஒண்ணும் பெரிய பிரச்னையே இல்லை. உண்மையை ஒளிக்காமல் சொன்னால் மட்டும் போதும்.”

“சார் நீங்க என்ன சொல்றீங்க?”

“எனக்கு தெரியும் சுந்தர், புகார்லே இருக்கு. உங்களுக்கு சென்னையிலே ரெண்டு வீடு இருக்கு. ரெண்டு கார் வெச்சு இருக்கீங்க. இப்போ புதுசா இந்த பக்கத்து பாக்டரி வாங்க முயற்சி பண்ணிட்டிருக்கீங்க. சரியா?”

“சரிதான் சார். ”

“ஆனால், உங்களுக்கு நஷ்டம்னு டாக்ஸ் பைல் பண்ணியிருக்கீங்க. இது வரி ஏய்ப்பு இல்லாமல் வேறே என்ன?”

“சார், நான் எல்லாம் சரியாதானே கொடுத்திருக்கேன்? அக்கௌன்ட் எல்லாம் சரின்னு எங்க ஆடிட்டர் கூட சொன்னாரே”
“அது இருக்கட்டும், சுந்தர், உங்க பைலை ஓபன் பண்ணினால், குறைந்தது ஒரு இருபது லக்ஷம் டாக்ஸ் கட்டவேண்டி வரும். இன்னும் அதிகம் கூட ஆகலாம். உள்ளே கூட தள்ளலாம்.”

“சார்! எதுக்கும் நான் என் ஆடிட்டர் கிட்டே பேசிட்டு உங்களை பாக்கவா?”

“தாராளமா, அது உங்க விருப்பம். ஆனால், நீங்க ஆடிட்டர் கிட்டே போறதினாலே, உங்களுக்கு இன்னும் நஷ்டம் தான் அதிகம் ஆகும். கோர்ட், ஐ.டி ஆபீஸ்ன்னு அலைய வேண்டியிருக்கும்.”

“சார், அப்போ இதுக்கு என்ன பண்ணலாம்? நீங்க தான் உதவி செய்யணும்!”
“மிஸ்டர் சுந்தர், உங்க கஷ்டம் எனக்கு புரியுது. அதுக்குத்தான் நானே பெர்சனலா வந்திருக்கேன். காதும் காதும் வெச்சா மாதிரி கேஸ் க்ளோஸ் பண்ணிடறேன். போதுமா? இன்னிக்கு நம்பர் டூ அக்கவுண்ட் வெச்சுக்காதவன் யாரு?”

“ரொம்ப தேங்க்ஸ் சார்”

‘ஆனா இதிலே பாருங்க சுந்தர், இதுக்கு நான் மேலிடத்தையும் கவனிக்கணும். கொஞ்சம் செலவாகுமே!”
எனக்கு புரிந்தது. ‘சொல்லுங்க சார், செஞ்சிடலாம்!”

“எல்லாம் சேர்த்து ஒரு ஐந்து லட்சம் ஆகும். இப்போ பாதி, கேஸ் க்ளோஸ் பண்ண பிறகு மீதி கொடுத்தா போதும். ”
“சார், எனக்கு கொஞ்சம் டைம் வேணும். ஒரு வாரத்தில ரெடி பண்ணிடறேன்! ”

“ஒரு வாரம் வேணுமா? சீக்கிரம் முடிச்சிடறது நல்லது. எனக்கு ஒண்ணுமில்லே, கேஸ் என்னை தாண்டி வேறே யாரு கிட்டயாவது போயிட்டா, உங்க பாடு திண்டாட்டம் தான். ஞாபகம் வெச்சுக்கோங்க”
“இல்லே சார், பணம் புரட்டனும். கொஞ்சம் டைட்”- புளுகினேன்

“ஓகே. ஒரு வாரம் கழித்து கால் பண்றேன்.”

புயல் ஓய்ந்தது போல இருந்தது. தலையில் கை வைத்து கொண்டு உட்கார்ந்தவன் தான், நான் மதிய உணவிற்கு கூட செல்ல வில்லை.

எனக்கு மட்டும் ஏன் இப்படி பிரச்சனை வருது? எப்படி சமாளிக்க போறேன்? ஒரே சஞ்சலம்.

*****

இரண்டு நாள் கழிந்தது.

பாக்டரியில் ஷூ பிரேக் டிசைன் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பண்ணியும் சரியாகவே வரவில்லை. மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது

நேரங்கெட்ட நேரத்தில், அலைபேசி. “சார், நாங்க ஐசிசி பாங்க்லேருந்து பேசறோம். உங்களுக்கு பர்சனல் லோன் வேணுமா சார்!” கடுப்பாகிவிட்டேன். “வைம்மா போனை. வேறே வேலையில்லை உங்களுக்கு!”

திரும்பவும் அலைபேசி. இப்போது அன்புத்தொல்லை, என் மனைவி.
“என்னங்க! ஊரிலிருந்து அண்ணா போன் பண்ணினான்”
“என்ன விஷயம்?”

“உங்க சின்ன மாமனாருக்கு அறுபது பூர்த்தியில்லே! அதுக்கு நம்ம கோயில்லே படையல். நம்மளை விருந்துக்கு கூப்பிட்டிருக்கான்.”

“என்னிக்கு?”

“இந்த மாசக் கடைசியிலேங்க! மறந்துட்டீங்களா ?. நாம ரெண்டு நாள் முன்னாடியே போகணும்”

“ஐயோ! என்னால் முடியாதம்மா! இங்கே ஏகப்பட்ட வேலை இருக்கு”

“ஆமா! எங்க வீட்டு விசேஷம் எதுக்கு கூப்பிட்டாலும் எதாவது சாக்கு சொல்லி தட்டி கழிக்கிறீங்க!”

“சொன்னா புரிஞ்சுக்கோ. என்னாலே அவ்வளவு தூரம் வர முடியாது. நான் என்ன இங்கே வேலை வெட்டி இல்லாமையா இருக்கேன்?எனக்கே இங்கே ஏகப்பட்ட பிடுங்கல்”

“ஏன் சொல்ல மாட்டீங்க? நான்தானே உங்க பிடுங்கல்?”

“மீனா! கோபி..” முடிப்பதற்குள் துண்டிக்கப்பட்டது. எனக்கு இது வேறே பிரச்சனை.

கோபக்கார மனைவி. சமாதானப் படுத்த எனக்கு நேரம் இல்லை. மனமும் இல்லை.

****

இன்னும் நான்கு நாட்கள் கழிந்தது.

என் நிலைமையில் ஒரு முன்னேற்றமும் இல்லை. தூக்கம் சுத்தமா போச்சு. கண்ணயரும்போது, ஒரு பக்கம் கிளையன்ட் டார்ச்சர், இன்னொரு பக்கம் இன்கம் டாக்ஸ் இன்ஸ்பெக்டர். என்ன செய்யப் போறேன்? எதைன்னு பாக்கிறது? தலை வலி. வயிறு வேறு பிசைந்து கொண்டேயிருந்தது. எப்படி சமாளிக்கபோறேன்? யோசனை, படபடப்பு, மன உளைச்சல், நெஞ்சு வலிக்கற மாதிரி இருந்தது. டாக்டர்கிட்டே போகணும்!
அலைபேசி அழைத்தது. அழைத்தவன் எனது நண்பன் விஷ்வா.

“டேய் சுந்தர், நான்தாண்டா விஷ்வா பேசறேன்! எப்படியிருக்கே?”-

“டேய் விஷ்வா ! நீ எங்கே இங்கே ?”-நான்

“நேத்திதான் நான் சிங்கப்பூர்லேருந்து வந்தேன். ஒன்னு செய். நீ அண்ணா நகர்லே தானே இருக்கே! நேரே ஐந்து மணிக்கு சரவண பவன் ஹோட்டலுக்கு வந்துடு. நிறைய பேசணும்”- விஷ்வா

“இல்லேடா ! நான் வரல்லே ! கொஞ்சம் பிரச்சனை! சாரிடா”

“அடி படுவே! நீ வரே! நாம மீட் பண்றோம் ! அவ்வளவுதான்.”

பள்ளி நண்பன். ரொம்ப நெருக்கம். தட்டமுடியவில்லை. எனக்கும் கொஞ்சம் மாற்றம் தேவையாயிருந்தது.

(அடுத்த இதழில் முடியும்….)

–    முரளிதரன் செளரிராஜன்

Likes(2)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share