Jan 152015
 

Youth

இன்று விடுமுறை தினம். எனது மடிக்கணினியை எடுத்து ஈமெயில்களை பார்க்கத் தொடங்கினேன். எனது நண்பனிடமிருந்து ஒரு ஈமெயில். அதில் ஒரு கடவுளின் புகைப்படம். அதை ஒட்டி ஒரு ஆண்மீக கருத்து. கடைசியில் ஒரு செய்தி. “உங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டுமா, இதை உடனே 25 நண்பர்களுக்கு அனுப்புங்கள்”. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது, அந்த மெயிலை DELETE செய்துவிட்டு, முகப்புத்தகத்தில் வலம் வரத் தொடங்கினேன். அதில் ஒரு பதிவு “இந்த புகைப்படத்தை அடுத்த 10வினாடிகளுக்குள் ஷேர் செய்யாவிடில் துரதிர்ஷ்டம் வந்தடையும்” என்று இருந்தது.

இவை இரண்டையும் பார்த்த எனக்கு, சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம்  நினைவிற்கு வந்தது. பல வருடங்களுக்கு முன் ஒரு நாள் காலை எட்டு மணி. அன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். காரணம் எனது பள்ளியில் அன்று முதல் முறையாக ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கணினி கூடத்திற்கு அழைத்து செல்வதாய் இருந்தார்கள். கணினி என்பதே கேள்விப்படாத பல பள்ளிகள் இருக்கும்போது எங்கள் பள்ளி ஒரு கணினியை வாங்கி, ஒரு ஆசிரியரை பணி அமர்த்தி, ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினியை ஒரு பாடமாக அறிவித்திருந்தது.

முதல் நாள் கணினி அறையை நுழைய எல்லா மாணவர்களும் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். நானும் மிகுந்த சந்தோஷத்துடன், காலணிகளை கழற்றிவிட்டு, ஆவலுடன் உள்ளே செல்ல காத்திருந்தேன். எங்கள் பள்ளியில் கணினி அறை குளிர்சாதன வசதியுடன் இருந்த ஒரே அறை. அதுவரை படத்திலும், பாடத்திலும் மட்டுமே கணினியை பார்த்த எனக்கும் மற்ற மாணவர்களுக்கும் மிகவும் வியப்பு.

எங்கள் பெயரை “BASIC” என்ற ப்ரோகிராமில் டைப் செய்து அதை DOT MATRIX PRINTERஇல் பிரிண்ட் செய்ய வேண்டும். அதுதான் அன்றைய கணினி பயிற்சி வகுப்பு. அந்த பிரிண்டை எனது புத்தகத்தில் ஒட்டி வைத்து, வீட்டில் எனது பெற்றோர், உறவினர் என்று எல்லோரிடமும் காண்பித்து மகிழ்ந்தேன்.

அப்போது தபால்காரர் மணியடிக்க, அவரிடம் அந்த தபாலை பெறுவதற்கு வாசலுக்கு விரைந்தேன். அந்த தபாலில், இந்த உலகம் கூடிய விரைவில் அழிய இருக்கிறது, உடனே இந்த தபாலில் உள்ளது போல் 10தபால்கார்ட் செய்து நண்பர்களுக்கு அனுப்பும்படி எழுதியிருந்தது. இதை என் தந்தையிடம் கேட்டபோது, அவர் இது யாராவது வேலையில்லா விஷமிகளின் செயல், இதை பொருட்படுத்தாதே என்று அந்த கார்டை கிழித்துக் குப்பையில் போட்டார்.

அந்த பழைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டு இப்போது நடக்கும் நிகழ்வுகளையும் சிந்திக்க ஆரம்பித்தேன்.

நமக்கு தினமும் இது போன்ற பல தவறான மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகள் பல வருகிறது. சமூக வலைதளங்களில் பல நண்மைகளுக்கு இடையில் இது போன்ற பல பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. அவற்றில் கீழுள்ள சிலவற்றை அடிக்கடி பார்த்திருப்போம்.

1)   கைப்பேசி டவரின் அலைக்கற்றையினால் சிட்டுக்குருவிகள் இறந்துவிடும் என வரும் ஒரு தகவல். உண்மையில், துபாயில் எனது வீட்டருகே அடுத்தடுத்து 3 டவர்கள் உள்ளன. ஆனாலும் எங்கள் வீட்டருகே பல சிட்டுக்குருவிகளை அடிக்கடி காணமுடிகிறது.

2)   இன்னொரு தகவல் – பிரபல குளிர்பான நிறுவனம் பற்றியும் அதில் உள்ள உடல்கேடு குறித்தும் படித்திருப்போம். இதுவும் ஒரு வியாபார உக்தி, NEGATIVE PUBLICITY. சக்கரை அளவு மற்றும் பதப்படுத்தப்பட்ட பானம் என்று வேண்டுமானாலும் ஒதுக்கலாமே தவிர வதந்திகளுக்காக கூடாது. அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் கூட, அனைத்து வாயு குளிர்பானமும் கேடுதானே, ஏன் ஒரு நிறுவனத்தை மட்டும் குறை சொல்லவேண்டும்?

3)   இன்னொரு தலைசுற்ற வைக்கும் தகவல் – ஒரு அழகான, பிரம்மாண்டமான வீடு மற்றும் பல வித கோணங்களில் அந்த வீட்டின் உள்கட்டமைப்பின் புகைப்படம். இது பிரபல தொழிலதிபரின் வீடு என்றோ, வரி ஏய்ப்பு செய்த நடிகரின் வீடு என்றோ, ஒரு விளையாட்டு வீரரின் வீடு என்றோ வரும் தகவல்களை பார்த்திருப்போம்.

4)   சமீபத்து வரவாக, ஒரு பெண்ணின் புகைப்படத்தை போட்டு, இவர் வீட்டிற்குள் புகுந்து, சிலிண்டரை சோதனை செய்யும் அதிகாரி எனக்கூறி வீட்டில் உள்ள பொருள்களை சூரையாடி ஓடிவிடுகிறார் என வேகமாக பரவிய ஒரு பதிவு. அது உண்மையில்லை, யாரும் நம்பாதீர்கள், அந்த புகைப்படத்தில் உள்ளவர் என் சகோதரி தான் என்று ஒரு வாரம் கழித்து இன்னொரு பதிவு. நமக்கு இரண்டில் எது உண்மை எனத் தெரியாது. அப்படியிருக்கையில் நாம் ஷேர் செய்வது ஒருவேலை ஒரு நிரபராதியை தண்டித்து காயப்படுத்தலாம்.

இவைகளைப்போல் தினமும் நாம் பல தவறான செய்திகளைக் காண்கிறோம், ஷேர் செய்கிறோம். இதையெல்லாம் வேலையில்லாத விஷமிகளின் விலையாட்டாகவும், தவறான உள் நோக்கத்துடன் அனுப்புகிறார்கள் என்பதையும்புரிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும், இவ்வாறு நாம் ஷேர் மற்றும் லைக் செய்யும்போது, நமது PROFILE SECURITY SETTING குறைவாக இருந்தால், நமது புகைப்படம் மற்றும் நம் சொந்த விவரங்கள் அனைவருக்கும் தெரியவரும். இதனால் தேவையில்லாத பல இன்னல்களுக்கு ஆலாககூடும்.

இந்த புத்தாண்டு முதல் நாம் அனைவரும் ஒரு நல்ல தீர்மானம் எடுக்கலாமே? நமக்குத் தெரியாத செய்திகளை பரப்பாமல் இருப்போம்.

சமூக வலைதளங்கள், மற்ற தகவல் தொழில் நுட்ப கருவிகளை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுதிதினால் நமது சமுதாயமும், அடுத்த தலைமுறையினரும் பயன்பெறுவது உறுதி.

காந்தியடிகள் சொன்னதுபோல், நல்லதையே படிப்போம், நல்லதையே பகிர்வோம், நலமாக வாழ முற்படுவோம்.

–    ச.கார்த்திகேயன்

(துபாயிலிருந்து)

 

Likes(1)Dislikes(0)
Share

  2 Responses to “சமூக வலைதளம் – எதற்கு?”

  1. அருமை...எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பதறிவு

    Likes(1)Dislikes(0)
  2. "இந்த புத்தாண்டு முதல் நாம் அனைவரும் ஒரு நல்ல தீர்மானம் எடுக்கலாமே? நமக்குத் தெரியாத செய்திகளை பரப்பாமல் இருப்போம்." - அருமை கார்த்திகேயன் !

    Likes(1)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share