Nov 142014
 

Storey

நாளை நடக்கப் போகும் நிகழ்வுகளை நினைத்து நினைத்து எவ்வளவு தான் இறுக்கமாக இமைகளை மூடினாலும் உறக்கம் விழிகளை தழுவவில்லை. மனதில் ஆயிரம் நினைவலைகள். பத்து ஆண்டுகளுக்கு முன் கடிகாரத்தை திருப்பினால் பட்டாம் பூச்சிகள் என்னுள் சிறகடிப்பதை உணர முடிந்தது. “தோற்றம் எப்படி இருக்கும்? நடை, உடை, பழக்க வழக்கம் ஏதாவது மாறி இருக்குமோ?” என கேள்வி கணைகள் தொடர்ந்து ஊடுருவின.

ஒரு வழியாக இரவை கடத்தி விடியற்காலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். சாலையின் நெருக்கடியில் வாடகை சீருந்து தாமதமாகி ரத்த அழுத்தத்தை கூட்டியது. விமான நிலையத்தை அடைந்து விமானத்தில் அமர்ந்த பின் தான் ஏதோ பெரிதாக சாதித்தது போன்ற ஒரு மன திருப்தி ஏற்பட்டது. எனக்கே இது ஒரு புது விதமான அனுபவமாக தான் இருந்தது. “இவ்வளவு ஆவல், இத்தனை வருடங்கள் எங்கே ஒளிந்திருந்தது?” என்ற கேள்விக்கு என்னுள் விடையில்லை.

பத்து மணி நேர பயணத்தில் கனவு நினைவாக இருக்கும் சந்தோஷத்தில் விமானத்துடன் நானும் ஆகாயத்தில் மிதந்தேன். இந்திய மண்ணை தொட விமானம் தயாரானது. ஆறு வருட பிரிவு, அதை உடைக்கும் தருணம் வந்து விட்டது என்றதும் குதூகலம் மனதில் தோற்றி கொண்டது. “மனிதன் இத்தனை உணர்சிகளின் சங்கமமா?”
வேலை, படிப்பு என வாழ்க்கையில் சமூக அளவில் முன்னேற்றம் இருந்தாலும் தாய் நாட்டை பிரிந்து ஏதோ ஒரு வெறுமை என்னுள் புரயோடிகொண்டு தான் இருந்திருக்கிறது.

விமான நிலையத்தில் அம்மாவும், அப்பாவும் அரை மணி நேரம் முன்னதாகவே வந்து காத்திருந்தார்கள். சற்று வயதானது போன்று தெரிந்தார்கள்; எதிர் பார்த்தது தான். இரண்டு பிள்ளைகளை பெற்று, இருவரும் வெளிநாட்டில் வாழ்கிறார்கள். வேறு என்ன காரணம் இருக்கக்கூடும்? அமெரிக்காவில் அக்கா வீட்டில் தங்கி விட்டு இந்தியா திரும்புகையில் என்னுடனும் இரண்டு வாரம் பாரிஸில் தங்குவது இவர்களுக்கு வழக்கம்.

“என்னடா ஹரிஷ், இப்படி மெலிஞ்சிட்ட? ஒழுங்கா சாப்பிடறியா! இல்ல சான்ட்விச் தானா?” என்ற அம்மாவின் வழக்கமான கேள்விகள். ” பெற்றோரை தாண்டி கண்கள் விமான நிலையத்திற்கு வெளியே அலைந்தன.
நான் வளர்ந்த இடம், வாழ்ந்த வாழ்கை, இவற்றை இந்த மூன்று வார விடுமுறையில் வாழ்ந்தாக வேண்டும் என்ற ஒரே லட்சியம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.

சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் மழைத் தூறலின் அடையாளமாக மண் வாசனை நாசியைத் துளைத்தது. திரிசூலதிளிருந்து திருவொற்றியுரை அடைவதற்குள் பொழுது புலர்ந்திருந்தது. சாலைகள் சீராக இருந்தது. சென்ற பாதை இது சென்னை தானா என்ற சந்தேகத்தை கிளப்பியது.

ஐந்து மணி நேர உறக்கத்திற்கு பின் என் இலட்சியத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கினேன். சின்னவயதில் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வது வழக்கம். தியாகராஜ சுவாமி கோயிலுக்கு செல்ல ஆட்டோ பிடித்தேன். “நாற்பது ருபாய் கொடுங்க, தம்பி” என்றார். நியாமான விலைதான் என்று யோசிப்பதற்குள் “தம்பி, போலீஸ் வந்து கேட்டாங்கன்னா மீட்டர் போட்டிருக்கேன்னு சொல்லுங்க” என்றார்.

கோவிலை அடைந்து சாமி தரிசனம் முடிந்த பின் கோவிலுக்கு அருகில் நண்பர்களுடன் பட்டாம்பூச்சி பிடித்து விளையாடிய இடத்திற்கு விரைந்தேன்.  மரங்கள் இருந்த இடங்கள் மாடர்ன் அபார்ட்மேன்ட்சாக மாற்றப்பட்டிருந்தது.
அருகில் உள்ள நண்பனின் கடைக்கு சென்றேன். கடும் உழைப்பால் தன் அப்பாவின் மளிகைக் கடையை சூப்பர் மார்க்கெட்டாக மாற்றியிருந்தான். என்னைப் பார்த்த சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஆடினான். “ஏன்டா ஆளே  இப்படி சோர்வா தெரியறே?” என்று கேட்டது தான் தாமதம். அவனுடைய சர்க்கரை நோயைப்பற்றி புலம்பினான்.
விடுமுறை நாட்கள் தாறுமாறான வேகத்தில் ஓடியது. கல்லூரி நண்பனுடன் பேருந்தில் பயணிக்க விரும்பினேன்..
“ஏன்டா?! நீ போய் பஸ்ல போனுங்கிற? வேனும்னா சினிமாக்கு ஆட்டோல போகலாம்டா, இல்லைன்னா என் வீட்டிலிருந்து கார் அனுப்ப சொல்றேன்டா!” என்றான்.

அவனை ஏதோ தாஜா செய்து அவன் மனதை மாற்றி, இருவரும் பேருந்தில் பிரயாணித்தோம். ஃபுட்போர்ட் அடிக்க மனமில்லை எல்லா நாட்டிலும் பேருந்தில் பயணித்து நம்நாட்டில் செல்வதில் மட்டும் என்ன கெளரவ குறைச்சல் தெரியவில்லை. இந்த குழப்பத்திலிருந்து விடுபடுவதற்குள் “க்ரீச்” என்ற சத்தத்தோடு பேருந்து நின்றது. சுமார் ஐம்பது வயது பெண்மனி ஒரு கையில் கைப்பையும் ஒரு கையில் காய்கறி பையுமாக எழுந்தார் இறங்குவதற்காக. நடத்துனர், “ஏம்மா, முன்னாடியே எந்திரிச்சு வர மாட்டியோ?” என்றார்.
“பஸ் நின்னவுடனே தானங்க இறங்குவாங்க. ஓடுற பஸ்ல எந்திரிச்சு நடக்க சொல்றீங்களே, இது நியாயமா? இதனால தான் பஸ்ல நிறைய பேர் போக தயங்குறாங்க” என சண்டை பிடித்தேன். அந்த பெண்மனிக்கு வக்காளத்து வாங்காமல் இருக்க முடியவில்லை. நண்பன் என்னை அடக்க முயன்றான். “முரளி, உனக்கென்னடா ஆச்சு, நீனும் இப்படி அமைதியாயிட்ட” என அவனிடம் குமுறினேன். திரைப்படம் செல்ல வேண்டும் என்று சொன்னவுடன் இணையதளத்தில் டிக்கெட் வாங்கி ஒரு மல்டிப்ளெக்ஸ் மாலுக்குள் அழைத்து சென்றான்.

இந்தியாவிலும் மேற்கத்திய பிம்பம். கட்டிடம் மட்டுமில்லாமல், ஆடை அணிகலன், இளவட்டங்களின் பழக்க வழக்கம், அனைத்தும் பாரீஸை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. தமிழுக்கு அதிகம் தட்டுப்பாடு. ஆங்கிலம் அனைவரிடமும் சரளமாக வந்தது. நானும் விடாமல் அனைவரிடமும் தமிழில் பேசினேன். உள்ளே ஒரு உவகை. தாயகத்தில் தமிழகத்தை தேடினேன்.

திரும்பி வருகையில் புரசைவாக்கம் சிக்னலில் இரு சக்கர வாகனங்கள் கோட்டைத் தாண்டி நின்று புகை மண்டலத்தை கிளப்பியது. “இவர்களுக்கு ஏன் இந்த அவசரம்?”. இது மட்டுமில்லாமல் புரசைவாக்கத்தில் நின்று கொண்டு “பீச் ரோட்டுக்கிட்ட வந்துட்டேன்டா” என்று ஒரு இளைஞன் அலை பேசியில் அளந்து கொண்டிருந்தான்.

அடுத்தநாள் அம்மாவுடன் அருகில் உள்ள துணிக்கடைக்கு சென்று உறவினர்களின் குழந்தைகளுக்கு துணிமணி வாங்கினேன். கடைக்காரர், பணத்தை பெற்றுக் கொண்டு மீதி சில்லரையை என்னிடம் கொடுத்தார். நான் அந்த இடத்தில் அகலாமல் நின்றதை பார்த்து, “சரிதானே சார்?” என்றார். “ரசீது வேணும்” என்றேன். சற்றே சலிப்புடன் அதை கையில் கொடுத்தார். “நாம் கொடுக்கிற பணத்துக்கு ஒழுங்கா வரிகட்டிட வேண்டியதுதான, இதுல இவங்களுக்கு என்னம்மா பிரச்சினை?” என அம்மாவிடம் புலம்பினேன். “ஏன்டா, வந்ததிலேர்ந்து பார்க்கிறேன், எல்லாத்துக்கும் டென்ஷன் ஆற?” என அம்மா வருத்தப்பட்டார். “முதல்ல உனக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கனும்” என்று தாய்மை தன்னை வெளிப்படுத்தியது.

“அம்மா, நான் என்ன சொல்றேன், நீ என்ன பேசுற?” என எரிச்சலை வெளிப்படுத்தினேன். என் தாய்க்குகூட புரியவில்லை. கவலை தாரத்தைப் பற்றியல்ல தாயகத்தை பற்றி என..

விடுப்பு முடிந்து பாரீஸுக்கு திரும்பி வேண்டிய நாள் வந்துவிட்டது. பட்டாம்பூச்சி கணவுகளுடன் இந்தியனாய் மட்டுமே தாயகம் வந்த நான், அதன் குறைகளை ஏற்க முடியாமல் கனத்த மனதோடு இவை சரியாகும் என்ற நம்பிக்கையுடன் விமானத்தில் புற்ப்பட்டேன். “நான் இதற்கு என்ன செய்ய வேண்டும்” என்ற கேள்வி மனதை பிசய ஆரம்பித்தது.
விமானம் தரை இறங்கியவுடன் அலைபேசிக்கு உயிரூட்டினேன். “இந்த ஞாயிறு அன்று தமிழர் திருநாள் விழாவிற்கு, அனைவரும் பாரீஸ் தமிழ் சங்கதிற்கு வருக” என்ற அலைபேசி வாசகம் என்னை பாரீஸ் நகரத்திற்க்கு அழகாக வரவேற்றது.

– Dr. K. நந்தினி (லண்டனிலிருந்து)

Likes(17)Dislikes(0)
Share
 Posted by at 12:14 am

  One Response to “கானல் நீர்”

  1. ஒவ்வொரு முறை எந்த வெளிநாட்டுக்கு சென்று திரும்பும்போதும், மனச்சாட்சி உள்ள ஒரு இந்திய குடிமகனுக்கு தோன்றும் உணர்வுகளை இந்த கதை அல்லது கட்டுரை தெளிவாக விளக்குகிறது. என்ன செய்ய? இந்திய நாட்டில் மக்கள் அனுபவிக்கும் ''சுதந்திரம்'' வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது. இந்திய மக்களுக்கு 'கடமை' உணர்வை விட 'உரிமை'உணர்வுகள்தான் அதிகம்.

    Likes(2)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share