Oct 152014
 

A1

“தரமான கல்வி தான் நாம் நாட்டிற்கு இன்று அத்தியவசமான தேவை. அது கிடைத்தால் நம் நாட்டில் உள்ள பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். ஒவ்வொரு மாணவனிடமும் ஒரு தனி சிறப்புண்டு. எந்த ஒரு தேர்வும் ஒரு மாணவனின் அறிவு திறமையை துல்லியமாக எடை போட்டு விட முடியாது. ஒரு மாணவனின் நியாபக சக்தியை எந்த ஒரு மூன்று நேர பரீட்சையும் கணித்து விட முடியாயது..”

மதிப்பென் குறைவாக எடுத்த மாணவர்களுக்கு, மேல்கூறியது போல் பல நச்சென்ற வரிகள், நம்பிக்கை ஊட்டும் விதைகளாய் வந்து விழுகின்றது திரு.தா.நெடுஞ்செழியன் வாயிலாக.

நாம் கேள்விபட்ட படிப்புகள் மற்றும் கல்லூரிகளை எல்லாம் தாண்டி பல வாய்ப்புகளும், தரமான கல்லூரிகளும், கல்வியும் நிறைய நம் நாட்டில் உள்ளது என்று அழுத்தமாக சமுதாயத்திற்கு கூறி வரும் இவரை கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளில், நிறைய தொலைக்காட்சிகளிளும் பத்திரிக்கைகளிளும் காணலாம்.

பள்ளி முடித்து உடன் நன்றாக மதிப்பெண்எடுத்தால் மருத்துவம் அல்லது பொறியியல், மதிப்பெண் நன்றாக இல்லை என்றால் வீட்டருகில் உள்ள எதாவுது தனியார் கல்லூரி என்றஎண்ணம்  இருக்கும் இன்றய சமுதாயத்தில் நீங்களும் ஒருவரா,அப்படி என்றால் கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும்.

 

B+: வணக்கம்சார், உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

என் பெயர் நெடுஞ்செழியன். சொந்த ஊர் மதுரை. 1986-90இல், கிண்டி காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங்கில் மெக்காநிக்கல் இஞ்சினியரிங் படித்தேன். மும்பையில் சில  வருடங்கள் பணி செய்த பிறகு, சமுதாயத்திற்கு எதாவுது செய்யலாம் என்று 2004 இல் இருந்து “Technocrats India College Finder” என்ற நிறுவனத்தை துவக்கி நடத்தி வருகிறேன் அதன் வெப்சைட் www.indiacollegefinder.org

மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கை குறித்தும்,இந்தியாவில்பள்ளிமுடிந்தபின்என்னென்ன கல்வி நிறுவனங்கள், வாய்ப்புகள் எந்த மாநிலத்தில்  உள்ளன, அவைகளின் தனி சிறப்பு என்ன என்று விழிப்புணர்வை எங்கள் நிறுவனம் மூலம் தந்து வருகிறோம்.

 

B+: வியாபாரம் செய்வதற்கு நிறைய துறை இருக்கும் போது, இதை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

சமூகத்திற்கு ஏதாவுது பயனுள்ள வகையில் செய்ய வேண்டும் என “social entrepreneurship” செய்ய விரும்பினேன். இன்றைக்கு குழந்தைகளுக்கு நிறைய படிப்பதற்கு options உள்ளது. இப்போது பெற்றோர்கள் என்ன செய்கிறோம் என்றால், ஃபுட்‌பால் விளாயாட்டு மைதானத்திற்கு மாணவர்களை அனுப்பி விளையாட சொல்கிறோம். மாணவர்களும் கடுமையாக விளையாடி வெளியில் வந்தபிறகு தான் அவர்களிடம் “goal post” எங்குள்ளது என்றே கூறுகிறோம். அதனால் கடுமையாக உழைத்து இரண்டு வருடம் goal post எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் விளையாட, விளையாட்டின் நோக்கம் தோல்வியில் தான் முடியும். இன்றைக்கு பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், மார்க்ஸ் எடுத்தால் மட்டும் தான் வாழ்க்கை, என்று ஒரு தவறான அபிப்ராயத்தில் இருக்கிறார்கள்.

கல்வி என்பது ஒட்டுமொத்த அறிவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் பெருக்க கூடியதாக இருக்க வேண்டும். எந்த கல்லூரியில் படிக்கிறீர்கள், அங்குள்ள கல்வியின் தரம் இதெல்லாம் மிக முக்கியம். இப்போது ஹோட்டல் மேநேஜ்மென்ட் என்ற ஒரு படிப்பை எடுத்துக்கொள்வோம். சென்னையில் சாதாரண கல்லூரி ஒன்றில் இதை ஒரு மாணவன் படித்தால், எதாவுது ஒரு சிறிய ஹோட்டலில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதே படிப்பை  அரசின் IHM இன்ஸ்டிட்யூட்டில் படித்தால், ஒரு 5-ஸ்டார் ஹோட்டலில் பணி செய்யலாம். டிகிரி பெயர் ஹோட்டல் மேநேஜ்மென்ட் தான், ஆனால் எங்கு படிக்கிறோம் என்பது தான் வித்தியாசம். என்கருத்து என்னவென்றால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் அறியாமையினால், அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல், அவர்களின் திறமையும் வாழ்க்கையும் வீணடிக்கப்படுகிறது.

 

B+: ஏன் குறிப்பாக கல்வி துறையை தேர்ந்தெடுத்தீர்கள்?

இன்று குழந்தைகள் நன்றாக படிக்கிறார்கள், நிறைய திறமை இருக்கிறது. ஆனால் அந்த திறமையை மேலும் மெருகேத்தும் சரியான நிறுவனத்திற்கு செல்வதில்லை என்பது தான் என் ஆதங்கம். நான் படித்தது ஒரு நல்ல கல்லூரி. அங்கு படித்த எங்கள் பேட்ச் 25 வருடம் கழித்து எவ்வளவு நன்றாக இருக்கிறார்கள் என ஒருபுறம் பார்க்கும் போது, எங்களை போன்றே நன்றாக படிக்கும் மற்ற மாணவர்கள் சரியில்லாத இன்ஸ்டிட்யூட் சென்று படித்ததில், கஷ்டப்படுவதையும்மறுபுறம்  பார்த்தேன். இனி அடுத்த வரும் தலைமுறைக்கும் அவர்கள் திறமைக்கேற்ற நல்ல இன்ஸ்டிட்யூட்டை காண்பிக்கலாம் என்று நினைத்தேன்.

20 வருடங்களாய் கஷ்டப்படுகிற குடும்பத்திலிருந்து வரும் ஒரு மாணவன் நல்ல கல்வியினால், அவனது குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவரமுடிகிறது. அவனை சுற்றி  உள்ளவர்களும்வளர்ந்து, சமுதாயம் வளர்ச்சி பெறுகிறது.இதற்கு நல்ல கல்வியும், கல்வித்தரமும் மிக மிக முக்கியம். குழந்தைகளிடம் கல்வி என்ற பெயரில் ஒருவரும் ஏமாற்றி பணம் சம்பாதிக்ககூடாது. பணம் சம்பாதிக்க பல துறைகள் இருக்கிறது. ஆனால் கல்வி என்ற பெயரில் குழந்தைகளை ஏமாற்றினால், ஒரு நல்ல சமூகத்தை நாம் உருவாக்க தவறி விடுவோம். அதற்குதான் இந்த பயணத்தை துவக்கினோம்.

 

B+: உங்களது வேலையை பற்றி சற்று விரிவாக சொல்லுங்கள்

கல்லூரியை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, முதலில் ஒரு புத்தகம் வெளியிட்டோம். பின்னர் அதிலிருந்து எங்களது பாதை தொடங்கி, நிறைய மாணவர்களையும் பெற்றோர்களையும்  சந்திக்கஆரம்பித்தோம். எந்த சமரசமும் செய்துகொள்ளாது, அரசு கல்வி நிறுவனங்களை, அரசு உதவியுடன் நடக்கும் அரசு சார்ந்த நிறுவனங்களை (Government aided institution) மட்டும் தான் மாணவர்களுக்கு பரிந்துரைப்போம். நாங்கள் சென்று பார்க்கும் குடும்பங்கள் பல, பொருளாதார ரீதியிலும் சற்று நலிவடைந்து இருப்பதனால், அவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கிறது.

 

B+: உங்கள் பார்வையில் அரசு நிறுவனங்களில் கல்வி தரம் எவ்வாறு உள்ளது?

மிக அருமையான தரம் உள்ளது. அரசு கல்லூரிகளில் 50-60 வருட அனுபவமும், நல்ல பெயரும் உள்ளது. இதுவரை 50-60 பேட்ச் மாணவர்கள் பல நிறிவனங்களில்,  தொழிற்சாலைகளில் சென்று சிறப்பாக பணியாற்றி நல்ல பெயர் எடுத்துள்ளார்கள். சமீபத்தில் வந்த தனியார் கல்லூரிகளின் தரம் அரசு கல்லூரிகளின் அளவுக்கு  வரவில்லை. இதனால் தான், இத்தனை வருடங்களை தாண்டியும் அரசு கல்லூரிகளில் சேர்வதற்கான கடும் போட்டி உள்ளது. அதற்காக எல்லாஅரசு பல்கலைக்கழகமும் நன்றாக உள்ளது என்று இல்லை, பெரும்பான்மையான கல்லூரிகள் நன்றாகவே உள்ளது.

A2

B+: யாரையெல்லாம் அணுகி counseling கொடுப்பீர்கள்?

முக்கியமாக மாணவர்களையும், பெற்றோர்களையும் சென்று பார்ப்போம். ஒரு மாணவனின் வாழ்வில் அவன் பெற்றோர்கள் பங்கு ரொம்ப முக்கியம் வாய்ந்தது. ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட திறமையும் சிறு வயதிலிருந்தே பார்ப்பதினால், பெற்றோர்களுக்கு தான் அவர்களை பற்றி நன்றாக தெரியும். குழந்தைகளின் எதிர்கலாத்தில்அதிகம் அக்கறையும் ஆர்வமும் உள்ளவர்கள் பெற்றோர்கள் தான். அதனால் மாணவர்களுடன் கண்டிப்பாக அவர்கள் பெற்றோர்களையும் சேர்த்து தான் இந்த நிகழ்ச்சியே நடத்துவோம். இந்த நிகழ்ச்சியில் நாங்கள் காண்பிக்கும் வெவ்வேறு துறையையும் பார்த்து பெற்றோர்களே, இந்த துறையில் எனது மகனுக்கு சிறிய வயதில் ஆர்வம் அதிகம் என்று எடுத்து சொல்வார்கள்.

 

B+: நீங்கள் சொல்லுவதையும் பரிந்துரைக்கும் படிப்புகளையும் பெற்றோர்களும் மாணவர்களும் எவ்வாறு ஏற்று கொள்வார்கள்?

கிட்டத்தட்ட அனைத்து பெற்றோர்களுமே நாங்கள் சொல்லும் கருத்துகளை ஏற்று கொள்கிறார்கள். 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கிருந்தாலும் பிரச்சினை இல்லை. 12ஆம் வகுப்பிற்குபின்சிறந்த அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகளில் சுமார் 80 நுழைவு தேர்வு உள்ளது. இந்த 80 தேர்வுகளில், கிட்டத்தட்ட 60 தேர்வில், மதிப்பெண்களை அடிப்படையாக வைப்பதில்லை. அவர்கள் வைக்கும் நுழைவு தேர்வின் அடிப்படையில் தான் அனுமதி வழங்குகிறார்கள். 12ஆம் வகுப்பில் 60% மதிப்பெண் இருந்தாலே போதும்.

12ஆம் வகுப்புஒரு முக்கியமான திருப்பம் என்று எவ்வாறுசொல்கிறோமோ, அதே போன்று 60 திருப்புமுனைகள் உள்ளன, இவை பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. இந்த கல்லூரிகளைப் பற்றி நன்கு தெரிந்த நாங்கள் மாணவர்களுக்கு அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கல்லூரிகளை பரிந்துரைப்போம். மாணவர்களுக்குள்ள பலதரப்பட்ட வாய்ப்புகளையும் அந்த துறையின் வளர்ச்சிகளையும் எடுத்துக் கூறி ஆழமான நம்பிக்கையை வளர்ப்போம்.

நாங்கள் பரிந்துரைத்த ஒரு 10 நுழைவே தேர்வை எழுதுகின்றனரெனில், எங்களது மாணவர்கள் 80 சதவீதம் பேர், ஒரு 5 தேர்வுகளாவது எளிதாக தேர்ச்சி பெற்று விடுவர். அதற்குபின் அவர்களுக்கு பிடித்த Course  மற்றும் கல்லூரியில் சேர்வதற்கு நாங்கள் அவர்களோடு பணியாற்றுவோம். 12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக எடுத்த போதும், அனைத்து இந்திய அளவு தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று, அரசு கல்லூரிகளில் நுழைவு கிடைக்கும்போது அந்த மாணவர்களின் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் அளவே இருக்காது. இதையெல்லாம் நிறைய மாணவர்கள் செய்து சாதித்துள்ளனர் என்று நாங்கள் காணும் மாணவர்களிடம் எடுத்துக் கூறுவோம். ஒரு குழந்தை பரீட்சைக்கு எவ்வாறு படித்து தயார் செய்துள்ளது, அதை எவ்வாறு நியாபகம் வரவைக்கிறது, தேர்வில் எவ்வாறு எழுதுகிறது என்று உலகில் அளக்க கூடிய எந்த ஒரு கருவியும் தேர்வும் இல்லை.

 

B+: அவ்வாறு 12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்து, பின்னர் மேல் படிப்பில் சாதித்த உங்கள் மாணவர்கள் எவரேனும் பற்றி..

நிறைய இருக்கிறார்கள். ஒரு பெண் 68 சதவீதம் தான் வாங்கி எங்களிடம் வந்தார். பின்னர் அவருக்கு இந்தியாவின்  சிறந்த கல்லூரியான அஹமதாபாத்தில் உள்ள “national institute of design” இல் அனுமதி கிடைத்து அங்கே சேர்ந்தார்.

பூந்தமல்லி பார்வையற்றோர்கள் அரசு பள்ளியில் இருந்து ஒரு மாணவன். 824 மதிப்பெண், சுத்தமாக கண் பார்வையற்றவர், மூன்றாவது குருப், தமிழ் மீடியம், ஏழ்மை குடும்பம், இத்தனை சவால்களுடன் எங்களை வந்து பார்த்தார். அவருக்கு  ‘’common law“  நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தவே, அதை எழுதி, கொச்சியில் உள்ள “national university of advanced legal studies” கல்லூரியில் சேர்ந்து, மிக அதிக மதிப்பெண் எடுத்தார். அந்த course முடித்தவுடன் மேல் படிப்பிற்கு ஐயர்லாந்து நாட்டில் அனுமதி கிடைத்தது. பொருளாதார வசதி இல்லாததால், இப்போது டெல்லியீல் உள்ள “national law university“ படித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிலமையில் வேறு ஒருத்தர், 824 மதிப்பெண் எடுத்திருந்தால், எதாவுது ஒரு சாதாரண படிப்போ, சிறு கடையோ வைத்து இருந்திருப்பார். நாங்கள் பல வாய்ப்புகள் இருக்கிறது என்று அறிமுக படுத்தி, ஊக்கப்படுத்தியதால், இன்று மாபெரும் சாதனை புரிந்த நிலையில் உள்ளார்.

60% மதிப்பெண் வாங்கிய ஒரு மாணவர், பரோடாவில் உள்ள “MS university” இல்படிக்கிறார், இது போல் பல உதாரணங்கள், நிறைய மாணவர்களை நல்ல கல்லூரிகளில் சேர்த்துள்ளோம்.அவர்களெல்லாம் 12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்துவிட்டது, இனி வாழ்க்கை அவ்வள்வுதான் என்று எங்களிடம் வந்தவர்கள். அவர்கள் அறியாமையை நீக்கி, இன்று உள்ள பல்வேறுப்பட்ட வாய்ப்புகளை எடுத்துரைத்து, அவர்களுக்கு பயம் நீங்கி, புது நம்பிக்கை வருகிறது. அந்த நம்பிக்கையில், நுழைவு தேர்வுகளை எழுதவைத்து வெற்றி பெற வைப்போம். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு தனித்திறமை உள்ளது. அதை அவர்களுக்கு உணரச் செய்கிறோம்.

(மேலும் நிறைய கேள்விகளும் சுவாரஸ்யமான பதில்களும், மாணவர்களுக்கு தேவையான பல முக்கிய தகவல்களும் அடுத்த இதழில் தொடரும்..….)

 

வரவிருக்கும் கேள்விகளுள் சில…..

12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்து எடுத்தாலும் பிரச்சினை இல்லை என்கிறீர்களா?

பெற்றோர்கள் தரப்பிலிருந்து எத்தகைய சவால்களை சந்திக்கிறீர்கள்?

நீங்கள் கிட்டத்தட்ட 20லட்சம் மாணவர்களை சந்தித்திருக்கிறோம் என்றீர்கள், அவர்களில் எத்தனை பேருக்கு இது போன்ற தகவல்கள் தெரிந்துள்ளது?

12ஆம் வகுப்பு தேர்வை விட இந்த மாதிரியான தேர்வுகளை குறி வைத்து படிக்கலாமா?

என் இந்திய அளவில் உள்ள இத்தனை நல்ல அரசு கல்வி நிறுவனங்கள் பற்றியெல்லாம் நமக்கு தெரிவதில்லை?

Likes(6)Dislikes(2)
Share
 Posted by at 1:07 am

  2 Responses to “எல்லோரும் சாதிக்கலாம்!”

  1. வணக்கம்! நண்பர்களே! நான் எதிர்மறையான கருத்துக்களை கூறுவதாக தவறாக நினைக்க வேண்டாம். நமது மாணவர்களில் பெரும்பாலோருக்கு உழைத்து முன்னேறுவதில் நம்பிக்கையே இல்லை. எல்லோருக்கும் படித்து முடித்தவுடன் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை.அதுவும் மேனேஜெரோ அல்லது முதலாளி வெளியோவாக இருக்க வேண்டும். ஒரு சில வருடங்களிலேயே பெரும் பணக்காரராக ஆகி வீடுகள் கார்கள் வாங்கி வாரத்தில் பாதி நாட்கள் அல்லது மாதத்தில் பாதி நாட்கள் ஊரு ஊராக ஜாலியாக சுற்றுவதே குறிக்கோளாக இருக்கிறது. இந்த அடிப்படை எண்ணம் உருவாவதற்கு சமூக நிலை மற்றும் பெற்றோரின் மனநிலையும் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த மனப்போக்கு மாறாத வரையில் பொருள் சார்ந்த உலக வாழ்க்கை மட்டுமே சரி என்ற மனப் போக்கு மாறாத வரையில் சமூக மாற்றம் எனபது ஒரு கனவாகவே இருக்கும். என் எனில் என்ன விலை கொடுத்தாவது தகுதி இல்லாத ஒன்றை குறிப்பாக படிப்பை விலைக்கு வாங்க வேண்டி பெற்றோரும் மாணவர்களும் தயாராக இருக்கும் வரையில் கல்வி வியாபாரிகளின் வியாபாரம் செழிப்பாகவே இருக்கும். அந்த செழிப்பை வேண்டி வல்லான் வகுத்தே சட்டம் என்ற வகையில் அனைத்து அரசியல்வாதிகளும் பெரும் தொழிலதிபர்களும் கல்வி வியாபாரத்தை ஒரு குறைவுமின்றி நடத்தி வருவார்கள்.

    Likes(2)Dislikes(1)
    • சிந்திக்க வேண்டிய ஆழமான கருத்துக்கள்...

      Likes(0)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share