Jul 142014
 

1

தூக்கம் களைந்து, திடுக்கிட்டு எழுந்தேன். மணி அதிகாலை 4:30. என்னடா இப்படி ஒரு கனவு? 2042 ஆம் ஆண்டில் இப்படியா இருக்கும்? காற்றை விலைக் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையா? நினைத்து பார்க்கவே பயமாக உள்ளதே.. புரண்டு புரண்டு படுத்து பார்த்தேன், தூக்கம் வரவில்லை. மொட்டை மாடியில் கொஞ்சம் நேரம் உலாவி விட்டு வரலாம் என்று தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் எடுத்து கொண்டு மாடிக்கு சென்றேன்.

தண்ணீரை சிறிது பருகிவிட்டு, தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலை பார்த்தேன். கனவில் வந்தது சரிதான், 10-20 வருடங்களுக்கு முன், சுழற்சி முறையில் (REVERSE OSMOSIS) சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையோ, பிளாஸ்டிக் பாட்டிலையோ பயண்படுத்தியது கிடையாது. ஆனாலும் இப்போது நோய்க்கிருமிகளும், வைரஸ்களும் அதிகமாகி கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. வாயில் நுழையாத பல நோய்களின் பேரையும் மாத்திரைகளையும் திணித்து கொண்டே இருக்கிறது மருத்துவ உலகம். எங்கும் இரசாயன மயம்.

வீடு அமைந்திருந்த தெருவில் வெட்டபடாமல் எஞ்சி இருந்த மரங்கள் வழக்கம் போல், மனிதர்களுக்கு சேவை செய்துக்கொண்டிருந்தன. மனிதன்  விழிக்கும்முன் எழுந்து விடும் உயிரினங்கள், தங்களுக்குள் மனம் விட்டு பேசிக்கொண்டு, சிறகடித்துக்கு கொண்டிருந்தன. அவைகளை கூர்ந்து கவனித்தேன். கனவின் பாதிப்பு சற்றும் குறையாது இருக்கவே, மீண்டும் சில சிந்தனை ஓட்டங்கள்..

சில வருடங்களில் பெரும்பாலான பறவை இனங்கள் அழிந்து போய்விடுமோ? கைப்பேசிகள் கிராமத்தில் கூட நம்மை கூவி எழுப்பும் நிரந்தர சேவல்கள் ஆகிவிடுமோ? விளை நிலங்கள் எல்லாம், விலைக்கு விற்கப்படும் நிலங்களாக மாறி வருகிறது. சைவர்களும், அசைவர்களும் ஓரிரு  தலைமுறைகளுக்கு பின் ஒன்றாகி விடுவார்களோ? வருங்காலத்தில் அனைவருக்கும் உணவு, மாத்திரையாக தான் இருக்கக்கூடுமோ? அறுசுவை விருந்து என்பது மறைந்து, அறுசுவை மருந்து என்று ஆகக் கூடிய சூழ்நிலை வருமோ? உணவே மருந்து என்ற நேற்றைய கூற்று பொய்யாகி, மருந்தே உணவு என்று நாளைய கூற்று ஆகிவிடுமோ?

2

 

சிறுவயதில் நாம் அனுபவித்த பல நல்ல விஷயங்களையும், கள  விளையாட்டுகளையும், ஆத்மார்த்தமான உணர்வுகளையும், உறவுகளையும் இந்த தலைமுறையினர் நம் கண்ணெதிரே இழந்து வருகின்றனர். எலேக்ட்ரானிக் உலகம், இந்த தலைமுறையினரை கபளீகரம் செய்து கொண்டிருக்கையில், அடுத்த தலைமுறைகள் மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு உறக்கம் போன்றவற்றைக் கூட இழந்து விடுவார்களோ?

அடுக்கடுக்காய் பல கேள்விகள். என்ன தான் பூவுலகில் நடக்கிறது? ஒரு சிறிய உதாரணம். இப்போது கூட நாம் வசிக்கும் நகரத்தை விட்டு, ஒரு மணி நேரம்  நகரத்திற்கு வெளியில் உள்ள இடங்களுக்கு சென்று பார்த்து வந்தால் அப்படி ஒரு புத்துணர்ச்சி, மனநிம்மதி!! இதற்கு முக்கிய காரணங்கள் பெருகி வரும் வாகனங்களும், அவை கக்கும் கார்பன்-மோனாக்ஸைடும், போக்குவரத்து நெரிசலும் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று பெருநகரங்களில் வசிக்கும் பலருக்கு ஆஸ்த்மா, தோல் ஒவ்வாமை (அலர்ஜி), நுரையீரல் நோய், கண்கள் பாதிப்பு என்று அடுக்கி கொண்டே போகுமளவிற்கு நோய்கள். அத்தனை உடல் ரீதியான கோலாருகளுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த கார்பன்-மோனாக்ஸைடு திகழ்கின்றது.

“சொந்த கிராமத்தில் போய் இரண்டு நாள் தங்கி வந்தேன், உடலும் மனமும் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தது தெரியுமா?” என்று நம்மிடம் நிறைய நண்பர்கள் கூற கேள்வி பட்டிருப்போம், நாமும் அதை உணர்ந்திருப்போம். ஆனாலும் என்ன செய்வது? பிழைப்பிற்காக பெருநகரங்களை தேடி ஓடி வந்து விட்டோம், நமது  அடுத்த தலைமுறைகளுக்கு தேவைப்படும் என்று நகரங்களில் வீட்டை கடனில் (LOAN) வாங்கி, ஆயுள் முழுதும் வேலைப்பார்த்து வீட்டுக்கடன் (EMI) கட்டி கொண்டு இருக்கிறோம்.

முக்கியமான தகவல். யேல் நிறுவனம், கொலம்பியா பல்கலைக்கழகத்தில்  ஒவ்வொரு வருடமும், பல நாடுகளில், சுற்றுச்சூழல் செயல்திறன் (ENVIRONMENTAL PERFORMANCE INDEX)  எவ்வாறு உள்ளது என்று பட்டியலிட்டு வெளியிடுகிறது. மொத்தம் 178 நாடுகளில் கணக்கெடுத்ததில், நமது நாட்டிற்கு 155ஆவது இடமே கிடைத்துள்ளது வேதனையான உண்மை.

3

 

சற்று ஆழமாக யோசித்து பார்த்தால், ஒரு விஷயம் நன்றாகப் புலப்படும். அடுத்த தலைமுறைக்கு உண்மையான சொத்து எனும் ஒன்றை நாம் விட்டு செல்வதென்றால், கண்டிப்பாக அவை ஆரோக்கியமும், மனநிறைவும், சந்தோஷம் தரக்கூடிய சுற்றுப்புற சூழலும், நல் வாழ்க்கை முறையும் தான். சிலர் இருக்கும் வாழ்கையை தொலைத்து, அடுத்த தலைமுறைகளுக்கு என்று சொத்துகளை வாங்கி குவிப்பர், ஆனால், சில வருடங்கள் கழித்து, அந்த நகரங்களில் வாழக் கூடிய சூழ்நிலையே கிடையாது எனும் நிலை வரும்போது, அந்த சொத்துக்களுக்கு  எல்லாம் என்ன மதிப்பு இருக்கும்?

4

 

சரி என்னதான் செய்யலாம், காற்று மாசுப்படிருந்தாலோ, வசிப்பிடத்தைச் சுற்றி  குப்பையாக இருந்தாலோ, சாதாரன மக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? அதெல்லாம் அரசாங்கம் தானே பார்க்கவேண்டும் என நினைத்தால், நாம் பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக நாம் சில அடிப்படை விஷயங்களை கடைப்பிடித்து, குழந்தைகளுக்கும் கற்றுத் தர ஆரம்பிக்கவேண்டும். சிறு துளி தான் பெரும் வெள்ளம், சின்னஞ்சிறு நல்ல சேமிப்புகள் தான், நாளைய பேராபத்தை தவிர்க்கும் கேடயங்கள். அதை உணர்ந்து, நாம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய, தினமும் கடைபிடிக்க வேண்டிய, நம்மளால் செய்ய இயன்ற செயல்கள்..

1. ஒவ்வொருவரும் தான் வாழ்ந்து முடிக்கும் முன், 10 மரங்களாவது   பின்வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்லலாம்.

2. புகை பிடிப்பவர்கள், புகை பிடிப்பதை விட்டுவிடலாம் அல்லது முடிந்தளவு குறைத்துவிடலாம்.

3. மாடியிலும் வீட்டுத்தோட்டங்களிலும், சின்னஞ்சிறு செடிதொட்டிகளும், பூத்தொட்டிகளும் வளர்க்கலாம். உதாரணத்திற்கு, சோற்றுக்கற்றாழை (ALOE VERA).. இதனை கண்டிப்பாக வீட்டில் வளர்க்கலாம். காற்றிலிருந்து பல மாசுகளை குறைக்கும் வல்லமைகொண்ட கற்றாழையில் மருத்துவ குணங்களும் ஏராளம் உள்ளது. நம் நாட்டிலிருந்து பல கற்றாழைகள், அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

4. சிலந்தி ஆளை (SPIDER PLANT), பாக்கு பனை, ஸ்நேக் பிளாண்ட் (SNAKE PLANT), மணிப் பிளாண்ட் (MONEY PLANT), மார்கினாட்டா போன்ற பல செடிகள் காற்றில் உள்ள நச்சித்தன்மையும், விஷத்தன்மையும் அகற்றுகின்றன. வீட்டில் அவைகளை வைத்தும் அழகுப் பார்க்கலாம்.

5. வீட்டிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் எங்காவது போக வேண்டுமென்றால், வாகனங்களை தவிர்த்து, நடந்தே செல்லலாம்.

6. ரயில், பஸ் போன்ற போக்குவரத்துகளை, அதிக அளவில் உபயோக படுத்த ஆரம்பிக்கலாம். அதுவும் தனியாக போகும் போது கண்டிப்பாக பொது போக்குவரத்துகளை பயன்படுத்தலாம்.

7. வாகனங்களில் தனியாக செல்வதை விட்டுவிட்டு, நண்பர்களுடனோ, அலுவலகம் செல்லும் போது கூட வேலை செய்பவர்களோடும் (CAR POOLING) செல்லலாம்.

8. பிரிட்ஜ் (FRIDGE) தண்ணீரை பயன் படுத்துவதற்கு பதில், பழையமுறையான, பானை தண்ணீரை பருகுவதும், உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் நன்று.

9. தேவை இல்லாதபோது, வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருள்களை அணைத்து வைத்துவிட வேண்டும். ஏஸியை (AC) முடிந்த அளவு குறைப்பது  உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் நன்று.

10. காகிதங்கள உபயோகத்தை முடிந்த வரை குறைத்து கொள்ளலாம்.

11. குழைந்தகளுக்கு குப்பையை குப்பைத்தொட்டியில் போட சொல்லியும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துகொள்ளவும் கற்றுத் தர வேண்டும். மக்கும் குப்பை, மக்கா குப்பை எனத் தனியாக பிரித்து அதை சுழற்சி முறையில் பயன்படுத்துவோரிடம் தந்து பயன்பெறலாம்.

12. சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகளை பயன்படுத்த தொடங்கலாம். தண்ணீர் மற்றும் பல இயற்கை வளங்களை விரயமாக்காமல் பாதுகாக்கவேண்டும்.

நண்பர்களே, இது தவிர வேறு ஏதேனும் கருத்துக்கள் காற்று மாசுப்படுதலை தவிர்க்க உங்கள் மனதில் தோன்றினாலும், எங்களுடனும், உங்கள் நட்பு வட்டாரங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்த தலைமுறைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால், சுற்றுப்புரத்தை சுத்தமாக வைத்துகொள்வோம். நம்மால் இயன்ற அளவு மேலே சொன்ன விஷயங்களைக் கடைப்பிடிப்போம்.

இயற்கையை பேணிக் காப்போம், இயன்ற வரை சுற்று சூழலை மாசுபடுதலில்  இருந்து காப்போம். பசுமையான ஒரு சமுதாயத்தையும், ஆரோக்கியமான வாழ்வையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்.

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ Team.

Likes(17)Dislikes(0)
Share
 Posted by at 12:53 am

  3 Responses to “சோற்றுக்கற்றாழை”

  1. நல்ல படைப்பு. சில வருடங்கள் கழித்து மக்கள் கிராமங்களை நோக்கி பறப்பார்கள் என்பது உறுதி.

    Likes(3)Dislikes(0)
  2. நல்ல பதிவு. பொருள் சார்ந்த எதார்த்த வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் ஒத்து வரும் என்று தான் தெரியவில்லை.

    Likes(2)Dislikes(0)
  3. Need of the hour. Well presented. Let Bharath Maa bless you.

    Likes(5)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share