Jul 142014
 

7

மனைவியின் அமைதியான நிலைக்குத்திய பார்வையே மனக்கண்ணில் வந்து என்னை குற்றவாளியாக்கி கேள்விகள் கேட்டது. மௌனத்திற்கு வார்த்தைகளைவிட அர்த்தமும் வலிமையையும் உண்டு என்று புரிந்தது. மனைவியின் அடுத்து இருந்த இருக்கையில் அமர்ந்தேன். மனமோ பல நாட்களுக்கு முன்பு சங்கருடன் நடந்த நிகழ்விற்கு தாவியது.

“என்ன சங்கர், அந்த A1 கேர் ஹாஸ்பிடல் பத்தின ரிப்போர்ட் தயாரிக்க வேண்டாம்ன்னு சொல்லியும் தயாரிச்சி என்கிட்டேயே கொண்டுவந்து தந்திருக்கீங்க?” மருத்துவமனை செயல்பாடுகள் கண்காணிப்பு மற்றும் அனுமதி தரும் அரசு அதிகாரி என்ற முறையில் வந்த அறிக்கையை பார்த்து கேள்விகேட்டேன்.

“சார், அந்த ஹாஸ்பிடலில் புதுசா வந்த, பல பன்னாட்டு, உள்நாட்டு மருத்துகளையும் மனுஷங்களுக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணறாங்க. சிலபேருக்கு சொல்லிட்டு அவங்க சம்மதத்தோடு மருந்தை போட்டாலும் முழுசா அதோட பக்கவிளைவுகளை சொல்லறதில்லை.. நம் மக்களும் டாக்டர தெய்வமாய் பாக்கறாங்க. அந்த நம்பிக்கையை இப்படி துர்உபயோகப்படுத்தி உயிரோட விளையாடலாமா? மிருகங்களுக்கு இப்படி தந்தாலே அதற்கென்று கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் இருக்கு.”

“கூல் டவுன்… என்ன நீங்க இதுக்கு போய் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பேசறீங்க? நீங்க என்னதான் ரிப்போர்ட் பண்ணாலும் அவங்களோட பணபலம், ஆள்பலம் இதையெல்லாம் ஒண்ணுமில்லாம ஆக்கிடும். பணம், பொருள் இப்படி எது வேணும்னாலும் கேளுங்க கிடைக்கும்.”

“எப்படி சார், நீங்களே இப்படி பேசறீங்க? பணத்திற்கு வணங்கி தப்பான காரியங்களுக்கு துணைபோவது சரியா? ச்சே…. மண்ணை அழிச்சோம் பசுமை புரட்சிங்கற பேருல நம்மோட தானியங்களையும் இயற்கை விவசாயத்தையும் பின்னுக்கு தள்ளிட்டோம். அதோட நிக்காம நீர் நிலைகளை அழிச்சோம், மலைகளை அழிச்சோம், மனிதர்களையும் அழிக்கறோம்.. இப்போ. இப்படியே போனா எல்லாமே அழிஞ்சுபோய் கடைசியில் நாமே அழிவோம்.” என்ற சங்கர் என் கண்களுக்கு பைத்தியகாரனாக தெரிந்தான்.

“எப்படியும் நீங்களோ நானோ அந்த ஹாஸ்பிடலுக்கு போகபோறதில்லை. யாரு எப்படி போனா உங்களுக்கு என்ன? நீங்க இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசறதுனாலதான் உங்களுக்கு அடிக்கடி வேற வேற எடத்துக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது. எப்படியும் என்னோட கையெழுத்து இல்லாம உங்க ரிபோர்ட்க்கு மதிப்பில்லை. சோ நீங்க போகலாம்” சங்கரின் கண்முன்னேயே அந்த ரிப்போர்ட்டை கிழித்து குப்பையில் சேர்த்தேன்.

என் தவறான செயலுக்கான பிரதிபலன் கிடைத்தது. அதன் விலையும் புரிந்தது. இரண்டு நாட்களுக்கு முன் வெளியே சென்ற என் மனைவி சாலையில் மயங்கி விழவே, பொது மக்கள் அருகிலிருந்த A1 கேர் ஹாஸ்பிடலில் அவளை சேர்த்து, எனக்கு ஃபோனும் செய்தார்கள்.

“ஷிட், அந்த ஹாஸ்பிடலிலா?” கைபேசியை வைத்துவிட்டு மனம் நிலைக்கொள்ளாமல் ஹாஸ்பிடலுக்கு வந்த போது எல்லாமே நிகழ்ந்து விட்டது.

“சார், இது புதிதாக பரவி வரும் நோய், லேசான காய்ச்சலில் தொடங்கி, பின் காய்ச்சல் அதிகமாகி மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறார்கள், அவர்களுக்கு நாங்கள் இந்த மருந்தைத் தான் தருகிறோம்” என ஹாஸ்பிடலில் தெரிவித்தார்கள்.

மனைவியின் உடலில் எவ்வித உணர்வும் அசைவும் இல்லை; நினைவும் இல்லை. மூச்சு மட்டும் “நான் உயிருடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துக்கொண்டு இருந்தது.

மனைவியின் நிலையை பார்த்து பித்து பிடித்தது போல் நேராக ஹாஸ்பிடல்  மேலிடத்திற்கு சென்றேன் “டாக்டர், நீங்க எப்படி என்னோட மனைவிக்கு பரிசோதித்துக்கொண்டு இருக்கும் அந்த மருந்தை கொடுக்கலாம்? அந்த மருந்து இதுவரையில் அங்கீகரிக்கப்படவில்லை.”

“வாங்க மிஸ்டர், வாங்க. எங்களுக்கு எப்படி அது உங்க மனைவின்னு தெரியும்? என்று இளக்காரமாக அவர் கேட்டப்போது எனக்கு சுட்டது.

“ஸ்டாப் இட். என்ன பேசறீங்க. நான் இதை சும்மா விடபோறதில்லை”

“ஹா ஹா ஹா. கம் ஆன். குட் ஜோக். நீங்களே எங்க ஹாஸ்பிடல் பத்தி நல்ல ரிப்போர்ட் குடுத்து இருக்கீங்க. சட்டப்படி எங்க போனாலும் நாங்க தான் ஜெயிப்போம். உங்கள மாதிரி சுயநலமானவங்க இருக்கற வரை நாங்க எங்கேயும் எப்போதும் ஜெயிப்போம். இப்பவும் நீங்க எங்களுக்கு வேண்டிய ஆளா இருக்கறதாலதான் உங்க மனைவிய வேற எடத்துக்கு கொண்டுபோக சம்மதிக்கறோம்.”

எப்படியோ அங்கிருந்து என் மனைவியை வேறொரு நல்ல மருத்துவமனைக்கு கொண்டு போனாலே போதும் என்ற நிலையில் வெளியேறினோம்.

“உங்க மனைவியோட ரிப்போர்ட் கிளியரா இல்லை. மொதல்ல என்ன காரணம்ன்னு தெரிஞ்சாதானே சரி பண்ண முடியும். இப்போ ஒரே ஆறுதல் உயிரோட இருக்காங்க. அப்சர்வேஷன்ல இருக்கட்டும். ஆண்டவன் துணையிருப்பார், அவரை நம்புங்க.” என்று கூறி சென்ற மருத்துவரை பார்த்தேன். காரணம் அறிந்தும் சொல்ல முடியாத நிலை.

அன்று சங்கர் கூறிய ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தமும், ஆதங்கமும், வலியும் இன்று புரிந்தது. ஜீவச்சவமாக இருக்கும் மனைவி எனக்கு போதிமரம் ஆனாள். மனைவியின் இந்த முகமே எனக்கு தண்டனை ஆனது. நான் செய்த காரியம் என் மக்களுக்கும் மனைவிக்கும் தெரிந்திருந்தால்….மனம் வலித்தது.

நானே என்னைப்பார்த்து அருவருப்பானேன். என் மனம் உள்ளிருந்து பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தது “இப்போதாவது ஏதாவது செய்ய வேண்டும். இதுவரை இதுபோல் எவ்வளவு குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கும்? எத்தனையோ குடும்பங்களின் ஆணிவேராக இருந்த மக்கள் அழிந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.” என் மனம் கேட்ட கேள்விகள் ஒன்றுக்கும் என்னிடம் பதில்லை. பல நேரம் யோசித்து முடிவு செய்தேன்.

“சங்கர், கொஞ்சம் வரமுடியுமா?”

“எனக்கு இப்போதான் புரியுது உங்க வார்த்தைகளுக்கான அர்த்தம். என்னையே என்னால மன்னிக்க முடியல, செய்த காரியம் அப்படி. நானும் உங்க கூட இருக்கேன். எங்கெங்கே ஓட்டைகள் இருக்குன்னு எனக்கு அத்துபடி. இனி உங்கள மாதிரி குரல் கொடுக்கும் மனிதர்களுக்கு நான் தப்பிக்கும் ஓட்டைகளை காட்டறேன். நீங்க அதை அடைச்சா கண்டிப்பா இதுபோல் சம்பவங்கள் குறைந்து பின்பு இல்லாமலே போய்விடும்.” என்று கூறியவாறு என் மனைவியை பார்த்தேன், அந்த வெறித்த பார்வையின் குத்தல் சற்று குறைந்ததுபோல் இருந்தது.

எண்ணமும் செயலும் தான் வாழ்வை வழிநடத்தும் என்பது நன்கு புரிந்தது. கண்டிப்பாக இப்புதிய சிந்தனை என் மனைவியை மீட்டு தரும் என்ற நம்பிக்கையில் நான் சுயநலமில்லா நல்ல மனிதர்களுடன் இணைந்தேன்.

விஜி சுஷில்

(நமது B+ வாசகர்)

Likes(4)Dislikes(1)
Share
 Posted by at 12:37 am

  2 Responses to “கண்டுகொண்டேன் (சுய)நலத்தை!”

  1. Very Touching and social awareness story! Thanks for sharing with us Viji!

    Likes(3)Dislikes(0)
    • நன்றி அல்லி ராஜன்

      Likes(1)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share