May 142014
 

VVS

சில மாதத்திற்கு முன்பு வேலை விஷயமாக திருச்சிக்கு காலை ரயிலில் போக வேண்டியிருந்தது. அப்போ உடன் இருந்த சக பயணி ஒருவர் சொன்ன நல்ல விஷயத்தை இப்போ படிக்க போறீங்க.

எல்லா ஊரிலேயும் லட்சக்கணக்கான மக்கள் இருந்தாலும் சில நபர்கள் தான் அந்த ஊருக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கிறார்கள். பாளையம்கோட்டைனா கட்டபொம்மன், போர்பந்தர்னா காந்தி, எட்டயபுரம்னா பாரதி, திருப்பூர்னா குமரன் இப்படி சொல்லிட்டே போகலாம். அது மாதிரி வரகனேரினா  வேங்கடேச சுப்பிரமணிய அய்யர். இந்த பெயரை புதுசா கேக்குற மாதிரி இருக்கும். ஆனால், வ.வே.சு.அய்யர் என்று நமக்கு அறிமுகமான சுதந்திர போராட்ட வீரருடய முழு பெயர் தான் இது.

காந்தியுகத்திற்கு முன் சுதந்திர வேள்வியை நடத்திட தமிழகம் பல தவப்புதல்வர்களை கொடுத்தது. அவர்களுள் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார், முண்டாசு கவிஞன் என்று அழைக்கப்பட்ட சுப்ரமணிய பாரதி, மற்றும் வ.வே.சு. அய்யர் என்று அழைக்கப்பட்ட வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய அய்யர் இவர்கள் எல்லோரும் சமகாலத்தவர்கள்.

வ.வே.சு.அய்யர் 1902இல் சட்டம் படித்து, திருச்சி மற்றும் ரங்கூனில் வேலைப் பார்த்து 1907இல் இங்கிலாந்திற்கு பாரிஸ்டெர் சட்டம் [Barrister Law] படிக்க சென்றார். அந்த சமயத்தில் வீர் சாவர்கருடன் தொடர்பு ஏற்பட்டு சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சாவர்கர் அவர்கள், அய்யரை ராஜரிஷினு தான் கூப்பிடுவார். மற்ற விடுதலைப்போராட்ட வீரர்களான விபின் சந்த்ரபால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின்  “இந்தியா” பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.

சாவர்கர், 1857 இந்தியா சுதந்திர போர் என்று ஒருப் புத்தகம் எழுதினார். ஆங்கிலேயர்கள், அப்புத்தகத்தை தடை செய்தவுடன், அந்த புத்தகத்தை ரகசியமாக இந்தியாவிற்கு எடுத்து வந்து முதல் பதிப்பு வருவதற்கும் அய்யர் பெறும் பங்கு வகித்தார். சாவர்கர் அந்தமான் சிறையிலிருந்து வெளிக்கொணர பல முயற்சிகள் எடுத்தார் அய்யர்.

நிறையப் பேருக்கு வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றார் என்று தெரியும். ஆனால், அய்யர் தான் அவருக்கு துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தார் என்று தெரியாது. நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆயுதம் ஏந்தி போரடினவங்களோடா சேர்க்கப்ப்படவேண்டியவர். அதற்காகப் பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்வு நடத்தியுள்ளார்.

 

இலக்கியத்திலும் தொண்டு:

பாரதிக்கு அடுத்தபடியாக வ.வே.சு.அய்யர், தமிழ் இலக்கியத்திற்கு மிகப் பெரிய தொண்டு செய்துள்ளார். வ.வே.சு.அய்யர் சிறந்த இலக்கியவாதிகவும், மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். வ.வே.சு.அய்யர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதற்கு மிக நீண்ட ஆய்வு முன்னுரையும் வழங்கியுள்ளார். இலக்கியவாதிகள் இவரை திறனாய்வின் முன்னோடி என்று சொல்கிறார்கள்.

இன்றைக்கு எல்லோரும் சிறுகதைகள் படிக்கிறோம். தமிழில் சிறுகதையின் தந்தை வ.வே.சு.அய்யர்னு சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். வ.வே.சு.அய்யர் “குளத்தங்கரை அரச மரம்” என்ற பெயரில் ஒரு சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன் முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதையாகும். 1917-ஆம் ஆண்டில்வெளிவந்த “மங்கையர்க்கரசியின்காதல், காங்கேயன், கமலவிஜயம், ழேன்ழக்கே, குளத்தங்கரை அரசமரம் ஆகிய ஐந்து சிறுகதைகளைத் தொகுத்து மங்கையர்க்கரசியின் காதல் என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இதுவே தமிழில் வெளி வந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.

அய்யரது இலக்கியப்பணிக்குப் பின்புலமாக இருந்தது அவரது பரந்த படிப்பு. ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு முதலான மொழிகளில் அவர் புலமை பெற்றிருந்தார். அந்த மொழிகளில் உள்ள காவியங்களை அந்த மொழிகளிலேயே படித்தவர் அவர். கம்பராமாயணத்தையும் ஆழமாகப் படித்திருக்கிரார். கம்பனைப் படித்து அதில் காதல் கொள்ளாதோர் எவரும் இருப்பாரோ. கம்பனை மற்றக் கவிஞர்களுடன் ஒப்பிட்டுக்காட்டி, இவர்கள் எல்லாரையும் விடக் கம்பன் உயர்ந்தவன் என்று கூறியவர் அய்யர்.

அவருடைய வார்த்தையாகவே பார்ப்போமே – “கவிலோகத்தில் பேரரசர் என்று சொல்லத் தகுந்தவர்களெல்லாம் கம்பனுடைய சந்நிதியில் முடிசாய்ந்து வணங்க வேண்டியதுதான். மேல்நாட்டாருக்குள் கவிசிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர் (Homer), விர்ஜில் (PubliusVergiliusMaro), தாந்தே (Durante degli Alighieri), ஷேக்ஸ்பியர் (Shakespeare), மில்டன் (Milton), மோலியர் (Jean-Baptiste Poquelin (a) Molière), கதே (Kate Tempest) ஆகிய இவர்கள் கவிதையின் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழேதானிருக்கிறார்களே ஒழிய அவனை மீறவில்லை

சொன்னது மட்டும் இல்லாமல் அய்யர், கம்பனைப் பற்றி ஆங்கிலத்தில் “A Study of Kamba Ramayana” என்ற நூலை எழுதினார். எழுதினார் என்றால் வீட்டில் இருந்து எழுதவில்லை. தீவிரவாத செயலில் ஈடுபட்டார் என்று ஆங்கில அரசு இவரை சிறையில் அடைத்தது. 1921-ல் பெல்லாரி சிறையில் 9 மாதம் இருந்போதுதான் கம்பனைப் பற்றி எழுதினார். இந்த முயற்சியுடன் அய்யர் நிற்கவில்லை. சாதாரண மனிதனுக்கும் விளங்க வேண்டும் என்று கம்பராமாயணத்தினை பதம் பிரித்து பாலகண்டத்தினை சுருக்கி வெளியிட்டார். இதே போன்று பாடபேத ஆராய்ச்சி, கம்பனது காலம் பற்றிய ஆராய்ச்சி ஆகியவற்றிலும் அய்யர் ஈடுபட்டார். சிறைதண்டனைகள், அவருள் இருந்த மற்றொரு இலக்கிய திறைமையை வெளிக்கொணர கிடைத்த சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டார்.

இத்துடன் மட்டுமல்லாமல் கவிதை பற்றிய கொள்கையை மூன்று கட்டுரைகளில் விவரித்துள்ளார். அவரது “காவியஉத்தியானம்’ என்ற கட்டுரை உலக இலக்கியங்கள் அனைத்தினையும் பற்றியது.

தமிழ்நாட்டு அறிஞர்களில் இவ்வளவு மொழிப்புலமை வாய்த்த ஆய்வாளர்கள் இருந்திருப்பார்களா என்கிற சந்தேகம் வருகிறது.

வன்முறைப்பாதையில் நம்பிக்கை கொண்டிருந்து, அந்தப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவரான வ.வே.சுஅய்யர், காந்தி இந்தியாவுக்கு வந்து காங்கிரஸின் தலைவர்களில் ஒருவராக ஆன ஆரம்பகாலத்தில், காந்தியை நேரில் சந்திக்கிறார். அந்த சாதாரண சந்திப்பில் காந்தியின் தோற்றத்தாலேயே மனமாற்றம் கொண்டு உறுதியான அகிம்சைவாதியாக ஆனார்.

இன்றைக்கு எல்லோரும் ஆங்கிலேய கல்விமுறை சரி இல்லை என்று சொல்கிறோம். இதை 1920-லேயே நிறைய பேர் சொன்னார்கள். பின்னாளில் காந்தி தேசியத்தை வளர்க்கிற சுதேசிக்கல்வி முறை தான் இந்த நாட்டுக்கு நல்லது என்று அவருடைய ஆசிரமத்தில் அதற்கான பாடம் சொல்லி கொடுத்தார். அதை பலபேர் பின் பற்றினார்கள். ஐய்யர் கூட நெல்லை அருகே உள்ள சேரண்மாதேவில பரத்வாஜ் அஷ்ரம்னு ஒன்றைத் தொடங்கி அங்குள்ள பிள்ளைகளுக்கு தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார். ஆனால் பணப் பற்றாக்குறையினாலும் அய்யரின் அகால மரணத்தினாலும் அந்த ஆசிரம பள்ளி தொடர்ந்து நடக்கவில்லை.

வ.வே.சு.அய்யர் பாபநாசம் அருவியில், தனது மகளைக் காப்பாற்ற முனைந்து, தவறி விழுந்து, 1925-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் நாள் மண்ணுலகை விட்டுப் பொன்னுலகை அடைந்தார்.

புறக்கணிக்கப்பட்டோ இருட்டடிக்கப்பட்டோ இருக்கிற நம்ம வரலாற்றை வெளிச்சம் போட்டு காட்டினாலே தனி தெம்பு வரும் என்று அந்த பயணத்தில் புரிந்துக் கொண்டேன்.

– D.சரவணன்

Likes(1)Dislikes(0)
Share
 Posted by at 1:10 am

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share