May 142014
 

Hannde

இந்த மாத சாதனையாளர் பக்கத்தில் மருத்துவம், அரசியல், இலக்கியம், சமூக சேவை என பலதரப்பட்ட களத்தில், தன் திறமையாலும் கடிண உழைப்பாலும், ஆழமாக முத்திரையைப் பதித்த டாக்டர் H. V. ஹண்டேவை பற்றிக் காண்போம் http://www.handehospital.org/hvhande.htm.

86 வயதாகும் இவர், சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஹண்டே மருத்துவமனையில், தொடர்ச்சியாக 60 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவ பயிற்சி செய்துக்கொண்டு வருகிறார். பல நோயாளிகளுக்கு நான்கு தலைமுறைகளாக ஒரு குடும்ப மருத்துவராக இருந்து வரும் இவர், இன்றும் சமுகத் தொண்டிலும் அரசியலிலும் தனது கால்தடையங்களைச் சிறப்பாகப் பதித்து வருகிறார்.

1942 இல் கல்லூரி மாணவராக இருந்தபோதே,  “வெள்ளையனே வெளியேறு“ போராட்டத்தில் கலந்துக்கொண்ட டாக்டர், அரசியலில் நுழைந்து பல சாதனைகள் புரிந்து, பல அரசியல் தலைவர்களின் பாராட்டுகளை பெற்றார். 1965 ஆம் ஆண்டு முதல், மூதறிஞர் ராஜகோபாலச்சாரியின் (இராஜாஜி) அடிச்சுவடில் முன்னேரினார்.

தமிழ்நாடு சட்டசபைக்கு (மேலவை மற்றும் பேரவைக்கு) ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் அமைச்சரவையில் சுகாதார மந்திரியாக பணியாற்றி உள்ளார். சுகாதார துறையில் தனது சிறந்த பணிக்காக 1985 ஆம் ஆண்டு டாக்டர் பி சி ராய் விருது பெற்றார்.

பேரரிஞர் அண்ணா, Dr.அம்பேத்கர், மூதறிஞர் இராஜாஜி, இவர்களின் மீது பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள டாக்டர் ஹண்டே, தற்போது பா.ஜ.க வில் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும், தமிழக பா.ஜ.க. வின் செய்தி தொடர்பாளராகவும் உள்ளார். இவருடன் பேட்டியிலிருந்து..

 

B+: வணக்கம் சார். உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள்.

டாக்டர்: எனது தந்தை தான் எனக்கு மருத்துவத் துறையில் முழு ஈடுபாடு வரக் காரணமானவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற அவரின் தொழில் நாட்டத்தைப் பார்த்து மிகவும் வியந்திருக்கிறேன். பல நாட்கள் அவராகவே நோயாளிகளின் இல்லத்திற்கு, இரவில் கூட சென்று மருத்துவப் பணி செய்து வருவார். பணத்தைப் பற்றியெல்லாம் யோசிக்கமாட்டார். ஒரு மாபெரும் அர்பணிப்பை நேரடியாகவே அவரிடம் பார்த்து வளர்ந்ததன் தாக்கம் தான், பிற்காலத்தில் நான் செய்த வேலைகளுக்கு அடித்தளம் இட்டது.

 

B+: மருத்துவத் துறை அனுபவம் பற்றி..

டாக்டர்: 1945-50 இல் சென்னை கே.எம்.சி கல்லூரியில், மருத்துவம் படித்தேன். என் தந்தை 1000ரூபாய் கொடுத்ததை வைத்து 1950 இல் இந்த ஷெனாய் நகர் மருத்துவமனையை ஆரம்பித்தேன். நல்ல பெயர் கிடைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் தேடி வர ஆரம்பித்தனர். அப்போதிலிருந்தே பணத்தைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதில்லை. குறைந்தக் கட்டணம் தான் வாங்குவேன். பல நோயாளிகளுக்கு அவர்களது இயலாத நிலைக் கண்டு இலவச சிகிச்சை வழங்குவேன்.

1951 முதல் 53 ஆண்டு வரை, கே.எம்.சி கல்லூரியில், பயிற்சி ஆசிரியராகவும் இருந்தேன். கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரியின் தந்தை கூட என்னிடம் மாணவராகப் பயின்றவர். 1955 இல் எனக்கு திருமணம் நடந்தது. இரண்டு மகன்களும் இப்போது  மருத்துவர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

மருத்துவராக ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே ஒரு மகிழ்ச்சி, திருப்தி, மன நிறைவு. மிகவும் ரசித்து, முழுமையாக என்னை அர்பணிதது, இந்தத் தொழிலை செய்து வருகிறேன். இந்த சேவையில் பெருமை அடைகிறேன். நிறையப் பேருக்கு இலவச மருத்துவம் செய்து, அவர்களைக் குணப்படுத்தியது எல்லாம் ஒருப் பெரியத் தியாகமாக இல்லை. அது எனக்கு ஒரு பெரிய ஆனந்தத்தையும், பெருமிதத்தையும் கொடுத்தது. அந்த உணர்வுக்கெல்லாம் மதிப்பே இல்லை. இந்த சேவை மனப்பான்மையில் கிடைக்கும் திருப்தி வேறு எங்கும் கிடைக்காது.

 

B+: ஏதேனும் சுவையான நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

டாக்டர்: நிறைய இருக்கிறது. அரசியல் சம்பந்தப் பட்ட ஒரு உதாரணமே சொல்கிறேனே. திரு.இராஜாஜியின் கட்சியில் எம்.எல்.ஏ வாக இருந்தேன், அப்போது கலைஞர் முதல்வராக இருந்தார். எதிர்கட்சியில் இருக்கும் சிலர் கூட  என்னைத் தேடி வந்து என்னிடம் மருத்துவம் பார்ப்பார்கள். அவர்களுக்கு குடும்ப மருத்துவராகவும் இருந்துள்ளேன். அவ்வாறுள்ள ஒரு அரசியல்வாதி, தன் பெண்  திருமணத்திற்கு என்னையும் அழைத்தார். திருமணத்தில் எதிர்கட்சிக்காரர்கள் எல்லோரும் இருக்க, நானும் அழைக்கப்பட்டுக் கலந்துக் கொண்டேன். அப்போது நான் அங்கு அரசியல்வாதியாக இல்லை, மருத்துவராக அழைக்கப்பட்டேன்.அரசியலில் எதிரெதிராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நட்புடன் இருக்க  மருத்துவத் துறை உதவியது. இதெல்லாம் மிகப் பெரிய திருப்தி அளிக்கும்.

எத்தனையோ நோயாளிகளுக்கு வைத்தியம் செய்துவிட்டேன். அவர்கள் குணமடைந்து சந்தோஷமாக திரும்பச் செல்லும் போது அத்தனை பேரானந்தம். நிறைய நோயாளிகளிடம் கொடுப்பதற்கு பண வசதிக் கூட இருக்காது. அதையெல்லாம் சேவையாக மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வேன்.

 

B+: இப்போது பயிலும் மாணவர்களைக் காணும்போது, அவர்களுக்கு என்ன மாதிரியான குறிப்புகள் வழங்குவீர்கள்?

டாக்டர்: என் மாணவர்களுக்கும், இப்போது மருத்துவம் பயில்பவர்களுக்கும்  சிலவற்றை அடிக்கடி கூறுவேன். இந்தத் துறைக்கு நுழையும்போது எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று யோசித்து வந்தீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை தோல்வியில் முடியும். எவ்வாறு நற்சேவை செய்யலாம், எவ்வாறு நல்ல மருத்துவம் மக்களுக்கு செய்ய முடியும் என்று நினைத்து வந்தீர்கள் என்றால், மிகப்பெரிய வெற்றியைச் சந்திப்பீர்கள். இதை நான் அனைத்து மருத்துவர்களிடமும் கூறுகிறேன்.

பல மாணவர்களைப் பார்க்கிறேன். எம்.எம்.சி, ஸ்டேன்லி, கே.எம்.சி போன்ற கல்லூரியில் நுழைவு கிடைத்தவுடன் அத்தனை மகிழ்ச்சி அவர்களிடம். ஆனால் அது இரண்டாம் வருடம், மூன்றாம் வருடம் என்று போகும்போது, படிப்படியாகக் குறைந்து, கல்லூரி முடித்து வெளிவரும்போது மிகவும் சோர்ந்து போய் வருகின்றனர். இங்கே போட்டி அதிகம், உடனேயெல்லாம் சம்பாதிக்க முடியாதென்றும், வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் எம்.பி.பி.எஸ் முடித்தவுடன் தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. அவர்கள் மனதில் குறிக்கோலை நிர்னயிக்கவில்லை. நான் அதைத் தான் அவர்களிடம் கூறுவேன். முதலில் உன் லட்சியத்தை நிர்னயித்துக்கொள், பின் மருத்துவத் துறையில் நுழை என்று.

என் வாழ்க்கையில் ஆரம்பத்திலிருந்தே இந்த மனநிறைவை அடைந்ததாலும், வேலையை ரசித்து செய்வதாலும், எனக்கு ஒரு நாள் கூட சோர்வே வருவது கிடையாது. உங்களது பேட்டி முடிந்தவுடன் நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்து விடுவேன். நோயாளிகளிடம் தெளிவாகப் பேசி பிரச்சினைகளை எடுத்துக் கூறுவேன். என்னவெல்லாம் செய்ய வேண்டும், எதெல்லாம் செய்யக் கூடாது என்றும் பொருமையோடு சொல்லித் தருவேன். இதை ஒரு சேவையாகவே பார்ப்பதால், மிகவும் ரசித்து, அனுபவித்து செய்ய முடிகிறது.

 

B+: அரசியல் அனுபவம் பற்றி..

டாக்டர்: அரசியல் வாழ்க்கையைப் பற்றி சொல்ல வேண்டுமெனில் நிறைய இருக்கிறது. முக்கியமான விஷயங்களைப் பற்றி மட்டும் கூறுகிறேன். மொத்தம் 9 தேர்தலில் நின்றேன், அதில் 6 இல் வெற்றிப் பெற்றேன் – இதில் மூன்று முறை எம்.எல்.ஏ ஆகவும், மூன்று முறை மேல்சபை பட்டதாரி தொகுதியிலும் வென்றேன்.

முதலில் 1962 இல் எனக்கு சென்னை மாநகரத்தின் பட்டதாரித் தொகுதி கிடைத்தது. நிறையப் பேருக்கு மருத்துவ சேவை செய்து நல்ல பெயர் எடுத்ததாலும், மிகக் கடிணமாக ஓராண்டு உழைத்ததாலும் முதல் வெற்றி கவுன்சில் தலைவராக (Legislative Council Chairman) கிடைத்தது. Dr.A.L. முதலியார், Dr.P.V. செரியன், திரு.காமராஜரின் வேட்பாளர், திரு. இராஜாஜியின் வேட்பாளர், அறிஞர் அண்ணாவின் வேட்பாளர் என்று பல ஜாம்பவான்கள் நின்றும் கூட, எனக்கும் Dr.A.L. முதலியார் அவர்களுக்கு மட்டும் தான் வெற்றிக் கிட்டியது. அப்போது இரண்டு சீட்கள் உண்டு, எங்கள் இருவரைத் தவிர அனைவரும் டெப்பாசிட்டை இழந்தனர்.

அப்போது திரு. S.V.சுப்ரமணியம் மூலம் திரு.இராஜாஜி அழைப்பு விடுக்க, அவரைப் போய் சந்தித்தேன். திரு.இராஜாஜி அவர்களிடம் மிக நேரடியாக அவரிடம் பிடித்த மற்றும் பிடிக்காதக் கொள்கைகளை எடுத்துக் கூறினேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும். தனது “சுதந்திரா கட்சி” யில் சேருமாறு கேட்டுக்கொள்ளவே, நானும் அவரிடம் சேர்ந்தேன். “நீ என்ன நினைக்கிறாயோ அதை வெளிப்படையாகச் சொல், யாருக்கும் பயப்படாதே” எனக் கூறினார்.

இன்னொரு சம்பவம். அப்போது 1966 ஆம் வருடம். சென்னையில் பயங்கர மழை. சமூகத் தொண்டில் ஆர்வம் அதிகம் என்பதால், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினேன். சென்னையில் உள்ள வியாசர்பாடி, பெரம்பூர், சௌகார்பேட்டை போன்ற பகுதிகளில் கடுமையாக உழைத்து மக்களுக்காக வேலை செய்தேன். பேரரிஞர் அண்ணாவிடம் நெருங்கிப் பழக அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. அண்ணாவைப் போல் ஒருத் தலைவரை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. அவர் மீது எனக்கு பெரும் மதிப்புண்டு. அவர் என் பெயரை வழிமொழிந்ததில், 1967 தேர்தலில் “பூங்கா நகரத்” (PARK TOWN) தொகுதியில் போட்டியிட்டேன். திரு.காமராஜர் நிறுத்தி வைத்த, பெரிய பேர்பெற்ற  ஒரு வேட்பாளரை வென்றேன்.

நிறைய அருமையான அனுபவங்கள் அரசியலில் கிடைத்தது. வெற்றி பெற்றவுடன், தொகுதியை, 9 வட்டமாகப் பிரித்தேன். ஒவ்வொரு வட்டத்திலும் கிட்டத்தட்ட 12000 மக்கள் இருப்பர், 10-12 தெருக்கள் இருக்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மதியமும் ஒரு வட்டத்திற்கு செல்வேன். பொதுவான இடத்தில், அந்த வட்டத்து மக்களை வரவைத்து, சந்திப்பேன். அவர்கள் பிரச்சினைகளைக் கேட்டுத் தேவையானதை செய்து தீர்த்து வைப்பேன். இவ்வாறாக மூன்று மாதங்களில் ஒருமுறை, அனைத்து வட்டத்தில் உள்ள மக்களையும் சந்தித்து விடுவேன். இந்த களப்பணி செய்ததால், 1971இல் நடந்த மற்றொரு கடினமான தேர்தலிலும் வென்றேன். எந்தப் பணியிலும், நம்மை முழுமையாக அர்பணித்து, கடுமையாக உழைத்தால் வெற்றிப் பெறலாம் என்பதற்காக இதையெல்லாம் கூறுகிறேன்.

 

B+: இலக்கியத்தில் உங்களது பங்குப் பற்றி?

டாக்டர்: தமிழை எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டேன். நிறைய இலக்கியங்கள் படித்தேன். தமிழில் உள்ள நிறையப் புத்தகங்கள், செய்யுள்கள் என நிறையப் படித்தேன். கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து, ஒரு புத்தகத்தை வெளியிட்டேன். மற்ற நிறையப் புத்தகங்களும் எழுதியுள்ளேன். அரசியலிலும், மருத்துவத்திலும் செய்ததை விட, இரு மடங்கு இலக்கியத்திற்காக செய்துள்ளேன். படிக்கும் காலத்தில் நான் சராசரி மாணவன் தான். பிற்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். மிகவும் கஷ்டப்பட்டு இலக்கியத்தையும், ஆங்கிலத்தையும் கற்று இதையெல்லாம் செய்தேன்.

 

B+: குடும்பத்திற்கு எப்படி நேரம் ஒதுக்குவீர்கள்?

டாக்டர்: எத்தனை வேலை இருந்தாலும் குடும்பத்திற்கு கண்டிப்பாக நாம் நேரம் ஒதுக்க வேண்டும். நான் அரசியலில் தீவிரமாக இருந்த சமயம், கோட்டைக்கு சென்றுக்கொண்டும், வந்துக்கொண்டும் இருப்பேன். ஆனால் அப்போது கூட, மதிய உணவிற்கு வீட்டுக்கு போகும்போது, மகன்களிடம் நல்ல நேரம் கொடுத்து, அவர்களிடம் கலந்துரையாடுவேன். நாம் என்றுமே குடும்பத்தை புறக்கணிக்கக் கூடாது. நம் நாட்டுக் கலாச்சாரப்படி குடும்பம் மிக முக்கியம். வீட்டில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும்.

 

B+: எப்படி இத்தனை நேரம் கிடைக்கிறது?

டாக்டர்: நம் அனைவருக்கும் நேரம் நிறைய இருக்கிறது. நாம் தான் அதை விரயம் செய்கிறோம். நான் ஒரு நிமிடம் கூட விரயம் செய்வதை விரும்பமாட்டேன். எல்லா நண்பர்களிடமும் இதை சொல்வதுண்டு – எனக்கு விலை உயர்ந்தப் பொருள் என்றால் அது நேரம் தான். நேரத்தை சிக்கனமாக பயண் படுத்தினோம் என்றால், 24மணி எனது 48மணி ஆக கூட மாற்றலாம்.

 

B+: மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏதேனும் நீங்கள் கூற விரும்பும் செய்தி.

டாக்டர்: நான் கூற விரும்புவது இது தான். வேலையில் திருப்தி ரொம்ப முக்கியம். இதை நான் மருத்துவத்துறைக்கு மட்டும் சொல்லவில்லை. பொதுவாக எல்லோருக்குமே தான். என்ன வேலை செய்தாலும், உங்களுக்கு அதனால், சந்தோஷமும், திருப்தியும் வந்தால் மட்டும் செய்யுங்கள். வேறு வழி இல்லை, பணத்திற்காக மட்டும் இந்த வேலையைச் செய்கிறேன் என்று செய்தீர்கள் என்றால், அதில் உங்களுக்கு உபயோகம் இருக்காது. மனதிற்கு பிடித்த வேலையை மட்டும் செய்யுங்கள்.

மகிழ்ச்சியும், மன நிறைவும், குறிக்கோளாக இருக்க வேண்டும். மகிழ்ச்சி தருகிறது என்று தவறான பாதையில் சென்று பொருளீட்டினாலோ, அல்லது வேறு எதாவது தவறு செய்தாலோ, அது மகிழ்ச்சிக்கு பதில் துன்பத்தையே தரும். அதனால் போகும் பாதை நல்ல பாதையாக இருக்க வேண்டும். செய்கிற வேலையில் ஆர்வமும் பிடிப்பும் வேண்டும். வாழ்க்கையில் பிடிப்பு இல்லையென்றால் எதையும் சாதிக்க முடியாது.

உலகத்தில் நாம் இருப்பது நிரந்தரம் இல்லை. வாழும் வரை மனநிறைவுடனும், திருப்தியுடனும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இந்தத் தேவைக்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் செய்யவேண்டும். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள, ஏதெனும் பாசிடிவான செயல்களை செய்துக் கொண்டே இருங்கள்.

Likes(1)Dislikes(0)
Share

  One Response to “டாக்டர் H. V. ஹண்டே”

  1. மதிப்புக்குரிய டாக்டர்ஹண்டே அவர்களின் சாதனை அளப்பரியது. செய்யும் வேலையை திருப்தியுடனும் சந்தோசத்துடனும் செய்யவேண்டும் என்ற கருத்தும்,மற்றும் பிற கருத்துக்களும் மிக அருமை.டாக்டர்ஹண்டே அவர்கள் நீடுழி வாழ்ந்து வழிக்காட்ட பிரார்த்திக்கிறேன். விமல் தியாகராஜனின் இந்த வெளியீடு மிகவும் பாராட்டுக்குரியது.

    Likes(0)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share