May 142014
 

hd-wallpaper-nature-40

வணக்கம் நண்பர்களே!

ஒரு வாரத்திற்கு முன்னர் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரிடம் B+ இதழைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், என் முயற்சிகளைப் பாராட்டிவிட்டு எதேச்சையாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டுச் சென்றார் “இப்பொழுதெல்லாம் மக்களின் கவனத்தை ஈர்ப்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. செய்தித்தாள்களில் கூட பத்து சினிமா செய்திகளுக்கு மத்தியில் தான் ஒரு நல்ல செய்தியை வெளியிடுகின்றனர். இதில் அவர்களை குறை சொல்வதற்கில்லை. மக்களும் சினிமா விளையாட்டு போன்ற பொழுதுப்போக்கு விஷயங்களில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே தான் மக்களைப் படிக்க வைக்க அதுபோன்ற கமர்ஷியல் விஷயங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. அப்படியிருக்க உன்னுடைய கட்டுரைகளை மக்கள் எப்படி விரும்பிப் படிப்பார்கள் என எதிர்பார்க்கிறாய்?”  என்றார்.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் அவர் கேட்ட கேள்விக்கு அப்போது என்னிடம் எந்த பதிலும் இல்லை. அன்று இரவு சரியான உறக்கமும் இல்லை. ஒரு வேளை தவறான பாதையை தெரிவு செய்து விட்டோமோ? நாம் கூற விரும்புவது மற்றவர்களைச் சென்றடையாவிட்டால் நம் உழைப்புக்கு என்ன பலன்? என்று என்னுள் பல கேள்விகள். ஆனால், மறுநாள் எனக்குள் எழுந்த அத்தனை கேள்விகளுக்கும் விடையாய் வந்தது ஒரு மின்னஞ்சல்.

முகம்மது ரஃபீக் என்பவர் அனுப்பிய அந்த மின்னஞ்சல் இது தான்.

“சார், உங்களது மார்ச் மாத இதழைப் எதேச்சையாக ஒரு சமூக வலைத்தளப்  பகிர்வின் மூலம் படித்தேன். அதில் நீங்கள் முதல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததைப் போலவே, ஒரு பைக் விபத்தைக் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நான் சந்திக்க  நேர்ந்தது. ஒரு நண்பரைப் பார்க்க சென்னை முகப்பேரில் உள்ள அவரது வீட்டிற்கு  எனது பைக்கில் சென்றுக் கொண்டிருந்தேன்.

அப்போது முகப்பேர் சிக்னலைத் தாண்டி ஒரு சிறியக் கூட்டம். பைக்கை ஓரங்கட்டிவிட்டு உள்ளே நுழைந்து பார்த்தால், தலையில் நல்ல அடியுடன் ரத்தம் வழிய 25 வயதுள்ள வாலிபர் கீழே மயங்கி விழுந்துக் கிடக்கிறார். கூடியிருந்த அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த அதே மாதிரியான சம்பவம், அதே மாதிரியான உரையாடல்கள் நடந்தது. 2-3 காவல் அதிகாரிகளும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ஒரு ஆச்சரியம். நொடிப்பொழுதில் என்னுள் ஏதோ ஒரு மாற்றம், அனுதாபத்துடன் கூடிய ஒரு மனித நேயம் எட்டிப் பார்த்தது. என்ன நடந்தாலும் சரி, இந்த மனிதனுக்கு தேவையான உதவியைச் செய்வோம் என்று மனது சொல்லியது. முதலில் அடிப்பட்டவரை கொஞ்சம் ஓரமாக படுக்க வைத்து ஓய்வெடுக்க வைத்தேன். அவரது செல்ஃபோனில் அதிர்ஷ்டவசமாக அவர் நண்பரின் அழைப்பு வரவே, நடந்த விஷயத்தைக் கூறினேன். கூட்டத்தில் உள்ள ஒருவர் அடிப்பட்டவருக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஃபோன் பேசி முடித்தவுடன், அடிப்பட்டவரின் தலையில் ரத்தம் வந்த இடத்தை நான் பார்த்தபோது, நல்ல ஆழமாக கீரி இருந்தது. கூட்டத்தில் காவலாளிகள் இருந்தும் கூட, அடிப்பட்டவரை அழைத்துச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க கிளம்பினேன். அவரை என் பைக்கில் உட்கார வைத்து அழைத்து சென்றபோது கூட்டத்தினர் ஒவ்வொருவரும் என்னை வித்தியாசமாகவும், மிகவும் வியப்புடனும் பார்த்தது நன்றாகத் தெரிந்தது.

மருத்துவமனையில் மருத்துவரோ, காயம் நல்ல ஆழமாக உள்ளது, தையல் போட்டு விடலாமா அல்லது முதலுதவி மட்டும் போதுமா என்றுக் கேட்க எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஐந்து நிமிடங்களுக்கு முன் ஃபோனில் பேசியதன் பலன், சரியான தருணத்தில் அடிப்பட்டவரின் இரண்டு நண்பர்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். அவர்கள் காயத்தைப் பார்த்து, தையல் போடுமாறுக் கேட்டுக்கொள்ளவே, தையல் போடப்பட்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தார் இளைஞர்.

சில நிமிடங்களில் ஓரளவுக்குத் தெளிவான இளைஞரும், அவர் நண்பர்களும்   எனக்கு நன்றித் தெரிவித்தனர். அவர்கள் அனைவரின் கண்களில் கண்ட நன்றி உணர்ச்சி, என்னை அன்று ஒரு மனிதனாக உணர வைத்தது. வாழ்க்கையில் அன்று உருப்படியாக ஒரு விஷயத்தை செய்ததாக உணர்ந்தேன்.

இதற்குமுன் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், காவலாளிகளே உள்ளார்கள், மருத்துவமனையில் பல கேள்விகள் வரும், நமக்கு ஏன் தேவையில்லாதப் பிரச்சினை என்று ஒதுங்கிருப்பேன். எதேச்சையாக உங்கள் இதழைப் படித்ததன் பாதிப்பு, என்னை சற்று வித்தியாசமாக யோசித்து நடந்துக் கொள்ள வைத்தது. தொடர்ந்து இதுப்போன்றக் கட்டுரைகளை நீங்கள் எழுதவும், என்னைப் போல் ஓரிருவரின் மனதிலாவது மாற்றத்திற்கான விதையை விதைக்கும். அதனால் எவரேனும் சமுதாயத்தில் பலனடைவர்” என்று முடித்திருந்தார்.

2

இதேப்போல் ஹைத்ராபாத்திலிருந்து மற்றொரு வாசகர், B+ இன் ஏப்ரல் மாத இதழைப் படித்துவிட்டு அவரது வீட்டு பால்கனியில் பறவைகளுக்காக நீரும், அரிசியும் வைப்பதாகவும் அதனை ஃபோட்டோ எடுத்தும் அனுப்பியிருந்தார்.

3

இப்போது திரும்ப முதல் பத்தியில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு வருகிறேன். தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் கோடிக் கணக்கில் உள்ளனர். அந்த அனைவரும் B+ இதழை படிப்பார்கள் என்றோ, அனைவரிடமும் மாற்றம் உடனே ஏற்படும் என்றோ நாம் எதிர்பார்க்கவில்லை. இதனைப் படித்துவிட்டு ஒருவருக்கேனும் சில கேள்விகள் எழுந்து, அவர்களுக்குள் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட நமக்கு அது மிகுந்த மகிழ்ச்சிதான். அவ்வாறான சிறந்த மனிதர்களின் எண்ணிக்கை ஒன்று, பத்து நூறாகும் என்பது தான் நமது கனவும், நம்பிக்கையும்.

கீழுள்ள படமும் அதில் உள்ள வாசகமும் நான் சொல்ல விரும்புவதை எளிமையாகத் தெரிவிக்கிறது.

1

நண்பர்களே, நமது B+ இதழ் ஒரு சிறிய முயற்சி. நல்ல விஷயங்கள் பரவுவதற்கு, கண்டிப்பாக காலம் சற்று அதிகமாகவேத் தேவைப்படும். B+ இதழ் ஒரு நல்ல சிந்தனையின் விதை. சிறு விதைக்குள் தான் பல பெரும் விருட்சங்கள் ஒளிந்துக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு மாபெரும் பயணத்திற்கும், முதல் அடி எடுத்து வைத்து தான் துவக்க வேண்டும். போகும் பாதை தூரம் தான், ஆனால் பயணம் தொடங்கிவிட்டது. நிறைய நல்ல மனிதர்களின் மனமும், சிந்தனையும் இந்த  இனியப் பயணத்தில் பங்கேற்கும்போது நம்மைச் சுற்றி சிறந்த சமுதாயம் படைக்கப்பட்டிருக்கும்.

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ Team

Likes(2)Dislikes(0)
Share

  8 Responses to “ஒளிமயமான சமுதாயத்தை படைப்போம்”

 1. Very nice sir.

  Likes(0)Dislikes(0)
 2. செயலில் இருந்தால் சிறப்பு

  Likes(0)Dislikes(0)
 3. excellent Sir, தொடரட்டும் உங்கள் பணி

  Likes(0)Dislikes(0)
 4. Very good message for this month [ex: the world is full of nicepeople]
  contiune your work with good development message for common man

  Likes(0)Dislikes(0)
 5. இவ்வாறு முதல் உதவி செய்ய நினைக்கும் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இன்னும் ஒரு படி மேலே செல்ல விரும்புபவர்கள் "basic life support" எனப்படும் எளிமையான ஒரு நாள் பாடக்கோப்பு (course) கற்றுக்கொண்டால் உயிருக்கு போராடுபவர்களுக்கு உதவி செய்வதில் இன்னும் திறமையாக செயல் படலாம். இது சென்னை மருத்துவ கல்லூரியில் நடத்தப் படுகிறது. இதற்கு மருத்துவ பின்னணி தேவையில்லை. உங்கள் நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ பயன் படலாம். வாழ்க மானுடம்.

  Likes(0)Dislikes(0)
 6. சிறப்பான தலையங்கம். உங்கள் முயற்சிக்கும் நல்ல நோக்கத்திற்கும் வெற்றி நிச்சயம்.

  Likes(0)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share