May 262017
 

1

இருட்டை விமர்சிப்பதை விட்டுவிட்டு, ஒரு சிறு மெழுகுவர்த்தி ஏற்ற முயற்சியுங்கள் என ஒரு கூற்று உண்டு. அதனால் தான் சரித்திரம் எப்போதும் விமர்சன வீரர்களை விட செயல் வீரர்களையே பல நூற்றாண்டுகள் கடந்த பின்னும் பேசிக்கொண்டும், கொண்டாடியும் இருக்கிறது. அப்படி சரித்திரம் கொண்டாடும் செயல் வீரரான ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் மற்றும் கட்டிட வடிவமைப்பாளரான ஆண்டெர்ஸ் வில்ஹேல்ம்சன் என்பவரைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

ஆண்டெர்ஸ் தனது குழுவுடன் 2005 ஆம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். அப்போது குடிசைப்பகுதிகளில் குடியிருந்த ஏழைஎளிய மக்களிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கையில், தன் வாழ்வின் லட்சியம் அங்கு பிறக்க இருக்கிறது என நினைத்து கூட இருக்கமாட்டார். அந்த குடிசைப்பகுதி மக்கள் வெகு சாதாரணமாக, தங்களுக்கு கட்டிடம் எல்லாம் வேண்டாம், அடிப்படை பிரச்சினையான கழிப்பிடங்கள் வேண்டுமெனவும், பெண்களும் குழந்தைகளும் கழிப்பிடம் இல்லாமல் எத்தனை துயரப்படுகிறார்கள் எனவும் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இவரைப் பெரிதும் பாதிக்கவே, உலகம் முழுதும் உள்ள ஏழை மக்களுக்காக, கழிப்பிடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென தீர்க்கமாக களத்தில் குதித்தார்.

உலகம் முழுதும் 260 கோடி மக்கள் அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாமல் உள்ளனர். அதாவது சுமார்  40% மக்கள் உலகளவில் கழிப்பிடம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். உலகளவில் ஒவ்வொரு பதினைந்து நொடிகளுக்கும், மனிதக் கழிவினால் அசுத்தமாகிய தண்ணீரால் ஒரு குழந்தை இறக்கிறது. வீடுகளில் தனியான கழிப்பிடங்கள் இல்லாதக் காரணத்தால், பெண்கள் பொது கழிப்பிடம் செல்கையில், (குறிப்பாக இரவுகளில்) பல பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். இந்த துயரமான விவரங்களைத் சேகரித்துக்கொண்ட பின் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார் ஆண்டெர்ஸ்.

ஸ்வீடன் நாட்டின் விவசாய அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஆண்டெர்ஸால் ஒரு தீர்வைக் காணமுடிந்தது. பீப்பூ (Peepoo) என்ற தனது நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் மிக குறைந்த செலவில் மனித கழிவுகளை கையாளும் முறையை அறிமுகப்படுத்தினார் ஆண்டெர்ஸ்.Products_0002_A4_PEEPOO_SEPT2012-0236சானிட்டரி நாப்கினைப் போல் ஒரு பையை வடிவமைத்துள்ளனர் பீப்பூ நிறுவனத்தினர். “இது அளவில் மிகச்சிறியதாகவும், 10 கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ளது. உபயோகிக்க மிக எளிமையாகவும் இருக்கிறது. ஒரு பையை ஒருமுறை மட்டுமே உபயோக படுத்த முடியும். உபயோகித்தப் பின், மக்கும் தன்மையையும் உடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன இந்த பைகள். இதை எந்த பாதுகாப்பான பகுதிகளிலும் பெண்கள் உபயோகப் படுத்தலாம். நான்கே வாரங்களில் யூரியாவினால் இந்த பைகள் மக்கி உரமாகவும் மாறிவிடுவது” என பீப்பூ நிறுவனம் தெரிவிக்கிறது.

தண்ணீர் மிக குறைந்த அளவில் தேவைப்படுவதாகவும், சுத்தம் மற்றும் பாதுகாப்பு அதிகம் உள்ளதாகவும் இந்த முறையின் பலன்களை தெரிவிக்கிறது நிறுவனம். ஒரு பாக்கெட்டில் 28பைகள் என விற்கப்படுகிறது. 2 ரூபாய்க்கு ஒரு பை என்ற அளவில் விலை இருப்பதால், ஏழை மக்களுக்கு இது பலனுள்ளதாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

“பதினைந்து அமெரிக்க டாலர்களில் ஒரு குழந்தைக்கு ஒரு வருடத்திற்கு தேவையான பைகளை தந்து, அவர்களது சுத்தமான கழிப்பிடத்தை சாத்தியப் படுத்துகிறோம்” என தெரிவிக்கிறது.Products_0000_PEEPOO_SEPT2012-0020பீப்பூ நிறுவனம் இதுவரை கென்யா, தென் ஆப்பிரிக்கா, காங்கோ, தெற்கு சூடான், பாகிஸ்தான், வங்கதேசம், சிரியா போன்ற நாடுகளில், பேரிடர் சமயங்களில் இந்தப் பைகளின் மூலம் தங்களது பணிகளை செய்துள்ளது.

ஆண்டெர்ஸ் போலவே கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு.முருகானந்தம் அவர்களும் பெண்களுக்கான சானிட்டரி நாப்கினை குறைந்த செலவில் உற்பத்தி செய்து உலகப்பிரசித்தி பெற்றவர். முருகானந்தம் அவர்கள் எத்தனை சிரமங்களுக்கும் கிண்டல்களுக்கும் பின்னரே அந்த முயற்சியில் வெற்றிப் பெற்றார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சமூகத்தில் பொதுவாகவே புது முயற்சி செய்பவர்கள் குறைவாகவே இருப்பர், ஆனால் அந்த முயற்சியை விமர்சனம் செய்ய நிறைய மனிதர்கள் வரிசைக்கட்டி நிற்பர். அதேப்போல் சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளைப் பேச நிறைய குழுக்களும், மனிதர்களும் இருப்பர், அனால் அதற்கு தீர்வு என்ன என்பதை சிந்திப்பதற்கும், அதை செயல்படுத்தவும் வெகு சிலர் மட்டுமே இருப்பர்.

இன்று நமக்கு விமர்சனங்கள் செய்யும் வாய் சொல் வீரர்கள் மட்டுமே தேவையில்லை, பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காணும் ஆண்டெர்ஸ்களும், முருகானந்தகளுமே அதிகம் தேவை.

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(0)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share