Jan 112017
 

love

எங்கள் குழுவில் சேது என்ற ஒரு இளைஞன் இருக்கிறான். மிகச் சுமாரான தோற்றம், கிராமப்புறத்திலிருந்து வருகின்ற வசதி குறைந்த இளைஞன் என்பதை அவனை பார்த்தவுடன் சொல்லிவிடலாம். ஆனாலும்…. சேதுவைச் சுற்றி எப்போதும் ஒரு பெரும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். உற்சாகம் அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கு கரைபுரண்டோடும். எத்தனை சீரியஸ் மனிதராக இருந்தாலும் அவனிடம் பேசினால், மனது இலதாகி, இளமையாகிச் செல்வர். சுருக்கமாக சொன்னால் அவனை பிடிக்காது என்று கூறுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், எங்கள் கூட்டத்தில் அவன் தான் ஹைலைட்..!

சேது போல் நாம் பலரை சந்தித்திருப்போம், ஒவ்வொரு கூட்டத்திலும் அவனைப் போல் ஒருவர் கண்டிப்பாக இருக்கத்தான் செய்வார்கள். இத்தகைய மனிதர்களால், இதுபோல் எப்போதும் உற்சாகத்துடன் இருந்து, எல்லோரின் அன்பையும், மதிப்பையும் எப்படி பெற முடிகிறது?

நீங்களும் இதுபோல் எல்லோராலும் விரும்பப்பட நினைக்கிறீர்களா? அப்படியெனில் கண்டிப்பாக இந்தப் பதிவு உங்களுக்குத்தான். இதில் கூறப்பட்டுள்ள வழிகள் உங்களை யோசிக்க வைக்கும்.

 1. ஈகோ இல்லாமல் இருக்கும் குணம்

நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய மிகக் முக்கியமான குணம் இதுதான். மனிதன் தனது ஈகோவை எப்போது உடைக்கிறானோ, அப்போதே சக மனிதர்களிடம் உள்ள பிரிவு பாலத்தை உடைக்கிறான் என்றாகிறது.

“இவர் எவ்வளவு கிண்டல் பண்ணினாலும் கோபப்படமாட்டார், விளையாட்டாக எடுத்துக்கொள்வார்” என்ற பெயரை எடுங்கள். இதற்கு ஈகோ இல்லாதிருத்தல் வேண்டும். இந்த குணம் உள்ளவரை பலரும் விரும்புவர் (ஒருவேளை, உங்கள் தன்மானம் பாதிக்கும் அளவு கிண்டல் இருந்தால், நிதானமாக கிண்டல் செய்பவரிடம், அவர் தனியாக இருக்கையில் தெரிவித்துவிடலாம்)

 1. எல்லா மனிதர்களிடம் நல்ல விஷயங்களை கண்டுபிடிப்பது

செல்வா என்ற எனது நண்பரிடம் ஒரு சிறந்த குணமுண்டு. அவரது நட்பில் உள்ள எந்த மனிதரைப் பார்த்தாலும், அந்த மனிதர்களிடம் உள்ள ஐந்து நல்ல விஷயங்களை கடகடவென  அடுக்கி விடுவார். அதில் முகஸ்துதி இருக்காது, உண்மை இருக்கும்.

நம்மை ஒருவர், இன்னொருவரிடம் அறிமுகப்படுத்துகையில் நம்மைப் பற்றி ஐந்து நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னால், அந்த உணர்வு எப்படி இருக்கும்?! இந்தப் நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நாம் அன்றாடம் பழகும் மனிதர்களிடம் குறைகளை காணாமல், அவரிடமுள்ள மூன்று நல்ல விஷயங்களையாவது தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

 1. மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள்

எல்லோராலும் விரும்பப்படும் மனிதர்களின் அடுத்த நல்ல குணம் இது. நீங்கள் தப்பு செய்து விட்டீர்கள் என நீங்களே நினைத்தால், “நான் தப்பு செய்துவிட்டேன்”, “கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன்”, “நான் அப்படி பேசி இருந்திருக்கக் கூடாது” போன்ற மன்னிப்பு வரிகளை கூறி, மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். “தவறு செய்பவன் மனிதன், மன்னிப்பு கேட்பவன் மாமனிதன், மன்னிப்பவன் தெய்வம்”.

 1. நம்பகத்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்

“இவரிடம் எத்தகைய ரகசியங்களையும் கூறலாம், யாரிடமும் சொல்ல மாட்டார்”. “இவர் ஒரு வேலையை செய்கிறேன் என ஒப்புக்கொண்டால், கண்டிப்பாக முடித்துவிடுவார்’ இது போன்ற குணங்களுக்குச் சொந்தக்காரர் ஆகிவிடுங்கள். உங்களின் மீது ஒருவரின் நம்பகத்தன்மை அதிகரிக்கையில், நன்மதிப்பும் பெருகும்.

 1. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது அன்பு செலுத்துங்கள்

“எவர் ஒருவரிடம் பெரிய இதயம் இருக்கிறதோ, அவரே மற்றவர்களின் இதயத்தையும் வெல்கிறார்”. எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, ஏழை பணக்காரன் போன்ற பாகுபாடும் இன்றி, சமூகத்தில் உள்ள எல்லோரிடத்தும் அன்பாகவும், கருணையாகவும் நடந்துக்கொள்ளுங்கள்.

 1. சுயத்தை இழக்காதீர்கள்

பணம், பதவி, பட்டம் வேண்டுமென விரும்பி சிலர் தங்கள் குணநலன்களை அப்படியே மாற்றிக்கொள்வர்.

ஆனால் வேறு சிலரோ, “இவருக்கு நடிக்கத் தெரியாது, பொய் சொல்லத் தெரியாது, ஒரு விஷயம் தெரியவில்லை என்றால், ‘தெரியாது’ என வெளிப்படையாக சொல்லிவிடுவர்” என்றெல்லாம் பெயர் எடுத்திருப்பர்.

இந்த இரு வகைளில், மக்களுக்கு யாரைப் பிடிக்கும்? எந்த நிலையிலும் உங்கள் சுயத்தை இழக்காதிருந்தால், பல மனிதர்களின் மதிப்பை ஸ்கோர் செய்வீர்கள்தானே?

 1. நன்றி உணர்வுடன் இருங்கள்

சின்னதோ, பெரியதோ, யார் எந்த உதவி செய்திருந்தாலும் மறக்காதிருங்கள். அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி பேசி நன்றி தெரிவியுங்கள். மிக முக்கியமாக, அவருக்கு ஒரு உதவி தேவைப்படுகையில், நீங்கள் அவரை மறக்கவில்லை என்பதை நிருபித்து அவருக்கு உதவுங்கள்.

 1. வெறுப்பை தொடர்ந்து வளர்த்துவராதீர்கள்

முதலில் யார் விட்டுக்கொடுப்பது என்ற போட்டியில் நீங்களே விட்டுக்கொடுங்கள். “விட்டுக்கொடுப்பது கோழைத்தனம் அல்ல, அது உயர்ந்த மனம்”. வெறுப்பை வளர விடாதீர்கள், எதுவும் கடந்து போகும் என நினைத்து, அடுத்த அடியை எடுத்து வையுங்கள்.

 1. உங்கள் பெருமையை பேசிக்கொண்டே இருக்காதீர்கள்

நம்பிக்கையாய் இருப்பது, மிகுந்த உற்சாகத்துடன் இருப்பது, பாசிடிவாக இருந்து அனைவரையும் ஊக்குவிப்பது போன்ற குணங்கள் பலரை உங்களுக்கு விசிறிகளாக மாற்றும். அதே நேரத்தில், சுயத்தம்பட்டம் அடிப்பது, நம் துதியை நாமே திரும்பத்திரும்ப பாடுவது போன்ற குணங்கள், மனிதர்களை நம்மை விட்டு தெறித்து ஓட வைத்துவிடும்.

 1. பேசுவதை பொறுமையாக கவனியுங்கள்

பொதுவாகவே நிறைய நண்பர்களை சம்பாதித்து வைத்திருப்பவர்கள், பொறுமையுடன் அடுத்தவர்கள் கூறுவதை கவனிப்பவர்களாக இருப்பர். “எனக்கு சில கஷ்டங்கள் இருக்கிறது, அவனிடம் சென்று ஷேர் செய்துக் கொள்ளப்போகிறேன், அவன் தான் பொறுமையாக நான் சொல்வதைக் கேட்பான்” என சிலர் கூறுவர். பல நேரங்களில் மக்கள், தங்கள் பிரச்சினைகளை வெளியில் கூறுவது, தீர்வு வேண்டியல்ல, சுமைகளை இறக்கி வைக்கத்தான்.

 1. சிரிக்கப் பழகுங்கள், சிரித்துப் பழகுங்கள்

போலித்தனமில்லாத உண்மையான சிரிப்பு உடையவர்கள், நிறைய மனிதர்களை கவர்வது இயற்கை. குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்க காரணம் அவர்களின் கள்ளம் கபடமில்லாத சிரிப்பு மட்டுமே. சிலர் எத்தனை ஜோக் கூறினாலும், “சிரிப்பேனா பார்?” என்பதைப் போல் உம்மணாமூஞ்சியாக உக்கார்ந்திருப்பர். நீங்கள் அதுபோல் இல்லாமல், உங்கள் கூட்டத்தில் யாராவது ஜோக் கூறினால், ரசித்து மனம் விட்டு சிரித்துப் பழகி, நட்பைத் தொடருங்கள்.

 1. யாரையும் காயப்படுத்தாமல் பேசுங்கள்

சிலர் “நா எதுவாக இருந்தாலும், வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுன்னு, மூஞ்சியில் அடிப்பத போல் சொல்லிருவேன்” என்று பெருமையாக அடுத்தவர்களை காயப்படுத்தும் விதத்தில் கூறுவர். இருதய நோயாளிகளிடம் அதிர்ச்சி தரும் செய்திகளை பக்குவமாக கூறுவதைப் போல், எதை, எங்கு, எப்போது சொல்லவேண்டும் என்பது ஒரு கலை. அந்தக் கலையைக் கையாளத்  தெரிந்தவர்கள் ரசிக்கப்படுகிரார்கள்.

 1. இணைந்து முன்னேறுங்கள், போட்டி போடாதீர்கள்

ஆங்கிலத்தில் “Complement and Don’t Compete” என்பார்கள். இது குறிப்பாக தம்பதிகள் தங்களுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு தன்மை. ஆண்கள் புரிதலை அதிகமாகவும், பெண்கள் அன்பை அதிகமாகவும் தேடுவது இயற்கையின் நியதி. இந்த அடிப்படை வித்தியாசத்தை புரிந்து நடக்கையில், நீங்கள் விரும்பப்படுவது சாத்தியப்படுகிறது, உறவு பலப்படுகிறது.

 1. வெளிப்படையாக பேசி தீர்த்துவிடுங்கள்

மனது விட்டு வெளிப்படையாக பேசுபவர்களை அனைவருக்கும் இயற்கையாகவே பிடிக்கும். அதே சமயத்தில், பேச்சு தொனதொன என்று loose-talk ஆக இல்லாமல் இருத்தல் அவசியம், (இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது). உங்களுக்கு ஒருவரிடம் பிரச்சினை இருக்கு என்றால், நேரடியாக அவரிடம் அதைப் பற்றி பேசுங்கள். அவர் இல்லாத இடத்தில், அவரைப் பற்றி பேசினால், அவரும் திருந்துவது கடினம், உங்கள் பெயரும் பப்ளிக்காக பாதிக்கப்படும்.

 1. சுயநலம் இல்லாமல் இருத்தல்

கடைசியாக ஆனால் மிக முக்கியமான பண்பு சுயநலமின்மை. உங்களுக்கு பிற்காலத்தில் தேவைப்படும் என்றெல்லாம் பார்க்காமல், சமூக அக்கறையுடன் பிறர்க்கு உதவி செய்யுங்கள். உதவியர்க்கு அந்த உதவிப் பற்றி, பெருந்தன்மையுடன் நீங்கள் சொல்லாமல் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஒரு சமயத்தில் அவரே அதை வேறொருவர் மூலமாகத் தெரிந்துக்கொள்கையில், அவர் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்திருப்பீர்கள்.

15 விஷயங்களும் முடிந்து விட்டது. ஒரு சிறு எச்சரிக்கை.. நம்மால் அனைவரையும் திருப்தி படுத்துவது என்பது மிகக் கடினம், ஆனால் அந்த முயற்சியில், எத்தனை தூரம் இறங்குகிறோம் என்பதில் தான் வெற்றி உள்ளது.

அதனால் இங்கு கூறப்பட்டுள்ள 15 விஷயங்களை ஆராய்ந்து, “சரி” என உங்களுக்குத் தோணும் விஷயங்களை செயல்படுத்தி பாருங்கள். பல மனிதர்களின் அன்பை பெறத் தொடங்குவீர்கள்..!

விமல் தியாகராஜன்

Likes(10)Dislikes(0)
Share

  One Response to “உங்களை அனைவரும் விரும்ப 15 வழிகள்!!!”

 1. அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !

  வாழ்கையில் வெற்றி என்பது என்ன? ஏதாவது விளக்கம் வைத்துள்ளீர்களா? என்ற கேள்விக்கு அறிஞர் ரால்ப் வால்டோ எமர்ஸன் சொன்ன பதில் இது :

  "அடிக்கடி சிரிப்பது, அதிகம் சிரிப்பது, புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவது, குழந்தைகளின் பாசத்தைப் பெறுவது , நேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவது, நண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்வது, இயற்கையை ரசிப்பது, மற்றவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பராட்டுவது,,ஒரு தோட்ட வெளியை உருவாக்கியது, , சமுதாயக் கேடு ஒன்றை சீர்படுத்தியது, உங்கள் வாழ்க்கையினால் யாராவது தங்கள் வாழ்வில் சற்றேனும் இன்பமடைந்தார்கள் என்று உணர்வது இது போல ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் வாழ்க்கையில் வென்றவர்களே"
  (இது ஒரு கருத்து: இது போன்ற நிறைய கருத்துக்கள் இருக்க கூடும்.)

  Likes(7)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share