Jan 032017
 

news

வேண்டாம்… வேண்டாம்… வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்:
வேண்டாம்… வேண்டாம்… அப்புறம் அவ்வளவுதான் என்று வடகொரியாவை எச்சரித்துள்ளது அமெரிக்கா… எதற்காக தெரியுங்களா?

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திப்பீர்கள் என்று வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

புத்தாண்டு தினத்தையொட்டி வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தொலைக்காட்டியில் பேசியபோது, தோன்றி நாட்டு மக்களிடையே பேசும்போது, “நாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக செலுத்தும் திட்டத்தின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம்.

இதை நாம் நிகழ்த்தி விட்டால் இங்கிருந்தே அமெரிக்காவின் கடற்கரை நகரங்களை (சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவு) நம்மால் தாக்க முடியும் என்று பேசினார்.

இதற்குதான் பென்டகன் உடனடி பதிலடியை வெளியிட்டுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தக் கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்கனவே வடகொரியாவுக்கு தடை விதித்து உள்ளது. அதையும் மீறி சோதனை நடத்துவோம் என்று வடகொரியா கூறுகிறது.

அப்படி செய்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

சிறைக்கு போயும் திருந்தாத கைதிகள்… மோதல்… பலி 60 பேர்

மனோவ்ஸ்:
சிறைக்கு போயும் திருந்த மாட்டேங்கிறாங்களேப்பா… என்று நொந்து போய் உள்ளனர் பிரேசில் மக்கள். எதற்காக தெரியுங்களா?

பிரேசில் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம்தான் இப்படி ஒரு வேதனையை கிளப்பி உள்ளது.

பிரேசில் நாட்டில் அமேசான் காட்டு பகுதியை ஒட்டிய மனோவ்ஸ் சிறை உள்ளது. இங்கு போதை பொருள் கடத்தல் உட்பட பல குற்றங்களில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் இரு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதல் பெரும் கலவரமாக மாறியது. இந்த கலவரம் இன்று காலை 7 மணி வரை நீடித்தது.

சிறை அதிகாரிகள் 12 பேரை பிணையமாக பிடித்த கைதிகள் அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறித்துக் கொண்டு  ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். இதில் 60 க்கும் மேற்பட்டார் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

துருக்கி தீவிரவாத தாக்குதல்… கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபர்

இஸ்தான்புல்:
துருக்கி தீவிரவாத தாக்குதலின் போது கண்காணிப்பு கேமராவில் பதிந்த கொலையாளியின் உருவத்தை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புலில் பிரபல இரவு நேர விடுதியில் புத்தாண்டை கொண்டாட கூடியிருந்த மக்களை மர்ம நபர் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். பின்னர் அங்கிருந்து அவன் தப்பியோடிவிட்டான்.

இந்த தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 39 பேர் பலியாகினர். பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த கொடூர தாக்குதலை நடத்தியவன் உருவன் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை துருக்கி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கொலையாளியின் உருவத்தை அடிப்படையாக கொண்டு அவனை தேடும் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாக ஐ.எஸ். அமைப்பு அறிவித்துள்ளது.

ஓட்ட வா என்றால்… ஊற்றிக் கொண்டு வந்த பைலட்… இப்போ சிறையில்….

கனடா:
ஓட்ட வா என்றால்… ஊற்றிக் கொண்டா வருகிறாய் என்று புல் போதையில் மட்டையான விமானியை சிறையில் தள்ளியுள்ளனர் போலீசார். எங்கு தெரியங்களா?

மேற்கு கனடாவின் கால்கரி விமான நிலையத்தில் இருந்து மெக்சிகோவுக்கு 100-க்கும் அதிகமான பயணிகளுடன் போயிங் 737 ரக விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை புறப்படத் தயாராக இருந்தது.

விமானம் புறப்படுவதற்கு முன்பு, விமானத்தை ஓட்ட இருந்த பைலட் புல் போதையில் மட்டையாகி விமானத்தின் காக்பிட்டில் மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு பயணிகள் தகவல் அளிக்க, தொடர்ந்து வேறொரு விமானியை வைத்து அந்த விமானம் இயக்கப்பட்டது. அப்புறம் என்ன பொறுப்பில்லாமல் பணிக்கு வந்த அந்த விமானியை பொறுப்பாக போலீசில் ஒப்படைக்க… இப்போது கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.

மழை… மழை… தென் கடலோர மாவட்டங்களில் மழை…

சென்னை:
வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை… பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவு அருகே நிலவி வரும் காற்றழுத்தம் வலுவிழந்துவிட்டது. மேலும் தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது.

அடுத்த 48 மணி நேரத்தில் (இன்று 3ம் தேதி காலை 8.30 மணியிலிருந்து) அதே பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை எச்சரிக்கை எதுவும் இல்லை.

வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share