Dec 132016
 

Vardha__1

பணம், பதவி, பேர், புகழ் போன்ற மாயைகளுக்காக எத்தனை தவறுகளை அறிந்தும் அறியாமலும் தினமும் செய்துக்கொண்டிருக்கிறோம்? இந்த மாயைகளின் அடிப்படையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிவினங்களை ஏற்படுத்தி வாழும் காலம் முழுதும் நெருங்கிய மக்களிடம் கூட சண்டையிட்டு அடித்துக்கொள்கிறோம்.

ஆனால் நாம் செய்யும் பாவ புண்ணிய செயல்களுக்கு, தனக்கு ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை பேரிடர்களின் மூலம், நம்மை அவ்வப்போது  ஓங்கி அறைந்து, உணர்த்திச் செல்கிறது இயற்கை!

நமக்குத் தான் ஆறறிவு உள்ளதே? ஆறாவது அறிவின் மூலம் நாம் செய்யும் பாவச் செயல்களுக்கு பொருத்தமான விளக்கங்கள் கொடுத்து ஊரையும், நம்மையும் எளிதாக ஏமாற்றி விடுகிறோம். எத்தனை அறியாமை!!!

இந்த டிசம்பர் மாதமும் வழக்கம் போலவே இயற்கையின் மற்றொரு ருத்ர தாண்டவம் ஆடி, தமிழக மக்களை குறிப்பாக சென்னையை மீண்டும் தத்தளிக்க வைத்தது.

ஒவ்வொரு வருடமும், நிறுவனங்கள் ஆண்டு இறுதி கணக்குகளை (year-end accounts) செட்டில் செய்வதைப் போலவே, இந்த வருடமும் டிசம்பரில் மக்களை உலுக்கி எடுத்து, தான் மட்டுமே மனிதர்களுக்கெல்லாம் தலைவன் என மீண்டும் ஒரு முறை பறைசாற்றி நிருபித்துள்ளது இயற்கை.

வர்தா புயல் காற்றின் அசுர வேகத்தில் மரங்கள் அல்லோலப் பட, பல வாகனங்களையே தூக்கி அடித்தும், பல வீடுகளில் சேதாரம் ஏற்படுத்தியும் இயற்கை தனது சக்தியை மக்களிடம் மிக ஆழமாக உணர்த்திச் சென்றது.

சில ஆயிரம் மரங்கள் சென்னை சாலைகளில் வீழ்ந்து சிதறி போக்குவரத்துகளை ஸ்தம்பிக்க வைத்தன. நாங்கள் வசிக்கும் பகுதிகளில் சராசரியாக ஒரு தெருவிற்கு இரு மரங்கள் வீழ்ந்தன. இத்தனை மரங்கள் நாசமாகியதே என்ற பெரும் துயரம் ஒரு புறம், இத்தனை மரங்கள் நம் பகுதிகளில் உள்ளனவா என்ற ஆச்சரியம் மறுபுறம்.

உண்மையில் மரங்கள் விழுந்திருந்த சாலைகளில் பயணம் செய்து முடித்தப்பின், ஏதோ காட்டுக்குள் வந்து விட்டோமோ என்ற உணர்வு வந்தது. காடுகளாய் இருந்த பகுதிகளைத் தானே நாம் ஆக்கிரமித்து நகரங்களாய் மாற்றியுள்ளோம் என்பதும்  புரிந்தது.

உண்மை தான்! சுமார் மூன்று லட்சம் கோடி மரங்கள் பூமியில் உள்ளது. அவற்றில் மனிதன், பல வித தேவைகளுக்காக ஒவ்வொரு வருடமும், 1500 கோடி மரங்களை வெட்டிச் சாய்க்கிறான் எனவும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது ஒரு மனிதனுக்கு சுமார் 400 மரங்கள் என இருந்த விகிதம் வேகமாக குறைந்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலைகளில் சில நல்ல விஷயங்களும் நடக்காமல் இல்லை.

உதாரணமாக, நேற்று மதியம் சுமார் மூன்றரை மணி அளவில் புயல் காற்று நின்றது. அப்போது சென்ற ஆண்டு பெருவெள்ளத்தின்போது, நற்செயல்கள் செய்ததைப் போன்றே நேற்றும் பொது மக்களே களத்தில் குதித்தனர்.

சாலையில் வீழ்ந்து ஆக்கிரமித்துள்ள மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் வந்து தான் அப்புறப்படுத்த வேண்டுமென அவர்கள் காத்திருக்கவில்லை. பல சாலைகளில் அரிவாள், கடப்பாறையுடன் சாலைகளில் இறங்கி கீழே விழுந்த மரங்களை வெட்டிச் சாலையை சீர் படுத்தினர்.

என்ன தான் அரசும் அதிகாரிகளும் தங்களது பணிகளைச் சிறப்பாகச் செய்தாலும்,  பொது மக்களே பிரச்சினையை உணர்ந்து, எந்தப் பணிகளில் களமிறங்கி வேலை செய்கிறார்களோ, அந்த பணிகளின் வெற்றி பெரிதளவில் நிலையானதாகவும் உறுதியானதாகவும் இருக்கிறது.

ஜப்பான் போன்ற நாடுகளில், மக்கள், பொது நல அக்கறையில் மிகுந்த ஆர்வம் காட்டியதுடன், கடின உழைப்பின் மூலமும், நாட்டின் சட்ட திட்டங்களை மதிப்பதன் மூலமும் தழைத்து ஓங்கியுள்ளனர்.

சுயநலம் களைந்து சமுதாயக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நம் நாடும் உள்ளது. இந்தியாவின் முன்னேற்றம் ஒவ்வொரு குடிமகனின் கைகளிலும் உள்ளது என்பதை உணர்ந்து செயல் படுவோம்.

அணைத்து மக்களுக்கும் வரும் புத்தாண்டு இனியதாகவும், ஆனந்தமாகவும் இருக்க வாழ்த்துக்கள்!!!

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(1)Dislikes(0)
Share

  One Response to “வர்தா புயல்!”

  1. மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையும் நிறைவேற்றுவது சிரமமே.

    Likes(1)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share