Dec 122016
 

aero

இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் கோயில் கட்ட நிலம் ஒதுக்கீடு

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் கோயில் கட்டவும், சுடுகாடு அமைக்க வும் நிலம் ஒதுக்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் இந்துக்கள் மைனாரிட்டிகளாக உள்ளனர். இதனால் இங்கு இந்து கோயில்கள் அதிகளவில் இல்லை. இருக்கும் சில கோயில்களும் தீவிரவாதிகளால் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் 800 இந்துக்கள் வாழ்கின்றனர். அங்கு ஒரு பெரிய கிருஷ்ணர் கோயில் மட்டுமே உள்ளது. சமுதாய கூடம் மற்றும் சுடுகாடு போன்ற தனிப்பட்ட அடிப்படை வசதிகளும் கிடையாது. எனவே புதிதாக கோயில் கட்டவும், சுடுகாடு மற்றும் சமுதாய கூடம் கட்ட நிலம் ஒதுக்கும்படி பாகிஸ்தான் அரசிடம் இந்துக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

அக்கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் வளர்ச்சி குழுமம் பொதுமக்களின் அடிப்படை வசதியை மேம்படுத்தும் வகையில் இந்துக்களின் கோரிக்கையை ஏற்று கோவில் கட்டவும், சுடுகாடு அமைக்கவும் நிலம் ஒதுக்கியுள்ளது.

வேண்டாம்… வேண்டாம்… உங்கக்கிட்ட நிலக்கரியே வேண்டாம்…

பீஜிங்:
வேண்டாம்… வேண்டாம்… உங்கக்கிட்ட இருந்து எங்களுக்கு இனிமே நிலக்கரி வேண்டாம் என்று சீனா தெரிவித்துள்ளது. யாரிடம இருந்து என்கிறீர்களா?

ஐ.நா.சபையால் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்ட வடகொரியா நாட்டில் இருந்து இனி நிரந்தரமாக நிலக்கரி இறக்குமதி செய்ய மாட்டோம் என சீன அரசு அறிவித்துள்ளது.

ஏவுகணை சோதனைகளின் மூலம் உலக நாடுகளை மிரட்டிவரும் வடகொரியா மீது 15 உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கடந்த வாரம் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

வடகொரியாவின் ஒரே கனிமவளம் நிலக்கரிதான். நிலக்கரியை ஏற்றுமதி செய்வதன் மூலமாக மட்டும் ஆண்டுதோறும் சுமார் 400 கோடி டாலர்கள் அந்நாட்டின் கருவூலத்தை நிரப்பி வருவதும், இந்த தொகையில் பெரும்பகுதியை ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை மேம்படுத்தும் திட்டத்துக்காக வடகொரியா அதிபர் செலவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் ‘எரிவதை பிடுங்கினால், கொதிப்பது அடங்கும்’ என்பதற்கு ஏற்ப வடகொரியாவிடம் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வடகொரியாவிடம் இருந்து இனி நிலக்கரி இறக்குமதி செய்ய மாட்டோம் என நிரந்தரமாக தீர்மானித்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.

வடகொரியாவின் அண்டைநாடுகளில் ஒன்றான சீனா ஆண்டுதோறும் சுமார் 70 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்துவந்தது குறிப்பிடத்தக்கது. இது வடகொரியாவுக்கு சரியான சம்மட்டி அடியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நிற்கலை… நிற்கலை… எங்கேயும் நிற்கலை… விரைவில்… அறிமுகம்…

லண்டன்:
நிற்கலை… நிற்கலை… எங்கேயும் நிற்கலை என்று பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் வகையில் 17 மணிநேர இடைநில்லா விமானச் சேவையை குவாண்டாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கு… இருக்கு…

லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை இணைக்கும் விமான சேவையை குவாண்டாஸ் நிறுவனம் துவங்க இருக்காம். அதுவும் எப்படி கிட்டத்தட்ட 14,498 கிமீ தூரத்தை கடந்து செல்லும் இடைநில்லா விமானச் சேவையாம். நீண்ட காலமாக பல்வேறு நிறுவனங்களும் அறிவித்து பின் அவற்றை கைவிட்டன.

இப்போது இடைநில்லா விமான சேவையை மார்ச் 2018 முதல் வழங்குவதாக குவாண்டாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
லண்டன் – ஆஸ்திரேலியா வரை இருக்கும் 14,498 கிமீ தூரத்தை இடைநில்லாமல் கடக்க சுமார் 17 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெரியலையேப்பா… தெரியலையே… சாம்சங்… தடுமாற்றம்

சியோல்:
தெரியலையேப்பா… தெரியலையே… என்று சாம்சங் நிறுவனமே தலையை பிய்த்துக் கொள்கிறதாம்… எதற்காக என்று தெரியுங்களா?

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 7 செல்போன்கள் சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதற ஆரம்பித்தன. இதனால் பெரும் குற்றச்சாட்டுக்கள் எழ விற்பனை செய்த அந்த போன்களை சாம்சங் திரும்ப வாங்கியது.

கேலக்ஸி நோட் 7 போனில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட பெரியளவு பேட்டரி வழங்கப்பட்டதால்தான் பேட்டரிகள் வெடித்ததாக அமெரிக்க நுகர்வோர் பொருட்களின் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.

இதற்கு சாம்சங் அளித்த பதிலில் பேட்டரிகள் வெடித்ததன் காரணம் கண்டறியப்பட்டு விட்டது. வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் பாதுகாப்பான போன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் நோட் 7 போன்கள் வெடித்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் சாம்சங் ஆய்வாளர்களால் இன்னமும் கண்டறிய முடியவில்லை என்பதுதான் உண்மையாம். வெடித்ததற்கான காரணங்களும் தொடர்ந்து மர்மமாக இருப்பது சாம்சங் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து கவலை எழுப்புவதாக அமைந்துள்ளது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share