Nov 262016
 

fidel

அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த கியூபா சிங்கம்… இன்று மறைவு

ஹவானா:

யாருக்கும் தலைவணங்காத தன்மான தலைவனாக, தன் நாட்டு மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த பிடல் காஸ்ட்ரோ (90) இன்று மரணமடைந்தார்.

உலக வல்லரசில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவையே அலறடித்த கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ (90) இன்று மரணம் அடைந்தார் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா தனது ஏகாதிபத்திய கொள்கையின் மூலம் கியூபாவிலும் தனது கொடியை நாட்டியிருந்தது. ஆனால் அமெரிக்காவால் அங்கு நிலைத்து நிற்க முடியவில்லை. அதற்கு காரணம் பிடல் காஸ்ட்ரோ என்ற தனி மனிதர்.

அமெரிக்கா தங்கள் நாட்டை சுரண்டுவதை கண்டு கொதித்தெழுந்த அவர் கியூபாவின் அரசிற்கு எதிராக போராட்ட களம் காண தேர்ந்தெடுத்த கொள்கை கம்யூனிசம்…

கல்லூரியில் படிக்கும்பொழுதே கம்யூனிச கட்சியில் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார். இவரது தொடர் அதிரடி போராட்டங்கள் ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி தந்தன. 1959ம் ஆண்டு புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சியை வீழ்த்தி தலைமை அமைச்சராக பொறுப்பேற்றார் பிடல்காஸ்ட்ரோ.

1959 ம் ஆண்டில் தொடர்ந்த இவரது மக்கள் பணி 2008ம் ஆண்டுவரை நீடித்தது. 1959ம் ஆண்டு முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் அசைக்க முடியாதவராக வலம் வந்தார். அதற்கு பிறகு 1976 முதல் 2008-ம் ஆண்டு வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

அமெரிக்காவிடம் நேரடி மோதலை ஏற்படுத்தியவர் என்றால் அது பிடல் காஸ்ட்ரோவின் துணிச்சலையே தெரிவிக்கும். காஸ்ட்ரோவை அமெரிக்கா தனது பக்கம் இழுக்க நினைத்த அனைத்து திட்டங்களும் புஸ்வாணம் ஆனது என்பதுதான் உண்மை.

கியூபாவின் வளங்கள் அனைத்தும் கியூபா மக்களுக்கே சொந்தம் என்று அறிவித்த காஸ்ட்ரோ அதை இறுதி வரை கடைப்பிடித்தார் என்றால் அவரது உறுதியான இரும்பு உள்ளம் பற்றி தெரிந்து கொள்ளலாம். கியூபாவில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் பொதுவுடைமையாக அறிவித்தார் காஸ்ட்ரோ.

இதனால் அமெரிக்கா வழக்கம் போல் கியூபாவின் மீது பொருளாதார தடை விதித்தது.  அப்போதுதான் பிடல் காஸ்ட்ரோவுக்கு கை கொடுத்தது ரஷியா. கியூபாவின் பொருட்களை ரஷியா இறக்குமதி செய்ய ஒப்புக்கொள்ள தங்கள் நாட்டிற்காக இன்னும் கடுமையான உழைப்பை காட்டினர் கியூபா மக்கள்.  இதனால் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு தீவிரமாக களத்தில் இறங்கியது. எத்தனை முறை தெரியுங்களா 638 முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய திட்டமிட்டு அமெரிக்கா தோல்வியை தழுவியது என்றால் பிடல் காஸ்ட்ரோவின் பாதுகாப்பு உணர்வு எந்தளவிற்கு இருந்து இருக்கும் என்று நினைத்து பார்க்க வேண்டும்.

இந்நிலையில்தான் அமெரிக்க அதிபரான ஒபாமா கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் திறக்கப்பட்டது. இதேபோல் கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது.

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பியான தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை, ஒபாமா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

(required)

(required)

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Share
Share